தமிழ்க்கல்வியும் தமிழ்வழிக்கல்வியும் ஒன்றல்ல, அவை வேறுவேறு. தமிழ்க்கல்வி என்பது தமிழை ஒரு பாடமாகக் கற்பிப்பது. தமிழ்வழிக்கல்வி என்பது தமிழ்மொழியின் வாயிலாகப் பிற பாடங்களைக் கற்பிப்பது. அதாவது அறிவியல், சமூக அறிவியல், கணிதம் போன்ற பாடங்களையும் நம் மொழியின் வழியாகக் கற்பித்தலாகும். தமிழ்வழிக்கல்லி என்பது தமிழைப் பயிற்று மொழியாகப் பயன்படுத்துவது. தமிழ்க்கல்வியில் பாடநூல் தயாரிப்பது மிகவும் எளிது, இலக்கணமும், செய்யுள்களும் உரைநடைகளும் நம் மொழியில் ஏராளம், அவற்றைத் தேர்த்தெடுத்துப் பாடநூல் உருவாக்குவது சற்று எளிது. ஆனால் தமிழ்வழிக் கல்வியில் பாடநூல்கள் எழுதுவது சற்று கடினமானது. ஏனெனில் நமது மொழியில், அறிவியல், கணிதம் தொடர்பான கட்டுரைகள் இல்லை, அறிவியல் போன்ற பாடங்களைப் பள்ளிகளில் கற்பிக்க வேண்டிய அவசியம் ஐரோப்பியர் வருகையால் நமக்கு விளைந்த நன்மையாகும். அறிவியல் கட்டுரைகளை முதற்கண் மொழிபெயர்க்க வேண்டிய தேவை ஏற்படுகிறது. மொழிபெயர்த்த கட்டுரைகளைப் பாடங்களாக மாற்றி எழுத வேண்டியிருக்கிறது. அறிவியல், மருத்துவம், பொறியியல் தொடர்பான கட்டுரைகளை மொழிபெயர்க்க நம் மொழியில் கலைச்சொற்கள் தேவைப்படுகிறது. கலைச்சொற்கள் கருத்துக்களை (CONCEPTS) தாங்கிச் செல்பவை; அடிக்கடி பயன்படுத்தக் கூடியவை. கலைச்சொற்களின் உருவாக்கத்தில் மொழித்தேர்வு (LANGUAGE CHOICE) முக்கியமானதாகிறது.
பன்னாட்டு மொழியையா? தேசிய மொழியையா? தமிழ்மொழியையா? எதைத் தேர்வு செய்வது?
நமது மொழியில் கலைச்சொல் உருவாக்க மரபு நீண்ட நெடிய தோற்றமும் வளர்ச்சியும் கொண்டது. நமது இலக்கண ஆசிரியர்கள் மொழியை விவரிக்க சுருக்கமான தெளிவான சொற்களை உருவாக்கிக் கொண்டனர். பெயர், வினை, இடை, உரி, வேற்றுமை, பகுதி, விகுதி, சந்தி, சாரியை-இவையாவும் நாம் அன்றாட வாழ்க்கையில் பயன்படுத்தும் சொற்கள். இவையே கலைச்சொற்களாகப் பயன்படுத்தப்பட்டன. பள்ளிகளில் இவை கீழ் வகுப்புகளிலேயே பயன்படுத்தப்படுகின்றன. இதுவே இவற்றின் சிறப்பு.
விடுதலைப் போராட்ட வேள்வியில் சுதேசிப் பொருட்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டதைப் போலவே சுதேசி மாநில மொழிகளும் கல்வித் திட்டத்தில் இடம் பிடிக்கத் தொடங்கின. அப்போது ஆங்கிலம் கோலோச்சிய நிலையில் மாநில மொழிகளைப் பயிற்றுமொழியாக ஆக்குவதில் கோரிக்கைகள் வலுப்பெற்றன. சவால்களும் பெரிய அளவில் தோன்றின. 1900 முதல் 1950 வரை பயிற்றுமொழி, கலைச் சொல்லாக்கம் குறித்து அப்போது ஆட்சி செய்த அரசு பல முயற்சிகள் எடுத்தது, பல குழுக்களை அமைத்து கலைச்சொற்கள் உருவாக்கப்பட்டன. இம் முயற்சியில் பல்வேறு தமிழறிஞர்களும் அரசியல், சமூகத் தலைவர்களும் பங்கெடுத்துத் தங்கள் கருத்துகளைத் தீவிரமாகத் தெரிவித்தனர். இவையாவும் இதுகாறும் அறியப்படாத வரலாற்றுப் பதிவுகளாகும். இவற்றைக் கண்டறிந்து தொகுத்து 'அறியப்படாத மொழி இயக்கங்களும், மொழிப் போராட்டங்களும்' என்னும் தலைப்பில் நூலாகப் படைத்துள்ளார் டாக்டர் சு.நரேந்திரன் அவர்கள். இந்நூலிலிருந்து சில முக்கியமான தகவல்கள் கீழே தரப்படுகின்றன.
