கடந்த ஐம்பது ஆண்டுகளாகத் தமிழ் இலக்கியச் சூழலில் எழுத்து சார்ந்து இயங்கி வருபவர் சுகுமாரன். கவிதை, கட்டுரை, புனைகதை, மொழிபெயர்ப்பு என இவரது இலக்கியச் செயல்பாடுகள் இருந்தாலும் ‘கவிஞர் சுகுமாரன்’ என்று அழைப்பதையே விரும்பக்கூடியவர். கவிதைக்கு நிகரானது அவரது கட்டுரைகள். தருணங்களை நினைவிலிருந்து பதிவு செய்வதில் சமர்த்தர்; ஆளுமைகளை மதிப்பிட்டு எழுதுவதிலும் தேர்ந்தவர். இவர், ‘வெல்லிங்டன்’ (2013), ‘பெருவலி’ (2017) என இரண்டு நாவல்களை எழுதியுள்ளார். சரியாக முதல் நாவல் பிரசுரமாவதற்கு முப்பதாண்டுகளுக்கு முன்பே இவரது முதல் சிறுகதை ‘மீட்சி’ (1983) இதழில் வெளியாகியிருக்கிறது. ஜூலை 2025இல் ‘கசிவு’ என்றொரு சிறுகதையை எழுதியிருக்கிறார். 1983 முதல் 2025 வரையிலான காலகட்டத்தில் இவர் எழுதியுள்ள சிறுகதைகள், ‘உஸ்தாத்’ என்ற பெயரில் நூலாகத் தொகுக்கப்பட்டுள்ளது. இந்த 42 ஆண்டுகளில் இவர் எழுதியுள்ளவை வெறும் பத்துக் கதைகள் மட்டுமே. இரண்டாயிரத்திற்குப் பிறகு எழுதவந்த பல இளம் தலைமுறை எழுத்தாளர்கள், ஆண்டுக்கு ஒரு தொகுப்பையாவது வெளியிட்டுவிடும் தன்முனைப்பில் எழுதிக் குவித்துக்கொண்டிருக்கும் சூழலில், சுகுமாரனின் இந்த வேகம் நத்தையைவிட மெதுவானது.
இந்தத் தொகுப்பில் இடம் கிடைக்காமல் கழிந்தவை எனச் சில கதைகள் இருக்க வாய்ப்பிருக்கிறது. ஏனெனில், தன் படைப்பைத் தானே நிராகரிக்கும் தன்மை கொண்டவர் சுகுமாரன். ‘சில சிறுகதைகள் எழுதியிருக்கிறேன். இதழ்களில் அவை வெளியாகியுள்ளன. ஆனால் அவற்றைப் பற்றி எனக்குச் சந்தேகம் இருக்கிறது.’ இது தன் கதைகளைப் பற்றி பெருமாள்முருகனிடம் சுகுமாரன் பகிர்ந்து கொண்டது. சுகுமாரனிடம் இயல்பாகவே வெளிப்படும் இந்தக் குணம் அவரை அதிகம் எழுதாமல் பார்த்துக் கொள்வதாகத் தோன்றுகிறது. இந்த ஐம்பதாண்டுகளில் இவர் பங்களிப்பில் வெளிவந்தவை ஐம்பத்தைந்து நூல்கள். இதில் மொழிபெயர்ப்பு நூல்கள் மட்டுமே இருபத்திரண்டு; புனைகதை, கவிதை நூல்கள் பன்னிரண்டு மட்டும்தான். தொடர்ந்து இயங்கிக் கொண்டிருந்தாலும் படைப்பு சார்ந்து மிகுந்த கவனத்துடன் செயல்படுகிறார் என்பதையே அவரது நூற்பட்டியல் உணர்த்துகிறது.
