“தமிழகத்தில் பெருங்கற்படைக் காலப் பண்பாட்டைக் காட்டும் மேற்பரப்பாய்வுகளிலேயே இந்த ஆய்வுதான் ஆழ அகல விரிவுகளைக் கொண்டது. தனித்துவமான ஒரு வாசிப்பு அனுபவத்தையும் புரிதலையும் கொடுக்கிறது. இக்கூற்று உயர்வு நவிற்சியல்ல. அனுபவித்த கூற்றாகும். வாசிப்பின் அடிப்படையில் கூறுவதாகும். தமிழகத்தில் இதுவரை செய்யப்பட்டுள்ள பெருங்கற்படை ஆய்வுகளின் முடிவுகளோடும், விவாதங்களோடும் நரசிங்கம்பட்டியின் தரவுகளை முனைவர் மா.பரமசிவனும், முனைவர் ரே.கோவிந்தராஜூம் ஒப்பாய்ந்து உள்ளனர். கடந்த மூன்று நான்கு தசாப்தங்களில் நிகழ்ந்த தொல்லியல் ஆய்வு முடிவுகளோடு நரசிங்கம்பட்டியை இணைத்துப் பேசுகின்றனர்.” - பேராசிரியர் பக்தவத்சல பாரதி.

நூலாசிரியர் மா. பரமசிவன் மற்றும் ரே.கோவிந்தராஜ் ஆகியோரின் ஆய்வாக்கங்கள் குறிப்பிடத்தக்க வகையில் அமைகின்றன. இவர்கள் கள ஆய்வுவழிக் கண்டடைந்த தொல்லியல் சார்ந்த வரலாற்றுத் தரவுகளை நேர்த்தியான முறையில் நூலாக வடிவமைத்துள்ளார்கள்.

perunkarkala eemakaaduதொல்லியல் கண்டுபிடிப்புகள், தொன்மையைத் தேடுதல் இவையெல்லாம் ஆய்வுகள் ஆகுமா? என்ற நிலையில் இளம் பருவக் கேள்வியாக எழுப்பட்டு வருகின்ற சூழலில் புதிய வரலாற்றுப் பதிவுகளை முன்வைக்கிறது இந்த நூல். தொல்லியல் ஆய்வுகளுக்கு ஒரு முன்னத்தி ஏராக அமைவதோடு தொல்லியல் சார்ந்த பாடத் திட்டத்திற்கான தரவு நூலாகவும் அமைந்திருப்பது குறிப்பிடத்தக்கதாகும். மேலும் தொல்லியல் துறையில் ஆய்வு மேற்கொள்பவர்களுக்குப் பெருங்கற்காலப் பண்பாட்டினை அறிந்துகொள்ளும் ஒரு வரைபடமாகவும் இந்நூல் திகழ்கிறது.

அரிய தொல்லியல் களத்தைக் கண்டறிந்து, அதைச் செய்தியாக ஆக்கியதோடு நின்று விடாமல் ஆய்வியல் நெறிமுறைக்கு உட்படுத்தி ஒரு வரைமுறைக்குள் பனுவலாக்கம் செய்யப்பெற்றிருக்கிறது. தொல்லியல் வரலாற்றெழுதியலுக்கான பனுவலாக ஆக்கப்பட்டுள்ள இந்நூல் தொல்லியல் ஆய்வுலகில் ஒரு மைல்கல்லாகவும் திகழ்கிறது.

