சமகாலக் கல்விமுறை, சீர்திருத்தக் கிறிஸ்தவத்தால் இம்மண்ணில் தூவப்பட்டது. இன்று காலனி ஆதிக்கத்தின் நன்மைக்காக, காலனி ஆதிக்கத்தால் தோற்றுவிக்கப்பட்டது என்று மதிப்பிடப் படும் கல்வியின் முதல் ஊற்றாக இதனைக் கொள்ள வேண்டும். விடுதலைக்குப்பின் தொடர்ந்து இது விமர்சனங்களுக்கு உள்ளாக்கப்பட்டும் வருகிறது. என்றாலும், இன்னமும் தொடர்ச்சி பெறவே செய்கிறது. சமய மாற்றமும், காலனி ஆதிக்கமும் இணையாகவே எதிர்கொள்ளப்படுவதால், இதனைக் குறித்து ஆராய்வதில் ஒரு தயக்கம் உள்ளது. சீர்திருத்தக் கிறிஸ் தவர்கள்கூட இம்மண்ணிற்கு அதனை எடுத்துவந்த ஐரோப்பியர்களை மறக்க விரும்புகின்றனர். என்றாலும், சில பெயர்களை அவர்களால் மறக்க இயலாததாகிறது. சீகன்பால்கு, பாப்ரேஷியஸ், ஜெனிக்ஸ், இரேனியஸ், கால்டுவெல், ரிங்கிள்டொபே என்னும் சில பெயர்கள் அவர்கள் மறக்க விரும்பியும் நினைவுகளில் மறையாது தொடர்கின்றன. கூர்ந்து நோக்கும்போது, சமயத்தினூடாக அல்ல; அவர்கள் பெற்ற கல்வியினூடாக அதன் விளைவான சமூக விடுதலை மற்றும் வாழ்க்கை முன்னேற்றங்கள் காரணமாகவே நினைவுச்சரடில் இப்பெயர்கள் தலைமுறை களைக் கடந்து தொடர்கின்றன.

தமிழ் மண்ணிற்குச் சீர்திருத்தக் கிறிஸ்தவத்தை முதலில் எடுத்து வந்தவர்கள் இங்கு ஆதிக்கத்தை நிலைநிறுத்திய ஆங்கிலேயர்கள் அல்ல என்ற உண்மையைச் சிந்தனையாளர்கள் சுலபமாகப் புறக்கணித்துவிடுகின்றனர். இவர்கள் அனைவரும் ஜெர்மானியர்கள்; அனைவர்க்கும் பொதுக்கல்வி என்பது ஒரு ஜெர்மானியக் கனவுதான். இவர்கள் பாதையை வகுத்து விட்டதனால் தொடர்ந்துவந்த ஆங்கிலப் பணியாளர்களும், காலனி ஆட்சியாளர்களும் இப்பாதையிலேயே தொடர வேண்டியதாயிற்று.

காலனி ஆதிக்கத்திற்கும், கிறிஸ்தவச் சமய மாற்றத்திற்கும் இடையிலான உறவு அல்லது உறவின்மையை ஆராய்ந்தாக வேண்டும். கி.பி.1600இல் டிசம்பர் 31ஆம் நாள் கிழக்கிந்தியக் கம்பெனிக்கு இங்கிலாந்து அரசி எலிசபெத்-1 இந்தியாவில் வணிகம் செய்ய முழு உரிமையைத் தந்தாள். கப்பல்களில் வழிபாடு நடத்த ‘சாப்ளின்’களை உடன் அழைத்துச் செல்லக் கட்டளையிடப்பட்டது. இவர்கள் அரசியின் குடி மக்களுக்கு வழிபாடு நடத்த கரையில் இறங்கினர். கம்பெனி, உள்ளூர் மக்க ளுக்குச் சமயப்போதனை செய்ய இவர்களை அனுமதிக்கவில்லை. கிழக்கிந்தியக் கம்பெனியினர் சமயமாற்றம், போர்த்துக்கீசியர் களைச் சிக்கலுக்குள்ளாக்கியது என்ற வரலாற்று உண்மையினை உணர்ந்து கொண்டிருந்தனர். 1698இல் கம்பெனியின் உரிமை மீண்டும் புதுப்பிக்கப்பட்டது. ‘லண்டன் ஆர்ச் பிஷப்பால்’ ஏற்றுக் கொள்ளப்பட்ட சாப்ளின்களைக் கம்பெனி அழைத்துச் செல்லவேண்டும் எனும் நிபந்தனை விதிக்கப்பட்டது. இவர்கள் ஆங்கிலேயர்கள் குடியிருந்த ‘காரீசன் டவுன்’களிலுள்ள உள்ளூர் மக்களுக்குப் புதிய சமயத்தைப் போதிக்க அனுமதிக்கப்பட்டனர். சாப்ளின்கள் உள்ளூர் மொழியைக் கற்க வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டது.