‘உஸ்தாத்’ சிறுகதைத் தொகுப்பு, கடந்த நாற்பதாண்டுகளின் புனைவுப் பாதையைத் தெரிந்து கொள்ளவும் அதில் அடைந்துள்ள மாற்றங்களை உள்வாங்கிக் கொள்ளவும் உதவும் என்று நம்புகிறேன். தவிர, ஒரு படைப்பாளர் எழுதவந்த தொடக்கக் காலத்திலிருந்து படிப்படியாக அவர் முதிர்ந்துவந்த புனைவுத் தருணங்களைப் புரிந்து கொள்ளவும் இந்தத் தொகுப்பு முன்னுதாரணமாக இருக்கும். இத்தொகுப்பை வாசிக்கும் ஒருவர், நான்கு வகையான நிலப்பரப்பு சார்ந்த கதைகளின் தேட்டத்தை ஒரே நேரத்தில் அறிந்து கொள்வார். தமிழ், மலையாளம், ஆங்கிலம் ஆகிய மூன்றுமொழிகளில் தொடர்ந்து இயங்கி வருபவர் சுகுமாரன். கேரளப்புலம் சார்ந்து எழுதப்பட்ட ‘சர்ப்பம்’ என்ற சிறுகதை இந்தத் தொகுப்பின் முக்கியமான புனைவாக இருக்கிறது. இது தவிர, ‘தங்கப்பன் ஆசாரியின் கிளி’, ‘கசிவு’ ஆகிய சிறுகதைகளும் நிலம் பெயர்ந்து வந்த மலையாளிகளின் பின்னணியில் எழுதப்பட்டுள்ளன. இந்த மூன்று சிறுகதைகளும் ஏதோவொரு வகையில் மலையாளச் சிறுகதையின் மொழிபெயர்ப்பை வாசித்ததுபோன்ற உணர்வைத் தருகின்றன. ‘அரண்’ தமிழில் எழுதப்பட்ட உலகச் சிறுகதை. இக்கதையின் நிலம், டெர்பிஷைர் என்ற மலைப்பிரதேசத்தின் கிராமமான இயாம். பிரிட்டிஷ் தேசத்தின் இந்நிலம், சுகுமாரனுக்குப் பரிச்சயமில்லாதது. ஆனால், இந்தக்கதை அவ்வளவு நுணுக்கங்களுடன் இயாம் கிராமத்தை வாசிப்பவர்களுக்கு அறிமுகப்படுத்துகிறது. ‘உஸ்தாத்’ வாராணசியின் நிலப்பரப்பைப் பின்னணியாகக் கொண்டது. தமிழகமும் கேரளமும் சுகுமாரனுக்குப் பரிச்சயமான நிலங்கள். வேலைநிமித்தம் நாடோடியாக அலைந்ததில் அறிந்துகொண்டது வாராணசி. இவ்வகையில் நான்குவிதமான நிலப்பரப்புகளின் வெக்கையையும் குளிரையும் அதன் அசலான மக்களின் பண்பாட்டுப் பின்னணியுடன் இக்கதைகள் எழுதப்பட்டிருக்கின்றன.
சிலப்பதிகாரத்தின் கண்ணகி தொன்மத்தை நிகழ்காலத்துக்கு நகர்த்தி எழுதப்பட்ட சிறுகதையான ‘செற்றனள் போலும் செயிர்த்தனள் போலும்’ என்ற சிறுகதை அதன் கூற்றுமுறையில் தனித்துவமானது. கோவலனின் கொலைக்குப் பிறகுதான் கண்ணகி அதிர்ந்து பேசவே செய்கிறாள். அதுவரையான கண்ணகியின் படிமம் என்பது அலங்கரிக்கப்பட்ட ஒரு பதுமையைப் போன்றது. இந்தக் கதையில் வரும் பெண் கண்ணகியின் தற்கால வடிவம். கதையில் இவள் மட்டுந்தான் பேசுகிறாள். கணவன் பேசுவதும் இவள் மூலமாகவே சொல்லப்படுகிறது. சிறுகதை முழுவதும் ஒரே குரலில் இருக்கிறது. ஆணின் முக்கியத்துவத்தை அழித்துப் பெண்ணை முன்னிறுத்தும் சிறுகதையாக இது தொழிற்பட்டிருக்கிறது. சிலப்பதிகாரப் பிரதியை அழித்து மறு உருவாக்கம் செய்யப்பட்ட தொனியில் இக்கதையின் எடுத்துரைப்பியல் அமைந்திருக்கிறது. சமூகத்தில் ஆண், பெண்ணுக்கான இடம் என்னவாக இருக்கிறது என்பதையும் இக்கதை புரியச்செய்கிறது. இக்கதையில் ஆண், பெண் என யாருக்கும் பெயர் கிடையாது. இவர்கள் இரண்டு பாலினத்தின் பொது அடையாளங்கள். பெண், இந்தச் சமூக ஒழுங்கைச் சிதைத்துத் தன்னை முன்னிறுத்திக் கொள்ள விழையும்போது ஆணுக்கான இருப்பு ஒன்றுமில்லாமல் போய்விடுகிறது என்ற வாசிப்பையும் புனைவு நிகழ்த்துகிறது.
