இந்தியா விடுதலை பெற்று எழுபத்தைந்து ஆண்டுகள் நிறைவடைந்திருக்கின்றன. ஆனால், இந்தச் சுதந்திரம் லட்சக்கணக்கான மக்களின் வேர்வையும் இரத்தமும் கண்ணீரும் உயிரும் ஈகையாக்கப்பட்டு பெறப்பட்டுள்ளது. பாரதி சொன்னதுபோல் “கண்ணீரால் காத்த பயிர்தான்” இந்தியச் சுதந்திரம். இந்திய விடுதலைப் போராட்டம் என்பது சிப்பாய்க்கலகம் தொடங்கி வெள்ளையனே வெளியேறு இயக்கம் வரை நீண்ட வரலாற்றைக் கொண்டது. இந்தியாவின் எல்லாத் திசைகளிலும் இருந்த மக்கள் இந்திய விடுதலைப் போராட்டத்தில் கலந்துகொண்டார்கள்.  ஆயினும், இந்திய விடுதலை நெருப்பு முதலில் வங்கத்தில்தான் பற்றியெரிந்தது.  அதன்பிறகு, தமிழகத்தில் அது கொழுந்துவிட்டு எரியத் தொடங்கியது.

திலகரை மையமிட்டு எழுந்த முதல் தேசிய விடுதலை அலையாக இருந்தாலும் சரி, காந்தியைத் தலைமையாகக் கொண்ட இரண்டாவது தேசிய எழுச்சியானாலும் சரி, தமிழகம் இந்த இரண்டு  எழுச்சிகளிலும் காத்திரமாகப் பங்காற்றியுள்ளது; எதிர்வினை புரிந்துள்ளது. இந்திய விடுதலைப் போராட்டத்தில் பங்குபெற்ற தமிழ் ஆளுமைகளுள் ப.ஜீவானந்தமும் (1906-1963) குறிப்பிடத்தக்கவர்.

தமிழகத்தின்  தென்கோடியில் நாஞ்சில் நாட்டில் பூதப்பாண்டி என்னும் சிற்றூரில் பிறந்த ப.ஜீவானந்தத்தின் இயற்பெயர் சொரிமுத்து, மூக்காண்டி என்பதாக இருந்தது. ஜீவானந்தம் என்பது அவரது புனைபெயர். பள்ளிப்பருவத்திலேயே ஜீவானந்தம் இந்திய விடுதலைப்போராட்டத்தில் - காந்தியின் சுயராஜ்ய இயக்கத்தில் தன்னை இணைத்துக்கொண்டார். அவரது 12ஆவது வயதில் அவரது தாய் இறந்தபோது கதராடை அணியாமல் ஈமக்கடன் செய்ய மாட்டேன் என்று சொல்லி, கதராடை வந்தபிறகே அக்கடமையை நிறைவேற்றினார். இவ்வாறு, இளம் வயதிலேயே அரசியல் ஈடுபாடு கொண்ட ப.ஜீவானந்தம் கருத்தியல் ரீதியாகத் தொடர்ந்து மாற்றங்களைப் பெற்று வளர்ந்தார். காந்தியம், சமூகச் சீர்திருத்தம், சுயமரியாதை, தமிழ் உணர்வு, பொதுவுடைமை எனப் படிப்படியான வளர்ச்சி மாற்றங்களை ப.ஜீவானந்தத்தின் எழுத்துகளிலும் செயல்பாட்டிலும் காண முடிகின்றன.

jeeva 458காந்தியச் சார்புநிலை

ஜீவானந்தத்தின் தொடக்ககால அரசியல் மற்றும் கருத்தியல் நிலைப்பாடு, காந்தியச் சார்புநிலை கொண்டதாக அமைந்துள்ளது. அவர் பள்ளியில் படிக்கின்ற காலத்திலேயே சுற்றுப்புறக் கிராமங்களில் காந்தி பஜனை நடத்தி காங்கிரஸ் இயக்கத்திற்குப் பிரச்சாரம் செய்தார். கதர்த்திட்டத்தை வலியுறுத்தினார். மகாத்மா காந்தி வாசகர் சாலை ஒன்றையும் அவர் நடத்தியதாக அறிய முடிகிறது. சிறுவயதிலேயே பாடல் இயற்றும் ஆற்றல் கொண்ட ப.ஜீவானந்தத்தின் முதல் பாட்டு இந்தியத்தேசியத்தையும் விவேகானந்தரையும் திலகரையும் காந்தியடிகளையும்  போற்றுவதாக அமைந்திருக்கிறது. வந்தே மாதரத்தை மந்திரமாக முழங்கும் வகையில் அமையும் அப்பாடல் பின்வருமாறு அமைகிறது.

