ஜப்பானில் சுமார் அறுபதாயிரத்திற்கும் மேற்பட்ட இந்தியர்கள் வசிக்கின்றனர். அவர்களுள் சுமார் ஆறாயிரம் பேர் தமிழர்கள். இது ஒரு துல்லியமான எண்ணிக்கை என்று சொல்ல முடியாவிட்டாலும் அங்குள்ள தமிழர்கள் சிலரின் பொது மதீப்பீடாக உள்ளது.

கடந்த இருபதாண்டுகளுக்கும் முன்னாலிருந்தே புனேவிலுள்ள சாவித்திரிபாய் புலே பல்கலைக்கழகத்தில் நாம் பி.ஏ தமிழ், பி.ஏ ஆங்கிலம் படிப்பதுபோல் ஜப்பானிய மொழிப் பட்ட வகுப்புகள் செயல்பட்டு வருகின்றன. எம்.ஏ, எம்.பில், பி.எச்டி வரை ஜப்பானிய மொழிப் பாடங்கள் அங்கு கற்றுத் தரப்படுகின்றன. ஆங்கிலமும் ஜப்பானிய மொழியும் தெரிந்திருக்கும் அவர்களுக்கு ஜப்பான் நாட்டில் அதிக வேலை வாய்ப்புகள் உள்ளன. இப்பல்கலைக் கழகம் மட்டுமல்லாது மராத்திய மாநிலத்தில் ஜப்பான் மொழியைக் கற்றுத் தருகிற சில தனியார் பயிற்சி நிறுவனங்களும் உள்ளன.

இதன் காரணமாகவே ஜப்பானில் இந்தியர்களுள் மராத்திய மாநிலத்தவர் அதிகம் பேர் உள்ளனர். அவர்களெல்லாம் ஜப்பானில் மொழிபெயர்ப்புப் பணிகளில் ஈடுபடுத்தப்படுகின்றனர். தமிழகத்திலிருந்து செல்வோரில் பெரும்பாலோர் பொறியாளர்கள். எண்ணிக்கையில் மராத்தியர்களுக்கு அடுத்த இடத்தில் தமிழர்கள் கணிசமாக உள்ளனர்.stalin gunasekaran in japan

(பாராட்டு மடல்கள் பெற்ற அறிவியலாளர்களுடன் கட்டுரையாளர்.)

ஜப்பானின் தலைநகரான டோக்கியோ மாநகரில் வசித்து வரும் தமிழர்கள் சிலர் ஒன்றிணைந்து மக்கள் சிந்தனைப் பேரவையின் ஜப்பான் கிளையை மூன்றாண்டுகளுக்கு முன்பு தோற்றுவித்தனர். மக்கள் சிந்தனைப் பேரவை தொடங்கப்பட்டு இருபத்தேழு ஆண்டுகள் நிறைவு பெற்றுவிட்டன. பேரவையின் தொடர்ச்சியான செயல்பாடுகள் ஏற்படுத்திய தாக்கத்தின் விளைவாகவே அங்குள்ளவர்கள் இதன் கிளையைத் தொடங்கியுள்ளனர்.

பேரவை பிற மாவட்டங்களிலோ நாடுகளிலோ கிளையை ஏற்படுத்துகிற திட்டத்தில் இல்லை. தொடக்கத்திலிருந்தே அதுபோன்ற முயற்சிகளில் பேரவையினர் ஈடுபட்டதில்லை. அவ்வெண்ணமும் இருந்ததில்லை.

பேரவையின் வீரியம்மிக்க - தொடர்ச்சியான சமூக நல மேம்பாட்டிற்கான செயல்பாடுகளை உற்று கவனித்துக் கொண்டிருந்த பிற மாவட்டங்களைச் சேர்ந்த சிலர் ஆங்காங்கு தன்னார்வத்துடன் முயற்சியெடுத்து பேரவையின் கிளையை சில மாவட்டங்களில் பேரவைத் தலைமையுடன் கலந்து பேசி ஏற்படுத்தியுள்ளனர்.

