வ. வே. சு. ஐயர் 1917ஆம் ஆண்டு ‘மங்கையர்க்கரசியின் காதல் முதலிய கதைகள்’ என்ற தலைப்பில் ஐந்து சிறுகதைகள் அடங்கிய தொகுப்பை வெளியிடும்போது, தமிழ்ச் சூழலில் கதைக்கும் சிறுகதைக்கும் பெரிய அளவில் வேறுபாடு இருப்பதாக அறிந்திருக்கவில்லை. இந்த ஐந்து சிறுகதைகளில் ‘குளத்தங்கரை அரசமரம்’ என்ற ஒரு கதை மட்டுமே சிறுகதைக்குரிய தன்மைகளுடன் எழுதப்பட்டிருப்பதாக விமர்சகர்கள் அங்கீகரித்தனர். மீதமுள்ள கதைகள் வெறும் கதைகளாகவே தேங்கிவிட்டன.
வ. வே. சு. ஐயர் சிறுகதைகள் எழுதுவதற்குத் தாகூரின் சிறுகதைகள்தாம் காரணமாக இருந்திருக்கின்றன. மொழிபெயர்ப்புகளின் வழியாக இந்திய மொழிகளின் படைப்புகள் அனைவருக்கும் படிக்கக் கிடைத்தபோது ‘குளத்தங்கரை அரசமரம்’ கதைகூட தாகூரின் ‘காடேர் கதா’ கதையின் நேரடித் தாக்கம் என்று அறிந்தனர்.
வ. வே. சு. ஐயர் முதல் சிறுகதைத் தொகுப்பை வெளியிடும்போது உலக இலக்கியத்தில் செழுமையான சிறுகதை மரபு உருவாகிவிட்டது. ஆனாலும், சிறுகதை என்னும் இந்தப் புதிய இலக்கிய வகைமையை வாசகர்கள் புரிந்துகொள்வதில் பிரச்சினை இருப்பதாகக் கருதிய ஐயர், ‘சூசிகை’ என்ற முன்கதைச் சுருக்கத்தைக் கதையின் தொடக்கத்தில் சொல்கிறார். ‘சூசிகைகளைப் படிக்காமல் கதைகளையே துவக்கிப் படித்தால் சுவை அதிகமாகத் தெரியும். ஆனால் ரீதி புதிதாகையால் சிலருக்கு விளங்காமற் போனாலும் போகலாம் என்று சூசிகையைச் சேர்த்திருக்கிறேன்’ என்று ஐயர் விளக்கம் தருகிறார். சூசிகையைப் படிக்காமல் கதையைப் படித்தால் விளங்காமல் போவதற்கான எந்த இடமும் இவரது கதைகளில் இல்லை. ஐயர் கதைகளுக்குச் சூசிகையே தேவையில்லை. ஆனாலும் அவர் கொடுத்தார். தற்போது வாசகர்களுக்குச் ‘சூசிகை’ தேவைப்படும் தன்மையில் சில படைப்பாளர்கள் எழுதுகின்றனர். பின்நவீனத்துவத் தன்மையிலான அச்சிறுகதைகளைப் புரிந்துகொள்ள வாசகர்களும் கொஞ்சம் மெனக்கெட வேண்டும். அவர்களில் ஒருவர்தான் தமிழவன்.
