பிறவியில் உயர்வு-தாழ்வு இன்றும் இருக்கிறதா?

தீண்டாமை ஒழிக்கப்பட்டு விட்டதா?

மதச்சார்பின்மை கல்வியில், அரசில் வந்துவிட்டதா?

தந்தை பெரியார் 1879ஆம் ஆண்டு செப்டம்பர் திங்கள் 17ஆம் நாள் புதன் அன்று பிறந்தார்.

திண்ணைப் பள்ளியில் படிக்கும் போதே, சமு தாயத்தில் உயர்வு-தாழ்வு இருப்பதைத் தன் வாழ் நாளில் முதலில் கண்டார். அதற்குக் காரணம் அப்போது புரியவில்லை.

1907இல் இந்திய தேசிய காங்கிரசில் நாட்டங் கொண்டார். 1919 இறுதியில் காங்கிரசில் சேர்ந்தார்.

I. 1919இல் திருச்சியில் நடைபெற்ற தமிழ்நாடு காங்கிரசுக் கமிட்டியில், இந்திய தேசிய காங்கிரசின் 1919ஆம் ஆண்டுத் திட்டப்படி, வகுப்புவாரி இடஒதுக்கீடு தரும் கொள்கையைத் தமிழ்நாடு காங்கிரசு ஏற்றிடக் கோரினார்; அது ஏற்கப்படவில்லை. 1925 நவம்பரில் காஞ்சிபுரத்தில் நடைபெற்ற தமிழ்நாடு காங்கிரசு மாநாட்டிலும் அக்கோரிக்கை ஏற்கப்பட வில்லை. நிற்க.

II. 1. இந்து மதத்தில் பிறவியில் தீண்டாமை பின்பற்றப்படுவதையும், பிறவியில் உயர்வு-தாழ்வு இருப்பதையும் நீக்கிட தமிழ்நாடு காங்கிரசு பாடுபட வேண்டும் என, திருப்பூரில், எம்.ஜி. வாசுதேவ அய்யர் தலைமையில், 21.12.1922இல் நடைபெற்ற தமிழ்நாடு காங்கிரசு மாநாட்டில் ஈ.வெ.ரா.வும், பி. வரதராசலு நாயுடுவும் ஒரு தீர்மானத்தை முன்மொழிந்தனர். அது ஏற்கப்பட வில்லை.

21.12.1922 மாலையில் திருப்பூரில் நடைபெற்ற காங்கிரசுப் பொதுக்கூட்டத்தில், “தீண்டாமையையும் சாதியையும் இராமாயணமும் மனுநீதியும் காப்பாற்றுவதால் அவற்றை எரிக்க வேண்டும்” என்று முதன்முதலில், ஈ.வெ.ரா. பேசினார்.

அன்று முதல் 1973 திசம்பர் 8, 9 சென்னை மாநாடு வரையில் - மற்றும் திசம்பர் 19, 1973 வரையில் பிறவியில் உயர்வு-தாழ்வு கற்பிக்கும் வேற்றுமை யையும் தீண்டாமையையும் ஒழிக்கப் பாடுபட்டார்.

2. 03.11.1957இல் தஞ்சையில் நடைபெற்ற எடைக்கு எடை பணம் அளிக்கிற-போராட்டம் அறிவிக்கிற மாநாட்டில், “இந்திய அரசமைப்புச் சட்டத்தில் உள்ள நால்வருண நடப்புக்குப் பாதுகாப்புக்குத் தரும் அரசமைப்புச் சட்டப் பகுதியை எரிக்க வேண்டும்” என்று தீர்மானம் நிறைவேற்றினார்.

உலக அளவில் அதுவரையில் எந்தவொரு நாட்டிலும் அந்த நாட்டு அரசமைப்புச் சட்டத்தை எரிக்க எந்த ஒரு கட்சியும் முனைந்தது இல்லை.

அத்தீர்மானப்படி, 26.11.1957இல் தமிழ்நாடு முழுவதிலும் 10,000 திராவிடர் கழகத் தோழர்கள் “பிறவியில் வருண வேறுபாட்டைக் காக்கும் அரசமைப்புச் சட்டப் பகுதிகள் அச்சிடப்பட்ட குறுநூலை” எரித்தனர்; 3,000 பேர் தண்டனை பெற்றுச் சிறைப்பட்டனர்.

