adv tamilநகரத்தில் வாழும் நடுத்தர வர்க்கக் குடும்பம் அது. மனைவியும் கணவனும் அன்றைய இரவு உணவு செய்வது குறித்துப் பேசிக் கொண்டிருக்கின்றார்கள். வீட்டின் அழைப்பொலி சப்தம் கேட்கக் கதவைத் திறந்தவர்களிடம், "டிப்டாப்' உடையில் வந்த டெலிவரி பாய், "டின்னர் ஆர்டர் பண்றீங்களா?'' என்ற கேள்வியுடன் உணவுப் பட்டியல் அடங்கிய அட்டையை நீட்டுகிறார். சமைக்கத் தயாராய் இருந்தவர்களுக்கு இன்றைக்கு மட்டும் ஆர்டர் செய்து சாப்பிடலாமே என்கிற சபலம் தோன்ற கணவனும் மனைவியும் ‘ஆன்லைன்' உணவை ருசித்துச் சாப்பிடுகிறார்கள்.

இனிவரும் காலங்களில் அவர்களது அன்றாட இரவு உணவை அந்த ‘ஆன்லைன்' உணவு நிறுவனங்களே தீர்மானிக்கப் போகின்றன என்ற சதி அந்த இணையருக்குத் தெரியாது!

ஆட்டைக் கடித்து, மாட்டைக் கடித்து இறுதியில் மனிதர்களைக் கடித்த கதையாக நம் வீட்டின் அடுப்பில் இருந்த கொள்ளிக் கட்டையை உருவி, மரபுவழி உணவு உரிமைக்கு வேட்டு வைத்து, ‘ஆன்லைன்' உணவை நீட்டுகின்றன சுமோட்டோ, சுவிக்கி, ஊபர் ஈட்ஸ் போன்ற ‘ஆன்லைன் உணவு' நிறுவனங்கள்.

நமது உணவு உரிமையைத் தட்டிப் பறித்த இந்தப் பன்னாட்டு நிறுவனங்கள் உலகின் பல்வேறு நாடுகளிலிருந்து நேற்றுக் கிளம்பியவர்கள் இல்லை.

1991இல் அமெரிக்கா போன்ற மேற்குலக நாடுகள் தங்கள் வல்லாதிக்க நலனை விரிவாக்கம் செய்யும் பொருட்டு நிறுவிய ‘காட்' ஒப்பந்தத்தில் கையெழுத்திட்ட கணமே உலகமயப் புதைச் சேற்றுக்குள் சிக்கிக் கொண்டது இந்தியா.

உலகமயமாக்கல், புதிய தாராளவாதம் ஆகியவற்றின் வழிகாட்டுதலால் பிறந்த புதிய பொருளாதாரக் கொள்கையால் பன்னாட்டு வணிக நிறுவனங்களுக்கு ஏகபோக மூலதனக் குவிப்புக்கும் எல்லையற்ற சந்தை அனுமதிக்கும் வசதியாகிப் போனது.

உலகமயத்தின் வரவால் வேளாண்மை உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்களின் விலை பன்மடங்கு பெருகியது. தொழில்நுட்பங்களின் மிகுதியான இறக்குமதியால் நமது மரபான தொழில்கள் படிப்படியாக அழிவுக்குள்ளாயின; பொதுத்துறை நிறுவனங்கள் வீழ்ச்சியடைந்து தனியார் துறையாகத் தடம்புரண்டன; இதனால் வேலைவாய்ப்புகள் மறுக்கப்பட்டன; பன்னாட்டு நிறுவனங்களின் வேட்டைக் காடாக நமது இயற்கை வளங்கள் பலி கொடுக்கப்பட்டன.

