pallakku thookki 523களப்பிரர் காலம் என்பது ஓர் இருண்ட காலம் என்று இதுவரை வரலாறு எங்கும் பேசப்பட்டு வந்தது. சில ஆய்வாளர்கள் அது தவறான கருத்து என்றும், வேதகாலத் திணிப்புகளை எதிர்த்த காரணத்தால் அவர்களின் ஆட்சியையே இருண்ட காலம் என்று வெறுப்பினால் சித்தரித்து விட்டனர் என வரலாற்றை மறுபடியும் மாற்றி எழுதியுள்ளனர்.

‘பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்' என்ற வள்ளுவத்தின் வழியிலே களப்பிரர்கள் ஆட்சி நடத்தினர். வைதீகர்கள் உயிர்ப்பலி யாகங்கள் நடத்தத் தடைவிதித்தனர். அனைவரும் உழைத்துப் பிழைக்கவும், அதற்கு நிலம் தந்து வாழ வகை செய்த ஆட்சியே களப்பிரர் காலத்தில் நிகழ்ந்தது என்று ஆசிரியர் முன்னுரைக்கிறார்.

கி.பி. 3ஆம் நூற்றாண்டு முதல் 6ஆம் நூற்றாண்டு வரை களப்பிரர் ஆட்சிக்காலத்தில் நிகழ்ந்ததாக இந்தப் புதினம் ‘பல்லக்குத் தூக்கி'யை ஆசிரியர் வேணு.குணசேகரன் படைத்துள்ளார். சமூக நீதிக்கான ஒரு வரலாற்றுப் புதினம், களப்பிரர், முத்தரையர் காலப் பின்னணியில் எழுதப்பட்டுள்ளது.

மனுஸ்மிருதி வகுத்த நால்வருண மனிதப் பகுப்பை விலக்கி, மனிதர்கள் அனைவரும் ஒரே இனம் என்னும் உயரிய சமூக நீதிக் கோட்பாட்டை நிறுத்தி, ஏற்றத்தாழ்வு இல்லாத ஒரே சமமான நிலையில் குடிமக்களை வாழும்படிச் செய்த புரட்சிகரமான களப்பிர மன்னர்களைப் போற்றி ‘பல்லக்குத் தூக்கி' என்னும் வரலாற்றுப் புதினம் படைக்கப்பட்டிருக்கிறது.

இதுவரை வெளிவந்த வரலாற்றுப் புனைவுகளில் சேர, சோழ, பாண்டிய, பல்லவர்களைப் பற்றிய புதினங்களே அதிகம். இதுவரைத் தமிழக வரலாற்றில் யாரும் தொடாத களப்பிரர்களின் ஆட்சிக் காலத்தை வைத்து வேணு.குணசேகரன் சுமார் 1085 பக்கங்களில் மூன்று பாகங்களாக புதினத்தை அமைத்துள்ளார்.

வேள்விக்குடிச் செப்பேடுகள், கொடும்பாளூர்க் கல்வெட்டுகள் மற்றும் ஆவணங்கள், ஆராய்ச்சிக் குறிப்புகளைக் கொண்டு வெறும் புனைவாக மட்டுமின்றி, இதுவரை யாரும் தொடாத இடத்திலிருந்து தொடங்கியிருக்கிறார். அவரது எட்டாண்டு கால உழைப்பு நூல் முழுவதும் நன்கு தெரிகிறது.

களப்பிர மன்னர் புதிய அரண்மனைக் கட்டிடம் கட்ட இடம் தேர்வு செய்வதில், கட்டுமான வரைபடம், சுற்றுச் சூழல்கள், ஐந்து வகை அரண்கள் அமைத்தல், வாஸ்து சாஸ்திரம், புறா நிமித்தம் போன்றவற்றை விசுவகர்மா சிவமூர்த்தி ஸ்தபதியார் மூலம் அக்காலத் தொழில்நுட்பங்களை அறிய முடிகிறது.