வங்கமொழிச் சிறுகதைகளை வாசிக்க வாய்ப்புக் கிடைத்த வ. வே. சு. ஐயர், அதேவடிவத்தில் தமிழிலும் எழுத முயற்சி செய்தார். அவர் அந்த முயற்சியில் வெற்றி பெற்றாரா, இல்லையா என்பது முக்கியமில்லை. வ. வே. சு. ஐயர் செய்த புதிய முயற்சி இன்றுவரை பாராட்டுக்குரியதாக இருந்து வருகிறது. அதுபோன்றதொரு இடத்தை நாம் தமிழவனுக்கும் அளிக்க வேண்டும். உலக இலக்கியப் பரிச்சயமுள்ள தமிழவன், தமிழ்ச் சிறுகதையின் தடத்தை மாற்றி அமைத்தவர்களுள் ஒருவராக இருக்கிறார். இதற்கு அவரது ஐந்து சிறுகதைத் தொகுப்புகளும்தான் சான்று. இந்தக் கட்டுரை தமிழவனின் ‘இறந்துபோனவன் பேசிக்கொண்டே இருந்தான் (2025)’ என்ற சிறுகதைத் தொகுப்பைக் கொண்டு தமிழ்ச் சிறுகதையில் அவரது இடத்தை நிர்ணயிக்க முயல்கிறது.
தமிழவனின் ஒவ்வொரு சிறுகதையுமே விவரிக்க இயலாத உள்ளடக்குகளைக் கொண்டவை. இவரது புனைவுக்குள் உருவகம், குறியீடு, படிமம், தத்துவம், வரலாறு, தொன்மம், கோட்பாடு உள்ளிட்ட நவீன எழுத்துக்குரிய கச்சாப்பொருட்கள் அதிக அளவில் படிந்து கிடக்கும். ஒவ்வொரு வாசிப்பிலும் புதிய புதிய அர்த்தங்களை அளித்துக்கொண்டே இருக்கும். எனவே, வாசகர்கள்தாம் தமிழவன் கதைகளுக்குரிய அர்த்தங்களைக் கண்டுபிடிக்கிறார்கள். இந்த இடத்தில் தமிழவன் வெறும் பார்வையாளராக மட்டுமே இருக்கிறார். படைப்பாளியின் அனுமானத்தையும் கடந்து வாசகர்கள் அவர் கதைகளுக்கான எல்லைகளை விரித்துக்கொண்டே செல்கின்றனர். தமிழவனின் கதைகள் ஒற்றை மையத்தைக் கடந்து வெவ்வேறு மையங்களை உருவாக்கிக்கொண்டே இருக்கின்றன. அதேநேரத்தில் மையமழிந்த புனைவுகளையும் இவர் எழுதியிருக்கிறார். மேலும், தமிழவன் தன்னிலை கூற்றுமுறைக்கே அதிக முக்கியத்துவம் கொடுத்திருக்கிறார். இவை தமிழவன் கதைகளின் பொதுத் தன்மைகளாகக் கருதலாம்.
‘தூரம்’ என்ற சிறுகதையில் கல்லூரிப் படிப்புக்கு உதவிய விஸ்வநாதன் என்ற நண்பனைத் தன் அந்திமக் காலத்தில் தேடிக்கொண்டிருக்கிறான் ஒருவன். தன் வாழ்க்கையையே அர்த்தமுள்ளதாக மாற்றிய அவனது நினைவுகளைத் தான் படிக்கும் காலத்தில் பயன்படுத்திய குறிப்பேடுகளின் வழியாக மீட்டெடுக்க நினைக்கிறான். அவன், தன் நினைவுகளின் வழியாக விஸ்வநாதனின் ஸ்தூல உடலைப் பார்த்துவிட தொடர்ந்து முயன்றுகொண்டே இருக்கிறான். ஆனால், அது எப்படிச் சாத்தியம் என்பதை வாசிப்பவர்கள்தாம் கண்டுணர வேண்டும். தமிழவன் தன் நினைவுகளில் படிந்துகிடக்கும் வெவ்வேறு மனிதர்களைத்தான் தம் கதைகளில் உலவ விடுகிறார். ஆனால் அவர்கள் புனைவாசிரியரின் பிம்பங்களாகவும் வெளிப்பட்டுவிடுகிறார்கள். அப்படித்தான் இந்தக் கதையின் விஸ்வநாதனும் இருக்கிறான். அவனுக்கு நீட்ஷேவைத் தெரிந்திருக்கிறது.
