சென்ற இதழின் தொடர்ச்சி...

நூலாசிரியர் யானிஸ் வருஃபாக்கிஸ் பற்றி கடந்த பகுதியில் பார்த்தோம். 2008 ஆம் ஆண்டுவரை உலக முதலாளித்துவத்தில் நடந்த மாற்றங்கள் குறித்தும் சென்ற பகுதியில் சுருக்கமாகக் கண்டோம். 2008 ஆம் ஆண்டு பொருளாதார நெருக்கடியின் போது பெருவங்கிகளை, காப்பீட்டு, முதலீட்டு நிறுவனங்களைக் காப்பாற்ற அமெரிக்கா, நினைத்தளவுக்கு டாலரை அச்சடித்து வங்கிகளுக்கும் முதலீட்டு, காப்பீட்டு நிறுவனங்களுக்கும் அளித்து அவை முழுமையாக திவாலாகி முழுகிப் போய் விடாமல் காத்தது. அமெரிக்கா முக்கியமான நிறுவனங்களுக்கு அளித்த பணத்தின் அளவே 7.2 டிரில்லியன் டாலர் (7.2 லட்சம் கோடி டாலர்). அன்றைய நிலையில் அமெரிக்காவின் மொத்த உற்பத்தியே (ஜிடிபி) 13.8 டிரில்லியன் டாலர்தான்!

Techno Feudalism What Killed Capitalismஇவ்வாறு வந்துசேர்ந்த பல டிரில்லியன் டாலர்களை இந்த நிறுவனங்கள் புதிய உற்பத்தி நிறுவனங்களை உருவாக்குவதற்கு, உற்பத்தியைப் பெருக்குவதற்கு, அதன் மூலம் தொழிலாளர்களுக்கு வேலை அளிப்பதற்கு, அவர்களுக்கு ஊதியம் அளிப்பதற்கு, அதன் மூலம் சரக்குகளுக்கான தேவைக் கேட்பை அதிகரிப்பதற்கு பயன்படுத்தவில்லை. உற்பத்தியைப் பெருக்கி புதிய சரக்குகளை உற்பத்தி செய்து லாபம் ஈட்ட முடியுமென்ற நம்பிக்கை இல்லை. அதனால் அவை தங்கள் கையில் குவிந்த மூலதனத்தை வேறு வகையில் பயன்படுத்த ஆரம்பித்தன. அவைதான் மேகமூலதனம் என்ற வகையில் உருவாயின. இந்த மேகமூலதனத்தை பெறக்கூடிய நிறுவனங்கள் தான் தொழில்நுட்பப் பிரபுத்துவ நிறுவனங்கள் ஆகும்.

மேகமூலதனம்

மேகமூலதனம் நிலத்தில் கால் பாவா மூலதனம் என்பதை நாம் கண்டோம். இதனை நிலப்பிரபுத்துவத்தோடு வருஃபாக்கிஸ் எவ்வாறு ஒப்புவமை காண்கிறார்? நிலப்பிரபுத்துவ சமூகத்தில் நிலப்பிரபுக்களது ஆதிக்கத்தின் அடிப்படை நிலமும் ஆயுதங்களும் அவர்கள் கைவசம் இருந்தன என்பதுதான். வேறு சொற்களில் சொன்னால் உற்பத்தி சாதனங்களின் மீதான ஏற்றத்தாழ்வான அளவிலான உடைமையும் அந்த நிலைமையை கட்டிக்காப்பதற்கான கட்டமைப்பும் ஆகும். பொருளாதாரத்துக்கு அப்பாற்பட்ட அடக்குமுறைக் கருவிகளைக் கொண்டு நீடிக்கச் செய்யப்பட்ட அடிமைத்தனம் அந்தக் கட்டமைப்பின் தனித்துவமான பண்பு.

முதலாளித்துவம் இதிலிருந்து மாறுபட்டது என்று அறிவோம். அது உற்பத்திச் சாதனங்களை உடைமையாகக் கொண்டிருக்கும் முதலாளிகளைக் கொண்டிருக்கும். விற்பதற்கு உழைப்பு ஆற்றலைத் தவிர வேறேதுமில்லாத சுதந்திரமான தொழிலாளர்களை, பொருளாதார ஒடுக்குமுறை என்பதை முதன்மையாகக் கொண்டு, தங்களது உழைப்பு ஆற்றலை விற்பனை செய்யப் பணிக்கும். அவர்கள் உருவாக்கும் புதிய மதிப்புக்கு ஈடான மதிப்பை ஊதியமாக வழங்காது. அதில் ஒரு பகுதியை மட்டும் ஊதியமாக வழங்கும். மிகுந்திருக்கும் உபரியை முதலாளிகள் கை கொள்வது நடக்கும். இதுதான் முதலாளித்துவ பொருளாதார சுரண்டல். இதுதான் முதலாளித்துவப் சமூகத்தின் அடிப்படை. ஆயுதங்களுக்கு இடமே இல்லை என்பதல்ல; ஆனால் அவற்றினுடைய இடம் இரண்டாம் பட்சம்தான்.

2008 ஆம் ஆண்டிற்குப் பிறகு பரவலாக ஆன அலெக்சா, கூகுள் அசிஸ்டன்ட் போன்ற மெய்நிகர் எதார்த்த உதவியாளர் கருவிகளை எளிதில் எவரும் விளங்கிக் கொள்ளும் வண்ணம் அறிமுகம் செய்கின்றனர். அவை இன்றைய மிகப் பரந்த மேகமைய இணையத்தில் உங்களைக் கட்டிப்போடும் சங்கிலியின் ஒரு இணைப்பு முனை எனும்போது நாம் திடுக்கிடுகிறோம். ஆனால் உண்மையென உணர்கிறோம். முகநூல், வாட்சப், கூகுள் மெயில், கூகுள் மேப், இன்ஸ்டாகிராம்,
யூ டியூப், ஊபர், ஓலா, ஜொமொட்டொ, ஸ்விக்கி, கூகுள் பே, பே பால் எல்லாம் பரந்த மேகமய உலகோடு உங்களை இணைக்கும் முனைகள்தான்.

இந்த மேகமய மெய்நிகர் எதார்த்த கருவிகள் தொடர்ந்து இந்தப் பெரு உலகையும் உங்களையும் கண்காணித்து வருகின்றன. நீங்கள் அதனை மின்விசிறியை அல்லது மின் விளக்கை ஒரு ஸ்விட்சைத் தட்டி நிறுத்துவது போல் நிறுத்த இயலாது. அது தொடர்ந்து உங்கள் தொலைபேசி பேச்சு, கணினி தேடல், முகநூலில் நீங்கள் போடும் பதிவு, பார்க்கும் விளம்பரம், யூடியூபில் நீங்கள் கண்டுகளிக்கும் ஆடல் பாடல் அனைத்தையும் நினைவு கொள்கிறது. பிறகு நீங்கள் பொருள் வாங்க எடுக்கும் முடிவுகளில் செல்வாக்கு செலுத்துகிறது. அதில் உள்ளடங்கி இருக்கும் அல்காரிதம் (algorithm) எனப்படும் நிரலி போன்ற சமாச்சாரம் மூலம் உங்களை ஒரு இலக்காக மாற்றுகிறது. அதன் இதயத்தையும் அது பொதிந்துள்ள மெய்நிகர் எதார்த்த உலகத்தையும் கட்டுப்படுத்தும் தொழில்நுட்பப் பிரபுக்களின் நலனுக்கு, அவர்களின் விற்பனைக்கு, அவர்கள் லாபத்திற்கு நீங்கள் ஒரு சிறு பொறியாக மாறுகிறீர்கள். மொத்தத்தில் நீங்கள் அவர்களின் ஆதிக்கத்திற்கு உட்படுகின்றீர்கள். நீங்கள் மேகப் பண்ணையடிமை (Cloud Serf) ஆக மாறுகிறீர்கள். ஏனென்றால் ஒரு தொழிற்சாலை பாட்டாளி போல அல்லாது கூலி வாங்காமல் அடிமைச் சேவகம் செய்கின்றீர்கள். உண்மையில் பொருள் உற்பத்தி செய்யும் முதலாளியும் கூட ஒரு சிறு பொறியா. அவர் மேகக் குத்தகைதாரர் (Cloud Vassal). வாடகைக் கார் பயணிகளாக நீங்கள் ஒரு சிறு பொறி; கார் ஓட்டுநரும் ஒரு சிறு பொறிதான். அவர் மேகப் பாட்டாளி (Cloud Prol). இப்படி மேகக் குத்தகைதாரர், மேகப் பண்ணையடிமை, மேகப் பாட்டாளி ஆகியோர் மீது ஆதிக்கம் செலுத்துபவர் தொழில்நுட்பப் பிரபு (Techno-Feudal). இந்த ஆதிக்கத்திற்கு அவர் கைவசம் இருப்பது மேக மூலதனம் (Cloud Capital).

