கீற்றில் தேட...

‘Our Own Path to Socialism’ - Selected Speeches of Hugo Chavez – Ed. By Carlos Ron, Manolo de los Santos & Vijay Prashad, Left Word Books – 2023- Pages: 137 – Price: Rs 225/-

‘சோசலிசத்திற்கான எங்கள் சொந்தப் பாதை’ - ஹூகோ சாவேஸின் தெரிவு செய்யப்பட்ட உரைகள் – தொ.ஆ : கார்லோஸ் ரான், மனோலோ லாஸ் சாண்டோஸ், விஜய் பிரசாத்.

Hugo Chavez book'மண்ணுக்கேற்ற மார்க்சியம்’, ’21 ஆம் நூற்றாண்டு சோசலிசம்’, ‘சீனப்பண்புகளுடன் கூடிய சோசலிசம்’ என்பவையெல்லாம் மார்க்சிஸ்டுகளாகத் தம்மைக் கருதும் சிலருக்கு உவப்பனவாக இருப்பதில்லை. ஆச்சாரசீல மார்க்சிஸ்டுகள் இவையெல்லாம் திருத்தல்வாதம், குட்டி பூர்ஷ்வா குழப்பவாதம் என்றெல்லாம் அர்ச்சிப்பது உண்டு. உண்மையில் ‘ஆச்சாரசீல’ அல்லது ‘செவ்வியல்’ மார்க்சியத்திற்கு இவை அந்நியமான கருத்துகள் இல்லை; வறட்டுவாதத்திற்குத்தான் அந்நியமானவை. மேலும் இந்தச் சொற்றொடர்களில் இடம்பெற்றுள்ள ‘சோசலிசம் ’எனும் பதம் ‘சோசலிச நிர்மாணம்’ , ’சோசலிசத்திற்கான பயணப்பாதை’ என்பவற்றுக்கு ஆகிவந்த ஆகுபெயர்தான்.

மார்க்ஸ் உயிருடன் இருந்த போதே, ரஷ்ய மார்க்சியத்தின் தந்தையெனக் கூறப்படும் பிளக்கனோவின் குழுவைச் சேர்ந்த வேரா சசூலிச் அவர்களுக்கு எழுதிய கடிதத்திலேயே ரஷ்யாவில் சோசலிசத்திற்கான பயணப்பாதை மேற்கு ஐரோப்பிய நாடுகளின் பயணப் பாதையிலிருந்து மாறுபட்டதாயிருக்கும் என்று எழுதியுள்ளார். (பார்க்க : மார்க்ஸ், எங்கல்ஸ் தேர்வு நூல்கள் தொகுதி 10) மார்க்சும் எங்கல்சும் சோசலிசத்திற்கு மாறிச் செல்லும் காலகட்டத்தின் அரசியல், பொருளாதார நிர்வாகம், நடைமுறைகள் ஆகியவற்றைக் குறித்து மிகக் குறைவாகவே எழுதியுள்ளார்கள். அவையும் முதலாளித்துவம் முழுமையான வளர்ச்சியடைந்த மேற்கு ஐரோப்பிய நாடுகளுக்கானவைதான்.

லெனின், மிகத் தெளிவாகவே சொல்லிச் சென்றுள்ளார். ”நாங்கள் மார்க்சின் கோட்பாடுகள் முழுமை பெற்றவை என்றோ, மீறமுடியாதவை என்றோ கருதவில்லை. மாறாக, சோசலிஸ்ட்டுகள் வாழ்க்கையின் போக்கோடு இயைந்து செல்ல விரும்பினால், எல்லா திசைகளிலும் வளர்த்தெடுக்கப்பட வேண்டிய கட்டமைப்பின் அடிக்கற்களை மட்டுமே அவை அளித்துள்ளன என்றே கருதுகின்றோம். ரஷிய சோசலிஸ்ட்டுகள் மார்க்சியக் கோட்பாட்டை தாங்களே சுதந்திரமாக வளர்த்து விரிவாக்குவது மிகவும் இன்றியமையாதது என்று கருதுகின்றோம். ஏனென்றால், மார்க்சின் கோட்பாடுகள் பொதுவான வழிகாட்டும் கொள்கைகளை மட்டுமே அளிக்கின்றன. இவை இங்கிலாந்தில், ஃபிரான்ஸில் போலல்லாது வேறுவிதமாகத்தான் நடைமுறைப்படுத்தப்பட வேண்டியிருக்கும்; ஃபிரான்ஸில், ஜெர்மனியில் போலல்லாதும், ஜெர்மனியில் ரஷியாவில் போலல்லாததுமாக நடைமுறைப்படுத்த வேண்டியிருக்கலாம். எனவே நாம் மிகவும் கருத்து முரண்பாடான கூறுகளையும் மிகவும் வெளிப்படையாக விவாதிக்கவும் கோட்பாடுரீதியான கட்டுரைகளை எழுதவும் எல்லாத் தோழர்களுக்கும் நம்முடைய இதழ்களில் மனமுவந்து இடமளித்து அவர்களை எழுதச் சொல்லி வரவேற்க வேண்டும்.” - லெனின், ‘நமது திட்டம்’ – (லெனின் தொகுப்பு நூல்கள் தொகுதி -4, பக்கம் 210) - V.I.Lenin, Collected Works, Vol 4, Page 210)

