எம். என். ராய் - இந்தியாவின் முதல் கம்யூனிஸ்ட். இந்திய பொதுவுடமை இயக்கத்தின் நூற்றாண்டுக் கொண்டாட்டங்களின் போது அதிகம் பேசப்பட்டு இருக்க வேண்டியவர். ஆனால் பேசப்படவில்லை என்பது வருத்தம் தரும் எதார்த்தம். அதனால் அவருக்கு ஏதும் இழப்பில்லை. உருது மொழியின் மகாகவி ஃபெய்ஸ் அஹ்மத் ஃபெய்ஸ் அவர்களின் கவிதை ஒன்று உண்டு.

இறுதி மடல்

ஒரு தினம் வரும்

விரைவில்

ஒரு தினம் வரும்

அன்று

பயனற்ற என் வாழ்வு முடிவுக்கு வரும்

…………………………….

………………………………

என் சாவுக்கு வருந்தி

நீ துக்கத்தில் மூழ்கலாம்

என் கல்லறையில்

வசந்தத்தின் மலர் தூவி

கண்ணீர் அஞ்சலி செலுத்தலாம்

அல்லது

என் கல்லறைக் கல்லில்

உன் காலடி மலத்தைத் துடைத்து விட்டு

என் பைத்தியக்கார நம்பிக்கைகளை

நினைவு கொண்டு சிரிக்கலாம்

நீ சிரித்தாலும்

அழுதாலும்

செய்வதறியாது திகைத்தாலும்

நான் அசையப் போவதில்லை

மண்ணிற்குள் ஆழப் புதைந்து கிடக்கும்

நான் அசையப் போவதில்லை

-      ஃபெய்ஸ் அஹ்மத் ஃபெய்ஸ் (The Unicorn and the dancing girl - 1988)

உருது மூலம் வெளிவந்த ஆண்டு குறித்த தகவல் இல்லை

தமிழில் : ஃபெய்ஸ் அஹ்மத் ஃபெய்ஸ் கவிதைகள் - ப.கு.ராஜன்

m n royகொண்டாடினாலும் கொண்டாடாவிட்டாலும் அவர் அசையப்போவதில்லை. அவர் புகழுக்கும் பிரபல்யத்துக்கும் ஆசைப்பட்டு எதுவும் செய்தவர் அல்லர். ஆனால் அவரைப் போல, சிங்காரவேலரைப் போல இந்தியாவின் தனித்துவமான நிலைகளைப் பற்றிய சரியானதும் வரலாற்றுப் பூர்வமானதும் அறிவியல் பூர்வமானதுமான புரிதல் கொண்டவர்களின் எழுத்துக்களை, சிந்தனைகளைப் போதுமான அளவு ஊன்றி கற்காததால் இந்தியாவின் இடதுசாரி இயக்கம் இழந்தது ஏராளம். ஏன்? எப்படி? என்று விவாதிக்க முற்பட்டால் இந்த நூல் அறிமுகமும் பரிந்துரையும் அளிக்கும் பக்க வரம்புகள் மீறப்பட்டுவிடும். எனவே அதனை வேறொரு சந்தர்ப்பத்திற்கு ஒத்திவைப்போம். நூலின் கருப்பொருளான ஃபாசிசம் பற்றிய அவரது எழுத்துகள் குறித்து சற்று காண்போம்.

நரேன் பட்டாச்சாரியா என்ற இயற்பெயர் கொண்ட எம்.எண். ராய் அவர்களால் 1933-35 ஆம் ஆண்டுகளில் சிறையிலிருந்து போது எழுதப்பட்டு 1936-ல் அவராலே செம்மைப்படுத்தப்பட்டு 1938 ஆம் ஆண்டு பதிப்பிக்கப்பட்ட “பாசிசம்: அதன் தத்துவம், முன்மொழிவுகள், மற்றும் நடைமுறை (Fascism: Its Philosophy, Profession and Practice)” என்ற ஆங்கில நூலின் தமிழ்மொழிபெயர்ப்பே இந்நூல்.