இணையம் - எண்மக் கூட்டிணைவு

இன்றைக்கு நம்முடைய எண்ம வெளி (Digital Space) அடையாளம் என்பதால் நமது உண்மை அடையாளங்கள் புறந்தள்ளப்பட்டுள்ளன. செய்தி அனுப்ப, செய்தி பெற, கருத்து்களைக் கூற, பிறர் கருத்து்களை அறிய, ஆடல் பாடல்களை அரங்கேற்ற, ஆடல் பாடல்களை காணொளியாய் காண எல்லாவற்றுக்கும் நமது எண்ம உலக அடையாளம்தான் பயன்படுகிறது. உண்மையில் நமது எண்ம வெளி அடையாளக் குறியீடு என்பது நம்மிடம் கூட கிடையாது. அது மெய்நிகர் உலகத்தில் இருக்கின்ற பல்வேறு நிறுவனங்களில் சிதறிக் கிடக்கின்றது. அவர்களது உடைமையாக இருக்கிறது. ஒரு வங்கி உங்களது பணத்திற்கான ஒரு அடையாளக் குறியீட்டை உங்களுக்கு வழங்கி உள்ளது. முகநூல் உங்களுக்கு ஒரு அடையாளக் குறியீடு வழங்கி உள்ளது. ட்விட்டர் உங்களுக்கு ஒரு அடையாளக் குறியீடு வழங்கியுள்ளது. அமேசான் உங்களுக்கு ஒரு அடையாளக் குறியீடு வழங்கியுள்ளது. ஜி மெயில் ஒரு அடையாளக் குறியீடு வழங்கியுள்ளது. இவற்றைக் கொண்டுதான் தினசரி நடவடிக்கைகளை நாம் நடத்திக் கொண்டிருக்கிறோம். நம்மைப் பற்றிய எல்லா விவரங்களையும் தொழில்நுட்ப பிரபுக்களின் கணினிகள் நினைவில் வைத்துக் கொள்கின்றன.

மேக மூலதனம் ஒரு தொடக்கம்

இணையம் சமூகநல ஆர்வலர்களால் அறிமுகம் செய்யப்பட்டது. மேகமூலதனத்தைத் தொடங்கி வைத்த தொழில்நுட்ப வல்லுனர்களும் இவர்களிலிருந்து மாறுபட்டவர்கள் அல்ல. இணையத்தில் கொட்டிக் கிடக்கும் தரவுகளுக்கு மத்தியில் ஒரு மனிதருக்கு வேண்டியதைத் தேடி எடுப்பதற்கு ஒரு பொறி அமைவைச் செய்து தருபவர்களாகத்தான் இவர்களும் தொடங்கினார்கள் என்பதை நாம் அறிவோம். நம்மை நாம் விரும்பும் இணையதளத்திற்கு, நண்பர்களை நண்பர்கள் இடத்தில், புத்தகங்கள் இடத்தில், திரைப்படங்கள் இடத்தில், இசையின் இடத்தில் ஒன்று சேர்ப்பதற்கு தேவையான கணிதப்பொறி அமைவுகளை, அல்காரிதம்களை உருவாக்கினார்கள். ஆனால் பிறகு திடீரென்று மனிதன் படைத்த எந்திரம் அவனுக்கு எஜமானாவது போன்று தேடுபவர்களுக்கு உதவுவதற்காக வடிவமைக்கப்பட்ட இந்த கணிதப் பொறியமைவுகளான அல்காரிதம்கள் நீங்களும் நானும் சொல்வதைக் கேட்டு நமக்குத் தேவையான உதவிகளை மட்டும் செய்து பேசாமல் நிற்பது முடிவுக்கு வந்தது. இதுவரையில் மானுடர் மட்டுமே செய்து வந்த காரியங்களை இந்த அல்காரிதம்களும் செய்ய ஆரம்பித்தன. அல்லது சில மானுடரின் முகவர்களாக இவை மாறின.

மேகமூலதனம், ஏனைய வகையான மூலதனங்களிலிருந்து எவ்வாறு மாறுபட்டது? மேகமூலதனம் என்பது ஒரு படிமம்தானேயொழிய அதுவும் இதற்கு முந்திய மூலதனங்கள் போன்று இயற்பியல் இருப்பு கொண்டவைதான். மேகமூலதனம் எனக் கூறுவது, அவை உற்பத்தியில் நேரடியாக ஈடுபடவில்லை என்பதைக் குறிப்பதைத் தவிர வேறில்லை. மற்றபடி மிகப்பெரிய அளவிலான தரவுகளை சேமித்து வைக்கும் கிடங்குகள், வரிசையாக அணிவகுத்து நிற்கும் பெருங்கணினி சர்வர்கள், உலகெங்கும் இருக்கும் இவற்றை இணைப்பவையாக பல கிலோமீட்டர் நீளத்திற்கு கண்ணாடி இழை கேபிள்கள், உணரிகள் எனப்படும் சென்சார்களது வலைப்பின்னல்கள், ஒன்றோடு ஒன்று தொடர்பு கொள்வதற்கு தேவைப்படும் செயற்கைக் கோள்கள் எல்லாம் கொண்டதாகத்தான் மேகமூலதனம் என்ற இந்த மெய்நிகர் உலகு உண்மை உலகிலிருந்து எழுகின்றது.

பெருந் தொழில்நுட்பங்கள், மரபார்ந்த தொழிற்சாலைகளில் இருக்கும் தொழிலாளர்களது நிலையை முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு மோசமாக்கி இருக்கின்றது. ஆனாலும் அது சாராம்சத்தில் பழைய ஆலைகளில் உள்ள தொழிலாளர்கள் நிலை என்பதினுடைய ஒரு போக்கு தானேயொழிய வேறல்ல. ஆனால் மேகமூலதனம் உருவாக்கி இருக்கின்ற புதிய தொழில்நுட்பங்களும் தொழில்நுட்ப பிரபுத்துவமும் முற்றிலும் புதிய நிலையை உருவாக்கி இருக்கின்றன. இது தொழிலாளர்கள் சிலரை மேகப் பாட்டாளிகளாக - கிளவுட் புரோல்ஸ் (Cloud Proles) ஆகவும் பெரும்பகுதியான மக்கள் பகுதியை மேகப் பண்ணை அடிமைகள் - கிளவுட் செர்ஃப் (Cloud Serfs) ஆகவும் மாற்றியுள்ளது.

மேக மூலதனம், திறன்மிகு மென்பொருள், வன்பொருள்கள் கொண்டவைதான். ஆனால் அவையெல்லாம் காலி டப்பாக்கள்தான். இவற்றைக் கட்டி அமைக்க, பழுது நீக்க, பராமரிக்க தொழிலாளர்கள் பணிபுரிகின்றார்கள். அவர்கள் மேகப் பாட்டாளிகளில் ஒரு பகுதி. அவர்கள் சுரண்டப்படுகின்றார்கள் என்பது உண்மையே. மேகமூலதன நிறுவனங்கள் கூலி, ஊதியம், சம்பளம் என அளிப்பது வருவாயில் 1% தான். மரபார்ந்த அரங்கத்தில் இது வருவாயில் 80%, என யானிஸ் கூறுகிறார். உழைப்பு அதிகமாக ஈடுபடுத்தப்படும் துறையில் இந்த அளவிலும் பிற துறைகளில் இதை விடக் குறைவாகவும் இருக்கலாம் என்பதை நாம் இணைத்துக் கொள்ளலாம்.

மேக மூலதனத்தின் ஆக முக்கியமான, அதிக மதிப்பு வாய்ந்த பகுதி இந்த சடப் பொருள்கள் அல்ல. மாறாக முகநூலில் நீங்கள் பதிவிடும் கதைகள், நிகழ்வுகள், டிக் டாக், யூ டியூப் ஆகியவற்றில் ஏற்றும் காணொளிகள், இன்ஸ்டாகிராமில் வலையேற்றம் செய்யும் புகைப்படங்கள், அமேசானில் எழுதப்படும் நூல் மதிப்புரைகள், கூகுள் மேப்பில் நீங்கள் சேர்க்கும் முகவரி விவரங்கள், போக்குவரத்து நெரிசல் குறித்த பதிவுகள் ஆகியவைதான் அதிமுக்கியமான பகுதி ஆகும். நாம்தான் மூலதனத்தின் அதிமுக்கியமான பகுதியை கூலியின்றி அளிக்கின்றோம். நிலப்பிரபுக்கள் அறுவடையின் போது ’அளந்துவிடும்’ உணவு தானியத்திற்காகக் கூலியின்றி அடிமைச் சேவகம் செய்யும் பண்ணையடிமைகளை அறிவோம். அதுபோல மேகப் பண்ணையடிமைகளாக முகநூலில் பதிவிடுவதற்காக மார்க் ஜூக்கர்பெர்கிற்கும் கூகிளில் எதையோ தேடுவதற்காக சுந்தர் பிச்சைக்கும் பண்ணையடிமையாகப் பணிபுரிகின்றோம். பெருமளவிலான பணி, ஊதியம் வாங்காது அதனைப் பயன்படுத்துபவர்களால் செய்யப்படுகிறது. மிகவும் பின்தங்கிய பண்ணையடிமைகள் கூட தாங்கள் சுரண்டப்படுவது குறித்து ஓர்மை (Consciousness) கொண்டவர்களாக இருப்பார்கள். ஆனால் மேக முதலாளித்துவ நிறுவனங்களால் சுரண்டப்படும் நமக்கு அந்த ஓர்மை இல்லை என்று வருஃபாக்கிஸ் கூறும் உண்மை சுடுகின்றது.