தமிழவன் தம் புனைவுகளில் கதாபாத்திரங்களுக்கு இடையிலான விரிவான உரையாடலைத் திட்டமிட்டுத் தவிர்த்துக்கொண்டே இருக்கிறார். கதைசொல்லியின் மன விகாசங்கள் மட்டுமே புனைவுகளில் அதிகமாக வெளிப்படுகின்றன. கதைசொல்லியாக இருப்பவர் பிற கதாபாத்திரங்களின் நடவடிக்கைகளைக் கட்டுப்படுத்திக்கொண்டே இருக்கிறார். தமிழவன் தம் புனைவுகளை அறிவுச் செயல்பாட்டின் ஒரு பகுதியாகப் பார்க்கிறார். ‘பிளாட்பாரம்’ என்ற சிறுகதையில் குலசேகரன் என்றொரு கதாபாத்திரம் வருகிறது. இவனது பின்னணி குறித்துப் புனைவில் பெரிய அளவில் தரவுகள் இல்லை. இவன் கிராமத்துச் சூழலில் இருந்து நகரத்துக்குப் படிக்க வந்தவன். பெருநகரக் கலாச்சாரத்துடன் தன்னைப் பொருத்திக்கொள்ள முடியாமல் தவிக்கிறான். தொடர்ந்து இவனுக்குக் கிடைக்கும் புறக்கணிப்புகள் சக மனிதர்கள்மீதான வெறுப்பை உருவாக்கிக்கொண்டே இருக்கின்றன. பெரிய உரையாடல்கள் எதுவுமே இக்கதைக்குள் நிகழவில்லை. வாசிப்பவர்கள் அக்கதாபாத்திரத்தின் தொடர் நடவடிக்கைகளினூடாகச் சில அனுமானங்களை உருவாக்கிக்கொள்ள வேண்டும். ‘குலசேகரன் பிளாட்பாரத்தில் நிற்காமல் போகும் அந்த ரயிலின்முன், இன்னும் பத்து நிமிடத்தில் தள்ளிக் கொடூரமாய்க் கொலை செய்யப் போவதையோ யாரும் எதிர்பார்க்கவில்லை’ என்று இக்கதை முடிந்துவிடுகிறது. இந்த இடத்திலிருந்துதான் வாசிப்பவர்கள் இக்கதையைத் தொடங்க வேண்டும். புனைவின் கடைசி வரிகள் கடந்த காலத்தில் நிகழ்ந்த பல இரயில்வே பிளாட்பார கொலைகளை நினைவூட்டுகின்றன. குலசேகரன் அந்தப் பெண்ணை ஏன் கொன்றான் என்பதெல்லாம் அனுமானத்திற்கு அப்பாற்பட்டவை.
‘இறந்துபோனவன் பேசிக்கொண்டே இருந்தான்’ என்ற சிறுகதையும் பல்வேறு உள்ளடுக்குகளைக் கொண்டிருக்கிறது. ஓவிய ஆசிரியரும் எழுத்தாளருமான ஒருவன் கொரோனாவால் இறந்துபோகிறான். அவனைப் பற்றிய நண்பர்களின் நினைவுகளாக இக்கதை எழுதப்பட்டிருக்கிறது. வாசிப்பவர்களுக்கு இக்கதை பல அனுமானங்களைத் திறந்துவிடுகிறது. எழுத்தாளன் தன் மனைவியை விவாகரத்துச் செய்ததற்கும் தம்பி வீட்டின்மீது அன்பாக இருந்ததற்கும் அவன் நண்பர்களால் காரணம் தேடப்படுகிறது. தமிழவன் அப்படியே இந்தக் கதையை விட்டுவிடுகிறார். ஏனெனில் தமிழவன் தம் கதைகளை முடிவை நோக்கிக் கொண்டுசெல்வதில்லை. ஒரு விவாதக் களத்தை உருவாக்கிவிட்டு அந்த இடத்திலேயே முடித்து விடுகிறார். இவரது பல புனைவுகள் நவீன கவிதைகளைப் போன்றவை. வாசிப்பில் பிடிபடாத தருணங்களே அதிகம். ஆனால், அக்கதைகள் உருவாக்கும் சுவாரசியம் முக்கியமானதாக இருக்கும். முதல் வாசிப்பில் தட்டையானதாகத் தெரியும் இவரது பல சிறுகதைகள், அடுத்தடுத்த வாசிப்பில் அந்த எண்ணத்தை மாற்றிவிடுகின்றன.