இது ஜெயம் இது ஜெயமே

ஈசன் நேசமாதல் தேச பாசமிகும்

இந்திய  மைந்த ரியற்றும் பிரசங்கம்

எங்கும் முழங்கச் செய்த இணையற்ற சிங்கம்

கந்த மேவும் விவேகா னந்தத் தங்கம்

காட்டி யூட்டிப் புகழ்மீட்டி நாட்டி நின்றார்

மாட்சி சேரிந்தியர் மதித்திடும் ஜோதி

மாந்தர் போற்ற தாதா மகிழ்ந்துற்றார் கியாதி

சூட்சி சேர்த்திலகர் சுயகோகேல் நீதி

சொந்த நந்தமாட்சி தந்தார் விந்தை காட்சி

ஆழி சூழுலகம் அதிசயங் கொண்டு

அகமகிழ்ந்திட காந்தி யளித்தனன் தொண்டு

தாழில் லளிகள் லாலா தாஸருங் கண்டு

தந்த மந்திரமாம் வந்தே மாதரமாம்

இப்பாடலை ஜீவா தனது 17ஆம் வயதில் (1924) பாடியதாகக் கருதப்படுகிறது (வீ.அரசு(ப.ஆ): 2007: ப.3). ஆனால் சிலர்,

               திடமுடன் இடர்கெடவுடன்

               உடையணிந்திடவே - திருவுடை

               கதரணிந்திடவே  (மேலது ப:1684)

என வரும் கதர்ப் பிரச்சாரப் பாடல்தான் ஜீவா எழுதிய முதல் பாடல் என்றும் கருதுகின்றனர். இவர் பள்ளி இறுதிப்படிப்பு படிக்கின்றபோது விடுதலைப் போராட்ட உணர்வு கொண்ட ‘ஞானபாஸ்கரன்’ என்னும் நாடகத்தையும் ‘சுகுணராஜன் அல்லது சுதந்திர வீரன்’ என்ற நாவலையும் எழுதியுள்ளதாகக் குறிப்பிடுகின்றனர். இவையன்றி கதர் வெண்பா - நாற்பது செய்யுட்களும், ராட்டின வெண்பா - நாற்பது செய்யுட்களும் இயற்றியுள்ளதாகக் கூறப்படுகிறது (மேலது ப:1684) ஆனால், அவை கிடைக்கவில்லை. இந்திய விடுதலைப் போராட்ட வீரர் லாலா லஜபதிராய் இறந்தபோது(1928) இரங்கற்பா ஒன்றும் பாடியுள்ளார். அப்பாடல் வருமாறு

தெய்வமே லஜபதிராய் சென்றதிசை யெங்கேயோ

உய்வமோ அவர்பிரிய ஒரு கணமும் ஐயயோ

ஊழ்வினைப்பயனோ இது உறுவது நயனோ

-------------

நாடழுக நகரழுக நல்ல ஊரார் தாமழுக

கேடறியாப் பெரியாரெல்லாம் கேட்டுளம் நொந்தே யழுக

கெடுதலின் குறியாய் உயிர் விடுத்தனை பெரிதாய்

--------------

 காந்திதுணை இழக்க கல்வித்தொண்டரிழக்க

வாய்ந்த சைமன் கமிஷன் மாபெரும் எதிர்ப்பிழக்க

மாண்டனை ஐயோ இனிக்காண்பது மென்றய்யோ (மேலது: பக்.16-17)

மேற்சுட்டிய பாடலில் இராமன் அயோத்தியை விட்டு நீங்கி ஆரண்யம் சென்ற போது கூடிநின்ற மக்கள் உயிரினங்கள் அழுததாக கம்பன் வருணிக்கும்

  “ஆவும் அழுத அதன்கன்று அழுத; அன்றலர்ந்த

   பூவும் அழுத; புனல்புள் அழுத; கள் ஒழுகும்

  காவும் அழுத: களிறு அழுத; கால்வயப்போர்

  மாவும் அழுத; அம்மன்னவனை மானவே”

என்ற பாடலின் தாக்கத்தினைக் காண முடிகிறது.

காந்திய இயக்கத்திலிருக்கும்போதே தீண்டாமை ஒழிப்பு அறப்போரிலும் ஜீவானந்தம் ஈடுபட்டார். தீண்டாமை ஒழிப்பு குறித்துப் பாடலொன்றும் எழுதியுள்ளார்.

“வாயற்ற நாய், கழுதை, மலம் தின்னும் 

பன்றியும் வழியோடு செல்லலாமாம்

மனிதர் நாம் சென்றிடில் புனிதமற்றுத்

தீட்டு வந்துலகு முழுகிப்போமாம்” 

தனது வீட்டை விட்டு வெளியேறி ஜோசப் பூதலிங்கம் தலைமையில் நடைபெற்ற சுசீந்திரம் சத்யாகிரகத்தில் (கோயில் நுழைவுப் போராட்டம்) பங்கேற்று வைதீகர்களின் தாக்குதலுக்கு உள்ளானார்.  அதன் பின்னர் சேரன்மாதேவியில் வ.வே.சு ஐயர் நடத்திய பரத்வாஜ ஆசிரமத்தில் தங்கியிருந்தார். அங்கு பிராமண மாணவர்களுக்குத் தனியாக உணவு பரிமாறுவதைக் கண்டித்துப் பெரியார், வரதராஜலு நாயுடு ஆகியோர் நடத்திய போராட்டத்தில் ஜீவானந்தமும் கலந்து கொண்டார். பிறகு, காரைக்குடிக்கு அருகிலிலுள்ள சிராவயல் என்னும் கிராமத்தில் பரத்வாஜ ஆசிரமத்திற்கு முற்றிலும் மாறுபட்ட தமிழ்ப்பண்பை அடிப்படையாகக் கொண்ட காந்திய ஆசிரமம் ஒன்றைத் தொடங்கினார்(1927). இதற்கு ஸ்ரீ கும்பலிங்கம் தலைவராகவும், ஜீவா பொதுச்செயலாளராகவும் இருந்தனர். இந்த ஆசிரமத்திற்கு வ.உ.சிதம்பரம் பிள்ளையும், பாரதி அறிஞர் வ.ரா.வும் வருகை புரிந்துள்ளனர்.

