முதலாளியத்தின் கழுத்தை நெறிக்கும் கொரோனா
தனிமனிதக் கடன் பற்றி நாம் அறிந்திருக்கிறோம். குடும்பக் கடனை நாம் அனைவரும் எதிர்கொண்டிருக்கிறோம். கடன் தொல்லை தாங்க முடியாமல் குழந்தைக்குத் தீ வைத்து இறந்துபோன குடும்பத்தைப் பதட்டத்துடன் பார்த்தோம். கடன் இல்லாமல், வட்டியில்லாமல் நவீன வணிகக் கட்டமைப்பு இயங்குவது சிரமம் என்பதையும் பார்த்துக் கொண்டிருக்கிறோம். வங்கி தரும் கடன் உதவி, கடன் அட்டையில்லை (Credit Card) எனில் பெரும்பாலான பொருட்கள் வீடு வந்து சேராது. கடன் நம் வாழ்க்கையின் பிரிக்க இயலாத அங்கமாகி விட்டது. இந்தக் கடன் இல்லாமல் நவீன வாழ்க்கை முறை சாத்தியமில்லை என்று முதலாளித்துவ கட்டமைப்புகள் நம்மை நம்ப வைத்து வெகுநாட்கள் ஆகின்றன.
மறுபக்கத்தில் பார்ப்போமெனில் முதலாளித்துவ பெரும்நிறுவனங்கள் கடன்களின் உதவியோடே தங்களை வளப்படுத்திக் கொண்டிருக்கின்றன. இந்த கடன் கட்டமைப்பு என்பது உலகளாவிய பொருளாதார நிதிக் கட்டமைப்பின் மிக முக்கிய அங்கமாக மாறி இருக்கிறது. இன்று நாம் காணும் வங்கிகளுக்கான நெருக்கடிகள் என்பது இந்த கார்ப்பரேட் நிறுவனங்களின் நிதி ஏமாற்றுத் திட்டங்களினால் அவை முடக்கப்படும் நிலைக்குத் தள்ளப்பட்டதால் வந்தவை. வங்கிகள் எனப்படுபவை பொது மக்களின் சேமிப்பை, உழைப்பை நிதிமூலதனமாக மாற்றும் அமைப்பாக இருக்கிறது. இவ்வங்கிக் கட்டமைப்பு என்பது நாம் புரிந்து வைத்திருப்பதைக் காட்டிலும் வேறு பல உள்ளார்ந்த மதிப்புகளை, பணிகளைக் கொண்டிருக்கின்றது. இந்த கட்டமைப்பின் ஓர் அங்கமாக சொல்வதெனில் வெகுமக்களிடத்தில் பெறப்படுகின்ற நிதியைப் பெருநிறுவனங்களுக்கான மூலதனமாக மாற்றும் பணியில் மிக முக்கிய கண்ணியாக செயலாற்றுகின்றன.
வங்கிகள் சாமானிய மக்களுக்குக் கொடுக்கும் கடன் உதவியை விட பெரும் கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு அளிக்கும் கடன் திட்டங்களே அவர்களுக்கு கவர்ச்சிகரமாக இருந்திருக்கின்றன என்பதை வங்கிகளின் கடன் திட்டங்களைக் கூர்ந்து நோக்கினால் புரியும். மக்களிடத்தில் இருக்கும் நிதியைத் தனது மூலதனமாக மாற்றிக் கொள்ள வங்கிகளைப் பெரும் நிறுவனங்கள் பயன்படுத்துகின்றன. அரசும், அரசு நிறுவனங்களும் வங்கிகளை முறையான, சட்டப்பூர்வமான நிதிக் கட்டமைப்பாக நம்மில் பதிய வைக்கின்றன. இந்த வகையில் கடந்த 2016இல் அறிவிக்கப்பட்ட பணமதிப்பிழப்பு நடவடிக்கையில் வங்கிகள் மையமான பங்கை வகித்தன. வங்கிகளே பணத்தை மாற்றிக் கொடுக்கும் அங்கீகரிக்கப்பட்ட கட்டமைப்பாக இறுதி செய்யப்பட்டு, இறுதியில் பெரும்பான்மையான மக்களின் கையிருப்பு வங்கிகளுக்குச் சென்றடைந்தன.