இந்தியா போன்ற வளர்முக நாடுகள் பன்னாட்டு நிறுவனங்களின் கொள்ளைக்குக் கதவு திறந்து விட்டு வாசலில் காத்து நின்றன. மெய்யான மக்கள் நலன் ஆட்சியாளர்களோடு தொடர்பற்றதாகிப் போனது. குறிப்பாக கல்வி, மருத்துவம் உள்ளிட்ட மக்களுக்கு நேரிடையாக சேவையாற்ற வேண்டிய கடமையிலிருந்து அரசு விலகி நின்று வேடிக்கை பார்க்கிறது. அதனால் இந்தத் துறைகளில் தனியார் நிறுவனங்கள் புகுந்து தாண்டவமாடுகின்றன.

அவர்களின் வசூல் எல்லைக்கு வரையறையேயில்லை. தனியார் பள்ளி, கல்லூரிகளில் மாணவர்களுக்கான கட்டண நிர்ணயங்கள் இருந்தும் அது காற்றில் பறக்கவிடப்படுகின்றன. அரசுப் பள்ளிகள் மீதான அரசின் பாராமுகத்தாலும் தனியார் பள்ளிகள் மீது கொள்ளும் கரிசனத்தாலும் தனியார் பள்ளிகளே தரமான பள்ளிகள் என்ற முடிவுக்கு மக்கள் எளிதில் வந்து விடுகிறார்கள். எனவே தனியார் துறையினரிடம் இலாபம் குவிகிறது. ஏனெனில் உலகமயம் விதித்திருக்கும் பொருளில் கல்வி ஓர் இலாபம் தரும் தொழில்.

"தனியார் மயம், தாராளமயம், உலகமயம் அமல்படுத்தப்பட்ட பிறகு இந்தியர்கள் அனைவரும் பணக்காரர்களாகி விடுவார்கள்'' என்று அதன் ஆதரவாளர்களான ஆட்சியாளர்களும், முதலாளிகளும் திரும்பத் திரும்பச் சொல்லி வந்தார்கள். ஆனால் நடந்தது என்ன? பன்னாட்டு பகாசுர நிறுவனங்களின் இலாபவெறிக்கு இலக்காகி நமது விவசாயம் இருப்பு இழந்து போனது.

வளர்ந்த நாடுகள் அந்தந்த நாடுகளின் வேளாண்மைக்கு அதிகப்படியான மானியத்தை வழங்கி விளைச்சலைப் பெருக்கி, குறைந்த விலையில் இந்தியா போன்ற வளர்முக நாடுகளுக்கு இறக்குமதி செய்வது சந்தைப்படுத்தியதன் காரணமாக, நம் விவசாயிகள் வியர்வை மழையில் நனைந்தும் வெயிலில் கருகியும் பாடுபட்டு விளைவித்த பொருட்களுக்கு சந்தையில் கட்டுப்படியான விலை கிடைக்காமல் போனது. இதனால் உண்டான மன வேதனையாலும், கடன் தொல்லையாலும் இந்தியாவில் சுமார் 5 இலட்சத்திற்கும் மேற்பட்ட விவசாயிகள் தற்கொலை செய்து மரணமடைந்துள்ளார்கள்.

உயிருக்கே உத்திரவாதமற்ற நாட்டில் "பணக்காரர்' என்ற சொல்லே பகட்டானதாக  போலித் தனம் நிறைந்ததாகத் தெரியவில்லையா நம் ஆட்சியாளர்களுக்கு? "ஆதிக்கம் செலுத்தும் எந்த ஒரு வர்க்கமும் தனது மேலாண்மையை நிலைநிறுத்திக் கொள்வதற்காகத் தனது கருத்தியலை அந்த தேசத்தின் ஒட்டுமொத்த கருத்தியலாக முன்னிறுத்தும். அதை எல்லா இடங்களிலும் திணிக்கும்'' என்று இத்தாலி நாட்டைச் சேர்ந்த மார்க்சிய சிந்தனையாளர்

அந்தோனியே கிராம்ஷியின் கூற்று எத்தகைய பொருத்தப்பாடானது என்பதை நம் ஆட்சியாளர்களின் வாய்மொழி உரைகள் உறுதிப்படுத்துகின்றன.