கணவன் மனைவியாக ஒன்பது ஆண்டுகள் வாழ்ந்து, இரண்டு குழந்தைகளைப் பெற்றபிறகே அந்தப் பெண் தன் இருப்பை விசாரணைக்கு உட்படுத்துகிறாள். பண்பாடு எவ்வளவு ஆழமானது; அதன்மீது சிறியதொரு விரிசலை உண்டுபண்ண அவளுக்கு இவ்வளவு காலம் தேவைப்பட்டிருக்கிறது. தன் இருப்பை விசாரணைக்கு உட்படுத்தவே அவ்வளவு காரணங்களைச் சேகரிக்க வேண்டியிருக்கிறது. தன்மீது நிகழ்த்தப்படும் எல்லா சுரண்டலையும் ஒரு பெண் பொறுத்துக் கொள்வதற்குப் பின்புள்ள சமூகக் காரணிகளையும் அந்தப் பெண்ணே பேசுகிறாள். கணவன் தன் தரப்பு நியாயங்களை அவளுக்கு எடுத்துச்சொல்ல ஒன்றுமே இல்லை என்ற சூழலிலேயே இருவருக்குமான உரையாடல் நடைபெறுகிறது. கண்ணகி, பாண்டிய நெடுஞ்செழியனின் அரண்மனை வாசலில் நிற்கிறாள். அவளது தோற்றத்தை அரண்மனை வாயிற்காவலனால் கணிக்க முடியவில்லை. ஆனால் வந்திருப்பது யாரென்று மன்னனுக்குச் சொல்லவேண்டும். ‘கொற்றவை, அல்லள்; தாருகன் பேர் உரம் கிழித்த பெண்ணும், அல்லள்; செற்றனள் போலும்; செயிர்த்தனள் போலும்’ என்று கண்ணகியின் தோற்றத்தை ஒருவாறு நெடுஞ்செழியனிடம் அறிமுகப்படுத்துகிறான். கண்ணகியின் அந்தப் படிமத்தைக் கொஞ்சமும் குறையாமல் இந்தக்கதை பார்த்துக்கொண்டிருக்கிறது. ஆனால் நெடுஞ்செழியன் இருந்த இடத்தில் கோவலன்.
பெண்கள்மீதான கரிசனம் சுகுமாரன் கதைகளின் அடியோட்டமாகப் புரிந்து கொள்ளலாம். இவரது புனைவுக்கான தருணங்கள் அங்கிருந்தே பெரும்பாலும் உருவாகி வந்திருக்கின்றன. இந்தக் கரிசனம் அவரது கவிதைகளின் தொடர்ச்சிதான். ‘தங்கப்பன் ஆசாரியின் கிளி’ சிறுகதையில் புனைவு முழுக்க ஒரு கூண்டு வந்துகொண்டே இருக்கிறது. தன் மனைவியைக் கட்டியாள யோக்கியதை இல்லாத தங்கப்பன் ஆசாரி, அந்த வெறுப்பை அவளிடமே காட்டுகிறான். கிளி பறந்துவிடுகிறது. தன் மகளுடன் நிலம்பெயர்ந்து வருகிறான் தங்கப்பன். தங்கப்பனின் கிளிக் கூண்டிலிருந்து மீட்டுச்செல்லும் இளவரசனுக்காகக் காத்திருக்கிறாள் தங்கப்பனின் மகள். ஆணாதிக்கத்தின் இயலாமையிலிருந்து தன்னை விடுவித்துக்கொள்ள முடியாமல் தவிக்கும் கிளியாக இக்கதையின் கொச்சம்மிணி கதாபாத்திரம் இருக்கிறது. பறந்துபோகும் வாய்ப்புகள் இருந்தும் கதவுகளுக்குப் பின்னால் படபடத்துக் கொண்டிருக்கும் கிளிகளைத்தான் இச்சமூகம் தொடர்ந்து உற்பத்திச் செய்து கொண்டிருக்கிறது. இந்த ஏக்கங்கள்தாம் வாளால் அரக்கனை வெட்டி வீழ்த்தி மீட்டுச்செல்லும் இளவரசர்களைப் பற்றிய கதைகளின் பெருக்கம். சுகுமாரனின் கவிதைகளில் இடம்பெறும் ஒரு தவிர்க்க முடியாத பறவை, கிளி. கிளி பெண்களுக்கான ஒரு குறியீடு. அவரது கவிதைகளில் இருந்து பறந்துவந்த ஒரு கிளையைத்தான் இந்தச் சிறுகதைக்குப் பயன்படுத்தியிருக்கிறார். ‘வெளியில் போகிற எப்போதும் காயம்படாமல் / என் கிளி திரும்பியதில்லை’ (தனிமை இரக்கம்) என்ற படிமத்தின் மாற்று வடிவம் இந்தச் சிறுகதை.