உள்ளூர் மக்கள் என்பது, பெரும்பாலும் ஆங்கிலேயர்களுக்கு ‘பட்லராக’ இருந்த பறையர் இன மக்களைக் குறிக்கலாம். சமயமாற்றம் நம்பிக்கையான ஊழியர்களாக அவர்களை மாற்றும் என்ற எண்ணம் கம்பெனிக்கு இருந்திருக்க வேண்டும். அயோத்திதாச பண்டிதர் முதலில் பறையர்கள்தான் கிறிஸ்தவர்களானார்கள், பின்னால் பிற சாதியினரும் சேர்த்துக் கொள்ளப்பட்டதால் அவர்கள் முன்னேற்றம் தடைபட்டது என்று கூறுவது இதனைத்தான்.1 இங்கு ‘ஊழியம் செய்’ என்பது சமயமாற்றத்தினூடாகத் திணிக்கப்பட்டது. இந்த வரலாற்று உண்மைதான் அவர்களை அடுத்த காலகட்டத்திற்கு எடுத்துச் செல்லத் தவறியது. கிழக்கிந்தியக் கம்பெனி பிறசாதியினருள் சமயமாற்றத்தை அப்போது விரும்பாததற்குக் காரணங்கள் உண்டு. அவர்கள் பெற்ற உரிமையின்படி இந்தியாவில் அவர்கள் அனுமதியின்றி எச்செயலும் நடைபெற இயலாது. சமய மாற்றத்தை அனுமதித்தால் இதற்கு ஊறு நிகழ்ந்துவிடும். சமயம் மாறிய சுதேசிகள் கிறிஸ்தவர்கள் என்ற நிலைமையில் சம உரிமையைக் கேட்கக்கூடும். மேலும் சமயப் பணியாளர்கள் கம்பெனியின் செயல்பாடுகள் குறித்துத் தாய்நாட்டில் விமர்சிக்க முயல்வர். கம்பெனியின் நோக்கம் பொருள் தேடுவது மட்டுமே. எனவே, காலனி ஆதிக்கமும், சமயமாற்றமும் எதிர்த்திசையில் நகரத் துவங்கியது.

இந்தியாவிற்கு வணிகம் செய்ய வந்தவர்களுள் டேனியர்கள் சற்று வித்தியாசமானவர்கள். இவர்கள் சாம்ராஜ்யக்கனவுகளைக் கொண்டிருக்கவில்லை. வணிகத்தோடு நின்று விட்டிருந்தனர். 1620இல் தஞ்சை மன்னன் ரகுநாத நாயக்கரோடு ஒரு ஒப்பந்தம் செய்து தரங்கம்பாடியை வாடகைக்கு எடுத்தனர். ஆண்டுக்கு 3111 ரூபாய் வாடகை. ஆனால், 1624க்குப் பிறகு அது டேனியருக்கே சொந்தமானது. 1845இல் பிரிட்டன் கைக்கு மாறுவது வரை டேனியரிடமே இருந்தது. பொறையார் உட்பட பதினாறு கிராமங்கள் டேனியருக்குச் சொந்தமானது. டேனிய வர்த்தகக் கம்பெனி தங்கள் பயன்பாட்டிற்காக ஒரு கோவிலையும் கட்டிக் கொண்டிருந்தது. ஆனால், இக்கோவில் டேனியர்கள் வழிபாட்டிற்காகத்தான். கிழக்கிந்திய கம்பெனியைப் போல் டேனிய கம்பெனியும் சமய மாற்றம் தங்கள் வர்த்தகத் திற்கு இடையூறாகிவிடும் என நம்பினர். போர்த்துக்கீசியர்களின் தோல்வியில் அவர்களும் பாடத்தைக் கற்றுக் கொண்டிருந்தனர்.