இந்தக் காலகட்டத்தில் ஜீவா தமிழ் நூல்களை விரும்பிப் படித்தார். தமிழ் பிறமொழிக் கலப்பின்றிப் பேசப்பட வேண்டும், எழுதப்பட வேண்டும் என்ற எண்ணம் மலர்ந்தது. வ.ரா. வந்தபோது ‘நாடும் இளைஞர்களும்’ என்ற பொருள் பற்றி ஒருமணிநேரம் பிறமொழிக் கலப்பின்றித் தனித்தமிழில் பேசினார். இதைக்கேட்ட வ.ரா., பாராட்டினார். ஜீவானந்தம் தன்னுடைய பெயரை உயிரின்பன் என்று மாற்றிக் கொண்டார்.

இலங்கைப் பயணத்தின்போது காந்தியடிகள் செட்டிநாட்டிற்கு வருகை தந்தார் (1925).  அப்போது, ஜீவா மகாத்மாவைக் காரைக்குடியில் சந்தித்தார். அச்சந்திப்பின்போது மகாத்மா ஜீவாவைப் பார்த்து

“உங்களுக்கு ஏதாவது சொத்து இருக்கிறதா?” என்று கேட்டார்.

அதற்கு ஜீவா, “தாய்நாடுதான் எங்கள் சொத்து” என்று கூற,

உடனே காந்தியடிகள், “இல்லை, நீங்கள்தான் தாய்நாட்டின் சொத்து” (ப.1689) என்று கூறியிருக்கிறார்.

இதனைத் தொடர்ந்து காந்தியடிகள் சிராவயல் ஆசிரமத்திற்கு வருகை புரிந்தார். அப்போது ஜீவா, பத்தாயிரம் கஜம் நூல் நூற்று மகாத்மாவிற்குக் காணிக்கை அளித்ததோடு வரவேற்புப் பத்திரமும் வாசித்தளித்தார். அங்கிருந்து காந்தியடிகள் பாவனேரி சென்றபோது  ஜீவா காந்தியடிகளிடம் சில கேள்விகளைக் கேட்கிறார். அதற்குக் காந்தியடிகள் பதிலளிக்கிறார். அக்கேள்வி  பதில்கள் பின்வருமாறு:

‘நான் நான்கு வருணங்களை ஸ்ருஸ்டித்திருத்திருக்கிறேன்’ என்ற கீதா வாக்கியத்தில் உங்களுக்கு  உடன்பாடுதான் அல்லவா?”

“ஆம்”

“நீங்கள் பிராமணரா?”

“இல்லை. வைசியன்”

“தீய ஒழுக்கங்களுடைய பிராமணன் சூத்திரனா?”

“இல்லை. கெட்ட பிராமணன்” (ப.1689)

சுயமரியாதைக் கருத்துகளால் ஈர்க்கப்பட்ட ஜீவாவிற்கு மேற்கண்ட காந்தியடிகளின் பதில்கள் ஏற்புடையதாக இல்லை. பின்னர் சிராவயல் ஆசிரமத் தலைவர் கும்பலிங்கத்துடன் கருத்து வேறுபாடு கொண்டு சிராவயல் ஆசிரமத்திலிருந்து  வெளியேறுகிறார்.

சுயராஜ்ஜியமும் சுயமரியாதையும்

சிராவயல்  ஆசிரமத்திலிருந்து வெளியேறிய ஜீவானந்தம், நாச்சியார்புரம் என்னும் கிராமத்தில் உண்மை விளக்க நிலையம் (1929) என்ற புதிய ஆசிரமத்தைத் தொடங்கினார். இதன்மூலம், சுயராஜ்­ஜியப் போராட்டத்தையும்  சுயமரியாதைக்கான சமூகச் சீர்திருத்தப் போராட்டத்தையும் இணைத்து ஜீவா முன்னெடுத்தார். 1927இல் சென்னையில்  டாக்டர் அன்சாரி தலைமையில் நடைபெற்ற  அகில இந்திய காங்கிரஸ் மாநாட்டில் தமிழகத்தின் பிரதிநிதியாக ஜீவானந்தம் பங்கேற்றார். இக்கால கட்டத்தில், இந்திய விடுதலை, சமூகச் சீர்திருத்தம், தமிழ்ப்பற்று ஆகிய மூன்று சக்திகளால் ஈர்க்கப்பட்டவராக ஜீவானந்தம் விளங்கினார்.

