உலகின் அனைத்துச் செவ்வியல் ஆடல்களும் சமூகத்தின் அடிநிலை மாந்தரின் இணக்கல் ஆடல்களிலிருந்தே முனைப்பும் மலர்ச்சியும் கொண்டவை. தொன்மையான தொழில் முறைகள், சடங்குகள், போர்முறைகள், வளப்பெருக்கு நடவடிக்கைகள் முதலியவற்றை அடியொற்றிய அசைவு நோக்கிய உடல் இணக்கலே ஆடலாயிற்று.

கிறிஸ்துவுக்கு முற்பட்ட 10000 ஆண்டளவில் இடம்பெற்ற ஆடல் பதிவுகள் இந்திய மத்தியப் பிரதேசத்திலுள்ள பிம்பெற்கா குகைகளில் இடம் பெற்றுள்ளமை ஆடற்கலையின் தொன்மைச் சான்றுகளுள் ஒன்றாகும். (N.PEREGRINE, MELVIN EMBER (2003) p.315)

bharata nattiyamஉலகின் தொன்மையான நாகரிகங்கள் அனைத்திலும் ஆடற்சிற்பங்கள் பலவடிவங்களிலே கிடைக்கப் பெற்றுள்ளன. அவற்றிற் காணப்படும் பொதுப் பண்பாக அமைவது, உடல் மொழி வெளிப்பாட்டின் அழுத்தமேயன்றி ஆடை அணிகலன்களின் முதன்மைப்பாடன்று. அதாவது, உடல் நிலையில் ஓங்கலையும் ஆடை அணிகலன் நிலைகளின் எளிமைப் பதிவுகளையும் தொன்மையான ஆடல்கள் கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

இடுப்பை முதன்மையாகக் கொண்ட அசைவுகளைக் கொண்ட ஆட்டமே உலகில் முதலில் உருவாக்கம் பெற்ற வரன்படுத்தப்பட்ட ஆடலாகும். அது இந்தியாவில் இடம்பெற்ற பெண் தெய்வ வழிபாட்டோடும் சடங்குகளோடும் தோற்றம் பெற்று, பின்னர் மத்திய கிழக்கு நாடுகளுக்கும் ஐரோப்பிய நாடுகளுக்கும் பரவலுற்றதாகச் சொல்லப்படுகிறது.

அதற்கு 'இடுப்பாட்டம்' அல்லது 'இடையாட்டம்' (BELLY DANCE) என்ற பெயர் பிரெஞ்சு ஆடல் ஆசிரியர்களால் மிகவும் பிற்காலத்தில் சூட்டப்பட்டது. பழங்காலத்தில் என்ன பெயர் வழக்கிலிருந்ததென்று இன்னமும் கண்டறியப்படவில்லை.

குழந்தைகள் பிறப்பதையும் குழந்தைச் செல்வப் பெருக்கத்தையும் அது ஆடுபொருளாகக் கொண்டிருந்தது. கருவுற்ற பெண்கள் அந்த ஆடலை நிகழ்த்துவதால், சுகப்பிரசவம் நிகழ்வதாக நம்பப்பட்டது.

அந்த ஆடல் பற்றி ஆய்வு செய்த ஆசிரியர் லிசா பின்வருமாறு பதிவு செய்துள்ளார். (LISA (2009) BELLY DANCING NEWS LETTER, PLYMOUTH)

'துள்ளலும் அகன்ற தளத்தில் ஓடி ஆடுதலும் இடம்பெறாத ஆடலாக அது அமைந்தது; வயிற்றுப் பகுதித் தசைநார்களுக்கு அது பயிற்சிவழி நலனைக் கொடுத்து கை அசைவுகள் அழகாக ஒழுங்கமைக்கப்பட்டன.

இடுப்பு எலும்புகளுக்குப் பலத்தைக் கொடுக்கும் ஆடலாக அது ஒழுங்கமைக்கப்பட்டிருந்தது.

இந்திய ஆடல் ஆசிரியர்கள் அந்த ஆடல் பற்றி அதிகம் பேசுவதில்லை. பாமரத்தன்மை கொண்ட ஆடல் என்ற மேலடுக்கு நோக்கில் அதனைக் கைவிட்டிருக்கலாமென்று கொள்வதற்கும் இடமுண்டு.

