உலக வர்த்தக அமைப்பின் தோற்றம்:
தடையற்ற வர்த்தகத்தை ஊக்குவிப்பதற்காக பிரெட்டன்வுட்ஸ் அமைப்புகளில் ஒன்றாக 1948இல் சர்வதேச வர்த்தகத்திற்கான காப்பு வரி மற்றும் வர்த்தகம் தொடர்பான பொது ஒப்பந்தம் - ஜி.ஏ.டி.டி. (GATT) அமெரிக்கா உட்பட 22 நாடுகளின் ஒப்புதலுடன் உருவாக்கப்பட்டது.
இதன் மூலம் சர்வதேச வர்த்தகங்களுக்குத் தடையாக உள்ள உலக நாடுகளின் காப்புவரிகளைக் குறைத்துத் திறந்த வர்த்தகத்தை ஊக்குவித்தது. 1994 இல், 125 நாடுகள் ஜி.ஏ.டி.டி.(GATT) இல் இணைந்தன. ஜி.ஏ.டி.டி பணக்காரர்களின் அரங்கமாகவே செயல்பட்டது. ஆரம்பத்தில் வேளாண்சார் வர்த்தகம் அதன் ஒழுங்குமுறைக்குள் இல்லை.
அமெரிக்கா தன் நாட்டு விவசாயத் துறையைப் பாதுகாத்து வளர்த்தெடுத்து 1980களில் வேளாண் உற்பத்தியைப் பன்மடங்கு பெருக்கிய பின்னரே விவசாயத் துறையையும் சர்வதேச வர்த்தக விதிமுறைகளுக்குள் கொண்டுவருவதற்கான பேச்சுவார்த்தைகள் 1986இல் உருகுவேவில் நிகழ்ந்த எட்டாவது சுற்றில் மேற்கொள்ளப்பட்டன.
உருகுவே சுற்றில் வேளாண்மை, சேவைகள் மற்றும் அறிவுசார் சொத்துரிமை என அனைத்தையும் கட்டுப்படுத்தவும், உறுப்பு நாடுகளிடையே வர்த்தக மோதல்களைத் தீர்ப்பதற்கான சட்ட அமைப்புப் பொறிமுறையைக் கொண்ட அதிக சக்திவாய்ந்த அமைப்பை ஏற்படுத்தவும் வர்த்தகம் தொடர்பான பொது ஒப்பந்தம் (ஜி.ஏ.டி.டி.) கலைக்கப்பட்டு மரகேஷ் ஒப்பந்தத்தின் மூலம் 1995இல் உலக வர்த்தக அமைப்பு உருவாக்கப்பட்டது.
விவசாயம், சேவைகள் நிதி, தொலைத்தொடர்பு, தகவல் தொழில்நுட்பம், அறிவுசார் சொத்துரிமை, மின்னணு வர்த்தகம் என அனைத்தையுமே இது கட்டுப்படுத்துகிறது. ஒரு நவீன தாராளமய அமைப்பாக இது உலக அளவில் தாராளமயத்தையும் தடையற்ற வர்த்தகத்தையும் ஊக்குவிப்பதன் மூலம் உலக நாடுகளின் பொருளாதாரத்திலும், வர்த்தகத்திலும் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.
சர்வதேச வர்த்தகத்திற்கான காப்புவரி மற்றும் வர்த்தகம் தொடர்பான பொது ஒப்பந்தத்தின் முகப்புரை ‘‘வாழ்க்கைத் தரத்தை உயர்த்துவதற்கும், முழு வேலைவாய்ப்பை உறுதி செய்வதற்கும், உண்மையான வருவாயை அதிகரிப்பதற்கும் வர்த்தக மற்றும் பொருளாதார முயற்சிகள் மேற்கொள்ளப்பட வேண்டும்” என்று கூறுகிறது. உலக வர்த்தக அமைப்பை உருவாக்கிய மரகேஷ் ஒப்பந்தத்தில் இந்த அடிப்படை நோக்கங்களே வலுப்படுத்தப்பட்டன. ஆனால் அது நடைமுறையில் இவற்றுக்கு முற்றிலும் முரணாண விளைவுகளையே ஏற்படுத்தியுள்ளது.
164 உறுப்பு நாடுகளைக் கொண்டுள்ள உலக வர்த்தக அமைப்பின் அடிப்படைக் கொள்கைகளில் ஒன்று பாகுபாடின்மை. ஆனால் உண்மையில் இது வளர்ந்த நாடுகளுக்குச் சாதகமான பாகுபாடின்மையாகவே உள்ளது. நாடுகளுக்கிடையிலான பொருளாதார ஏற்றத்தாழ்வுகளைக் கருத்தில் கொள்ளாது அனைத்து நாடுகளையும் ஒரே நெறிமுறைகளைக் கடைபிடிக்கப் பணிப்பது வளரும் நாடுகளை மிகவும் பாதிப்பதாகவும் வளர்ந்த நாடுகளுக்குச் சாதகமாகவும் அமைந்துள்ளது.
குறைந்த வளர்ச்சியுடையதாகக் கருதப்படும் நாடுகளுக்கு மட்டுமே இதிலிருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. வளர்ந்த நாடுகள் அவை வளரும் போது பயன்படுத்திய வர்த்தக பாதுகாப்புக் கருவிகளைப் பயன்படுத்துவதற்கான வாய்ப்புகள் வளரும் நாடுகளுக்கு மறுக்கப்படுகின்றன. இது சமூக நீதிக்கு முற்றிலும் புறம்பாக இருப்பதுடன் வடக்கு, தெற்கு நாடுகளிடையே சமூகப் பொருளாதார ஏற்றத்தாழ்வுகளை அதிகரித்துள்ளது.
‘சுற்றுகள்’ எனப்படும் பலதரப்பு பேச்சுவார்த்தைகளின் மூலம் உலக வர்த்தக அமைப்பு விதிகளில் மாற்றங்கள் செய்யப்படுகின்றன. உலக வர்த்தக அமைப்பின் உறுப்பு 9 ஒரு உறுப்பினருக்கு ஒரு வாக்கு என்று அனைத்து நாடுகளுக்கும் சமமான தகுநிலை அளிக்கிறது.