அமெரிக்காவுக்கு டிசம்பர் மாதம் விடுமுறைக் காலம். அதுபோன்று ஜப்பானுக்கு ஆகஸ்ட் விடுமுறை மாதம். அங்குள்ள இந்தியர்கள் தாய்நாட்டிற்கு வந்து செல்லும் மாதம் ஆகஸ்ட். அவ்வாறு ஆகஸ்ட் மாதத்தில் விடுமுறைச் சூழலில் தமிழ்நாட்டுக்கு ஆண்டுக்கொருமுறை குடும்பத்துடன் வரும் சில தமிழர்கள் அதே ஆகஸ்ட் மாதத்தில் பன்னிரண்டு நாட்கள் நடைபெறுகிற ஈரோடு புத்தகத் திருவிழாவிற்கு இரண்டு, மூன்று நாட்கள் வருவதை வழக்கமாக வைத்திருந்துள்ளனர். சிலர் அதிக நாட்களும் வந்துள்ளனர். பேரவையினருக்கு இதெல்லாம் தெரியாது. பல நாட்டிலுள்ள தமிழர்களும் அவ்வாறு ஈரோடு புத்தகத் திருவிழாவிற்கு வருகிறார்கள்.

ஈரோடு புத்தகத் திருவிழா ‘உலகத் தமிழர் படைப்பரங்கம்’ என்ற சிறப்பரங்கத்தையும் உள்ளடக்கியது. ஈரோடு புத்தகத் திருவிழாவில் இடம் பெறுகிற தரம் மிக்க புத்தக நிறுவனங்கள், மாலைநேர சொற்பொழிவுகள் உள்ளிட்ட பல அம்சங்கள் ஜப்பான் நாட்டுத் தமிழர்கள் சிலரை வெகுவாகக் கவர்ந்ததன் காரணமாக பேரவையைப் பற்றி முழுமையாகத் தெரிந்து கொள்ள முயற்சித்துள்ளனர். அவ்வாறு சில ஆண்டுகள் பேரவையின் அனைத்து சேவைகளையும், நடவடிக்கைகளையும் தொடர்ச்சியாக ஊன்றி கவனித்து வந்த சில தமிழ் இளைஞர்கள் பேரவையை அணுகி இவ்வமைப்பின் கிளையை ஜப்பானில் தொடங்க வேண்டுமென்று மிகுந்த ஆர்வத்துடன் இரண்டாண்டுக் காலம் கேட்டு வந்தனர். அத்தனை அம்சங்களையும் பரிசீலித்துவிட்டு பேரவையின் கிளையை ஜப்பான் நாட்டில் அமைக்க பேரவை இசைவளித்தது.

அவ்வாறு தொடங்கப்பட்ட பேரவையின் கிளை சார்பில் டோக்கியோ நகரத்தில் பாரதி விழாவை முதன் முதலில் நடத்தினர். உலக அறிவியல் தினத்தையும் இணைத்து நடத்தினர். சென்ற ஆண்டு விஞ்ஞானி மயில்சாமி அண்ணாதுரை அறிவியல் நிகழ்விலும் பேராசிரியர் ய.மணிகண்டன் பாரதி விழாவிலும் பங்கேற்று உரை நிகழ்த்த அழைக்கப்பட்டிருந்தனர்.

மூன்றாவது ஆண்டாக இந்த ஆண்டு கடந்த நவம்பர் 8ஆம் தேதி பாரதி விழா காலை நிகழ்வாகவும் அறிவியல் மாநாடு மாலை நிகழ்வாகவும் தனித்தனியாக நடத்தப்பட்டன.

மக்கள் சிந்தனைப் பேரவையால் நடத்தப்பட்டதுதான் ஜப்பானில் தமிழர்களால் நடத்தப்பட்ட முதல் பாரதி விழா. கடந்த இரண்டு ஆண்டுகளின் செயல்பாடுகள் பேரவையை ஜப்பான்வாழ் தமிழர்கள் மத்தியில் விரிவாக எடுத்துச் சென்றுள்ளது.