நூலை அருமையாக மொழிபெயர்த்துள்ள தோழர் வெ.கோவிந்தசாமி, நூலின் காலப் பொருத்தமும் முக்கியமும் உணர்ந்து இதனை முதலில் பதிப்பித்த விடியல் பதிப்பகத்தினர், சுற்றோட்டத்தில் இல்லையென்பதை உணர்ந்து இந்த இரண்டாம் பதிப்பைக் கொணர்ந்த பரிசல் பதிப்பகத்தினர், நூலுக்கு ஒரு நல்ல முன்னுரையளித்ததோடு எம்.என். ராய் குறித்தும் ஒரு நல்ல அறிமுகம் எழுதியுள்ள தோழர் அ. மார்க்ஸ் ஆகியோர் எல்லாம் நம் நன்றிக்கும் பாராட்டுகளுக்கும் உரியவர்கள்.

"ஃபாசிசப் பயங்கரவாதம், அரசியல் களத்தோடு நின்று விடவில்லை. மக்களின் மத வாழ்க்கையையும் இது விட்டு வைக்கவில்லை. ஹிட்லர் பதவிக்கு வந்த நேரத்தில் ஜெர்மன் புரோட்டஸ்டான்ட் தேவாலயத்தின் தலைவராக மிகப் பிரபலமான ஒருவர் இருந்தார். அவர் பெயர் பிஷப் பட்டியல் ஸ்விங். இவர் முற்போக்கு எண்ணம் கொண்ட நவீன மத குருவாக இருந்தார். அவர் ஃபாசிசத்தை ஏற்றுக் கொள்ளவில்லை. உண்மையான கிறிஸ்துவ பக்தியாலும் அருட்குணத்தாலும் உறுதி செய்யப்பட்ட இவரது ஜனநாயக உறுதிப்பாடு, ’ஏழைகளின் பிஷப்’ என்ற பெயரை இவருக்குப் பெற்றுத் தந்தது. இம்மாதிரியான ஒரு மனிதர் ஜெர்மன் கலாசாரத்தை ஆரியமயப்படுத்துவதை ஏற்றுக்கொள்ள முடியாது…

… மத அமைப்பில் உள்ள உயர் பதவிக்கு நடந்த தேர்தலில் இவரைப் தோற்கடிக்க பயங்கரவாதம், அடக்குமுறை, அவதூறு போன்ற வழிகளை [ஃபாசிஸ்டுகள்] மிகத் திறமையாகப் பயன்படுத்தினர்.

மக்கள் தொகையில் பெரும்பான்மையினரான தொழிலாளர் வர்க்கம், இது ஒரு மதத் தேர்தல் என்பதால் அலட்சியம் காட்டினர். ஆகவே பார்சிஸ்ட்டுகள் நிறுத்திய வேட்பாளர் வெற்றி பெறுவது உறுதியாகியது. உண்மையான பிஷப்பை அகற்றி அவ்விடத்தில் ஹிட்லரின் அடிவருடியை அமர்த்துவதற்கு தேர்தலில் இவர்கள் ஒரு முழக்கத்தை வைத்தனர்; அது, ”நாங்கள் இயேசு கிறிஸ்துவின் புயல் படையினர்” என்பது ஆகும்.

…..தேர்தல் பிரசாரத்தின் போது ஹிட்லர், ”தேவாலயத்தைக் காப்பாற்றாத ஓர் அரசாங்கம் பயனற்றது” என முழங்கியதன் மூலம் ஃபாசிச சர்வாதிகாரியின் ஆன்மீக உணர்வை வெளிப்படுத்திக் காட்டினார்….