நாம் காலையில் எழுந்ததும் பல் துலக்கப் பயன்படுத்தும் வேப்பங்குச்சியைப் பிடுங்கிக் கொண்டு டூத் பிரசைக் கொடுத்து, "டூத் பேஸ்டில் உப்பிருக்கிறதா?'' "காரமிருக்கிறதா?'' எனக் கேட்டு நமைச்சல் செய்த அமெரிக்க நிறுவனம், நம் வீட்டின் வாசலில் வயல்வெளியில் நீர்நிலைகளின் கரையில் எனக் கானகமெங்கும் பசுமை பொங்க கிளைத்து நின்று, தமிழர்களின் பாரம்பரிய மருத்துவ அறிவுப் பெட்டகமாய் விளங்கிய வேப்பமரத்திற்குக் காப்புரிமை வாங்கிக் கொண்டு அடாவடி செய்கிறது. ஏன் தெரியுமா? அமெரிக்க மக்களிடத்தே வேப்பங்குச்சியை விற்றுப் பணம் பார்ப்பதற்காகவும், அவர்களின் நலனைக் காப்பதற்காகவும்.

‘டபுள்யு. ஆர். கிரேஷ்' நிறுவனம் வாங்கியிருந்த காப்புரிமையை நம் சூழலியலாளர்கள் போராடி மீட்ட கதை வேறு. இப்படியாக பல தேசிய இன மக்களின் முன்னோர் அறிவுச் செல்வத்தைச் சுரண்டி அதில் இலாபம் கறக்கும் போக்கு பன்னாட்டு நிறுவனங்களுக்கு எளிய கலை. குறிப்பாகத் தமிழகத்தில் இயற்கை வேளாண்மை இயற்கை உணவுகள் குறித்த விழிப்புணர்வுகள் பரவலாக்கம் பெற்றுவரும் இச்சூழலில் அதனைத் தனது இலாபவெறிக்குத் தீனியாக்கிக் கொள்ளப் பன்னாட்டு நிறுவனங்கள், இயற்கை வேளாண் உணவுப் பொருட்கள் (Organic foods) விற்பனை அங்காடியைக் சென்னை உள்ளிட்ட நகரங்களில் ஆங்காங்கே தொடங்கி கொள்ளை இலாபம் சம்பாதித்து வருகின்றன.

ஆனால் அந்நிறுவனங்கள் விற்கும் இயற்கை வேளாண் பொருட்கள் 100 விழுக்காடு இயற்கையான முறையில் விளைந்தவைதானா என்ற சந்தேகத்தைக் கிளப்பியிருக்கிறது ஸ்டான்ஃபோர்டு பல்கலைக்கழக ஆய்வு. உடல்நலத்திற்கு உவப்பான உணவாகக் கருதப்படும் வெங்காயத்தையும் பூண்டையும் அருவறுக்கத்தக்க பொருளாக தொலைக்காட்சி விளம்பரங்கள் காட்டுகின்றன. இந்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், "வெங்காயம்  பூண்டு ஆகியவற்றைத் தாம் பயன்படுத்துவதில்லை'' என்று பொது வெளியில் பெருமிதம் கொள்கிறார்.

பூண்டு, வெங்காயம் போன்ற மருத்துவக் குணமுள்ள நல்ல உணவுப் பொருட்களை மக்களிடமிருந்து அபகரித்துக் கொள்ள பன்னாட்டு நிறுவனங்கள் போட்டி போட்டு நிற்கும் தற்போதைய சூழலில், அவரின் இந்தப் பேச்சைத் தற்செயலானதாகவோ, எதார்த்தமானதாகவோ எடுத்துக் கொள்ள முடியாது. அதில் நுண்ணிய அரசியல் ஒழிந்திருக்கிறது.

உலகமயம் ‘தான்' என்கிற சுயநலத்தைத் தூண்டி வலுப்படுத்தி வருகிறது. ‘தானும் தன் குடும்பமும் சுகபோகமாக வாழவேண்டும், ‘தான் விலையுயர்ந்த உடைகளை உடுத்த வேண்டும்', ‘சொகுசுக் கார்களில் பயணிக்க வேண்டும்' என்று தனக்கென ஓர் உலகத்தைக் கட்டமைத்துக் கொண்டு சுயநல ஊஞ்சலில் பயணிக்க உலகமயம் வழிகாட்டுகிறது.