சந்தை ஒழிந்தது… மேகமய ஜமீன்தாரி வந்தது

அமேசான் டாட் காம் தளத்திற்குள் நுழைந்தால் நீங்கள் முதலாளித்துவத்தில் இருந்து வெளியேறுகிறீர்கள் என்கிறார் யானிஸ் வருஃபாக்கிஸ். ‘இது முதலாளித்துவச் சந்தை அல்ல என்றால் அமேசான் டாட் காம் உள்ளே நுழையும் பொழுது எங்கு நுழைகின்றோம்? அந்த வெளியினுடைய பெயர்தான் என்ன?’ என்று டெக்சாஸ் பல்கலைக்கழகத்தில் உரையாற்றிய போது ஒரு மாணவர் கேட்டதைக் குறிப்பிடுகிறார் யானிஸ். ‘அது எண்ம ஜமீன்தாரி’ (Digital Fief) என்று நான் கூறினேன்’ என்று சொல்லி அதனை விளக்குகின்றார் : ஒரு நிலப்பிரபு அவருக்குக் கீழே உள்ள விவசாயிகளைக் கட்டுப்படுத்தி தனது நலனுக்கேற்ப சாகுபடி செய்ய நிர்பந்தப்படுத்துவது போல மெய்நிகர் வெளியில் உள்ள அனைவரையும் மேக முதலாளித்துவ - தொழில்நுட்பப் பிரபு கட்டுப்படுத்துகின்றார். நிலப் பிரபுத்துவம் போல தன்னுடைய ஆதிக்கத்திற்கும் அதிகாரத்திற்கும் சந்தையை சார்ந்திருக்காமல் வேறு வகையில் அதனை சாதிக்கும் அம்சத்தில் இந்த முதலாளித்துவ மேல் அடுக்கை பிரபுத்துவத்திற்கு சமமாகப் பார்ப்பது எளிதில் தள்ளி விடக்கூடிய வாதம் அல்ல என்பது புரிகின்றது. ஆனால் அது மட்டுமே முதலாளித்துவம் அல்லாத ஒரு அடுக்கு என்பதற்கு போதுமானதா என்ற கேள்வி நமக்கு வரலாம். யானிஸ் வருஃபாக்கிஸ் அந்த வினாவை எதிர்பார்த்து அடுத்த கட்ட விளக்கத்தை அளிக்கின்றார்.

மேக முதலாளித்துவமும் லாபத்தின் மரணமும்

முதலாளித்துவத்தின் கடுமையான லாப நோக்கைத் தாண்டி அதன் மேலே அமரும் ஒரு அடுக்கு லாப நோக்கு அல்லாது இருப்பதை நம்மால் எளிதில் ஏற்றுக்கொள்ள முடிவதில்லை. ஆனால் எதார்த்தமும் தரவுகளும் புள்ளி விவரங்களும் அவர் சொல்வது சரிதான் என்பதனைக் காட்டுகிறது.

2020 ஆம் ஆண்டு கொரோனா காலத்தில் பிரிட்டனின் மொத்த வருவாய் – ஜிடிபி - 20.4% குறைந்தது. அதே சமயம் லண்டன் பங்குச்சந்தை பங்குகள் 2.3% விலை அதிகரிப்பு என்னும் விந்தையைக் கண்டன. பணம் முதலாளித்துவத்திடம் இருந்து விடுபட்டதைக் காட்டுகிறது என்று கூறி அதனை விளக்குகின்றார். 2008 ஆம் ஆண்டு பெரு வீழ்ச்சியிலிருந்து மீள அமெரிக்க ஃபெடரல் ரிசர்வ் வங்கி அச்சடித்து பறக்கவிட்ட, சுமார் 7.2 டிரில்லியன் டாலர்கள் பணத்திலேயே இந்தப் போக்கு தொடங்கி விட்டது என்கிறார். இந்த வெள்ளம் போல் பாய்ந்த பணத்தின் அளவு அபரிமிதமானது என்பதை நாம் புரிந்துகொள்ள முடிகிறது. எனவே அமெரிக்க மத்திய வங்கி அச்சடித்தளித்த பணத்தின் பெரும் பகுதி நிதி மூலதனமாகத் திரண்டு மேகமூலதன நிறுவனங்களுக்கு வந்து சேர்ந்த காரணத்தையும் கண்டோம். இதைக்கொண்டு மேகமூலதனம் கொழித்ததற்கும் மேற்கொண்டு வளர்ச்சி நடந்ததற்கும் காரணத்தை இந்த நிறுவனங்களின் பங்கு பத்திர விலைகள் அடைந்த ஏற்றத்தைப் பார்த்தால் எளிதில் புரிந்துகொள்ள முடிகின்றது

2008 ஆம் ஆண்டு பெருமந்தத்திற்குப் பிறகு அரசுகள் எடுத்த நடவடிக்கைகள் இதனை சாத்தியமாக்கி உள்ளதை யானிஸ் விளக்குகின்றார். 2009 ஆம் ஆண்டு லண்டனில் நடந்த ஜி 7 நாடுகளின் உச்சி மாநாட்டில் பங்குபெற்ற உலகின் ஆகப் பணக்கார நாடுகளினுடைய அதிபர்களும் பிரதமர்களும் பெருமந்தத்தில் வீழ்ச்சியாகி திவால் நிலையில் இருந்த வங்கிகளை மீண்டும் தூக்கி நிறுத்தி இயங்கச் செய்வது அவசியம்; தேவையான நிதியை அவற்றுக்கு அனைவரும் வழங்க வேண்டும் என்ற முடிவெடுத்தனர். அதே சமயத்தில் அரசின் மக்கள் நலத் திட்டங்களை வெட்டி சுருக்கி மக்களுக்கு அவர்களுக்கான சேவை என்ற பெயரில் செலவு செய்வது என்பதை அரசாங்கங்கள் நிறுத்த வேண்டுமென்று சொல்லி எல்லா அரசாங்கங்களையும் ஆஸ்டிரிட்டி (austerity) என்ற பெயரில் சிக்கன நடவடிக்கைகளை எடுக்கச் செய்தனர். தன் கையில் வந்துசேர்ந்த பணத்தை நுகர்வுச் சாதனங்களை உற்பத்தி செய்து கையில் பணம் இல்லாத நுகர்வோருக்காகக் காத்திருக்கும் நிலைக்கு எந்த ஒரு முதலாளியும் செல்லப் போவதில்லை; செல்லவில்லை. ஆனால் தம் கைவசம் இருக்கும் பணத்தை முதலாளித்துவ நிறுவனங்கள் தூங்குவதற்கு அனுமதிக்க இயலாது. எனவே இந்த நிறுவனங்கள் நம் கைவசம் உள்ள பணத்தை நில வணிகத்திலும் பங்கு பத்திர மற்றும் ஏனைய நிதிப் பத்திர வர்த்தகத்திலும் யூக வணிகங்களிலும் அதுபோன்ற ஏனைய உற்பத்தியற்ற அற்ற சூதாட்டங்களிலும் ஈடுபடுத்தினர்.

2008 ஆம் ஆண்டுக்குப் பிறகு குறிப்பாக பெருந்தொற்றுக் காலத்தில் ஒரு விந்தையான நிகழ்வுப் போக்கு நடந்தேறியது. பணவீக்கம், விலைவாசி உயர்வு கட்டுக்கடங்காமல் போய்க்கொண்டிருந்தது. பணப் புழக்கத்தைக் குறைத்து இதனைச் சரிசெய்ய வேண்டியது முதலாளித்துவ நாடுகளின் மத்திய வங்கிகளின் கடமை. ஆனால் அவர்கள் இதற்கு நேரெதிராக பணத்தின் விலையை அதாவது பணத்தைக் கடனாகப் பெறுபவர்கள் அதற்கு செலுத்த வேண்டிய வட்டி விகிதத்தை கிட்டத்தட்ட பூஜ்ஜியம் என்ற அளவுக்குக் குறைத்தார்கள். இது ஒரு பாதி பிரச்சனை என்றால் திவாலாகி, அமெரிக்க அரசின் மானியம் பெற்று உயிர் பெற்ற வங்கியாளர்கள், மத்திய வங்கி, அரசாங்கம் உட்பட அனைவரையும் தங்களுடைய பிடிக்குள் வைத்திருந்தார்கள். ஏனென்றால் அரசும் ஏனைய முதலாளித்துவ நிறுவனங்களும் இந்த வங்கிகள்தான் பொருளாதாரத்தை மீட்டெடுக்க வேண்டும் என்று அவர்களை அண்ணாந்து பார்த்துக்கொண்டு இருந்தார்கள். 2008 ஆம் ஆண்டிலிருந்து 2022 இன் ஆரம்ப நாட்கள் வரையில் ஐரோப்பா, அமெரிக்கா, ஜப்பான் நாடுகளின் மத்திய வங்கிகள் மேலும் மேலும் பணத்தை அச்சடித்து நிதி மூலதன நிறுவனங்களிடம் கையளித்தனர். இந்தப் பணத்தை கடனாகப் பெறுபவர்கள் செலுத்த வேண்டிய வட்டி விகிதத்தை மேலும் மேலும் குறைத்து பூஜ்ஜியம் ஆக்கினார்கள். ஒரு கார் உற்பத்தியாளர் தன்னுடைய உற்பத்திச் சாலையினுடைய கழிவுகளைக் கையாள்வது போல இந்த வங்கிகளும் முதலீட்டு நிறுவனங்களும் தங்களிடத்தில் வந்து சேர்ந்த பணத்தைக் கையாண்டார்கள். இது முதலாளித்துவத்தின் இயல்பான செயலூக்கத்தையே தடுத்து நிறுத்தி குலைத்துப் போட்டது. இந்த மோசமான சூழலில் மேகமூலதனம் ஒன்றுதான் சுறுசுறுப்பாக இயங்கியது. நச்சுப்பொருள் போல் ஆகிப்போன பணத்தை இருகரம் கொண்டு அள்ளிக்கொண்டது. அவர்கள் அள்ள அள்ள அந்த அட்சயப் பாத்திரத்தில் நிதி நிறுவனங்களும் முதலீட்டு நிறுவனங்களும் பணத்தை முடிவின்றி பாய்ச்சின. மேகமூலதன நிறுவனங்கள் மேலும் மேலும் பங்கு பத்திரங்களை அச்சடித்தன. அந்தக் காகிதத்தைக் கொடுத்து பணத்தைப் பெற்றன.