எனவே தத்தம் நாட்டில் சோசலிசத்தைக் கட்டியமைப்பதில் தத்தம் நாட்டின் தனிச்சிறப்பான நிலைமைகளுக்கு ஏற்ப லெனின் கூறியபடி, ‘திட்டவட்டமான சூழல் குறித்த திட்டவட்டமான ஆய்வுகளின்’ அடிப்படையில் இதனை நடைமுறைப்படுத்த முயல்கின்றனர். இரண்டாம் உலகப் போருக்குப் பின் அன்றைய தனிச்சிறப்பான வரலாற்று நிலைமைகளின் காரணமாக கிழக்கு ஐரோப்பிய நாடுகளில் கம்யூனிஸ்ட் கட்சிகள் ஆட்சிக்கு வந்தன என்பதை நாம் அறிவோம். இங்கெல்லாம் அச்சுப் பிசகாமல் சோவியத் யூனியனைப் பின்பற்றி சோசலிசத்தைக் கட்டியமைப்பதற்கான முயற்சிகள் நடைபெற்றன என்பதையும் நாம் அறிவோம். பிறகு 1990 ஆம் ஆண்டுகளில் சோவியத் யூனியனின் சீர்குலைவோடு இணைந்து இந்த நாடுகளின் சோசலிசமும் சீர்குலைந்தன. அத்தோடு நில்லாமல், இவையெல்லாம் ஓடிச் சென்று எதிரி முகாமான நேட்டோவிலும் தஞ்சம் அடைந்தன. இந்த நாடுகளில் கடைப்பிடித்த சோசலிச நிர்மாண முறைதான் ஒரே வழி என்பதை 20 ஆம் நூற்றாண்டின் இறுதியிலும் 21ஆம் நூற்றாண்டிலும் உருவான புதிய இடதுசாரிகள் ஏற்றுக்கொள்வதில்லை. அத்தோடு, கட்சிக்குள்ளும் சமூகத்திலும் மேலான ஜனநாயக முறைகளையும் இவை பின்பற்றுகின்றன.

இப்படி உருவான புதிய இடதுசாரி கட்சிகளில் பல இலத்தீன் அமெரிக்க நாடுகளில் மீண்டும் மீண்டும் தேர்தலில் வெற்றி பெற்று ஆட்சிக்கு வந்துள்ளன. பிரேஸில் நாட்டில் 5ஆவது முறையாக ’புதிய இடதுசாரி’ தொழிலாளர் கட்சியின் லூலா அதிபராகியுள்ளார்; மெக்ஸிகோவில் ‘புதிய இடதுசாரி’ ’மொரேனா’ கட்சி 3ஆவது தொடர் வெற்றி பெற்று கிளவிடியா ஷின்பவ்ம் அதிபராகியுள்ளார். இவையெல்லாம் சிறிய நாடுகள் அல்ல. ஃபிரான்ஸில் ழான் – லுக் மெலன்ஷோனின் புதிய இடதுசாரிக் கட்சியான, LFI என அழைக்கப்படும் கட்சியின் தலைமையிலான ‘புதிய மக்கள் முன்னணி’யே அங்கு லா-பென் தலைமையிலான ஃபாசிஸக் கட்சி ஆட்சிக்கு வருவதைத் தடுத்தது. ஜெர்மனியில் புதிய இடதுசாரிக் கட்சியான டி லின்கே (இடது கட்சி) பெற்ற வெற்றியும் அங்கு ஃபாசிசக் கட்சி ஆட்சிக்கு வருவதைத் தடுப்பதில் பங்காற்றியுள்ளது.

