தஞ்சை நகரில் திராவிடர் கழகத்தை வேரூன்றச் செய்தவர்.  இராணுவத்திலும் திருச்சி இரயில்வே பணியிலும் பணியாற்றிய காலத்திலும் கழகப் பிரச்சாரத்தில் ஈடுபட்டவர்.  தாலி மறுப்பு, சாதி மறுப்பு ஆகிய கொள்கைகள் அடங்கிய பகுத்தறிவு சுயமரியாதை திருமணங்களை தானும் தன் மக்களும் பின்பற்றி எடுத்துக்காட்டான பெரியார் தொண்டராக வாழ்ந்தவர்தான் பசுபதி!

துப்பாக்கி வயிற்றில் பீரங்கி பிறந்ததைப் போல என்ற குத்தூசி குருசாமி அவர்களின் கூற்றுக் கிணங்க, பெரியாரின் போர்வாளாய் தஞ்சை மண்ணில் களமாடிய பசுபதி அவர்களின் பாச மகன் பசு.  கவுதமன், பெரியாரியலைப் பரப்புவதில், தன் தந்தையை விஞ்சி விட்டார் என்பதைப் பெருமையுடன் நாம் பாராட்டி மகிழலாம்!

தந்தை பெரியாரின் பேச்சு, எழுத்து ஆகிய வற்றை ஐந்து பெரும் தொகுதிகளாகத் தொகுத்து, ‘நான் சொன்னால் உனக்கு ஏன் கோபம் வர வேண்டும்?’ என்ற தலைப்பில் 3660 பக்கங்கள் கொண்ட மாபெரும் நூலை தஞ்சை பசு. கவுதமன் உருவாக்கித் தந்துள்ளார். இதனை நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் நிறுவனம் வெளியிட்டுள்ளது.

பெரியாரின் கொள்கைகளை வெகு மக்களிடம் கொண்டு சேர்க்கும் பணியில் ஈடுபட்டுள்ள தோழர் பசு. கவுதமன் அவர்களுக்கும், நியூ செஞ்சுரி நிறுவனத் திற்கும், மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் வாழ்த்துகளை, பாராட்டுக் களைத் தெரிவித்துக் கொள்கிறோம்.

நூலின் முகப்பு அட்டையை எழிலோடு தீட்டித் தந்த ஓவியர் ட்ராட்ஸ்கி மருது, அச்சிட்ட பாவை பிரிண்டர்ஸ் நிறுவனத்தினர் ஆகியோரும் நம் பாராட்டுக்குரியவர்களே!

1934-ஆம் ஆண்டில் ஈரோடு பகுத்தறிவு நூற் பதிப்புக் கழகம் பெரியாரின் குடியரசு பதிவுகளைத் தொகுத்து ‘குடியரசுக் கலம்பகம் முதல் பாகம்’ என்ற பெயரில் வெளியிட்டது.  இதுதான் பெரி யாரின் தொகுப்பு நூல்களில் முதலாவது என்ற பெருமைக்குரிய நூலாகும்.

இதன் பின்னர் திருச்சி சிந்தனையாளர் கழகத்தின் சார்பில் பெரியாரின் எழுத்துக்களையும், பேச்சுக்களையும் மூன்று தொகுதிகளாகத் தொகுத்து பெரியாரின் ஒப்புதலுடன் தோழர் வே.ஆனைமுத்து அவர்கள் 1974-ஆம் ஆண்டில் வெளியிட்டார்.  இதனைத் தொடர்ந்து 2009 ஆம் ஆண்டில் அவரே அந்தத் தொகுதிகளை, ஆறு தொகுதிகளாகவும் 36 பகுதிகளாகவும் வெளியிட்டார்.

இதே காலகட்டத்தில் (2008-ஆம் ஆண்டில்) பெரியார் திராவிடர் கழகம் ‘குடியரசு’ இதழ் களைத் தொகுத்து 29 தொகுதிகளாக நூலாக்கி வெளியிட்டது.

பெரியார் சுயமரியாதை பிரச்சார நிறுவனம் குடியரசு தொகுதிகள் 42அய், பெரியார் களஞ்சியம் என்ற தலைப்பில் 2009 முதல் வெளியிட்டது.  அடுத்த தொகுதிகளைத் தொடரும் பணியிலும் அது ஈடுபட்டுக் கொண்டிருக்கிறது.

