நமது மரபிலக்கணக்காரர்கள் மொழி என்பதற்கு இருக்கும் திசைமொழிகளைக் குறித்து ஓரளவு அறிந்திருந்தனர். திசைமொழிகளைச் சுருக்கமாக விவரித்திருப்பதோடு செய்யுட் கலை, நாடகக்கலை ஆகிய படைப்புகளில் அவற்றின் பயன்பாட்டையும் அறிந்திருந்தனர். காவிய காலம் என்ற தமது நூலில் வையாபுரிப்பிள்ளை," தொல்காப்பியர் பாணினிக்கும் மனுவிற்கும் பிற்பட்டவர்.கௌடில்யரது அர்த்த சாஸ்திரத்தை அறிந்தவர். பரத நாட்டிய சாஸ்திரத்தைத் தமது இலக்கணத்தில் நன்றாகப் பயன்படுத்தியுள்ளார்" (2010:52) என்கிறார். பரதரின் முழு இலக்கணத்தையும் தொல்காப்பியத்தோடு ஒப்பிட வேண்டி இருக்கிறது. பரதர் கி.மு 200க்கும் கி.பி200 க்கும் இடைப்பட்டவர். நிகழ்த்து கலை மரபுகள், இசை மரபுகள் சமஸ்கிருதம், பிராகிருதம் குறித்தும் தம் நாட்டிய சாஸ்திரத்தில் வருணிக்கிறார், பரதர் விவரிக்கும் பாஷை, விபாஷைகளின் தாக்கம் தொல்காப்பியத்தில் உள்ளதா என்பதை இக்கட்டுரை பரிசீலிப்பதோடு கிளை மொழிகளைக் குறித்தும் சில பொதுவான செய்திகளையும் விளக்குகிறது.

2) கிளை மொழிகள் ஆய்வு:

இவ்விடத்தில் கிளை மொழிகள் குறித்து மொழி­யியலாளரின் கருத்துக்களைச் சுருக்கமாக அறிமுகப்படுத்தலாம். மொழி இடத்திற்கு இடம் வேறுபடுகிறது.

கிளை மொழியியல் மொழியில் காணப்படும் வேறுபாடுகளை நில அடிப்படையில் ஆய்வு செய்கின்ற பிரிவாகும்.சமுதாய மொழியியலின் உட்பிரிவாக விளங்கும் இது ஆங்கிலத்தில் Dialictololy எனப்படும். Dialektos என்ற கிரேக்கச் சொல் இதற்கு அடிப்படை. இதற்குப் பேசுகின்ற முறைமை என்று பொருள். சமகாலத்தில் நில அடிப்படையில் வட்டார மொழிகளை விவரித்து இலணக்கம் வரைவது வட்டார விவரணை இலக்கணம் என்பர். (A Descriptive Grammar of a Dialect). ஒரு பொதுமொழியிலிருந்து வளர்ந்த இரு மொழிகளையும் கிளைமொழியியல் ஆராயலாம்.உருதும் இந்தியும் ஒரு பொது மொழியிலிருந்து வந்தவைதான். ஓரிடத்திலிருந்து வேறிடத்திற்குப் புலம்பெயர்ந்து சென்றவர்களின் மாற்றமடைந்த மொழியை ஆராயலாம்.sculptures 504வினா நிரல் தயாரித்து தரவுகள் - சேகரிப்பது, தரவுகள் சரிதனா என உறுதிப் படுத்திக் கொள்வது நேரடியாக (அ) மறைமுகமாகவோ சேகரிப்பது; பின்னர் பகுப்பாய்விற்கு உட்படுத்துவது இப்படி பல நெறிமுறைகள் உள்ளன. இவ்வாறு ஒரு கிளை மொழிக்கு இலக்கணம் எழுதப்படும். Field Linguistics என்றொரு பாடப்பிரிவே உள்ளது. கிளைமொழிகள் ஆய்வில் பாகுபாட்டுக் கோடுகள் (Isoglosses) முக்கியமானவை. கிளை மொழிகளைக் கண்டறிய மொழி பாகுபாட்டுக்கோடுகள் என்ற கருத்தை வலியுறுத்துவார். கிளைமொழி எல்லையைக் குறிக்கும் பாகுபட்டுக் கோடுகள் மொழியின் எந்தவொரு கூறினையும் காட்டப் பயன்படுத்தலாம். கிளைமொழிகளுக்குள் பெரும்பான்மை ஒற்றுமையும் சிறுபான்மை வேற்றுமையும் இருக்கும் நிலத்தால் செய்கின்ற தொழிலால், சாதியால் பாகுபாட்டுக் கோடுகள் அமையலாம். மீனவர் தமிழில் தண்ணீரைக் குறிக்க : ஏறிணி, வத்தம், கலக்கு, தெளிவு, பணிச்சல், சுரப்பு, சோனி வெள்ளம், தென்னிவெள்ளம் இப்படிப் பாகுபாட்டுக் கோடுகள்.