மோனத்தின் மொழியை ஈமக்காட்டின் புதைகுழிக்குள் ஊடுருவி ஆய்வுப் பரப்பை விரிவுபடுத்தி, தோண்டத் தோண்ட வரலாற்றுத்தரவுகளை மீட்டெடுத்தும், புது வரலாற்றை மீட்டெடுப்பதற்கான முன்வைப்பைக் கொண்டும் இந்நூல் பயணிக்கிறது. எளிய சொற்களில் எல்லோருக்கும் புரியக்கூடிய நடையில் அமைந்திருப்பது இப்பனுவலாக்கத்தின் தனிச் சிறப்பாகும். கண்டுபிடிப்புகள் யாவும் மேட்டிமைத்தனமான, இறுக்கமான நடையில் புலமைத்துவத்தைக் காட்டக்கூடிய வகையில் இல்லாமல் இளங்கலை படிக்கக்கூடிய ஒரு மாணவர் பெருங்கற்கால ஈமக்காட்டின் பண்பாட்டினை விரிவாக அறிந்து கொள்வதற்கான சாத்தியப்பாடுகளை இந்த நூல் பெற்றுத் தருகிறது. தொல்லியலை தம் ஆய்வுக்களமாக எடுக்கும் ஒரு முனைவர் பட்ட ஆய்வாளருக்கும் அவர்தம் ஆய்வுக்குத் தேவையான வரலாற்றுத் தரவுகளை வலுவாகக் கொண்டமைகிறது. நெற்களத்தில் நெல் மணிகளை விரவி விடுவதுபோல இந்நூலின் கருத்தாக்கம், அரிய பல தகவல்களை முன்னோன் கண்ட ஆய்வை விரிவுபடுத்தியும் அதே நேரத்தில் புதிய கருத்துகளைத் தெளிவுபடுத்தியும் அமைகிறது.

கல்விப்புல ஆய்வு நெறிமுறையைப் பின்பற்றி இந்நூலின் தலைப்பிடுதல் அமைந்துள்ளது. ‘பழையூர் முதல் நரசிங்கம்பட்டி வரை: ஊர்ப்பெயர் ஆய்வும் வரலாறும், வாழ்விட மேடு, பெருங்கற்கால ஈமக்காடு: செவ்வியல் பதிவுகளும் நரசிங்கம்பட்டியும், நெடுங்கற்களும் நடுகற்களும், கற்பதுக்கைகள், முதுமக்கள் தாழிகள், மட்கலப் பண்பாடு, பெருங்கற்காலக் குறியீடுகள், சித்திரச்சாவடி, துணை நின்றவை, பின்னிணைப்புகள்’ என இப்பொருண்மைகளைக்கொண்டு இந்நூல் அமைகிறது. மேற்பரப்புக் கள ஆய்வு என்று பெயரிட்டு, ஆழ அகலத் தொல்லியல் சார்ந்து, புதைந்து கிடக்கும் வரலாற்றை மேற்பரப்பில் மட்டும் தோண்டி எடுத்துச் சொல்லாமல் கீழ்ப்பரப்பு வரைத் தம் ஆய்வுத்திறனால் தோண்டி எடுத்து விளக்கப்பெற்றுள்ளன. இந்நூலில் தொல்லியல் சார்ந்த பெருங்கற்காலப் பண்பாட்டின் வரலாற்றினை இரு தளத்தில் எழுதப்பட்டுள்ளது. ஒன்று, மண்ணுக்கு மேல். மற்றொன்று, மண்ணுக்குக் கீழ் இருக்கக்கூடிய வரலாற்றுத் தரவுகள். இவ்வாறான ஆய்வியல் செல்நெறியில் மண்ணுக்கு மேல் நிலவும் வரலாறுகளைப் பல பொருள்கோள்களில் ஆய்ந்திருந்த போதிலும், மண்ணுக்குக் கீழிருந்து எழுதப்படும் வரலாறுகள் மிகக் குறைவே. இதற்கு இப்பனுவலாக்கம் சான்று பகர்கிறது. நூலாசிரியர் இருவரும் ஈமக்காட்டில் மோனமாயிருக்கும் படுகாடு அடைந்தவர்களின் பௌத்த வேரின் அடிநாதத்தைக் கண்டடைந்து இருக்கிறார்கள். சங்கப் பனுவல்களையும், ஏற்கெனவே உள்ள தொல்லியல் தரவுகளையும் வைத்துக்கொண்டு வைதிகக் கருத்தியலாக்கத்தைக் கட்டுடைத்துப் பௌத்தக் கருத்தாக்கங்களை உருவாக்குவதும், கட்டியெழுப்புவதும், மீட்டெடுத்திருப்பதும் இந்த நூலின் தனிச்சிறப்பாகும். பெரும்பாலான தொல்லியல் கண்டுபிடிப்புகள் அனுமானங்களை மட்டுமே பதிவு செய்கின்றன. அவ்வாறின்றி, தொல்லியல் சார்ந்த பௌத்த மெய்மைகளை அடிப்படையாகக் கொண்டு இந்நூலின் போக்கு நீட்சி பெறுகிறது.