ஆனால் வாக்கெடுப்பின் மூலம் முடிவுகள் எடுக்கப் படுவதில்லை, கலந்துரையாடல்களின் மூலம் அடையும் ஒருமித்த கருத்தின் அடிப்படையில் முடிவுகள் எடுக்கப்படுவதாகக் கூறப்பட்ட போதிலும் அதில் வளர்ந்த நாடுகளே ஆதிக்கம் செய்கின்றன. குறிப்பாக அமெரிக்கத் தலைமையே பேராதிக்கம் செலுத்தி வருகிறது.
’குவாட்’ எனப்படும் அமெரிக்கா, ஐரோப்பிய ஒன்றியம், ஜப்பான், கனடா ஆகிய நாடுகளின் அணிசேர்க்கையே முறைசாரா பச்சை அறைப் பேச்சுவார்த்தைகள் மூலம் அனைவர் சார்பாகவும் பல முடிவுகளை எடுக்கின்றன. உலக வர்த்தக அமைப்பின் செயலகம் அதிகாரமற்றதாக உள்ளது.
வளர்ந்த நாடுகள் தங்களுக்குச் சாதகமான முறையில் சந்தைகளை விரிவாக்கவே உலக வர்த்தக அமைப்பைப் பயன்படுத்தி வருகின்றன. தங்களுக்கு சாதகமெனில் திறந்த வர்த்தகம், இல்லையேல் பாதுகாப்புவாதம் என்பதே அவர்கள் கடைப்பிடிக்கும் நெறிமுறையாக உள்ளது. மற்ற உறுப்பு நாடுகளின் நியாயமான கோரிக்கைகள் ஏற்றுக் கொள்ளப்படுவதில்லை. அவை சரிசமமான முறையில் நடத்தப்படுவதில்லை.
வளரும் நாடுகளும், ஏழை நாடுகளும் பிரதிநிதித்துவம் அளிக்கப்படாமல் ஓரங்கட்டப்பட்டுள்ளன. இதனால் நியாயமான வர்த்தகங்களுக்கான வாய்ப்பு முழுவதும் மூடப்பட்டு, வளரும் நாடுகளின் பொருளாதார வளர்ச்சி தடுக்கப்பட்டு, அவை வளர்ந்த நாடுகளைச் சார்ந்து இயங்கும் அரசியல் பொருளாதார அமைப்பு ஏற்படுத்தப்படுகிறது.
பிரிட்டானியக் காலனியாதிக்கத்தின் போது இந்தியாவில் ஏற்றுமதிக்காகவே செய்யப்பட்ட அவுரி, புகையிலைச் சாகுபடியால் உள்நாட்டு உணவு உற்பத்தி கடுமையாகப் பாதிக்கப்பட்டது.
இந்தியாவிலிருந்து பருத்தி போன்ற மூலப் பொருட்களை மட்டும் ஏற்றுமதி செய்து கொண்டு இந்தியத் துணிகளுக்கு சந்தையை இழுத்து மூடி பிரிட்டானியத் துணிகளை இந்தியச் சந்தையில் குவித்து இந்தியாவின் நெசவுத் தொழிலும், பிற உள்நாட்டுத் தொழில்களும் அழிக்கப்பட்டன. இது காலனியாதிக்கத்துடன் முடிந்துவிடவில்லை. நவீன தாராளமயக் காலனியாதிக்கத்தால் இன்றும் மூன்றாம் உலக நாடுகள் பாதிக்கப்பட்டு வருகின்றன.
பல்-இழை (மல்டிஃபைபர்) ஒப்பந்தத்தின் மூலம், அமெரிக்காவும், ஐரோப்பிய ஒன்றியமும் தங்கள் உள்நாட்டு நெசவாடைத் தொழில்களைப் பாதுகாக்கும் விதமாக வளரும் நாடுகளிலிருந்து இறக்குமதியை வரம்பிட்டு கட்டுப்படுத்துகின்றன.
வளரும் நாடுகளிலிருந்து இறக்குமதியைக் கட்டுப்படுத்தும் விதமாகக் காப்பு வரிகளைக் கொண்டும், காப்பு வரி அல்லாத தடைகளைக் (non-tariff barriers) கொண்டும், அளவுக் கட்டுப்பாடுகள், எதிர் நடவடிக்கைகள் போன்ற பிற பாதுகாப்பு நடவடிக்கைகளைக் கொண்டும் தடுக்கின்றன.
இறக்குமதிப் பொருள்கள் சர்வதேச சுகாதாரத் தரக் கட்டுப்பாட்டு நடைமுறைகளின் (SPS) படி தயாரிக்கப்பட்டு சான்றிதழ் பெற்று , பல்வேறு கண்காணிப்புச் சோதனைகளையும், ஆய்வுகளையும் கடந்து வருமாறு கோரப்படுகிறது. இது சுகாதாரப் பாதுகாப்பு நடவடிக்கையாகக் கருதப்பட்டாலும் இதை வளர்ந்த நாடுகள் இறக்குமதியைத் தடுக்கவே பயன்படுத்துகின்றன. ஆனால் இதே சலுகை வளரும் நாடுகளுக்கு அளிக்கப்படுவதில்லை.
வளரும் நாடுகள் தங்கள் விவசாயத் துறையையும் உள்நாட்டுத் தொழில்களையும் காப்பதற்காகக் காப்பு வரிகளை அதிகரித்தாலோ, பிற பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டாலோ அவற்றின் மீது உலக வர்த்தக அமைப்பில் வழக்கு தொடரப்படுகிறது.
உலக வர்த்தக அமைப்பின் விலையுயர்ந்த தீர்ப்பாயத்தின் நீதி நடைமுறைகளில் கலந்து கொள்வதற்கும், வழக்கு தொடர்ந்து தீர்வு பெறுவதற்கும் அதிகச் செலவு பிடிப்பதால் வளரும் - ஏழை நாடுகள் தங்கள் வர்த்தகப் பிரச்சினைகளுக்கு தீர்வு கிடைக்காமல் தவிக்கின்றன.
