தொழில்நுட்பப் பிரபுத்துவம்
முதலாளித்துவத்தைக் கொன்றது எது?
யானிஸ் வருஃபாக்கிஸ்
(Techno Feudalism – What Killed Capitalism by Yanis Varoufakis)
யானிஸ் வருஃபாக்கிஸ் கிரிஸ் நாட்டின் ஏதென்ஸில் 1961ஆம் ஆண்டு பிறந்தார். கிரிஸ் நாட்டில் புதிய இடதுசாரிக் கட்சியான ‘சிரிஸா’ அமைச்சரவையில் நிதி அமைச்சரானார். உலகப் புகழ் பெற்றார். அதற்கு முன்பு கிரிஸ், இங்கிலாந்து, அமெரிக்க, ஆஸ்திரேலியப் பல்கலைக்கழகங்களில் பொருளாதாரப் பேராசிரியராகப் பணியாற்றியவர். இங்கிலாந்தின் எஸ்ஸெக்ஸ், பர்மிங்ஹாம் பல்கலைக்கழகங்களில் பொருளாதாரம் கற்று முனைவர் பட்டம் பெற்றவர்.
குலோபல் மினோட்டர் (தமிழில் – அகில உலக பகாசுரன் - பாரதி புத்தகாலயம்), அடல்ட்ஸ் இன் த ரூம் (அறையிலுள்ள வயது முதிர்ந்தவர்களுக்கு), அன் எக்கனாமிக் ஹிஸ்டரி ஆஃப் யூரோப் (ஐரோப்பாவின் பொருளாதார வரலாறு) ஆகிய பல லட்சம் பிரதிகள் விற்பனையாகிய நூல்களின் ஆசிரியர்.
சிரிஸா கட்சித் தலைமையின் ‘ஊசலாட்ட’, ‘சமரச’ அரசியலைத் தாங்க முடியவில்லை என்று சொல்லி DiEM25 (Democracy in Europe 25) என்ற இயக்கத்தை உருவாக்கி அதன் தலைவராக இருக்கின்றார். 2019 ஆம் ஆண்டு முதல் அந்த இயக்கத்தின் ஐந்து பாராளுமன்ற உறுப்பினர்களில் ஒருவராகப் பணியாற்றினார்.
நூலின் தலைப்பான 'தொழில்நுட்பப் பிரபுத்துவம்’ என்பதை நாம் புரிந்து கொள்ளலாம். தலைப்பின் இரண்டாவது வரியான ‘முதலாளித்துவத்தைக் கொன்றது எது?’ என்பதை நாம் எப்படி ஏற்பது? அப்படி என்ன முதலாளித்துவம் உலகில் இல்லாது போய்விட்டதா என்ற கேள்வி நியாயமானதுதானே? அவரும் அதை உணர்ந்திருக்கின்றார். ஏன் அப்படி ஒரு வரியைத் தலைப்பாக வைத்தேன் என அவரே விளக்குகின்றார். சில ஆண்டுகள் முன்பு தனது 12 வயது மகள் புரிந்துகொள்வதற்கு ஏற்ப ‘முதலாளித்துவத்தின் வரலாறு’ என்பதைக் கூற ஒரு நூலை எழுதியுள்ளார். அப்போது பழைய செவ்வியல் முதலாளித்துவத்தை விளக்கும்போது, இன்றைய சமகால முதலாளித்துவம் மாமேதை கார்ல் மார்க்ஸ் கால முதலாளித்துவத்திலிருந்து எந்த அளவு மாறியிருக்கிறது என்பதை உணர்ந்துள்ளார். அந்த மாற்றத்தின் பாரதூரத் தன்மையை அடிக்கோடிட்டு கவனம் பெற வைக்க வேண்டும் எனக் கருதியுள்ளார். ‘எனவே நண்பர்களுக்கும் எதிரிகளுக்கும் எரிச்சல் ஏற்படுத்தும் இந்த வரியைச் சேர்த்தேன்’ என்கிறார்! எனவே அந்த வரிக்கு அகராதி அர்த்தத்தை நாம் எடுத்துக் கொள்ள வேண்டியதில்லை. மாற்றத்தின் அளவை வலியுறுத்தும் உயர்வு நவிற்சி எனக் கொள்வோம். நூல் என்ன சொல்கிறது எனப் பார்ப்போம்.
தொழில் நுட்ப வளர்ச்சிக்கும் சமூக மாற்றத்திற்கும் உள்ள உறவு குறித்து, அதாவது உற்பத்தி சக்திகளுக்கும் உற்பத்தி உறவுகளுக்கும் உள்ள உறவு பற்றி கோடிட்டுக் காட்டுகின்றார் வருஃபாக்கிஸ். இரும்புப் பயன்பாடு வரும்வரை வரலாறு ஆயிரம் ஆண்டு பரப்பில் பேசப்பட்டு வந்தது; பின் நூற்றாண்டு பரப்பில் பேசப்படும் வண்ணம் மாற்றங்கள் துரித கதியில் நடக்கத் தொடங்கியதை விவரிக்கின்றார். பின்னர் முதலாம் இரண்டாம் தொழில் நுட்பப் புரட்சியில் இது இன்னும் வேகம் கண்டதை விளக்குகின்றார்.