காற்றைக் குறிக்க பல சொற்கள் இருக்கும் ஆரியம் என்ற சொல் கேழ்வரகை குறிக்கும் என்பது எங்க பக்கத்து மக்களுக்குத் தெரியாது.' தலக்காநாள்' என்பது நேற்று என்ற பொருளில் நாகர்கோவிலில் பயன்படுத்தப்படுகிறது. கிளைமொழி ஆய்வுகள் அண்ணாமலைப் பல்கலைக்கழக மொழியியல் துறையிலும் கேரளப் பல்கலைக்கழக மொழி­யியல் நுறையிலும் ஏராளமாக நடந்துள்ளன. கிளைமொழிகள் குறித்து பேரா. கோ.சீனுவாச வர்மா நல்ல அறிமுகநூல் எழுதியுள்ளார். "சாதிப்பேச்சும் உறவுமுறைகள் பெயர்களும்" என்ற கட்டுரையில் ஒரே ஊரில் வழங்கும் உறவுமுறை பெயர்களில் காணப்படும் பாகுபாட்டுக் கோடுகள் தொடர்பாக பேரா முத்துச்சண்முகம் ஆய்வு செய்துள்ளார். (2014;பக்;33). கிளை மொழிகளின் வளத்தை அறியவும் ஆவணப்படுத்தவும் கிளை மொழி ஆய்வுகள் அவசியம். Grorge Grierson மேற்கொண்ட Linguistic
Survey of India நம்மில் பலரும் அறிந்திருக்கலாம்.

3) பரதமுனிவரின் வருணனை

பரத முனிவர் வடமொழியில் நாட்டிய சாஸ்திரம் எழுதினார். அந்நூலில் சுமார் 62 ஸ்லோகங்களில் பிராகிருத கிளைமொழிகளை வர்ணிக்கிறார். ஒலியியல் விதிகள் தந்துள்ளார். சொற்களையும் வகைப்படுத்துகிறார். சமஸ்கிருத நாடக மரபுகளை பாதுகாப்பதே அல்லது வரையரை செய்வதே அவரது நோக்கம். சமஸ்கிருத ஓதுதுதல் முடித்துவிட்டு பிராகிருதம் ஓதுதுதல் தொடங்குகிறார். ஆனால் Prakrit recitation பற்றி கூற வேண்டியதின் அவசியம் என்ன? சமஸ். நாடகத்தில் அவற்றின் பங்கென்ன? சில ஸ்லோகங்களின் ஆங்கில மொழி பெயர்ப்பின் பொருளைக் காணலாம் அவர் கூற்றுப்படி

1) பிராகிருதம் பரவலாகக் காணப்படுவது. தூய்மையற்றது. மதிப்பற்றது. (devoid of merits of refinement). பிராகிருதச் சொற்களை மூன்று வகையாக பிரிக்கிறார்.

1. சமானசப்தம்; (சமஸ்கிருத்திலும் பிராகிருதத்திலும் சொல்லின் வடிவமும் பொருளும் ஒன்றாக இருப்பது.)

2. விப்ரஷ்டம் : சொற்கள் ஒலிமாற்றம் பெற்று வழங்குதல்

முக > முஹ

விஷ > விச

பீஷ்ம > பிம்ஹோ

3. தேசி (desigamata):

தேச பாஷையிருந்து பெற்ற சொற்கள்.சமஸ்கிருதத்தில் இல்லாதவை.திராவிடச் சொற்களாக் கூட இருக்கலாம்.

இதனைத் தொடர்ந்து குறிப்பாக நாடகத்தில் வரும் சாலைகளையும் சுட்டுகிறார்.