சென்னையில் காங்கிரஸ் மாநாடு முடிந்ததும்  தனித்தமிழ் அறிஞர் மறைமலையடிகளைச் சந்திக்க அவருடைய வீட்டிற்குச் சென்றார். வீட்டுக் கதவைத் தட்டியவுடன் உள்ளேயிருந்த மறைமலையடிகள் “போஸ்ட் மேனா?” என்று கேட்டார்.  அவரைச் சந்தித்து உரையாடிய பிறகு, சாதாரண மக்களுடன் உரையாடுவதற்குத் தனித்தமிழ் உதவாது என்பதை அறிந்தார். எனவே, சுயமரியாதையிலும் சுயராஜ்யப் போராட்டத்திலும் தீவிரம் காட்டினார். 1930ஆம் ஆண்டு ஈரோட்டில் நடைபெற்ற சுயமரியாதை மாநாட்டிற்குச் சென்று சாதி, மத விவகாரங்களில் மட்டுமன்றி அரசியல் விவகாரங்களிலும்  சுயமரியாதை இருக்க வேண்டும் என்று பேசினார். மாநாடு முடிந்து ஆசிரமம் திரும்பியதும்  மதுவிலக்குப் பிரச்சாரம், ஹரிஜனத் தொண்டு ஆகியவற்றிலும் தீவிரமாக ஈடுபட்டார். இதன் காரணமாக இவருக்குக் கையில் கத்திக்குத்து விழுந்தது. நாச்சியார்புரம் உண்மை விளக்க நிலையத்தில் இருந்த போது 07.04.1930 அன்று அந்நிலையத்தின் முதல் வெளியீடாக “சுயமரியாதை சொன்மாலை”   எனும் ஆத்திசூடி வடிவிலான கவிதை நூலை வெளியிட்டார். 102 சூடிகளைக் கொண்ட இக்கவிதை சுதந்திரம், சுயமரியாதை, சமதர்மம் ஆகிய மூன்றையும் உள்ளடக்கியதாக அமைந்தது. அதிலிருந்து சில பகுதிகள் வருமாறு:

.              அனைத்துயிர் ஒன்றென்று அறிவதுன் கடமை

.              ஆரியர் சூழ்ச்சியில் ஆழ்ந்து போகாதே

.              இருடிகள் முனிவர்களென்பவர் புரட்டர்

.              ஈசற்கீவதாய் காசழியாதே

.              உன்னுடலுத்தமன் உறையுளென்றே உணர்

.              ஊரார் உழைப்பில் உடல் வளர்க்காதே

.              எல்லாரும் ஓர்குலமெனத் தேர்ந்திடு

.              சுதந்திரம் வேண்டின் சுயமரியாதை கொள்

.              தீண்டாமை ஒழியத் தீவிரமாய் உழை

.              பண்டிதர் அறியார் பகுத்தறிவின் திறம்

.              பெண்ணும் ஆணும் எண்ணில் நிகர்

.              அறிவியல் வாதம் பெறில் முன்னேற்றம்

.              தாய்மொழி போற்றாதார் தீவினையாளர்

.              சோதரப் பேற்றின் ஆதாரம் சமத்துவம்

.              அன்பே கடவுள் அறிவே மெய்ப்பொருள்

.              உண்மை விளக்கம் உத்தமக் கொள்கை

1931இல் விருதுநகரில் நடந்த சுயமரியாதை மாநாட்டில் மதம்-அபின் என்ற மார்க்சின் கருத்தை வெளியிட்டார். இதே ஆண்டில் ஈரோட்டில் காங்கிரஸ் இயக்கம் சார்பாக நவஜவான் மாநாடு ஒன்று நடந்தது. அம்மாநாட்டில் லாகூர் சதி வழக்கில் கைதாகி விடுதலைபெற்ற ஜதீந்திர தாஸ் சகோதரர்கள், கிரண்தாஸ் ஆகியோர் பங்கேற்றனர். இம்மாநாட்டில் ஜீவானந்தமும் பங்கேற்றார். இதன்பிறகு, நாச்சியார்புர ஆசிரமம் கோட்டையூருக்கு மாற்றப்பட்டது. கோட்டையூருக்கு வந்தபிறகு, 1932இல் காங்கிரஸ் இயக்கத்தின் கள்ளுக்கடை மறியல் போராட்டத்தை ஜீவா முன்னெடுத்தார். மறியலில் ஈடுபட்டதால் காரைக்குடியில் ஜீவா கைது செய்யப்பட்டுச் சிறையில் அடைக்கப்பட்டார். ‘சி’ வகுப்பு கைதியான ஜீவானந்தம்  சிறையில் வங்கப் புரட்சியாளர்களான ஜீவன்லால் கோஸ் சட்டோபாத்யாயா, பதுகேஷ்வர் தத், குந்தர்லால் ஆகியோரைச் சந்தித்தார். இவர்களைச் சந்தித்ததன் மூலம் கம்யூனிச சித்தாந்தத்தின்பால் ஜீவா ஈர்க்கப்பட்டார். இச்சந்திப்பு, ஜீவாவின் பொதுவுடைமைக் கருத்தியலுக்கு அடித்தளமிட்டது.