ஓர் ஆலய நிருமாணம், ஒரு கட்டிட நிருமாணம் ஆகியவற்றை இதுவரை பல புதினங்களில் படித்திருக்கிறோம். ஆனால் ஓர் அரண்மனை நகரை நிருமாணிப்பதை இந்த நூலில் இவர் வடிவமைத்து வருணித்திருக்கிறார். ஒரு காலத்தில் மூத்த இனமான முத்தரையர் ஆட்சியில் நாட்டில் ஊர் நிருவாகத்திற்காக சரியான இடைவெளியில் குடவோலை முறைப்படி தேர்தல் நடத்தப்பட்டு, முறையான ஊரவைத் தலைவர்களை மக்களே தேர்ந்தெடுத்தனர் என்பதை இப்புதினம் தெரிவிக்கிறது.

இப்புதினம் காட்டும் இயற்கை வளமும், இயற்கை அழகும் அக்கால நாட்டைப் படம் பிடித்துக் காட்டுகிறது. அந்த முதல் தலைப்பே, ‘கன்னிக் கொடிகளும், காட்டுக் கொடிகளும்' நம்மைக் கவர்கிறது. அந்த அழகிய கானகத்தைச் சுற்றிப் பார்க்க, நாட்டின் இளவரசி தாரமாதேவியும், தோழி செண்பகவல்லியும் வருகிறார்கள். அவர்கள் இருவரும் சிரிக்கும் கலகலப்பு நம்மைச் சிலிர்த்திட வைக்கிறது.

எங்கிருந்தோ தாக்க வந்த குறுவாள் இளவரசியை உரசிச் செல்வதும், மலைப்பாம்பின் மரணத் தாக்குதலும், ஆற்று வெள்ளத்தின் சீற்றத்தில் உயிர் தப்புதலும், ஆபத்து நேரத்தில் பல்லக்கு வந்து பாவையரை ஏந்திச் செல்வதும் நல்ல தொடக்கம்.

எங்கிருந்தோ வரும் ஓர் இளைஞன் பல்லக்குத் தூக்க உதவுவதும், அதற்கு முன் அவன் விடுக்கும் வினாக்களும், அவனிடம் மனத்தைப் பறிகொடுக்கும் இளவரசியின் பாதத்தை முள்ளில் படாமல் தாங்கும் இளைஞனும் கதையை நகர்த்திக் கொண்டே போகின்றனர். இவனே களம்பானூர் இளவரசன் வீர அச்சுதக் கடம்பனோ?

அரண்மனையில் உதவி செய்வதுகூட குற்றமாகக் கூறப்படுகிறது. இளவரசியை முள்ளில் விழாமல் காத்ததும் குற்றமாகவே விசாரிக்கப்படுகிறது.

“உன் பெயர்?''

“கடம்பன்..,''

“உனக்கு இளவரசியார் பணி நியமன ஆணை வழங்கினார்களா?''

“ஆம்...''

“என்ன பணிக்கான ஆணை?''

“பல்லக்குத் தூக்கியாகப் பணிபுரிய...''

“அது மட்டும் தானே நீ செய்திருக்க வேண்டும்? நீ ஏன் இந்த நாட்டின் இளவரசியாரைத் தொட்டாய்?''

“மன்னிக்க வேண்டும். நான் தொடவில்லை. அவர்களின் பாதங்கள் தான் என் உள்ளங்கைகளைத் தொட்டன...''

“நீ ஏன் உன் கைகளைக் காட்டினாய்?''

“மனிதாபிமானம்...''

இவ்வாறு உரையாடல் வளர்கிறது. இறுதிவரை அழகிய தமிழில் உரையாடல் தொடர்கிறது. ஆசிரியரின் உரைநடை வியக்க வைக்கிறது.

அந்தக் காலம் பௌத்தம் பரவிக் கொண்டிருந்த காலம். அந்தத் தத்துவத்தில் மக்களும், மன்னர்களும் மயங்கிக் கிடந்த காலம். அதனை ஆசிரியர் ஆங்காங்கே விவரிக்கத் தவறவில்லை.

ஒரு முறை வைதீக மதத்தினர் விலங்குகளைப் பலி கொடுத்து யாகம் செய்தபோது, பௌத்தர்கள் போய் வேள்வியைக் கலைத்தனர். உயிர்க் கொலை செய்ய வேண்டாம் என்று தடுத்தனர். அதற்கு வைதிகர், “இந்த வேள்வியில் பலி கொடுக்கப்பட்ட இந்த விலங்குகளின் உயிர் நேராக சொர்க்கத்துக்குத்தான் போகும்'' என்றார்கள்.