ஆடல் வளர்ச்சியில் ஒழுங்குபடுத்தப்பட்ட ஆடல் அல்லது செவ்வியல் ஆடலென்பது அதிகாரத்தோடும், மேலாதிக்கத்தோடும் இணைந்தமை உலக வரலாற்றில் கண்டறியப்பட்ட தோற்றப்பாடாகின்றது.

அரசு என்ற உயர் நிறுவனத்தின் வளர்ச்சி, கலைகளையும் தமது அதிகாரத்துக்கு உட்படுத்தியது. தொன்மையான வேட்டுவ வாழ்க்கை, மந்தை மேய்ப்பு வாழ்க்கையில் அரசு என்ற நிறுவனம் உறுதி பெற்று மேலெழவில்லை. ஆடல் உள்ளடங்கிய கலைச் செயற்பாடுகள் கட்டற்றமுறையில் நிகழ்ந்தன.

பயிர்ச் செய்கை நடவடிக்கைகளோடு நிகழ்ந்த மேலதிக உற்பத்தியும், தானியச் சேமிப்பும், தொன்மையான வர்த்தக செயற்பாடுகளும் செல்வத்தை ஒரு சிலரிடத்துக்கு விற்கும் செயற்பாடுகளுக்கு இட்டுச் சென்றன. தனிச் சொத்துரிமையும், அதிகாரக்குவிப்பும், சொத்துக்களைப் பாதுகாப்பதற்குரிய தேவையும் சமூக ஒழுங்கை நிலைநிறுத்துவதற்குரிய ஏற்பாடும் அரசு என்ற அமைப்பை உருவாக்கின.

பயிர்ச் செய்கைப் பொருண்மியப் பின்புலத்தில், உலகின் முதலாவது அரசு, மெசபடோமியாவில், கி.மு. நான்காயிரம் ஆண்டளவில் உருவாக்கம் பெற்றது, (STENDE FORD, D.S. (2018) ROYAL SOCIETY OF OPEN SCIENCE, 5)

தமிழகத்திலும் கிறிஸ்துவுக்கு முற்பட்ட காலத்தில் அரசு உருவாக்கம் நிகழ்ந்த செய்தியை சங்கப் பாடல்கள் குறித்துரைக்கின்றன. வரன்முறைப்பட்ட ஆடல், கூத்து, குரவை, துணங்கை முதலியவை அரசரோடும், போர் ஆயத்தத்தோடும், வெற்றிக் களிப்போடும், தொடர்புபட்டிருந்தன. ஆட்சி நிரலில் இசையும் கூத்தும் உள்ளடக்கப்பட்டிருந்தது.

கூத்து என்பது தனித்த ஒரு சிறப்புக் கலைத்துறையாக இருந்தமை “கூத்தர்” என்ற அடையாளம் பிரிவினரின் செயற்பாடுகள் புலப்படுத்தும். முன்தேர்க்குரவை மற்றும் பின்தேர்க்குரவை ஆகியவை அரசரின் தேரின் முன்னும் பின்னும் பாடலுடன் ஆடப் பெற்ற கூத்துகளாக இருந்தன. சங்ககாலக் கூத்து பற்றிய பரவலான தகவல்கள் ஆய்வாளர்களால் வெளிப்படுத்தப்பட்டுள்ளன. (GADDAM.VENKATA RAMANA AND GIRIJA SESHAMAMBA (2024) IJSDR, VOL 9. ISSUE 4)

தமிழகத்தின் வரன்முறையான ஆடல்கள் அரச கட்டுப்பாட்டில் இருந்தமை வரன்முறையான கலைகளில் அரசு நிகழ்த்திய மேலாதிக்கத்தை வெளிப்படுத்தும்

சிலப்பதிகாரம் வெளிப்படுத்தும் ஆடல் தொடர்பான செய்திகள் அரசரும் சமூகத்தின் மேலடுக்கினரும் ஆடற்கலை மீது செலுத்திய அதிகாரப் பிரயோகத்தை மேலும் புலப்படுத்தும்.