இப்படி வெற்றிகரமாக சோசலிசத்தை நோக்கிய தங்கள் பயணத்தைப் பரந்துபட்ட ஜனநாயகத்தோடு இணைத்து நடத்திய தலைவர்களில் ஒருவர்தான் வெனிசுவேலாவின் ஹியூகோ சாவேஸ். இராணுவத்தில் லெஃப்டினட் கர்னலாக இருந்த சாவேஸ், 1998ஆம் ஆண்டு தேர்தலில் வெற்றி பெற்று ஆட்சிக்கு வந்தார். 1999 ஆம் ஆண்டு மக்கள் நலன் பாதுகாக்கும் அரசியல் சட்டத்தை முன்வைத்து, நாட்டு மக்களிடம் வாக்கெடுப்பு நடத்தி 60% வாக்குகளோடு வெற்றி பெற்று அதனைச் சட்டமாக்கினார். புதிய அரசியல் சட்டத்தின் அடிப்படையில் 2000 ஆம் ஆண்டு நடைபெற்ற அதிபர் தேர்தலில் சாவேஸ் மீண்டும் வெற்றிபெற்றார். நாட்டின் இயற்கை வளங்களை நாட்டுடைமை ஆக்கினார். உலகின் ஆகப் பெரிய எண்ணெய் வளம் கொண்ட வெனிசுவேலாவின் எண்ணெய் எரிவாயு நிறுவனங்கள் நாட்டுடைமை ஆனது. அதன் முன்னாள் உரிமையாளர்களான அமெரிக்க எண்ணெய் எரிவாயு பெரு நிருவனங்களின் பெரு முதலாளிகளின் பகைமையைக் கொண்டு வந்தது.

ஜனவரி 2005ஆம் ஆண்டு தன்னுடைய ‘21 ஆம் நூற்றாண்டு சோசலிசம்’ எனும் கோட்பாட்டை சாவேஸ் அறிவித்தார். அதன்படி ஜனநாயக சோசலிசத்தை, பரந்துபட்ட மக்களின் பங்கெடுப்புடன் கட்டியமைப்பது நாட்டின் நோக்கமாக ஆனது. அவரது ஒவ்வோர் அடியும் அமெரிக்காவின் எதிர்ப்பை மேலும் மேலும் சம்பாதித்தது. தேர்தலில் அவரை வீழ்த்த முடியாத ஆதிக்க சக்திகளும் அமெரிக்காவும் இராணுவப் புரட்சியின் மூலம் அப்புறப்படுத்த முயற்சி செய்தும் தோற்றனர். 2006ஆம் ஆண்டு அதிபர் தேர்தலில் பெரும்பான்மை வாக்குகளைப் பெற்று முதல் சுற்றிலேயே அதிபராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். அதே ஆண்டு சாவேஸை ஆதரித்த சிறிதும் பெரிதுமான இடதுசாரி கட்சிகள் இணைந்து ஐக்கிய வெனிசுவேலா சோசலிசக் கட்சி’ – PSUV உருவானது. உள்நாட்டில் சோசலிச சமூகத்தைக் கட்டியமைப்பது என்பதுடன் பரந்துபட்ட இலத்தீன் அமெரிக்க நாடுகளின் ஒற்றுமைக்கும் பாடுபட்டார். ஏனைய லத்தின் அமெரிக்க இடதுசாரிகளுக்கு உத்வேகமூட்டக் கூடியவராக இருந்ததோடு சோவியத் சீர்குலைவிற்குப் பிறகு அமெரிக்காவின் கொடுமையான பொருளாதாரத் தடைகளை எதிர்கொண்டு பெரிய அளவு உதவியின்றி தானேத் தனியாகப் போரடி வந்த கியூபாவிற்கு ஆற்றல் மற்றும் பல துறைகளில் வெனிசுவேலா உதவி செய்யக் காரணமாக இருந்தார்.