பாசிசக் காட்டுமிராண்டித்தனங்களுக்கு தெய்வீக ஒப்புதலை பெற ஒரு புதிய தேவாலயம் உருவாக்கப்பட்டது. சகல வல்லமையும் பெற்ற அரசின் ஆன்மீக ஆயுதம் இது என்று அறிவிக்கப்பட்டது. பண்டைய ஆரிய உணர்வோடு தர்மத்தைப் பாதுகாப்பது, பாசிச அரசின் கடமைகளில் ஒன்றாக ஏற்றுக்கொள்ளப்பட்டது…. பயங்கரவாதம், வன்முறை, அவதூறு போன்றவற்றின் மூலம் பிரபல கிறிஸ்தவத் தலைவருக்கு எதிராகப் பெற்ற வெற்றியை ஹிட்லரின் அடிவருடிகள், "கடவுள் செய்த அற்புதம்” என அறிவித்தனர். பூமியில் உள்ள பாசிச அரசின் சொர்க்கத்தில் ஒவ்வொரு செயலுமே அற்புதம்தான்.”

'என்ன இது? இந்திய ’சங்கி பைல்ஸ்’ திரைப் படத்தின் ஜெர்மன் டப்பிங் பதிப்பின் கதை போல இருக்கின்றதே?!’ என்கின்றீர்களா? ஆம்! 'இரண்டும் ஒரே டெம்ப்ளேட்டா? அவர்களைப் பார்த்துதான் இவர்கள் கற்றுக் கொண்டார்களா? என்கின்றீர்களா?’ இல்லை! இவர்களைப் பார்த்துதான் அவர்கள் கற்றுக் கொண்டார்கள் என்கின்றார் எம்.என்.ராய்! எப்படி? மேலே படியுங்கள்.

fascism m n royஇன்றைக்கு பாசிசம் பற்றி பெருமளவிற்குப் புரிதல் இருப்பதாக கருதப்படுகின்றது. அதன் தோற்றம், அதன் கருவிகள், இயங்கு விதம், வெவ்வேறு தேசங்களில் அதன் வெவ்வேறு வகையான தோற்றங்கள் என்பவை குறித்து எல்லாம் சரியான புரிதல் இருப்பதாகக் கூற முடியவில்லை. ஆனால் அது ஒரு மோசமான கோட்பாடு, அணுகுமுறை, நடைமுறை என்ற புரிதல் பரந்துபட்ட அளவில் இருப்பதில் சந்தேகம் இல்லை. சொல்லப்போனால், தமக்குப் பிடிக்காத எதனையும் பாசிசம் என்றும் பிடிக்காத நபர்களை பாசிஸ்ட் என்றும் - அந்தப் பதம் ஒரு கெட்ட வார்த்தை போல, ஒரு வசவுச்சொல் போல பயன்படுத்தப்படுவதை அறிவோம். ஆனால் பாசிசம் வெகு வேகமாக பரவி வந்த முதலாம் உலகப் போருக்குப் பிந்தைய ஆண்டுகளில் அந்தத் தெளிவு இல்லை. ஃபாசிஸ்டுகளைப் பார்த்து ’நீங்கள் நல்லவரா? கெட்டவரா?’ எனக் கேட்கும் அப்பாவித் தனத்தோடுதான் பெரும்பாலான இடதுசாரிகளே இருந்தனர். ஏனெனில், உலக முதலாளித்துவம் நெருக்கடியில் இருந்த அந்த காலகட்டத்தில் ஃபாசிசம் சோசலிஸ அரிதாரத்தோடு வந்தது.