தோழர் தஞ்சை பசு.  கவுதமன் அவர்களே பெரியாரின் படைப்புகளைத் தொகுத்து மூன்று தொகுதிகளாக ‘ஈ.வெ. இராமசாமி என்கிற நான்...’  என்று எழுதியதை பாரதி புத்தகாலயம் 2009-ஆம் ஆண்டில் வெளியிட்டது.

பெரியாரின் பேச்சுக்களையும் எழுத்துக்களையும் தொகுத்து ‘பெரியார் அன்றும் இன்றும்’ என்ற தலைப்பில் கோவை விடியல் பதிப்பகம் கடந்த ஆண்டில் பெரிய நூலாக வெளியிட்டது.

இவர்கள் அனைவரும் நம் நிரந்தரமான பாராட்டுக்குரியவர்களே!

1925-ஆம் ஆண்டு முதல் 1973-ஆம் ஆண்டு வரைக்குமான பெரியாரின் பதிவுகளை மொழி, இலக்கியம், கலையும் பண்பாடும், தத்துவம் சொற் சித்திரம், சித்ரபுத்திரன் பதிவுகள் என ஐந்து தொகுதிகளாக இந்த நூலை பசு.  கவுதமன் தொகுத்துத் தந்துள்ளார்.  ஒட்டுதல் வெட்டுதல் போன்ற சேதாரங்கள் இன்றி பெரியார் காலத்தில் அச்சில் வெளிவந்தபடியே, கால வரிசைப்படி இந்நூல் தொகுக்கப்பட்டிருக்கிறது.

பெரியார் எழுதிய நூல் மதிப்புரைகள், இரங்கல் குறிப்புகள், அறிவிப்புகள், தோழர்களிடம் ஆலோசனை கேட்ட செய்திகள் முதலானவை புதிய தகவல்களாக இந்நூலில் இணைக்கப்பட்டுள்ளன.  அறிஞர் வேமன்னாவின் முயற்சியில் கர்நாடக சிந்தனையாளர் கழகம் பெரியாரின் நூல்களை கன்னட மொழியில் மொழிபெயர்த்து வெளியிட்ட 19 நூல்களின் பட்டியலையும் இந்நூல் பெருமிதத் துடன் சுட்டிக் காட்டுகிறது.

1928-ஆம் ஆண்டு முதல் 2005-ஆம் ஆண்டு வரை 229 தலைப்புக்களில் வெளிவந்த பெரியாரின் பேச்சு, எழுத்து அடங்கிய நூல்களின் பெயர்கள், அவற்றை வெளியிட்ட பதிப்பகங்களின் பெயர்கள் முதலானவைகளும் இந்நூலில் வரலாறாய் இடம் பெற்றுள்ளன.

இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மூத்த தலைவர்களான ஆர். நல்லகண்ணு, தா. பாண்டியன், முற்போக்கு எழுத்தாளர் வ. கீதா, சென்னைப் பல்கலைக்கழகத் தமிழ்த்துறைத் (மேனாள்) தலைவர் வீ.அரசு, ந. முத்துமோகன், பேராசிரியர் இரா. காமராசு ஆகியோரின் கருத்து வளம் நிறைந்த அணிந்துரைகள் நூலுக்கு அணி சேர்க் கின்றன.

நூலின் தொகுப்பாசிரியர் பசு. கவுதமன் அவர்கள் 22 பக்கங்கள் கொண்ட சிறப்பான முன்னுரையை நன்றியுரையாக்கித் தந்துள்ளார்.  தந்தை பெரியார் அவர்களின் சிலைகளில் உள்ள கடவுள் மறுப்பு வாசகங்கள் 1971-ஆம் ஆண்டில் மிகப் பெரிய பிரச்சினையாக்கப்பட்டு நீதிமன்றம் வரை கொண்டு செல்லப்பட்டது.  அப்போது ‘உண்மை’ இதழில் மூன்று தலையங்கங்களைத் தீட்டிய பெரியார், அதற்குக் கொடுத்த தலைப்பு தான், “நான் சொன்னால் உனக்கு ஏன் கோபம் வரவேண்டும்?” என்பது.