1960ஆம் ஆண்டுகளிலிருந்து அமெரிக்கா அஞ்சும் எடுத்துக்காட்டாக விளங்கிய கேஸ்ட்ரோ மற்றும் கியூபா போல 21 ஆம் நூற்றாண்டில் சாவேஸும் வெனிசுவேலாவும் முன்னுதாரணமாகத் திகழத் தொடங்கினர். அமெரிக்காவின் தலையீடுகளும் கெடுபிடிகளும் அதிகமாயின என்றாலும் 2012 ஆம் ஆண்டு தேர்தலில் சாவேஸ் மீண்டும் அதிபராகத் தேர்தெடுக்கப்பட்டார். ஆனால், திடீர் உடல் நலக் குறைவால் (புற்று நோய்) கியூபாவில் மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட சாவேஸ் பதவி ஏற்காமலேயே மரணமடைந்தார். உதவி அதிபராக இருந்த மதுரோ அதிபரானார்.

அமெரிக்கா வெனிசுவேலாவிற்கு எதிரான பொருளாதாரத் தடைகளை அதிகமாக்கியது. வெனிசுவேலாவின் எண்ணெய், எரிவாயு அரங்கம் சரியாக இயங்கவிடாமல் செய்தது. அமெரிக்க, ஐரோப்பிய நாடுகளால் இயக்கப்பட்டு வந்த ஆலைகளுக்குப் பராமரிப்புப் பணிகளுக்கு அமெரிக்க ஐரோப்பியப் பொறியாளர்கள் தொழில்நுட்ப வல்லுநர்களை வரவிடாது தடுத்தது. அந்த அரங்கங்களின் எந்திரங்களின் உதிரி பாகங்கள், உற்பத்திக்குத் தேவையான வினையூக்கிகள் மற்றும் ஏனைய சரக்குகளை வரவிடாது தடுத்தது. நாட்டில் செயற்கையான பொருளாதார நெருக்கடியை உருவாக்கியது. காலங்காலமாக இருந்த ஏகாதிபத்திய ஆதரவு சக்திகளும் பெருமுதலாளித்துவ ஆதரவு சக்திகளும் இவர்களை அண்டி வாழ்ந்த குட்டி பூர்ஷ்வாக்களும் இவர்களைப் பிரதிநிதித்துவம் செய்த அரசியல் கட்சிகளும் இல்லாமல் போய்விடவில்லையே. இவர்களது முன்னெடுப்பிலும் ஏகாதிபத்தியத்தின் பேருதவியாலும் நடந்த கிளர்ச்சிகளில் கணிசமான சாமான்ய மக்களும் பங்கு பெற்றதில் வியப்பேதுமில்லை.

இவ்வளவு முயற்சி செய்தும் 2024 ஜூலையில் நடந்த தேர்தலில் மதுரோவை தோற்கடிக்க இயலவில்லை. அமெரிக்கத் தடையை மீறி சீனாவும் ரஷ்யாவும் வெனிசுவேலாவின் கச்சா எண்ணெய் வணிகத்தில் ஈடுபட்டது அமெரிக்காவின் கண்ணை உறுத்தியது. அதனைத் தடுக்கிறேன் பேர்வழி என்பதோடு மட்டுமில்லாது மதுரோ அமெரிக்காவிற்கு போதை மருந்து கடத்தினார் என்றும் கூறி அவரையும் அவரது மனைவியையும் வெனிசுவேலாவின் தலைநகர் காரகஸில் இருந்து கடத்தி நியூயார்க்கில் ஒரு மோசமான சிறைச் சாலையில் அடைத்துள்ளது. சீனா, ரஷ்யா நாடுகளோடு நட்பு பாரட்டும் நாடுகளெல்லாம் அமெரிக்காவின் அடக்குமுறைக்கு உள்ளாகி வருவதில் நமக்கு ஒன்றும் வியப்பில்லை. ஒரு தீவிர வலதுசாரி அரசான மோடியின் அரசே நெருக்கடிக்கு உள்ளாகும்போது, அமெரிக்காவின் ‘கொல்லைப் புறம் ’ என அழைக்கப்படும் இலத்தீன் அமெரிக்காவில் செல்வமும் செல்வாக்கும் மிகுந்த அடுத்த ‘கியூபா’ ஆக வெனிசுவேலா உருவாவதை தடுக்கும் நடவடிக்கையையே டிரம்ப் அரசு எடுத்துள்ளது. இதில் அமெரிக்க எதிர்க்கட்சியான ஜனநாயகக் கட்சிக்கும் பெரிய கருத்து வேறுபாடு இல்லை.