சுயமரியாதையிலிருந்து சமதர்மத்திற்கு

1933ஆம் ஆண்டில் சிங்காரவேலு செட்டியார், ஈ.வெ.ரா ஆகியோர் ரஷ்யா சென்று திரும்பினர். சுயமரியாதைக் கூட்டத்தில் சோஷலிசம், கம்யூனிசம் ஆகிய அரசியல் கருத்துகள் பேசப்பட்டன. இக்காலப்பகுதியில் ஜீவானந்தம் குடியரசு, பகுத்தறிவு, புரட்சி ஆகிய பத்திரிகைகளில் கட்டுரை எழுதத் தொடங்கினார். 1933ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் சென்னை பச்சையப்பன் உயர்நிலைப் பள்ளியில் தமிழன்பர்கள் மகாநாடு நடந்தது. அதில், பங்கேற்றுப் பேசிய ஜீவா,  மதத்தையும் மூடப்பழக்கங்களையும் புகுத்தாமல் தமிழ் இலக்கியத்தை வளர்க்க வேண்டும் என்று சொன்னார். 1934இல்  தொழிலாளர் பாதுகாப்புச் சங்கம் தொடங்கப்பட்டது. கம்யூனிஸ்ட் கட்சி தடைசெய்யப்பட்டது. மீரட் சதி வழக்கு கம்யூனிஸ்ட்கள் மீது போடப்பட்டது. மத்திய சட்டசபைக்கு (பாராளுமன்றம்) தேர்தல் அறிவிக்கப்பட்டது. ஈ.வெ.ரா. நீதிக்கட்சியை ஆதரித்தார். ஜீவா அதற்கு எதிர்ப்புத் தெரிவித்தார். சமூகப் புரட்சியை நோக்கி முன்னேறுவதா, சீர்திருத்தத்தோடு நின்றுவிடுவதா என்று கேள்வி எழுப்பினார். சோஷியலிச பரப்புரையில் ஈடுபட்டார். “சோஷலிசம் ஏன் உகந்தது” முதலான சிறுநூல்களை வெளியிட்டார். 1934இல் ஜோலார்பேட்டை வி.பார்த்தசாரதி என்பவரின் உதவியுடன் ‘சமதர்ம' என்ற வார இதழும் தொடங்கினார். குடியரசு இதழ் வெளியீடாக பகத்சிங்கின் “நான் ஏன் நாத்திகன்?” என்ற நூலைத் தமிழில் மொழிபெயர்த்து வெளியிட்டார். அந்நூல்கள் பறிமுதல் செய்யப்பட்டு ஜீவா சிறையில் அடைக்கப்பட்டார். இதே ஆண்டில் மும்பையில் நடைபெற்ற காங்கிரஸ் மகாசபையில்  காங்கிரஸ் சோஷலிஸ்ட் கட்சி தனிப்பிரிவாக உருவானது.

1935இல் திருத்துறைப்பூண்டியில் நடைபெற்ற சுயமரியாதை மாநாட்டில் இரண்டு அணிகள் உருவாயின. ஜீவா பெரியாரோடு முரண்பட்டார். நிலச்சுவான்தாரர்களைக் கொண்ட நீதிக்கட்சியை ஆதரிக்கும் ஈ.வெ.ரா.விற்கு ஜீவானந்தம் எதிர்ப்புத் தெரிவித்தார். ‘பெரியார் சுயமரியாதைக்காரர் அல்லர், சோஷியலிசத்திற்காகப் போராடுபவர் அல்லர், ஜமீன்தாரர்களின் விரோதியல்லர், சொல்லும் செயலும் சுயமரியாதை இயக்கத்திற்குப் பலன் தராது.’ என்று குறிப்பிட்டார். மேலும்,  இம்மாநாட்டுப் பிரதிநிதிகளை நோக்கிப் பின்வருமாறு கேள்வி கேட்டுப் பதிலுரைத்தார். “கடவுளானாலும் காந்தியானாலும் சொல்வது பகுத்தறிவுக்குப் பொருந்தாவிட்டால், தள்ளிவிட வேண்டுமென்கிறோம். அப்படியானால், ஈ.வெ.ரா சொல்வது பகுத்தறிவுக்குப் பொருந்தாவிட்டால் வாலிபர்களாகிய நாம் என்ன செய்ய வேண்டும்? ஈ.வெ.ரா.வின் தலைமையை உதறிவிட்டு புரட்சிப் பாதையில் முன்னேற வேண்டும்” (மேற்கோள்:வீ.அரசு(ப.ஆ):2007:ப.1693).

பெரியாரை எதிர்த்த அதே சமயத்தில் காந்தியையும் புறக்கணிக்கும்படி ‘புரட்சி’ பத்திரிகையில் ‘காந்தி பகீஷ்காரம்’ என்ற தலைப்பில் கட்டுரை எழுதினார். அதில், தன்னைச் சென்னை நாத்திகர் சபையின் காரியதரிசி என்று குறிப்பிட்டார். அக்கட்டுரையில்  காந்தியைப் புறக்கணிப்பதற்கான பத்து காரணங்களைக் குறிப்பிட்டார். அவற்றுள் சில பின்வருமாறு;

ஹரிஜன முத்திரை வேண்டுமா? மனித சமஉரிமை வேண்டுமா? மனித சமஉரிமை வேண்டுமென்றால் காந்தியைப் பகீஷ்கரியுங்கள்.

ஐயாயிரம் வருடங்களாக அடிமை பொம்மைகளை உற்பத்தி செய்த இந்து மதம் அவசியமா? ஐம்பது வருடங்களாக உலகத்தைப் புதுப்பித்த அறிவியல் வாதம் அவசியமா? அறிவியல் வாதமென்றால் மதபக்தர் காந்தியைப் பகீஷ்கரியுங்கள்.