ஆனால், உண்மையில், 2017லும் இந்திய அரச மைப்புச் சட்டத்தில், பிராமணன், சத்திரியன், வைசியன், சூத்திரன் என்கிற பிறவி வருண சாதி வேறுபாட்டுக் கும், சில இடங்களில் தீண்டாமையை அனுசரிக்கவும் பாதுகாப்பு அளிக்கிற விதிகள் இருக்கின்றனவா என்பதை, நாம் ஒவ்வொருவரும் தெளிவாகத் தெரிந்துகொள்ள வேண்டும்.

அப்படிப் பாதுகாப்பு அளிக்கிற அரசமைப்புச் சட்ட விதிகள் எவை, எவை என்பதை நிரல்படுத்தி, அவற்றுள் மூன்று விதிகளை மட்டும் எல்லோருக்கும் புரிகிற தன்மையில் தமிழில் மட்டும் எழுதுகிறேன்.

இந்திய அரசமைப்புச் சட்டம் 26.1.1950இல் நடப்புக்கு வந்தது. அரசமைப்புச் சட்ட விதிகளை ஒவ்வொரு குடிமகனும் தெரிந்திருந்தாலும் தெரிந்துகொள்ளாமல் இருந்தாலும் ஒவ்வொரு குடிமகனையும் அச்சட்டம் கட்டுப்படுத்தும். அதாவது ஒவ்வொரு குடிமகனும் அந்த விதிகளுக்குக் கட்டுப்பட்டு நடக்க வேண்டும்.

அப்படிப்பட்ட விதிகளின் மொத்த எண்ணிக்கை 395 ஆகும்.

அவற்றுள், (1) நால்வருணங்களையும், (2) சில இடங் களில் தீண்டாமையையும், (3) பழைய காலத்துப் பழக்கவங்களையும் இன்றும் காப்பாற்றுகிற விதிகள் எவை?

விதி : 13(1), (3)b;

விதி : 16(5);

விதி 17;

விதி 25;

விதி 26;

விதி 372(1), 372(3)Explanation - என்பவை ஆகும்.

மேலேகண்ட விதிகளுள் மூன்றை மட்டும் - தமிழில் மொழிபெயர்த்துக் கீழே தந்துள்ளேன்.

விதி 13(1) - அடிப்படை உரிமைகளுக்கு எதிரான, அடிப்படை உரிமைகளுக்கு முரணான விதிகள் : இந்த அரசமைப்புச் சட்டம் நடப்புக்கு வருவதற்கு முன்னர் இந்தியாவில் நடப்பிலிருந்த சட்டங்களுள் எவையெவை இப்பகுதியில் கண்ட அடிப்படை உரிமைகளுக்கு எதிராக வும் முரணாகவும் உள்ளனவோ அந்த அளவுக்கு அவை செல்லுபடியாக மாட்டா.

விதி 13(3)(b) - இந்தியாவில் ஏற்கெனவே நடப்பி லிருந்த சட்டங்கள், தகுதிவாய்ந்த ஒரு சட்டமன்றத் தாலோ அல்லது தகுதி வாய்ந்த மற்றொரு அதிகாரம் படைத்த அமைப்பாலோ - இச்சட்டம் நடப்புக்கு வரு முன்னர் செய்யப்பட்ட சட்டம் என்று பொருள்படும். அச்சட்டம் ஏற்கெனவே நீக்கப்படாமலிருந்தால் ஒழிய அப்படிப்பட்ட சட்டம் குறிப்பிட்ட சில பகுதிகளில் நடப்பில் இல்லாமல் இருந்தாலும் எந்தப் பகுதியிலும் அச்சட்டம் நடப்பில் இருந்ததில்லை என்றாலும், அச்சட்டம் இன்றும் செல்லும்.

விதி 372(1), 372(3) Explanation (விளக்கம்) என்பதில் சொல்லப்பட்டிருப்பதும், மேலேகண்ட செய்தி தான். எனவே அவ்விதியின் மொழிபெயர்ப்பு இங்கே தரப்படவில்லை.

விதி 17 - தீண்டாமை அகற்றம் : “தீண்டாமை” அகற்றப் பட்டிருக்கிறது. அதை எந்த வடிவத்தில் அனுசரிப்பதும் தடைசெய்யப்பட்டிருக்கிறது. “தீண்டாமையை” எந்த வகை இயலாமையை உண்டாக்கும் விதத்தில் செயல் படுத்தினாலும் அது சட்டப்படி தண்டனைக்கு உரிய குற்றமாகும்.

தீண்டாமை அகற்றம் பற்றிய இந்த விதியில், இரண்டு இடங்களில் தீண்டாமை என்கிற சொல் பயன்படுத்தப் பட்டுள்ளது. இரண்டு இடங்களிலும் தீண்டாமை என்ற சொல் மட்டும் மேற்கோள் குறிக்குள் வைக்கப்பட்டிருக் கிறது. அது ஏன்?