பேரவையின் ஜப்பான் கிளை ஆலோசகர் ச.கமலக்கண்ணன், தலைவர் வே.கிருஷ்ணசாமி ஆகிய இருவரும் மென்பொறியாளர்கள். இருவருமே ஈரோடு புத்தகத் திருவிழாவிற்கு கடந்த சில ஆண்டுகளாகவே குடும்பத்துடன் வருபவர்கள். வாசிப்புக்கு வசப்பட்டவர்கள். சமூக உணர்வாளர்கள். வரலாற்றிலும் அறிவியலிலும் இயல்பான ஆர்வம் கொண்டவர்கள். ச.கமலக்கண்ணன் ஜப்பான் மொழியை முறையாகக் கற்றிருப்பதோடு தமிழில் சில நூல்களை எழுதியுள்ளார்.

இவர்களும் பேரவையின் குழுவினரும் பேரவையின் ஜப்பான் கிளை சார்பில் என்னை பாரதி விழாவிலும், அறிவியல் மாநாட்டிலும் பங்கேற்று உரையாற்ற அழைத்தனர். காலையில் நடைபெற்ற பாரதி விழாவையொட்டி விழா தொடங்கும் முன்பாக டோக்கியோ வீதிகளில் பாரதி படங்களை ஏந்திய தமிழ்க் குடும்பங்களைச் சேர்ந்த பள்ளிக் குழந்தைகளின் அணிவகுப்பு நடைபெற்றது. ஜப்பானில் சட்டம் ஒழுங்கு, போக்குவரத்து விதி போன்றவை கறாராக அமலாக்கப்படுகிறது. மக்கள் இயல்பாகவே ஒரு ஒழுங்கமைவைப் பின்பற்றுகின்றனர்.

அத்தகைய சூழலில் மாணவர்கள் அணிவகுப்பிற்கு அனுமதி கிடைப்பது அரிதினும் அரிது. பெரும் முயற்சியெடுத்து பள்ளி மாணவர் அணிவகுப்பிற்கு காவல்துறையிடம் சிறப்பு அனுமதிபெற்று நடத்தியுள்ளனர். பாரதி வேடமணிந்த சிறுவன் நடுநாயகமாக நடைபோட்டான். பெற்றோரும் பேரவைப் பொறுப்பாளர்களும் அங்குள்ள தமிழ் ஆளுமைகளும் அணிவகுப்பை வழிநடத்தி வந்தனர். பேரணியின் நிறைவாக பாரதி படத்தை எம்மிடம் ஒப்படைத்தனர்.

அங்குள்ள தமிழ்க் குடும்பங்களைச் சார்ந்த குழந்தைகளுக்குத் தமிழ் கற்றுக் கொடுப்பதற்கு விடுமுறை நாட்களில் விதவிதமான முயற்சிகளை மேற்கொள்கின்றனர். பாரதி விழாவில் முறையாக நடனப் பயிற்சி, பாட்டுப் பயிற்சி எடுத்த பல ஜப்பான் வாழ் தமிழ் மாணவர்கள் பாரதி பாடல்களைப் பாடினர். பாடலுக்கு ஏற்றவிதத்தில் நடனம் ஆடினர். பேச்சுப் பயிற்சி அளிக்கப்பட்ட மாணவர்கள் இடையிடையே பேசினர். அங்குள்ள தமிழ் மாணவர்களிடையே தமிழ்மொழி, வரலாறு, பண்பாடு உள்ளிட்ட அம்சங்கள் வளரவும் மிளிரவும் இந்நிகழ்ச்சி ஒரு களமாக விளங்கியது.

இந்த ஆண்டின் பாரதி விழா பல முக்கிய அம்சங்களை உள்ளடக்கியதாகத் திகழ்ந்தது. தவத்திரு குன்றக்குடி பொன்னம்பல அடிகளார் 'பாரதீயம்' என்ற தலைப்பிலும், வரலாற்று ஆய்வாளர் டாக்டர்
இரா.கலைக்கோவன் ‘தமிழ் இலக்கிய வரலாறு’ என்ற தலைப்பிலும் இங்கிருந்தவாறே காணொலியில் உரையாற்றினர்.