“நான் சொல்லும் வழி தவறு என யாராவது கருதினால் அதற்கு வழிகாட்டட்டும்.  எனக்கு வேறு வழி காட்டாமலும், என்னுடன் சேரா

மலும், என்னைக் குறை கூறிக் கொண்டு மட்டும் இருந்தால் அவர்களைக் கோழைகள் என்று தான் சொல்வேன்,” என்றும் “நான் தவறு செய்யலாம்.  என் ஆராய்ச்சியும் குருடன் யானையைக் கண்ட காட்சி போல என்னைத் தவறான வழியில் இழுத்து விட்டிருக்கலாம்.  அப்படி இருந்தாலும் அதில் அதிசயமிருக்காது.

ஆனால் அதை திருத்துவது எப்படி? என்னைக் குறைகூறுவதும் என்னைத் தண்டிக்கச் செய்வதும் திருத்துவதாகிவிடுமா?” என்றும் தம்மையும் விசாரணைக்குரியவராக நிறுத்தி - பகுத்தறிவைப் பயன்படுத்தி அழைப்பு விடுத்த அதிசயத் தலைவர் அய்யா பெரியாரின் தனிச் சிறப்பைத் தோழர் கவுதமன் முன்னுரையில் சுட்டிக் காட்டியுள்ளார்.

இந்தத் தொகுப்பு நூலை உருவாக்க காரண மான நிகழ்ச்சி எது? எழுதத் தூண்டியவர் யார்? எப்படி எழுதப்பட்டது? யார் யார் எந்தெந்த வகையில் துணை நின்றார்கள் என்பதையெல்லாம் தோழர் கவுதமன் தன் முன்னுரையில் பதிவு செய் துள்ளார்.

“பெரியாரின் பொது வாழ்க்கை 1914, 1915-ஆம் ஆண்டுகளில் துவங்குகிறது.  அதிலிருந்து 1924 வரைக்குமான பதிவுகள் இன்றும் தேடலுக்கு உரியனவாக இருப்பதாகவே கருதுகிறேன்.  அதைப் போன்றே அவர் சார்ந்த, அவர் இயக்கம் சார்ந்த இதழ்களின் வெளியீடுகள் தவிர்த்து பிற இதழ் களிலும் வெளியீடுகளிலும் அவர் தேடப்பட வேண்டும்.  அப்போதுதான் பெரியார் முழுமை பெறு வார்.”

என்று எதிர்காலத்தில் நாம் செய்ய வேண்டிய பணிகளையும் தோழர் கவுதமன் சுட்டிக் காட்டு கிறார்.

தோழர் பசு. கவுதமன் இப்போது திராவிடர் கழகத்தில் உறுப்பினராக இல்லை.  இந்த நிலை யிலும் திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி. வீரமணி அவர்களைப் பற்றி, “ஆசிரியர் அவர் களை 25 ஆண்டுகளுக்குப் பிறகு சந்திக்கின்ற உரை யாடுகின்ற வாய்ப்புக் கிடைத்த அந்தத் தருணம் நெகிழ்ச்சியாகவும் மகிழ்ச்சியாகவும் உணர்ந் தேன்.” என்று குறிப்பிட்டு, பெரியார் திடலில் உள்ள நூலகத்தைப் பயன்படுத்திக் கொண்டதை நன்றியுடன் குறிப்பிடுகிறார்.

“கட்டைவிரல் கேட்கவில்லை ஆனாலும் என் ஆசானாய் அய்யா, ஆசிரியர் மானமிகு கி. வீரமணி அவர்களுக்கு” என முதல் தொகுதியையும், “என்னை ஆளாக்கி என் உயரத்தைக் காணாமல் மறைந்த தாய் பத்மாவுக்கு, தந்தை பசுபதிக்கு, என்னை வளர்த்தெடுத்த இரண்டாம் தாய் என் அன்புத் துணைவி அறிவுச் செல்விக்கும்” என மூன்றாவது தொகுதியையும், கொளத்தூர் த.சொ. மணி, கோவை கு.இராமகிருட்டிணன், பட்டுக்கோட்டை இளவரி, குடந்தை ஏ.எம். ஜோசப், குடந்தை ஆர்.பி.எஸ். ஸ்டாலின், பேராசிரியர் மு. இராம சாமி ஆகியோருக்கு எஞ்சிய பிற தொகுதிகளையும் தோழர் பசு.கவுதமன் நன்றியுடன் நூலை ஒப் படைத்து மகிழ்கிறார்.