தொழில் முதலாளித்துவத்திற்கு உருமாற்றம் என்பது பச்சோந்திக்கு நிறமாற்றம் என்பதுபோல அடிப்படைப் பண்பு. அதுதான் அதன் பாதுகாப்புப் பொறியமைவு. முதலாளித்துவத்தின் உருமாற்றங்களுக்கு அது உலகில் தோன்றிய காலத்திலிருந்து நீண்ட வரலாறு உள்ளது. அதனைச் சற்று பார்த்தால்தான் அது எடுத்துள்ள இன்றைய நிலையை அல்லது அதனை இடம்பெயரச் செய்துள்ள புதிய அமைப்பு குறித்துப் புரிந்துகொள்ள இயலும்.
முதலாளித்துவம் மானுடத் தேவைகளைப் பூர்த்தி செய்யும் சரக்குகளை உற்பத்தி செய்யும் நிலையைத் தாண்டி தனது சரக்குகளுக்காக மானுடத் தேவைகளை உற்பத்தி செய்யும் நிலைக்கு வந்தது. தனது சரக்குகளின் சந்தைக்காக புதிய நிலப்பரப்புகளில் பணியாற்றுவது என்பதைத் தாண்டி, தனது சரக்குகளுக்காக மானுட மனப்பரப்புகளில் பணியாற்றும் நிலைக்கு வந்து சேர்ந்தது. முதலாளித்துவம் இன்று மானுடத் தேவை அவாவை (Desire) திறம்பட உருவாக்கக் கூடியதாக மாறியுள்ளது. இந்தக் காரணத்திற்காக அனுபவ மதிப்புகளை ‘பரிவர்த்தனை’ மதிப்புகளாக மாற்றக் கூடியதாக உருவெடுத்துள்ளது. தான் பார்க்குமிடங்களிலெல்லாம் இருக்கின்ற அனுபவ மதிப்புகளை பரிவர்த்தனை மதிப்புகளாக மாற்றுவதன் மூலம் உலகைத் தன் வசமாக்கியுள்ளது.
முதலாளித்துவம், அலைக் கற்றைகள் (Air Waves), பெண்களின் கர்ப்பப்பைகள், கலை, மரபணுத் தொகுப்புகள், விண்கற்கள், அண்ட வெளி உட்பட முன்னர் கற்பனை செய்தும் பார்க்கவியலாதவற்றை எல்லாம் சரக்குகளாக மாற்றியுள்ளது. அதன் மூலம் பலவற்றின் அனுபவ மதிப்புகளை பரிவர்த்தனை மதிப்புகளாக மாற்றியுள்ளது; சில டாலர் மதிப்புகளாக, ஒரு வணிகச் சொத்தாக, ஒரு வர்த்தக ஒப்பந்தமாக மாற்றியுள்ளது.
உலகப் போர்களுக்குப் பிந்தைய காலத்தில் முதலாளித்துவம் அடைந்த மாற்றத்தின் பகுதியாக அது ஒரு புதிய சந்தைப் பரப்பைக் கண்டுபிடித்தது. அது மானுட கவனம் எனும் மனப்பரப்புதான். ஆனாலும் அவையெல்லாமும் முதலாளித்துவத்தின் அடிப்படையான உழைப்பின் இரட்டைப் பண்பு என்பதை அடித்தளமாகக் கொண்டதே. அதாவது உழைப்பு ஆற்றலின் பரிவர்த்தனை மதிப்பு மற்றும் பயன் மதிப்பு என்பதை அடித்தளமாகக் கொண்டதே. அந்த வகையில் அதன் சுரண்டல் அடிப்படை மாறவில்லை. அந்தவகையில் அவை முதலாளித்துவத்திற்குள் நடந்த மாற்றம்தான். முதலாளித்துவத்திலிருந்து புதிய ஒன்றுக்கான மாற்றம் அல்ல.
முதலாளித்துவம் தான் தொடும் ஏதொன்றையும் சரக்காக மாற்ற வேண்டிய நிர்பந்தம் கொண்டது. அது எப்போதும் தான் இதுவரை சரக்காக ஆக்காதவற்றைத் தேடிக் கண்டுபிடித்து சரக்காக ஆக்கும் விரிவாக்கப் பண்பும் கொண்டது. முதலாளித்துவத்திற்காகப் பணியாற்றும் திறமையான விளம்பர வடிவமைப்பாளர்கள் இதனைத்தான் செய்கின்றனர். அவர்கள் மானுட மனதின் உணர்வுகளைக் கண்டறிந்து அதனைச் சரக்காக்குகின்றனர். அவை ஒரு சாக்லேட்டுத் துண்டின் மீது சுற்றப்படும் தாள்போல ஏதேனும் ஒன்றின் மீது சுற்றப்பட்டு சரக்காக ஆக்கப்பட்டு விற்கப்படுகின்றன.
உலகப் போர்களுக்குப் பின்னர் முதலாளித்துவம் தனது பொற்காலத்தை அடைந்தது. எல்லாப் பொருட்களும் ஏற்கனவே சரக்குகளாக மாற்றப்பட்டு விட்டபின் புதிதாய் லாபம் உருவாகித் தொடர்ந்து பாய என்ன செய்வது? முதலாளித்துவம் கண்டுபிடித்த விடைதான் மானுட உணர்வுகளை சரக்குகளாக ஆக்குவது.