ஒரு நூலாசிரியர் அனுமானங்களையும் தகவலாளிகளின் தகவல்களையும் இறுதி முடிவாக எடுக்காமல் பழந்தமிழ் இலக்கியத் தரவுகளையும், வாய்மொழித் தரவுகளையும் ஒப்புநோக்கி, புதிய கருத்துகளை வளர்த்தெடுத்து இறுதி முடிவை நோக்கிச் செல்வதும் இந்த நூலின் வாசிப்பின் வழி அறியமுடிகிறது. இதற்கான சான்றுகளைப் பல இடங்களில் காணலாம்.

மதுரை மாநகரின் பழமையான ஊரே பழையூர் எனும் ஊர். இவ்வூர்ப்பெயர் பொருள் அடிப்படையிலேயே இப்பெயர் பெற்றிருக்கலாம். பழம்பெருமையும், முதுகுடி மக்கள் வாழ்வதாலும் கூட இப்பெயர் பெற்றிருக்கக்கூடும். தற்பொழுது, பழையூர் நரசிங்கம்பட்டி என வழங்கி வருகிறது. ‘பழையூர் முதல் நரசிங்கம்பட்டி வரை: ஊர்ப் பெயர் ஆய்வும் வரலாறும்’ என்கிற தலைப்பில் முதல் பகுதி ஆராயப்பட்டுள்ளது. தொல்லியல் சார்ந்த வரலாறுகளைக் கதைசொல்லியாக முதல் பகுதியில் சொல்லியுள்ளார்கள். ஊர், ஈமக்காடு அமைவிடத்தைப் பற்றிக் கூறும் இடத்தில் அருமையான மொழிநடையைப் பார்க்க முடிகிறது. பெருங்கற்காலத் தடயங்களை அறிவதற்கு ஒரு ‘Road Map’ போன்று இப்பகுதி அமைந்திருக்கிறது. பழையூர் எனும் ஊர் உருவான சூழலில் சமணமும் பௌத்தமும் இங்கு இருந்ததற்கான சான்றை இந்நூல் ஆராய்கிறது. பழையூர் எனும் ஊர் உருமாறி நரசிங்கம்பட்டி எனப் பெயர் மாற்றம் ஆகக்கூடிய சூழலில் எவ்வாறு வைதிகம் இவ்வூரை ஆதிக்கம் செலுத்தியிருக்கிறது என்பதை அழகாகச் சொல்லிச் செல்கிறார்கள். இவ்வாறு வைதிகம் எனும் சனாதனம் பூர்வ குடிகளையும், அவர்களின் தெய்வ வழிபாட்டையும் மேனிலையாக்கம் செய்துள்ளதை இந்நூல் கட்டவிழ்க்கிறது. ஆண்டிமலையான் வழிபாடு தலைமழிக்கும் வழக்கம் ஆகியன பௌத்தத்தோடு தொடர்புடையவை. இதுபோன்ற பௌத்த, சமணத் தடயங்களைக் கொண்டிருந்த ஊரை நரசிம்ம வழிபாட்டை முதன்மையாகக் கொண்டு வைதிகர்கள் வைணவத்திற்குரியதாக ஆக்கியிருக்கிறார்கள் என்றும் நரசிங்கம்பட்டி பெருமாள் மலை போன்ற பெயர்மாற்றம் இதற்குச் சான்றென்றும் விளக்கிச் செல்கின்றனர். வைதிகம் நெருங்கமுடியாத, மேனிலையாக்கம் செய்ய முடியாத பகுதிகளும் இருக்கின்றன என்பதையும் அவதானிக்க முடிகிறது. பெருங்கற்காலப் பண்பாட்டில் நெடுங்கற்கள், கற்குவைகள், பதுக்கைகள் இவையுடன் சங்க காலத்திற்குரிய நடுகற்கள், முதுமக்கள் தாழி ஆகியனவும் பழையூர் எனும் நரசிங்கம்பட்டியில் காணப்படுகின்றன. இதன் வழியாகத் தொல் தமிழரின் இறப்புச் சார்ந்த பண்பாட்டுக் கூறுகளை அறிந்துகொள்ள முடிகிறது.