இவ்வாறு மக்களிடமிருந்து திரட்டப்பட்ட தொகை என்பது கிட்டதட்ட 15 லட்சம் கோடியை நெருங்கியது. அதாவது இந்தியாவின் மொத்த புழக்கத்தில் இருக்கும் பணம் என்பது வங்கிக்கு கொண்டு சேர்க்கப்பட்டது. இவ்வங்கியில் இருந்து உடனடியாக பணம் எடுப்பது தவிர்க்கப்படும் நிலையை, கட்டுப்பாடுகளை அரசு விதித்தது. இவ்வாறு கொண்டு சேர்க்கப்பட்ட பணம் பெரும் மூலதனமாக பெரிய கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு வாரி வழங்கப்பட்டன. குறிப்பாக பனியா மார்வாடி வணிகர்கள் மற்றும் நிறுவனங்கள் இதில் தங்கு தடையின்றி பயனடைந்தன.
இதன் பின்னணியில் சர்வதேச கார்ப்பரேட் நிறுவனங்கள் மற்றும் தேசங்களின் கடன் தொகையின் அளவும், ஒட்டு மொத்த தேசங்களின் உற்பத்தியின் அளவும் எவ்வாறு இருக்கிறது என்பதைப் பார்ப்போம். அதாவது வாங்கிய கடனின் மொத்த மதிப்பு எவ்வளவு, ஒட்டுமொத்தமான உற்பத்தியின் அளவு எவ்வளவு என இரண்டையும் தொகுத்துப் பார்க்க வேண்டும். கடனையும், அதை எதிர்கொள்ளும் அளவிலான உற்பத்தியை செய்திருக்கிறோமா என்பதையும் பொருத்திப் பார்க்கும்போதே உலகப் பொருளாதாரத்தின் ஆரோக்கியத்தைக் கணிக்க இயலும். இந்த வகையில் உலக நாடுகளின் ஒட்டுமொத்த உற்பத்தியின் அளவைவிட மொத்த கடன் தொகை என்பது மிக மிக அதிகமாக இருக்கிறது எனும் பேருண்மையை நாம் கவனிக்க வேண்டும். இந்த இடத்தில் இருந்தே இப்பொழுது நிகழும் கொரோனாவினை எதிர்கொள்ளும் அரசின் திட்டங்களைப் புரிந்து கொள்ள வாய்ப்புண்டு. அதாவது மொத்த கடன்தொகை என்பது 253 ட்ரில்லியன் டாலர் என மதிப்பிடப் பட்டிருக்கிறது. (ஒரு ட்ரில்லியன் என்பது 6,30,000 கோடி ரூபாய்). இது 2019 ஆம் ஆண்டு கடன் நிலை. இது கடந்த மூன்று ஆண்டுகளில் உலக மொத்த உற்பத்தியை விட மிக அதிகமாக சென்றிருக்கிறது. அதாவது உற்பத்தியை விட 322% அதிகமாகி இருக்கிறது. (எளிய வழியில் சொல்வதெனில், ஒரு குடும்பத்தின் வருவாயை விட 322 சதவீதம் அக்குடும்பத்தின் கடன் தொகை அதிகரித்திருக்கிறது எனும் அளவிலானது)
கடந்த பத்தாண்டுகளில் இந்த கடன்தொகைக்கும், உற்பத்தியின் அளவிற்குமான இடைவெளி அதிகரித்துக் கொண்டே வந்து, தற்போது கடன் என்பது மிக அதிக அளவிலான சுமையாக வந்திருக்கிறது. இதற்கு மேலும் கடனை அதிகரிக்க இயலாது எனும் நிலை முதலாளித்துவத்திற்கு வந்திருக்கிறது.