முதலாளித்துவத்தின் தொடக்ககால ஆர்வலர்கள் இந்த உருவெடுப்பு கண்டு அதிர்ச்சி அடைந்திருப்பர். அவர்கள் பாராட்டத்தக்க பண்புகள் கொண்ட தொழில்முனைவோர் எனக் கருதியது, திறன்கொண்ட வங்கியாளர்கள், கசாப்புக் கடைக்காரர்கள், மதுபானம் காய்ச்சுபவர்கள் போன்ற முதலாளித்துவ தொழில் முனைவோரைத்தான். தங்கள் வாடிக்கையாளரின் தேவைகளை நிறைவு செய்ய கடுமையாக உழைப்பவர்கள், எல்லாவற்றையும் சிக்கனமாகச் செய்துதர முயற்சிப்பவர்கள், தாங்கள் பயன்படுத்தும் கச்சாப் பொருட்கள், உதவிப் பொருட்கள், ஆற்றல் ஆகியவற்றின் பரிவர்த்தனை மதிப்பை அதன் கடைசிச் சொட்டுவரை பிழிந்து தங்கள் உற்பத்தி செய்யும் சரக்கிலேற்றிக் கொடுப்பவர்கள். இது மாற்றம் அடைந்தது.
அறிவியல் வளர வளர தொழில்நுட்பமும் வளர்ச்சி கண்டது. வளர்ச்சி அடைந்த தொழில்நுட்பத்தைப் பயன்படுத்த பெருவீத தொழிற்சாலைகள் இன்றியமையாதவை. பெருவீத தொழிற்சாலைகளைக் கட்டியமைக்க பெரும் மூலதனம் தேவை. பெரும் மூலதனத்திற்கு பெரும் வங்கிகள் தேவை. இந்த நிலை நிதிமூலதனப் பெருக்கத்திற்கு அடிப்படைக் காரணமாக இருந்தது. பெருவீத நிதி மூலதனம் அதற்குத் தேவையான மூலதனத்தைத் திரட்டுவதற்காக எதிர்காலத்திடமிருந்து கடன் வாங்கத் தொடங்கியது. அதாவது ஏற்கனவே பெருவீத நிறுவனங்கள் வாக்களித்திருந்த பெரு லாபத்திலிருந்து இன்னமும் ஈடேற்றம் ஆகாத லாபத்திலிருந்து கடன் வாங்கியது. இப்படிக் கடன் வாங்குவது உண்மையிலேயே உற்பத்தி செய்யப்போகும் தொழிற்சாலைகளைக் கட்டி அமைக்க மட்டும் பெறப்படவில்லை. மாறாக ஊக வணிக சூதாட்டங்களில் ஈடுபடவும் வாங்கப்பட்டன.
உள்ளதைக் கொண்டு வாழ்வது பிற்போக்கான பழைய பஞ்சாங்க நடைமுறையாகவும் வாரியிறைத்தல் நவீன அணுகுமுறை எனவும் கருதப்பட்டது. பெருமுதலாளித்துவத்திற்கு எது நல்லதோ அது அமெரிக்காவிற்கு நல்லது எனப் பிரச்சாரம் செய்யப்பட்டது. ஆனால் இந்தப் போக்கு நீண்டகாலம் தொடரப்படவில்லை. 1929 ஆம் ஆண்டின் பெருவீழ்ச்சியில் இது முடிவிற்கு வந்தது.
ரூஸ்வெல்ட் கொணர்ந்த புதிய ஒப்பந்தம் (New Deal) என்ற நடைமுறைகள்தான் பெருவீழ்ச்சியை முடிவிற்குக் கொண்டு வந்ததற்கும் அமெரிக்கா சர்வ நாசத்திலிருந்து காப்பாற்றப்பட்டதற்கும் காரணம் எனக் கூறப்பட்டது. ஆனால் உண்மையில் இரண்டாம் உலகப் போர்தான் முக்கியமான காரணம். பேர்ல் ஹார்பர் துறைமுகத்தை தாக்கியதன் மூலம் ஜப்பான் இரண்டாம் உலகப் போரை அமெரிக்காவிற்குக் கொண்டு வந்தது. 1929 ஆம் ஆண்டு பெருவீழ்ச்சி காலத்திலிருந்து உலகப்போர் முடியும்வரை அமெரிக்கப் பொருளாதாரம் சோவியத் சோசலிசப் பொருளாதாரத் திட்டமிடலைத்தான் பின்பற்றியது. அதன்படி அமெரிக்கா போரில் வெற்றிபெற என்ன தேவையோ அவற்றை அமெரிக்க முதலாளித்துவம் உற்பத்தி செய்யும். அமெரிக்க அரசு, முதலாளித்துவத்திற்கு ஒரு குறைந்தபட்ச லாபத்தை உறுதி செய்யுமென்று ஆனது. அது பெரும் வெற்றி பெற்றது. ஐந்து ஆண்டுகளில் உற்பத்தி நான்கு மடங்கு அதிகரித்தது. அதாவது பெரு நிதி மூலதனத்தை அரசின் கட்டுப்பாட்டில் விட்டது எல்லோருக்கும் நலன் பயப்பதாகியது. பெருமுதலாளித்துவமும் அமெரிக்க அரசும் ஈருடல் ஓருயிர் ஆயின. பெருமுதலாளித்துவ பெரு வங்கிகளின் தலைவர்கள் அரசுத் துறைகளின் தலைவர்களாக ஆயினர்; பிறகு மீண்டும் பெருநிறுவனத் தலைவர்கள் ஆயினர். அதிகாரிகள் அமைச்சர்களாயினர்; மீண்டும் அதிகாரிகளாயினர். ஜான் கெனத் கால்பிரித் இந்த உறவு முறையை தொழில்நுட்பக் கட்டமைப்பு (Techno Structure) என்றார்.