‘ஏமம்’ என்னும் சொல்லோடு தொடர்புடைய பிற சொற்களும் இந்த நூலில் கூறப்பட்டுள்ளன. ஈமம், ஈமக்காடு, ஈமச் சுடலை எனும் சொற்கள் சங்க இலக்கியப் பனுவல்களில் இடம்பெற்றதைக் கூறுவதோடு மணிமேகலையில் சக்கரவாளக் கோட்டம், சுடுகாட்டுக் கோட்டம் எனும் பெயர்களும் பதிவு செய்யப்பட்டுள்ளன என்பதை நூலில் விளக்குகின்றனர். ஈமக்காடு வழிபடுவதற்குரிய இடமாக இருந்ததை நிக்கந்தக்கோட்டம், வெள்யானைக் கோட்டம், அருகக் கோட்டம் என்று சிலப்பதிகாரத்தில் வரக்கூடிய சொல்லுருக்களோடு இணைத்தும் முன்னோர் வழிபாட்டோடும், ஈமப்பண்பாட்டோடு தொடர்புடைய பிறவற்றோடும் பொருத்திப் பதிவுசெய்து விளக்குகின்றனர். பிணங்களைக் கொண்டு வருதல், தோண்டப்பட்ட குழியில் புதைத்தல், புதைத்த பின்னர் பள்ளமான இடங்களை அடைத்து வைத்தல், தாழியில் அடக்கம் செய்தல் எனும் முறைகளை மணிமேகலை வழித் தெளிவுபடுத்துகிறது இந்நூல்.

ஈமக்காடு, நெடுங்கற்கள், நடுகற்கள், கற்குவை, பதுக்கைகள் குறித்து சங்க இலக்கியப் பனுவல்களில் இடம்பெற்றுள்ளதைச் சான்றாகக் கூறிச்செல்வது நூலிற்கு மேலும் வலு சேர்க்கும் வகையில் இருக்கிறது. தொல்லியல் ஆய்வாளர் பழந்தமிழ் இலக்கியங்களில் பாண்டித்தியம் பெற்றிருக்கும் பொழுது அகச்சான்றுகளையும், புறச்சான்றுகளையும் கொண்டுகூட்டிப் பொருள் கொள்வது எனும் குணநிலை நூலில் இடம் பெற்றிருக்கிறது. இதற்குச் சான்றாக, தொல்காப்பியத்தின் புறத்திணையியல் நூற்பா (தொல். புறத்.நூற்பா 5:19-21) தலைப்பின் பொருண்மைகளுக்கேற்ப இரு இடங்களில் பயன்படுத்தப்பட்டுள்ளதைக் குறிக்கலாம். (ப.66, 80). நெடுங்கற்களையும் நடுகற்களையும் விளக்கும் இடத்திலும், கற்பதுக்கைகள் குறித்து விளக்கும் இடத்திலும் இந்நூற்பா வரிகள் பயன்படுத்தப்பட்டுள்ளன.

17ஆம் நூற்றாண்டு அளவில் திருமலை நாயக்கர் படையெடுப்பிற்குப் பின்னர் இப்பகுதி வைணவ ஆதிக்கம் செலவாக்குப் பெற்ற பகுதியாக மாறியது எனவும் இந்நூற்றாண்டில் நாயக்கர் கால இராமாயணக் காட்சி ஓவியங்கள், சித்திரச்சாவடியில் இடம்பெற்று இருக்கின்றது எனவும் நூலில் கூறியிருப்பதன் வழி நாயக்கர் காலத்தில் சித்திரச்சாவடி ஓவியங்கள் இராமாயணக் காட்சிகளாக உருவாக்கப்பட்டுள்ளதை அறிய முடிகிறது.