வளரும் நாடுகள் தங்கள் உற்பத்தித் துறையை வளர்த்துப் பொருளாதார பன்முகத் தன்மை பெறுவதும் இதனால் தடுக்கப்படுகிறது. இத்தகைய தடையற்ற வர்த்தகத்தால் வளரும் நாடுகளின் இறக்குமதி உயர்ந்த அளவிற்கு ஏற்றுமதி அதிகரிக்காததால் வர்த்தகப் பற்றாக்குறையும் கடனும் அதிகமாவதற்கும் காரணமாகவுள்ளது.
1991-2020 காலகட்டத்தில் இந்தியா செய்த ஏற்றுமதியின் சராசரி வளர்ச்சி 9.6 சதவீதமாகவும், இறக்குமதியின் சராசரி வளர்ச்சி வீதம் 11 சதவீதமாகவும் இருப்பதால் வர்த்தகப் பற்றாக்குறையுடன் காணப்படுகிறது. 2001-02 முதல், இந்தியாவின் இறக்குமதி மதிப்பு ஏற்றுமதி மதிப்பை விடப் பெரும்பாலும் அதிகமாகவே உள்ளது.
அமெரிக்காவும் ஐரோப்பிய ஒன்றிய நாடுகளின் அரசுகளும் தங்களது ஏற்றுமதியை ஊக்குவிப்பதற்காக வழங்கும் ஏற்றுமதி மானியங்கள் வளரும் நாடுகளின் ஏற்றுமதியையும் போட்டியிடும் திறனையும் பாதிக்கின்றன.
ஏற்றுமதி மானியத்தில் தயாரிக்கப்படும் வேளாண் சார் பொருட்களும் ஆடைகளும் மூன்றாம் உலக நாடுகளில் குவிக்கப்படுவதால் அவற்றுடன் போட்டியிட முடியாமல் வளரும் நாடுகளின் உள்நாட்டுத் தொழில்கள் பாதிக்கப்படுகின்றன.
2015இல் உலக வர்த்தக அமைப்பின் உறுப்பினர்கள் ஏற்றுமதி மானியங்களை ரத்து செய்ய ஒப்புக் கொண்ட போதும் அதை நாடுகள் கடைப்பிடிப்பதில்லை. மீன்பிடித் தொழிலுக்கான மானியங்களைக் குறைக்க வளர்ந்த நாடுகள் மறுக்கின்றன.
கேப்ரியல் ஃபெல்பர்மேயர் என்ற ஆஸ்திரியப் பொருளியலாளர் தமது ஆய்வறிக்கையில், 2009-2017 காலகட்டத்தில் வர்த்தகப் பாதுகாப்பு நடவடிக்கைகளுடன் ஒப்பிடும் போது, காப்பு வரியல்லாத வர்த்தகத் தடைகளின் பயன்பாடு படிப்படியாக அதிகரித்திருப்பதாகவும், 2010இல் 54 சதவீதமாக இருந்த காப்பு வரியல்லாத வர்த்தகத் தடைகளின் பயன்பாடு 2016 இல் 61 சதவீதமாக அதிகரித்திருப்பதாகவும், உயர் வருவாய் கொண்ட நாடுகள் அதிக அளவில் காப்பு வரியல்லாத வர்த்தகத் தடைகளைப் பயன்படுத்துவதாகவும் கூறியுள்ளார். இதில் உலக அளவில் 796 காப்பு வரியல்லாத வர்த்தகத் தடைகளை விதித்து அமெரிக்க ஐக்கிய நாடுகளே முதல் இடத்தில் உள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
உலக வர்த்தக அமைப்பில் இணைந்ததால் தேச அரசுகளின் இறையாண்மை பறிக்கப்பட்டுள்ளது. தேச அரசுகளின் உணவுக் கொள்கை, விவசாயக் கொள்கை, பொருளாதாரக் கொள்கைகள் என அனைத்துமே அந்நாட்டு மக்களின் அடிப்படைத் தேவைகளைப் பூர்த்தி செய்வதற்காக அல்லாமல் பன்னாட்டுத் தனியார் நிறுவனங்களின் லாப நோக்கங்களுக்காகவே இயற்றப்படுகின்றன.
அரசு சமூகத் துறைகளுக்கும் விவசாயத் துறைக்கும் எவ்வளவு நிதி ஒதுக்க வேண்டும் என்பதும் வரம்பிடப்பட்டுள்ளது. வேளாண் துறையின் மொத்தப் பொருளாக்க மதிப்பில் (‘ஜிடிபி’) 10 சதவீதம் மட்டுமே நிதிச் சலுகைகள் வழங்க வேண்டும் என்று நிர்பந்திக்கப்பட்டுள்ளது.
தாராளமயக் கொள்கைகளால் வளரும் நாடுகளில் அரசானது விவசாயத்திற்கு நிதி ஒதுக்கீடுகளைக் கணிசமாகக் குறைத்துள்ளதால் வேளாண் துறையை மேம்படுத்துவதற்கான முதலீடுகள் செய்யப்படாமல் விவசாய சேவைகளும், அதற்கான உள்கட்டுமான வசதிகளும் விரிவுபடுத்தப்படாமல் உள்ளன.
அரசு அளித்து வந்த குறைந்தபட்ச விலை ஆதரவு, விலைக் கட்டுப்பாடு ஆகியவை நீக்கப்பட்டுத் தனியார் நிறுவனங்கள் வளர்வதற்கான சூழலே ஏற்படுத்தப்படுவதால் வளரும் நாடுகளின் உணவுப் பாதுகாப்பும், உணவுத் தன்னிறைவும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன.
வளரும் நாடுகளுக்கான வர்த்தக வாய்ப்புகளை மேம்படுத்தும் நோக்கத்துடன் 2001ஆம் ஆண்டில் 'தோஹா சுற்று' தொடங்கப்பட்டது. ஆனால் 2008ஆம் ஆண்டிலிருந்து அதற்கான பேச்சுவார்த்தையில் தடங்கல் ஏற்பட்டு எந்த முன்னேற்றமும் ஏற்படாமல் நிறுத்தப்பட்டுள்ளது.
உலக வர்த்தக அமைப்பு பெரிய பன்னாட்டு நிறுவனங்களுக்கு ஆதரவளிப்பதாகவும், சிறிய நிறுவனங்களின் வாய்ப்புகளைப் பறிப்பதாகவும் உள்ளது. உலக வர்த்தக நிறுவனம் எப்படி வளர்ந்த நாடுகளுக்கும் பன்னாட்டு நிறுவனங்களுக்கும் சாதகமாக நடந்து கொள்கின்றன என்பதற்கு வாழைப்பழப் போர்கள் ஒரு சிறந்த உதாரணமாக அறியப்படுகின்றன.