மக்கள் நலன் சார்ந்த பொது சிந்தனை அவர்களை நெருங்கவிடாமல் பார்த்துக் கொள்கிறது. ஏனெனில் மக்கள் நுகர்வுக்கு அப்பால் செல்வதை உலகமயம் விரும்புவதில்லை.

‘சந்தையில் இது புதுசு' என்ற தலைப்புடன் தொலைக்காட்சி உள்ளிட்ட ஊடகங்கள் போட்டி போட்டுக் கொண்டு புதிதாக வந்திருக்கும் வாகனங்களை விளம்பரப்படுத்துகின்றன. இந்தப் புதிய வாகனங்கள் ஏற்கனவே ஒருவர் பயன்படுத்தி வருகின்ற வாகனத்தோடு ஒப்பிடுகையில் சின்னஞ்சிறு மாற்றங்களைக் கொண்டவையே.

ஆனால் அதையே உயர்தனி மொழியில் பேசி, பழைய வாகனத்தை விற்றவிட்டுப் புதிய வாகனத்தை வாங்க வைக்கும் தரகராகச் செயல்படுகின்றன ஊடகங்கள். கடந்த ஆண்டு வாங்கிய வாகனங்கள் பன்னாட்டு நிறுவனங்களால் திட்டமிட்டே பழையதாக மாற்றப்படுகிறது.

மின்னணுச் சாதனங்கள், கைப்பேசிக் கருவிகள் போன்றவற்றிலும் சிறிய அளவிலான மாற்றங்களைச் செய்து விற்பனைத் தொகையை அதிகரித்து விற்கின்றார்கள். மேலும் ‘கழிவு' என்ற பெயரில் மக்களைக் கவரும் வகையில் விளம்பரப்படுத்தி காலாவதிகாலப் பொருட்களை அவர்கள் தலையில் கட்டிவிடுகின்றனர்.

‘நிக்கி சூ' என்ற இந்தோனேசிய செருப்புத் தொழில் நிறுவனம் ஒரு நடிகருக்கு ஒரு தடவை மட்டும் விளம்பரத்தில் தோன்றுவதற்கு 2 கோடி டாலர்களை வழங்கியுள்ளது. இது அந்த நிறுவனத்தில் பணியாற்றும் தொழிலாளிகளின் கூலித்தொகையை விட 10 மடங்கு அதிகம்.

மக்களை வேறெங்கும் திரும்பவிடாமல் தங்கள் நிறுவனப் பொருட்களை நோக்கிக் கவனத்தைக் குவிப்பதற்காக கோடிக்கணக்கில் செலவழித்து சினிமா, கிரிக்கெட் பிரபலங்களை வைத்து விளம்பரங்களைத் தயாரிக்கின்றனர். விளம்பரத்திற்கு ஆகும் செலவையும் இறுதியில் மக்களே சுமக்க வேண்டியிருக்கிறது.

தொலைத் தொடர்புச் சந்தையிலும் மக்களைத் தன் வயப்படுத்த ஒரு ஆண்டிற்கு முற்றிலும் இலவசம் என இணைய சேவையை அறிமுகப்படுத்தி போட்டியிலிருந்த இதர நிறுவனங்களை ஓரங்கட்டிவிட்டு, இன்று முற்றுரிமை நிலையில் தான்தோன்றித்தனமாகக் கட்டணத்தை நிர்ணயித்து இலாப வெறியில் திளைத்து வருகிறது அம்பானியின் ஜியோ நிறுவனம்.