லாபம் என்பதுதான் முதலாளித்துவத்தைக் கொண்டு செலுத்தும் ஆற்றலாக இருந்து வந்தது. இப்போதும் கூட மரபார்ந்த முதலாளித்துவ நிறுவனங்களில் லாபம்தான் நிறுவனத்தைக் கொண்டு செலுத்தும் சக்தியாக இருக்கிறது. ஆனால் இது 2008 ஆம் ஆண்டு பெருமந்தத்திற்குப் பிறகு மாறிப்போனது. ஜி 7 நாடுகளின் தலைவர்கள் தங்கள் மத்திய வங்கிகள், நிதிச் சந்தைக்கு முடிவற்று பணத்தை அச்சடித்து விநியோகிக்கும்படி செய்தார்கள். லாப நோக்கம் என்பது முதலீடுகள் செய்யப்படுவதற்கான காரணம் என்பது மாறிப்போனது. பொருளாதாரத்தை கொண்டு செலுத்தும் எரிபொருள் லாபம் அல்ல, மத்திய வங்கியில் அச்சடித்து சுற்றுக்கு விடும் பணம்தான் என்று ஆனது.

2020 ஆம் ஆண்டு அமேசான் நிறுவனத்தின் விற்பனை 44 பில்லியன் யூரோ அதாவது 4400 கோடி யூரோ [4.4 லட்சம் கோடி ரூபாய்]. ஆனால் அது கட்டிய கார்ப்பரேட் வருமான வரி ஜீரோ யூரோ. ஆமாம் ஜீரோ. ஏனெனில் அதன் நிகர லாபம் ஜீரோ யூரோ. நிகர லாபம் ஜீரோவாக இருக்கும் இந்த நிறுவனத்தின் பங்கு பத்திரத்தின் விலை 2017-2020 காலகட்டத்தில் 500 சதவீதம் அதிகரித்தது. எனவே அமேசானின் உரிமையாளரான ஜெஃப் பேசோஸ், லாபம் குறித்து அக்கறை கொள்ள வேண்டியது இல்லை. நாள்தோறும் விலை ஏறும் பங்கு பத்திரத்தை அதன் விலையின் அடிப்படையில் அடகு வைத்து மேலும் நிதியைத் திரட்டலாம். அதைக் கொண்டு மேலும் பெரும் கணினி சர்வர்கள், பகாசுர கிடங்குகள், பில்லியன் கிலோ மீட்டர் கண்ணாடி இழைக் கேபிள்கள் வாங்கலாம். உலகின் தலைசிறந்த கணினி, மென்பொருள், தொழில்நுட்ப விற்பண்னர்களை பணியில் அமர்த்தலாம். மேலும் மேலும் ஏகபோக பலம் பெறலாம். லாபம் ஈட்டாமல் இப்படி ஆதிக்கம் செலுத்தியவர்கள் முந்தைய நிலப்பிரபுக்கள் மட்டுமே. முதலாளிகள் அல்ல! எனவே இவர்களைத் தொழில்நுட்ப பிரபுக்கள் என யானிஸ் அழைப்பது நியாயம்தானே?

ராமன் ஆண்டாலும்…ராவணன் ஆண்டாலும் எனக்கொரு கவலையில்லை…

பாட்டாளி வர்க்கம் அப்படிக் கூற இயலாது. லாபத்தை நோக்கமாகக் கொள்ளாது இயங்கும் தொழில்நுட்ப பிரபுத்துவம் தனது பணத்தைக் கொண்டு மரபார்ந்த வழியில் உற்பத்தியை அல்லது சேவையை அளித்து வரும் நிறுவனங்களை விலைக்கு வாங்குகிறது. அந்த நிறுவனங்களின் அசையா சொத்துக்களை தனி நிறுவனமாக மாற்றுகிறது. அந்த நிறுவனத்தின் செயல்பாடுகளை ஒரு தனி நிறுவனமாக மாற்றுகிறது. சொத்துக்களை உடமையாகக் கொண்டிருக்கின்ற நிறுவனம் உற்பத்தியை அல்லது சேவையை வழங்கும் நிறுவனத்திற்கு தன்னுடைய சொத்துக்களை வாடகைக்கு விடுகிறது. உண்மையில் உற்பத்திப் பொருளை அல்லது சேவையைத் தரும் நிறுவனம் நாளடைவில் நலிந்து இல்லாமல் போனாலும் அது குறித்து தொழில்நுட்ப பிரபுத்துவ நிறுவனங்கள் கவலை கொள்வதில்லை. அவை சொத்துக்களை உடைமையாகக் கொண்டிருக்கின்ற நிறுவனத்தை வந்த விலைக்கு விற்றுவிட்டு அதுபோன்ற வேறு நிறுவனங்களுக்கு முதலீடு செய்யச் சென்று விடுகின்றன. உண்மையில் உற்பத்தியில் ஈடுபட்டு பொருட்களையோ அல்லது சேவையோ சரக்காக மாற்றி விற்பனை செய்து லாபம் ஈட்டிக் கொண்டிருந்த மரபார்ந்த நிறுவனங்கள் திவால் ஆகின்றன. அதில் பணியாற்றிக் கொண்டிருந்த தொழிலாளர்கள் வேலையிழந்து தெருவுக்கு வருகிறார்கள். இந்த நிறுவனங்களின் முதலாளிகளும் தெருவுக்கு வரவேண்டும் அல்லது அவர்களும் மேக முதலாளிகள் ஆக வேண்டும். அவர்களுக்கு வேறு மார்க்கம் இல்லை. இது கற்பனையோ அல்லது எதிர்காலத்தில் சாத்தியம் என்ற கூற்றோ அல்ல. யானிஸ் வருஃபாக்கிஸ் அவ்வாறு நடந்த சில உதாரணங்களைக் காட்டுகின்றார்.

மேகமூலதன ஆதிக்கம்

அமெரிக்காவில் இருக்கக்கூடிய மூன்று முக்கியமான மேகமூலதன நிறுவனங்களான பிளாக் ராக், வான்கார்ட், ஸ்டேட் ஸ்ட்ரீட் ஆகியவற்றினுடைய மொத்த சொத்து மதிப்பு அமெரிக்காவில் இருக்கும், நிலத்தில் கால் பாவிய, உற்பத்தி, சேவை ஆகியவற்றில் ஈடுபடக்கூடிய மரபார்ந்த முதலாளித்துவ நிறுவனங்கள் அனைத்தின் மொத்த சொத்து மதிப்பைக் காட்டிலும் அதிகம். இது வெறும் கதை அல்ல. இந்த விவரங்கள் இணையத்திலேயே தேடிப் பார்த்து சரியென ஏற்றுக் கொள்வதாக இருக்கிறது. யானிஸ் வருஃபாக்கிஸ் சொற்களில் கூறுவதானால் அமெரிக்க முதலாளித்துவம் இந்த மூன்று மேக முதலாளித்துவ தொழில்நுட்பப் பிரபுத்துவத்தின் உடைமை!

முதலாளித்துவம் குறித்து பேசுபவர்கள் எழுதுபவர்கள் அதற்கு எதிராக இயங்குபவர்கள் ஆகியோரும் கூட இந்த மூன்று நிறுவனங்கள் குறித்து கேள்விப்பட்டிருக்க மாட்டார்கள். ஆனால் இந்த மூன்று நிறுவனங்களின் உடைமையாக இருக்கும் ஏனைய நிறுவனங்கள் பற்றி பலரும் கேள்விப்பட்டு இருப்பார்கள் எனக் கூறும் யானிஸ் அவற்றைப் பட்டியலிடுகின்றார். அமெரிக்காவினுடைய ஆக முக்கியமான விமானப் போக்குவரத்து நிறுவனங்களான அமெரிக்கன், டெல்டா, யுனைடெட் கான்டினென்டல் ஆகியவை இந்த மூன்று தொழில்நுட்பப் பிரபுத்துவ நிறுவனங்களின் உடைமைதான். வால் ஸ்ட்ரீட் நிறுவனங்கள் என்று அச்சத்துடனும் ஒவ்வாமையுடனும் குறிப்பிடப்படுகின்ற ஜேபி மார்கன் சேஸ், வெல்ஸ் பார்கோ, பேங்க் ஆப் அமெரிக்கா, சிட்டி குரூப் ஆகியவை இவற்றினுடைய உடைமையே. இந்த மூன்று மேகமூலதன நிறுவனங்கள் இணைந்து நியூயார்க் பங்குச் சந்தையில் பதிவு செய்யப்பட்டுள்ள நிறுவனங்களில் 90% நிறுவனங்களினுடைய ஆகப்பெரிய பங்குதாரர்கள் என்பது நமக்கு அதிர்ச்சி அளிக்க வைக்கும் செய்தி. இந்த நிறுவனங்களில் ஆப்பிள், மைக்ரோசாப்ட், எக்ஸான் - மொபில், ஜெனரல் எலக்ட்ரிக், கொக்கோகோலா ஆகிய எல்லா பெரு நிறுவனங்களும் அடக்கம். மூன்று பெரும் நிறுவனங்கள் நிர்வகிக்கும் சொத்தின் மதிப்பு: ப்ளாக் ராக் 10 ட்ரில்லியன்; வான்கார்ட் 8 டிரில்லியன்; ஸ்டேட் ஸ்ட்ரீட் 4 டிரில்லியன் அமெரிக்க டாலர்கள்! அதாவது 2020 ஆம் ஆண்டில் இந்த நிறுவனங்கள் நிர்வகிக்கும் சொத்தின் மதிப்பு, அமெரிக்க நாட்டினுடைய மொத்த உற்பத்தி - ஜிடிபி என்பதைக் காட்டிலும் சற்று அதிகம் என்பது நம்மை மலைக்க வைக்கிறது.