1993இல் ஐரோப்பிய ஒன்றியத்திற்கு லத்தீன் அமெரிக்க நாடுகளின் சிறு உற்பத்தியாளர்களிடமிருந்து வாழைப் பழங்கள் ஏற்றுமதி செய்யப்பட்டன. இதை எதிர்த்து அமெரிக்க, லத்தீன் அமெரிக்கப் பன்னாட்டு நிறுவனங்கள் உலக வர்த்தக அமைப்பில் வழக்கு தொடர்ந்தன. இறுதித் தீர்ப்பு பன்னாட்டு நிறுவனங்களுக்கே சாதகமாக அமைந்தது.
பன்னாட்டு நிறுவனங்கள் வளரும், ஏழை நாடுகளின் விவசாயிகளிடம் தேயிலை, காபி, மூலப்பொருட்கள் ஆகியவற்றை அடிமட்ட விலையில் வாங்கி அதை அதிக விலையில் மீண்டும் அதே நாடுகளுக்கே ஏற்றுமதி செய்கின்றன. கட்டுப்படுத்தப்படாத வேளாண் இறக்குமதியால் உணவு உற்பத்தியில் தன்னிறைவு பெற்றிருந்த ஆசிய, ஆப்பிரிக்க நாடுகள் உணவுத் தன்னிறைவையும் உணவு பாதுகாப்பையும் இழந்துள்ளன.
இறக்குமதியினால் உள்நாட்டு விவசாயப் பொருட்களின் விலை வீழ்ச்சியடைவதால் வருவாய்க் குறைவால் விவசாயிகளும் விவசாயக் கூலிகளும் பாதிக்கப்பட்டுள்ளனர். பெருமளவிலான மக்கள் பட்டினி நிலைக்குத் தள்ளப்படுவதுடன், உணவுப் பொருட்களுக்கு இறக்குமதியையே நம்ப வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.
உற்பத்தி செய்யப்பட்ட பொருட்கள் அருகிலுள்ள சந்தையிலேயே விற்கப்படுமானால் சரக்குகள் மேற்கொள்ளும் தேவையில்லாத பயணங்கள், கூடுதல் செலவுகளும் குறைக்கப்படுவதுடன் சுற்றுச்சூழல் மாசுபாட்டையும் கட்டுப்படுத்த முடியும்.
உலக வர்த்தக அமைப்பு சர்வதேச வர்த்தகத்தை அதிகப்படுத்துவதை மட்டுமே நோக்கமாகக் கொண்டுள்ளதே தவிர வர்த்தகத்தில் சூழல் மாசுபாட்டை ஒழுங்குபடுத்தும் எந்த நெறிமுறைகளையும் ஏற்படுத்தவில்லை. இதனால் சூழலியல் பிரச்சனைகளை மேலும் அதிகமாக்கவே காரணமாக உள்ளது.
வர்த்தகம் தொடர்பான முதலீட்டு நெறிகள் (TRIMS):
1999இல் நடைமுறைப்படுத்தப்பட்ட இந்த நெறிமுறையானது பன்னாட்டு நிறுவனங்களுக்குச் சார்பாக உள்நாட்டு நிறுவனங்களுக்கு அளிக்கப்படும் முன்னுரிமைகளைக் கட்டுப்படுத்துகிறது. இதன்படி அரசு பன்னாட்டு நிறுவனங்களை உள்நாட்டு நிறுவனங்கள் போலவே கருத வேண்டும், அவ்வாறல்லாமல் உள்நாட்டு நிறுவனங்களுக்கு முன்னுரிமை அளிக்குமானால் அது நெறிமீறலாகக் கருதப்படும். இவ்வாறு இந்த நெறிமுறை சர்வதேச நிறுவனங்கள் வெளிநாட்டுச் சந்தைகளில் எளிதாகச் செயல்பட உதவுகிறது. பன்னாட்டு நிறுவனங்கள், உள்நாட்டுப் பொருட்களை கொள்முதல் செய்வதற்கான குறைந்தபட்ச நிபந்தனை, அவற்றின் இறக்குமதிகளுக்கான கட்டுப்பாடுகள், தொழில்நுட்பப் பகிர்வு ஆகியவை தடை செய்யப்பட்டுள்ளன. இது வளரும் நாடுகளின் இறையாண்மையையும் வளர்ச்சியையும் கடுமையாக பாதிக்கிறது. இந்தியா, பாகிஸ்தான், உகாண்டா போன்ற பல்வேறு வளரும் நாடுகள் சியாட்டில் பேச்சுவார்த்தையில் வளரும் நாடுகளின் பொருளாதார வளர்ச்சியைப் பாதிக்காதவாறு இதை மாற்றியமைக்க வேண்டும் எனக் கோரிக்கை விடுத்தன.
வர்த்தகம் சார்ந்த அறிவுசார் சொத்துரிமைகள் (TRIPS):
பெரும்பாலான மூன்றாம் உலக நாடுகள் கடந்த காலத்தில் விவசாயம், மருந்துகள், பிற அத்தியாவசியப் பொருட்கள் மற்றும் செயல்முறைகளுக்குத் தங்கள் தேசியக் காப்புரிமைச் சட்டங்களிலிருந்து விலக்கு அளித்திருந்தன. ஆனால் டிரிப்ஸ் நெறிமுறை இந்நாடுகளை மேற்கத்திய நாடுகளில் கடைப்பிடிக்கப்படும் அறிவுசார் சொத்துரிமைகளுக்குப் பாதுகாப்பு அளிப்பதற்கான சட்டங்களை இயற்ற நிர்பந்திக்கிறது.
இது வளரும் நாடுகளின் தொழில்நுட்ப வளர்ச்சியைக் கடுமையாகப் பாதித்துள்ளது. இதனால் உலகின் பெரும்பாலான காப்புரிமைகளை வைத்திருக்கும் பன்னாட்டு நிறுவனங்களுக்குச் செலுத்த வேண்டிய உரிமக் கட்டணங்கள் அதிகரித்துள்ளன.