அவமானத்தைத் தரும் அபத்த ‘வர்ணாசிரமம்’ சரியா? ‘எல்லாரும் ஓர் இனம்’  ‘எல்லாரும் ஓர் நிறை’  என்னும் மனித சமானக் கொள்கை சரியா? மனித சமானக் கொள்கை சரியென்றால் வர்ணாசிரம பாஷ்யக்காரர் காந்தியைப் பகீஷ்கரியுங்கள்.

பார்ப்பனர்களையும் பணக்காரர்களையும் பரிவுடன் பாதுகாக்கும் ராமராஜ்ஜியம் தக்கதா? வயிறு உலர்ந்து வாடும் உழைப்பாளியின் கவலைக் கடலைத் தூர்க்கும் பொதுவுடைமை ஐக்கியக் குடியரசு தக்கதா? பின்னதுதான் தக்கதென்றால் ‘தரித்திர நாராயணரின் பிரதிநிதி’ காந்தியைப் பகீஷ்கரியுங்கள்.

வியர்த்தனென அனுபவம் கண்ட சீர்திருத்தம் வேண்டுமா? வெற்றிமேல் வெற்றி தரும் புரட்சி வேண்டுமா? புரட்சி வேண்டுமென்றால் சீர்திருத்தவாதி  காந்தியைப் பகீஷ்கரியுங்கள்.(புரட்சி,11.02.1934, மேற்கோள்:வீ.அரசு(ப.ஆ): 2007:ப.552).

தொடர்ந்து புரட்சி இதழில் (25.02.1934) எழுதிய கட்டுரை ஒன்றில் காந்தியமும் பொதுவுடைமையும் இரண்டு நேர்க்கோடுகள் (Parellel Lines) இரண்டும் என்றும் ஒன்றுசேராது என்று குறிப்பிடுகிறார். “காந்தியத்தின் அடிப்படை அஸ்திவாரம் நம்பிக்கை, சமதர்மத்தின் அடிப்படை அனுபவ ஆராய்ச்சியின் தீர்மானம். காந்திஜி ஆத்மார்த்திகவாதி (Spritualst). சமதர்மி, லோகாயதவாதி, சமதர்மி யந்திர வளர்ச்சியைப் போற்றுகிறான், காந்திஜி  இயந்திர வளர்ச்சியைத் தூற்றுகிறார். ஆகவே, காந்திஜிக்கும் சமதர்மத்துக்கும் ஏணி வைத்தாலும் எட்டாது” (மேலது ப.572).

இவ்வாறு எழுதிய ஜீவானந்தம் பின்னர், காந்தியடிகளை நன்கு உணர்ந்து  அவரை உடன்பாடாக அணுகினார். ஜீவானந்தம் இரண்டாம் உலகப்போரை எதிர்த்துப் பேசியதற்காகச் சிறை சென்று வெளியில் வந்தபிறகு(1942)  பூதப்பாண்டியில் நடைபெற்ற காந்தி ஜெயந்தி நிகழ்வில் காந்தியைப் பற்றிப் பிரசங்கம் செய்தார். இதனால் அவர்மீது வழக்கு தொடரப்பட்டு ஒரு வருடம் கடுங்காவல் தண்டனை பெற்றார்.

மகாத்மா காந்தி படுகொலை செய்யப்பட்டபோது, பெரும் மக்கள் திரளிடத்தில் ஏகாதிபத்திய எதிர்ப்பையும் ஜனநாயக ஆர்வத்தையும் உருவாக்கியதில் அவருக்குப் பெரும் பங்குண்டு என்றும் இந்து வகுப்புவாத கலவரங்களின்போது சிறுபான்மையினருக்கு ஆதரவாக இருந்தார் என்றும் அவரது கொலை ஏகாதிபத்திய ஏஜென்டுகளும் எதிர்புரட்சி சக்திகளின் ஏஜென்டுகளும் வளர்ந்து வலிமைபெற்று வரும் புரட்சி சக்திகளின்மீது தொடுத்த தாக்குதல் என்றும் மதிப்பிடுகிறார்.

1936ஆம் ஆண்டில் சுயமரியாதைச் சமதர்மக் கட்சியின் முதல் மாநாடு நடைபெற்றது. இதில், தோழர் எஸ்.கே.டாங்கே தலைமையுரை நிகழ்த்தினார். 1936ஆம் ஆண்டின் இறுதியில் சுயமரியாதைக் கட்சியைக் கலைத்துவிட்டு காங்கிரஸ் சோஷலிஸ்ட் கட்சியாகச் செயல்படுவதாக முடிவெடுக்கப்பட்டது. ஜெயப்பிரகாஷ் நாராயணன் முயற்சியினால் தமிழ்நாடு காங்கிரஸ் சோஷலிஸ்ட் கட்சி தொடங்கப்பட்டது. சீனிவாசராவ் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். ஜீவாவிடம் கட்சியமைக்கும் பொறுப்பு ஒப்படைக்கப்பட்டது.  இக்கால கட்டத்தில் கம்யூனிஸ்ட் இயக்கத் தலைவர் அமீர் ஹைதர்கான் சென்னைக்கு வருகை புரிந்தார். அச்சக ஊழியர்கள், டிராம் ஊழியர்கள், இரயில்வே ஊழியர்களை இணைத்து இள மார்க்சிய கழகம் (Young Marksist League) ஏற்படுத்தப்பட்டது. ஆனால், அரசு இதனைத் தடை செய்தது.