பெண்களின் உணர்வுகளைப் புரிந்து கொண்ட ஒரு தலைமுறை உருவாகி வந்திருக்கிறது என்ற நம்பிக்கையை விதைக்கும் கதையாக ‘கசிவு’ இருக்கிறது. ‘கல்யாணத்துக்கு முன்னாடியோ பின்னாடியோ யாரு மேலயாவது ஆசப்பட்டிருக்கியா?’ என்று மகன் கேட்கும் இடத்துக்குச் சமூகம் நகர்ந்து விட்டதா என்பதை உறுதியாகக் கூறமுடியவில்லை. ஆனால் இப்படியொரு உரையாடல் நிகழ்வதற்குப் பின்புள்ள தடைகள் உடைக்கப்பட வேண்டியவை. இந்தக் கதையின் கதைசொல்லி அம்மாவின் விருப்பங்களைப் புரிந்து கொள்கிறான். ஏனெனில் அவன் நிறைய புத்தகங்களை வாசிக்கிறான். அதனால்தான் அந்த இடத்திற்கு அவனால் நகர முடிகிறது என்ற அடித்தளத்தை இக்கதை உருவாக்கியிருக்கிறது. இது ஒரு பார்வைதான். இப்படியொரு உரையாடல் நிகழ்வதற்குப் பெண்களே விரும்பவில்லை என்பதற்கும் அவன் அம்மாவே உதாரணம். அவன் அம்மாவுக்கும் தங்கப்பனுக்குமான உறவை அறிய முயலும்போது இப்பிரதி இன்னொரு பார்வையை அளிக்கிறது. சுகுமாரனின் சிறுகதைகளின் பொதுத்தன்மையாக இதனைக் கருதலாம். ஒற்றை வாசிப்பிலிருந்து பிரதியை விடுவிப்பதற்கான இடங்களை இவர் புனைவில் உருவாக்கிக் கொண்டே இருக்கிறார். வெவ்வேறு மனிதர்களின் பண்புகளை ஒரு கதாபாத்திரத்தின்மீது ஏற்றுவதினூடாக இந்தத் தன்மை சாத்தியமாகிறது.
அழகியல் சார்ந்த சுகுமாரனின் எழுத்துக்கு ‘அய்யாவின் மிதிவண்டி’ சிறந்த உதாரணம். இது ஒரு வகைமை. இதில் வெளிப்படுவது முற்றிலும் வேறுபட்ட சுகுமாரனின் எழுத்து. ஒரு நிகழ்வை அரசியல்படுத்தாமல் அதன் யதார்த்தங்களின் சிலிர்ப்புகளை மட்டுமே மொழிப்படுத்திக் காட்டும் தன்மை இக்கதையில் வெளிப்பட்டிருக்கிறது. இக்கதையின் தமிழாசிரியரான நடவரசு அய்யாவைத் திராவிட இயக்கத்தின் பின்னணியில் வைத்துப் புரிந்துகொள்ள வேண்டும். பொதுவெளியில் தனித்தமிழும் வீட்டிற்குள் தமிழைக் கொச்சையாகவும் பேசிய நடவரசு அய்யாவின் நிகரிகளைச் சுகுமாரனே அறிவார். கதைக்குள் அங்கதத் தன்மை இருந்தாலும் மாணவர்களினூடாக வெளிப்படும் அய்யாவின் அப்பாவித்தனம் புனைவுக்கு ஓர் எளிய அழகைக் கொடுத்து விடுகிறது. அய்யாவிற்கு மிதிவண்டி ஓட்டத்தெரியாது என்ற கதையின் முடிவிலிருந்து புனைவைப் பின்னோக்கி வாசிக்கும்போது பிடிபடும் புனைவு வேறொன்றாக இருக்கிறது. தன் இயலாமையைத் தீவிரமான பேச்சுகளாக மாற்றிக் கொண்டு வீட்டிற்குள் அடங்கிக்கிடக்கும் இப்படியொரு ஆணும் இருக்கத்தானே செய்கிறான். இக்கதையில் தொழிற்பட்டிருக்கும் எளிமைதான் இந்தப் புனைவுக்கு அழகு. அது அந்த மாணவர்களால் நிகழ்ந்திருக்கிறது. மாணவர்களின் மனதில் பெரும் ஆகிருதியாகப் பதிந்திருக்கும் நடவரசு அய்யா, வீட்டில் ஒடுங்கித்தான் இருக்கிறார். இதற்குப் பின்னால் இரண்டு காரணிகள் செயல்படுவதாகப் பிரதி கட்டமைத்திருக்கிறது. மனிதர்கள், இந்தச் சமூகத்துடன் தங்களுக்கான இணைப்பை உருவாக்கிக்கொள்ளும் புறவெளி நாடகீயத் தன்மைகள் நிரம்பியது. அகவெளியிலேயே அவர்களது யதார்த்தம் மறைந்திருக்கிறது. இப்படியொரு சித்திரத்தை இக்கதை வரைந்து காட்டியிருக்கிறது.