1916இல் மூதறிஞர் இராஜாஜி அவர்கள் சேலத்தில் கலைச்சொல் உருவாக்க சங்கம் ஒன்று தொடங்குகிறார். அறிவியல் கலைச்சொற்கள் தமிழில் இல்லாமையும் அவற்றை உருவாக்குவதில் குழப்பமான நிலையும் மிகப் பெரிய சிக்கலாக உள்ளன. கலைச்சொற்களை உருவாக்கிச் கற்றவர்களால் நிலைபேறாக்கம் செய்யப்பட்டுக் கலைச்சொல்லகராதி வெளியிடுவதே இச்சங்கத்தின் நோக்கமாக இருந்தது. இச்சங்கத்தின் சார்பாக இதழும் வெளியிடப்பட்டது. ஆனால் இராஜாஜி அவர்களின் முயற்சியைப் பா.வே.மாணிக்க நாயக்கர் கடுமையாக விமர்சித்தார். மூதறிஞரின் அணுகுமுறை வடமொழி சார்புடையது என்று விமர்சனம் செய்யட்டாலும் அவர் இத்தகைய சங்கம் உருவாக்குவதற்குப் பின்னணியாக, தூண்டுகோலாக இருந்த நிகழ்வுகள் யாவை என்பது மேலும் கண்டறியத்தக்கது.
1917ஆம் ஆண்டு சிம்லா மாநாட்டில் வட்டார மொழிகளைப் பயிற்று பொழியாக்கும் திட்டம் குறித்து விவாதிக்கப்பட்டது. இதன் தொடர்ச்சியாக சென்னை மாகாணக் கல்வி குறித்து ஆராய சால்டர் ஆணையம் அமைக்கப்பட்டது. இதே காலகட்டத்தில் அரசாங்கக் கல்வி மறு சீரமைப்புக் குழு வட்டார மொழிக்கல்வி, வட்டார மொழிகளின் பாட நூல்களைத் தயாரிப்பது தொடர்பாக முதற்படியான கலைக்கோல் தயாரிக்க சென்னை மாகாண அரசு கலைச்சொல் குழு அமைக்கப்பட்டது. இக்குழுவின் முயற்சியால் ஏறத்தாழ 7,400 கலைச்சொற்கள் உருவாக்கி வெளியிடப்பட்டன. இக்குழு உருவாக்கிய சொற்கள் யாவும் ஆங்கிலத்திலும் வடமொழியிலும் இருந்தன. மக்கள் தொகை அறிக்கை என்பதற்கு ‘குல ஸ்திரி புருஷ பால விருத்த அவ்யய பரிமாண அறிக்கை’ என்று உருவாக்கப்பட்டது. இதற்கும் பல்வேறு தரப்பிலிருந்து எதிர்ப்புகள் எழுந்தன. (பக்-43)
1940ஆம் ஆண்டு சென்னை அரசாங்கம் சீனிவாச சாஸ்திரி தலைமையில் ஒரு கலைச்சொல்லாக்கக் குழுவை அமைத்தது. சீனிவாச சாஸ்திரி குழுவின் தாங்குரைகள் (பரிந்துரைகள்) (பக்கம் 79,81) தரப்பட்டுள்ளது. வடமொழியில் உள்ள சொற்களையும் ஆங்கிலத்திலுள்ள கலைச்சொற்களை பெரிதும் பயன்படுத்திக்கொள்ள சாஸ்திரியார் முழு பரிந்துரை செய்யப்பட்டதற்கு எதிர்ப்புகள் வெகுவாக எழுந்தன.