அமெரிக்கா அஞ்சி நடுங்கும் அளவிற்கு அப்படி என்ன கொள்கைகளை நடைமுறைப்படுத்த சாவேஸ் முயன்றார்; மதுரோ தொடர்ந்தார் என நுணுகி ஆய்வது அவசியம். தனது புரிதல் மற்றும் திட்டம் குறித்து சாவேஸிடமே கேட்டறிவதைக் காட்டிலும் சிறந்த வழி இருக்க முடியுமா? ‘சோசலிசத்திற்கான எங்கள் சொந்த வழி’ எனும் இந்நூல் மூலம் ஹியூகோ சாவேஸ் நம்முடன் உரையாடுகின்றார்.

சாவேஸ் குறித்து அறிமுகம் செய்து நூலின் தொகுப்பாசிரியர்கள் எழுதிய இரண்டு கட்டுரைகள் முதலில் இடம்பெற்றுள்ளன. மேலே கூறியுள்ள விவரங்களில் பல அவற்றில் உள்ளன. அவை தவிர, சாவேஸ் வேறு வேறு சமயங்களில் ஆற்றிய ஏழு உரைகளின் தொகுப்பே இந்த நூல். சாவேஸின் உரைகள் உணர்ச்சிகரமானவை, வீராவேசம் மிக்கவை, உரையாடல் தன்மை கொண்டவை. அவற்றைக் கல்விப் புலக் கருத்தரங்குக் கட்டுரைகள் போல எழுத்தில் தருவது சிரமமானது. ஆனால் தேர்ந்த மொழிபெயர்ப்பு, முன்பகுதியின் அறிமுகக் கட்டுரைகள், நூலின் இறுதியில் உள்ள விளக்கக் குறிப்புகள் ஆகியவை சாவேஸோடு உடன் பயணித்து அவரது உரைக்கு செவிமடுத்த உணர்வைத் தருகின்றன.

கியூபாவில் ஹவானா பல்கலைக்கழகத்தில் ஆற்றிய உரை (1994), பிரேசிலின் போர்ட்டோ அலிகரேயில் நடந்த புகழ்பெற்ற ‘உலக சமூக மன்றம்’ (World Social Forum) பெருங்கூட்டத்தில் நிகழ்த்திய உரை (2005), வெனிசுவேலாவின் தலைநகர் காரகஸ்ஸில் தனது ஆட்சியின் தொடக்க நாளில் ஆற்றிய உரை (2007), நாட்டு மக்களுடன் நேரடியாக நடத்திய காணொளி உரையாடலில் பேசியது, ஐக்கிய நாடுகள் அவையில் ஆற்றிய உரை (2009), டென்மார்க், கோபன்ஹேகனில்
ஐ.நா.வின் காலநிலை மாநாட்டில் ஆற்றிய உரை (2009), அவர் உடல் நிலை பாதிக்கப்பட்டு கியூபாவிற்கு மருத்துவம் செய்துகொள்ளச் செல்லும் முன் தனது அமைச்சரவையில் ஆற்றிய உரை (2012) ஆகியவை இடம்பெற்றுள்ளன.

இந்த உரைகளிலெல்லாம் இலத்தீன் அமெரிக்கா கடும் சுரண்டலுக்கு உள்ளான 500 ஆண்டுகால வரலாறு, இலத்தீன் அமெரிக்க மக்களும் அவர்களது வீரமும் விவேகமும் மிகுந்த தலைவர்களான சைமன் பொலிவார் (1783-1830), சான் மார்ட்டின் (1778-1850), ஹோஸே மார்த்தி (1853-1895) ஆகியோரும் இணைந்து நடத்திய போராட்டங்கள், பண்டைய இன்கா, அஸ்டெக், மாயன் நாகரிகங்கள் ஐரோப்பிய காலனி ஆதிக்கங்களால் ஒழிக்கப்பட்டு அந்த மக்களை இனப்படுகொலைக்கு உள்ளாகி அழிந்த வரலாறு ஆகியவை பின்புலமாக அமைகின்றன. இது லத்தின் அமெரிக்க நாடுகளின் ஒற்றுமை, ஒன்றுபட்ட போராட்டங்களின் அவசியம், அவற்றின் கூட்டுறவு ஆகியவற்றின் முக்கியத்துவத்தையும் நம்மைப் போன்ற தூர தேசத்து வாசகர்களையே உணரச் செய்கின்றது என்றால், அவற்றைக் கேட்ட வெனிசுவேலா மற்றும் ஏனைய இலத்தீன் அமெரிக்க மக்களை எந்த அளவு உணர்வூட்டியிருக்கும் எனப் புரிந்துகொள்ள முடிகின்றது.