இதில் அமெரிக்காவில் நடக்கும் நிலையை கவனத்தில் எடுத்துப் பார்ப்போமானால் இப்பிரச்சனையை இன்னும் எளிமையாக விளங்கிக் கொள்ளலாம். அமெரிக்காவில் கடந்த வருடம் கார்ப்பரேட் நிறுவனங்களின் கடன் மட்டும் கிட்டதட்ட 6.7 ட்ரில்லியனாக அதிகரித்திருக்கிறது. இந்த அளவிலான உயர்வு என்பது புதிய மின்னணு / சாஃப்ட்வேர் நிறுவனங்களை விட, பழைய தொழிற்சாலை முறைகளில் இயங்கும் தொழிற்துறைகளிலேயே அதிகம் ஏற்பட்டிருக்கிறது. இப்போது கொரோனாவினால் உருவாகி இருக்கும் நெருக்கடியால் பொருளாதார மந்தம் வலுப் பெறுமானால் இந்த கார்ப்பரேட் நிறுவனங்களின் கடன் சுமை மேலும் அதிகரிக்கும் என்கிறார்கள் பொருளாதார வல்லுனர்கள். அதாவது இந்த கார்ப்பரேட் கம்பெனிகளில் கிட்டதட்ட 19 ட்ரில்லியன் கடன் தொகையை வைத்திருக்கும் நிறுவனங்களால், இக்கடனைக் கட்டக் கூடிய லாபம் என்பதே ஈட்ட முடியாத நிலைக்குத் தள்ளப்படும். அப்படியெனில் கடன் சுமை என்பது மேலும அதிகரிக்கும் என்பதே கொரோனா தாக்கம் சுட்டும் நிலை. இப்படியான மோசமான நிலையில் அரசுகள் இதை எப்படி எதிர்கொள்ள ஆரம்பித்திருக்கின்றன என்பதை நாம் கவனிக்க வேண்டும்.
இச்சமயத்தில் அமெரிக்காவின் வலதுசாரி அரசு மற்றும் அதன் அரசியல்வாதிகள் கார்ப்பரேட்டுகளுக்கு ஆதரவாகவே முடிவெடுப்பதைக் காண முடிகிறது. அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடும் ஜோ-பிடேன் ‘அரசு தனது செலவினங்களைக் குறிப்பாக சமூகப் பாதுகாப்பிற்காக செலவிடும் தொகையினை, மருத்துவ செலவினத்தை நிறுத்தியாக வேண்டும்’ என்கிறார். அதிபர் டொனால் ட்ரம்ப், விமான நிறுவனங்கள், சொகுசுக் கப்பல் நிறுவனங்கள் ஆகியவற்றிற்கு உதவ வேண்டும், ஆயுள் காப்பீடு நிறுவனங்களின் தலைவர்களை சந்திப்பதாகச் சொல்கிறார்.
இதேபோல வால்மார்ட், வால்ஸ்ட்ரீட் நிறுவனப் பொறுப்பாளர்கள் அரசின் உதவி தேவை என்பதாக அறிக்கை ஒன்றை வெளியிடுகிறார்கள். இதன் அடிப்படையிலேயே, அமெரிக்க அரசு கிட்டதட்ட 1.5 ட்ரில்லியன் டாலர் பணத்தினை நிதிச் சந்தையினுள் இறக்கியது. இவ்வாறு கார்ப்பரேட் நலன்களை மட்டும் மீட்டெடுக்கும் நடவடிக்கைகள் ஆரம்பித்திருக்கின்றன. அதே நேரம் தொழிலாளிகளுக்குரிய மருத்துவப் பாதுகாப்போ, வேலைப் பாதுகாப்போ, உணவுப் பாதுகாப்போ, நிதி உதவியோ கிடைக்கப் போவதில்லை என்பதும் வெளிப்படையாகிறது. எனவே உழைக்கும் சமூகம் தன்னுடைய தேவைகளுக்கு உழைப்பை நாட வேண்டி இருக்கும், நோயைத் தனித்து சந்திக்க வேண்டி வரும். இது அவர்களிடையே நோய்ப் பரவலை அதிகரிக்கும். ஆரோக்கியம் சீரழியும் பொழுது, பொருள் ஈட்டும் வலிமை இல்லாது போகும்; இது அவர்களை மேலும் வறுமைக்குள் தள்ளும்.