டென்மார்க் மன்னனான நான்காம் ஃபிரடெரிக்கிற்கு ஓர் ஆசை பிறந்தது. தன் அதிகாரத்திற்கு உட்பட்ட தரங்கம்பாடி மக்களுக்குச் சீர்திருத்தக் கிறிஸ்தவ சமயத்தை அறிமுகம் செய்ய வேண்டுமென்று. கிழக்கிந்திய கம்பெனியைப் போல் டேனிய கம்பெனியும் தாய் நாட்டில் சக்தி மிக்கது. டென்மார்க்கிலிருந்து யாரும் முன்வராது போகவே, ஜெர்மனி ஹலே பல்கலைக்கழக மாணவர்கள் இருவரை டென்மார்க் பொருளுதவியுடன் அனுப்பிவைத்தார்; சீகன்பால்க், புளூசோ என்ற இரு மாணவர்களும் 1706இல் தரங்கம்பாடி வந்தடைந்தனர். ஒருவகையில் அழையா விருந்தாளிகளாக. டேனிய கம்பெனிக்கு இதில் சற்றும் விருப்பமில்லை. சமயப்பணி என்ன விளைவு களைத் தோற்றுவிக்கும் என்பதை அவர்கள் அறிந்திருந்தனர். ‘‘சீகன் பால்கும், புளூசோவும் மிஷனெரிகளாக வந்தது டேனிய வர்த்தகக் கம்பெனியாருக்கு அவ்வளவாக பிடிக்கவில்லை. இதனால் மிஷனெரிகள் பல இடைஞ்சல்களைச் சந்திக்க நேர்ந்தது’’.2 என்றுதான் சீகன் பால்குவின் வாழ்க்கை வரலாறு குறிப்பிட்டுள்ளது.

சீகன்பால்க் 1706இல் தரங்கம்பாடி மண்ணை மிதித்தார் என்றால் 1707இல் முதல் பள்ளி தரங்கம் பாடியில் தொடங்கப்பட்டுவிட்டது. 1725இல் 21 பள்ளிகள் இருந்தன. 500க்கும் மேற்பட்ட மாணவர்கள் இப்பள்ளிகளில் பயின்றனர். சமயப் பாடங்களுடன் தமிழும் கணக்கும் பாடத்திட்டத்தில் இடம்பெற்றன. பெண்களுக்கான தனிப்பள்ளியும் இக்கால கட்டத்திலேயே தோற்றம் கண்டுவிட்டது. இங்கு பாடத் திட்டத்தில் தையலும் கற்றுத் தரப்பட்டது.

எல்லோருக்குமான பொதுக்கல்விதான் கற்பிக்கப்பட்டது. இம்மண்ணில் இது முதல் நிகழ்வு. தாழ்த்தப்பட்டவர்களுக்கு ஒருபோதும் கல்வி தரப்பட்டதில்லை. பெரும் தாவல்தான். ஆனால், கல்வி நிலையங்கள் மட்டும் வெவ்வேறு இடத்தில் இருந்தன. தரங்கம்பாடிப் பள்ளியில் தாழ்ந்த சாதிச் சிறுவர்கள் பயின்றனர். பொறையார் பள்ளி உயர்ந்த சாதியினரான பார்ப்பன‌, வேளாளச் சிறுவர்களுக்கானது. டேனியர்கள் இங்குள்ள சாதி அமைப்பை அனுசரித்துப் போக விரும்பினர். எல்லா வர்த்தகக் கம்பெனிகளும் இதையே தொடர்ந்துள்ளன. ஆனால், தாழ்த்தப்பட்டவர்களுக்குக் கல்வி நிலையத்தின் வாயிலைத் திறந்துவிட்டது மகத்தான சாதனையே.

வரலாறு இரு கேள்விகளை முன்வைக்கின்றது. ஜெர்மானி யர்களுக்கு வர்த்தகக் கம்பெனி இல்லை. காலனி வேட்கையும் கிடையாது. பின் ஏன் இம்மண்ணில் தங்கள் உடல்களை விதைத் துள்ளனர். எது இவர்களைக் கவர்ந்தது? கோவில்களோடு பள்ளிகளையும் இவர்கள் கட்டி எழுப்பியது ஏன்? சீர்திருத்தக் கிறிஸ்தவம் கத்தோலிக்கத்தைப் போல் கேள்வி கேட்காத நம்பிக்கையை அடிப்படையாகக் கொண்டதல்ல. வேதநூலை அனுபவித்து, நம்பிக்கை கொள்ளத் தூண்டியது. இதற்கு வேதநூலைப் படிக்க எழுத்தறிவு வேண்டும். ஆனால், மொழிமட்டுமல்லாமல் கணக்கும் வரலாறும் கற்பிக்கப்பட்டன. இதில் விடை பெறமுடியாத கேள்வி, ஐரோப்பிய நவீனமயமாதல் இவர்களைத் தூண்டியிருக்கக் கூடும்தான். ஜெர்மானியர்களுக்கு மட்டுமே இத்தூண்டுதல் கிடைத்ததா?