‘சர்ப்பம்’ ஓர் அரசியல் பிரதி; ஆனால் பிரதி முன்னெடுக்கும் அரசியல் புனைவுக்குள் உள்ளொடுங்கியே இருக்கிறது. இக்கதையின் களம் கேரளம். கிறித்தவம், இஸ்லாம், இந்துமதம், சர்ப்பம் ஆகியவற்றின்மீது கட்டப்பட்டிருக்கும் கதையாடல்களைத் தீவிரமாக நம்பும் எல்லா நிலத்துக்கும் இக்கதை பொருத்தமுடையதாக இருக்கும். ஒரு பாம்பைப் பின்புலமாகக் கொண்டுகூட மத வெறுப்பை நிகழ்த்திவிட முடியும் என்ற அவதானிப்பை இக்கதை ஏற்படுத்துகிறது. ஏனெனில், பாம்பு இந்து மதக் கடவுளரின் அடையாளம். பாம்பு இந்து மதத்திற்குள் ஆழமான நம்பிக்கைகளை உருவாக்கியிருக்கிறது. ‘உங்க வேதத்துல அது பிசாசும் சைத்தானுமா இருக்கலாம். எங்களுக்கு அப்படியில்ல. அது தெய்வமாக்கும்’ என்கிறான் இக்கதையின் செந்தூரப் பொட்டுக்காரன். பாகுலேயன் பிள்ளை, ஜேக்கப் சக்கரியா, முஸ்தபா ஆகிய மூன்று கதாபாத்திரங்களைக் கொண்டுதான் இக்கதை எழுதப்பட்டிருக்கிறது. இவர்கள் மூவரும் மூன்று மதத்தின் பிரதிநிதிகள். சர்ப்பம் இவர்கள் மூவருக்கும் ஒன்றல்ல. முஸ்தபா சர்ப்பம் பிடிப்பதைத் தொழிலாகச் செய்பவன். சக்கரியாவிற்குச் சர்ப்பம் தொழில் செய்ய தடையாக இருக்கிறது. பிள்ளைக்கு அது தெய்வம். இந்தப் பின்னணியில் இக்கதை எழுதப்பட்டிருந்தாலும், ஓரிடத்திலும் கலையைவிட கருத்து முந்திக்கொண்டு தன் முகத்தைக் காட்டிவிடக் கூடாது என்பதில் பிரதியாசிரியர் படைப்பூக்கத்துடன் செயல்பட்டிருக்கிறார். தீனம்மச் சேச்சியும் ஷகீலாவும் பிரதியின் மையத்தைக் கலைப்பதற்குப் பயன்பட்டிருக்கிறார்கள்.
ஷெனாய் இசைக்கலைஞரான பிஸ்மில்லா கான் பற்றி இவரெழுதிய ‘உஸ்தாத்’ என்ற சிறுகதை சுகுமாரனின் முத்திரைக் கதைகளுள் ஒன்று. தான் கண்டுபிடித்த ‘கன்னையா’ ராகம் உருவான பின்னணி பற்றி அவரே சொன்னதாக ஒரு சம்பவம் உண்டு. இந்தச் சம்பவத்தைப் பின்புலமாகக்கொண்டு இக்கதையைச் சுகுமாரன் எழுதியிருக்கிறார். தனக்குக் கிடைத்த தரவுகளைக் கொண்டு முகலாய இளவரசி ஜஹனாராவின் மறைக்கப்பட்ட வாழ்க்கையை ‘பெருவலி’ என்ற நாவலாக எழுதியவர் சுகுமாரன். கவித்துவமான இவரது புனைவுமொழி ஜஹனாராவின் ஆகிருதியை மேலும் அழகாக்கின. இந்தப் புனைவும் பிஸ்மில்லா கானின் ஒருநாள் வாழ்க்கையைப் பகிர்ந்துகொள்வதினூடாக அவரது ஒட்டுமொத்த ஆளுமையையும் சொல்லிவிடுகிறது. சுகுமாரன் ஏற்கெனவே பிஸ்மில்லா கான் பற்றி கவிதையொன்றையும் எழுதியிருக்கிறார். அந்தக் கவிதை உஸ்தாத் வீட்டுக்குச் சென்ற கவிஞனின் நினைவுகூரலாக எழுதப்பட்டிருக்கிறது. மதங்களைக் கடந்த மனிதரான பிஸ்மில்லா கான் வாராணசியின் அடையாளம். இவரது ஷெனாய் இசையைக் கேட்டே வாராணசியின் பாலாஜி துயில் எழுகிறார். இவரது இசை கங்கை நீரின் குளிர்ச்சியைப் போன்றது. கங்கை நீரை வகிர்ந்துகொண்டு வந்த ஒரு கறுத்தச் சிறுவன்தான் இவருக்கு இசையைக் கையளித்துவிட்டுச் செல்கிறான். இந்தக் கதையில் ஓரிடத்திலும் பிஸ்மில்லா கானின் பெயர் இடம்பெறவில்லை. ஆனாலும் உஸ்தாத் அவர்தான் என்பதற்கான தடங்களைச் சுகுமாரன் பிரதி முழுக்க உருவாக்கிக்கொண்டே செல்கிறார். இந்தப் பின்னணியில் கிருஷ்ணனே வந்து ஒரு புதிய சங்கதியை உஸ்தாத்தின் மனதிற்குள் நிரப்பிவிட்டுச் செல்கிறான். கிருஷ்ணனின் கண்டுபிடிப்பு ‘கன்னையா’ ராகம்; ‘கன்னையா’ ராகத்தின் கண்டுபிடிப்பு உஸ்தாத். வாராணசி நகரத்தின் ஒலிகளை இசையாக மாற்றியிருக்கிறது சுகுமாரனின் கதைமொழி. உஸ்தாத்தின் எளிய வாழ்க்கைதான் அவருக்கும் அவரது இசைக்கும் அழகு சேர்த்திருக்கிறது. பீடி இழுக்கும் பிஸ்மில்லா கானின் படிமம் விவரிக்க முடியாதது. அதேபோல புனைவுக்குள் நிகழ்வது ஒரு அமானுஷ்யம். இதனை மொழிப்படுத்திவிட முடியாது. உஸ்தாத்தின் மாமாவும் குருவுமான அலிபக்ஷ் கானின் மொழியில் சொல்வதானால், “அது அப்படித்தான். அதை வெளியே சொல்லாதே. சொல்ல நினைத்தாலும் முடியாது.”