ஜப்பானில் வசிக்கும் எழுத்தாளர் ரா.செந்தில்குமார் ‘நவீன சிறுகதை இலக்கியம்’ என்ற தலைப்பிலும், ஜப்பான் வாழ் இலக்கிய ஆர்வலர் கு.கோவிந்தராஜன் ‘பாரதி இலக்கியம்’ பற்றியும் உரை நிகழ்த்தினர்.

பாரதி விழாவின் தொடக்கவுரையை காணொலி மூலம் ஜப்பான் நாட்டு இந்தியத் துணைத்தூதர் சந்துரு அப்பர் நிகழ்த்தினார். பாரதி விழாச் சிறப்புரையாற்றும் வரலாற்று வாய்ப்பு எமக்கு அளிக்கப்பட்டிருந்தது.

டோக்கியோ நகரிலுள்ள செய்ஷின்ச்சோ என்ற அரசு அரங்கில் இந்நிகழ்வு நடைபெற்றது. ஜப்பான் வாழ் தமிழ் மக்கள் குடும்பம் குடும்பமாக வந்திருந்து அரங்கம் நிறைய அமர்ந்திருந்தனர். அரங்க அமைப்பும் ஏற்பாடுகளும் ஒரு தமிழ் இலக்கிய மாநாட்டின் வீச்சையும் வீரியத்தையும் ஏற்படுத்தியது.

மதிய உணவு இடைவேளைக்குப் பிறகு இதே அரங்கில் அறிவியல் மாநாடு தனியாக நடைபெற்றது.

ஜப்பான் நாட்டின் சிறப்புமிக்க பல்கலைக் கழகங்களில் அறிவியல் ஆராய்ச்சிப் பணிகளை மேற்கொண்டு முனைவர் பட்டம், முதுமுனைவர் பட்டங்கள் பெற்று பத்து ஆண்டுகள், இருபது ஆண்டுகள் என்று அங்கேயே அறிவியல் ஆய்வுகளைத் தொடர்ந்து கொண்டிருக்கும் தமிழ் விஞ்ஞானிகள் பலரும் இந்நிகழ்வில் பங்கேற்றனர்.

அத்தகைய தனித்துவம் மிக்க பதினைந்து தமிழ் அறிவியலாளர்களுக்கு இம்மாநாட்டில் மக்கள் சிந்தனைப் பேரவையின் சார்பில் பாராட்டு மடல்கள் வழங்கப்பட்டன. சென்ற ஆண்டு இதே அறிவியல் நிகழ்வில் இருபத்தைந்து சிறப்புமிக்க தமிழ் அறிவியலாளர்களுக்கு மக்கள் சிந்தனைப் பேரவையால் பாராட்டு மடல்கள் வழங்கப்பட்டன. இதுவரை பேரவையால் நாற்பது ஜப்பான் வாழ் தமிழ் அறிவியலாளர்கள் பாராட்டப்பட்டுள்ளனர்.

இவர்கள் ஒவ்வொருவரின் விபரக் குறிப்புகளை வாசித்துப் பார்த்தால் பிரம்மிப்பு ஏற்படுகிறது. அத்தகைய சாதனைகளைச் செய்தவர்கள் அவர்கள்.

பேரவையின் அழைப்பை மதித்து ஐநூறு கிலோ மீட்டர், ஆயிரம் கிலோ மீட்டர் என்று புல்லட் டிரெயினில் பயணம் மேற்கொண்டு வந்திருந்து இந்நிகழ்வுகளில் பங்கேற்று இந்நிகழ்ச்சிக்கே தனித்துவம் மிக்க பெருமையையும் சிறப்பையும் சேர்ந்தவர்கள் அவர்கள்.

அத்தகையோரில் இந்த ஆண்டு பேரவையால் தேர்வு செய்யப்பட்ட பதினைந்து அறிவியலாளர்களுக்கு மேடையில் பாராட்டு மடல்களை வழங்கி உரை நிகழ்த்துகிற பொறுப்பையும் நிறைவேற்றினோம்.

