ரஷ்ய இலக்கிய மரபு என்பது தனித்துவமானது மட்டுமன்று; அது வளமானதும் கூட. இலக்கிய மரபு என்பது ஒரு சமூகத்தில் தலைமுறை தலைமுறைகளாகத் தொடர்ந்து வரும் எழுத்து மற்றும் வாய்மொழி இலக்கிய வழக்கங்களாகும். ஒரு சமூகத்தின் சிந்தனை, மொழி, நம்பிக்கைகள், வாழ்வியல் நெறிமுறைகள், அனுபவங்கள் ஆகியவை இலக்கிய மரபின் மூலம் பாதுகாக்கப்படுகின்றன. இந்த மரபு கடந்தகாலத்தையும் நிகழ்காலத்தையும் எதிர்காலத்தையும் ஒன்றோடொன்று இணைக்கும் பாலமாகச் செயல்படுகிறது.
ஒரு சமூகத்தின் தொன்மையையும் தொடர்ச்சியையும் இலக்கியத்தின் வழியே அறியமுடியும். மக்களின் வாழ்க்கை முறைகள், போராட்டங்கள், நம்பிக்கைகள், வழிபாடுகள், தத்துவங்கள் ஆகியவை இலக்கியங்களில் பதிவாகியுள்ளன. இதிகாசங்கள், புராணங்கள், பழங்கதைகள், நாட்டுப்புறப் பாடல்கள் போன்றவை ஒரு சமூகத்தின் தொடக்க நிலைகளை அறிய உதவுகின்றன. இவை ஒரு சமூகத்திற்கு அடையாளத்தை உருவாக்குகின்றன.
இலக்கிய வளர்ச்சி சமூக வளர்ச்சியோடு நேரடியாகத் தொடர்புடையது. சமூகம் மாற்றமடைகின்றபோது இலக்கியத்தின் பொருள்களும் மாற்றமடைகின்றன. பண்பாடு இலக்கியத்தின் உயிராகும். ஒரு சமூகத்தின் மொழி, மரபுகள், விழாக்கள், உணவு, உடை, பழக்கவழக்கங்கள் ஆகியவை இலக்கியத்தில் நேரடியாகப் பிரதிபலிக்கின்றன.
உலக இலக்கிய மரபுகள்
இந்திய இலக்கியம், ஐரோப்பிய இலக்கியம், ரஷ்ய இலக்கியம் ஆகியவை உலகின் முக்கிய இலக்கிய மரபுகளாகும். இந்த மூன்றுமே மனித வாழ்க்கையைப் பற்றித்தான் பேசுகின்றன என்றாலும், அவற்றின் அடிப்படைச் சிந்தனைகள் மற்றும் நோக்கங்கள் வேறுபடுகின்றன. இந்த வேறுபாடுகள் அந்தந்தச் சமூகங்களி்ன் வரலாற்றையும் பண்பாட்டையும் வெளிக்காட்டுகின்றன.
இந்திய இலக்கியம் மிகவும் தொன்மையானது. குறிப்பாகத் தமிழ் இலக்கியத்தின் தொன்மையும் தொடர்ச்சியும் வளமானவை; இது வாழ்க்கை நெறியைச் சொல்கிறது. அறத்தோடு வாழும் வாழ்வையே வாழ்வு என்கிறது, ஒட்டுமொத்த மனிதனின் முழுமையான வளர்ச்சியைப் பற்றிப் பேசுகிறது, ஐரோப்பிய இலக்கியம் அறிவையும் தனி மனிதச் சிந்தனையையும் முக்கியமாகக் கருதுகிறது. இங்கு இலக்கியம் மனித உரிமை, சுதந்திரம், தனிமனித உணர்வு, காதல், சமூக மாற்றம் போன்றவற்றைப் பேசுகிறது. கலை அழகு மற்றும் வடிவ அமைப்பு போன்ற அழகியலுக்கு ஐரோப்பிய இலக்கியம் முக்கியத்துவம் தருகிறது.