சிலப்பதிகாரம் கி.பி.ஐந்தாம் நூற்றாண்டு எனக் குறிப்பிடப்படுகிறது. அக்காலத்தில் தமிழர் செவ்வியல் ஆடல் வரன்முறைப்பட்ட கல்விக்கும், மேலும் ஒழுங்கமைக்கப்பட்ட அளிக்கை முறைமைக்கும் உட்பட்ட எழுநிலை வளர்ச்சியைக் கொண்டிருந்தது.

அல்லியம், கொடுகொட்டி, குடை, குடம், பாண்டரங்கம், மல், துடி, கடயம், பேடு, மரக்கால், பாவை என்ற பதினொரு வகை ஆடல்களை மாதவி நிகழ்த்தியமை தமிழக ஆடலின் உயர்வளர்ச்சியை வெளிப்படுத்துகின்றது.

அரச அவையில் மாதவி ஆடியமையும், தலைக்கோல் உள்ளடங்கிய உயர் விருதுகளைப் பெற்றமையும், அரசரதும் சமூக மேலடுக்கினரதும் ஆட்சி அதிகார வீச்சினுள் செவ்வியல் ஆடல் உட்பட்டிருந்தமையைத் தெளிவுபடுத்துகின்றது.

அவ்வாறான நிலைவரம் உலக ஆடல் வளர்ச்சியிலும் காணப்பட்டமை கலைகளும் அதிகாரமும் பற்றிய காட்சியைத் தெளிவுபடுத்துகின்றது.

செவ்வியல் ஆடல்களின் முத்திரைகளும், உடல் இயம்பலும், ஆடை அணிகலன்களும், சமூக உயர் அடுக்கினரின் கலைச்சுவைக்கு ஏற்றவாறே முகிழ்ப்புற்று வந்துள்ளன.

உலக செவ்வியல் ஆடல்களில் அதிகம் குறிப்பிடப்படும் ‘பலே’ ஆடல் பதினைந்தாம் நூற்றாண்டில் இத்தாலியிலே தோற்றம் பெற்றது. அதன் அடிப்படை நோக்கம் பிரபுத்துவத்துவ பொழுதுபோக்கு மகிழ்வூட்டலாக அமைந்தது. (ENTERTAINMENT FOR THE ARISTOCRACY) – (THOINOT ARBEALL (1967) ORCHESOGRAPHY, (1967) NEW YORK, DOVER)

இத்தாலியிலிருந்து அந்த ஆடலைப் பெற்றுக்கொண்ட பிரான்சில் அரசருக்கும் பிரபுக்களுக்கும் பொழுதுபோக்கு மகிழ்வூட்டலுக்கே பயன்படுத்தப்பட்டது.

ஏறத்தாழ அதேகாலப் பகுதியில் தமிழகத்தில் சோழப் பேரரசர்களது அரசவை ஆடலாகவும், கோயில் ஆடலாகவும், விழாக்கால ஆடலாகவும், பரதநாட்டியம் அமைந்திருந்தது. தளிச்சேரிப் பெண்களே ஆடலை நிகழ்த்தினர். அவர்களுக்கு நிலமும் நிதியும் அரசர்களால் வழங்கப் பெற்றன.

பிரான்சில் 1789ஆம் ஆண்டில் நிகழ்ந்த புரட்சியானது லுயிஸ் மன்னரின் ஆட்சியை வீழ்த்தியது. அவரின் மேற்பார்வையிலும் அரவணைப்பிலும் இருந்த பலே ஆடல் பொதுமக்களை, சிறப்பாக உழைக்கும் மக்களை நோக்கிப் பெயர்ந்தது. அதேபோன்று ருசியாவில் 1917ஆம் ஆண்டு நிகழ்ந்த புரட்சியும் பலே ஆடலின் கருத்தியல் நிலைவரங்களில் மாற்றங்களை நிகழ்த்தத் தொடங்கியது.