தமிழவன் தம் கதைகளில் ஓர் அடித்தளத்தை கட்டமைத்துவிட்டு ஒதுங்கிக் கொள்கிறார். ‘காற்று’ என்ற கதையிலும் அப்படித்தான் நிகழ்கிறது. அந்தக் கதையில் இரண்டு அக்காக்கள் வருகிறார்கள். மூத்த அக்கா பயப்படுபவர்; இளைய அக்கா பயப்படாதவர். இந்த பயம் என்பது அச்ச உணர்வு கிடையாது. பெண்களுக்கு எதிரான சமூகக் கட்டமைப்புகளை இளைய அக்கா பொருட்படுத்துவதில்லை. அவள் தான் செய்வதே சரியானது என்று நம்புபவள். பெரிய அக்கா இவளுக்கு நேரெதிரானவள். இவை கதைக்குள் மறைந்திருக்கும் குறிப்புப் பொருட்கள். ‘பயம்’ என்ற ஒற்றைச் சொல்லைக்கொண்டே இக்கதையின் அடிக்கட்டுமானத்தைப் புரிந்துகொள்ள வேண்டும். பயத்தைக் கடத்தல் என்பது மீறலாக உள்வாங்கிக்கொள்ளப்படுகிறது. பயத்துடன் இருப்பவள் சமூக ஒழுங்குக்குக் கட்டுப்பட்டவளாகிறாள். அதேநேரத்தில் சமூக மதிப்பீடுகளை அவ்வளவு எளிதில் கடந்துவிடவும் முடியாது என்பதையும் தமிழவனின் புனைவுகள் நினைவூட்டுகின்றன. அம்மா, மரணம் இரண்டுமே பெரும் அர்த்தமுடைய மதிப்பீடுகள். நனவு மனம் இம்மதிப்பீடுகள்மீது விரிசல்களை உருவாக்க முயன்றாலும் நனவிலி மனதில் சேகரமாகியுள்ள தொன்ம மதிப்பை ஒன்றுமே செய்ய முடியவில்லை என்பதையும் இவரது புனைவுகளினூடாக அறிய முடிகிறது. அறிவுக்கும் உணர்ச்சிக்கும் இடையில் நடைபெறும் போராட்டம் தர்க்கங்களுக்குள் அடங்காதவை என்பதை ‘பஸ்’ சிறுகதையிலிருந்து உள்வாங்கிக் கொள்ளலாம்.
