போர் முடிந்தபின் ஈழத்துத் தமிழ்ச்சூழலில் படைப்பு முயற்சிகள் உத்வேகம் பெற்றிருக்கின்றது என்றுதான் சொல்லவேண்டும். நவகாலனித்துவத்தின் நுகத்தடியில் இன்று யாழ்ப்பாணம் தனது இயல் நிலை மாறியிருப்பினும் அதற்கெதிரான காத்திரமான விவாதங்களும் புரிதல்களும் முற்போக்குத் தளத்தில் விரிவாக்கம் பெற்றிருக்கின்றது என்றுதான் சொல்ல வேண்டும்.

70களில் முகிழ்த்த தேசிய கலை இலக்கியப் பேரவை தமிழ் தேசிய அலையில் தன்னை மழுங் கடிக்காமல் ஆரோக்கியமாக இயங்கியதன் பேறாக சமூக விஞ்ஞானவட்டம் ஊடாக அது புத்திஜீவிகள் மட்டத் திலாவது நவகாலனித்துவ புரிதலை விதைத்து ஈழத்து இலக்கியப் போக்கை மக்கள் சார்ந்ததாக - மாற்றத்துக்கு உந்துசக்தியாக மேலும் செழுமைப்படுத்துவதாக அமைந்துள்ளன.

ஈழத்தின் போர்க்காலம் என வரையறுக்கப்படும் 83இலிருந்து 2009 வரையான காலகட்டத்தில் தாயகம் இதழைத் தொடர்ச்சியாக வெளியிட்டு பல ஆக்க இலக்கிய கர்த்தாக்களை சமூக நோக்கில் எழுதுவதற்கு தூண்டி யதிலும் நூற்றுக்கு மேற்பட்ட நூல்களை வெளியிட்டு படைப்பாளிகளுக்கு உத்வேகம் அளித்தமையிலும் தேசிய கலை இலக்கியப் பேரவையின் பங்கு குறிப்பிடத் தக்கது.

அவ்வகையில் புடமிடப்பட்ட படைப்பாளிகளில் ஒருவராகத்தான் நான் க.சிவகரன் என்ற படைப் பாளியைப் பார்க்கின்றேன். 2013இலிருந்து 2016 வரையிலான சமகாலப் பகுதியில் அவரால் எழுதப் பெற்ற 13 சிறுகதைகளின் தொகுப்பாக தேசிய கலை இலக்கியப் பேரவையின் வெளியீடாக யாழ்ப்பாணத்தி லிருந்து வெளிவந்திருக்கின்ற நூல்தான் ‘இரங்கி’

முப்பது வருட யுத்தத்தினால் புலம்பெயர்ந்தும் இடம்பெயர்ந்தும் வாழ்ந்த மக்கள் தமது தாயக மண்ணை, பிறந்த மண்ணை தரிசித்து மீள்கின்ற அந்த அனுபவம் அலாதியானது. இந்த அனுபவம் வேறெங்கும் வாய்க்காதது. பனைக்கட்டிக்கூழும், ஒடியல் கூழும் குரக்கன் கூழும், பினாட்டும் புழுக்கொடியலும், நுங்கும் கள்ளும் கருப்பணியும் உண்டுமகிழ்ந்திருந்த 60களினதும் 70களினதுமான அந்தக்காலம் யாழ்ப்பாண மக்களுக்கு பொற்காலம் தான்.

அந்த இளமைக்காலத்தை மீட்கின்ற புலம் பெயர்ந்தோரின் உணர்வினை வெளிப்படுத்துகின்ற வகையில்தான் சிவகரனின் ‘இரங்கி’ என்ற சிறுகதை அமைந்துள்ளது. இது மாசி மாதம். பனிமூட்டம் கலையாத இதமான குளிர். நாற்பது வருடங்களுக்கு முன்பு இருந்த அதே குளிர். காலை வேளையில் இதமான இரங்கியின் சுகம் அவன் மேனி தழுவிய சூடான அந்தப் பரிசம் அவனை இளமைக் கால நினைவுகளுக்கு இழுத்துச் சென்றது. இந்த நினைவுகளின் வெம்மையும் ஏக்கமும் அவனை ஏங்கவைத்தன... என தொடர்கின்ற அவரது கதையில் இறுதி வரை அவரது அந்த உணர்வை - ஏக்கத்தை பிரதிபலிப்பதாக கதையை நகர்த்திச் செல்கின்றார்.