இவர்கள் அல்லாமல் அரிதினும் அரிதான மூத்த தமிழ் அறிவியலாளர்கள் சிலரும் சிறப்பு விருந்தினர்களாக இந்நிகழ்வில் பங்கேற்று தனித்தனி அறிவியல் தலைப்புகளில் முத்திரை பதிக்கத்தக்க உரைகளை நிகழ்த்தினர்.

பேரவையின் அறிவியல் சார்ந்த பணிகளை அங்கீகரிக்கும் விதத்தில் அவர்களின் பங்களிப்பும் அணுகுமுறையும் இருந்தது.

இன்று நிலவும் உலக அளவிலான அறிவியல் ஆராய்ச்சிகள் பற்றி அவர்கள் நிகழ்த்திய உரைகள் பல அறிவியல் நுட்பங்களையும் நுணுக்கங்களையும் உள்ளடக்கியதாகும்.

எமது உரையில் இத்தகைய தமிழ் அறிவியல் அறிஞர்கள் யாவரும் தமிழ்நாட்டின் அறிவியல் வளர்ச்சிக்கு உதவ வேண்டும் என்றும் அதற்கான உந்து சக்தியாக அவர்கள் விளங்க வேண்டுமென்றும் வேண்டுகோள் விடுத்தோம். தமிழ்நாட்டிற்கும் ஜப்பானுக்கும் இடையிலான அறிவுப் பாலமாக மக்கள் சிந்தனைப் பேரவை விளங்கத் தயாராகவுள்ளது என்றும் தெரிவித்தோம்.

இந்த வேண்டுகோளை ஏற்றது மட்டுமின்றி தமிழ்மண்ணின் அறிவியல் வளர்ச்சிக்கு அவர்கள் பங்களிப்புச் செலுத்துவதற்கு வாய்ப்பு அமையுமானால் அவர்கள் பெரும் மகிழ்வு அடைவதாகவும் அவ்வாறான சூழல் ஏற்படவில்லையே என்ற வருத்தம் தங்களுக்கு நெடுநாட்களாக இருந்ததாகவும் தெரிவித்தனர். பேரவையின் அறிவியல் சார்ந்த ஈடுபாடும், அறிவியலை ஊக்குவிக்கும் பணிகளும், அறிவியலாளர்களுக்கு அளிக்கப்படும் முக்கியத்துவமும் ஜப்பான் தமிழ் அறிவியலாளர்களை மிகவும் கவர்ந்தது. இந்திய விஞ்ஞானி த.வி.வெங்கடேஸ்வரன் பஞ்சாபிலிருந்து காணொலிமூலம் மாநாட்டு நிறைவுரை நிகழ்த்தினார்.

மாநாடு முடிந்து அடுத்த நாள் புல்லட் டிரெயினில் கியோத்தோ மாநகருக்குப் புறப்பட்டோம். ஜப்பானின் பழைய தலைநகரம் அது. அங்குள்ள கியோத்தோ பல்கலைக்கழகம் ஆக்ஸ்போர்டு, கேம்பிரிட்ஜ் போன்று உலகப் புகழ்மிக்கது. இந்த ஆண்டில் அறிவியலுக்கான நோபல் பரிசு பெற்ற ஜப்பான் விஞ்ஞானி சுசுமு கிடாகவா அப்பல்கலைக்கழக ஆய்வுக் கூடத்தில்தான் ஆய்வுகளை மேற்கொள்கிறார். அப்பல்கலைக்கழகப் பேராசியர் அவர்.

ரயிலில் எம்முடன் மாநாட்டிற்காக டோக்கியோ வந்திருந்த இதே கியோத்தோ பல்கலைக்கழகத்தில் பணியாற்றும் தமிழ் விஞ்ஞானி
டாக்டர் கணேஷ் பாண்டியன் நமச்சிவாயம் பயணம் மேற்கொண்டார். ஐநூறு கி.மீ தூரத்தை இரண்டு மணி நேரத்தில் மின்னல் வேகத்தில் கடந்தது புல்லட் டிரெயின். அந்த இரண்டு மணி நேரமும் ஜப்பான் அறிவியல் தொழில்நுட்பச் செயல்பாடுகள் குறித்து அவரிடம் கேட்டறிந்தேன். அரிய வாய்ப்பு.