வரலாற்றுப் பெருமை மிகுந்த இந்த ஊரில் பூர்வகுடி மக்களாகப் பறையர் இன மக்கள், கள்ளர் இன மக்கள் ஆகியோர் வசித்து வருகிறார்கள். ஆண்டி மலையான் கோயில் என்னும் மலைக்கோயில், ஏமவீரன் கோயில் எனும் ஈமக் கோயில், இரட்டைக் கல்வீரன் கோயில், நொண்டி கோயில், பறையன் புலியன் கோயில், கட்டப் புலியன் கோயில் ஆகிய நாட்டார் தெய்வ வழிபாடுகள் இருப்பதை இந்நூல் சுட்டுகிறது. மலைச்சாமி கோயில் பெருமாள்மலையின் அடிவாரத்தில் தெப்பத்திற்குள் இருக்கின்றது என்பதும் இதன் அமைவிடம் வெள்ளரிப்பட்டி என்றும் குறிப்பிட்டு மலைக்கோயில் வழிபாட்டு வழக்கங்களையும், சடங்குகளையும் பதிவாக்கம் செய்திருப்பது தொல்லியல் ஆய்வோடு நாட்டார் தெய்வ வழிபாட்டினைக் கவனத்தில் கொண்டுள்ள போக்கு தெளிவாகிறது.

ஒரு மண் மேட்டின் மேல் மூன்று முறை மண் அள்ளிப்போட்டு, அதன் பின்னர் தெய்வ வழிபாட்டிற்குச் செல்வதை இந்நூல் பதிவுசெய்கிறது. இச்செயல் நீத்தோர் வழிபாட்டோடு தொடர்புடையது. இந்நிகழ்வில் பட்டியலின மக்களுக்குத் தனி இடமும், பிற இனத்தவருக்குத் தனி இடமுமாக அமைக்கப்பட்டுள்ளன என்றும் மேலும் வெளியூர்க்காரர்களுக்கான ஒரு இடமும் உள்ளது என்றும் கூறுவதன் வழியாகச் சாதிய உள்முரணைக் குறிப்பிட்டுப் பறையன் புலியன் கோயிலுக்குக் கள்ளர் சமூகத்தினர் பூசாரியாக இருந்துவருகிறார்கள் எனக் குறிப்பிடுகிறது இந்நூல். கார்த்திகைத் திருநாள் அன்று மலைக்கோயிலின் மேல் தீபம் ஏற்றிய பின்னர் நரசிங்கம்பட்டி, வெள்ளரிப்பட்டி, தெற்குத்தெரு ஆகிய சுற்று வட்டாரக் கிராமங்கள் அனைத்திலும் கார்த்திகை தீபம் ஏற்றக்கூடிய வழக்கத்தைக் கொண்டுள்ளார்கள் எனக் கூறப்பட்டுள்ளது. இதன்வழியாகக் கார்த்திகை மாதத்தில் தீபம் ஏற்றி வழிபடுவது என்பதே நீத்தோரின் நினைவாக நிகழ்த்தப்படும் , நீத்தோர் ஒளியாக இருப்பதான நம்பிக்கையின் வெளிப்பாடாக இருப்பது தெளிவாகிறது.

ஈமக்காடு, கற்பதுக்கை, முதுமக்கள் தாழி, நெடுங்கற்கள், நடுகற்கள் இவையனைத்திற்கும் அதற்குச் சான்றாக வண்ண ஒளிப்படங்களை இணைத்திருப்பது சிறப்புக்குரியதாகும்.

பெருங்கற்காலத் தரவுகளை அளவிட்டிருக்கும் முறை (Quantitative Methodology) இந்நூலின் மற்றுமொரு தனிச்சிறப்பாகும். அளவிடுதல் முறைமையில் ஆய்வு செய்தல் என்பது கணிதத் துறையில் முக்கியமான ஆய்வு அணுகுமுறையாகும். இதில் வடிவங்களை அடையாளங்காணவும், அளவுகளைக் கணக்கிடுதல் (Calculating Quantities), அளவிட்டு ஆய்தல் (Measurement Studies), ஏற்கெனவே கண்டறியப்பட்ட முடிவுகளைச் சோதித்தறிதல், தம் கருதுகோள்களைப் பொருத்திப்பார்த்தல், முதன்மைத் தரவுகளையும், துணைமைத் தரவுகளையும் அடிப்படையாகக்கொண்டு மெய்மையை நோக்கி நகர்த்துதல், எண்ணிக்கை அடிப்படையில் தரவுகளைச் சேகரிப்பதையும், பகுப்பாய்வு செய்வதையும் உள்ளடக்குதல் எனும் முறைமைகளைக் கொண்டது இம்முறை. இத்தகைய அளவிடுதல் அணுகுமுறை அடிப்படையில் புள்ளிவிவர, கணிதக் கணக்கீட்டு நுட்பங்களைப் பயன்படுத்தி இந்நூலில் விளக்கப்பட்டுள்ளன. இதற்கு நிறையச் சான்றுகளை இப்பனுவலாக்கத்தில் காணலாம். பதுக்கை, தாழி, நெடுங்கல், நடுகல் என அனைத்தும் பத்துக்கும் மேற்பட்ட எண்ணிக்கையில் அளவீடு செய்யப்பெற்றுள்ளன. (பக். 53, 65, 71- 78, 85, 91, 92).