1)            அதி பாஷா (கடவுளர் மொழி)

2)            ஆர்ய பாஷா(உயர்ந்தோர்)

3)            ஜாதி பாஷா(பொதுமக்கள்)

4)           யன்யொந்திரி பாஷா (பறவைகள்,விலங்குகள் போல பேசும் பேச்சு)

பரதர் பாஷை,விபாஷை,தேச பாஷை போன்ற தொடர்களைப் பயன்படுத்தினாலும் அவற்றை வரையறுப்பதில் தெளிவில்லை என்பர்.அபிநவகுப்தர் பிற் காலத்தில் பாஷை என்பது சமஸ்கிருத மொழியின் சிதைவு என்றும் விபாஷை என்பது பாஷையிலிருந்து பிறந்தது என்றும் குறிப்பிடுவார். பாஷைக்கு எடுத்துக்காட்டாக: மாகதி, அவந்தி, பிராசிய, சௌரசேனி, பாலிகா, தாக்ஷணாட்டிய முதலியவற்றை தருகிறார். விபாஷ்களுக்கு எடுத்துக்காட்டாக திராமிளி, ஆந்தரீ, சாபரி, சான்டாலி, நாகரி போன்றவற்றைத் தருகிறார்.

இவற்றில் நாம் கவனிக்க வேண்டியது "அரங்க நிகழ்த்து கலையில் திராமிளர்கள்,ஆந்திரர்கள், கிராதகர்கள், நாவிதர்கள் ஆகியோர் தம் சொந்த மொழியைப் பயன்படுத்தக் கூடாது. (ஸ்லோகம்-44). யானைகள், குதிரைகள், ஒட்டகங்கள் ஆகியவற்றை கவனிப்பவர்கள் ஆபிரி பேசலாம். காட்டு வாசிகளுக்கு திராமிடி உகந்தது. (ஸ்லோகம்-54) திராமிளி, திராமிடி, ஆந்திரா தென்னிந்திய மொழிகளைக் குறித்தன. இவ் விபாஷைகளைப் பேசுவோர் 'pure communities' இல்லை என்கிறார் பரதர். சுத்த சாதிக்காரர்கள் அதாவது பிராமணர்கள் சௌரசேனியில் உரையாடுவர். உலகைத் துறந்த பிராமணர்கள், சமஸ்கிருதம் கற்கும் புனிதர், மாணவர்கள், துறவியர்.  போன்றோர்க்கு  சமஸ்கிருதம் அனுமதிக்கப்பட்டது. அந்தப்புரத்தில் உள்ளவர்கள் (pure communities), மாகதியில் பேசிக் கொள்வர்.

அப்ஸரஸ், மேலுலகில் கடவுளோடு அவையில் இருக்கையில் சமஸ்கிருதத்திலும் பூவுலகம் வந்துவிட்டால் சூழற்கேற்ப பிராகிருதம் தான் பேச வேண்டும். ஒன்று கூறலாம். பிராகிருதக் கிளைமொழிகளை நாடகப் பாத்திரங்களுக்கு ஒதுக்குவதில் பரதர் அக்கறை காட்டியுள்ளார். பின்னால் வந்த இலக்கண ஆசிரியர்கள் கூட இது குறித்து விவரித்துள்னனர். இன்னொன்று சொற்கள், ஒலி மாற்றங்களைக் கூடக் கண்டறிந்து பட்டியல் இட்டுள்ளனர். அவை சமண சமய இலக்கியங்களையும் புரிந்து கொள்ளப் பயன்படுகிறது. தமிழர்களுக்குத் தெரிந்த வட கிளைமொழிகள் 9 ஆம் நூற்றாண்டில் தோன்றிய திவாகர நிகண்டில் காணப்படுகிறது.

தமிழில் 'மூவறு பாடை' என்பது பழைய வழக்கு. திவாகரரே முதன் முதலில் இவற்றைப் பட்டியல் இடுகிறாரர். "அங்கம், வங்கம், கலிங்கம்/ சிந்து, சோனகம், திராவிடம், சிங்களம் / மகதம், கவுடம், மராட்டம், கொங்கணம்/துளுவம், சாவகம், சீனம், காம்போதி / அருமணம், பப்பரம் என்னச் சொல்லிவை / பதினெண்பாடையாம்" (2449). (மேற்கோள் செ.வை.சண்முகம், 1995,பக்:138) இவற்றுள் சிங்களம், துளுவம், திராவிடம்,சோனகம், சீனம், காம்போதி, சாவகம் தவிர பிற பெயர்கள் வட இந்திய பாடைகளைக் (நாட்டின் பெயரே பாடைகளின் பெயர்) குறித்தன. குறிப்பாக ஒரு கருத்தை நினைவில் நிறுத்தி தமிழ் கிளைமொழிக்கு செல்லலாம். சமஸ்கிருத மாணவர்கள் அம்மொழி நாடகத்தில் வரும் பிராகிருத உரையாடல் பகுதிகளைக் கற்பதற்காக பிராகிருத இலக்கணம் எழுதப்பட்டன. அவை சமஸ்கிருதத்தோடு தொடர்பு படுத்தி எழுதப் பட்டன மதிப்பற்றது தூய்மையற்றது என விமர்சிக்கப்பட்டது. சமஸ்கிருதம் noble language எனக் கருதப்பட்டது. இதனால் பிராகிருதம் பின்னாளில் சமஸ்கிருதத்திகே எதிராக கிளர்ந்து எழுந்தது.