இப்படியான சூழலில் அமெரிக்காவில் எவ்வாறு கார்ப்பரேட்டுகளைக் காப்பாற்ற முனைப்பு காட்டுகிறார்களோ, அதே போன்று மோடி அரசும் தனது பணியைத் துவக்கி இருக்கிறது. கொரோனா தொற்று உலகெங்கும் அதிகரித்து, இந்திய அளவில் அதிகரிப்பதற்கு ஒரு மாதத்திற்கு முன் மோடி அரசின் பட்ஜெட்டில் தனியார் நிறுவனங்களுக்கு பல்வேறு சலுகைகள் அறிவிக்கப்பட்டன. (காண்க மே17இயக்கக் குரல் பிப்-2020). இந்தச் சலுகைகளின் தொடர்ச்சியாக மார்ச் 24ஆம் தேதி நிர்மலா சீதாராமன் அறிவித்த பொருளாதார உதவி என்பது வெகு மக்களுக்கானதாக இல்லாமல், முழுவதும் கார்ப்பரேட் நிறுவனங்களின் தேவைக்கு ஏற்பவே அமைந்தது. வரி கட்டுவதில் இருந்து மூன்று மாதங்கள் விலக்கு என பலவேறு அறிவிப்புகள் நடந்தாலும் சாமானியர்களுக்கென்று எந்த அறிவிப்பையும் இந்த அரசு தெரிவிக்கவில்லை. மிகச் சொற்பமான உணவு தானியத்தையும், கையிருப்பிற்கான மிகக் குறைந்த பணத்தையும் ஏழைத் தொழிலாளர்களுக்கு அறிவித்து விட்டு நிவாரண நிதி குறித்து ஏதும் அறிவிக்காமல் நிற்கிறது மோடி அரசு.
ஒரு பனியா மார்வாரிகளின் வட்டி வணிகத்தில் கடைபிடிக்கப்படும் ஈவு இரக்கமற்ற நிலையையே மோடி அரசின் நிதி உதவி குறித்த அறிவிப்பில் நாம் காண முடிகிறது. முழுவதும் மக்கள் விரோத வணிக மனநிலையில் இந்த அரசு இயங்கி வருவதை நாம் கண்கூடாகப் பார்க்க முடிகிறது. பெரிய கார்ப்பரேட் நிறுவனங்கள் மோடி அரசு தனக்கு உதவி செய்யக் கூடும் எனக் காத்திருக்கின்றன. பெட்ரோல் டீசல் விலை ஏற்றத்திற்கான வாய்ப்புகளைச் செய்து கொடுத்தது மோடி அரசு. இதை முடங்கிப் போய் இருக்கும் பெட்ரோலிய நிறுவனங்களுக்கான லாப விகிதத்தை மேம்படுத்த நடக்கும் முயற்சி எனப் பார்க்க முடிகிறது.
மோடி அரசின் கார்ப்பரேட்டுகளை மீட்டெடுக்கும் முயற்சிகளை அம்பலப்படுத்தும் செயல்களை இந்தியாவின் பாஜக எதிர்ப்பு அணியில் நாம் பார்க்க முடிவதில்லை. இது குறித்து வேலைத் திட்டத்தை இடதுசாரி கட்சிகளாவது முன்வைக்க வர வேண்டும். இந்தியா அளவிலான பெரும் மக்கள் திரட்சிக்கான களத்தினை யார் ஏற்படுத்தப் போகிறார்கள் என்பதை காலம் கவனித்துக் கொண்டிருக்கிறது.
இந்த முயற்சிகளை மக்களிடமிருந்து மறைக்கும் விதமாக பல்வேறு நாடகங்களை மோடி அரசு நடத்திக் கொண்டிருக்கிறது. சாலையில் சொந்த ஊர்களுக்கு திரும்பிக் கொண்டிருக்கும் ஏழைத் தொழிலாளர்களின் சோர்ந்த கால்களும், நம்பிக்கையிழந்த மனமும் இன்றைய தேசத்தின் முகமாக மாறி நிற்கிறது. முழு பாசிச அரசின் அரக்கத்தனமான ஆட்சிமுறையினை எதிர்கொள்ளும் மாபெரும் பொறுப்பினை முற்போக்கு ஆற்றல்கள் மேற்கொள்ளும் காலம் இதுவே. வரலாற்றை எழுதும் வாய்ப்பினை காலம் நமக்கு வழங்கி இருக்கிறது என்பதை முற்போக்கு ஆற்றல்கள் உணர வேண்டும்.
- மே 17 இயக்கக் குரல்