1937ஆம் ஆண்டில் தமிழ்நாடு காங்கிரஸ் சோஷலிஸ்ட் கட்சி மாநாடு சேலத்தில் நடைபெற்றது. ஜீவானந்தம் சோஷலிஸ்ட் கட்சியின் பொதுச்செயலாளராகத் தேர்வு செய்யப்பட்டார். இதனையொட்டி ஜனசக்தியைக் காங்கிரஸ் சோஷலிஸ்ட் கட்சியின் வார இதழாகக் கொண்டுவந்தார். இக்காலப்பகுதியில் ஏராளமான தொழிற்சங்கப் போராட்டங்களிலும் மாணவப் போராட்டங்களிலும்  கலந்து கொண்டார். தொழிலாளர் போராட்டங்களை ஊக்குவிக்கும் வகையில்  பல பாடல்களை எழுதினார்.  லெனினையும் பகத்சிங்கையும் போற்றிப் புகழ்ந்தார். இந்தியா அரசியல் விடுதலை, சமூக விடுதலை பெறுவதையும் தாண்டி புரட்சி செய்து சோஷலிஷ நாடாக உருவாக வேண்டும் என்பதுதான் அவரது குறிக்கோளாக இருந்தது.

பஞ்சையர் பசியில் வாடி பரிதவிப்போர்கள் கோடி

பாரினில் பெரும்புரட்சி நேராது விடியாதடி

வஞ்சகத் தலைவர் வேண்டாம் எங்கள் லெனின் போதுமடி

தூக்குமேடை நின்ற சிங்கம் தோன்றிய நம் நாடு                     (புரட்சி வீரர், 1934)

கோடிக்கால் பூதமடா - தொழிலாளி 

கோபத்தின் ரூபமடா

நாடி எழுந்தது பார்  குவலயம்

நாற்றிசையும் அதிர                               (கோடிக்கால் பூதம், 1934)

காலுக்குச் செருப்புமில்லை

கால்வயிற்றுக்கு கூழுமில்லை

பாழுக்கு உழைத்தோமடா - என் தோழனே

பசையற்றுப் போனோமடா

(1934 - கோவை ஸ்டான்ஸ் மில்ஸ் தொழிலாளர் போராட்டத்தின்போது பாடியது)

ப.ஜீவானந்தத்தின் பாடல்கள் பலவும்  பாரதி சொன்னதுபோல் ‘பொதுஜனங்கள் விரும்பும் மெட்டில்’ அமைந்தவையே.

பொதுவுடைமை பெற வேண்டும்  - உடன்

புரட்சி செய்திட வேண்டும்

வேறென்ன வேண்டும்.

இப்பாடல் அக்காலத் திரைப்படப் பாடல் ஒன்றை அடியொற்றி எழுதப்பட்டது. இதேபோல கிருஷ்ணலீலா திரைப்படத்தில் வந்த “சாமி சத்யபாமா கதவைத் திறவாய்” என்ற பாடல் மெட்டில் பின்வரும் சமதர்மப் பாடலை இயற்றினார்.

”ஓங்கும் சமதர்மம் உகப்பீர் தோழரே

தோழரே! தோழரே! தோழரே! - நிதம்” (குடியரசு 1933)

இந்தியாவின் அரசியல் விடுதலை, சமூக விடுதலை, தொழிலாளர் விடுதலை, சோஷலிசப் புரட்சி ஆகியவற்றோடு பெண் விடுதலையையும் வலியுறுத்தி ஏராளமான பாடல்களையும் எழுதியுள்ளார். பெண் அடிமைப்படுத்தல், ஆடவர் ஆதிக்க நிந்தனை, காதல் மணம் பேணல், பெண்ணுரிமைப் போருக்கு அழைப்பு, நவநாதி முதலான பாடல்கள் இவ்வகையில் குறிப்பிடத்தக்கன. தமிழகத்தில் பொதுவுடைமையைப் பாரதிவழியில் கொண்டுசெல்ல வேண்டுமென்று விரும்பிய ஜீவா, 1945ஆம் ஆண்டில் பாரதி விழாவைக் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் கொண்டாடும்படி செய்தார். பாரதி பாடல்களுக்கு விதிக்கப்பட்ட தடையை நீக்கி நாட்டுடைமையாக்கும்படிப் போராட்டம் நடத்தினார். பாரதி கீதம் பாடி, பாரதியைப் பெரும் மக்கள் திரளிடத்தில் கொண்டு சென்றதோடு பாரதி படைப்புகள் குறித்து குறிப்பிடத்தக்க திறனாய்வு நூல்களையும் எழுதியுள்ளார். பாரதி படைப்புகள் குறித்த விவாதங்களிலும் ஈடுபட்டார். பி.ஸ்ரீ.ஆச்சார்யா  பாரதியை வேதாந்த சிந்தனைக்குள் அடைக்க முயன்றபோது ஜீவா, அவரைப் பொதுவுடைமைக் கவிஞராக நிறுவிக் காட்டினார்.

