செழுமை மற்றும் புனிதத்தன்மை ஆகிய காரணங்களால், கடவுளர்களின் மொழியான சமஸ்கிருதம் மட்டுமே தேசிய உறவாடல்களுக்கான பொதுத் தளமாக இருக்க முடியும்.

கோல்வால்கர் (Bunch of Thoughts, பக்கம் 112)

stalin twitter 450கடந்த மூன்று ஆண்டுகளில், சமஸ்கிருத மொழியின் வளர்ச்சிக்கு மட்டும் ரூ. 643.84 கோடி நிதியைச் செலவிட்டுள்ளதாக நாடாளுமன்றத்தில் ஒன்றிய அரசு அறிவித்துள்ளது. அதே நேரம், தமிழ் உள்ளிட்ட பிற செவ்வியல் மொழிகளுக்குக் குறைவான அளவே நிதி ஒதுக்கப்பட்டுள்ளது, மொழிகளை அணுகுவதில் இந்திய அரசுக்கு உள்ள சமத்துவமற்ற மனப்பாங்கையே இது காட்டுகிறது.

தமிழுக்கு மட்டும் இந்த நிலை என்று எண்ணிவிட வேண்டாம். 2019-20 ஆண்டிற்குத் தமிழ், கன்னடம், தெலுங்கு ஆகிய மொழிகளுக்கு ஒதுக்கப்பட்டுள்ள தொகை முறையே 10.59, 1.07 மற்றும் 1.07 கோடிகளாகும். ஆனால் சமஸ்கிருதத்திற்கு மட்டும் ரூ. 231.15 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. மற்ற செவ்வியல் மொழிகளைப் போல, செவ்வியல் மொழிகளான மலையாளம் மற்றும் ஒடியா மொழிகளின் வளர்ச்சிக்காகத் தனியாக ஒரு நிதியம் இன்னும் உருவாக்கப்படவில்லை. உத்தரகாண்ட் மாநில அரசோ, இதுவரையில் உருது மொழியில் எழுதப்பட்டிருந்த இரயில் நிலையங்களின் பெயர்களைச் சமஸ்கிருத மொழிக்கு மாற்றப்போவதாக அறிவித்துள்ளது. 

ஒருபக்கம், தஞ்சைப் பெரிய கோயில் குடமுழுக்கைத் தமிழில் நடத்துவதற்கே நீதிமன்றத்தை நாடும் நிலைதான் தமிழ்நாட்டில் உள்ளது. மறுபக்கமோ அண்ணா பல்கலைக்கழகத்தில் கல்வியின் பெயரால் சமஸ்கிருதத்தையும், சனாதனத்தையும் திணிக்கும் முயற்சி நடைபெறுகிறது. 

புதிய கல்விக் கொள்கையின் மூலம் சமஸ்கிருதத்தைத் திணிக்கும் முயற்சி ஒருபுறம் நடக்க, சமஸ்கிருதம் பேசினால் சர்க்கரை குறையும் என்று பாஜக நாடாளுமன்ற உறுப்பினரின் பேச்சால், பாஜக சந்தி சிரித்துக் கொண்டிருக்கிறது. கடந்த வாரம் லக்னௌ பல்கலைக்கழகத்தில் பேசிய உத்தரப்பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் எல்லா இந்திய மொழிகளுக்கும் சமஸ்கிருதமே அடிப்படை என்று உளறிக்கொட்டியிருக்கிறார்.

ஆர்.எஸ்.எஸ்.-இன் கொள்கைகளைச் சிரமேற்கொண்டு நிறைவேற்றி வரும் பாஜக அரசு, காங்கிரஸ் அரசில் சமஸ்கிருதத்தின் வளர்ச்சிக்காகச் செய்யப்பட்ட நடவடிக்கைகளைத் தொடர்வதில் வியப்பில்லை. ஏற்கெனவே, இந்தியைத் திணிப்பதன் மூலம் மறைமுகமாக சமஸ்கிருதத் திணிப்பில் ஈடுபட்டிருந்த நடுவண் அரசு, இப்போது நேரடியாகவே சமஸ்கிருதத்தை மட்டும் வளர்க்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளது. இதனை உணர்ந்தே தமிழகம் அன்றிலிருந்து இன்றுவரை, இந்தித் திணிப்பை எதிர்ப்பதில் பிற மாநிலங்களுக்கு முன்னோடியாகத் திகழ்ந்தது; இன்றும் திகழ்கிறது.

நடுவண் அரசில், காங்கிரஸ் இருந்தாலும் பாஜக இருந்தாலும், இந்தி அல்லது சமஸ்கிருதத்தைத் திணிக்கும் போக்கு தொடர்ந்து நடைபெற்று வருகிறது. மொழிவழித் தேசிய உணர்ச்சியை மழுங்கடிக்கச் செய்வதற்கான இதுபோன்ற முயற்சிகளுக்கு எதிராக மாநில அரசுகள் தொடர்ந்து குரல் கொடுக்க வேண்டும். இந்தி மொழியின் வளர்ச்சியை ஊக்குவிப்பது, ஒன்றிய அரசின் கடமையாகும் (Article 351 - It shall be the duty of the Union to promote and spread the Hindi language) என்று சொல்லும் இந்திய அரசமைப்பின் 351வது உறுப்பு, கூட்டாட்சித் தத்துவத்திற்கே முரணானது. இப்பிரிவு அரசியலமைப்புச் சட்டத்தில் இருந்து நீக்கப்பட வேண்டும். அப்போதுதான் இந்தியாவின் பன்மைத்துவம் காக்கப்படும். 

பல்வேறு மொழிகளைப் பேசும் மக்களின் வரிப்பணத்தால் நடைபெறும் இந்திய அரசு, ஒரு மொழியை வளர்ப்பதற்காக மட்டும் அளவில்லாமல் பணத்தை வாரியிறைப்பது மொழிச் சமத்துவத்திற்கு எதிரானது மட்டுமன்று, கூட்டாட்சித் தத்துவத்திற்கே எதிரானது. இதனை ஒன்றிய அரசு உணர வேண்டும்.