ரஷ்ய இலக்கியம் இந்த இரண்டிலிருந்தும் வேறுபடுகிறது. இது மனித மனத்தை உளவியல் நோக்கில் ஆழமாக ஆராய்கிறது. குற்ற உணர்வு, மன வேதனை, நம்பிக்கை, பயம், ஒழுக்கம் போன்றவை ரஷ்யக் கதைகளின் மையமாக உள்ளன. எளிய மக்களின் துன்பங்களைக் கருணையுடனும் பரிவுடனும் ரஷ்ய இலக்கியம் பார்க்கிறது; மனித உரிமைகளைப் பற்றிப்பேசுகிறது; மனிதன் மனிதனாக நடத்தப்படவேண்டும் என்பதில் கவனம்கொள்கிறது.
இந்திய இலக்கியம் மனிதனை நல் வாழ்க்கைக்கு ஆற்றுப்படுத்துகிறது; ஐரோப்பிய இலக்கியம் மனிதனுக்குச் சிந்தனையும் கலை அழகும் முக்கியம் எனக் கூறுகிறது. ரஷ்ய இலக்கியம் மனித வேதனையையும் மனப் போராட்டங்களையும் தீவிரமாகப் பேசுகிறது. மூன்றிலும் மனித வாழ்க்கையே மையமாக உள்ளது. ஆனால் பார்வைகள் மாறுபடுகின்றன.
ரஷ்ய இலக்கியத்தின் தொடக்க காலம்
ரஷ்ய இலக்கிய வளர்ச்சி கி.பி.10ஆம் நூற்றாண்டில் இருந்து தொடங்குகிறது. இந்தக் காலக்கட்டத்தில் ஐரோப்பாவின் கீவன் ரஸ் என்ற பகுதி கிறிஸ்தவ மதத்தை ஏற்றுக் கொண்டது. அதற்கு முன்பு, ரஷ்ய சமூகத்தில் எழுத்துமரபு பெரிதாக இல்லை. மக்கள் வாய்மொழிக் கதைகள், பாடல்கள், வீரக் கதைகள் போன்றவற்றையே பயன்படுத்தினர். கிறிஸ்தவ மதம் வந்த பிறகே எழுத்துமுறை முக்கியமானதாக மாறியது. தேவாலயத்தின் மூலம் வாசிப்பும் எழுத்துமுறையும் பரவின.
தொடக்கக் கால ரஷ்ய இலக்கியங்கள் பெரும்பாலும் மதம் தொடர்பானவையாகவே இருந்தன. அவை புனிதர்களின் வாழ்க்கைக் கதைகள், பிரசங்கங்கள், வரலாற்றுக் குறிப்புகள், ஜெபங்கள் போன்றவை. அக்கால இலக்கியம் மக்கள் பொழுது போக்குவதற்காக இல்லை; அது ஒழுக்கம், இறைபக்தி, சமூகக் கட்டுப்பாடு ஆகியவற்றைக் கற்பிப்பதற்காக எழுதப்பட்டது. தனிப்பட்ட உணர்வுகள் அல்லது கற்பனைக்கு அங்கு இடமில்லை.
இக் காலக்கட்டத்தில் உருவான படைப்புகளில் “முதன்மை வரலாறு” (The Primary Chronicle) மற்றும் “இகோரின் படையெடுப்புக் கதை” குறிப்பிடத்தக்கவை. இவை ரஷ்ய மக்களின் தொடக்ககால வரலாற்றையும் பண்பாட்டையும் காட்டுகின்றன.
14ஆம் நூற்றாண்டிலிருந்து 17ஆம் நூற்றாண்டு வரை இலக்கிய வளர்ச்சி மெதுவாகவே இருந்தது. வரலாற்றுக் குறிப்புகள் மற்றும் மத நூல்கள் அதிகம் எழுதப்பட்டன. எழுத்தாளர்களின் தனிப்பட்ட குரல் மிகவும் ஒடுங்கியே இருந்தாலும், மொழியும் இலக்கியமும் பாதுகாக்கப்பட்டு, அடுத்த கட்ட வளர்ச்சிக்கான அடிப்படையாக அமைந்தது.