இவையெல்லாம் நடந்துவிட்ட காரணத்தினால் மரபார்ந்த முதலாளித்துவ நிறுவனங்களும் அவை தொழிலாளர்களைச் சுரண்டி லாபம் சம்பாதிப்பதும் இல்லாது போய்விடவில்லை. ஆனால் அத்தகைய நிறுவனங்களுக்கும் முதலாளித்துவத்திற்கும் எதிரான நடவடிக்கையை அதற்கு முடிவுகட்டும் செயலை தொழிலாளர் வர்க்கம் செய்யும் என்று நாம் நம்பிக் கொண்டிருக்கும் பொழுது முதலாளித்துவத்திற்கு மேலாக ஒரு புதிய அடுக்கு உருவாகி அல்லது ஒரு புதிய ஆளும் வர்க்கம் என்பதே உருவாகி முதலாளிகள் உட்பட இந்த உலகின் அனைத்து மக்களையும் தன்னுடைய நலனுக்கு பணியாற்றுமாறு செய்திருக்கிறது. அது வெறுமனே உருவாகும் லாபத்தை தனதாக்கிக் கொள்வதோடு நின்று விடுவதில்லை. அது நிறுவனங்களை வாங்கி உடைத்து அதன் சொத்துக்களை எடுத்துக் கொண்டு ஏனைய செயல்பாடுகளை நிறுத்தி விடுகிறது. பாட்டாளி வர்க்கத்தை, சார்லி சாப்ளினின் திரைப்படத்தில் (The Tramp) வரும் ஏதுமற்ற 'ட்ராம்புகள்' (அலைந்து திரிபவர்கள்) போல தெருவில் அலைய விடுகின்றது.

இந்தப் புதிய நிலையைக் குறித்து பல இடதுசாரிகளும் பேசுகின்றனர். ஆனால் பேசுபவர்கள் வேறு வேறு பதங்களைப் பயன்படுத்துகின்றார்கள். சிலர் ‘உக்கிர முதலாளித்துவம் (Hyper Capitalism)’ என்கிறார்கள்; சிலர் ‘மேடை முதலாளித்துவம் (Platform Capitalism)’ என்று சொல்கிறார்கள். வருஃபாக்கிஸ் தன்னுடைய பதமான ’தொழில்நுட்பப் பிரபுத்துவம்’ தான் இந்த எதார்த்தத்தைச் சரியாக பிரதிபலிக்கிறது என்று விவாதிக்கிறார். எந்தப் பதம் சரியாக பிரதிபலிக்கிறது என்பதனை மற்றவர்களுடைய வாதத்தையும் கேட்ட பிறகு பிறகொரு நாளில் நாம் முடிவு செய்யலாம். ஆனால் இது பலராலும் பல்வேறு பெயர்களால் சுட்டப்படும் புதிய எதார்த்தம். எனவே, ஒன்று நிச்சயம்; இந்த மாற்றங்கள் உலக முதலாளித்துவ ஆதிக்கம் குறித்த நம்முடைய பார்வையில் சில மாற்றங்களைக் கோருகின்றது.

தொழில்நுட்பப் பிரபுத்துவத்தின் சர்வதேசத் தாக்கம்: புதிய பனிப்போர்

அமெரிக்க மேக முதலீட்டு நிறுவனங்களுக்கு இருந்த ஒரே போட்டியாளர் 2008 ஆம் ஆண்டிற்குப் பிறகு புதிதாக உருவாகி வந்த சீனாவின் மேக முதலீட்டு நிறுவனங்கள் மட்டும்தான். மேகமூலதனத்திற்கு எல்லைகள் கிடையாது. நாட்டு எல்லைகள் என்பது ஒரு பொருட்டல்ல. அவை உலகம் தழுவியவை. வாடகைப் பணத்தை உலகில் எங்கும் மேக வாடகையாக வசூலிக்கக் கூடியவை. எனவே அமெரிக்க மேக மூலதன நிறுவனங்கள் செய்யும் காரியங்கள் அனைத்தையும் அவற்றைக் காட்டிலும் மேலும் திறனோடு செய்யக்கூடியவையாக சீனாவின் மேகமூலதன நிறுவனங்கள் உருவாயின. எனவே அமெரிக்க மேகமூலதன மேலாதிக்கத்திற்கான சவால் சீனா என்று ஆனது. இதுதான் இன்றைய இந்த இரண்டாவது பனிப்போரின் அடிப்படைக் காரணம்.

சீனப்பண்புகளுடன் கூடிய தொழில்நுட்பப் பிரபுத்துவம்

1970 ஆம் ஆண்டுகளில் சோவியத் யூனியனுக்கும் சீனாவுக்கும் இடையே ஒரு பிளவை ஏற்படுத்த வேண்டும்; அல்லது ஏற்கெனவே இருக்கும் பிளவை நிரந்தரமாக்க வேண்டும் என்ற நோக்கத்தோடு அமெரிக்கா சீனாவோடு தனது உறவுகளை ஏற்படுத்தியது, சீராக்கியது. அதன் பிறகு சீன உற்பத்திப் பொருள்கள் அமெரிக்க சந்தைக்கு வருவது அனுமதிக்கப்பட்டது. ஜப்பான், தென் கொரியா, தைவான் ஆகிய நாடுகளோடு இணைந்து சீனாவும் வால்மார்ட்டின் கடைகளையும் அமெரிக்க இல்லங்களையும் அதன் மலிவான உற்பத்திப் பொருட்களின் வெள்ளத்தால் மூழ்கடித்தது. சீன நிறுவனங்கள் ஈட்டிய உபரியும் அமெரிக்காவில் முதலீடு செய்வதற்கு அனுமதிக்கப்பட்டது. அமெரிக்க அரசு எல்லா நிறுவனங்களிலும் சீனா விரும்பியபடி முதலீடு செய்ய அனுமதிக்கவில்லை. அது அமெரிக்காவின் சில அரங்கங்களில் மட்டும்தான் முதலீடு செய்ய அனுமதித்தது. குறிப்பாக நிதி, காப்பீடு, நில மனை வர்த்தகம் அதாவது ஃபயர் என்று ஆங்கிலத்தில் அழைக்கப்படுகிறது. பைனான்ஸ், இன்சூரன்ஸ், அண்ட் ரியல் எஸ்டேட் செக்டர்ஸ் (Finance, Insurence and Real Estate Sector - FIRE) ஆகியவற்றில் முதலீடு செய்யலாம். அல்லது அமெரிக்க அரசின் கடன் பத்திரங்களில் முதலீடு செய்யலாம். அல்லது அமெரிக்க முதலீட்டு வங்கிகள் மூலம் வால் ஸ்ட்ரீட்டில் - பங்குச் சந்தையில் முதலீடு செய்யலாம்.

1970களில் இருந்து ஆசிய நிறுவனங்களினுடைய லாபம் அமெரிக்க வால்ஸ்ட்ரீட்டில் மூலதனமாக வந்து குவிந்தது. அதனைப் பயன்படுத்தி அமெரிக்க மக்களுக்கு அவர்கள் கேட்குமளவிற்கு அல்லது அவர்கள் கேட்காத அளவிற்கு கடன் பற்று வரவு வசதிகள் செய்து கொடுக்கப்பட்டன. அதன் மூலம் ஆசிய உற்பத்திப் பொருட்களை அவர்கள் வாங்கி நுகர்வதற்கு வழி செய்யப்பட்டது. இவ்வாறு சீனாவிற்கும் அமெரிக்காவிற்கும் இடையே ஒன்றையொன்று சார்ந்து நிற்கக்கூடிய ஒரு கூட்டுயிரி (Symbiotic) உறவு ஏற்பட்டது. எல்லாம் அமெரிக்காவிலும் உலகின் பல நாடுகளிலும் இருக்கக்கூடிய பண முதலைகளின் விருப்பத்திற்கு ஏற்ப நடந்து கொண்டு இருந்தன. 2008 ஆம் ஆண்டு பொருளாதார நெருக்கடியின் போது இது முடிவுக்கு வந்தது. இது இரண்டு முக்கியமான தாக்கங்களை உலகப் பொருளாதார சூழலில் ஏற்படுத்தியது. ஒன்று, இது உலகப் பொருளாதாரத்தில் சீனாவின் தலையாய இடத்தை உறுதி செய்தது; இரண்டாவதாக, அமெரிக்காவிலும் சீனாவிலும் மேக மூலதனம் உருவாக வழி செய்தது என்று சொல்கிறார் யானிஸ் வருஃபாக்கிஸ். அமெரிக்க சீன முதலீட்டு முயற்சிகளை அவர் எவ்வாறு ஒன்றாகக் காண்கிறார் என்று புரியவில்லை. இருக்கட்டும்!