உடனே பௌத்தர்கள் “அப்படியானால் வைதீகர்களாகிய உங்களை வெட்டி யாகத்தில் போடுகிறோம். உங்களுக்கும் சொர்க்கம் கிட்டும்'' என்றபோது சண்டை வந்தது. இப்படியாக யாகம், வேள்வி நடக்கும் போதெல்லாம் வைதிகர்களுடன் சண்டையிட்டு சண்டையிட்டு ஓய்ந்து போன பௌத்தர்கள், விந்திய மலைக்குக் கீழே திராவிட நிலத்தில் புகுந்து புத்தமதப் பிரச்சாரத்தில் ஈடுபட வரவேற்புக் கிடைத்தது.

மக்கள் சாத்வீகத்துக்கு மாறத் தொடங்கி புத்தர் கொள்கைகளை ஏற்க ஆரம்பித்தனர். மன்னர்களும் புத்த மதத்தைப் பின்பற்றினர். இதையறிந்த வைதீகர்களும் தென்னாட்டுக்கு வந்து, மன்னர்களைக் கைப்பற்றி, சடங்குகளை அவர்கள் வாழ்வில் புகுத்தி விட்டனர். ‘மன்னன் எவ்வழி மக்கள் அவ்வழி' என்று ஆயிற்று.

இதற்கு ஆதார நூலாக அக்னிஹோத்ரம் இராமானுஜ தாத்தாச்சாரியார் எழுதிய ‘இந்து மதம் எங்கே போகிறது?‘ என்பதை எடுத்துக் காட்டுகிறார்.

நாட்டு நிலவரம் அறிந்து கொண்டு அரண்மனை திரும்பிய தளபதி விஜயரூபன் கூறிய செய்தி மன்னர் வீரசேனாவையும், இளவரசர் மகுடபதி வர்மனையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது. வீரமங்கலத்தில் கொள்ளையும் நடக்கிறதா? இன்றைய கொள்ளையர்களும் இந்த நாட்டின் குடிமக்கள் தானே! இதன் மூலகாரணத்தை ஆராய வேண்டும் என இளவரசனும், படைத் தளபதியும் புறப்பட்டனர்.

“எங்கள் பாட்டன் முப்பாட்டன் காலத்திலேயே எங்கள் பரம்பரை நிலங்கள் பிடுங்கப்பட்டு “பிரம்ம தேயம்' என்ற பெயரில் அப்போது ஆண்ட மன்னர் பிராமண சமுதாயத்திற்கு வழங்கி விட்டார். நாங்கள் பிராமணர்களுக்கு அடிமையானோம். எங்கள் நிலத்தை இழந்து, மானத்தையும் இழந்து சொந்த நாட்டிலேயே அநாதைகள் ஆகிவிட்டோம்...''

“பிரம்ம தேயம்' என்ற பெயரால் குடிமக்களே தீவட்டிக் கொள்ளைக்காரர்களாக மாற்றப்பட்ட கதை இதுதான் என்பதையும், பின்னர் இந்தத் தவறு திருத்தப்பட்டு, அவர்கள் நல்ல குடிமக்களாகத் திருந்தி வாழ்ந்ததையும் ஆசிரியர் விவரிப்பது, களப்பிரர்களின் ஆட்சிச் சிறப்பை விரித்துரைக்கிறது.

'பல்லக்குத் தூக்கி' என்னும் புனைகதை மூலமாகவே தமிழ்நாட்டில் களப்பிரர் வரலாறு எழுதப்பட்டிருக்கிறது. இது வரலாறா? புதினமா? என்றால் அருமையான வரலாற்றுப் புதினம் அவ்வளவுதான்.

பல்லக்குத் தூக்கி
கவிஞர் வேணு.குணசேகரன்
அருணாலயா பதிப்பகம்
36, நெல்வயல் சாலை முதல் குறுக்குத் தெரு
பெரம்பூர், சென்னை-11 / 98847 39593
பக்கங்கள்: 1085 | விலை ரூ. 1400/-

- உதயை மு.வீரையன்

✍️ எழுத்தாளர்களின் கவனத்திற்கு

கீற்றில் தங்களது படைப்புகளை / இதழ்களை வெளியிட விரும்பினால், அவற்றை யுனிகோட் எழுத்துருவில் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.

வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகள் மட்டுமே பதிவேற்றத்திற்குப் பரிசீலிக்கப்படும்.