தமிழ்ச் சிறுகதையின் வடிவம், உள்ளடக்கத்தின்மீது பெரும் குறுக்கீட்டை நிகழ்த்தியவை தமிழவன் சிறுகதைகள். உதாரணமாக, ‘கதையின் தொடக்கத்தில் ஓர் அறையில் துப்பாக்கி இருப்பதாக வருணித்தால், முடிவுக்குள் அது வெடித்தே தீரவேண்டும்’ என்று ஆன்டன் செகாவ் கூறியதாக ஒரு கருத்துண்டு. சிறுகதை செறிவான ஓர் இலக்கிய வடிவம். அதில் தேவையில்லாத உரையாடல்களோ வருணனைகளோ இடம்பெறக்கூடாது. அது அச்சிறுகதையின் கூர்மையை மழுங்கடித்துவிடும்; அக்கதைக்குத் தேவையில்லாத சுமையை ஏற்றிவிடும் என்று விமர்சகர்கள் கூறியிருக்கின்றனர். இதுபோன்ற மரபான வரையறைகளைத் தமிழவன் சிறுகதைகள் பொருட்படுத்துவதில்லை. ‘அடுத்த வீட்டுக்காரன் மனைவியுடன் ஓடிப்போனவனைப் பற்றி எட்டுக்காலம் செய்தி போடும் பத்திரிகையைப் பார்க்கலாமா என ஆசை வந்தது’ என்று ஒரு கதையில் (பஸ்) எழுதியிருக்கிறார். இந்தக் கதையின் கதாபாத்திரமான ஏ. எஸ். கே. ராஜன், தன் தாயின் மரணச் செய்தியை அறிந்து ஊருக்குச் செல்ல பேருந்து நிறுத்தத்தில் நின்றுகொண்டிருக்கிறான். நீண்ட நேரமாகப் பேருந்து வரவில்லை. அந்த நேரத்தில் அவனுக்கு அங்குள்ள டீக்கடையில் நாளிதழ் படிக்கலாம் என்ற எண்ணம் உருவாகிறது. ‘பத்திரிகையைப் பார்க்கலாமா’ என்று எழுதியிருந்தாலே போதுமானது. என் அனுமானத்தில் இந்தக் கதையில் சுட்டப்படும் செய்தித்தாள் ‘தினத்தந்தி. ’ டீக்கடைகளில் அந்தச் செய்தித்தாளே அதிகமும் வாங்கப்படுகிறது. தவிர கொலை, கொள்ளை, கற்பழிப்பு செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் செய்தித் தாளாகவும் அதுவே இருக்கிறது. அறிவுத் தளத்தில் அந்தச் செய்தித்தாள்மீது ஒரு ஒவ்வாமை இருக்கிறது. அந்த ஒவ்வாமையைத் தன் கதாபாத்திரத்தின் மூலமாகத் தமிழவன் இந்த இடத்தில் வெளிப்படுத்துகிறார். இதே கதையில் ‘வலது சட்டைப் பாக்கெட்டில் கைவிட்டுப் பணத்தைக் கொடுத்துவிட்டுக் கடைக்கு வெளியில் வந்தான்’ என்று ஒரு வரி வருகிறது. அவன் எந்தப் பாக்கெட் சட்டையிலிருந்து பணத்தை எடுத்தான் என்பது இக்கதைக்கு அவசியமில்லாதது. ஆனால் தமிழவன் இதுபோன்ற தகவல்களைத் தம் கதைகளில் தொடர்ந்து தந்துகொண்டே இருக்கிறார். இதனைத் தன்னுடைய பாணியாகவும் நிலைநிறுத்திக்கொண்டிருக்கிறார்.
தமிழவன் தீவிரமான அரசியல் பார்வை கொண்டவர். அவரது பல கதைகளில் அவரது ஈழ அரசியல் பார்வை துலக்கமாக வெளிப்பட்டிருப்பதை அறியலாம். ‘வானத்தைப் பிளக்க முத்துக்குமார் எழுப்பிய ஆதிக்குரல்’ என்றொரு சிறுகதை இத்தொகுப்பில் உள்ளது. தமிழவனின் தீர்க்கமான அரசியலை வெளிப்படுத்தும் பிரதி இச்சிறுகதை. ஈழத் தமிழர்களின் இனப்படுகொலைக்கு அன்றைய நடுவணரசு துணைபோனதற்கு எதிர்ப்புத் தெரிவித்து 2009, ஜனவரி 29 அன்று தீக்குளித்து உயிரை விட்டவர் தூத்துக்குடியைச் சார்ந்த பத்திரிகையாளர் கு. முத்துக்குமார். எளிய குடும்பப் பின்னணியைச் சார்ந்த முத்துக்குமாரின் இறப்பு, உலகத் தமிழர்களிடம் பெரும் அதிர்வை உருவாக்கியது. தமிழவன் இந்த நிகழ்வின்மீது இப்புனைவினூடாகக் குறுக்கீட்டைச் செய்திருக்கிறார். ஓர் இனம் அழிக்கப்பட்டதன் கடைசி தருணங்கள் இக்கதையில் விரிவாகப் பேசப்பட்டுள்ளன. 2009ஆம் ஆண்டு மே மாதம் 18ஆம் தேதி தமிழ் ஈழத்திற்காகப் போராடிய வேலுப்பிள்ளை பிரபாகரன் இலங்கை இராணுவத்தால் சுட்டுக் கொல்லப்பட்டார். போர் அதனுடன் ஏறக்குறைய முடிவுக்கு வந்துவிட்டது. பிரபாகரனின் வீழ்ச்சிக்கான சமிக்ஞையாகவே முத்துக்குமாரின் இறப்பைத் தமிழவன் பார்த்திருக்கிறார். ஈழப்போரைத் தமிழ்மக்கள் எதிர்கொண்ட விதத்தில் கடும் அதிருப்தியை இக்கதை பதிவு செய்திருக்கிறது.
