review bookநூல் அறிமுகம்

உடல்நலக் குறைவால் நான் சென்ற மாதம் மருத்துவமனையில் இருந்த காலத்தில், போழுதுபோக்கிற்காக நான்கு நூல்கள் எடுத்துச் சென்றிருந்தேன். பெண்மை ஒரு வரம் என்ற நூல் பா. ஜோதி நிர்மலா சாமி இ.ஆ.ப. அவர்கள் எழுதி, விஜயா பதிப்பகம் வெளியிட்டது.

ஒரு தமிழ்ச் சிற்பியின் பயணம் என்னும் நூல் குமரி ஆதவன் அவர்களால் எழுதப்பட்டு நாஞ்சில் பதிப்பகம் வெளியிட்டது. நலம் தரும் நாற்பது என்றும் நூல் கோயில்பட்டி இரா.ராஜாராம் அவர்களால் எழுதப்பட்டு ஜீவா பதிப்பகம் வெளியிட்டது.

பா.ஜோதி நிர்மலா சாமி ஐ.எ.எஸ் அவர்கள் தமிழ் நாட்டின் பல பகுதிகளில் மாவட்ட ஆட்சியாளராகப் பணிசெய்து சிறப்புப் பெற்றவர். அவர் தன் சுய அனுபவம் சார்ந்து நூற்றிஎண்பத்தி நான்கு பக்கங்கள் கொண்ட பெண்மை ஒரு வரம் என்ற நூலைச் சிறப்பாக எழுதியிருக்கிறார்.

தாய்மையின் முக்கியத்துவத்தை, தாய்மையின் புனிதத்தை, அருமையாகச் சொல்லியிருக்கிறார் ஆசிரியர். பெண் குழந்தைகளுக்கு நல்ல தொடல் கெட்ட தொடல் பற்றித் தாய் தெளிவுப்படுத்த வேண்டும் என்கிறார். ரசிப்பு கண்ணியத்துடன் அமைய வேண்டும் என்கிறார்.

பண்டைக் காலத்தில் வாழ்கையைக் களவு, கற்பு என இரண்டாகப் பிரித்ததாக சொல்லுகிறார் இவர். திருமணத்திற்கு முந்திய பாலியல் உறவு களவு என்றும், பிந்தியக் குடும்ப உறவு கற்பு என்றும் பிரிக்கப்பட்டதாகச் சொல்லுகிறார்.

ஆனால் காதல் குழந்தையின் கல்வியை கெடுத்துவிடக்கூடாது என்று எச்சரிக்கிறார். தன் குழந்தைகளின் கல்வியை எல்லாவற்றையும் விட முக்கியமானதாகக் கருதியதாகச் சொல்லுகிறார் அவர்.

இன்று கிட்டத்தட்ட முப்பத்தி மூன்று சதவீதத்திற்கு அதிகமான உள்ளாட்சி அமைப்புகளில் பெண்கள் பொறுப்பேற்றிருக்கிறார்கள். ஆனால் பல இடங்களில் மனைவிக்குப் பதிலாகக் கணவனே அதிகாரத்தைக் கையில் எடுப்பது துரோகத்தனமானது என்று கண்டிக்கிறார்.

பல சுவையான சுய அனுபவங்களையும் பதிவு செய்திருக்கிறார் ஆசிரியர். 1995ல் பத்மநாபபுரம் கோட்ட ஆட்சி அதிகாரியாக அவர் இருந்தபோது, குழித்துறை ஆற்றில் நடந்த மணல் கொள்ளையைத் தடுப்பதற்காக அவர் முயன்றார். இந்த முயற்சிக்கு எதிராக அவர் எதிர்கொண்ட ஆபத்துக்களை விரிவாகச் சொல்லுகிறார்.

கேரளம் கொச்சியில் ஒரு மாணவனின் பணம் காணாமல் போயிற்று. அதைக் கண்டுபிடிக்க முடியவில்லை. தலைமை ஆசிரியர் மீனாட்சி குட்டி அம்மை பள்ளிக்கூட மாணவர்கள் அனைவரையும் கூட்டி அவர்கள் முன்னிலையில் பிரம்பால் தன்னைத் தனே அடித்துக்கொண்டார்.

பயன் இல்லாததால், உண்ணாவிரதம் இருந்தார். குற்றம் செய்த மாணவன் உண்மையை ஒப்புக்கொண்டு பணத்தைத் திருப்பிக்கொடுத்தான். இவ்வாறு மனச்சாட்சியை துலக்கிவிட முயற்சிப்பது நல்லது என்பதை உளவியல் ரீதியாகச் சொல்லுகிறார் ஆசிரியர்.

தான் பத்மனாதபுரம் கோட்ட ஆட்சியராக இருந்த காலத்தில் உதவியாளர் செல்லப்பன் தன்னைப் பாதுகாத்த முறைகளை நன்றியோடு விவரிக்கிறார். இன்னும் பல சம்பவங்களை அடுக்கடுக்காக சொல்லுகிறார். தேர்வுக்குப் பணம் கேட்டு வாங்கி அந்தப் பணத்தில் சினிமாவுக்குப் போனவர்களின் திருட்டுக் கதையைச் சொல்லுகிறார்.

இறுதியாகக் குடும்பத்தை பற்றி அவர் சொல்லுவது அழகானது. அன்பால் கட்டமைக்கப்பட்டு, நம்பிக்கையால் வலுவேற்றப்பட்டு விட்டுக்கொடுத்தலால் அழகுபடுத்தப்பட்டு, பரஸ்பர உயிரூட்டப்படலால் இனிய மண வாழ்கையானது சொர்க்கத்தையே கொண்டுவரும் என்று தன் நூலை கவித்துவமாக முடித்திருப்பது அருமை. ஆசிரியரை மனமாரப் பாராட்டுகிறேன்.

- பொன்னீலன்