லாபம் என்பது இந்தக் கட்டமைப்பைக் கொண்டு செலுத்த அவசியம்தான். ஆனால் லாபம் முதன்மையானதல்ல என ஆகியது. தங்கள் கீழுள்ளவர்களைத் தொடர்ந்து பணியில் இருத்தி வைப்பது முதன்மையான நோக்கமானது. தங்கள் கட்டமைப்பு மேலும் மேலும் பெரிதாக ஆவது லாபத்தைக் காட்டிலும் முக்கியமானதாக ஆகியது. அரசாங்கத்தில் இருந்த ‘புதிய ஒப்பந்தக்காரர்கள்’ இதற்காக வெளிநாட்டுச் சந்தைகளை தங்கள் ஆதிக்கத்திற்குக் கீழே கொண்டு வருவதும் உள்நாட்டில் புதிய தேவை அவாக்களை (desires) உருவாக்குவதும் முக்கியம் என உணர்ந்தார்கள். போரின் முடிவிற்குப் பிறகு இது உடனடியான பணிப்பரப்பு ஆனது.
போரின் முடிவுக் காலத்தில் உருவான பிரெட்டன் வுட்ஸ் அமைப்பு இதற்கு வழி கோலியது. உலக வங்கியும் சர்வதேச நிதி நிறுவனமும் தொடங்கப்பட்டன. அமெரிக்கா மார்ஷல் திட்டத்தினை அறிமுகப்படுத்தியது. அடிப்படையில் 1929 ஆம் ஆண்டு ஏற்பட்ட பொருளாதார வீழ்ச்சி மீண்டும் ஏற்படாமல் தடுப்பது என்பது நோக்கம். இதற்காக போரால் முழுச் சிதிலமாகி இருந்த ஐரோப்பாவையும் ஜப்பானையும் அமெரிக்கப் போர் பொருளாதாரக் கட்டமைப்புடன் இணைத்தனர். உடனடி பணி ஐரோப்பா மற்றும் ஜப்பான் கைகளில் பணம் கிடைக்க வழி செய்ய வேண்டும் என்பதை அமெரிக்கத் தலைமை உணர்ந்தது. எனவே ஐரோப்பாவும் ஜப்பானும் அச்சடிக்கும் கரன்ஸி நோட்டிற்கு ஒரு குறிப்பிட்ட பரிவர்த்தனை விகிதத்தில் தனது செலாவணியான டாலரை அளிக்க முடிவு செய்து அறிவித்தது. போரினால் அதிகம் பாதிக்கப்படாத அமெரிக்காவின் டாலருக்கு தங்க தகுதரமும் இருந்தது (35 அமெ.டாலர்: 1 அவுன்ஸ் தங்கம்). இது ஐரோப்பிய ஜப்பானிய நாணயத்திற்கு ஒரு மதிப்பையும் ஏற்பையும் பெற்றுத்தந்தது. போரால் அதிகம் பாதிக்கப்பட்ட ஆனால் பெரும் மறுகட்டமைப்பிற்கு இடமிருந்த ஜப்பானும் ஜெர்மனியும் போருக்குப் பிந்தைய பொருளாதாரத்தை இழுத்துச் செல்லும் இரு எஞ்ஜின்களாக ஆகின. அந்த நாடுகளின் மறு கட்டமைப்பிற்குத் தேவையான சர்க்குகளுக்கான சந்தைக்கு உற்பத்தி செய்வது, தங்கள் நாட்டின் மறு கட்டமைப்பிற்குத் தேவையான சரக்குகளுக்கான சந்தைக்கு உற்பத்தி செய்வது என ஐரோப்பிய ஜப்பானியப் பொருளாதாரம் தொடர்ந்து வளர்ச்சி பெற்றது; தொடர்ந்து லாபம் சேர்ந்தது. அவற்றை ஒட்டி அமெரிக்கப் பொருளாதாரம் ஏனைய ஆசிய நாடுகளின் பொருளாதாரம் ஆகியவையும் வளர்ச்சி கண்டன.