பொற்காலம்
18ஆம் நூற்றாண்டில் ரஷ்ய இலக்கியத்தில் பெரிய மாற்றம் ஏற்பட்டது. இந்த மாற்றத்திற்கு மகாபீட்டர் மேற்கொண்ட மேற்கத்தியச் சீர்திருத்தங்களே காரணமாக இருந்தன. ரஷ்யா மேற்கத்திய நாடுகளுடன் தொடர்பு கொண்டது. கல்வி வளர்ந்தது. அச்சுப்பண்பாடு பரவியது. இதனால் இலக்கியம் மதச் சூழலிலிருந்து வெளியே வந்து பொதுவாழ்க்கையைப்பற்றிப் பேசத் தொடங்கியது.
இந்தக் காலத்தில் கவிதை, நாடகம், உரைநடை போன்ற புதிய வடிவங்கள் உருவாகின. அறிவு, அறிவியல், மனித முன்னேற்றம், ஒழுக்கம் போன்ற கருத்துகள் பேசப்பட்டன. ரஷ்ய மொழி இலக்கியத்திற்கு ஏற்ற வகையில் சீர்திருத்தப்பட்டது. இந்தக் காலமே நவீன ரஷ்ய இலக்கியத்தின் தொடக்கமாகக் கருதப்படுகிறது.
19ஆம் நூற்றாண்டு ரஷ்ய இலக்கியத்தின் பொற்காலமாகக் கருதப்படுகிறது. இந்தக் காலத்தில் ரஷ்ய இலக்கியம் உலக அளவில் புகழ்பெற்றது. மனித வாழ்க்கை, சமூக அநீதி, மனச்சிக்கல், வாழ்வியல்நெறி ஆகியவை முக்கியப் பொருள்களாக இருந்தன. இந்த நூற்றாண்டில் பல எழுத்தாளர்கள் தோன்றினர். அவர்கள் தங்கள் எழுத்தின் மூலம் உலகப்புகழடைந்தனர்.
எழுத்தாளர்களும் படைப்புகளும்
ரஷ்ய இலக்கியத்தின் தந்தை என அழைக்கப்படுபவர் அலெக்சாண்டர் புஷ்கின் (Alexander Pushkin) ஆவார். இவர் ரஷ்ய மொழியை எளிமையாகவும் கவித்துவமாகவும் வடித்துத்தந்தவர். கவிதை, கதை, நாவல் போன்ற பல வடிவங்களில் எழுதியுள்ளார். அவருக்குப் பிறகு வந்த அனைத்து எழுத்தாளர்களுக்கும் அவர் தான் முன்னத்தி ஏர்.
சமூகத்தின் குறைகளைப் பகடிசெய்து எழுதியவர் நிக்கோலை கோகோல் (Nikolai Gogol). அரசு அலுவலகங்களில் நடக்கும் அநீதி, எளிய மக்களின் துயரம் போன்றவற்றை அவர் கதைகளில் காட்டினார். அவரது எழுத்துகள் சிரிக்கவும் சிந்திக்கவும் வைத்தன.
சமூக மாற்றங்களையும் தலைமுறைகளுக்கு இடையேயான முரண்பாடுகளையும் எழுதியவர் இவான் துர்கனேவ். அவரது எழுத்து ஆழமும் உணர்ச்சியும் கொண்டது. இவர் ரஷ்ய இலக்கியத்தை ஐரோப்பிய நாடுகளில் அறிமுகப்படுத்தினார்.
ரஷ்ய இலக்கியத்தில் மிகப் பெரிய ஆளுமை லியோ டால்ஸ்டாய் ஆவார். போரும் அமைதியும், அன்னா கரினீனா போன்ற புகழ்பெற்ற படைப்புகளைத் தந்தவர். குடும்பம், காதல், போர், ஒழுக்கம் போன்ற வாழ்க்கைச் சிக்கல்களை இவர் ஆழமாக உணர்த்தினார்.