கேழ்வரகுக் கூழும், வரகுக் கஞ்சியும், கம்புத் தோசையும் இன்றைய தலைமுறை அறியாத உணவுகளாக மாறிவிட்டன. வாழும் சூழலுக்கு ஏற்ப நம் முன்னோர்களால் உண்ணப்பட்ட உணவு ரகங்களை ஏளனம் செய்து ஒதுக்கியதன் காரணமாக இன்று பீட்சா, பர்க்கர் போன்ற மேற்கத்திய உணவு வகைகள் நாக்கின் அருகே வந்து நர்த்தனம் ஆடுகின்றன. ஊடகங்கள் கட்டமைத்த விளம்பரங்களால்தான் ஜியோவின் நிறுவனத்திற்கு இந்த இலாபம் கைகூடியது.

விளம்பரங்கள் நம் மக்களுக்கு உளவியல் ரீதியான நெருக்கடியைக் கொடுத்து வருகிறது என்பதை மறுக்க முடியாது. இன்று ஏழை எளிய மக்கள் அனைவரது வீட்டிலும் தொலைக்காட்சி உள்ளது. ஆனால் அவர்களின் வயிற்றுக்கு உணவு உத்திரவாதமில்லை.

ஆனால் தொலைக்காட்சி விளம்பரமோ எச்சிலை ஊற வைக்கம் உணவுப் பதார்த்தங்களைக் காடசிப்படுத்தி, வயிற்றுப் பசியுடன் வாழ்க்கையைக் கழிக்கம் ஏழைகளின் வயிற்றெரிச்சலை வாங்கிக் கொட்டிக் கொள்கிறது.

மேலும் குழந்தைகள் நல்ல உணவின் மீது கை வைத்து, தத்தித் தழுவி உண்ண எத்தனிக்கும் ஒவ்வொரு முறையும் தொலைக்காட்சி விளம்பரங்கள் தட்டை வெடுக்கென்று பிடுங்கிக் கொண்டு குர்குர்ரே, லேய்ஸ், மாகி, கிண்டர்ஜாய், சீட்டோஸ், சிட்டால் போன்ற தீங்கிழைக்கும் தீனிகளை ஊட்டிவிடுகின்றன. தெலைக்காட்சிகளில் காட்டப்படும் பெரும்பாலான உணவுகள் ‘ஜங்புட்' எனப்படும் குப்பை உணவுகளாகவே இருக்கின்றன.

இவை அனைத்தும் மெல்லக் கொல்லும் விசம் என்பதை அறிந்தும் பணத்திற்காகப் பன்னாட்டு பெரு நிறுவனங்களிடம் பல்லிளித்துக் கொண்டு, குழந்தைகளின் எதிர்காலத்தைக் காவு கொடுத்து வருகின்றன தொலைக்காட்சி நிறுவனங்கள்.

மேலே கண்ட நொறுக்குத் தீனிகள் கிராமப்புறக் கடைகளில் கூட பல வண்ணங்களில் காற்றடைத்த பைகளில் சரம்சரமாகத் தொங்கி குழந்தைகளைக் கவர்ந்திழுத்து வருகின்றன. சில பெற்றோர்கள் பன்னாட்டு நிறுவனங்களின் உணவு அரசியலை அறியாது தனது குழந்தைகளுக்கு இந்தக் குப்பை உணவுகளை வாங்கிக் கொடுத்து அவர்கள் உண்பதைப் பார்த்து இரசித்துக் கொண்டிருக்கிறார்கள்.

உலகமயம் விதைத்த உடல்நலத்திற்குச் சவால் விடும் இந்த உணவுகள் மக்களிடத்தில் பல்வேறு நோய்களைக் கொண்டு வந்து சேர்க்கின்றன. ஊட்டச்சத்து குறைந்த கொழுப்புச் சத்துமிகுந்த துரித உணவுகளால் இதயநோய், புற்றுநோய், நீரழிவு, உடல்பருமன் போன்ற உடல்நலச் சிக்கல்கள் உண்டாகின்றன. இதனால் மனிதனின் வாழ்நாள் குறைந்து வருவதை மருத்துவ ஆய்வுகளின் மூலம் ஒப்பீடு செய்து எதார்த்தத்தைப் புரிந்து கொள்ள முடியும்.