இத்தாலியின் பெனிட்டோ முசோலினி இத்தாலியின் சோசலிஸ்ட் கட்சியில்தான் தனது அரசியல் பணியைத் தொடங்கினார். அவர் ஒரு முக்கியமான மார்க்சிஸ்ட் என்று கருதப்பட்டவராக இத்தாலிய சோசியலிஸ்ட் கட்சியின் அதிகாரபூர்வமான இதழான அவந்தி (Avanti) இன் ஆசிரியராக இருந்துள்ளார்

ஜெர்மனியிலும் ஹிட்லரின் கட்சி,தன்னை 'தேசிய சோசியலிஸ்ட் தொழிலாளர் கட்சி’ என அழைத்துக் கொண்டதுடன் தீவிர முதலாளித்துவ எதிர்ப்பு வாய்ச் சவடால்களை அடித்து வந்தது. எனவே, ஐரோப்பியத் தொழிலாளர் வர்க்கமும் இடதுசாரிகளும் அறிவாளுமைகளுமே புரிந்து கொள்ள இயலாமல் மயக்கம் கண்டனர். ஆனானப்பட்ட ஸ்டாலினும் மூன்றாம் அகிலமுமே, ஜெர்மன் சமூக ஜனநாயக கட்சியினர்(SPD) ஃபாசிஸ்டுகளைக் காட்டிலும் மோசமானவர்கள் என்றதொரு கோட்பாட்டை கூறினர். அதனால் ஜெர்மன் கம்யூனிஸ்ட் கட்சி (KPD), ஜெர்மன் சமூக ஜனநாயக கட்சி(SPD) உடன் எந்தவித ஒட்டும் உறவும் கொள்ளக்கூடாது - அன்னந் தண்ணி புழங்க கூடாது - என்று தடுத்தனர்.

அதனால், அந்தக் காலகட்டத்தில் எப்போதும் சுமார் 10-15%வாக்குகள் பெற்று வந்த ஜெர்மன் கம்யூனிஸ்ட் கட்சி (KPD), சுமார் 20-25% வாக்குகள் பெற்று வந்த ஜெர்மன் சமூக ஜனநாயகக் கட்சி (SPD) ஆகியவை 1932 இல் தனித்தனியாய்த் தேர்தலைச் சந்தித்தனர். இவர்களோடு இணைந்து அரசு அமைத்திருக்கக்கூடிய இன்றைய ‘கிறிஸ்துவ ஜனநாயகக் கட்சியின்’ முந்தைய வடிவான தாராளவாத முதலாளித்துவ ஜனநாயகக் கட்சியும் தனித்துப் போட்டியிட்டது.

தேர்தல் மிகவும் மோசடியாக நடைபெற்றது. இரண்டு இடதுசாரிக் கட்சிகளின் பெரும்பான்மையான தலைவர்கள் சிறையில் இருந்தனர்; அல்லது தலைமறைவாய் இருந்தனர். இந்தக் கட்சிகளுக்கு வாக்களிப்பவர்களே அச்சமின்றி வாக்களிக்கும் நிலை இல்லை. இப்படி பல சொல்லலாம். ஆனால் ஒற்றுமையின்மை மிக முக்கியமான காரணங்களில் ஒன்று என்பதை மறுக்க முடியாது. பின்னர் எல்லாம் நடந்து, காலம் போன காலத்தில்தான் ஸ்டாலினும் அகிலமும் 'பாப்புலர் ஃபிரெண்ட்’ கன எல்லோரையும் இணையக் கூறினர்.

ஆகப்பெரிய கட்சியாக உருவெடுத்த ஹிட்லர் தலைமையிலான நாஜிக் கட்சி 33% வாக்குகள் பெற்றது. யாருக்கும் பெரும்பான்மை இல்லாத நிலையில் 30 ஜனவரி 1933 அன்று ஹிட்லர் சான்சலராக (பிரதமர் போன்ற பதவி) பதவியேற்றார். அன்றைக்கு ஜெர்மனியின் அதிபராக இருந்த ஹிண்டன்பர்க், ஜெர்மன் நாட்டின் பெருமுதலாளித்துவத்தின் அழுத்தம் காரணமாகத்தான் இதனை ஒத்துக்கொண்டு ஹிட்லருக்குப் பதவி பிரமாணம் செய்து வைத்தார். பின்னர் நடந்தது சோகமானதும் பயங்கரமானதுமான வரலாறு.