உழைக்கும் வர்க்கத்தினருக்குரிய கருத்தியலை அடியொற்றி பலே ஆடலில் செறிவான மாற்றங்களை இசடோர டங்கன் (1877 - 1927) நிகழ்த்தினார். சோவியத்தில் அவர் பெற்ற அனுபவம் அவர் மேற்கொண்ட ஆடல் சீர்திருத்தத்துக்கு வலுவூட்டின. ஆடம்பரமான ஆடை அணிகளைக் கைவிட்டு, எளிமையான ஆடைகளைப் புனைந்து ஆடுதல், உடல் அசைவுகளுக்கு நெருடல் ஏற்படாத நெகிழ்ச்சியான ஆடைகளுடன் ஆடுதல், பலே ஆடலிற் காணப்பெற்ற குறுகிய அசைவுகளைக் கைவிட்டு, இயற்கையான உடலசைவுகளைப் பயன்படுத்தல், முதலாம் புரட்சிகர மாற்றங்களை அறிமுகம் செய்தார்.

அவர் மேற்கொண்ட மாற்றங்கள் ஆடல் அழகியலுக்கு மேலும் வலுவூட்டின. அவரது எளிமைப்படுத்தல் என்பது ஆடலுக்கு மேலும் அழகைக் கொடுத்தது. அதே வேளை பெரும் வரவேற்பையும் பெற்றது.

சோழப் பேரரசர் ஆட்சிக்குப் பின்னர் தமிழ்ச் சூழலில் பல்வேறு ஆட்சி நகர்வுகள் நிகழலாயின. கிராம மட்டங்களில் உள்ளூர்ப் பண்ணையாளர்களின் மேலாதிக்கம் எழுத்தொடங்கியது. அவர்களே ஆட்சியாளர்களுக்கு உதவுவோராயும் இருந்தனர்.

கோயில்களில் ஆடல் நிகழ்த்திய தளிச்சேரிப் பெண்களும் தேவரடியாரான. ஆடல் மகளிரும் அவர்களின் கட்டுப்பாட்டுக்குள் வந்தனர்.

தேவரடியாராகிய ஆடற் பெண்களின் வாழ்க்கை அவலம் நிரம்பியதாயிற்று. பாலியல் நிலையில் அவர்கள் சுரண்டலுக்கும் பயமுறுத்தலுக்கும் உள்ளாக்கப்பட்டனர். மேலாதிக்கத்தினால் அவர்களிடமிருந்த நிலங்களும் பறிக்கப்பட்டன. தேவரடியார் என்போர், “தேவதாசிகள்” என்ற அடையாளத்துக்கு உட்படுத்தப்பட்டனர்.

அத்தகைய சூழலில் தேவதாசி முறைமையை எதிர்க்கும் போராட்டங்களை விடுதலை இயக்கங்கள் முன்னெடுத்தன. தேவதாசி முறையை ஒழிக்கும் போராட்டத்தில் டாக்டர் முத்துலட்சுமி ரெட்டியும் (1886 – 1968) மூவலூர் இராமாமிர்தமும் முக்கியப்பங்கேற்றனர்.

டாக்டர் முத்துலட்சுமி ரெட்டியவர்கள், பெண் விடுதலை, இயக்கங்களில் பங்கு கொண்டவர். சட்டசபை உறுப்பினராக தெரிவு செய்யப்பட்டவர். தேவதாசி முறைமையை சட்ட நடவடிக்கைகளால் ஒழிக்க வேண்டுமென்ற செயற்பாடுகளை முன்னெடுத்தவர். கைவிடப்பட்ட சிறுவர்களைப் பராமரிப்பதற்கென “அவ்வை இல்லம்” என்பதை நிறுவியர்.

மூவலூர் இராமாமிர்தம் (1883 – 1962) தேவதாசி மரபில் வந்தவர். தேவதாசிகளுக்குரிய பிரச்சினைகளையும் மீளாத்துயரங்களையும் நேரில் அனுபவித்தவர். பொது மேடைகளுக்கு வந்து, உரைநிகழ்த்தி தேவதாசிகளின் விடுதலைக்கு ஆதரவு திரட்டியவர்.

தொன்மையான கலை அடையாளங்களைத் தேடுதலும், கலைகளை மீட்டெடுத்தலும் இந்திய விடுதலைப் போராட்டத்தின் உள்ளடங்கிய செயற்பாடுகளாக அமைந்தன. காலனித்துவ நீக்கத்தின் பலம் வாய்ந்த செயற்பாடுகளுள் ஒன்றாக அது அமைந்தது.