செவ்வியல் பனுவல்களில் இடம் பெற்றுள்ள மூதூர், ஈமம், நெடுங்கல், நடுகல், பதுக்கை, தாழி, மட்கலங்கள் - குடம், குழிசி, பானை, மண்டை எனும் பெருங்கற்காலப் பண்பாட்டுப் புழங்குபொருள்கள் குறித்த பாடலடிகள் பின்னிணைப்பில் கொடுக்கப்பட்டுள்ளன. இவை மேலாய்விற்கு உதவக்கூடியவை என்பதில் எவ்வித ஐயமில்லை. இந்நூலாசிரியர்கள் நூலின் ஒவ்வொரு பகுதிகளிலும் மேலாய்வுக்கான களங்களைச் சொல்லிச் செல்கிறார்கள். குறிப்பாக, புதைக்கப்படும் ஈமத்தாழிகளில் இடம்பெறும் ஏராளமான குறியீடுகளை மேலாய்வு செய்வதற்கான களங்களாக விளக்குகின்றனர். மேலும், தொல்லியல் சார்ந்த இந்திய வரலாற்றினைப் புரட்டிப் போடக்கூடிய வகையில், தமிழர் வரலாற்றில் பல உண்மைகளைக் கீழடி அகழாய்வு தெளிவுபடுத்திக் கொண்டிருக்கிறது. மதுரையில் உள்ள சித்தர் நத்தம், மாற நாடு, கொந்தகை ஆகிய பகுதிகள் தொல்லியல் ஆய்வாளர்களால் அடையாளங் காணப்பட்டிருப்பினும் நரசிங்கம்பட்டி இன்னும் ஆய்வுக்கு உட்படுத்தப்படாத பகுதியாக இன்றுவரை இருந்து வருவதை இந்நூல் தெளிவுபடுத்துகிறது. பழையூர் எனும் நரசிங்கம்பட்டி ஈமப் பண்பாட்டினை ஆராய்ந்ததில் இப்பனுவலாக்கமே முதல் பனுவலாக இருக்கும் என்று கருதுகிறேன். வேதியியல் ஆய்வு முறையில் பானை ஓடுகளின் ஒற்றுமை, வேற்றுமைகளைத் துல்லியமாக ஆராய வேண்டியுள்ளது என்றும் இந்நூல் கூறுகிறது.

 மதுரையின் அடையாளமாகக் கீழடி விளங்குவது போன்று பழையூர் எனும் நரசிங்கம்பட்டி வாழ்விட மேடும், ஈமக்காடும், ஈம வழிபாட்டு முறையையும் விளங்குகின்றன என்பதை இந்நூல் தெளிவுபடுத்துகிறது. இவ்விடத்தை அகழாய்வுக்கு உட்படுத்த வேண்டியது நம் கடமை என்று நூலாசிரியர்கள் கூறியிருப்பது இன்னும் பல மேலாய்வுக்கான களமாக இக்களம் விளங்குகிறது என்பதைத் தெளிவுபடுத்துகிறது.