மனித மனதை ஆழமாக ஆராய்ந்தவர் என்றால் அது ஃபியோதர் தஸ்தயேவ்ஸ்கி தான். குற்ற உணர்வு, நம்பிக்கை, பயம், மன வேதனை போன்றவை அவரது கதைகளின் மையமாக இருக்கின்றன. அவரது படைப்புகள் வாசகர்களைச் சிந்திக்க வைக்கின்றன.
சிறுகதை மற்றும் நாடகத்தில் புகழ்பெற்றவர் ஆன்டன் செக்காவ். இவர் எளிய மனிதர்களின் அன்றாட வாழ்க்கையை இயல்பாகவும் உணர்ச்சியுடனும் எழுதியுள்ளார். கதையில் பெரிய நிகழ்வுகள் இல்லாமலேயே மனித மனதை, அதன் உள் அடுக்குகளைக் காட்டியவர்
20ஆம் நூற்றாண்டில் முக்கியமான எழுத்தாளர் மாக்சிம் கார்க்கி. இவர் தொழிலாளர்கள் மற்றும் ஏழை, எளிய மக்களின் வாழ்க்கையை எழுதினார். சமூகப் போராட்டங்களை அவரது கதைகள் வெளிப்படுத்துகின்றன.
அரசியல் அடக்குமுறைகளை ஆழமாக வெளிப்படுத்தியவர் அலெக்சாண்டர் சொல்ஜெனிட்சின். சிறை முகாம்களில் நடந்த மனித உரிமை மீறல்களை இவர் விரிவாக எழுதியுள்ளார்.
நவீன காலத்தில் லியுட்மிலா உலிட்ஸ்கயா (Lyudmila Ulitskaya) மற்றும் விக்டர் பெலெவின் (Viktor Pelevin) போன்றவர்கள் பிரபலமானவர்கள். அவர்கள் இன்றைய சமூக மாற்றங்களையும் நவீன மனித வாழ்க்கையையும் எழுதுகின்றனர்.
இருபதாம் நூற்றாண்டு
இருபதாம் நூற்றாண்டின் தொடக்கத்தில் கவிதை முக்கிய இடத்தைப் பெற்றது. எழுத்தாளர்கள் புதிய வடிவங்களையும் புதிய கருத்துகளையும் முயற்சி செய்தனர். காதல், மர்மம், தத்துவம், புரட்சி போன்றவை இவர்களது படைப்புகளில் பேசப்பட்டன. இந்தக் காலத்தின் கவிஞர்கள் தனிப்பட்ட உணர்வுகளையும் சமூக மாற்றங்களையும் வெளிப்படுத்தினர். ஆனால் 1917ஆம் ஆண்டு ரஷ்யப் புரட்சி இலக்கியத்தை முற்றிலும் மாற்றியது. சோவியத் காலத்தில் இலக்கியம் அரசின் கட்டுப்பாட்டில் இருந்தது. சமூக யதார்த்தவாதம் என்ற கோட்பாட்டைப் பின்பற்ற எழுத்தாளர்கள் கட்டாயப்படுத்தப்பட்டனர்.
அரசுக்கு எதிராக எழுதியவர்கள் தண்டிக்கப்பட்டனர்; சிலர் நாடு கடத்தப்பட்டனர்; சிலர் சிறையில் அடைக்கப்பட்டனர். இருப்பினும், இந்தக் காலத்திலும் சில முக்கிய படைப்பாளுமைகள் தோன்றினர். தொழிலாளர்கள், ஏழைகள், போர், துன்பம் போன்றவை இக்கால இலக்கியத்தின் மையமாக இருந்தன.
சோவியத் ஒன்றியம் 1991 ஆம் ஆண்டு வீழ்ந்த பிறகு, ரஷ்ய இலக்கியம் மாறுதலைப் பெற்றது. எழுத்தாளர்கள் தங்கள் கருத்துகளை வெளிப்படையாக எழுதத் தொடங்கினர். அடையாளம், வரலாறு, நினைவுகள், நவீன வாழ்க்கைச் சிக்கல்கள் ஆகியவை முக்கியமான பேசுபொருட்களாகின.