அத்தகைய செயற்பாடுகளை ஆய்வுநிலையில் முன்னெடுத்தவர்களுள் விபுலானந்த அடிகளார், ஏப்பிரகாம் பண்டிதர், கலாயோகி ஆனந்த குமாரசாமி, கலைப்புலவர் நவரத்தினம் கூத்துக்கலையை ஆய்வுக்கு உட்படுத்திய பேராசிரியர் நா.வானமாமலை முதலானோர் தனித்துவம் பெறுகின்றனர்.

அவ்வாறான ஆய்வு நிகழ்ச்சிகளினூடே கோயிலாட்டம், தளிச்சேரிப் பெண்களின் ஆட்டம், சதிராட்டம் ஆகியவற்றை மீட்டெடுக்கும் முயற்சியை வழக்கறிஞர் ஈ.கிருஷ்ணஐயரும், அந்த ஆடலின் கலை நுட்பங்களோடு உறவாடியவருமான ருக்மிணிதேவி அருண்டேல் (1904 – 1986) அவர்களும் முன்னெடுத்தனர்.

டாக்டர் முத்துலட்சுமி ரெட்டியும் மூவலூர் இராமாமிர்தமும் தேவதாசி முறைமையை ஒழிக்க வேண்டுமென்று கருதினார்களேயன்றி அந்தக் கலையின் மறுமலர்ச்சி பற்றிய நோக்கை முதன்மைப்படுத்தவில்லை.

வழக்கறிஞர் ஈ.கிருஷ்ணஐயரும் ருக்மிணி அம்மையாருமே அதனை அழியவிடாது மீட்டெடுக்கும் செயற்பாட்டைக் கருத்தியல் நிலையிலும் அளிக்கை நிலையிலும் முன்னெடுத்தனர். இருவரும் சிறந்த ஆற்றுகைக் கலைஞர்களாகவும் விளங்கினர்.

கலைநுட்பங்கள் நிறைந்த நிலையில் தேவரடியாரால் ஆடப்பெற்று 'சதிராட்டம்' என்று அழைக்கப்பட்ட அந்த வடிவத்துக்கு 'பரதநாட்டியம்' என்ற பெயரை கிருஷ்ணஐயர் முன் மொழிந்து, சென்னை இசைச் சங்கத்தில் ஒரு தீர்மானமாக நிறைவேற்றினார். அந்தப் பெயரே வழக்கில் நிலை நிறுத்தப்பட்டுள்ளது.

அதன் இன்றைய வளர்ச்சி தமிழகம் மற்றும் இந்திய சமூக நிரலாக்கத்துடன் தொடர்புபட்டு, மேலடுக்கினருக்குரிய கலையாக நீட்சி கொண்டுள்ளது. மேலடுக்கினரது அந்தஸ்துக் குறியீடாகவும் (STATUS SYMBOL) நிலை நிறுத்தப்பட்டுள்ளது.

நெடுமாந்தர் (FOLK) அல்லது நாட்டுப்புற மக்களின் கலைகளிலிருந்து வேறுபட்டது என்ற அடையாளத்தை மேலடுக்கினர் சூடிக் கொள்ளும் நிலை வெளிப்படுத்தப்படுகின்றது. இலங்கையிலும், தமிழர் புலம்பெயர்ந்துள்ள நாடுகளிலும் சமூக மேலடுக்கினருக்குரிய கலையாகவே அது கைப்பற்றப்பட்டுள்ளது.

சமூகத்தின் அடிநிலை மாந்தரிடத்துக் கூத்துக்கலை உயிர்ப்புடன் இன்றும் இயங்குகின்றது.

- பேராசிரியர் சபா.ஜெயராசா

More articles by சபா.ஜெயராசா

✍️ எழுத்தாளர்களின் கவனத்திற்கு

கீற்றில் தங்களது படைப்புகளை / இதழ்களை வெளியிட விரும்பினால், அவற்றை யுனிகோட் எழுத்துருவில் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.

வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகள் மட்டுமே பதிவேற்றத்திற்குப் பரிசீலிக்கப்படும்.