முடிவுரை 

பன்மொழிச் சூழலும் பல் பண்பாட்டுத்தன்மையும்  கொண்ட இந்திய சமூகங்களின் ஒன்றிணைப்பில்தான் இந்திய தேசியம் மலர்ந்தது. இந்திய தேசிய விடுதலைப் போராட்டத்தில் பல்வேறு சமூகப் பிரிவுகளைச் சார்ந்தவர்களும், பல்வேறு சமய நம்பிக்கை கொண்டோரும் பங்கேற்று, ஆங்கிலேயரின் காலனிய ஆட்சியை எதிர்த்துப் போராடி, இந்தியாவின் அரசியல் விடுதலையைப் பெற்றனர். இந்தியத் தேசியத்திற்குச் சமூக விடுதலை, பொருளாதார விடுதலை, அரசியல் விடுதலை எனப் பன்முகப் பரிமாணங்கள் உண்டு. இந்தியாவிற்குச் சமூக விடுதலைதான் முதலில் தேவை என்று சொன்னவர்களும், இல்லை அரசியல் விடுதலைதான் முதலில் தேவை; சாதிப்பிரிவைப் போக்கும் சமூக விடுதலையைப் பின்னர் பெற்றுக் கொள்ளலாம் என்று சொன்னவர்களும், இந்திய அரசியல் விடுதலையை அகிம்சை வழியிலின்றி ஆயுதம் தாங்கிய போராட்ட வழியில்தான் பெற முடியும் என்று சொன்னவர்களும், இந்திய அரசியல் விடுதலை பொதுவுடைமை சார்புடையதாக இருக்க வேண்டும் என்று சொன்னவர்களும் இணைந்துதான் இந்திய விடுதலையைப் பெற்றுத் தந்தார்கள்.

மேற்சுட்டிய சித்தாந்த வேறுபாடுகளெல்லாம் ஒன்றுக்கொன்று முரணானவை அல்ல; அவை காலனிய இந்தியத் தேசியத்தின் பன்முகப் பரிமாணங்களே. இம்முரண்பட்ட  சித்தாந்தங்களோடு ஊடாடித்தான் ப.ஜீவானந்தத்தின் ஆளுமை உருவாக்கம் பெற்றுள்ளது. காந்தியத்தில் தொடங்கி சுயமரியாதை, தமிழ் உணர்வு எனப் படிப்படியாக வளர்ந்து இறுதியில் பொதுவுடைமைச் சித்தாந்தத்தில்  தன்னைக் கரைத்துக் கொண்டவராக  ப.ஜீவானந்தம் விளங்குகிறார்.  காந்தியம், சுயமரியாதை, மொழியுணர்வு ஆகிய சித்தாந்தங்களின் வரலாற்றுத் தேவையினை  ஜீவா உணர்ந்திருந்தார். ஆனால், இவற்றையெல்லாம் பொதுவுடைமை வெளிச்சத்திலிருந்து காண முயன்றார்.

இந்திய விடுதலைக்குப்பிறகு,  இச்சித்தாந்தங்களின்  கொள்கைப் பிடிப்பிலிருந்து  ஜீவா வழுவவே இல்லை. குறிப்பாகத் தமிழ் மொழியுணர்வை அவர் கடைசிவரை கொண்டிருந்தார். திராவிட முன்னேற்றக் கழகத்தின் ஆட்சிக்காலத்தில் ஹிந்தி ஒழிப்புப் போராட்டம் நடந்தபோது,  “ஹிந்தி ஒருபோதும் இல்லை; ஆங்கிலமே எப்போதும்” (Hindi Never; English Ever) என்ற முழக்கம் சட்டமன்றத்தில் உயர்ந்தது. அப்போது ஜீவானந்தம் எழுந்து, தமிழ் எப்போது (When Tamil) என்று கேட்டார். தமிழ், கல்லூரிகளில் பயிற்று மொழியாக வேண்டுமென்று குரல் கொடுத்தார். இந்திய விடுதலைப் போராட்டத்தில்  இடதுசாரிகளுக்கும்  முதன்மையான பங்கிருக்கிறது என்பதைத்தான் ப.ஜீவானந்தத்தின் வாழ்க்கை நமக்கு எடுத்துக் காட்டுகிறது. பாரதியின் விடுதலைக் கருத்தியல் மனித குலத்தின் எல்லாவிதமான அடிமைத்தனத்திற்கு எதிரானதாக இருந்ததைப் போன்றே ஜீவாவின் விடுதலைக் கருத்தியலும் விளங்குகிறது.

துணைநூற்பட்டியல்

1.            அரசு,வீ., (ப.ஆ), ப.ஜீவானந்தம் ஆக்கங்கள் - முழுத்திரட்டு (பகுதி - 1, பகுதி- 2), நியூ செஞ்சுரி புக் ஹவுஸ், சென்னை, முதற்பதிப்பு - அக்டோபர் 2007.

2.            ஜீவா, ஜீவாவின் பாடல்கள், நியூ செஞ்சுரி புக் ஹவுஸ், சென்னை, மூன்றாம் பதிப்பு - மே, 2014.

-முனைவர் பா.ஆனந்தகுமார், பேராசிரியர், தமிழ்த்துறை, காந்திகிராம கிராமிய நிகர்நிலைப் பல்கலைக்கழகம், காந்திகிராமம்.

Pin It