ஆனால் அவருடைய உரைகள் வெறுமனே பழைய வீர வரலாறு பற்றிக் கூறுவதாக இல்லை. அவை இன்றைய ஏகாதிபத்தியத்தின் கீழ் அமெரிக்காவின் புழக்கடையாக இருக்கும் அவலம் குறித்து எடுத்துக் கூறுவனவாகவும் ஏகாதிபத்திய எதிர்ப்பு இலத்தீன் அமெரிக்க மக்களின் நல்வாழ்விற்கான போராட்டத்தின் மிக முக்கியமான அம்சம் என்பதை புரிய வைப்பனவவும் உள்ளன. அதற்கு மேலாக, இன்றைய நிலையிலிருந்து மீள ‘சோசலிசம்’ அல்லாத வேறு பாதை இல்லை என்பதையும் விளக்குகின்றன.

அதேசமயம், இலத்தீன் அமெரிக்காவிலும் வெனிசுவேலாவிலும் சோசலிசத்திற்கான பயணப்பாதை 20ஆம் நூற்றாண்டில் ரஷியா, சீனா மற்றும் கிழக்கு ஐரோப்பிய நாடுகளில் பின்பற்றிய பாதைகளிலிருந்து மாறுபட்டதாக இருக்க வேண்டிய அவசியம் குறித்தும் கூறுகின்றார். அந்த நாடுகளின் அனுபவத்திலிருந்து செழுமையான பகுதிகளை உள்வாங்க வேண்டியதை எடுத்துக்கூறும் அதே சமயத்தில் அவர்களது வீழ்ச்சியிலிருந்து கற்க வேண்டிய பாடங்களையும் மிகுந்த சமநிலையோடும் பொறுப்புணர்வோடும் எடுத்துக் கூறுகின்றார்.

அவரது கருத்தாக்கங்களை முழுமையாக விளக்குவதற்கு இந்தக் கட்டுரையில் இடமில்லை. இந்த நூலிலுமே ஓரளவுதான் அவர் கோடி காட்டுகின்றார். ஆனால் மேற்கொண்டு அறிந்துகொள்ளவும் விவாதிக்கவும் வாசிக்க வேண்டிய நூல்களை ஆங்காங்கு அடையாளம் காட்டிச் செல்கின்றார். குறிப்பாக, ஹங்கேரிய பொருளாதார நிபுணரும், செழுமையான முரணியக்க (dialectical) பார்வை கொண்ட ஜார்ஜி லூகாக்ஸ் வழிவந்தவருமான இஸ்துவான் மேஸ்ஸாரூஸ் (Istuan Mezaros) எழுதிய 'முதலாளித்துவத்திற்குப் பின்னே’ (Beyond Capitalism) எனும் நூலை மிகவும் விதந்தோதுவதோடு, அதன் அடிப்படையில் மேக்கல் லெபோவிட்ஸ், மார்த்தா ஹர்னேகர் ஆகியோடு இணைந்து உருவாக்கிய திட்டத்தின் அடிப்படையில்தான் தன் கொள்கைகளை வகுத்துள்ளார் என்பதும் தெரிய வருகின்றது. இஸ்துவான் மெஸ்ஸாரூஸ் மார்க்சின் எழுத்துகள், குறிப்பாக, அவரது ‘அடித்தளங்கள்’ எனும் 'குருன்ரிஸ்ஸே' (Grunrisse) தான் அடிப்படை எனக் கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.