5) தமிழில் கிளைமொழிகள்:

பழந்தமிழ்ப் பாடல்கள் நாடகங்கள் அல்ல.தனிதனிப் பாடல்கள். அகம் என்றும் புறம் என்றும் பிரிக்கப்பட்டு வழங்கி வருபவை. தனிப் பாடல்கள் எவ்வாறு நாடகமாகும். ஆனால் அவை யாவும் தனியொருவர் பேசும் நாடகப் பாங்கில் (Dramatic monologue) அமைந்துள்ளன. அவற்றுள் கிளைமொழிகளை விவரிக்க இடமில்லை. இருப்பினும் சங்க இலக்கியத்தில் கிளை மொழிகள் இருந்திருக்கலாம் என்று செ.வை.சண்முகம் கட்டுரை படைத்துள்ளார். புறநானூற்றில் ஓசை என்ற சொல் பொறியல் என்ற பொருளில் வந்துள்ளது. கலித்தொகையில் செரு என்ற சொல் வயல் என்ற பொருளில் வந்துள்ளது. நான்கு என்ற எண்ணுப் பெயருக்கு 'நால்கு'என்ற வடிவம் கிடைக்கிறது ஒன்பது என்பதற்கு 'தொண்டு' வடிவம் கிடைக்கிறது. மகர ஈற்று அஃறிணைப் பெயர்கள் அத்துப் சாரியை ஏற்றும் ஏற்காமலும் வந்துள்ளன.

வேழம் வேழக்கு-

வையம் - வையக்கு

இவையாவும் பழைய கிளைமொழி வழக்குகளாக இருந்திருக்கலாம். சிலப்பதிகாரத்தில் மலைநாட்டார் வழக்குகளும் குடநாட்டார் வழக்குகளும் பதிவாகியுள்ளன

கேட்டைக்க-கேட்க

இருந்தைக்க - இருக்க

கேட்டைக்க போன்ற வடிவங்கள் சிலப்பதிகாரத்தில் வந்துள்ளன. இவை மலைநாட்டு வழக்கு.இன்றும் மலையாளத்தில் வழக்கில் உள்ளன.

6) வீரசோழியத்தில் கிளைமொழி செய்திகள்:

வீரசோழியம் வடமொழி சார்புடைய தமிழிலக்கணம். இந்நூலாசிரியரை 'வடமொழி வழித் தமிழாசிரியர்' என்பர்.இவர் வட்டார வழக்கு சொற்களைப் பிழையானவை என்பார். அவற்றைத் திருத்தி எழுத வேண்டும் என்று வலியுறுத்துவார். வீரசோழிய உரையாசிரியர் அவர் காலத்து இருந்த மூன்று வட்டார வழக்குகளைச் சுட்டுகிறார்.

1). கருமண் நிலப்பகுதி: இது கொங்கு வட்டாரத்தைக் குறிக்கும். இங்கு ழகர, ளகரங்கள் மயங்கி வரும்.

               நாழி > நாளி

               உழக்கு > உளக்கு

2) காவிரி பாயும் பகுதி:

               வெற்றிலை > வெச்சிலை

               முற்றம் > முச்சம்

3) பாலாறு பாயும் பகுதி:

அ)   வீட்டின் பக்கத்தில் நின்றது.

                  வீட்டுக்கா நின்றது.

ஆ)  நெல்லின் பக்கத்தில் நின்றது

                  நெல்லுக்கா நின்றது.