இணரூழ்த்தும் நாறா மலரனையர் போன்று விரித்துரைக்க இயலாத தன்மையில் சுகுமாரனின் சிறுகதைகள் உள்ளன. ஒவ்வொரு வாசிப்பிலும் இச்சிறுகதைகளின் நுண்ணடுக்குகள் விரிந்து கொண்டே செல்கின்றன. கடவுளரும் கைவிட்ட கொரோனா பெருந்தொற்றின் பின்னணியில் எழுதப்பட்ட ‘அரண்’ சிறுகதையை உலகச் சிறுகதைகளின் வரிசையில் வைத்து வாசிக்க வேண்டும். இச்சிறுகதை அவ்வளவு நுணுக்கமான தரவுகளுடன் புனையப்பட்டுள்ளது. இந்தக் கதைக்குப் பின்னணியாக பைபிள் வாசகங்கள் செயல்பட்டுள்ளன. கர்த்தர் இக்கதையில் பாதிரியாராகக் களம் கண்டிருக்கிறார். கடவுளும் மனிதனும் உயர்திணைக்கான இடத்தைப் பெற காலம் நடத்திய தேர்வுதான் அப்பெருந்தொற்றுக் காலம். இயாம் பரிசுத்த லாரன்ஸ் தேவாலயத்தின் ஃபாதர் ரெவரெண்ட் வில்லியம் மாம்பெஸன்தான் அறுநூற்றுச் சொச்சம் மக்கள்தொகையும் எழுபத்திரண்டு குடும்பங்களும் உடைய அந்தக் கிராமத்தின் மீட்பர். லண்டனிலிருந்து வந்த துணிப்பொதியின் மூலமாகத்தான் அந்தக் கிராமத்திற்குள் தொற்றுப் பரவுகிறது. அறிவுக்குப் பிடிபடாத ஓர் அசம்பாவிதம் அங்கு நிகழவிருப்பதை ஃபாதர் அறிகிறார். காற்றையும் கடலையும் கீழ்ப்படியச் செய்த பரமபிதா, அப்படியொரு அதிசயத்தை இப்போதும் நிகழ்த்துவார் என்று ஃபாதர் எதிர்பார்க்கிறார். லூக்காவின் சுவிசேசத்தின்படி பல இடங்களில் பூமியதிர்ச்சிகளும் பஞ்சங்களும் கொள்ளைநோய்களும் உண்டாகும். அதுதான் தற்போது இயாம் கிராமத்தில் தொடங்கியிருக்கிறது.
தேவனின் கிருபைகள் இயாம் கிராமத்தைக் காக்கவில்லை. தேவனால் தருவிக்கப்பட்ட ஃபாதர் ரெவரெண்ட் வில்லியம் மாம்பெஸன் அந்தக் கிராமத்தை நோயிலிருந்து மீட்டெடுக்கத் தொடர்ந்து முயல்கிறார். ஏனெனில் புனைவு இவரைத்தான் தேவனாக முன்னிறுத்துகிறது. ஆனால், இயாம் மக்கள் தேவனைக் கடைசிவரை பரிசுத்த லாரன்ஸ் தேவாலயத்தின் உள்ளேதான் தேடுகிறார்கள். தேவாலயம் மூடப்பட்டபோது தேவனும் வெளியே வந்துவிடுகிறார். தொடர்ந்து நிகழும் துர்மரணங்களைக் கர்த்தரில் இளைப்பாறுபவர்களாக மக்கள் நம்பத் தயாரில்லை. காலந்தோறும் கர்த்தர் மனிதர்களோடு சேர்த்து மார்ஷல் ஹோ போன்ற விரியன் பாம்புகளையும் இந்தப் பூமிக்கு அனுப்பிக் கொண்டிருக்கிறார். அயலாரை நேசிக்காத அந்த விரியன் பாம்புகளை இயாம் கிராமத்திலும் ரெவரெண்ட் வில்லியம் மாம்பெஸன் பார்க்கிறார். ‘ஒலிவ இலைகள் உதிர்வதுபோல மனுஷர்கள் உதிரக் கருணை காட்டும்’ என்று கர்த்தரிடம் மன்றாடிய மார்ஷல் ஹோவை, ‘மீட்பின் பெயர்தான் கருணை. நீயோ நாசத்தைக் கருணை என்கிறாய்’ என்று காறி உமிழ்கிறார் உபதேசி. பிதாவும் யூதாசும் ஒரே நிலத்தில்தான் இருக்கிறார்கள்.