இவர் பணியாற்றும் ஆய்வுக்கூடம் கியோத்தோ பல்கலைக்கழகத்தின் கீழ்த் தளத்தில் உள்ளது. நோபல் பரிசு பெற்ற விஞ்ஞானி சுசுமு மேல்தள ஆய்வுக்கூடத்தில் ஆராய்ச்சிகள் மேற்கொள்கிறார்.

பேச்சுவாக்கில் 'நோபல் பரிசு பெற்ற விஞ்ஞானியை சந்திக்க இயலுமா’ என்று அவரிடம் கேட்டேன். 'சிரமம்தான். இன்னும் அவர் நோபல் பரிசையே கையில் வாங்கவில்லை. டிசம்பர் 10ஆம் தேதிதான் அவருக்கு ஸ்வீடன் நாட்டில் நோபல் பரிசு வழங்குகின்றனர். பாதுகாப்புக் காரணமாகவும், பல நாட்டுப் பிரமுகர்களின் அரசு சார்ந்த உயர்மட்ட சந்திப்புக் காரணங்களினாலும் சிரமம் தான். இன்னும் இரண்டு, மூன்று மாதங்கள் கழித்து சந்திப்பது சாத்தியம். அவரோடு நான் நெருங்கிய தொடர்பில் இருப்பவன்தான். இருந்தாலும் முயற்சிக்கிறேன்' என்றார்.

என்னுடைய ஆர்வத்தையும் ஈடுபாட்டையும் பார்த்து அதீத முயற்சியெடுத்து நோபல் பரிசு பெற்ற விஞ்ஞானியை சந்திக்கும் வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுத்தார். கணேஷ் பாண்டியன் அவரது மனைவி வைஜயந்தி ஆகிய இருவரும் ஒதுக்கப்பட்ட நேரத்தில் நோபல் விஞ்ஞானியைச் சந்திக்க அழைத்துச் சென்றனர். வைஜயந்தியும் அப்பல்கலைக் கழகத்தில் பணியாற்றும் அறிவியலாளர்தான்.

நோபல் விஞ்ஞானியை சந்திக்கும் அரிய வாய்ப்பு அமையப் பெற்றது. அவரிடம் உரையாடியபோது 'ஜப்பான் நாட்டு விஞ்ஞானிகள் அதிகம் நோபல் பரிசு பெறுவதற்கு அவர்களின் தாய்மொழியில் பயில்வது, சிந்திப்பது, தாய்மொழி வழியாகவே ஆராய்ச்சிகள் செய்வதுதான் காரணம் என்கிறார்களே?' என்ற ஒரு கேள்வியைக் கேட்டேன்.

'அது உண்மைதான். அது மட்டுமே உண்மையல்ல. ஜப்பானிய ரத்தத்தில் ஊறியது தத்துவம் மற்றும் வரலாறு. சின்னஞ்சிறு வயதிலிருந்து தத்துவத்தையும் வரலாற்றையும் ஊன்றிப் படிப்பதாலும், அந்தக் கண்ணோட்டத்தோடு அறிவியலை அணுகுவதாலும்தான் ஜப்பானியர்களால் அறிவியலில் சாதனை படைக்க முடிகிறது என்று நான் நினைக்கிறேன்' என்றார்.

எனது ஆராய்ச்சிகளின் அடிப்படை 'Usefulness of the Uselessness' என்றார். அதன் உட்பொருளை விளக்கினார்.

இந்த ஆண்டின் நோபல் பரிசுபெற்ற விஞ்ஞானியைச் சந்தித்ததும் அவருடன் உரையாடியதும் மிகுந்த மகிழ்ச்சியளித்த நிகழ்ச்சியாகும்.

இந்திய விஞ்ஞானி கணேஷ் பாண்டியன் கடந்த இருபதாண்டுகளாக ஜப்பானில் அறிவியல் ஆய்வுகளை மேற்கொள்பவர்.