இதன்படி, நாட்டின் பொருளாதார நிறுவனங்களை நாட்டுடைமை ஆக்குவது முதல்படிதான். உற்பத்திச் சாதனங்களில் பொதுவுடைமை என்பதே சோசலிசம் ஆகிவிடாது. மார்க்ஸ் கூறியபடி, உற்பத்திச் செயல்பாடு உண்மையான உற்பத்தியாளர்களான தொழிலாளர்களின் கூட்டுறவால் நடத்தப்படுவதாக இருக்க வேண்டும். உற்பத்தி, உற்பத்திக்கான திட்டமிடல் உள்ளிட்ட சமூகத்தின் சகல நிர்வாகமும் ஜனநாயக முறையால் நடக்க வேண்டும். மேலிருந்து அரசோ, கட்சியோ [கட்சியின் பொலிட் பீரோவோ] ஆணையிட்டு சோசலிசத்தைக் கட்டமுடியாது. சோசலிசத்தை மக்கள் கட்ட வேண்டும் என்பது அவர்களது வழிமுறையாக இருக்கின்றது. மக்களில் பெரும்பான்மை அதற்குத் தயாராக இருக்கின்றார்கள் என்பது அவரது அசைக்க முடியாத நம்பிக்கையாக இருக்கின்றது. சோசலிசத்தைக் கட்டியமைப்பதைத் தன் பகுதியாகக் கொண்ட அரசியல் திட்டத்தை மக்களின் பொது வாக்கெடுப்பிற்கு உட்படுத்தி 60% மக்களின் வாக்குகளைப் பெற்றார் எனக் கண்டோம். இது அவரது நம்பிக்கை சரியானதென்றே காட்டியது. உலகில் நடக்கும் மாற்றங்களிலேயே மிகவும் மெல்ல நடப்பது மக்களின் மனமாற்றம் என லெனின் கூறுவார். அதனை உள்வாங்கியவராக சோசலிசம் மெல்ல கட்டியமைக்கப்பட்டாலும் திடமாக மக்களின் ஏகோபித்த ஆதரவுடனும் அவர்களது நேரடிப் பங்களிப்புடனும் கட்டியமைக்கப்பட வேண்டுமென்பதை வலியுறுத்துகின்றார்.

சாவேஸின் வழி பின்னர் சிலி நாட்டில் ‘புதிய இடதுசாரி’ அதிபர் போரிஸ் தலைமையில் ஆட்சிக்கு வந்த இடதுசாரி அரசால் பின்பற்றப்பட்டது. சோசலிசத்தைக் கட்டியமைப்பதைத் தன் பகுதியாக உள்ளடக்கிய புதிய அரசியல் சட்டம் மக்களின் பொது வாக்கெடுப்பிற்கு உட்படுத்தப்பட்டது. ஆனால், குறைவான வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடிக்கப்பட்டது. மக்களிடம் விளக்கி எடுத்துக் கூறி, அவர்கள் ஆதரவோடு அடுத்தமுறை வெல்வோம் என்ற நம்பிக்கையில் அவர்கள் தொடர்கின்றார்கள். இப்படி ஏனைய இலத்தீன் அமெரிக்க நாடுகளுக்கும் சோசலிசத்தைக் கட்டியமைப்பதிலும், ஏகாதிபத்திய எதிர்ப்பிலும், பெருமுதலாளித்துவ எதிர்ப்பிலும் முன்னுதாரணமாக சாவேஸின் வெனிசுவேலா இருந்தது. அவரது வழிமுறைகள் மதுரோ அவர்களாலும் தொடரப்பட்டன. ரஷிய, சீன நாடுகளோடு எண்ணெய்-எரிவாயு வணிகமும், அமெரிக்காவிற்குள் போதைப்பொருள் அனுப்பியது எனும் பொய்க் குற்றச்சாட்டும் டிரம்பின் அமெரிக்க அரசின் வல்லாங்குத் தலையீட்டிற்குக் காரணங்கள் எனப் பெரிதும் கூறப்பட்டாலும் இலத்தீன் அமெரிக்க நாடுகளுக்கும் ஏனைய ஆசிய, ஆப்பிரிக்க நாடுகளுக்கும் முன்னுதாரணமாகத் திகழ்ந்ததும், இலத்தீன் அமெரிக்க மற்றும் ஏனைய ஆசிய, ஆப்பிரிக்க நாடுகளை ஏகாதிபத்தியத்திற்கு எதிராக ஒன்றிணைக்கும் பணியைச் செய்ததும் முக்கியமான காரணம் என்பதை சாவேஸின் உரைகள் நமக்குக் காட்டுகின்றன. சிறிய நூல்தான்; படித்துப் பாருங்களேன்...

- ப.கு.ராஜன்