“நான் சாதாரணமானவன்; என் மனதில் பட்டதை எடுத்துச் சொல்லியிருக்கிறேன்.  இது தான் உறுதி.  இதை நீங்கள் நம்பித்தான் ஆக வேண்டும் என்று சொல்லவில்லை; ஏற்கக்கூடிய கருத்துக்களை உங்கள் அறிவைக் கொண்டு நன்கு ஆய்ந்து ஏற்றுக் கொள்ளுங்கள்; மற்றதைத் தள்ளி விடுங்கள்.

எந்தக் காரணத்தைக் கொண்டும் மனிதத் தன்மைக்கு மீறிய எந்தக் குணத்தையும் என் மீது சுமத்தி விடாதீர்கள்.  நான் தெய்வத் தன்மை பொருந்தியவனாகக் கருதப்பட்டால், மக்கள் என் வார்த்தைகளை ஆராய்ந்து பார்க்க மாட்டார்கள்,” என்ற அறிவாசான் பெரியாரின் பொன்மொழி களோடு நூல் தொடங்குகிறது.

தமிழகத்தின் கல்வி அமைச்சராக சி. சுப்ர மணியம் இருந்தபோது, பள்ளிகளில் மதக் கல்வி கற்பிக்க வேண்டும் என்று ஒரு கூட்டத்தில் பேசினார்.  இதனைக் கண்டித்து “சித்ரபுத்திரன்” என்ற புனைப் பெயரில் உரையாடல் நடையில் விடுதலையில் (07. 08. 1959) எழுதினார் பெரியார்.

“மாட்டைக் கொன்று செருப்புத் தானம் பண்ணுவது போல மதத்தைக் காப்பாற்றி முதன் மந்திரியாகப் பார்ப்பதும் மடமை என்றுதான் சொல்ல வேண்டும்!

மதம் என்ற பெயரால் கீதையைப் பள்ளிகளில் போதித்தால், திணித்தால் நாங்கள் நடத்துகிற பள்ளிகளில் புத்தக் கொள்கைகளை, நாத்திகக் கொள்கைகளை ஏன் கற்பிக்கக் கூடாது?

குளிக்கப் போய் சேற்றைப் பூசிக் கொள்ளப் பட்டதாக இருக்கக்கூடாது என்பது என் ஆசை!” என்ற பெரியாரின் கருத்துடன் நூல் நிறைவு பெறுகிறது.

தஞ்சை, மதுரை, கோவை என முக்கிய நகரங் களில் எல்லாம் இந்த நூல் தொகுப்பினை அறிமுகம் செய்து முன்பதிவுக்கான கூட்டங்களும் பின்னர் நூல் வழங்கும் நிகழ்ச்சிகளும் நடத்தப்பட்டன.  இரண்டாயிரம் பிரதிகளும் இந்த வகையில் விற்றுத் தீர்ந்து விட்டன.  அடுத்த பதிப்புக்கான பணிகள் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன.  சென்னையில் நடைபெற உள்ள புத்தகக் கண்காட்சியில் இரண் டாவது பதிப்பு நூல்கள் கிடைக்கும் என அறிவித் துள்ளனர்.

எதிர்ப்புக்களும், ஏளனங்களும், திரிபு வாதங் களும் மலிந்து விட்ட இந்தக் காலத்தில் தந்தை பெரியார் கொள்கைகளுக்குக் கிடைத்துள்ள மிகப் பெரிய மரியாதையாகவும், எதிர்பார்ப்பாகவும் இந்த நூல் விற்பனையைக் கருதி மகிழ்ச்சி கொள் வோம்!

தொகுப்பு நூலாசிரியருக்கும் - வெளியீட்டாளருக்கும் மீண்டும் நம் பாராட்டுக்கள்.

நன்றி: சங்கொலி

Pin It