ஆனால் அதற்காக சீனாவில் மேகமூலதன நிறுவனங்களே ஏதுமில்லை என்றும் சொல்ல முடியாது. யானிஸ் வருஃபாக்கிஸ் கூகுள் நிறுவனத்தினுடைய சீன மாற்றாக பைது (Baidu) நிறுவனம் இருப்பதை சுட்டிக்காட்டுகிறார். நமக்கெல்லாம் நன்கு தெரிந்த அலிபாபா, அமேசான் டாட் காம் நிறுவனத்தின் சீன மாற்றுதான். இது தவிர இன்னும் வேறு பல நிறுவனங்களும் இருக்கின்றன என்பது அவர் கூற்று. அவர் கூறிய பிறகு தேடிப் பார்த்தால் அது சரி என்றுதான் தெரிகிறது அலிபாபா, டென்ஸெண்ட், பைது, பிங்க் அன், ஜேடி டாட் காம் ஆகிய சீனாவின் ஐந்து பெரிய நிறுவனங்களும் அமெரிக்க மேகமூலதன நிறுவனங்களை ஒத்தவைதான் என்பது தெரிகிறது.

அமெரிக்காவின் சிலிக்கன் பள்ளத்தாக்கு பெருந் தொழில்நுட்ப நிறுவனங்களைப் போல அல்லாது சீனாவின் பெருந் தொழில்நுட்ப நிறுவனங்கள் அனைத்தும் அரசாங்க முகமைகளோடும் அரசாங்கத் துறைகளோடும் இறுகப் பிணைக்கப்பட்டவையாக இருக்கின்றன. எனவே இந்த நிறுவனங்கள் அரசாங்கத்தினுடைய முகமைகளாலும் அதனுடைய துறைகளாலுமே தங்கள் நோக்கத்திற்கு பயன்படுத்தப்படுகின்றன. முக்கியமான அம்சம் தொலைத்தொடர்பு, பொழுதுபோக்கு, ஈ வணிகம், அந்நிய முதலீடுகள் போன்ற பலவற்றையும் இணையத்தின் அடிப்படையிலான நிதி சேவை அமைப்போடு இணைப்பதற்கு எளிதாக இருக்கிறது. தான் இதை எழுதிக் கொண்டிருக்கும் காலகட்டத்தில் ஒரு நாளில் டான்ஸெண்ட் நிறுவனத்தின் ’வீ சாட்’ என்ற வாட்ஸப் போன்ற செய்திப் பரிமாற்ற செயலி ஆப், ஒரு தினத்தில் 38 பில்லியன் செய்திகளை பரிமாறியுள்ளது என்று யானிஸ் கூறுகிறார். மலைக்க வைக்கும் அளவுகளில் அமெரிக்க மேகமூலதன நிறுவனங்களுக்கு சவால் விடும் வகையில் இருக்கின்றன என்பதனை நாம் ஏற்றுக் கொள்ள வேண்டி இருக்கிறது.

இதற்கு மேலும் ஒரு அம்சம் இருக்கிறது. மரபார்ந்த உற்பத்தி நிறுவனங்களுக்கு அமெரிக்க டாலரின் உலகளாவிய செல்வாக்கு அவசியம். ஆனால் சீனாவின் மேகமூலதன நிறுவனங்களுக்கு டாலரின் சர்வதேச வலிமை என்பது தேவையில்லாத ஒன்று. டிக் டாக் என்ற சீன மேகமூலதன நிறுவனத்தை எடுத்துக் கொண்டால் அது அமெரிக்கச் சந்தையிலிருந்து தனது வருமானத்தைப் பெறுகிறது. இதற்கு அமெரிக்க நாட்டின் உற்பத்திப் பொருள் பற்றாக்குறையோ அல்லது அமெரிக்க டாலரின் உலகளாவிய வலிமையோ தேவையற்ற ஒன்று. எனவே சீன மேகமூலதன நிறுவனங்களினுடைய வளர்ச்சி, அமெரிக்க ஆதிக்கத்திற்கும் அமெரிக்காவினுடைய மேகமூலதன பெருந்தொழில்நுட்ப நிறுவனங்களுக்கும் நலம் பயப்பதில்லை. அவற்றுக்கு பாதகமே அதிகம். எனவேதான் அமெரிக்காவின் மேகமூலதன உடைமையாளர்களும் டொனால்ட் ட்ரம்ப்பும் டிக்டாக், ஹ்வாவெய் (Huawei), இசட் டி இ (ZTE) போன்ற சீன நிறுவனங்களுக்கு எதிராக தடுப்பு நடவடிக்கைகளை எடுக்கின்றார்கள்.

ஆனால் புதின் உக்ரைனின் மீது படையெடுத்துச் சென்றது எல்லாச் சமன்பாடுகளையும் மீண்டும் குலைத்துப் போட்டுவிட்டது. உக்ரேனுக்கு ரஷ்யப் படைகள் சென்ற நான்காவது நாள் வாஷிங்டன், 300 பில்லியன் அமெரிக்க டாலருக்கு மேலான ரஷ்யப் பணத்தை முடக்கியதோடு அவர்களுடைய கட்டுப்பாட்டில் இருக்கக்கூடிய வங்கிப் பரிமாற்ற முறைபாட்டின் மூலமாக யாரும் ரஷ்யாவுக்கு பணம் அனுப்ப முடியாத ஒரு சூழலையும் தடையையும் உருவாக்கி இருக்கிறது. ரஷ்யா உடன் வணிகம் புரியும் நாடுகள் ரஷ்ய ரூபிள் பயன்படுத்தி வணிகம் செய்யும் கட்டாயத்திற்கு உள்ளாகினர். ஆனால் அதை நீண்ட காலத்திற்கு பராமரிப்பது இயலாத ஒன்று. ஏனென்றால் இந்த நாடுகள் ரஷ்ய ரூபிளை வைத்து என்ன செய்ய முடியும்? ரஷ்யாவிடமிருந்து சரக்குகளை இறக்குமதி செய்யும் நாடாக இருந்தால் பரவாயில்லை; மற்றவற்றுக்கு ரூபிள் பயனற்ற நாணயம். இன்றைக்கு ரஷ்யாவுக்கு ஏற்பட்டிருக்கும் இந்தப் பிரச்சனை நாளை சீனாவின் மரபார்ந்த உற்பத்தி நிறுவனங்களுக்கும் ஏற்படக்கூடிய ஒன்றுதான். ஆனால் சீனாவின் மேகமூலதன நிறுவனங்களை இந்தப் பிரச்சனை அண்டாது! எனவே மேக மூலதன நிறுவனத்தின் மூலம் சீனா இதற்கு வழிகண்டது.

2020 ஆகஸ்ட் 14ஆம் தேதி, சீன மக்கள் வங்கி எனப்படும் பீப்பில்ஸ் பேங்க் ஆப் சைனாவில் ஒரு பெறுமாற்றம் நிகழ்ந்தது. சுமார் 6 ஆண்டு ஆய்வுகளுக்குப் பிறகு சீன மத்திய வங்கி ஒரு டிஜிட்டல் யுவான் என்பதை ஒரு பரிட்சார்த்த முயற்சியாக அறிமுகம் செய்தது. இந்த டிஜிட்டல் யுவான் கொண்டு நடக்கும் வணிகம் முழுக்க முழுக்க அமெரிக்கக் கட்டுப்பாட்டுக்கும் அதன் கைவசம் இருக்கும் பணப் பரிமாற்ற முறைபாடுகளுக்கும் வெளியில் நடப்பதாகும். இது அமெரிக்க வங்கிகள், முதலீட்டு நிறுவனங்கள், அமெரிக்க மத்திய வங்கியான பெடரல் ரிசர்வ் ஆகிய அனைத்திற்கும் மிகப்பெரிய இடியாகும். ரூபிளைக் கொண்டு வணிகம் செய்யமுடியாத ரஷ்யாவும் சீனாவின் டிஜிட்டல் யுவான் கொண்டு வணிகம் செய்ய இயலும். உலகின் பெரும்பாலான நாடுகள் சீனாவைத்தான் தங்களுடைய முதன்மையான வணிகப் பங்காளியாகக் கொண்டிருப்பதால் அவையும் இந்த டிஜிட்டல் யுவான் கொண்டு வணிகம் செய்வதற்கு தயாராக இருக்கும். இது அமெரிக்காவின் வணிக, நிதி, நாணய ஆதிக்கம் அனைத்திற்கும் பெரும் சவாலாக வந்து கொண்டிருக்கிறது. இந்த நிலைமை அமெரிக்காவும் பைடன், டிரம்ப் தலைமைகளும் ஏற்படுத்தியதுதான். இந்த நிலை காரணமாக சீன மேகமூலதன நிறுவனங்களின் வலிமை உலகளாவிய அளவில் அதிகரிப்பதும் நடக்கின்றது. இந்தச் சிக்கலில் அமெரிக்கா எந்த நடவடிக்கை எடுத்தாலும் அது சீனாவின் கரத்தை வலுப்படுத்துவதாக ஆகிவிடும் நிலையை அமெரிக்கா தாங்க இயலவில்லை; ஆனால் செய்வதற்கு எதுவும் இல்லை!