ஏறக்குறைய 300 ஆண்டு காலம் முதலாளித்துவம் கட்டியமைத்திருந்த தொழிற்சாலை, உள்கட்டமைப்பு வசதிகள் எல்லாம் போரால் தவிடுபொடி ஆகியிருந்தன. அவற்றை மீளுருவாக்கம் செய்யும் பணி, முதலாளித்துவம் சுமார் 30 ஆண்டுகள் அதாவது 1973 வரை எந்த நெருக்கடியும் இல்லாமல் இயங்கத் தேவையான சந்தைக் கேட்பை (Demand) உருவாக்கித் தந்தது. லாபம் மேன்மேலும் குவிந்தது. அமெரிக்கா, ஐரோப்பா, ஜப்பான் ஆகியவை மிகக் குறைவான வேலையின்மை, மிகக் குறைவான விலைவாசி உயர்வு-பணவீக்கம், உயர் வளர்ச்சி வீதம், குறைந்து வரும் ஏற்றத் தாழ்வுகள் ஆகியவற்றைக் கண்டன.
அமெரிக்க டாலர் எல்லோரும் சேகரிக்கத் தேடும் நாணயமாக ஆகியது. அமெரிக்காவில் ஏதும் சரக்கு வாங்காத நாடுகளும் டாலர் சேகரிக்கும் நாடுகளாகின. டாலர் தங்கத்தைக் காட்டிலும் மதிப்பானதாக ஆகியது. அமெரிக்க டாலருக்கும் ஏனைய – ஜப்பானிய, ஐரோப்பிய - நாடுகளின் நாணயங்களுக்குமிடையில் நிலையான பரிவர்த்தனை விகிதம் என்பது இதன் அடிப்படை.
இது தொடர வேண்டுமென்றால் அமெரிக்கா ஒரு உபரி நாடாகத் தொடர வேண்டும். அதாவது அமெரிக்கா மற்ற நாடுகளுக்கு செய்யும் ஏற்றுமதி ஏனைய நாடுகளிடமிருந்து செய்யும் இறக்குமதியைக் காட்டிலும் தொடர்ந்து அதிகமாக இருக்க வேண்டும். ஆனால் 1960 களின் முடிவில் இந்நிலை இல்லாமல் போனது. இதற்கு மூன்று காரணிகள் உண்டு. முதலாவது காரணி வியட்நாம் போர். அமெரிக்கா ஏராளமான செல்வத்தை அந்த வெல்ல முடியாத போருக்குக் கொட்டி அழுதது. இரண்டாவது லிண்டன் ஜான்ஸன் போருக்கு இளைஞர்களை குறிப்பாக கருப்பின இளைஞர்களை அனுப்பி பெற்ற கெட்ட பெயரை சமன் செய்யக் கொண்டுவந்த ‘மகத்தான சமூகம்’ (Great Society) திட்டம் காரணமாக பணப் புழக்கம் அதிகரித்து நாட்டின் இறக்குமதி அதிகரித்தது. குறிப்பாக ஐரோப்பிய, ஜப்பானிய நுகர்வுச் சாதனங்களின் இறக்குமதி அதிகரித்தது. மூன்றாவதாக ஜப்பானிய ஜெர்மானிய தொழிற்சாலைகளின் உற்பத்தித் திறனும் தரமும் அதிகரித்தன; அவற்றின் உற்பத்திப் பொருட்களின் விலை அமெரிக்க உற்பத்திப் பொருட்களைவிட ஒப்பீட்டளவில் மலிவானவையாக இருந்தன.
முழுகி வந்த அமெரிக்கப் பொருளாதாரத்தைக் காப்பாற்ற அமெரிக்க அதிபர் நிக்ஸன், 1971 ஆகஸ்ட் 15 ஆம் நாள், பிரெட்டன் வுட்ஸ் ஒப்பந்தத்தை முடிவிற்குக் கொண்டு வந்தார். அமெரிக்க டாலரை தங்க தகுதரத்திலிருந்து விடுவித்தார். ஐரோப்பிய, ஜப்பானிய நாணயங்களுக்கும் அமெரிக்க டாலருக்கும் இடையே இருந்த நிலையான நிர்ணயிக்கப்பட்ட பரிவர்த்தனை விகிதத்தை முடிவுக்குக் கொண்டு வந்தார். இனி பரிவர்த்தனை விகிதத்தை சந்தை தீர்மானிக்கும் என்றார்.
2002! நிக்ஸன் தங்க தகுதரத்தையும், டாலரின் நிலையான பரிவர்த்தனை மதிப்பையும் முடிவுக்குக் கொண்டு வந்து 30 ஆண்டுகள் ஓடியிருந்தன. அந்த ஆண்டு உலகில் மானுடத்தின் மொத்த வருவாய் 50 டிரில்லியன் அமெரிக்க டாலர்கள். (1 டிரில்லியன் : ஒரு லட்சம் கோடி!) ஆனால் அந்த ஆண்டு உலகெங்கும் நிதி மூலதன சூதாட்டத்தில் ஈடுபடுத்தப்பட்ட தொகை 70 டிரில்லியன் அமெரிக்க டாலர்கள். [நீங்கள் உங்கள் மாத சம்பளத்தைப் போல் 1.4 மடங்கு தொகையை சூதாடித் தொலைத்தால் என்ன ஆவீர்கள்?]