அறிவுச் சொத்துரிமையால் போட்டி கட்டுப்படுத்தப்படுவதால், முற்றுரிமை பெற்ற பன்னாட்டு நிறுவனங்கள் தங்கள் தயாரிப்புகளின் விலையை வரம்பின்றி உயர்த்தவும் இந்த நெறிமுறை துணை புரிகிறது. மருந்து நிறுவனங்களின் அறிவுசார் சொத்துரிமைகள் வளரும் ஏழை நாடுகள் குறைந்த விலையில் அத்தியாவசிய மருந்துப் பொருட்கள் பெறுவதைத் தடுக்கிறது.
கோவிட்-19 தடுப்பு மருந்து உலக மக்கள் அனைவரும் இலவசமாக பெறுவதற்காக இந்தியா, ஆப்பிரிக்கா போன்ற வளரும் நாடுகள் கொண்டுவந்த முன்னெடுப்பும் அறிவுசார் சொத்துரிமையின் மூலம் பன்னாட்டு நிறுவனங்கள் லாபம் பெறுவதற்காக தடுக்கப்பட்டுள்ளது.
டிரிப்ஸ் ஒப்பந்தம் நுண்ணுயிரிகள் மற்றும் மரபணு மாற்றப் பொருட்கள் போன்ற உயிர் வடிவங்களுக்கும் காப்புரிமையை நீட்டித்துள்ளது. இதுவே பன்னாட்டு உயிரித் தொழில்நுட்ப நிறுவனங்கள் நுண்ணுயிர்கள், தாவரங்கள், விதைகள் அனைத்தையுமே வணிகமயமாக்குவதற்கு காரணமாக உள்ளது.
பன்னாட்டு நிறுவனங்களின் மரபணு மாற்றப்பட்ட விதைகளும், தாவரங்களும் விவசாயத் துறையையும், உணவுப் பாதுகாப்பையும் சீரழித்துப் பல உடல்நலக் கோளாறுகளையும் ஏற்படுத்தியுள்ளது. மரபணு மாற்ற விதைகள் விவசாயச் செலவுகளை அதிகரிக்கின்றன, இவற்றால் நோய்கள் மற்றும் பூச்சிகளின் தாக்குதல் அதிகரிப்பதால், உரம், பூச்சிக் கொல்லிகளின் பயன்பாட்டையும் அதிகரிக்கிறது. ஒற்றைப் பயிர்முறையை ஊக்குவித்து சூழலின் பன்மைத்துவத்தையும், மரபணுத் தூய்மையையும் அச்சுறுத்துகிறது.
வளரும் நாடுகளில் உள்ள பாரம்பரிய இயற்கைச் செல்வங்களுக்கு முற்றுரிமை பெறும் தொடர் முயற்சியில் பன்னாட்டு நிறுவனங்கள் ஈடுபட்டு வருகின்றன. 1995இல், அமெரிக்கா மிஸ்ஸிசிப்பி பல்கலைக்கழக மருத்துவ மையத்திற்கு மஞ்சள் காப்புரிமையை வழங்கியது. பிறகு இந்திய அறிவியல் மற்றும் தொழில்துறை ஆராய்ச்சி மையம் (சி.எஸ்.ஐ.ஆர்.) காப்புரிமையை மீட்டெடுத்தது. அமெரிக்காவைச் சேர்ந்த டபியுள்யூ. ஆர். கிரேஸ் என்ற நிறுவனம் வேம்பின் மீது காப்புரிமை பெற்றது.
அதை மீட்க, டெல்லியில் வந்தனா சிவா ஆராய்ச்சி நிறுவனம் 1995இல் வழக்கு தொடுத்தது. இவ்வழக்கு 2000இல் விசாரணைக்கு வந்த போது இந்தியாவிலிருந்து நம்மாழ்வார், வந்தனா சிவா உட்பட ஐந்து பேர் குழு ஜெனிவா சென்று அதை மீட்டு வந்தது. 1997இல் அமெரிக்காவின் ரைஸ்டெக் நிறுவனம் பாஸ்மதி அரிசிக்குக் காப்புரிமை பெற்றது.
அதை எதிர்த்து வந்தனா சிவா மேற்கொண்ட தொடர் போராட்டங்களால் பிறகு மீட்கப்பட்டது. கென்யாவின் பாரம்பரியத் துணியான கிகொயிக்கும், கியொன்டொ என்ற கைவேலைபாட்டுக் கூடைக்கும், நியடிடி, மரிம்பா ஆகிய இசைக் கருவிகளுக்கும், ஐரோப்பியத் தனியார் நிறுவனங்கள் காப்புரிமை பெற்றுள்ளன.
அறிவுச் சொத்துரிமை ஒப்பந்தம் வாய் வழி அறிவை அங்கீகரிக்காததால் பூர்வகுடி சமூகங்களின் பகிரப்பட்ட அறிவுக்குப் பன்னாட்டு நிறுவனங்கள் காப்புரிமை பெற அனுமதிக்கிறது. பன்னாட்டு நிறுவனங்கள் பல வளரும் நாடுகளின் பாரம்பரியச் சின்னங்களும், தொழில் நுட்ப அறிவையும், இயற்கைச் செல்வங்களையும், தங்கள் அறிவுசார் சொத்துரிமைகளாக்கியுள்ளன.
தங்களது பாரம்பரியத் தொழில்களை, பொருட்களைப் பயன்படுத்த வேண்டுமானால் இப்படிப்பட்ட தனியார் நிறுவனங்களுக்கு மக்கள் உரிமக்கட்டணம் கொடுக்க வேண்டிய நிலை ஏற்படுத்தப்பட்டுள்ளது. ஈக்வடாரில் உள்ள ஷுவார் பழங்குடி மக்களிடமிருந்து 578 மூலிகைத் தாவரங்களைப் பற்றிய பாரம்பரிய அறிவு திருடப்பட்டு சர்வதேச வளர்ச்சிக்கான அமெரிக்க ஐக்கிய முகமை (USAID) மூலமாக தேசியச் சுகாதார நிறுவனத்திற்கும் (NIH) அங்கிருந்து தேசியப் புற்றுநோய் நிறுவனத்திற்கும் (என்சிஐ) அனுப்பப்பட்டுள்ளது. பொதுமக்களுக்கு அனுமதி மறுக்கப்பட்ட மூடிய பதிவேட்டில் இத்தகவல்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன, பொதுவாக இத்தகவல்களைப் பெரிய மருந்து நிறுவனங்களே பெற முடியும்.
