இணை நாவல் ஜமீந்தாரர் காலத்திலிருந்து இன்று வரை சமூகத்தில் பெண்களின் வளர்ச்சிக்கு எதிராகக் கட்டமைக்கப்பட்டிருக்கும் கட்டுகளைத் தகர்க்கிறது. நான்கு தலைமுறை பெண்களான வேதவல்லி, திலகவதி, கல்யாணி, சாரதா, சுசித்ரா, பீனு என எழுத்தாளர் இந்துசெல்லா உருவாக்கியுள்ள பெண்கள் துடுக்குத்தனம் நிறைந்தவர்களாகவும், வாழ்க்கையைத் துணிவாக எதிர்கொள்பவர்களாகவும், அறம் உடையவர்களாகவும் உள்ளனர். புனை கதையாக மட்டும் எடுத்துச் செல்லாமல் சில புரிதலுக்காக தொன்மங்களையும், அன்றைய இந்திய அரசியல் சூழலையும், பொதுவுடைமைப் போராட்டங்களையும் அதன் விளைவால் சமூகம் அடைந்த வளர்ச்சிகளையும் பெண்களின் பங்களிப்புகளையும் திறம்பட எடுத்தியம்புகிறார்.

inai indhuchellaபெண்களின் வெவ்வேறு மன நிலைகள், பெண்கள் எதிர்கொள்ளும் பிரச்சனைகள், நிராசைகள், பாலின சமத்துவம், பெண்ணின் சுயசிந்தனை, குடும்பம், திருமண உறவு என நாவல் விரிவடைகிறது. ஒவ்வொரு காலப் பெண்களும் நாவலில் மையக் கதாபாத்திரமாகி ரிலே ஓட்டப்பந்தயம் போல் நாவலை அடுத்த தலைமுறை பெண்ணிடம் கொடுத்துவிட்டு மறைகின்றனர். அந்தக் கதாபாத்திரத்தைச் சுற்றியே பிற பாத்திரங்களும் அந்தப் புனைவிற்கு வலுசேர்க்கின்றன.

வேதவல்லி நாவலில் தேவதாசியாக அறிமுகம் செய்யப்படுகிறாள். ஜமீன் மனைவியான வேதவல்லியிடம் ஆங்கிலேய சப்-கலெக்டர் துரை கடவுளின் மனைவியாக வாழ்கின்ற இந்த வாழ்க்கை பிடித்திருக்கிறதா எனக் கேள்வி கேட்கிறார். அதற்கு வேதவல்லி கடவுளுக்காகப் படைக்கப்பட்ட நாங்கள் மனிதர்களின் இச்சையைப் பூர்த்தி செய்கிறோம் எனக் கூறும் பதிலானது, தேவதாசி பெண்களின் எதிர் கதையாடலாக அமைகின்றது. விருப்பம் இல்லாத தகப்பன் வயதுள்ள கணவனுடன் வாழ்ந்தவளான வேதவல்லி வெள்ளைக்கார துரையிடம் தன் இதயப்பூர்வமான காதலை வெளிப்படுத்துவது அக்காலகட்டத்தின் சம்பிரதாயங்களை எல்லாம் உடைத்தெறிவதாக அமைகின்றது. தன் மகளான திலகவதி ஒருபோதும் தன்னைப்போல இருக்கக் கூடாது அவளைச் சமுதாயம் மதிக்க வேண்டும் என்ற எண்ணத்தில் மகளுக்குத் தமிழ், சமஸ்கிருதத்தோடு ஆங்கிலம் கற்றுத்தர ஏற்பாடு செய்வது கல்வி அனைவருக்குமானது; மற்றும் தான் வாழும் சமூக நிலையினைக் கல்வியே மாற்றும் என்பதையும் நிறுவுகிறாள் வேதவல்லி. அதன் அடிப்படையில் நான்காம் தலைமுறை நவீனப் பெண்ணான சுசித்ரா நன்றாகப் படித்து பட்டம் பெற்று ஐடி கம்பெனியில் பணியாற்றி கை நிறைய பணம் சம்பாதித்தாலும் அவள் மாமியார் எப்படியாவது மருமகளைக் குற்றம் கண்டுபிடித்து தனக்குக் கீழ் வைத்துக்கொள்ள வேண்டும் என நினைத்து தன் கணவனிடம் குறைகூறுகிறாள். சுசித்ராவின் படிப்பும் அவள் வேலையும் அவளுக்கென்று தனி அந்தஸ்தைக் கணவனிடமும் மாமனாரிடமும் பெறவே மாமியாரால் அதிகாரம் செலுத்த முடியாமல் போகிறது.