இந்தப் புனைவுக்கு நேரெதிரானது ‘நர்ஸ் வரவில்லை’ என்ற சிறுகதை. பிரேம்கௌட் என்ற பழங்குடித் தலைவனின் மோசமான செயல்பாடுகளை இச்சிறுகதை கடுமையாக விமர்சிக்கிறது. இவன் தன் இனத்தைப் பயன்படுத்திக்கொண்டு முன்னேறிக்கொண்டே இருக்கிறான். பிரேம்கௌடின் உயர்வு அவனுக்குள் நடத்தை மாற்றத்தை உருவாக்குகிறது. தன் இனத்தின் வளர்ச்சியை மறந்து, தன்னை முன்னிறுத்திக் கொள்வதிலேயே கவனம் செலுத்துகிறான். அவனது நிகழ்கால வாழ்க்கைக்கும் ஒரு காலத்தில் அவன் எழுதிய பழங்குடிப் பாடலுக்கும் இடையே மிகப்பெரிய முரண் உருவாகிறது. பிரேம்கௌட் தங்களை ஈடேற்றத் தோன்றியவன் என்று அவனது சமூகம் நம்புகிறது. ஆனால், அவனது செயல்பாடுகள் அச்சமூக நம்பிக்கைக்கு எதிரானதாக இருக்கிறது. கர்நாடகத்தைச் சார்ந்த அரசியல் தலைவரொருவர் இக்கதையில் குறியீடாகப் பயன்படுத்தப்பட்டுள்ளார் என்பது தெரிகிறது. அந்தத் தலைவரைப் பற்றிய வரலாறு தெரியும்வரை பன்முக வாசிப்புக்கு உரியதாக இக்கதை இருக்கும். தவிர, இக்கதையின் பிரேம்கௌட் போன்று பலர் தமிழகத்திலும் இருக்கிறார்கள். இச்சிறுகதையை வாசிக்கும்போது அவர்களது முகங்களும் நிழலாடுகின்றன. எனவே, பிரேம்கௌட் யார் என்பதைத் துப்பறிந்து இக்கதையின் பன்முக வாசிப்பைச் சிதைக்கத் தேவையில்லை என்றும் தோன்றுகிறது.