2007 ஆம் ஆண்டு, உலகில் மானுடத்தின் மொத்த வருவாய் 70 டிரில்லியன் அமெரிக்க டாலர்கள் ஆகின. ஆனால் நிதி மூலதன சூதாட்டத்தில் ஈடுபடுத்தப்பட்ட தொகை 750 டிரில்லியனாக ஆகிவிட்டது. இது வெறுமனே பங்குச் சந்தைப் பத்திரங்கள், கடன் பத்திரங்கள் மூலம் நடப்பதில்லை. இது ஆப்ஷன், ஹெட்ஜ் ஃபண்ட்…. இத்யாதி இத்யாதி ‘வருவிப்பான்கள்’ மூலம் நடைபெறுகிறது. வங்கிகள் ராமனிடம் வைப்புத் தொகை பெற்று அதிலிருந்து சோமனுக்கு வீடு கட்டக் கடன் கொடுக்கும். சோமனிடம் கொடுத்த கடனுக்கு சுமார் 10% வட்டி வாங்கும். ராமனின் வைப்புத் தொகைக்கு சுமார் 7% வட்டி அளிக்கும். மீதியைக் கொண்டு வங்கிப் பணியாளர்களுக்கு ஊதியம் அளிப்பதோடு லாபமும் சம்பாதிக்கும். இது போன்ற பணிகளை மட்டும் செய்யாது ராமனின் பணத்தை வைத்து சூதாடும். இதில் யாரேனும் ஒரு சோமன் கடனைக் கட்ட முடியவில்லையென்றால் பரவாயில்லை. ஆனால் சோமனைப் போன்று எல்லாக் கடன்காரர்களும் பணம் கட்டவில்லை என்றால் ராமன் போன்றோரின் வாழ்நாள் சேமிப்பு எல்லாம் காற்றில் ஆவியாகிவிடும். வங்கி தான் ஆடிய சூதாட்டத்தில் பெரும் இழப்பைச் சந்தித்தாலும் நொடித்துப் போகும். ஒரு வங்கி நொடித்தால் மிக நீண்ட சங்கிலிப் பிணைப்பில் ஒன்றை ஒன்று சார்ந்திருக்கும் எல்லா வங்கிகளும் ஸ்தம்பித்துப் போகும். எந்தப் பாவமும் செய்யாத ராமன் பாதிக்கப்பட்டு திவாலானது போல உண்மையில் உற்பத்தியில் ஈடுபட்டுள்ள நிறுவனங்களும் அந்த உற்பத்தி நிறுவனங்களின் பணத்தை வைத்துள்ள வங்கிகளும் திவாலாகும். பொருளாதாரம் கடும் வீழ்ச்சியில் விழும்.
1929 ஆம் ஆண்டு பொருளாதார நெருக்கடியும் பெரு வீழ்ச்சியும் இதுபோல ஏற்பட்டதுதான் என்று ஒரு குத்து மதிப்பான புரிதலுக்குக் கூறலாம். அது போன்ற நிலை மீண்டும் ஏற்படாமல் தடுப்பதற்குதான் பிரெட்டன் வுட்ஸ் ஒப்பந்தமும் உலக வங்கி, ஐ.எம்.எஃப் ஆகியவையும் வந்தன. ஆனால் பிரெட்டன் வுட்ஸ் ஒப்பந்தத்தை அமெரிக்கா கிழித்தெறிந்த பின் இது போன்ற நிலை உருவாகாது தடுக்க உலகில் அமைப்பேதுமில்லை, விசையேதுமில்லை. அப்படியென்றால் நிக்ஸன் பிரெட்டன் வுட்ஸையும் டாலரின் தங்கத் தகு தரத்தையும், நிலையான பரிவர்த்தனை விகிதத்தையும் முடிவிற்குக் கொண்டுவந்ததன் காரணம் என்னவெனப் புரிந்துகொள்ள வேண்டும்.
1960களின் இறுதியிலேயே அமெரிக்காவின் வணிக உபரி சரியத் தொடங்கி விட்டது. விரைவில் அமெரிக்க டாலர் தங்கத்திற்கெதிரான மதிப்பை இழக்கும் என்பதை அறிந்த நிதிமூலதன முதலைகள் டாலரைத் தங்கத்திற்கு மாற்றத் தொடங்கினர். இந்தப் போக்குத் தொடர்ந்தால் அமெரிக்கத் தங்கம் முழுவதும் காணாமல் போகும். இதை உணர்ந்த நிக்ஸன் தங்க தகு தரத்தை விலக்கினார். டாலர் மதிப்பிழக்கத் தொடங்கியது. ஆனால் ஒரு கட்டத்திற்குப் பிறகு அது மதிப்பிழக்கவில்லை. மாறாக மதிப்பேறத் தொடங்கியது. என்ன மாயம்? அமெரிக்க டாலருக்கும் ஏனைய நாணயங்களுக்கும் இடையே 1948 இல் செயற்கையாக உருவாக்கியிருந்த பரிவர்த்தனை விகிதத்தையும் விலக்கிக் கொண்டது. அதுவரை டாலரோடு பிணைக்கப்பட்டிருந்ததால் மதிக்கப்பட்ட ஐரோப்பிய, ஜப்பானிய நாணயங்கள் மதிப்பிறக்கம் கண்டன. எல்லோரும் டாலருக்கு ஆளாய்ப் பறந்தனர். ஏனென்றால் பெட்ரோலியப் பொருட்களை எல்லோரும் இப்போது டாலர் கொடுத்துதான் வாங்க வேண்டும் எனும் நிலை. அந்த நிலைக்கு மேற்காசிய நாடுகள் ஏன் வந்தன என்பது பெரிய கதை. அதுமட்டுமல்ல; ஏனைய முக்கியமான கனிமப்பொருட்கள், விமான, கப்பல் சரக்குக் கட்டணம் என ஏராளமான வணிகப் பரிவர்த்தனைகளை டாலரைக் கொண்டு மட்டுமே நடத்த முடியும் என்பதே நிலை. எனவே டாலரின் மதிப்பு உயர்ந்தது. இன்றுவரை தக்க வைக்கப்பட்டுள்ளது.