திருமணம் என்பது பெண்ணிற்கு புதிய மதிப்புகளையும், புதிய நிலைகளையும் கொடுத்து புதிய கடமைகளையும் இச்சமூகம் அவளிடம் எதிர்பார்க்கிறது. அத்துடன் அவளுக்குச் சில குண நலன்களையும், அக்குண நலன்கள் இல்லாத நிலையில் அவளைச் சமுதாயம் இழிவுபடுத்துவதையும் சமுதாய வரலாற்று வழி நாம் காணமுடிகிறது. அந்தவகையில் திலகவதி தேவதாசி வேதவல்லியின் மகளாக இருந்தாலும் அக்காலகட்ட பெண்ணடிமைத்தனங்களை உடைத்தெறியும் புரட்சிகரப் பெண்ணாக நாவலில் வலம்வருகிறாள். ஆரம்பக் காலங்களில் தேவதாசிப் பெண்களைக் கோயில் திருவிழா, திருமணம் போன்ற வைபவங்களில் மட்டுமே காணமுடியும் என்றிருந்தது. இந்நாட்களில் இப்பெண்களைத் தனிமையில் பார்க்க முடியாது என்ற மரபினை தன் காதல் மூலம் கட்டுடைக்கிறாள் திலகவதி. திருவேங்கடத்தைக் காதல் செய்யும்போது சிலப்பதிகார கோவலனைக் கையிலெடுத்து ஆண்கள் மட்டுமே தேன் உண்ணும் வண்டுகளாக ஒவ்வொரு மலராய்ச் சென்று சுவைக்கின்றனர் என எள்ளி நகையாடி கண்ணகி, கோவலனாக மாறியிருந்தால் இளங்கோவடிகளின் எழுத்தாணிக்கு வேலையில்லாமல் போயிருக்கும் என உரையாடுவது திலகவதி பெண்ணியப் புரிதல் உள்ளவளாக இருப்பதை அறிய முடிகிறது. தாய்வழி தேவதாசி அடிமைத்தனத்தை ஒழித்து அக்காலகட்டத்தில் வாழும் பிறபெண்களைப்போல் வாழ்வியலைத் தொடங்கி மற்ற தேவதாசி பெண்களும் இம்மரபிலிருந்து வெளியில் வரலாம் என்று வழிகாட்டியாகிறாள். பின் தான் கற்ற ஆங்கில மொழியறிவை ஊரிலுள்ள தலித் மக்களின் வளர்ச்சிக்குப் பயன்படுத்தி ஊரின் தலைமையைக் கல்வியறிவால் ஏற்றுப் புது சமுதாயம் படைப்பவளாக இயங்குகிறாள் திலகவதி. கணவனான திருவேங்கடத்தின் அரசியல் ஈடுபாடுகளிலும் போராட்டங்களிலும் தானும் கலந்து கொண்டு உற்ற இணையாகவும் செயல்படுகிறாள். திலகவதி மரித்தபின் திராவிட இயக்கம் இவரின் சமூக கடமைகளை மறக்கமுடியாமல் சிலை வைத்து கௌரவிப்பது என்பது நல்லது செய்ய, நல்ல குலத்தில் பிறக்க வேண்டும் என்ற அவசியம் இல்லை என்பதை அழுத்தமாகக் கூறுவதாக அமைகின்றது.