ஏன் என்றால், “எல்லா இடங்களிலும் தீண்டாமை போகாது என்கிற உட்பொருளை வைத்துத்தான் அச் சொல்லை மேற்கோள் குறிக்குள் அமைத்துள்ளனர், அரசமைப்புச் சட்டத்தை எழுதிய கர்த்தாக்கள்” என, உச்சநீதிமன்றம் ஏற்கெனவே விளக்கம் கொடுத்துள்ளது.

அந்த இடம் தான் இந்துக் கோவில்களில் கடவுள் சிலை வைக்கப்பட்டுள்ள கருவறை (அ) கர்ப்ப கிரகம் ஆகும்.

இந்திய அரசமைப்பில் வேறு எந்த விதியிலும் எந்த ஒரு சொல்லும் இப்படி மேற்கோள் குறிக்குள் வைக்கப் படவில்லை. உலகிலுள்ள எந்த நாட்டுச் சட்டத்திலும் ஒரு சொல் இப்படி மேற்கோள் குறிக்குள் வைக்கப்பட வில்லை.

ஏனெனில் வேறு எந்த மத நடப்பிலும் அந்த மதத்தில் பிறந்த ஒருவன் (அ) ஒருத்தி ‘தீண்டப்படாதவர்’ என்று அந்தந்த மத நூல் கூறவில்லை.

ஆனால் மனுநீதி, இந்து மதத்தில் பிறந்த ஒருசாராரை “சண்டாளர்கள் என்றும், தீண்டப்படாதவர்கள்” என்றும் கூறுகிறது.

கோவில் கருவறையில் “குறிப்பிட்ட பிறவி உட்சாதிப் பிரிவார் தான் இந்து கோவிலில் அர்ச்சகர் ஆகமுடியும்” என அரசமைப்புச் சட்ட விதி 16(5) கூறுகிறது. நிற்க.

அடுத்து, விதி 25(1) மதத்தை நம்பவும், தடங்க லின்றிப் பின்பற்றவும், செயற்படுத்தவும், பரப்புரை செய்ய வும் - பொது அமைதிக்காப்பு, ஒழுக்கம், உடல்நலம் (Health) இப்பகுதியில் சொல்லப்பட்டுள்ள மற்றவற்றுக்கு உட்பட்டு, எல்லா மக்களும் சமமான உரிமை உள்ள வர்கள் ஆவர்.

சட்டம் 25(2) ஏற்கெனவே நடப்பிலுள்ள சட்டம் இப்போதும் பின்பற்றப்படுவதை இந்த விதியிலுள்ள எந்தப் பகுதியும் தடுக்காது. மேலும்,

(அ) மதத்தைப் பின்பற்றுவதுடன் தொடர்புள்ள எந்தப் பொருளாதார - அரசியல் மற்றும் மதச்சார்பற்ற செயல்பாடுகளை ஒழுங்குப்படுத்துவதையும் (அ) கட்டுப்படுத்து வதையும்

(ஆ) சமூக நலம், சமூகச் சீர்திருத்தம் பொதுவான இந்துக் கோவில்களை இந்து மதத்தைச் சார்ந்த எல்லா வகுப்பினருக்கும் பிரிவினருக்கும் திறந்துவிடல் இவற்றைச் செய்வதை இந்த விதி தடுக்காது.

இந்த விதிகள் 25, 26 இப்படி அமைக்கப்பட ஏற்பாடு செய்தவர் மறைந்த காஞ்சிப் பெரியவர் சந்திரசேகரேந்திர சரசுவதி ஆவார். அவருடைய கட்டளையைத் தலை மேல் வைத்துக் கொண்டு, அண்மையில் மறைந்த அக்னிஹோத்ரம் தாத்தாச்சாரியார் அரசமைப்புச் சட்ட வரைவுக் குழுவினரைத் தில்லியில் நேரில்பார்த்துப் பேசினார். மேலை நாட்டு மதச்சார்பின்மை - அதாவது கல்வியிலிருந்து மதத்தைப் பிரிக்கும் கொள்கையும் அரசிலிருந்து மதத்தைப் பிரிக்கும் கொள்கையும் ஆன மேலைநாட்டு மதச்சார்பற்ற விளக்கம் (Western Secularism) இந்திய அரசமைப்புச் சட்டத்தில் இடம்பெறாமல் அவர் தடுத்துவிட்டார். இது தந்தை பெரியாருக்கும் தெரியும்.