முதுமக்கள் தாழியில் அழகிய தோற்றப் பாடுகளுடன், குறியீடுகளும் காணப்படுகின்றன. பெருங்கற்கால மக்களின் கலைத்திறனையும் எழுத்தறிவின் தொடக்கத்தினையும் குறியீட்டின் வழியாக வெளிப்படுத்தியிருப்பதை இந்நூல் வழி அறிய முடிகிறது. கைவிரலால் செய்யப்பட்ட ஒப்பனை, சிறு குச்சியைக் கொண்டு செய்யப்பட்ட ஒப்பனை, நம்பிக்கைத் துளை, வட்டக்கல் குறியீடு என்கிற தன்மைகளில் தாழிகளும் அதற்குள் இருக்கும் பொருள்களும் அமையப்பெற்றுள்ளதாகக் கூறுகிறது இந்நூல்.

நாட்டார் புழங்குபொருள்களில் தாழிகள், மட்கலப் பொருள்களின் தொழில்நுட்பம் தனிநபர் சார்ந்ததாக அல்லாமல் கூட்டுச் செயல்பாட்டாய் வெளிப்படக் கூடியதாகும். இத்தொழிற்பாடுகள் யாவும் கூட்டுச் செயல்பாடாகவும், கூட்டு நடவடிக்கையாகவும், கூட்டு அடையாளமாகவும், கூட்டுப் பண்பாடாகவும் விளங்கக் கூடியதாகும். அந்த வகையில், பெருங்கற்காலப் பண்பாட்டில் ஈமச்சடங்கும் கூட்டு வெளிப்பாடாகவே வெளிப்படக்கூடியதாக அமைந்திருக்க வாய்ப்புண்டு. நெடுங்கல்லை ஒன்று கூடிப் பலர் தூக்கி இறந்தோரின் தலைப்பகுதியில் நடுவது என்பது தனிநபரால் ஆகக்கூடிய காரியம் அல்ல, அனைவரின் கூட்டுச் செயல்பாடாய் நிகழக் கூடியதாகும். இவ்வாறே ஒன்று கூடி நீத்தாரைப் பெருமைப்படுத்தும் விதமாக - போற்றும் விதமாக - உயர்வு படுத்தும் விதமாக - முன்னோரை வழிபடும் விதமாக இவ்வூள்ளீட்டின் பொருட்டே ஈமக் காரியங்களைச் செய்து வந்திருப்பார்கள் என்பதை அவதானிக்க முடியும். இத்தகு தன்மைகள் அனைத்தும் இந்த ஈமக்காட்டிற்கும் பொருந்தக் கூடியதாகும். இந்த ஆய்வின் தொடர்ச்சியாகத் தொல்லியல் துறை இக்களத்தை அகழாய்வு செய்யும்போது மேலும் பல உண்மைகள் புலப்படும். இதுவே இந்த ஆய்வின் நோக்கமாகவும் அமைகிறது.

இளங்கலை மற்றும் முதுகலைத்தமிழ் மொழிப்பாடங்களிலும், வரலாற்றுத் துறையிலும் தொல்லியல் பாடம் இருக்குமானால் இந்த நூல் பாடத்திட்டத்தில் தவிர்க்கமுடியாத நூலாக இடம்பெறும் என்பதில் எவ்வித ஐயமுமில்லை. மேலும், இந்நூல் தமிழரின் தொல் பண்பாட்டினை அறிந்து கொள்ளும் நூலாகவும், பெருங்கற்கால ஈமப்பண்பாட்டின் மாற்றுக் கருத்தியலை நோக்கிய வரலாற்றுக் களஞ்சியமாகவும் திகழ்கிறது என்பதும் குறிப்பிடத் தக்கதாகும்.

‘பெருங்கற்கால ஈமக்காடு: நரசிங்கம்பட்டி எனும் பழையூர் - மேற்பரப்புக் கள ஆய்வு’,

மா.பரமசிவன், ரே.கோவிந்தராஜ்
வெளியீடு: என்சிபிஎச், சென்னை. விலை: ரூ.300/-

 - முனைவர் ம.கருணாநிதிதமிழ் உதவிப் பேராசிரியர், தூய நெஞ்சக் கல்லூரி (தன்னாட்சி), திருப்பத்தூர்.

✍️ எழுத்தாளர்களின் கவனத்திற்கு

கீற்றில் தங்களது படைப்புகளை / இதழ்களை வெளியிட விரும்பினால், அவற்றை யுனிகோட் எழுத்துருவில் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.

வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகள் மட்டுமே பதிவேற்றத்திற்குப் பரிசீலிக்கப்படும்.