ஃபாசிஸம் குறித்தான சரியான புரிதலோடு, முதன்முறையாக அறிவியல்பூர்வமாக அதனை வரையறுத்து விளக்கியவர்கள் இருவர். ஒருவர் இத்தாலிய கம்யூனிஸ்ட்டான பல்மிரோ டோக்கிலியாட்டி; மற்றவர் இந்தியாவின் முதல் கம்யூனிஸ்ட்டான ஆன எம்.என்.ராய்.

டோக்லியாட்டி, 1935 ஆம் ஆண்டு மாஸ்கோவில் லெனின் பள்ளியின் இத்தாலியப் பிரிவில் ஃபாசிஸம் குறித்து ஆற்றிய உரைகளே, ஃபாசிஸம் குறித்த சரியான புரிதலை முதன்முதலில் உருவாக்கின. அவரது உரைகள் 'ஃபாசிசம் குறித்த விரிவுரைகள்’ என்ற பெயரில் தமிழில் என். சி. பி.ஹெச்.வெளியீடாக வந்துள்ளது. அவருக்கு இருந்த வாய்ப்புகள், வசதிகள் இல்லாமலேயே கான்பூர், பரெய்லி சிறைகளின் கொடுமையான சூழலில் மோசமான உடல்நிலையோடு போராடிக் கொண்டே எம்.என்.ராய் எழுதியதே இந்நூல். இருவருமே தத்தமது புரிதலில் சுதந்திரமாக எழுதியவை. ஃபாசிசத்தால் உயிருக்கு அபாயம் ஏற்பட்டவர்கள்; அதிலும் எம்.என்.ராய் ஒரு புறம் ஃபாசிஸ்டுகளாலும், மறுபுறம் பிரிட்டிஷ் ஏகாதிபத்தியத்தாலும் தேடப்பட்டு நாடு நாடாய் ஓடியவர். அதனால் இருவருமே சொந்த அனுபவம், திறமையான கோட்பாட்டாக்கத் திறன் கொண்டு எழுதியவை. ஆனால், அடிப்படை மார்க்சிய உலகப் பார்வை என்பதால் ஒன்றுபோல முடிவுகளைக் கண்டடைந்து கூறுவதைக் காணலாம்.

முதலாளித்துவம் தனது உள்ளார்ந்த முரண்பாடுகள் காரணமாக நெருக்கடிக்கு மேல் நெருக்கடி கண்டது. முதலாளித்துவம் தனக்கு முந்தைய முடியாட்சிக்கும் நிலப்பிரபுத்துவத்திற்கும் எதிரான தனது போராட்டத்தின் போது தனது நலனுக்காக உருவாக்கியதுதான் நாடாளுமன்ற ஜனநாயக ஆட்சி. ஆனால் அதனைத் தொழிலாளர்களும் தமது நலன்களுக்காகப் பயன்படுத்தினர். தன்னுடைய வளர்ச்சி காலத்தில் தொழிலாளி வர்க்கத்தோடு சமரசம் செய்து கொண்டு முதலாளித்துவம் நாடாளுமன்ற ஜனநாயகத்தை அனுமதித்தது. முதலாளித்துவம் நெருக்கடிக்கு மேல் நெருக்கடியைச் சந்தித்து தனது அழுகல் நிலையை அடைந்தது. அந்த அழுகிப்போன முதலாளித்துவத்தின் அரசியல் ஆட்சி அமைப்புதான் ஃபாசிஸம். பெருமுதலாளித்துவ, நிதி மூலதன அடுக்கின் ஏவலர்களே ஃபாசிஸ்டுகள். இதுபோன்ற அரசியல் பொருளாதாரப் புரிதல்கள், டோக்லியாட்டி, எம்.என்.ராய் இருவருக்கும் பொதுவானவை ஆகும்.