ஒரு நூற்றாண்டு காலம் ஜெர்மானியர் தரங்கம்பாடியை நோக்கி வந்தவண்ணமிருந்தனர். அங்கிருந்து வெவ்வேறு பகுதி களுக்குத் தங்கள் கனவுகளைச் சுமந்து சென்றனர். அனைவர்க்கும் சமநிலையில் கல்வி என்பது இவர்கள் கனவுகளின் பொதுமைக் கூறாக அமைந்தது. திருவிதாங்கூர் மண்ணை வந்தடைந்தார்கள். முதலில் செய்தது ஒரு பள்ளியை எழுப்பியதுதான். அவரும் ஒரு ஜெர்மானியரே. தமிழ் மண்ணைக் குறித்து, அதன் இயற்கை வளத்தைக் குறித்து, தமிழ்ப் பண்பாட்டைக் குறித்து ஜெர்மன் மொழியில் இவர்கள் எழுதிய நூல்கள் தமிழனின் பார்வைக்குக் கிடைக்கவில்லை - அதற்கான எவ்வித முயற்சியும் இதுவரை நிகழவில்லை. தமிழ் இலக்கியம், தமிழர்சமயம், தமிழர் மருத்துவம், தமிழ் மண்ணின் இயற்கை, பறவை, விலங்கு என இவர் பார்வை விரிந்திருந்தது என்ற தன்மையை மட்டுமே இன்று எதிர்கொள்ள முடிகிறது.3 பள்ளிக்கூடங்கள் திறக்கப் படுவதற்கு இணையாக வேதநூலும் தமிழில் மொழிபெயர்க்கப் பட்டது. அதுவும் சாதாரண மக்கள் பேசும் மொழியில் உயர் சாதியினரையும் தாழ்ந்த சாதியினரை யும் வரவழைத்து மொழிபெயர்ப்பு வாசித்துக் காண்பிக்கப்பட்டு அதில் திருத்தங்கள் நிகழ்த்தப்பட்டன. எல்லோருக்கும் புரியும்படியான மொழி குறித்த கற்பனை முதன்முதலாக இக்காலத்தில் தான் எழுந்தது. நூல்களும் அச்சிடப்பட்டன. தமிழக வரலாற்றில் எல்லோர் கைக்கும் நூல்கள் வந்தடைந்தது இந்தக் காலகட்டத்தில்தான். சாதாரண மக்களுக்கும் வாசிப்பிற்கும் இடையிலான தடைகள் நொறுக்கப்பட்டன. இதற்கு முன் ஓர் ஆசிரியரிடமிருந்தே ஏட்டைப் பிரதி செய்துகொள்ள வேண்டும். கல்வி கற்க உரிமை யற்றவர்கள் கைக்கு ஏடுகள் கிடைக்காத வண்ணம் பார்த்துக் கொண்டனர். ஒரு பெரும் பகுதி மக்களை இலக்கியத்திற்கு அன்னியப்படுத்தி வைக்கவும் முடிந்தது.