தண்ணீர் உள்ளிட்ட அனைத்து இயற்கை வளங்களையும் தனியுடைமையாக்கி, அதிக விலைக்கு விற்பதில் லாபம் பெறுகின்றன பன்னாட்டு நிறுவனங்கள். இயற்கை வளம் கொண்ட நாடுகளை வறட்சி ஏற்படும் நிலைக்குத் தள்ளி அந்த வறட்சியிலும் லாபம் பெறுகின்றன இப்பன்னாட்டு நிறுவனங்கள்.
சேவைத் துறை வர்த்தகத்திற்கான பொது ஒப்பந்தம் (GATS):
சேவைத் துறைகளின் தடையற்ற வர்த்தகத்தை ஊக்குவிக்க ஏற்படுத்தப்பட்ட இந்த ஒப்பந்தமே கல்வி, சுகாதாரம், சுற்றுச்சூழல், நிதி, தொலைத்தொடர்பு, பொறியியல், கட்டுமானம், கலாசாரம், விளையாட்டு, பொழுதுபோக்கு, போக்குவரத்து, சுற்றுலா, பயணம், வணிகம், விநியோகம் என அனைத்து சேவைத் துறைகளையையும் வணிகமயமாக்குதை ஊக்குவிக்கிறது. இது தேசியச் சட்டங்களையும், நீதித்துறையின் அதிகாரத்தையும் நீர்த்துப் போகச் செய்து அனைத்தையும் வர்த்தகமாக்குவதற்குக் காரணமாகிறது.
ஐக்கிய நாடுகளின் வர்த்தகம் மற்றும் வளர்ச்சிக்கான அமைப்பு சார்பில் வெளியிடப்பட்ட ஆய்வறிக்கை இந்தியாவில் ஏற்றுமதி, இறக்குமதி இரண்டுமே திறனுள்ள(Skilled) மற்றும் திறன் குறைந்த (unskilled) ஊழியர்களுக்கிடையிலான ஊதிய ஏற்றத்தாழ்வுகளை அதிகரிக்கின்றன.
விவசாயப் பொருட்களின் இறக்குமதி விவசாயத் தொழிலாளர்களின் கூலி விகிதங்களைக் குறைக்கிறது என்றும் 2003-04 முதல் 2006-07 வரையிலான காலத்தில் ஏற்றுமதி அதிகரிப்பால் பெறப்பட்ட மொத்த வருவாயில் 1.6% மட்டுமே வறுமைக் கோட்டுக்குக் கீழே உள்ள ஏழைகளை அடைந்தது என்றும் 70 சதவீதத்துக்கு மேல் அதிக வருமானம் பெற்றவர்களையே அடைந்தது என்றும் கூறுகிறது.
வரலாற்றுப் படிப்பினை:
கொரியப் பொருளியலாளர் ஹோ ஜூன் சாங்கின் “ஏணியை எட்டி உதை” என்ற நூலில் 'பணக்கார நாடுகள் உண்மையில் எவ்வாறு பணக்காரர்களாக மாறின?' என்ற கேள்வியை எழுப்புகிறார். பணக்கார நாடுகள் வளரும் நாடுகளுக்கு இன்று பரிந்துரைக்கும் கொள்கைகளையும், நிறுவன அமைப்புகளையும் அன்று கடைப்பிடித்திருந்தால் அவர்கள் இப்பொழுதுள்ள நிலைக்கு ஒருபோதும் வந்திருக்க முடியாது எனக் கூறுகிறார்.
இன்று அவர்கள் எதையெல்லாம் மோசமான வர்த்தகம், மோசமான தொழிற்கொள்கை என்று விமர்சிக்கிறார்களோ அதைத்தான் அன்று --- 19ஆம் நூற்றாண்டின் இறுதிப் பகுதியிலும், 20ஆம் நூற்றாண்டின் ஆரம்பப் பகுதியிலும் --- தங்கள் வளர்ச்சிக்காகப் பயன்படுத்திக் கொண்டார்கள். வளர்ந்த நாடுகள் இளந்தொழில் பாதுகாப்புவாதக் கொள்கையையே (infant industry Protection) கடைப்பிடித்தார்கள்.
இவ்வாறு நல்ல கொள்கைகள், நல்ல நிறுவனங்கள் என்ற போர்வையில் அவர்கள் அளிக்கும் பரிந்துரைகளானவை வளரும் நாடுகளின் வளர்ச்சிக்கு முட்டுக்கட்டை போட்டு அவற்றின் வளர்ச்சியை மேலும் கடினமாக்கியுள்ளன என்றும் குறிப்பிடுகிறார்.
வளரும் நாடுகளில் செயல்படுத்தக் கோரப்படும் சில நிறுவனங்கள் அவற்றின் வளர்ச்சிநிலைக்குப் பொருத்தமற்றவையாகவும், தீங்கு விளைவிப்பவையாகவும், அதிகச் செலவை ஏற்படுத்தக் கூடியவையாகவும் உள்ளன என்றும் குறிப்பிட்டுள்ளார்.
பத்தொன்பதாம் நூற்றாண்டின் ஜெர்மன் பொருளாதார நிபுணர் ஃபிரட்ரிக் லிஸ்ட் இளந்தொழில் பாதுகாப்புவாதத்தின் தந்தையாக அறியப்படுகிறார். அவர் பிரிட்டன்தான் உண்மையில் பாதுகாப்புவாதக் கலையில் தேர்ச்சியடைந்த முதல் நாடு என்று குறிப்பிட்டுள்ளார்.
பெரும்பாலான வளர்ந்த நாடுகள் பாதுகாப்புவாதத்தின் மூலமே செழிப்படைந்தன என்றும், இதை நம்பாதவர்கள் முதலில் பிரிட்டனின் தொழில் துறை வரலாற்றைப் படிக்க வேண்டும் என்றும் குறிப்பிடுகிறார். பிரிட்டனைத் தொடர்ந்து அமெரிக்காவும் மும்முரமாக இளந்தொழில் பாதுகாப்புவாதத்தைப் பயன்படுத்தித் தன் பொருளாதார வளர்ச்சியை மேம்படுத்திக் கொண்டது.