இன்றைய ரஷ்ய இலக்கியம் பழைய பாரம்பரியத்தையும் நவீன சிந்தனையையும் இணைக்கிறது. பல்வேறு பாணிகளும் கருத்துகளும் காணப்படுகின்றன. மனித வாழ்க்கையின் உண்மை, வேதனை, நம்பிக்கை ஆகியவற்றை ரஷ்ய இலக்கியம் தொடர்ந்து ஆராய்ந்து வருகிறது.
ரஷ்ய இலக்கியத்தின் தனித்தன்மை
உலக இலக்கியங்களில் ரஷ்ய இலக்கியம் ஒரு தனித்துவமான இடத்தைப் பெற்றுள்ளது. ஒவ்வொரு நாட்டின் இலக்கியமும் அந்த நாட்டின் பண்பாடு மற்றும் வரலாற்றைப் பிரதிபலிக்கும். ஆனால் ரஷ்ய இலக்கியம் மனித மனத்தின் ஆழம், வாழ்க்கை ஒழுங்கு, உணர்வு, தத்துவச் சிந்தனை, மனித வேதனை ஆகியவற்றை மிகத் தீவிரமாக எடுத்துரைப்பதால் பிற நாடுகளின் இலக்கியங்களிலிருந்து வேறுபடுகிறது. 19ஆம் நூற்றாண்டு முதல் இன்றுவரை ரஷ்ய இலக்கியம் வாழ்க்கை, நம்பிக்கை, சுதந்திரம், சமூகப் பொறுப்பு போன்ற அடிப்படையான கேள்விகளைத் தொடர்ந்து எழுப்பி வருகிறது.
ரஷ்ய இலக்கியத்தின் தனித்துவம் எது என்றால் அது மனித மனதை ஆழமாக ஆராய்வதாகும். இங்கு புனைவுகளில் புற நிகழ்வுகளை விட மனிதனின் அகப் போராட்டங்கள் முக்கியம். குற்ற உணர்வு, மனக்குழப்பம், நம்பிக்கை, வாழ்வின் மீதான அவநம்பிக்கை, ஒழுக்க நெறிகள், சமுகப் பொறுப்பு போன்ற உணர்வுகள் கதாபாத்திரங்களின் வழியே வெவ்வேறு வகைகளில் வெளிப்படுகின்றன.பல மேற்கத்திய இலக்கியங்கள் நிகழ்வுகளுக்கும் சம்பவங்களுக்கும் முக்கியத்துவம் அளிப்பதைப் பார்க்கலாம். ஆனால் ரஷ்ய இலக்கியம் மனித ஆன்மாவை ஆராய்கிறது. இதனால் அது வாசக மனங்களில் எளிதில் சென்றுவிடுகிறது,
ரஷ்ய இலக்கியத்தின் மற்றொரு தனித்தன்மை, மிக எளிய மனிதர்களை மையமாகக் கொண்டதுதான். ஏழை எளியவர்கள், கடைநிலை ஊழியர்கள், கிராமத்து மனிதர், ஆசிரியர், மருத்துவர் போன்றவர்கள்தான் முதன்மையான கதாபாத்திரங்கள். இவர்கள் அனைவருமே நாம் அன்றாடம் சந்திக்கக் கூடியவர்கள்.
வரலாற்றுச் சூழ்நிலையும் ரஷ்ய இலக்கியத்தின் வடிவத்தை நிர்ணயித்தது. மேற்கத்திய நாடுகளில் கருத்துச் சுதந்திரம் முன்பே வளர்ந்தது. ஆனால் ரஷ்யாவில் நீண்ட காலம்வரை தணிக்கையும் அடக்குமுறையும் இருந்தன. இதனால் எழுத்தாளர்கள் தங்கள் கருத்துகளை நேரடியாகச் சொல்ல முடியவில்லை. குறியீடுகள், உவமைகள், மறைமுகக் குறிப்புகளின் வழி உண்மையைச் சொன்னார்கள். இதன் காரணமாக, ரஷ்ய இலக்கியம் பல அடுக்குகளைக் கொண்டதாகவும் ஆழமானதாகவும் மாறியது.