தூய்மை, தனிமை, நொய்மை என கொரோனா காலத்தின் அத்தனை நெருக்கடிகளையும் இக்கதை மிகச் சிறப்பாக வெளிப்படுத்தியிருக்கிறது. வேறொரு நிலத்தின் பின்னணியில் இக்கதை சொல்லப்பட்டிருப்பதால் வாசிப்பதற்குப் புதியதாக இருக்கிறது. இக்கதையில் பயன்படுத்தப்பட்டுள்ள பைபிள் வசனங்கள் புனைவுக்குப் பல்வேறு திறப்புகளை உருவாக்குகின்றன. பல விதமான வாசிப்புகளை நிகழ்த்துவதற்குரிய சாத்தியங்களையும் இக்கதை கொண்டிருக்கிறது. பெருந்தொற்றின் முடிவில் இயாம் கிராமத்தில் இருநூற்று அறுபதுபேர் இறந்து போகிறார்கள். ஊரின் மக்கள்தொகை பாதியாகக் குறைந்து விடுகிறது. ஃபாதர் ரெவரெண்ட் வில்லியம் மாம்பெஸன் வேறு கிராமத்திற்கு மாற்றலாகிச் செல்கிறார். அவர் ஒரேயொரு கேள்வியைத்தான் அந்தப் பரமபிதாவிடம் கேட்கிறார்: ‘ஏன் என்னைக் கைவீட்டீர்.’
‘அடியோட்டம்’, ‘நடிகர்’ ஆகிய சிறுகதைகள் பிற்காலத்தில் எழுதப்பட்ட சிறுகதைகளுடன் சேர்த்து வாசிக்கும்போது தொடக்ககால முயற்சியாகத் தெரிகிறது. பிற கதைகளின் உருவம்தான் இதற்குக் காரணம். அந்தச் சிறுகதைகளை மட்டும் வாசிக்கும்போது அதற்குள் ஒரு நிறைவைக் காண முடிகிறது. சாதியத்தின் காரணமாகச் சேரமுடியாமல் போன ஒரு காதல் கதைதான் ‘அடியோட்டம்.’ இடைநிலை சாதிகளுக்குள்ளேயே அவ்வளவு நுணுக்கமாகச் சாதி பார்க்கப்படுகிறது. இந்தப்புள்ளியைத் தொடக்கமாகக்கொண்டே இக்கதைக்குள் விவாதங்களை முன்னெடுக்க முடியும். அதேபோல ‘நடிகர்’ என்ற சிறுகதை காலத்தின் சிதிலங்களுக்கு ஒப்புக் கொடுத்த ஒரு மூத்த நடிகரைப் பின்னணியாகக் கொண்டது. ஒரு நடிகர் எப்போதும் தன்னை வெளிச்சமாகவே காட்டிக்கொள்ள வேண்டியிருக்கிறது. அவனது அழுக்கான பக்கங்களை ரசிகர்கள் எப்போதும் விரும்புவதில்லை. இவ்விரு கதைகளிலும்கூட வாசிப்பவர்கள் அடையக்கூடிய அழகான தருணங்கள் இருக்கத்தான் செய்கின்றன.
மனிதக் கழிவுகளைத் தூய்மை செய்பவர்களைப் பற்றி எழுதப்பட்ட ‘வடு’ என்ற சிறுகதையில் சுகுமாரனின் ஆற்றாமை பகடியாக வெளிப்பட்டிருக்கிறது. “பங்காருவை அப்படி சர்வாலங்காரத் தோற்றத்தில் முன்பு ஒருபோதும் பார்த்ததில்லை” என்று ஓரிடத்தில் எழுதியிருக்கிறார். கழிவுகளைத் தூய்மை செய்த பங்காரு இப்படியொரு தோற்றத்தைப் பெற இருபது வருடங்கள் தேவைப்பட்டிருக்கிறது. தோற்றம் மாறியிருக்கிறது. செய்யும் தொழில் அதேதான். இந்தக் காலத்திற்குள் எதுவெல்லாமோ புரண்டிருக்கிறது. ஆனால் திராவிடச் சமூகம் இவர்களை அப்படியே பாதுகாப்பதில் கருத்துடன் செயல்பட்டிருக்கிறது. இவர்களுடன் பேசுவதையே அவமானமாகக் கருதும் மேட்டிமைச் சமூகத்தின் பிரதிநிதியொருவரும் இக்கதைக்குள் வருகிறார். சுகுமாரனின் சில கதைகள் முடிவை எட்டியபிறகும் கொஞ்சம் நீண்டிருக்கின்றன. அதில் இந்தக் கதையும் ஒன்று. “நான் அவரைப் பின் தொடராமல் ஒரு வினாடி உடல் குறுகி நின்றேன். அவமானமாகத்தான் இருந்தது” என்ற வரியுடன் புனைவு அதன் நிறைவை எட்டிவிடுகிறது. அதற்குமேல் எழுதப்பட்ட “ஆனால் அது பங்காருவுடன் பேசியதால் ஏற்பட்ட அவமானம் அல்ல” என்பது கதைக்குத் தேவையற்ற சுமை என்றே தோன்றுகிறது. ‘செற்றனள் போலும் செயிர்த்தனள் போலும்’ என்ற கதையின் இறுதிப் பத்திகளும் அதிர்ச்சி மதிப்பீட்டைச் செயற்கையாக உருவாக்குகின்றன.