நான்காம் தலைமுறையான சாரதாவிலிருந்து நாவல் தொடங்குகிறது. அவளுக்கு இரண்டு பிள்ளைகள். சாரதாவின் ஆரம்பகாலப் புரிதலானது பெண்கள் சகமனிதர்களிடம் எல்லா சந்தர்ப்பத்திலும் விழிப்புடனும், எச்சரிக்கையுடனும் நாட்களை நகர்த்திச் செல்வது அவர்களின் சாமர்த்தியத்தைப் பொறுத்தது. ஏனெனில் அவள் அழகாகக்கூட இருக்கத் தேவையில்லை, அவள் பெண்ணாக இருந்தால் போதும் என்ற அளவில் இருந்தது. கணவன் மறைவிற்குப்பின் சாரதா தான் செய்த பணியைத் துறந்து ஜெகதீசன் கம்பெனிக்கு வேலைக்குச் செல்கிறாள். அங்கு ஜெகதீசனுக்கு சாரதா மீது நன்மதிப்பு வருகிறது.

இங்கு ஜெகதீசன் மனைவியாகிய ஜீவிதாவைப் பிரிந்து வாழ்பவர். ஜெகதீசன் மனைவியாகிய டாக்டர் ஜீவிதா அரசியல் தலைவரின் மகனுடன் உணவு விடுதியில் தங்கியிருந்ததைப் பார்த்தவன் கோபத்துடன் மனைவி என்கிற அந்தஸ்தை இழந்தவளோடு இனி இணைவது என்பது தெரிந்தே எச்சில் சோற்றை உண்பது போல என தன் இணையான அதாவது தனக்கெனவே படைக்கப்பட்ட புத்தகம் என்று புகழ்ந்தவளை விட்டுப் பிரிகிறான். ஜெகதீசன் போன்ற ஆண்கள் பெண்களை எவ்வாறு புரிந்துள்ளனர் என்ற அவலங்களை குறிப்பிடுகிறார் இந்து செல்லா.

இக்காலகட்டத்தில் ஜெகதீசன் உடல்நலக்குறைவு பெற்ற தருணங்களில் சாரதாவே ஜெகதீசனின் கம்பெனியைக் கவனிப்பது மட்டுமல்லாமல் ஜெகதீசனையும் கவனித்துக்கொள்கிறாள். ஜெகதீசனுக்கு சாரதாவை இணையாக்கிக்கொள்ளவே வெளிப்படையாகவே முயல்கிறான். இங்குச் சாரதாவின் பிள்ளைகள் தாயின் விருப்பங்களுக்கே முக்கியத்துவம் கொடுக்கின்றனர். ஏனெனில் ஒரு பெண் ஐம்பது வயதைக் கடந்தவளாக இருந்தால் இன்னொரு இணையை அவள் தேடக்கூடாது என்ற மரபைக் கட்டி வைத்துவிடுகின்றனர். இங்கு முதுமையில் ஜெகதீசன் இணையைத் தேடுகிறான். சாரதா ஜெகதீசன் இருவரும் ஐம்பது வயதைக் கடந்தவர்களாக இருந்தபோதும் அவர்கள் நட்பைத் தவறான புரிதலுடன் சுசித்ரா மாமியார் தன் கணவனாகிய தண்டபாணியிடம் கூறுகிறாள். அதற்கு தண்டபாணி "அறுபது வயதுக்கு மேல் என்ன பண்ண முடியும்? இரவு முழுவதும் ஒன்றாகத்தான் படுத்துக்கொண்டிருக்கிறோம். நமக்குள் இந்த வயதான காலத்தில் என்ன நடந்துவிட்டது?" என உரையாடுவது இணைக்கான அர்த்தங்களாக இச்சமூகம் புகட்டும் அனைத்தையும் கேள்விக்குரியதாக மாற்றுகிறது.