ரஷ்ய இலக்கியத்தைப் பொருத்தவரை வாழ்க்கையும் இலக்கியமும் ஒன்றுடன் ஒன்று இணைந்திருந்தன. எழுத்தாளர்கள் தாங்கள் எழுதிய விஷயங்களைத் தாங்களே அனுபவித்தவர்கள்.அதாவது, சொந்த அனுபவங்களைப் படைப்பாக்கினர். நாடு கடத்தல், சிறை, ஏழ்மை, மன வேதனை போன்ற அனுபவங்கள் அவர்களது வாழ்க்கையில் இருந்தன. அதனால் அவர்களது எழுத்துகள் உண்மையானவையாகவும் உயிர்ப்புடனும் இருந்தன.
20ஆம் நூற்றாண்டில் சோவியத் ஆட்சிக் காலத்திலும் ரஷ்ய இலக்கியம் தனது ஆழத்தை இழக்கவில்லை. கடும் தணிக்கை இருந்தபோதும், சில எழுத்தாளர்கள் உண்மையான கருத்துகளை பயப்படாமல் வெளிப்படுத்தினர். அரசியல் ஒடுக்குமுறைகளையும் மனித வேதனைகளையும் அவர்கள் தைரியமாக எழுதினர். இதனால் ரஷ்ய இலக்கியத்தின் வலிமை மேலும் உயர்ந்தது.
இந்தியாவில் ரஷ்ய இலக்கியத்தின் செல்வாக்கு
இலக்கியம் மக்களிடையே அறிவு மற்றும் சமூக விழிப்புணர்வினை வளர்க்கும் கருவியாக சோவியத் அரசு கருதியது. இதன் ஒரு பகுதியாக, உலகின் பல நாடுகளுடன் - குறிப்பாக, புதிதாகச் சுதந்திரம் பெற்ற இந்தியாவுடன், பண்பாட்டு மற்றும் இலக்கிய உறவுகளை வளர்க்கும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. 20ஆம் நூற்றாண்டில் இந்தியாவில் ரஷ்ய இலக்கியம் பெரும் செல்வாக்கடைந்தது. இதற்குச் சோவியத் ஒன்றியம் முக்கியப் பங்கு வகிக்கிறது. இந்தியாவும் சமூக நீதி, மனிதநேயச் சிந்தனை போன்ற கருத்துகளுக்கு முக்கியத்துவம் அளித்த நாடாக இருந்ததால், ரஷ்ய இலக்கியம் இந்தியாவில் எளிதில் வரவேற்பைப் பெற்றது.
1950–1960 காலகட்டம் இந்தியாவிலும் ரஷ்யாவிலும் மொழிபெயர்ப்பு இயக்கம் தொடங்கிய முக்கியமான காலமாகும். 1950களில் இந்தியா–சோவியத் அரசியல் மற்றும் பண்பாட்டு உறவு படிப்படியாக வலுப்பெறத் தொடங்கியது. இந்த நெருக்கத்தின் முக்கிய அடையாளமாக 1955 ஆம் ஆண்டு இந்தியப் பிரதமர் ஜவஹர்லால் நேரு சோவியத் ஒன்றியத்திற்கு நல்லுறவுப் பயணமாகச் சென்றது குறிப்பிடத்தக்கது. இந்தப் பயணம் இரு நாடுகளுக்கிடையே அரசியல் மட்டுமல்லாமல் கல்வி, பண்பாடு, இலக்கியம் போன்ற துறைகளிலும் பரிமாற்றங்களை வளர்த்தது. இதன் விளைவாக, ரஷ்ய இலக்கிய நூல்கள் இந்திய மொழிகளில் மொழிபெயர்க்கப்படத் தொடங்கின; இந்த இயக்கம் இந்திய வாசகர்களை ரஷ்ய இலக்கியத்துடன் நெருக்கமாக இணைக்கும் முதல் படியாக அமைந்தது.