இளமைக் காலத்துக்காக ஏங்குகின்ற அவன் புலம்பெயர் சூழலின் உலகமயமாதலில் தாக்கத்தில் நுகர்வுக்கலாசாரத்தின் தாக்கத்தினால் அடியுண்டு போனவன். Òஅவனிடம் நிறையப் பணம் இருந்தது. சர்வதேச வங்கிகளின் பனைமரத்தின் கிளைகளின் ‘காட்’டுக்கள் அவனிடம் இருந்தன. அவன் கனடாவின் குடிமகன். பிறந்த நாட்டின் சுற்றுலாப் பயணி’Õ என அவனது கையறு நிலையை விளக்குகின்றார். படைப்பாளி.

ஆவலோடு வந்த அவனை அந்தக் கிராமத்து மக்கள் எப்படிப் பார்க்கின்றார்கள் என விளக்குகின்றார். ‘அவனைக் கண்ட சிலர் பயத்துடன் பார்த்தனர். இவன் காணிகளை விற்க வந்தவனா? அல்லது வாங்க வந்தவனா? என்ன? வேவு பார்க்கின்றான். வேண்டாவெறுப்பாக அவர்கள் சில வார்த்தை பேசினார்கள். அவனுடன் உளமாரப் பேசவில்லை. என்னதான் ஊரவன் என்றாலும் ஓர் அன்னியன் போலத்தான் பார்த்தனர். அவனுடன் கூடவே நடந்தவர்கள், கூடப் படித்தவர்கள், பாடிய வர்கள், ஆடியவர்கள், பள்ளிக்குப் போனவர்கள், மாங்காயைப் பாதி கடித்த பின்பு மறுபாதி உண்டவர்கள் என யாரும் இப்ப இல்லை. அவன் உணர்வுகளைப் பகிர்ந்து கொள்வதற்கு அவனுக்கு அவன் மட்டுமே இருந்தான்...Õ என அவன் சொந்த நிலத்திலேயே அன்னியனாக பார்க்கப்படும் அவலத்தை வெளிப் படுத்திச் செல்கின்றார் ஆசிரியர்.

அவன் தேடிச் செல்கின்ற ‘இரங்கி’... கடைசியில் ஏமாற்றமே மிஞ்சுகின்றது.

‘இரங்கிக் கிணறு பழைய கட்டுக்கிணறு... கிணற்றை இறைத்து வற்றியவுடன் காத்திருக்க வேண்டியது கிடையாது. அரை மணிநேரத்தில் உடனேயே ஊறிவிடும். அதனால் தான் அதற்கு இரங்கி என்ற பெயர் வந்திருக்கவேண்டும். தனது கன்றிற்கு பாலை ஒழித்து வைத்து இரங்கும் பசுவைப்போல அதுவும் இரங்கியது.’ என காரணப்பெயர் சொல்லும் அந்தக்கிணறு உண்மையில் யாழ்ப்பாண கிராமத்திலுள்ள கிணற்றின் பெயர் தான் அது. அந்தக் கிணற்றின் பரிதாப நிலையைத்தான் புலம்பெயர் பாத்திரத்தின் வழியாக எமது மனக்கண்முன் கொண்டுவருகின்றார் ஆசிரியர். நவகாலனித்துவம் எவ்வாறு எமது பண்பாட்டு வேரை பிடுங்கி எறிந்துள்ளது என்பதை இந்தக் கதைமூலம் எம்மை சிந்திக்கத் தூண்டுகின்றார். சூழலியல் கேடாக இன்று பாவித்துவிட்டு வீசி எறி என்ற நிலையில் சுத்தம் பேணும் பண்பாட்டிலிருந்து தூர வீசப்பட்டவர்களாக யாழ்ப்பாண மக்களை நவதாராளவாதம் ஆக்கிவிட்டிருக் கின்றது. இயற்கை வேளாண்மை மட்டுமா பறி போயிற்று. எங்கள் மண்ணின் அழகும் இளமையும் வளமும் தான் பறிபோயிற்று என்ற உணர்வை தூண்டும் வகையில் அமைந்துள்ளது சிறுகதை.