இனிவரும் காலங்களில் நிலைமை இன்னும் மோசமாகி இளம் வயது மரணங்கள் அதிகரிக்கும் என்று மருத்துவர்கள் கவலை தெரிவித்துள்ளார்கள். ஆனால் பொது சமூகம் அது பற்றியெல்லாம் கவலை கொள்வதாகத் தெரியவில்லை. இன்றைய சீரற்ற குப்பை உணவு முறையால் பெண்கள் இளம் வயதிலேயே பருவமெய்தி விடுகிறார்கள்.

சில பத்தாண்டுகளுக்கு முன்பெல்லாம் ஒல்லியான உருவமைப்பு உடையவர்களைத் தெருக்களில் அதிகமாகப் பார்க்கமுடியும். ஆனால் இன்று உடல் பருமன் என்பது தவிர்க்க முடியாததாகி, அதற்கே தனியே மருத்துவம் பார்ப்போரும் உண்டு.

தொலைக்காட்சிகளில் காட்டப்படும் பெரும்பாலான விளம்பரங்கள் எளியோரை நகையாடுவதாகவும், எதார்த்த சிந்தனைக்கு எதிரானதாகவும் இருப்பதைக் காணமுடிகிறது.

அட்சய திருதியை நாளன்று நம்மிடம் ஒரு கிராம் தங்கத்தையாவது திணித்து, சட்டைப்பையில் உள்ளதைப் பிடுங்கிக் கொள்ள நகைக்கடை முதலாளிகளும், தொலைக்காட்சி நிறுவனர்களும் வரிந்து கட்டி நிற்கிறார்கள். அன்றைய நாளில் ஒரு கிராம் தங்கத்தையாவது வாங்கிவிட வேண்டுமென்று, நெரிசலில் பிதுங்கி அதனை வாங்கிச் செல்கிறார்கள். இந்த விடயத்தில் மக்களின் மூளையில் புகுத்தப்பட்டிருக்கின்ற மூடத்தனத்தை நகை முதலாளிகள் நன்கு பயன்படுத்திக் கொள்கிறார்கள்.

இன்னொரு விளம்பரம் திருமணம் செய்து கொள்ளாமலே Living together முறையில் ஒரு மங்கையோடு குடும்பம் நடத்திவரும் நகரத்தில் வாழும் தன் மகனைச் சந்திக்கக் கோபத்தோடு வரும் பெற்றோர்கள் அந்த மங்கை போட்டுக் கொடுத்த தேனீரில் சொக்கிப்போய் தனது மகனின் அந்த அறமற்ற செயலை அங்கீகரித்தது போல் புன்னகைக்கிறார்கள்.

தமிழர் பண்பாட்டைக் கேளிக் கூத்தாக்குகிறது அந்த விளம்பரம். இவ்வாறாக நம் இளைஞர் இளைஞிகளைப் பெருமளவு சீரழிவை நோக்கித் தள்ளி விடுகின்றன இன்றைய ஊடங்கள்.

நுகர்வியம் பெண்களைச் சந்தைப் பொருளாகப் பாவிக்கிறது. அதனால்தான் ஆண்கள் பயன்படுத்துகின்ற உள்ளாடை விளம்பரங்களுக்குக்கூட பெண்களை ஆபாசமாகக் காட்டுகிறது.

சின்னத்திரையில் காட்டப்படும் சினிமா மற்றும் நெடுந்தொடர்கள் குடும்ப அமைப்பைச் சிதைப்பதற்கும், பெண்கள் மீதான பாலியல் வன்முறைக்கும் ஒருவகையில் காரணமாக இருப்பதைச் சொல்லாமல் இருக்க முடியாது. ஊடகங்கள் திணித்த செயற்கையான நுகர்விய வறட்சியால் வாங்கும் திறனற்ற இளைஞர்கள் தங்கள் நுகர்வு வெறியைத் தீர்த்துக்கொள்ள கடத்தல் செயலில் ஈடுபட்டு, அது கொலை, கொள்ளையில் முடிந்த சம்பவங்களும் உண்டு. உலகமயப் பொருளியல் சுரண்டலும் நுகர்வியப் பண்பாடும் நாட்டில் குற்றச் செயல்பாடுகளை அதிகரிக்கச் செய்துள்ளது என்கிறார்கள் சமூக நோக்கர்கள். பாலியல் வன்முறை, கடத்தல், கொலை, கொள்ளை நிகழ்வின் போதும் குற்றவாளிகளை கண்டுபிடித்து விடுகிறோம்.