இத்தோடு வேறு ஒரு போக்கும் ஆரம்பமானது. அமெரிக்கப் பொருட்களின் உற்பத்தி விலை ஐரோப்பிய ஜப்பானியப் பொருட்களின் விலையோடு ஒப்பிட அதிகமாக இருந்தது. பல காரணங்கள் இருந்தன என்றாலும் உடனடியாக அமெரிக்க நிறுவனங்களும் அரசும் ஊருக்கு இளைத்தவன் பிள்ளையார் கோயில் ஆண்டி என அமெரிக்கத் தொழிலாளரின் கூலியை ஒப்பீட்டளவில் குறைத்தன. இன்றைக்கு (2020 இல்) அவர்களது உண்மைக் கூலி 1974 ஆம் ஆண்டு கூலிதான். அத்தோடு 1970ஆம் ஆண்டுகளின் தொழிலாளர் யூனியன்கள் மீதான தாக்குதலும் ஆரம்பமாகியது. இதனை ஐரோப்பிய நாடுகளும் தத்தம் நாடுகளில் பின்பற்றினர். ரீகனிசமும் தாட்சரிசமும் மேற்குலகு முழுவதும் கோலோச்சின.
1991 ஆம் ஆண்டு சோவியத் யூனியன் வீழ்ச்சியடைந்து சிதறியது. இந்தப் போக்கு இன்னும் வேகம் கண்டது. அதன் பிறகு ரஷ்யாவும் மிகவும் முக்கியமாக சீனாவும் அமெரிக்காவிற்கு தொடர்ந்து மூலதனத்தையும் உற்பத்திச் சரக்குகளையும் அனுப்பின. இரண்டிலும் பற்றாக்குறை கொண்ட அமெரிக்கா அப்படி உலகம் முழுவதும் இருந்து உற்பத்திப் பொருட்களையும் மூலதனத்தையும் ஈர்க்கும் காந்தமாயிற்று. டாலர் தங்கமாகியது. அமெரிக்க முதலாளித்துவம் வாழ்வது சீனா உட்பட எல்லோருக்கும் தேவை என்றானது.
இந்தச் சூழல் மாற்றத்தோடு 1929 பெரு வீழ்ச்சியோடு காணாமல் போயிருந்த பொருளாதாரக் கோட்பாடுகள் எல்லாம் புத்தம் புதிய ஞானம் போல மீண்டெழுந்தன. ஒழுங்காற்றல் என்ற பெயரிலான அரசாங்கத் தலையீடில்லாத நிதிச் சந்தை வேண்டும்; சந்தை என்ன செய்ய வேண்டும் என்பதை அறியும் என்பதெல்லாம் மீண்டும் மீண்டும் கூறப்பட்டன. இத்தோடு 1970 களின் இறுதியில் சந்தைக்கு வந்த தனிநபர் கணினி, 90 களில் வந்த இணையம், WWW ஆகியவையும் இணைந்தன. வருவிப்பான்கள் (Derivatives), ஆப்ஷன், ஹெட்ஜ் ஃபண்ட் இத்யாதி இத்யாதி நிதிமூலதனப் பத்திரங்களில் நடக்கும் யூக வணிகம், சூதாட்டம் எல்லாம் கற்பனைக்கெட்டாத அளவுகளில் கண்ணிமைக்கும் நேரங்களில் நடந்தன. கணினிகளும் இணையமும் நிதிமூலதன சூதாடிகளின் ஆட்டத்தை மிகவும் சிக்கலானதாக, எந்தவொரு தேசிய அரசின் கட்டுப்பாடும் இல்லாத வெளியில் நடத்திட ஏது செய்தன. இந்த நீண்ட வலுவற்ற சங்கிலியில் ஓரிடத்தில் ஏற்படும் துண்டிப்பு கணநேரத்தில் உலகமெங்கும் பாதிப்புகளை ஏற்படுத்தி உலகளாவிய அளவில் வழமையான பொருளாதார நடவடிக்கைகளும் ஸ்தம்பித்து நிற்கச் செய்தன. 2008 வரை நடந்தது அன்று நின்றது குமிழ் உடைந்தது. கோடிக் கணக்கான மக்கள் பாதிக்கப்பட்டனர். ஆனால் இந்தக் குமிழ்களை உருவாக்கி ஊதிப் பெரிதாக்கிய வங்கியாளர்கள், முதலீட்டு நிறுவனத் தலைவர்கள் உடைந்து போகவில்லை, எரிந்துபோகவில்லை. ஏனென்றால் அவர்கள் எரிந்து போக அனுமதிக்கப்பட்டால் மிச்சமீதம் இருக்கும் பொருளாதாரச் செயல்பாடும் நிலைகுத்தி நின்று போகும். அமெரிக்காவில் வீடற்றவர்கள் எண்ணிக்கை இன்னும் பலமடங்கு அதிகமாகும். எனவே அமெரிக்க அரசு அளவற்ற பணத்தைப் பாய்ச்சி, அவர்கள் உடைந்து போகாமல் எரிந்துபோகாமல் காப்பாற்றியது.