நஞ்சுண்ட கண்டன் சிறுகதை யாழ்ப்பாணத்தின் இன்னொரு சூழல் பிரச்சனையை கண்முன் கொண்டு வருகின்றது. நிலத்தடி நீர்வளம் மிக்கது யாழ்ப்பாண மண். அந்த வளத்தை நாசமாக்கும் வண்ணம் மின்சார பிறப்பாக்கி கழிவோயிலை கிடங்கு வெட்டி நிலத்தின் கீழ் செலுத்தியிருக்கின்றார்கள், மின்சாரம் வழங்கும் தனியார் கம்பனியினர். அதனால் சுண்ணாகம் பிரதேசத்திலுள்ள வீட்டு கிணறுகள் எங்கும் கழிவோயில் கலந்த நீர் படிவுகள்... இதன் தாக்கத்தை வெளிப் படுத்தும் விதத்தில் கதையை நகர்த்திச் செல்கின்றார்.

Ô‘சுண்ணாக மண்ணடியில் விரியும் விசம் குடித்த பெரும் பாம்பு ஒன்று வளர்கிறது. பார்த்தாயா? கொடிய நீண்ட பாம்பு நாளும் வளர்கிறது. கல்லுடலில் கரிய ‘பங்கர் ஓயில்’ குடித்து ஊதிப்பெருத்திருக்கும் கொடிய நீர்ப்பாம்பு உன் கண்ணில் தெரியவில்லையா! சுண்ணக் கல்லிடையே செருகி நீண்டு பெருத்திருக்கும் அதை சுண்நாகம் அன்றி வேறென்ன சொல்வது. அப்பனே உன் ஆலயத்தின் முன்னே அன்னியரின் வேலையைப் பார்...Ó என நகர்ந்து செல்லும் சொல்லோவியம் கண்முன்னே பல காட்சியனுபவங்களை தரவல்லதாக அமைந்துள்ளது. மக்கள் போராட்டத்தை காட்சிப் படுத்தும் இந்தச் சொல்லோவியம் முடிவில் அதிகாலைக் கனவு என காட்டுவது எவ்வளவு பொருத்தப்பாடு உடையது என எனக்குள் குழப்பம். காலையில் கண்ட கனவு பலிக்கும் என்ற நம்பிக்கையோ அறியேன். இருப்பினும் சொல்லும் பாணியும் வர்ணிப்பும் யாழ்ப்பாண மண்ணின் வாசத்தை மூக்கு நுனிக்குக் கொண்டுவருவதாக அமைந்துள்ளது.

அஸ்தினாபுரம் சிறுகதை இதிகாச கதையை இலகு தமிழில் சொல்லும் முயற்சியல்ல. மாறாக, பாரதப் போரின் தாக்கங்களை மக்கள் நிலையில் மக்களை முன்னிறுத்திக் கூறுவது. மாண்டு மடியப்போகின்ற போர்வீரனின் மனக்குமுறலாக எம்முன் விரிகின்றது.

Òதருமா... நீயா? நாட்டை வைத்து ஆடி இழந்து விட்டாய். உன்னுடைய! யார் சொன்னது என்னுடைய நாட்டை வைத்து ஆட எப்படி உனக்கு மனம் வந்தது. மன்னன் என்றால் எதையும் வைத்து ஆடலாம் என்ற மமதையா! ஆட அழைத்தால் ஆடத்தான் வேண்டு மென்ற செருக்கா! நீயும் ஆளவந்தவன் தானோ. உன்னை நம்பி ஓடி வந்த ஓட்டம் ஓயு முன்னர் நீ நாட்டை வைத்து ஆடி நடுத்தெருவில் என்னை விட்டு விட்டாயே...Ó