ரஷ்ய இலக்கிய நூல்கள் முறையாக இந்திய மொழிகளில் மொழிபெயர்க்கப்படத் தொடங்கின. குறிப்பாக, முன்னேற்றப்பதிப்பகம் - Progress Publishers (மாஸ்கோ) என்ற அரசுப் பதிப்பகம், டால்ஸ்டாய், தஸ்தயேவ்ஸ்கி, மாக்சிம் கார்க்கி, செகாவ் போன்ற எழுத்தாளர்களின் படைப்புகளை ஹிந்தி, தமிழ், வங்காளம், தெலுங்கு, மலையாளம் போன்ற மொழிகளில் வெளியிட்டது. இந்த நூல்கள் மிகக்குறைந்த விலையில், சில நேரங்களில் இலவசமாகவும் இந்தியாவிற்கு அனுப்பப்பட்டன. இதனால் பரவலான வாசகர்களுக்கும், மாணவர்களுக்கும் ரஷ்ய இலக்கிய வாசிப்பு என்பது எளிதாகியது.
1960 களிலிருந்து 1980 கள் வரை இந்தியக் கல்வி நிறுவனங்களில் ரஷ்ய இலக்கியம் பாடத்திட்டத்தில் இடம்பெற்றது. பல பல்கலைக்கழகங்களில் ஒப்பிலக்கியப் பாடங்களில் ரஷ்ய இலக்கியப் படைப்புகள் சேர்க்கப்பட்டன. பள்ளி மற்றும் கல்லூரி நூலகங்களில் ரஷ்ய நாவல்கள், சிறுகதைகள், குழந்தைகள் இலக்கிய நூல்கள் பரவலாகக் கிடைத்தன. இந்தக் காலகட்டத்தில், இந்திய மாணவர்கள் ரஷ்ய இலக்கியத்தின் மனிதநேயமும் சமூகச் சிந்தனையும் கொண்ட கதாபாத்திரங்களுடன் தங்களை இணைத்துக் கொண்டனர். இதன் காரணமாக, ரஷ்ய இலக்கியம் என்பது வெளிநாட்டு இலக்கியம் என்ற உணர்வின்றி, நம்முடைய வாழ்க்கையைப் பேசும் இலக்கியமாகவே உணரப்பட்டது.
1970–80களில் இந்த இலக்கியத் தொடர்புகள் மிகவும் வலுப்பெற்றது, ரஷ்ய எழுத்தாளர்களின் படைப்புகள் இந்திய இடதுசாரி மற்றும் சமூக சிந்தனை கொண்ட முற்போக்கு எழுத்தாளர்களின் எழுத்து கருத்தியலிலும் நடையிலும் தாக்கத்தை ஏற்படுத்தின. வறுமை, உழைப்பு, மனிதநேயம், சமூக மாற்றம் போன்ற கருப்பொருள்கள் இந்திய இலக்கியத்திலும் வலுப்பெற்றன.
1991ஆம் ஆண்டு சோவியத் ஒன்றியம் வீழ்ச்சி அடைந்த போதிலும், அந்த இலக்கியம் ஏற்படுத்திய தாக்கமும் உறவும் இன்றும் அதே வீரியத்துடனும் உத்வேத்துடனும் தொடர்கின்றன. ,இன்றைய இளையதலைமுறை தமிழ் வாசகர்கள் மத்தியிலும் டால்ஸ்டாய், தஸ்தயேவ்ஸ்கி, மாக்சிம் கார்க்கி, ஆன்டன் செக்காவ், போன்ற எழுத்தாளர்கள் செல்வாக்கு செலுத்திக் கொண்டுதான் இருக்கிறார்கள். இவர்களின் படைப்புகளை மீண்டும் மீண்டும் வாசிப்பதிலும், இவர்களைப் பற்றிய உரைகளை ஆர்வமாகக் கேட்பதிலும் இந்திய இளைஞர்கள் - குறிப்பாக, தமிழக இளைஞர்கள் மிகுந்த ஆர்வத்துடன் இருப்பதைக் காண்கிறோம்.
- பாரதிபாலன்