சுகுமாரன் சிறுகதைகளை ஒட்டுமொத்தமாக வாசிக்கும்போது, அவர் செவ்வியல் மரபின் தொடர்ச்சி என்றே கருதத் தோன்றுகிறது. இவரது கதைகள் காலத்தின் கசிவுகளை உடனடியாக உடுக்கையடித்துச் சொல்லவில்லை. காலத்தை நிதானத்துடன் உள்வாங்கிக் கொண்டிருக்கிறது. இதனால்தான் முன்னுதாரணமாகச் சில முயற்சிகளையும் சுகுமாரனால் செய்து பார்க்க முடிந்திருக்கிறது. புதுமைப்பித்தன், தி.ஜானகிராமன், சுந்தர ராமசாமி ஆகியோரின் புனைவுத் தடங்கள் ஆங்காங்கே தென்பட்டாலும் தனக்கென்று ஒரு கூற்றுமுறையை இவர் உருவாக்கிக் கொண்டிருக்கிறார். அடுத்து, சுகுமாரனின் சிறுகதைகளுக்குப் பின்னே இவரது அனுபவமும் மறைமுகமாகச் செயல்பட்டிருக்கிறது. அந்த அனுபவம் கனிந்த பிறகே புனைவாக்கம் செய்யப்பட்டிருக்கிறது. அதனால்தான் அது செவ்வியல் தன்மையை எட்டியிருக்கிறது. இந்தப் பத்துக் கதைகள் எழுதப்பட்டதற்கு இடையிலான காலத்தைக் கணக்கிட்டாலே இதனைப் புரிந்துகொள்ள முடியும். காயம் வடுவாகும்வரை காத்திருக்கும் பொறுமை அசாத்தியமானது. கதை செவ்வியல் தன்மையுடன் எழுதப்பட்டிருந்தாலும் தன் காத்திரமான விமர்சனங்களைக் கதாபாத்திரங்களினூடாக முன்வைக்கவும் இவர் தயங்கவில்லை. இந்த விமர்சனங்கள் கதையின் மையத்தைவிட்டு துருத்திக்கொண்டு நிற்காமல் பார்த்துக் கொண்டிருக்கிறார்.
சுகுமாரன் மொழிபெயர்ப்பு, தொகுப்பாக்கம் உள்ளிட்ட பணிகளை அதிகம் செய்திருந்தாலும் அவர் இயல்பில் ஒரு படைப்பாளர். இந்தப் படைப்பு மனம்தாம் அவரது பிற பணிகளுக்கும் காரணமாக இருக்கிறது. சுகுமாரன் தனித்துவமான பல கவிதைகளை எழுதியிருக்கிறார். அந்தக் கவிதைச் செயல்பாட்டின் தொடர்ச்சியாகத்தான் இந்தச் சிறுகதைத் தொகுப்பையும் பார்க்க வேண்டியிருக்கிறது. கவிதையில் சொல்லமுடியாத மிச்சங்களைத்தான் சிறுகதை எனும் வடிவத்திற்குள் கொண்டு வந்திருக்கிறார். ‘சர்ப்பம்’, ‘அரண்’, ‘செற்றனள் போலும் செயிர்த்தனள் போலும்’ ஆகிய சிறுகதைகள் முன்னிறுத்தும் உலகம் அகன்றது. இக்கதைகளின் மையமே இந்த வடிவத்தைத் தேர்ந்து கொண்டிருக்கின்றன. நாற்பதாண்டுகளுக்கும் மேலான புனைகதை இயக்கத்தில் இவர் எழுதியது மிகக் குறைவானது. இந்தத் தொகுப்பு குறித்த உரையாடல் அவரது தயக்கத்தைக் களையச் செய்யும் என்று நம்புகிறேன்.
உஸ்தாத் \ சுகுமாரன் \வெளியீடு: நூல் வனம் \ விலை: ரூ.250/-
- சுப்பிரமணி இரமேஷ், உதவிப் பேராசிரியர், தருமமூர்த்தி இராவ்பகதூர் கலவல கண்ணன்செட்டி இந்துக்கல்லூரி, சென்னை - 72