ஆனால் அதற்கான தூண்டல் காரணிகளை அடையாளம் காணத் தவறுகிறோம். ஏனெனில் அவர்கள் செல்வாக்கு மிக்கவர்கள்; அரசையே தீர்மானிக்கும் ஆற்றல் கொண்டவர்கள்!

வலிமையான ஊடக விளம்பரங்களின் வழியே இல்லத்திலிருக்கும் மனித மூளைக்குள் புகுந்து, சந்தையில் அதைச் சாத்தியப் படுத்துகிறது. உலகமயத்தின் சந்தைத் தளத்திலிருந்து யாரும் தப்பித்துவிட முடியாது. அத்தகைய மேலாதிக்கக் கட்டமைப்பால் அது பின்னப்பட்டிருக்கிறது.

ஏகாதிபத்தியவாதிகளில் இன்றைய அபரிமிதமான வளர்ச்சிக்கு உலகமய முதலாளிகளால் கட்டியெழுப்பப்பட்ட நுகர்வியப் பண்பாட்டுச் சுரண்டலே காரணமாகும்.

இருபதாம் நூற்றாண்டின் முதற்பாதியில் போர்கள் நடத்தி மக்களையும் அரசையும் அடிமைப்படுத்தினர். ஆனால் இன்று பன்னாட்டு வணிக நிறுவனங்கள் உலகத்தின் சந்தையைத் தக்கவைக்க தம் நிறுவனப் பொருட்களுக்கு மக்களை அடிமைப்படுத்தும் நுகர்வியப் போரை நடத்திக் கொண்டிருக்கின்றன. இந்தப் போரில் ஆட்சியாளர்களும் பன்னாட்டு நிறுவனத்தினரும் ஓரணியில் நிற்கிறார்கள்.

ஏகாதிபத்திய உலகமயமும், உலகமயச் சட்டத்திற்குள் கட்டுண்டு கிடக்கும் இந்திய ஆளும் வர்க்கமும் நம்மைச் சுரண்டிக் கொழுக்கும் நட்புச் சக்திகளாகத் திகழ்கின்றார்கள்.

உலகத்தையே சந்தையாகவும் உழலும் யாவரையும் நுகர்வோராகவும், இலாப வெறியே இலட்சியமாகவும் கொண்டு இயங்கி வரும் உலகமயம், மோசமான பண்பாட்டு விளைவுகளையும், சுற்றுச்சூழல் சீர்கேடுகளையும் உண்டாக்கி வருகிறது. சுவாசிக்கும் காற்றைக்கூட காசு கொடுத்து முகர வேண்டிய அவல நிலை நம்மைச் சூழ்ந்துள்ளது.

இந்த நேரத்தில் “மனித இனத்திற்கு எச்சரிக்கை'' என்ற பெயரில் ‘அக்கறையுள்ள அறிவியலாளர்கள் சங்கம்' வெளியிட்ட அறிக்கை நினைவுக்கு வருகிறது. அது, "எல்லையற்ற பொருள் குவிப்பின் ஆசையால் வேரூன்றியுள்ள மரபான கலாச்சார அமைப்புகளை மாற்றியமைப்பது மிக அவசரமான தேவையாகியுள்ளது''. இத்தகைய புரிதலோடு ஏகாதிபத்தியப் பண்பாட்டுச் சூழலுக்கு எதிராகப் பாடாற்ற வேண்டியது நமது வரலாற்றுக் கடமை.

- தங்க.செங்கதிர்

Pin It