தொழில்நுட்பப் பிரபுத்துவத்திலிருந்து தப்பிப்பது எப்படி

மரபார்ந்த தொழில் மூலதன யுகத்தின் போது சமூக ஜனநாயகக் கட்சிகளும் சமூக ஜனநாயக அரசுகளும் முதலாளித்துவத்தை எதிர்கொண்டு குறைந்தபட்சம் ஒரு கட்டுக்குள் வைத்திருந்தன. ஆனால் அந்த வழிமுறைகளைப் பின்பற்றி தொழில்நுட்பப் பிரபுத்துவத்தை எதிர்கொள்ள இயலாது. முந்தைய முதலாளித்துவ நிறுவனங்கள் சரக்கு உற்பத்தி செய்து லாபமீட்டக் கூடியவை. உற்பத்தி தங்கு தடையின்றி நடக்க தொழிலாளர்களை அடக்கி ஒடுக்கியும், அவர்களோடு சமரசம் செய்தும் உற்பத்தியை உறுதி செய்ய வேண்டிய நிர்பந்தம் இருந்தது. இதற்கு தொழிலாளர் அமைப்புகளில் செல்வாக்கு செலுத்தும் சமூக ஜனநாயகக் கட்சிகளுடன் சமரசம் செய்துகொள்ள வேண்டிய நிலை இருந்தது. அவர்களே ஆட்சியில் இருந்தால் அவர்களுக்குக் கட்டுப்பட்டு நடக்க வேண்டிய தேவையும் இருந்தது. அந்த வகையில் சமூக ஜனநாயக சக்திகள் மரபார்ந்த முதலாளித்துவ சக்திகள் மீது செல்வாக்கு செலுத்த முடிந்தது.

ஆனால் உற்பத்தியில் ஈடுபடும் தேவையற்ற, லாபமீட்ட வேண்டிய அவசியம் இல்லாத மேகமூலதன தொழில்நுட்ப பிரபுத்துவ நிறுவனங்கள் சமூக ஜனநாயகக் கட்சிகளுக்கு கட்டுப்பட வேண்டிய அவசியமில்லாதவை. அவற்றோடு சமரசம் செய்துகொள்ள வேண்டிய தேவையில்லாதவை. மேகப் பாட்டாளிகள் ஆற்றல் மிகு சங்கங்களை உருவாக்கும் வாய்ப்பும் திறனும் இல்லாதவர்கள். எனவே இன்றைய மாற்றமடைந்த உலக அரசியல் பொருளாதாரச் சூழலில் சமூக ஜனநாயகம் என்பதற்கு உரிய இடம் எதுவும் இல்லை என்று ஆகிப்போனது. மரபார்ந்த முதலாளித்துவம் கோலோச்சிய காலத்தில் ஒரு புறத்தில் மூலதன சக்திகள் மறுபுறத்தில் உழைக்கும் மக்கள் என்பது போன்ற நிலை இருந்தது. எனவே சமூக ஜனநாயக அரசுக்கு இவர்கள் இடையே சமரசம் செய்து வைத்து தங்கள் செல்வாக்கை வளர்த்துக் கொள்ளும் சாத்தியப்பாடு இருந்தது. இந்த சாத்தியங்கள் இல்லாது போனது அவர்களை எல்லாம் வலதுசாரிகளாக மாற்றிவிட்டது.

ஆனால் இன்றைக்கு நிலைமை எப்படி என்று பார்த்தால் ஒரு புறத்தில் மேகமூலதனத்தைக் கொண்ட தொழில்நுட்பப் பிரபுத்துவ வாதிகள் ஆளும் வர்க்கத்தின் உச்சபட்ச தட்டாக இருக்கின்றார்கள். மறுபுறத்தில் நாம் முன்னரே பார்த்தது போல மேகப் பாட்டாளிகள் ஒரு குறிப்பிட்ட எண்ணிக்கையிலும் மேகப் பண்ணையடிமைகள் ஏராளமான எண்ணிக்கையிலும் உலகெங்கும் இருக்கின்றார்கள். உலகெங்கும் இருக்கின்ற மரபார்ந்த முதலாளித்துவ வர்க்கம் என்பது இந்த இரண்டுக்கும் இடையில் மேக எடுபிடிகளாக நிற்பதாக இருக்கின்றது. மரபார்ந்த முதலாளித்துவத்திற்கும் மரபார்ந்த பாட்டாளி வர்க்கத்துக்குமான முரண்பாடு என்பது இல்லாது போய்விடவில்லை. ஆனால் அவர்களது முரண்பாட்டின் மேலாக இந்தப் புதிய முரண்பாடுகளும் இணைந்துள்ளன. இவற்றை எவ்வாறு எதிர்கொள்வது என்பது மிக சிக்கலான வினாதான். இதனை ஏற்றுக் கொள்ளும் யானிஸ் தன்னுடைய ஆலோசனைகள் என்று சிலவற்றை முன்வைக்கின்றார் .

முதலாவதாக, பழைய இடது வலது என்ற பிரிவினைகள் எல்லாம் காலாவதியாகி விட்டன என்பது போன்ற வாதங்களை நாம் புறங்கையால் ஒதுக்கித்தள்ள வேண்டும் என்பதனை சரியாகவே கூறுகின்றார். அவற்றில் எல்லாம் இன்றைக்கும் பொருத்தப்பாடு என்பது தொடரத்தான் செய்கிறது என அவர் சரியாகவே அடையாளம் கண்டு அதனைக் கூறுகிறார். மூலதனத்தின் ஆட்சியின் கீழ் நாம் வாழும் வரை மக்களின் பெரும்பகுதி மூலதனச் சுரண்டலுக்கு உள்ளாகும் வரை மானிடமும் பூமிப் பந்தும் மூலதனத்தின் நலனுக்காக ஒட்டச் சுரண்டப்படும் வரை முதலாளித்துவத்தைத் தூக்கி எறிய வேண்டும் என்பதைத் தனது ஜனநாயக அரசியலின் பகுதியாகக் கொண்டிருக்கும் இடது அரசியல் என்பது பொருத்தப்பாடு அற்றதாக போய்விடாது என்பதனை வலியுறுத்த வேண்டும் என்கிறார்.

இரண்டாவதாக, தொழில்நுட்பப் பிரபுத்துவம் கோலோச்சும் இந்த உலகில் முதலாளித்துவத்தைத் தூக்கி எறிவது என்றால் அதனுடைய பொருள் என்ன? என்பதனைக் குறித்து மறுபரிசீலனை செய்வதும் அதனை சரியாக வரையறுப்பதும் மேகமூலதனம் உள்ளிட்ட முதலாளித்துவத்தைத் தூக்கி எறிவதற்கான முன் நிபந்தனை என்பதனை வலியுறுத்துகிறார். இன்றைய நிலையில் இதனைத் தாண்டிச் செல்வதற்கான வழிமுறைகளைப் பற்றி சிந்திக்கும் பொழுது, தான் மிகச்சிறந்த மனிதர் ஒருவரோடு உடன் இருப்பதாக யானிஸ் வருஃபாக்கிஸ் கூறுகிறார். அவர் வேறு யாருமல்ல கார்ல் மார்க்ஸ்தான்!

தான் வாழ்ந்த காலத்தின் போது சோசலிசம் குறித்து சில மெல்லிய சுட்டல்களை செய்ததைத் தவிர அது குறித்து விளக்கமான விவரங்கள் எதனையும் காரல் மார்க்ஸ் எழுதவில்லை. இந்த மாற்று என்பது தன்னைப் போன்ற ஒரு நடுத்தர வர்க்கத்தைச் சார்ந்த அறிவுஜீவி பிரிட்டிஷ் நூலகத்தில் அமர்ந்து முடிவு செய்யக்கூடிய ஒன்று அல்ல என்பதனை அவர் அறிந்திருந்தார். அது தம்முடைய எதார்த்தத்தில் காலூன்றி இருக்கக்கூடிய பாட்டாளி வர்க்கம் தன்னுடைய பகுப்பாய்வின் மூலம் கண்டறிய வேண்டிய ஒன்று என்பதில் அவருக்கு எந்தச் சந்தேகமும் இருந்ததில்லை. எனவே பரந்துபட்ட பாட்டாளி வர்க்கம் அறிவியல் பூர்வமாக இவற்றையெல்லாம் ஆய்வு செய்து, மாற்றி வடிவமைக்க வேண்டும் என்பதில் மாற்றுக் கருத்து இல்லை. ஆனாலும் கூட மாற்று குறித்த எந்தக் கனவுகளும் இல்லாது இருப்பதை தூக்கி எறிவதற்கு யாரும் தயாராகப் போவதில்லை. எனவே சிலவற்றை நாம் முன்மொழிந்துதான் ஆக வேண்டும் என்று கூறுகின்றார்.

சோசலிஸமும் தொழில்நுட்பப் பிரபுத்து வத்திற்கெதிரான மேகக் கிளர்ச்சியும்

இன்றைய நவீன தொழில்நுட்பப் பிரபுத்துவம் உடனுறை ஏகாதிபத்திய, முதலாளித்துவ சமூகக் கட்டமைப்புக்கு மாற்று என்று எதனைக் கூற முடியும்? அதில் ஒன்றும் சந்தேகம் இல்லை! சோசலிசம்தான் அதற்கு மாற்று; வேறு எதுவும் மாற்று இல்லை எனத் திட்டவட்டமாகக் கூறுகின்றார். எல்லா நவீன மார்க்சியர்களையும் போல யானிஸ் கூறும் சோசலிசம் 21ஆம் நூற்றாண்டின் சோசலிசம்! அது 20 ஆம் நூற்றாண்டில் வழக்கில் இருந்த சோசலிசம் அல்ல! உற்பத்தி நிறுவனங்களும் உற்பத்தி சாதனங்களும் அரசுடைமையாவது என்பதே சோசலிசம் என்ற புரிதல் காலாவதியாகிவிட்டது. மார்க்சிய மூலவர்கள் கூறிய உற்பத்தியாளர்களின் கூட்டுறவான சோசலிசம் என்பதே இறுதி மாற்றாக அவரும் கூறுவது. ஜனநாயகபூர்வமாக இயங்கும் நிறுவனங்கள், ஆட்சி அமைப்புகள், புத்தாக்கத்திற்கு இடமிருக்கும் நடைமுறைகள், கருத்து மாறுபாடுகளையும் பன்முகத்தன்மையையும் வெறுத்து ஒதுக்காத அதனைத் தண்டிக்காத, முந்தைய காலத்தில் போன்ற முற்றதிகாரம் (Totalitarianism) இல்லாத சமூகம் என்று பல அம்சங்களை அவர் கூறுகின்றார். அது தனியே விவாதிக்க வேண்டிய, பகுப்பாய்வு செய்யவேண்டிய ஒன்றுதான்.