இரண்டாம் உலகப் போருக்குப் பின் தனக்கு இணையான போட்டியாளர் இல்லை என்பதை உறுதி செய்த பின்னரே அமெரிக்காவும் பிரிட்டனைப் போல் தடையற்ற வர்த்தகத்தை உயர்த்திப் பிடித்தது. தங்களது உயர்வுக்கு மட்டும் ஏணிப் படிகளாக அதனைப் பயன்படுத்திக் கொண்டு பின் மற்றவர்களுக்குக் கிடைக்காத வண்ணம் ஏணியை எட்டி உதைத்து விட்டன என்ற அவரது 'kicking away the ladder' விமர்சனத்தை வரலாற்று நிகழ்வுகள் உறுதிப்படுத்துவதாகவும் சாங்க் குறிப்பிடுகிறார்.
வெளிநாட்டு தொழில்நுட்பங்களை கையகப்படுத்துதல் அன்று சட்டப்பூர்வமாகவும், சட்டவிரோதமாகவும் செய்யப்பட்டது என்று சாங்க் குறிப்பிடுகிறார். சட்டப்பூர்வமாக தொழில் நுட்பப் பயிற்சிபெறுவதற்கான சுற்றுப்பயணங்களை ஆதரித்து நிதியளிக்கப்பட்டன.
சட்டவிரோத நடவடிக்கைகளின் மூலம் உளவுவேலைகளாலும், தடைசெய்யப்பட்ட இயந்திரங்களை கடத்தியும் வெளிநாட்டு காப்புரிமைகளை அங்கீகரித்த மறுப்பதன் மூலமும் வெளிநாட்டுத் தொழில் நுட்பம் கைவரப்பட்டது என்றும் உள்நாட்டுத் தொழில்நுட்பத்தை மேம்படுத்த அறிவியல் ஆய்வுகளுக்கு நிதி ஆதரவு அளிக்கப்பட்டதாகவும் குறிப்பிடுகிறார்.
பிரிட்டன்:
பிரிட்டன் தொழில் நுட்பங்களை பிறருக்கு கிடைக்காதவாறு தடை செய்ய திறனுள்ள தொழிலாளர்களின் வெளியேற்றத்தையும், தொழில் நுட்ப உபகரணங்களின் ஏற்றுமதியையும் கட்டுப்படுத்தியது. அதே சமயம் வளர்ச்சி குன்றிய நாடுகள் சந்தையை முற்றிலும் திறக்க வற்புறுத்தியது.15ஆம் நூற்றாண்டிலிருந்து இறக்குமதி பதிலீட்டுக் கொள்கையையும் கடைபிடித்து, கம்பளித் தொழில் வளர்ச்சியை பாதுகாத்தது.18ஆம் நூற்றாண்டில் மேற்கொள்ளப்பட்ட சீர்திருத்தங்களின் மூலம் உற்பத்தித்துறையில் வளர்ச்சியை ஏற்படுத்தியது.
மூலப்பொருட்கள்,இடுபொருட்களுக்கான இறக்குமதி வரியை கிட்டத்தட்ட முற்றிலுமாக நீக்கியதுடன், உற்பத்திப் பொருட்களின் ஏற்றுமதி ஊக்குவிக்கப்பட்டு, ஏற்றுமதி சார்ந்த இறக்குமதி வரிகள் திரும்பப்பெறப்பட்டன உற்பத்திப் பொருட்களை இறக்குமதி செய்வதற்கான காப்புவரி உயர்த்தப்பட்டது. ஆனால் உற்பத்திப் பொருட்களுக்கான ஏற்றுமதி வரிகள் முற்றிலுமாக குறைக்கப்பட்டு ஏற்றுமதிக்கு மானியங்களையும் வழங்கியுள்ளது.
பிற காலனி நாடுகளிலிருந்து வரும் சிறந்த உற்பத்திப்பொருட்கள் தங்கள் நாட்டின் தொழில்வளர்ச்சியை பாதிக்கும் என்று அவற்றின் இறக்குமதியை பிரிட்டன் தடை செய்தது, இதனால் அயர்லாந்தின் கம்பளித்தொழிலை நசிவுற்றது.1700ல் இந்திய பருத்தித்துணிகள் இறக்குமதிக்கு தடை விதித்து இந்தியாவின் நெசவுத் தொழிலை அழித்தது. பிரிட்டனிலிருந்து ஏற்றுமதி செய்யப்பட்ட பொருட்கள் இந்தியச் சந்தைகளில் குவிக்கப்பட்டன.
பிரிட்டனின் பொருளாதாரக் கொள்கைகள் அரசால் தீர்மானிக்கப்பட்டு அரசின் ஒழுங்குமுறையின் மூலம் நடைமுறைபடுத்தப்பட்டனவே தவிர சந்தையின் மாயக் கரங்களால் ஒழுங்கமைக்கப்படவில்லை. பிரிட்டனின் தடையற்ற வர்த்தக ஆட்சி நீண்ட காலம் நீடிக்கவில்லை. 1870களில் உற்பத்தித் துறையில் தன் பொருளாதார மேலாண்மையை இழந்த பின் பிரிட்டன் இருபதாம் நூற்றாண்டின் ஆரம்பத்தில் 1932இல் காப்பு வரிகளை அதிக அளவில் விதித்துள்ளது.
அமெரிக்கா:
அமெரிக்காவை பால் பைரோச் நவீனப் பாதுகாப்புவாதத்தின் 'தாய்நாடாகவும், கோட்டையாகவும்’ அழைத்துள்ளார். அமெரிக்காவின் தொழில்துறைகளை அதிகம் கொண்ட வடபகுதிகள் தங்கள் வளர்ச்சியைப் பாதுகாக்க காப்புவரிகளை ஆதரித்தன.