மேலும், (1) 1860இல் வெள்ளையரால் தொகுக்கப் பட்ட இந்துச் சட்டம் (Hindu Law) என்பதில், 2017லும், “இந்துக்கள் நான்கு பெரும் பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டி ருக்கிறார்கள். அவை முறையே பிராமணன், சத்திரியன், வைசியன், சூத்திரன் என்பவையாகும். மேலும் அவர்கள் மூவாயிரம் உள்சாதிகளாகப் பிரிக்கப்பட்டிருக்கிறார்கள்” என்று தெளிவாக உள்ளது.

இதற்கு ஆதாரம் (2) மனுஸ்மிருதி, (3) பராசரஸ் மிருதி, (4) யக்ஞவல்க்ய ஸ்மிருதி முதலானவை.

மேலேகண்ட ஸ்மிருதிகள், ஆகமங்களைத்தான் - கி.மு.2ஆம் நூற்றாண்டு முதல் இந்தியப் பெரும் பரப்பில் ஆட்சிசெய்த எல்லா அரசர்களும் பின்பற்றினர்.

தமிழ்நாட்டில் பழைய பாண்டியர் காலம் முதல் கி.பி.1320 வரை ஆண்ட பாண்டியர் காலம் வரை இதையே பின்பற்றினர்.

அதற்குப்பின் தமிழகத்தின் வடபகுதியை ஆண்ட இஸ்லாமியரும் தென்பகுதியை ஆண்ட மராட்டியரும் நாயக்கரும் இதையே பின்பற்றினர்.

வெள்ளையர் காலத்தில், கி.பி.1773இல் அரசப் பிரதிநிதி வாரன்ஹேஸ்டிங்ஸ் வெளியிட்ட ஒழுங்குமுறைச் சட்டப்படி, மேலே கண்ட இந்து மத நூல்கள் சட்ட அதிகாரம் பெற்றன.

வெள்ளையன் வெளியேறிய பிறகு, மேதை டாக்டர் பி.ஆர். அம்பேத்கர் தலைமையில் எழுதப்பட்ட இந்திய அரசமைப்புச் சட்டமும்,

1.            நால்வருணங்களின் பெயர்களைச் சட்டத்தில் எழுதா மலே-பிறவி நால்வருண வேறுபாட்டைக் காப்பாற்று கிறது.

2.            பழைய பழக்கவழக்கச் சட்டங்களைக் காப்பாற்றுகிறது.

3.            மதச்சார்புள்ள கல்வியையும் மதச்சார்புள்ள அரசை யும் காப்பாற்றுகிறது.

இவையெல்லாம் டாக்டர் அம்பேத்கருக்கு நன்கு தெரியும்.

அதனால்தான், 2.9.1953இல், தில்லி மாநிலங்கள் அவையில், பின்வருமாறு டாக்டர் அம்பேத்கர் பேசினார்.

“..... இந்திய அரசமைப்புச் சட்டத்தை எரிக்க எவரேனும் முன்வந்தால், நான் அதை எரிக்க முதல் ஆளாக இருப்பேன். அச்சட்டம் எனக்கு வேண்டாம். அது யாருக்கும் உதவாது” என்றே பேசினார்.

மேதை அம்பேத்கர், திடுமென 6.12.1956இல் மறை வுற்றார்.

அம்பேத்கர் எரிக்க விரும்பிய இந்திய அரசமைப்புச் சட்டத்தை, 26.11.1957இல் 10,000 பெரியார் தொண்டர்கள் எரித்தனர்; 3,000 பேர் ஒரு மாதம் முதல் 3 ஆண்டுகள் சிறைப்பட்டனர்.

சிறைக்குள்ளேயே அய்வர் மாண்டனர்; சிறைக்கு வெளியே 13 பேர் மாண்டனர்.

தந்தை பெரியார் 24.12.1973இல் மறைந்தார். அவர் மறைந்து 43 ஆண்டுகள் 9 மாதங்கள் ஆகி விட்டன.

அரசியல் சட்ட எரிப்புப் போராட்டம் 26.11.1957இல் நடைபெற்றது. அது நடந்து ஏறக்குறைய 60 ஆண்டு கள் ஆகிவிட்டன. ஆனால் இன்றும் நம் சமுதாய நிலை இழிவானதே.

தந்தை பெரியாரின் கொள்கை வெற்றிக்கு உரிய வழிகோலிட பெரியார் -  அம்பேத்கர் இயக்கத்தினர் சூளுரைப்போம், வாருங்கள்!

Pin It