கியோத்தோ பல்கலைக் கழகத்தின் நுழைவுப் பகுதியின் முக்கிய இடம் ஒன்றில் எதிர்காலத்தில் உலகைப் புரட்டிப் போடும் கண்டுபிடிப்புகளை நிகழ்த்தப் போகும் 125 விஞ்ஞானிகளின் பெயர்கள், புகைப்படங்கள், அவர்களது கண்டுபிடிப்புகளின் தனித்தன்மைகள் யாவற்றையும் மக்களின் காட்சிக்காக ஒன்றன் பின் ஒன்றாக மெதுவாக சுழன்று வருவதுபோல் அழகாக அமைத்து வைத்திருந்தனர்.

அந்த 125 வெற்றி முகங்களோடு விளங்கும் அறிவியலாளர்களில் இந்தியர்கள் இரண்டுபேர். ஒருவர் வடஇந்தியாவைச் சேர்ந்த ஒரு பெண்மணி. மற்றொருவர் தங்கத்தமிழ் மண்ணைச் சேர்ந்த விஞ்ஞானி கணேஷ் பாண்டியன்.

இத்தகைய உலக அளவிலான எதிர்கால நம்பிக்கை நட்சத்திரங்களெல்லாம் மக்கள் சிந்தனைப் பேரவையோடு இயல்பாக இணைந்திருப்பது இனம் தெரியாத ஒரு ஆத்ம திருப்தியை ஆழ்மனதில் ஏற்படுத்தியது. அவர் இல்லத்திற்கே சென்று அறிவியல் சார்ந்த நீண்ட உரையாடல் மேற்கொள்ளும் வாய்ப்பும் கிடைத்தது.

அதன்பின் அதே போன்று இன்னும் சில நூறு கிலோ மீட்டர் தூரம் புல்லட் டிரெயினில் பயணம் மேற்கொண்டு ஹிரோஷிமா சென்று அங்கு ஒரு நாள் முழுக்க மௌனத்தில் ஆழ்ந்து தியான நிலைக்கே சென்று இரண்டாம் உலக யுத்தத்தின் போது அமெரிக்கா ஏற்படுத்திய பேரழிவைப் பார்த்து உள்ளக்குமுறலுக்கு உள்ளானது, டோக்கியோவிலிருந்து முப்பத்தி இரண்டு கிலோமீட்டருக்கு அப்பாலிருந்த நேதாஜி சிலையைப் பார்த்துப் பரவசப்பட்டது, இன்றும் ஆயிரம் ஆயிரம் ஆண்டுகளைக் கடந்தும் கம்பீரமாக நிமிர்ந்து நிற்கும் புராதன புத்தக் கோயில்களைக் கண்டுகளித்தது, சிலர்ப்பூட்டும் பல இடங்களைப் பார்த்து ரசித்தது. மக்களின் பழக்க வழக்கங்களை –பண்பாட்டை – வாழ்வியலைக் கற்றுத் தெரிந்தது என்று ஏராளமாக உள்ளது. அவற்றில் ஒரு சிறு பகுதியை எடுத்துரைப்பது மட்டுமே இக்கட்டுரையின் நோக்கம். எல்லாம் எழுதினால் அது நூலாக விரியும்.

மொத்தத்தில் ஜப்பான் பயணம் ஒரு அறிவியல் பயணம், வரலாற்றுப் பயணம், தமிழ்ப் பயணம், கல்விப் பயணம், யுத்தமே வேண்டாம் இவ்வுலகிற்கு என்று உறுதியேற்கும் அமைதிப் பயணம் என்று சொன்னால் அதில் மிகையில்லை.

- த. ஸ்டாலின் குணசேகரன், நியூசெஞ்சுரி புத்தக நிறுவனத் தலைவர், மக்கள் சிந்தனைப் பேரவைத் தலைவர்

✍️ எழுத்தாளர்களின் கவனத்திற்கு

கீற்றில் தங்களது படைப்புகளை / இதழ்களை வெளியிட விரும்பினால், அவற்றை யுனிகோட் எழுத்துருவில் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.

வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகள் மட்டுமே பதிவேற்றத்திற்குப் பரிசீலிக்கப்படும்.