ஆனால் விவசாயம் சார்ந்த தென் பகுதிகள் காப்புவரிகளை எதிர்த்தன, இந்தப் பொருளாதார முரண்பாடுகளும், அடிமைப் பிரச்சனைகளுமே உள்நாட்டுப் போர் வெடிக்கக் காரணமாயின. உள்நாட்டுப் போரை வெல்வதற்கான மூலோபாய நடவடிக்கையாகவே அடிமை விடுதலை அமைந்ததே ஒழிய தார்மீக அடிப்படையில் அல்ல என்று சாங்க் குறிப்பிடுகிறார்.
1929 பெரும் மந்தத்தைத் தொடர்ந்து 1930இல் அமெரிக்காவில் ஸ்மூட்-ஹவ்லி காப்புவரிச் சட்டம் மூலம் தொழில்துறைக்குப் பாதுகாப்பு அளிக்கப்பட்டது. இரண்டாம் உலகப் போருக்குப் பின் அமெரிக்கா பொருளாதார மேலாதிக்கம் அடைந்த பிறகுதான் தாராளமயக் கொள்கைகளைப் பின்பற்றித் தடையற்ற வர்த்தகத்தை ஆதரித்ததே ஒழிய அதற்கு முன்னர் அல்ல.
பிரிட்டன் காப்பு வரிகளை நீக்கித் தடையற்ற வர்த்தகத்தை 1860 முதல் 1932 வரை கடைப்பிடித்தது போல் அமெரிக்கா ஒருபோதும் கடைபிடிக்கவில்லை. மறைமுகமான பாதுகாப்புவாத நடவடிக்கைகளைத் தீவிரமாகக் கடைபிடிக்கிறது என்றும் அவர் குறிப்பிடுகிறார்.
அமெரிக்கா உட்படப் பத்து நாடுகளின் தரவுகளில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வில் 1875-1914 பொற்காலத்தில் காப்புவரி விகிதங்கள் பொருளாதார வளர்ச்சியுடன் சாதகமான தொடர்பு கொண்டிருந்ததாக ஓ'ரூர்கே கண்டறிந்துள்ளார்.
ஆப்ரகாம் லிங்கனின் பொருளாதார ஆலோசகரும் மார்க்சு, எங்கெல்சால் மதிக்கப்பட்ட அமெரிக்கப் பொருளியலாளருமான ஹென்றி கேரி அமெரிக்காவின் வளர்ச்சிக்கான முதலாளித்துவ அமைப்பானது அரசின் தலையீடு, காப்புவரிப் பாதுகாப்பின் மூலம் உற்பத்தி மற்றும் தேசியத் தன்னிறைவை ஊக்குவிப்பதை அடிப்படையாகக் கொண்டிருப்பதாகவே குறிப்பிட்டுள்ளார்.
அமெரிக்கா, பிரிட்டன் ஆகிய நாடுகள் மட்டுமல்லாது ஃபிரான்ஸ், ஜப்பான், சுவிட்சர்லாந்து, ஸ்வீடன், பெல்ஜியம் ஆகிய அனைத்து வளர்ந்த நாடுகளுமே இத்தகைய பாதுகாப்புவாதக் கொள்கைகளைப் பயன்படுத்தியே வளர்ச்சியடைந்துள்ளன என்பதையும் குறிப்பிட வேண்டும்.
ஒரு தொழில்துறை வளர்ச்சியடைவதற்கு முன்பே சர்வதேசச் சந்தையில் போட்டியிட வைப்பது ஒரு குழந்தையைப் போர்க் களத்திற்கு அனுப்புவதற்கு ஒப்பானதே. வளரும் நாடுகளின் அரசுகள் இளந்தொழில் பாதுகாப்பு கொள்கையை கடைப்பிடித்துத் தங்கள் தொழில் துறைகளை வளர்த்தெடுப்பதற்குப் பாதுகாப்பளிக்க வேண்டும். இறக்குமதி பதிலீட்டுத் தொழில்மயமாக்க (ISI) முறையை மேம்படுத்த வேண்டும்.
18 ஆம் நூற்றாண்டிலும், 19 ஆம் நூற்றாண்டின் ஆரம்பத்திலும் தங்கள் பொருளாதார வளர்ச்சியை ஆரம்பித்த பிரிட்டன், அமெரிக்கா, ஜெர்மனி போன்ற நாடுகளை நவீன தாராளமயக் கொள்கைகளையும், அமைப்பு மாற்றத் திட்டங்களான (SAP) சிக்கன நடவடிக்கைகளையும் நடைமுறைபடுத்துமாறு சர்வதேச நிதியமோ, உலக வங்கியோ நிர்பந்திக்கவில்லை.
ஏனென்றால் சர்வதேச நிதியம், உலக வங்கி, வர்த்தக அமைப்பு ஆகியவை அப்போது உருவாக்கப்படவே இல்லை. அந்தக் காலகட்டத்தில் அறிவுசார் சொத்துரிமை (TRIPS), வர்த்தகம் சார்ந்த முதலீட்டு நெறிகள் (TRIMS), சேவை ஒப்பந்தங்கள் (GATS), தடையற்ற வர்த்தகம் ஆகியவற்றின் மூலம் கட்டுப்படுத்தி உலகவர்த்தக அமைப்பு இந்நாடுகளின் வளர்ச்சியை தடுக்கவில்லை. இந்நாடுகள் அன்று பாதுகாப்புவாதத்தின் மூலம் தங்கள் தொழில்களைப் பாதுகாத்துப் பொருளாதார வளர்ச்சியடைந்துள்ளன.
ஆனால் அதே வாய்ப்புகளை வளரும் நாடுகளுக்கு அளிக்காமல் தடை செய்கின்றன. இந்த வரலாறு மறக்கப்பட்டும் மறுக்கப்பட்டும் உள்ளது. வளர்ந்த நாடுகளுக்கும், பன்னாட்டு நிறுவனங்களுக்குமே சாதகமாக செயல்படும் நவீன தாராளமய அமைப்புகளான உலக வர்த்தக அமைப்பையும், சர்வதேச நாணய நிதியத்தையும் புறக்கணித்து வரலாற்றுப் படிப்பினையுடன் ஒளித்துவைக்கப்பட்ட ஏணிப் படிகளைப் பற்றி உயர வேண்டியதே வளரும் நாடுகளின் முன்னுள்ள வரலாற்றுப் பணி!.
(தொடரும்)
- சமந்தா