சாரதா உடல்நலம் சரியில்லாத ஜெகதீசனை படுக்கை அறையில் ஒரே மெத்தையில் படுத்திருந்து மருந்து கொடுத்துக் கவனித்தாலும் அவர்களுக்குள் எந்த உடல் பகிர்வும் ஏற்படவில்லை. ஜெகதீசன் சாரதாவிடம் ‘துணையாக இருக்கக்கூடிய பெண் என்பவள், உடல் இன்பத்தை அளிக்க வேண்டும் என்பதில்லை. ஒரே படுக்கையில் கைக்கு எட்டும் தூரத்தில் படுத்து எழுந்தால் கூடப் போதும். ஒரு ஆணுக்குப் பெண்ணும், பெண்ணுக்கு ஆணும் துணை என்கிற அந்த இருப்பே ஆனந்தத்தையும் ஆரோக்கியத்தையும் ஆயுளையும் கொடுக்க வல்லது’ இவ்வாறு கூறுவது என்பது ஜீவிதாவிற்கு இழைத்த அநீதி இங்குப் புலப்பட்டாலும் உடல் அரசியலைச் சுட்டுகிறார் இந்து செல்லா. இங்கு சாரதாவை வைத்து இணை என்பது உடல் உறவுக்கானது மட்டும் இல்லை, அது அக உணர்வுக்கானது என்பதை இணைக்கான அர்த்தங்களாக வெளிப்படுத்துகிறார் இந்து செல்லா.

குடும்பங்களின் உணர்ச்சியின் வெளிப்பாடே நாவல். மனிதன் சேர்ந்து வாழும் இயல்புடையவன். துணையுடன் இருக்கும் இயல்பை உடையவன். அதற்கு சமூக அங்கமான ஓர் இணை தேவை. அன்பும் அக்கறையும் இருக்கும் இணை வேண்டும். பெரும்பாலும் இரண்டு இணையை வைத்தே கதை நகர்வு அமைகின்றது. ஓர் இணையுடன்தான் வாழ வேண்டும் என்று பெண்களுக்கு எழுதப்படாத சட்டம் இருந்த காலங்களில் அவள் மற்றொரு இணையுடன் சேர்ந்து வாழ்ந்தால் பல கெட்ட பெயர்களை வைத்து பெண்களை இழிவுபடுத்தும் காலங்களில் கதையில் உள்ள பெண்கள் தங்களுக்குப் பிடித்த இணையுடன் வாழ்வதையே விரும்புகின்றனர். இங்குக் கணவன் மறைவிற்குப் பின் வேதவல்லி சீனிவாச ரெட்டியுடனும், ஜீவிதா ஜெகதீசனுடனும் வாழ்ந்தாலும் அரசியல் தலைவரின் மகனுடனும் வாழவே ஆசைப்படுபவளாகத் தனக்கான துணையைத் தாங்களே தேர்ந்தெடுத்து வாழ்வதையே விரும்புகின்றனர். இப்பெண்கள் ஒரே துணைதான் காலத்திற்கும் என்ற மரபை உடைத்து சமகாலத் துணைகளைத் தேர்ந்தெடுப்பவளாக உள்ளனர். காமம் இல்லாமலும் ஒரு பெண்ணால் இணையாய் வாழமுடியும். அதனால் ஒரு மனிதனின் ஆயுளும் ஆரோக்கியமும் ஆனந்தமும் கூடும் என்ற கருத்தை முன்வைத்து நாவல் நிறைவடைகிறது.

துணைநூற்பட்டியல்:

1.      இணை - இந்துசெல்லா, வேரல் புக்ஸ், ஜுலை - 2024

2.      தமிழ்ச் சிறுகதை வரலாறும் விமர்சனமும் - (தொ.ஆ) சுப்பிரமணி இரமேஷ், காலச்சுவடு, டிசம்பர் - 2019.

- ஜெ.ராஜா, உதவிப் பேராசிரியர், தருமமூர்த்தி இராவ் பகதூர் கலவல கண்ணன் செட்டி இந்துக்கல்லூரி, சென்னை – 600072.

✍️ எழுத்தாளர்களின் கவனத்திற்கு

கீற்றில் தங்களது படைப்புகளை / இதழ்களை வெளியிட விரும்பினால், அவற்றை யுனிகோட் எழுத்துருவில் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.

வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகள் மட்டுமே பதிவேற்றத்திற்குப் பரிசீலிக்கப்படும்.