இன்றைய நிலையில் தொழில்நுட்பப் பிரபுத்துவம் என்பதற்கு எதிராக என்ன செய்யலாம் என்று அவர் சில ஆலோசனைகளைக் கூறுகின்றார். அவை பரிசீலிக்கத் தக்கவை. முதலாளித்துவம் அப்புறப்படுத்தப்பட்டு அந்த இடத்திற்கு சோசலிஸம் வரும் என்று நம்பி இருந்த மார்க்சியர்கள் முதலாளித்துவத்திற்கு மேலாக அதன் ஆதிக்கத்தை தாண்டிய ஆதிக்க சக்தியாக வேறு ஒரு தட்டு வந்து அமர்வது என்பதனை ஏற்றுக் கொள்வதற்கு மிகவும் சிரமப்படுகிறார்கள்; கூறுபவனிடம் எரிச்சல் கொள்கின்றனர்; அது புரிந்து கொள்ளக் கூடியதுதான் என்று கூறும் யானிஸ் வருஃபாக்கிஸ், அதனைக் காட்டிலும் முக்கியமான ஒரு அம்சம் இருக்கிறது என்பார். ‘நீங்கள் சொல்வது சரி என்றால் தொழிலாளர் வர்க்கத்தைத் திரட்டுவது மட்டுமே போதாது என்பதாக ஆகிவிடுகிறது’ என்று ஒரு மார்க்சிய செயல்பாட்டாளர் தன்னிடம் கூறியதை எடுத்துரைக்கின்றார். ஆம்! அதுதான் அவர் கூறும் செய்தி. மரபார்ந்த உற்பத்தி தொழிற்சாலைகள், அலுவலகங்களில் பணிபுரிந்து கொண்டிருக்கின்ற தொழிலாளர்கள், ஆசிரியர்கள், செவிலியர்கள், ஓட்டுநர்கள், நடத்துனர்கள் மற்றும் பல நவீன தொழிற்சாலை பாட்டாளிகள் இவர்களை எல்லாம் ஒன்று திரட்டும் பணி காலாவதியாகிவிட்டது என்பதல்ல. இந்த சுரண்டப்படும் பாட்டாளி வர்க்கத்தினரை ஒன்று திரட்டாமல் ஒரு மாற்றமும் நிகழப்போவதில்லை; ஆனால் அதனையும் தாண்டி செய்ய வேண்டிய சில கடமைகளை வரலாறு இன்றைக்கு நம்மிடத்தில் திணித்துள்ளது என்று அவர் கூறுகிறார்.

தொழில்நுட்பப் பிரபுத்துவம் அது போன்ற ஒரு அணி திரட்டலுக்கு எதிரான பல சாலைத் தடுப்புகளை ஏற்படுத்தி இருக்கின்றது என்று கூறுகிறார். ஆனால் மரபார்ந்த முதலாளித்துவம் எப்படி தனக்கு சாவு மணி அடிப்பவர்களை தனக்கு புதைகுழி தோண்டுபவர்களை தானே உருவாக்குகிறதோ அதுபோல மேகமூலதனமும் தனக்கு எதிரான கலகக்காரர்களையும் கிளர்ச்சிக்காரர்களையும் உருவாக்கிக் கொண்டுதான் இருக்கிறது. அது மட்டுமல்லாது இவர்களை ஒன்றிணைக்கவும் பரந்துபட்ட கூட்டணிக்கு அவர்களைக் கொண்டு வருவதற்கும் அப்படிக் கொண்டு வந்து எதிர் இயக்கம் காணவும் தேவைப்படும் கட்டுமானங்களை அது தானே கொண்டிருக்கிறது. அந்தக் கட்டுமானத்தில் இருந்து இந்தக் கிளர்ச்சிக்காரர்களை அது தள்ளி வைக்கவும் இயலாது என்பது மிகுந்த நம்பிக்கை அளிப்பதாக இருக்கிறது.

டுவிட்டர் இந்தப் பணிக்கு பயன்பட்டது. ‘அரபு வசந்தம்’ முதல் ‘கருப்பு உயிர்கள் கிள்ளுக் கீரை அல்ல’ -ப்ளாக் லைஃப் மேட்டர், ஆக்குப்பை வால் ஸ்ட்ரீட் என்பது போன்றவை எல்லாம் ட்விட்டர் மற்றும் ஏனைய சமூக ஊடக உதவியுடன்தான் நடந்தேறின என்பதனை அவர் நினைவு கூர்கிறார். விக்கிபீடியா, விக்கி லீக்ஸ் ஆகியவை செய்த பணிகளையும் நினைவுபடுத்துகின்றார். அவை தம்மளவில் எதிர்ப்புக் குரலைப் பதிவு செய்தன என்பது உண்மைதான் என்றாலும் அவை எழுப்பிய ஒலி மிகவும் மெல்லியதுதான் என்பதனையும் ஏற்றுக் கொள்கிறார். ஆனால் இந்த இயக்கங்களில் நடந்து வந்தது போல இல்லாமல் மேகப் பாட்டாளிகள், மேகப் பண்ணை அடிமைகள் உட்பட எல்லோரும் இணைந்த ஒரு பரந்துபட்ட மேடையை உருவாக்கும் போது, அது உருவாக்கும் தாக்கம் இன்னும் வலுவாக இருக்கும் என்கிறார். எடுத்துக்காட்டாக அமேசான் டாட் காம் பயன்படுத்தும் மேகப் பண்ண அடிமைகளான நுகர்வோர்கள் அதனை ஒரு வாரம் உலகமெங்கும் புறக்கணிப்பு செய்தால் அதனுடைய தாக்கம் அந்த நிறுவனத்தை திக்கு முக்காடச் செய்து விடும். இந்தப் புறக்கணிப்பு நடவடிக்கையோடு உலகெங்கும் அமேசான் சரக்கு கிட்டங்கிகளில் மற்றும் அதனுடைய செய்திப் பரிவர்த்தனை வலைப்பின்னல்களில் பணிபுரியும் மேக பாட்டாளிகளும் தங்களது வேலை நிறுத்தத்தோடு இணைந்தால் அமேசான் டாட் காம் நிறுவனம் மண்டியிட்டு விடும். அந்த நிறுவனத்தின் உயிர் முடிச்சான பங்குச்சந்தையில் அதன் பங்குகளின் விலை தலைகுப்புறவிழுந்து விடும் என்று அவர் கூறுவது எதார்த்தமானதாகவும் செயல் சாத்தியம் மிகுந்ததாகவுமே தெரிகிறது.

இவை எதுவும் எளிதல்ல என்ற குரல் எனக்குக் கேட்கிறது; ஆனால் இவை அனைத்தும் 19ஆம் நூற்றாண்டிலும் 20 ஆம் நூற்றாண்டிலும் நிலக்கரிச் சுரங்கங்களிலும் பஞ்சாலைகளிலும் ஆயத்த ஆடை தயாரிப்பு நிறுவனங்களிலும் பணியாற்றிய தொழிலாளர்கள் பட்ட சிரமங்களைக் காட்டிலும் குறைவானதுதான் என்பதனை மீண்டும் வலியுறுத்துகின்றார். மேகம் நம்மிடமிருந்து எடுத்துக் கொள்கிறது மேகம் நமக்கு பலவற்றையும் தருகிறது! நம்மிடமிருந்து; சுதந்திரம், அடையாளம், வாழ்க்கை ஆகியவற்றை மேகமூலதனம் பறித்துக் கொள்கிறது; சுதந்திரம், அடையாளம், வாழ்க்கை ஆகியவற்றை மேகமூலதனத்திடம் இருந்து நாமும் எடுத்துக் கொள்வது சாத்தியமாக இருக்கிறது. யாருக்கு வலிமை அதிகம் என்பது மோதிப் பார்த்தால் தெரியும்.

எனவே உலக மேகப் பண்ணை அடிமைகளே! மேகப் பாட்டாளிகளே! மேக எடுபிடிகளே ஒன்றிணையுங்கள். இழப்பதற்கு நம் மனதைக் கட்டிப்போட்ட சங்கிலிகளைத் தவிர ஏதுமில்லை! என்று முடிக்கின்றார். படித்துப் பாருங்களேன்!

தொழில்நுட்பப் பிரபுத்துவம் - முதலாளித்துவத்தைக் கொன்றது எது?
யானிஸ் வருஃபாக்கிஸ்

(Techno Feudalism – What Killed Capitalism by Yanis Varoufakis)

 - ப.கு.ராஜன், NCBH பதிப்பாசிரியர், எழுத்தாளர், செயல்பாட்டாளர்

✍️ எழுத்தாளர்களின் கவனத்திற்கு

கீற்றில் தங்களது படைப்புகளை / இதழ்களை வெளியிட விரும்பினால், அவற்றை யுனிகோட் எழுத்துருவில் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.

வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகள் மட்டுமே பதிவேற்றத்திற்குப் பரிசீலிக்கப்படும்.