ஆனால், ஃபாசிஸ்டுகளின் குறிப்பாக ஜெர்மன் ஃபாசிஸ்ட்களின் நாஜிகளின் கருத்தியல் அடித்தளம் ஷோபனஹவர், நீட்ஷே ஆகியோரின் தத்துவம். அதன் ஆன்மா இந்தியாவின் பிராமண, ஹிந்து தத்துவங்கள் என்பதை எம்.என்.ராய் விளக்குகின்றார். ஹிட்லரின் சமகாலத்தில் அறிவாளுமை தளத்தில் ஃபாசிஸத்திற்கும் நாஜிசத்திற்கும் அதன் ஆரிய மேன்மை, மீ-மனித வழிபாடு, அடக்குமுறைகள், இராணுவ தேசிய வெறி, இனஒதுக்கல், இனப்படுகொலை ஆகியவற்றுக்குக் கருத்தியல், கோட்பாட்டுச் சட்டகம் வழங்கிய ஹென்றி பர்க்சன், வில்லியம் ஜேம்ஸ், ஜான் துவே, ஆல்பர்ட் லிபர்ட்ஸ், எமிலி லேஸ் பாக்ஸ் போன்றோரின் கருத்தியல் தத்துவக் கட்டமைப்புகளைக் கட்டுடைப்பு செய்து அவர்கள் ஷோபனஹவர், நீட்ஷே ஆகியோரின் கருத்துகளிலிருந்து கடன் பெற்றுள்ளனர் என்பதை வெட்ட வெளிச்சமாக்குகின்றார் எம்.என்.ராய். மேலே கூறிய தத்துவக் கர்த்தாக்கள் அனைவரும் உளமார ஃபாசிஸத்திற்கு உழைத்தவர்கள் என்பது எம்.என்.ராயின் கருத்து அல்ல. அவர்கள் விரும்பியோ விரும்பாமலோ ஃபாசிஸத்தின் கருத்தியல் கட்டமைப்பிற்கு உதவியுள்ளனர் என்பதே எம்.என்.ராயின் துணிபு.

எம்.என்.ராய் இத்தோடு நிறுத்தவில்லை. ஷோபனஹவர், நீட்ஷே ஆகியோரது தத்துவங்களின் வேர் பிராமண இந்துமத வேதாந்தத்தில் உள்ளது என்பதை விளக்குகின்றார். இது ஃபாசிஸம் குறித்த புரிதலின் முழுமைக்கு எம்.என்.ராய் வழங்கிய தனித்துவமான பங்களிப்பு ஆகும்.

அத்தோடு அவர் நிறுத்தி இருந்தால், இன்றைக்கு எம்.என்.ராய் பற்றிய பேச்சும் எழுத்தும் வெறும் வரலாற்றுப் புரிதலுக்கானதாக மட்டுமே இருக்கும். இந்திய, பிராமணத் தத்துவங்களில் தங்கள் உலக நோக்கிற்கான வேர்களைக் கொண்டுள்ள காந்திஜி, விவேகானந்தர், பிபின் சந்திரபால் ஆகியோரது தத்துவ சமுதாய அரசியல் கருத்துகளில் இழையோடி இருக்கும் ஃபாசிஸக் கருத்துக் கூறுகளை, இழைகளை அடையாளம் கண்டு கூறுகின்றார். இவர்கள் எல்லாம் ஃபாசிஸ்ட்டுகள் என்பது அவரது கருத்து அல்ல. ஆனால் இந்தக் கூறுகளை இழைகளை அதன் தர்க்கரீதியான நீட்சிக்கு எடுத்துச் செல்பவர்கள் பாசிஸ்டுகளாக ஆவது நிச்சயம் என்பது அவரது கருத்து.