இப்படி கணினியும் இணையமும் முதலாளித்துவத்தின் பரிணாம வாழ்வுத் தகுதியை அழித்துவிட்டன (Capitals Evolutionary Fitness). அது தனது உடைமையாளர்களை முதலாளித்துவத்திலிருந்து முகிழ்ந்தெழுந்த புதிய ஆளும் வர்க்கமாக மாற்றிவிட்டது. மூலதனம் இப்போதும் இருக்கிறது; அது செழித்துக் கொழிக்கின்றது. ஆனால் முதலாளித்துவம் ஒழிந்துபோனது. ஒரு சமூகக் கட்டமைப்பிற்குள் தொழில்நுட்பம் வளர்ச்சி காண்கிறது. ஒரு கட்டத்தில் சமூகக் கட்டமைப்பு அடையாளம் காண முடியாத புதிய ஒன்றாக மாற்றம் காண்கிறது. ஆனால் இந்தக் கட்டமைப்பைக் கட்டியமைத்த எல்லாமும் முழுமையாக மாறியாக வேண்டும் என்ற கட்டாயம் இல்லை. மூலதனம், உழைப்பு, பணம் ஆகியவை எல்லாம் புதிதாக ஆக வேண்டும் என்ற கட்டாயம் இல்லை.
கடற்பயணத்திலும் கப்பல் கட்டும் தொழில்நுட்பத்திலும் ஏற்பட்ட மாற்றங்கள் உடனடியாக நிலப்பிரபுத்துவத்தை ஒழித்துவிடவில்லை. மாறாக வணிக அளவுகள் பெரிதும் அதிகரித்து வணிக முதலாளித்துவத்தின் செல்வக் குவிப்பு அதிகரித்து ஒரு நிலைமாற்றுப் புள்ளியை அடைந்தபோது அது நிலத்தையும் உழைப்பையும் விற்பனைச் சரக்காக மாற்றியது. விரைவில் எல்லாம் விற்பனைச் சரக்குகளாக மாறின. நிலப்பிரபுத்துவம் முதலாளித்துவமாக உருமாற்றம் அடைந்தது.
அதுபோல 2008ஆம் ஆண்டிற்குப் பிறகும் உலகமெங்குமிருந்து லாபம், சேமிப்பு எல்லாம் வால்ஸ்ட்ரீட்டுக்கு வந்து குவிவது நிற்கவில்லை. ஆனால் அவ்வாறு குவியும் செல்வத்தில் ஒரு சிறு பகுதிதான் உண்மையான உற்பத்தியை நடத்தும் தொழிற்சாலை மூலதனமாக, தொழில் நுட்ப வளர்ச்சி, வேளாண்மை வளர்ச்சி மூலதனமாக மாறியது. வால்ஸ்ட்ரீட்டுக்கு வந்து சேர்ந்த மூலதனம் வால்ஸ்ட்ரீட்டிலேயே தங்கி நின்றது. அது ஊக வணிகத்தில் ஈடுபட சூதாடிகளுக்கு பணம் அளித்து அவர்களை அதில் ஈடுபட நிர்பந்தித்தது. இல்லையென்றால் அவர்கள் வேலை பறிக்கப்படும். எனவே அவர்களும் அதுவரை உலகம் காணா அளவுகளில் ஊக வணிக சூதாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இவர்கள் கையிலிருக்கும் மூலதனம் உண்மையில் உற்பத்தியில் ஈடுபட்டிருக்கும் மூலதனத்தைப் போல் பலமடங்கு. இவர்கள் கைவசமிருக்கும் மூலதனம் புதியவகை மூலதனம். இவை தொழிற்சாலைகளாக, வேளாண் பண்ணைகளாக, எந்திர சாதனங்களாக நிலத்தில் காலூன்றி நிற்பவை அல்ல. அவை எங்கோ வானத்தில் மிதக்கும் மேக மூலதனம் (Cloud Capital). இந்தப் புதிய வகை மூலதனத்தின் பிறப்பை அதன் வரலாற்றை முதல் இரண்டு அத்தியாயங்களில் விளக்கிய யானிஸ் வருஃபாக்கிஸ் இந்தப் புதிய மூலதனத்தின் இயங்கு விதிகளை அடுத்து வரும் அத்தியாயங்களில் விளக்குகின்றார். அதன் மூலம் அதனைத் தான் ஏன் தொழில்நுட்ப பிரபுத்துவம் என அழைக்கின்றார் என்பதையும் விளக்குகின்றார். அதனை அடுத்த பகுதியில் காண்போம்.
தொடரும்...
- ப.கு.ராஜன், NCBH பதிப்பாசிரியர், எழுத்தாளர், செயல்பாட்டாளர்.