வட்டுக்கோட்டை தீர்மானத்திலிருந்து முள்ளி வாய்க்கால் வரை நீண்டு இன்றுவரை ஆண்ட பரம் பரையாக வலம் வந்துகொண்டிருக்கும் தமிழ்த்தேசிய தலைமைகள் சர்வதேசிய சூழ்ச்சி வலைக்குள் ஆட்பட்டு நிற்கும் எமது நிகழ்கால நிலையை தெட்டத்தெளிவாக காட்டும் சொற்சித்திரமா இக்கதை என நினைக்கத் தோன்றுகின்றது.

தேரோட்டம் - அழித்தல் தொழிலைக் குறிக்கும் சடங்கு. யாழ்ப்பாணத்தில் அழித்தல் தொழிலான போர் முனைப்புற்று ஓடி வன்னிக்கு சென்றபோது நட்பாகிக் காத்தவன் நண்பன். இவன் வன்னி கோர யுத்தம் தொடருமுன் மீண்டுவிட்டான். ஆனால் அந்த நண்பன் வன்னியில் கோர யுத்தம் தொடங்கி செல்வீச்சில் ஒரே நாளில் பங்கருக்குள் இருந்த மனைவி பிள்ளைகளைக் காவு கொள்ள, பைத்தியமாக்கப்பட்டு ஊர்தோறும் தேர் திருவிழாக்களில் இப்போது விளையாட்டு பொம்மை களை வியாபாரம் செய்யும் அந்த நண்பனை கோயில் தேர்முட்டியடியில் தேடும் கதை நேர்த்தியாகப் பின்னப்பட்ட சொற்கோர்வைகளால் கொண்டுசெல்ல நாமும் ஆசிரியரின் பின்னால் திரிய கதை எம்முன் காட்சியாய் விரிகின்றது. போர் மீண்டும் மீண்டும் தொடரும் என்பதையா இந்தத் தேரோட்டம் குறித்து நிற்கின்றது. தேர்த்திருவிழா என்ற பகட்டில் சுரண்டிக் கொழுப்போர் மகிழ்ந்திருக்க எத்தனை எத்தனை ஆயிரம் உயிர்கள் மாய்கின்றன.

கொத்தி- யாழ்ப்பாணத்தில் புரையோடிப் போயிருக்கும் சாதிய உணர்வை நாசூக்காகச் சொல்லுகின்ற கதை. வாசிப்பவனையும் கற்பனை செய்யத் தூண்டுகின்ற வகையில் விவரிப்பு.

இன்னொரு சித்திரம் காடேறி. காடேறிநாதர் என்ற சிறுதெய்வ வழிபாட்டை ஒட்டி கதை விரிகின்றது. யாழ்ப்பாணத்தை பறங்கியர் ஆண்டபோது அதை எதிர்த்து நின்ற, போர்புரிந்த மறவரின் கதை காதல் இழையோட அழகிய ஓவியமாய் விரிகின்றது.

பிறந்தும் பிறவாமலும், சர்க்கரை போட்ட பொங்கல், ஈச்சமரக்காடு, ஜீவா, மின்னல், தரிசனம். சூரியகுலம் என இன்னும் சிறுகதைகளைத் தாங்கி வந்திருக்கும் இரங்கி சிறுகதைத் தொகுப்பு ஐம்பது வயதான சி.சிவகரன் என்ற படைப்பாளியின் பாண்டித்தியத்தையும் சொற்சித்திரம் வரையும் திறனையும் கற்பனை வளத்தையும் தெளிவாகக் காட்டு வதாகத் திகழ்கின்றது.

இந்தப் படைப்பாற்றல் சமூக நோக்கோடு மிளிரும்போது மேலும் வீச்சுப்பெறுகின்றது.

இரங்கி

ஆசிரியர் : சிவகரன்

வெளியீடு: தேசிய கலை இலக்கியப் பேரவை

இல.62, கொக்குவில் சந்தி,

கொக்குவில், யாழ்ப்பாணம்.

 

Pin It