விவேகானந்தரை இலட்சியப் புருஷராகவும் அவரது கருத்துகளைக் கருத்தியல் சட்டகமாகவும் கொண்ட ’அனுஷீலன் ஸமிதி’ நீரோட்டத்தில் வந்தவர்தான் எம்.என். ராய். தலைமுறை தலைமுறையாய் இந்து மத வேதாந்தம் போதித்த பிராமணப் பரம்பரையில் வந்தவர்தான் எம்.என்.ராய். அவர், தான் பிறந்து வளர்ந்து வந்த பாரம்பரியத்தைத் தவறெனக் கண்டபோது எந்தவித சலுகையும் அளிக்காமல் நிராகரித்தார். இதுதான் அவரை சிங்காரவேலர், தந்தை பெரியார் போன்றவர்கள் மிகவும் மதித்த காரணத்தை நமக்குப் புரிய வைக்கின்றது. மகாத்மா காந்தியும் கூட அந்த வேதாந்தத் தடத்தில் முழுமையாய்ப் பயணிக்கவில்லை என்பதுதான் வரலாறு நமக்குக் காட்டுவது. அவர் அவ்வாறு பயணித்திருந்தால், இந்திய ஃபாசிஸ்டுகளின் துப்பாக்கித் தோட்டாவிற்குப் பலியாகி இருக்க மாட்டார் என்பதையும் புரிந்து கொள்ள முடிகின்றது.

இந்திய ஃபாசிஸ அமைப்பான ஆர்.எஸ்.எஸ். இன் நிறுவனரான டாக்டர் ஹெட்கேவர் தனது மருத்துவக் கல்வியைக் கல்கத்தாவில் பெற்றவர் என்பது சிலருக்கு மட்டுமே தெரியும். அவர் கல்லூரி மாணவனாக இருந்த காலத்தில் விவேகானந்தரையும் வேதாந்தத்தையும் போற்றிய அனுஷீலன் ஸமிதியில்தான் உறுப்பினராக இருந்து தனது தத்துவ உலகப் பார்வைச் சட்டகத்தைப் பெற்றார் என்பது பலருக்கும் தெரியாதது.

ஆம், இந்தியாவின் முதல் கம்யூனிஸ்ட்டும் இந்தியாவின் முதல் சங்கியும் தாங்கள் வாழும் சமூகம், நாடு, உலகு குறித்த பார்வையைப் பெறத் தொடங்கிய தொட்டில் ஒன்றுதான். ஆனால் அவர்கள் வாழ்நாளில் என்னவாக ஆனார்கள் என்பதைப் பாருங்கள்.

 இந்திய ஃபாசிசம் அதற்கென்று தனித்துவமான பண்புகளைக் கொண்டது. பிராமண வேதாந்த உலக நோக்கும் அதன் அடிப்படையான அரசியலுமே அதன் தனித்துவமான பண்பு. இந்திய ஃபாசிஸ எதிர்ப்பும் அதற்கான தனித்துவப் பண்புகளுடன் இருந்தால் மட்டுமே வெற்றி பெறும். இந்திய ஃபாசிஸத்தின் பிராமண வேதாந்த உலக நோக்கு என்பதை அம்பலப்படுத்துவதும், ஃபாசிஸ எதிர்ப்பின் பகுதியாக அதனை எதிர்ப்பதும் மட்டுமே வெற்றியை அளிக்கும்.

முதல் சங்கியின் வழித்தோன்றல்கள் இன்று வெற்றியாளர்களாக நிற்கின்றனர்!

முதல் கம்யூனிஸ்ட்டின் வழித்தோன்றல்கள் இன்று தோற்று நிற்கின்றனர்!!

என்ன செய்ய வேண்டும்?

முதலில் அவர் எழுதியுள்ளதைப் படித்துப் பாருங்களேன்!

ப.கு.ராஜன்

Comments

0 comments

0

Leave a comment

Fields marked with * are required.

✍️ எழுத்தாளர்களின் கவனத்திற்கு

கீற்றில் தங்களது படைப்புகளை / இதழ்களை வெளியிட விரும்பினால், அவற்றை யுனிகோட் எழுத்துருவில் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.

வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகள் மட்டுமே பதிவேற்றத்திற்குப் பரிசீலிக்கப்படும்.