தமிழவன் தம் புனைவுகளில் புறப்பிரச்சினைகளுக்குக் கொடுக்கும் முக்கியத்துவத்தை அகப் பிரச்சினைகளுக்கும் கொடுத்துள்ளார். ஆண் பெண்ணுக்கு இடையில் உருவாகும் அகச் சிக்கல்களின் தருணங்களில் ஒன்றை ‘குளமும் கல்லும்’ என்ற சிறுகதையில் எழுதியுள்ளார். தனக்கு வாழ்க்கைத் துணையாக வரப்போகிறவள் எல்லாவற்றிலும் தனக்கு இணையானவளாக இருக்கவேண்டும் என்று ஓர் ஆண் விரும்புவது ஒரு பாவனை. கூட்டு நனவிலி மனதில் அவள் தனக்குக் கீழானவளாகவும் கட்டுப்பட்டவளாகவும் இருக்கவேண்டும் என்றே எண்ணுகின்றனர். இக்கதையில் வரும் ஆண், தன் காதலியைக் குளத்தில் கல்லெறிதலில் வெற்றிபெறச் செய்ய வேண்டும் என்று நினைக்கிறான். அவள் தோற்றுக்கொண்டே இருக்கிறாள். இதுவே இவர்களது பிரிவுக்குக் காரணமாகிறது. அவளை நிராகரிக்க அவன் மனம் இந்தக் காரணத்தைத் தேர்ந்துகொள்கிறது. உண்மை காரணம், பிரதிக்குள் பிரதியாக மறைந்து கிடக்கிறது. சிறிய கதையாக இருந்தாலும் வாசிப்பில் அது உருவாக்கும் வெளி அற்புதமானது.
தமிழவன் இத்தொகுப்பின் முன்னுரையில், ‘இன்றைய காலக்கதைகள் தமிழ்ச் சமூகத்தில் பெரியார் மூலம் வந்துள்ள பகுத்தறிவின் புறவயப் பண்புகளை எப்படித் தருகின்றன என்பதை இத்தொகுப்பில் காணலாம்’ என்று எழுதியிருக்கிறார். இந்தச் சிந்தனை பல கதைகளில் உள்ளொடுங்கிக் காணப்படுகின்றன. ‘கண்கள்’ என்ற சிறுகதையில் இத்தன்மை கொஞ்சம் வெளிப்படையாகத் தெரிகிறது. மயிலம்மா என்ற உயர்சாதிப் பெண், தாழ்த்தப்பட்ட சாதியைச் சார்ந்த சக பணியாளரை எதிர்ப்பை மீறித் திருமணம் செய்துகொள்கிறாள். அந்தப் பெண்ணிடம் இருக்கும் திராவிட இயக்கச் சிந்தனைதான் அவள் இப்படியொரு முடிவை எடுக்கக் காரணமாக அமைகிறது என்று தமிழவன் நம்புகிறார். அதே நேரத்தில் அந்தச் சிந்தனை இன்னமும் அனைவரிடமும் பரவலாக்கப்படவில்லை என்பதற்கு மயிலம்மாவின் அப்பா கதாபாத்திரம் உதாரணமாக இருக்கிறது. அவரால் தன் சாதி பெருமிதங்களில் இருந்து விடுபட முடியவில்லை. இதனைத் திராவிட இயக்கத்தின் போதாமையாகவும் பார்க்கலாம். இதெல்லாம் என் தனிப்பட்ட வாசிப்புக்கு உரியவை. இதனை மட்டும்தான் இக்கதை பேசுகிறது என்ற வரையறைக்கு உட்படாதவை தமிழவனின் சிறுகதைகள் என்பது குறிப்பிடத்தக்கது.