வீரசோழியத்துக்கு உரை எழுதிய பெருந்தேவனார் இவ்வேறுபாடுகளைத் தருகிறார். வெறுமனே Isoglosses மட்டும் தந்து அதன் பயன்பாட்டைச் சுட்டவில்லை

7) தொல்காப்பியம், திசைச் சொல்:

ஆனால் தொல்காப்பியம் திசைச் சொற்களைக் குறிப்பிட்டு செய்யுள் ஈட்டுவதற்கு அவை பயன் படுமாற்றையும் குறிப்பிடுகிறார். இயற்சொல், திரிசொல், திசைச் சொல், வடசொல் ஆகியவை செய்யுளீட்ட சொற்களாம். திசைச்சொல் இயற்சொல் (இயல்பாக பொருள் விளங்குவன) போல எல்லா நிலத்தும் தம் பொருள் விளங்காவாயின.தத்தம் நிலத்தார்க்கு மட்டும் பொருள் விளங்கும். திசைச் சொற்கு சில உதாரணங்கள்:

1)           தென்பாண்டி நாட்டார்: பெற்றம்(ஆ.எருமை)

2)           குட்ட நாட்டார்: தள்ளை(தாய்)

3)           குட நாட்டார்: அச்சன்(தந்தை)

4)           கற்கா நாட்டார்: கையர் (வஞ்சர்)

5)           சீத நாட்டார்: இருளை (தோழி)

6)            யூழி நாட்டார் நாழி (சிறுகுளம்)

7)           அருவா நாட்டார்: கேணி (சிறுகுளம்) இவை யாவும் நமது உரையாசிரியர்கள் தரும் எடுத்துக்காட்டுகள்.

"செந்தமிழ் சேர்ந்த பன்னிரு நிலத்தும்/தங்குறிப் பினவே கிளவி" (எச்சவியல்-400). பரத நாட்டியத்தில் 62 பாஷை, விபாஷைகள் விவரிக்கப்படுகின்றன.அவற்றை devoid of merits of refinement என்று பரதர் குறை கூறுகிறார். மாறாக, தொல்காப்பியத்தில் ஒரே சூத்திரத்தில் திசைச் சொல் குறித்து விவரிக்கப் படுகிறது. செய்யுள் புனைய இச்சொற்களைப் பயன்படுத்தலாம் என்று அனுமதிக்கிறார். திசைச்சொற்கள் இழிசனர் பேச்சு என்றும் எங்கும் கூறவில்லை. பரதரும் தொல்காப்பியரும் கிளைமொழிகளை வெவ்வேறு விதமாக விவரிக்கின்றனர். பரத நாட்டியத்திற்கும் தொல்காப்பியத்திற்கும் எவ்வித தொடர்பும் இருப்பதாகப் புலப்படவில்லை.

7) துணை நூல்கள்:

1) "சிலப்பதிகார மூலமும் அரும்பதவுரையும் அடியார்க்கு நல்லாருரையும்". பெசன்ட் நகர். சென்னை-90: டாக்டர் உ.வே.சா.நூல்நிலையம்.(2008, மறுபதிப்பு)

2) சண்முகம்,செ.வை. இலக்கண உருவாக்கம். புத்தாக்கம்.திருச்சி மாவட்டம்:அடையாளம் பதிப்பு.(1994,2012)

3) சண்முகம்.செ.வை. இலக்கண ஆய்வு. சிதம்பரம்: மெய்யப்பன் பதிப்பகம்.(2004)

4) டாக்டர் முத்துச்சண்முகன். இக்காலத் தமிழ்.அம்பத்தூர்.சென்னை-98: நியூசெஞ்சுரி புக் ஹவுஸ் வெளியீடு.2014.

5) வையாபுரிப்பிள்ளை,எஸ். தமிழ் இலக்கிய சரிதத்தில் காவிய காலம். இராமாபுரம்,சென்னை 68: அலைகள் வெளியீட்டகம்.2010.

6) சக்திவேல், சு. தமிழ் மொழி வரலாறு. சிதம்பரம்; மணிவாசகர் பதிப்பகம்(1984)

7) சீனுவாச வர்மா,ஜி.கிளைமொழியியல். அண்ணாமலை நகர்: அனைத்திந்திய மொழி­யியல் கழகம்(1977)

8) Meenakhisundaram, T.P. Tamil - A Birds Eye View. Madurai:Makkal alvaalvu patippagam . 1976.


9) The Prakrta Grammarians. Luigia Nitti-Dolci.Delhi- 7:Motilal Banarsidas

- ஆ.கார்த்திகேயன்

Pin It