சாஸ்திரியார் குழு அரசால் அமைக்கப்படுவதற்கு முன்னர் சென்னை மாகாண தமிழ்ச் சங்கம் தோற்றுவிக்கப்பட்டது. அச்சங்கத்தார் பல்வேறு கூட்டங்களை நடத்தி கலைச்சொற்கள் உருவாக்கம் குறித்து விவாதம் செய்து சொல்லாக்கக் கழகம் என ஓர் உட்கழகம் தொடங்கிக் கலைச்சொற்களை உருவாக்கத் தொடங்கினர். ‘தமிழ்த்தாய்’ என முத்திங்கள் இதழை வெளியிட்டனர். பல்வேறு அறிஞர்களின் முயற்சியால் சுமார் 5,300க்கும் மேற்பட்ட கலைச்சொற்கள் உருவாக்கப்பட்டன. (பக்.53) இச்சங்கம் வெளியிட்ட சொற்களை 'தமிழ்நாட்டிலுள்ள எல்லாப் பள்ளிக் கூடங்களிலும் கூடிய வரை உபயோகித்து அவைகளை முடிவாக நிர்த்தாரணம் செய்து அந்நூலின் புதிய பதிப்பு வெளிவருவதற்கு வேண்டிய உதவி செய்யுமாறு' ஆசிரியர்களையும் தலைமை ஆசிரியர்களையும் ராஜபாளையத்தில் கூடிய காங்கிரஸ் மாநாட்டில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது (பக்.63). சென்னை மாகாண தமிழ்ச்சங்கத்தை வழி நடத்திய பெருமைக்குரியவர் இ.மு.சுப்பிரமணியபிள்ளை ஆவார்.
சாஸ்திரியார் குழுவின் தீர்மானங்களையும் நடவடிக்கைகளையும் தமிழ்நாட்டுத் தமிழ் அறிஞர்களும் பெரியார் போன்ற சமூகச் சீர்திருத்தவாதிகளும் கடுமையாக எதிர்த்தனர். தஞ்சையில் கரந்தைத் தமிழ்ச்சங்கமும், தமிழ்ப்பொழில் இதழும் சாஸ்திரியார் குழு தீர்மானங்களைக் கண்டித்து அறிக்கைகள் வெளி வந்தன. இதில் குறிப்பிடத்தக்கது,
"தமிழில் பிறமொழிச் சொற்களே கலக்கக் கூடாது என்று முரட்டுக் கொள்கையைப் பின்பற்ற வேண்டும் என்று நான் கூறவில்லை. எளிய பழக்கமான தண்ணீர் இருக்கும்போது 'ஜலம்’ வேண்டியதில்லை என்கிறோம். எனவே கூடுமானவரையில் நல்ல எளிய சுத்தமான தமிழிலேயே கலைச்சொற்களையும் பிற சொற்களையும் கொண்ட நூல்களே இனி இயற்றப்படுதல் வேண்டும். கரடுமுரடான வட மொழிச் சொற்களைத் திணித்துவிட வேண்டாம்" என்பது ஈ.வெ.ரா. பெரியாரின் (பக்.141) விடுதலைத் தலையங்கம் ஆகும்.
எந்தப் பாஷையும் அதன் வாயிலாகப் பொருள்களை விளக்க முயன்றால் ஒழிய, நூல்களுக்கு வேண்டிய மொழிகளும் தொடர் மொழிகளும் அதன்கண் அமைவதில்லை. பொருள்களை எடுத்துக் கொண்டு விளக்க முயன்றால்தான் மொழிகள் தாமாகவே சமைந்து பொங்கும். தொடக்க கால முயற்சிகளை ஒரு முதற்படியாகக் கொண்டு ஆதரிக்க வேண்டும் என்பது மூதறிஞர் இராஜாஜியின் (பக்.108) கருத்தாகும்.
வடமொழி மேலாதிக்கத்தைத் தமிழகம் ஏற்றுக் கொள்ளாமைக்குரிய காரணங்களை நூல் பட்டியலிட்டு விளக்குகின்றது. கலைச்சொல்லாக்கத்தின் இன்றைய நிலை குறித்தும் நிறைவுப் பகுதியில் சுட்டிக்காட்டுகிறார் நூலாசிரியர். இந்நூல் கலைச்சொல்லாய்வில் ஈடுபடும் ஆய்வாளர்களுக்கும் மொழி அறிஞர்களுக்கும் மிகவும் பயன்படும். இந்நூலினை அனைவரும் வரவேற்பர் என்பதில் ஐயமில்லை.
அறியப்படாத மொழி இயக்கங்களும் மொழிப் போராட்டங்களும்
கலைமாமணி மரு.சு.நரேந்திரன்
வெளியீடு: என்சிபிஎச், சென்னை | விலை: 215
- முனைவர் ஆ.கார்த்திகேயன்