தமிழவன் பெரும்பாலும் தம் கதாபாத்திரங்களை உணர்ச்சிக்கு அப்பாற்பட்டவர்களாகவே படைத்திருக்கிறார். அல்லது அப்படிப்பட்டவர்களே இவரது புனைவுகளில் இடம்பெறுகின்றனர். வாழ்க்கையின் ஒரு பகுதியாகிவிட்ட துயரங்கள் உருவாக்கும் பாவனைகளுக்கு இவரது கதாபாத்திரங்கள் முக்கியத்துவம் கொடுப்பதில்லை. இப்படியொரு இடத்தைத் தம் கதைகளில் தொடர்ந்து தக்கவைக்க தமிழவன் முயன்றுகொண்டே இருக்கிறார். அந்தத் துயரங்களைப் பகடியாக்கிக் கடந்துசெல்வதையும் இவரது புனைவுகளில் காணமுடிகிறது. தமிழவன் தன் நண்பர்கள் பெயரை நேரடியாகக் கதைகளில் பயன்படுத்திக் கொள்கிறார். இதனால் இவரது கதைகளுக்கு ஒரு நிகழ்காலத் தன்மை கிடைக்கிறது. தவிர, உண்மைக்கு மிக அணுக்கமாகவும் இருக்கிறது. இவரது பல கதைகள் எளிதில் தின்று செரிக்க முடியாதவை. அதனால் அறிவுஜீவித் தளத்திலேயே இவரது புனைவுகள் வாசிக்கப்படுகின்றன. தமிழவன் எல்லோருக்குமான எழுத்தாளர் இல்லை என்பது என் அனுமானம். அவரது கதைகள் பூடகத்தன்மை கொண்டவை. வாசிப்பவர்களின் உழைப்பையும் கொஞ்சம் கோருபவை. புனைவுக்கும் அல்புனைவுக்குமான இடைவெளியை அழித்துக் கொண்டிருப்பதிலும் தமிழவன் தொடர்ந்து கவனம் செலுத்துகிறார். தமிழவனிடம் செயல்படுவது ஒரு தொன்ம மொழி. இந்த மொழியில் நிறைய சங்கேதங்கள் உள்ளன. தமிழவனின் புனைவுகளைப் புரிந்துகொள்ள அவரது மொழி இயக்கத்தையும் உள்வாங்கிக்கொள்ள வேண்டும். அதற்கு அவரது உரைநடை நூல்கள் உதவக்கூடும். ஒரு சிறுகதையைப் புரிந்துகொள்ள இத்தனை மெனக்கெட வேண்டுமா என்று நினைப்பவர்களுக்குத் தமிழவன் சிறுகதைகள் எவ்விதப் பாதிப்பையும் உருவாக்காது. புதுமைப்பித்தன் சிறுகதைகளை வாசிக்கவே தற்காலத்தில் சிரமப்படுபவர்கள் உண்டு. அப்படிப்பட்டவர்களுக்குத் தமிழவன் அந்நியமாகத்தான் தெரிவார்.
சிறுகதையின் தன்மை குறித்த ஜெயமோகனின் (எழுதும் கலை) பின்வரும் கருத்து மிக முக்கியமானது. “சிறுகதை வாசகனிடம் எதையாவது சொல்வதற்காக உருவான வடிவம் அல்ல. வாசகனைக் கதையில் பங்கெடுக்க வைப்பதற்காக உருவான வடிவம். வாசகனை எந்த அளவுக்குக் கற்பனை செய்ய வைக்கிறதோ அந்த அளவுக்குச் சிறுகதை வெற்றி பெறுகிறது. சொல்லப்படும் விஷயம் சிறுகதையில் இருக்கக் கூடாது. வாசகனே ஊகித்துச் சென்றடையும் விஷயமே சிறுகதையின் மையமாகும்” என்கிறார். இந்தக் கருத்து அப்படியே தமிழவனின் புனைவுகளுக்குப் பொருந்தக்கூடியது. தமிழவனின் கதைகளைப் படித்து உருவான கருத்தாகவும்கூட இதனைப் புரிந்துகொள்ளலாம். நூறாண்டுகளுக்கும் மேலான தமிழ்ச் சிறுகதையின் வரலாற்றில் சிலர் மட்டுமே அதன் உருவத்தை மாற்ற முயற்சி செய்திருக்கிறார்கள். அதில் தமிழவனின் புனைவுகளுக்கும் நிச்சயம் இடமிருக்கிறது.
- சுப்பிரமணி இரமேஷ், உதவிப் பேராசிரியர், தருமமூர்த்தி இராவ்பகதூர் கலவல கண்ணன்செட்டி இந்துக்கல்லுரி, சென்னை - 600 072