தமிழில் உரைநடை இந்த ஜெர்மானியர்களால்தான் தோற்றுவிக்கப்பட்டது என்பதல்ல. இங்கு வந்த ஐரோப்பியர்கள் எல்லோருமே தமிழைக் கற்க வீரமாமுனிவரைத்தான் பயன் படுத்திக் கொண்டுள்ளார்கள். செந்தமிழ் கொடுந்தமிழ் பிரிவைச் சமகாலத்திற்குக் கொண்டுவந்தது அவர்தான். செந்தமிழ் உரையாசிரியர்கள் நடை, எழுத்து மொழியில் தலைமுறை களாகப் பழக்கம் கொண்டவர்களால்தான் வாசித்தறிய முடியும். ஒருவகையில் அது உயர்சாதியினருக்கானது. ‘பரமார்த்த குருகதை’ மட்டுமே பேச்சுத் தமிழை ஒட்டியது. பெரும்பாலும் அது இந்த ஜெர்மானியர்களைக் கேலி செய்வதற்காக எழுதப்பட்டிருக்கக் கூடும். வீரமாமுனிவர் காலத்தில் போர்த்துக் கீசியர் ஓய்ந்துவிட்டிருந்தனர். தரங்கம்பாடியில் அச்சுக்கலை வளர்ந்துகொண்டிருந்தது. தரங்கம்பாடியினரின் ஊடக வசதியால் சாதாரண மக்களுக்கான மொழி வளரத் துவங்கியது. ‘அபே துபாய்’ போன்ற கத்தோலிக்கத் துறவிகள் இம்மாற்றத்தைக் கடுமையாக எதிர்த்தனர். உயர்சாதியினரை முன்னிலைப் படுத்தும் இங்குள்ள சமூக அமைப்பை எதிரிடாது கிறிஸ்தவம் இங்கு வரவேண்டும் என்பதே இவர்கள் நிலைப்பாடு. பார்ப்பன‌ரும் வெள்ளாளரும் மாறிவிட்டால் சமூகம் பின் தொடரும் என நம்பினர்.4

‘‘அமெரிக்க விடுதலைப் போருக்கும் (1776) இங்கிலாந்து சீர்திருத்த மசோதா (1832) ஏற்கப்பட்டதிற்குமிடையிலான காலப்பகுதி இங்கிலாந்து வரலாற்றில் ஒரு சுவையான காலகட்டம்’’5 இங்கிலாந்து, அரசியல் பொருளாதார சமூகவியல் அடிப்படையில் வேகமாக மாறிக்கொண்டிருந்தது. உணர்ச்சி மைய வாதக் கவிஞர்கள் சமூகத்தின் ஆன்மாவைத் தட்டி எழுப்பினர். ஷெல்லியும், கீட்ஸ§ம் இக்காலத்தவர்கள்தான். புரட்சி வரவேற்கப்பட்டது. அதிகாரம் மக்களிடமே இருக்க வேண்டும் என்பது முழக்கமாக முன்வைக்கப்பட்டது. காலனி, சாம்ராஜ்யம் அடிமைகள் குறித்ததான சிக்கல்கள்தான் இக்காலகட்ட எழுத்தின் மையங்களாகின.

இங்கிலாந்தின் மக்கள் தொகை 1771க்கும் 1831க்கும் இடையில் இரட்டித்தது. ஒரு மத்தியதர மக்களின் சமூகம் எழுந்துவந்தது. தன்னைச் சுற்றி நிகழும் நிகழ்வுகளை இவர்கள் கவனிக்கத் துவங் கினர். பணம் எங்கிருந்து வருகிறது? எவ்வாறு தேடப்பட்டது? எவ்வாறு செலவிடப்படுகிறது? என்ற கேள்விகளைத் தொடர்ந்து முன்வைக்கத் துவங்கினர். கிழக்கிந்திய கம்பெனியின் வருவாயில் பெரும் பகுதி மது விற்பனை வரியிலிருந்து பெறப் பட்டது என்னும் உண்மையை அறியவந்தபோது சமூகத்தில் கொந்தளிப்பு உருவானது. ஏழைகளை ஏமாற்றி பணம் பறிப்பது கடவுளுக்கு எதிரிடையானது என்று அரசு, மதுவிற்கு மாற்றாக ஒரு பானத்தை அறிமுகம் செய்வதாக வாக்களித்தது. கூடவே மதுவிலக்கு குறித்த பிரச்சாரமும் செய்வதாகக் கூறியது.6 படிப்படியாகக் குடியிலிருந்து மாற்றிவிடலாம் எனத் திட்டம் வகுத்தது. இருபதாம் நூற்றாண்டு துவக்கம் வரையில் இது நடைமுறையிலும் இருந்தது. இங்கிலாந்து மக்கள் இந்தியாவில் சமயப்பணிக்காக, மக்கள் முன்னேற்றத்திற்காகப் பொருள் கொடுக்க முன் வந்தனர். எஸ்.பி.சி.கே. போன்ற நிறுவனங்கள் களத்தில் இறங்கின. ஜெர்மானியர்களை இவர்கள் பொருளாதார அடிப்படையில் ஆதரித்தனர். ஆனால், ஐரோப்பாவில் இருந்த கிறிஸ்தவ சபை பிரிவினருக்கிடையிலான மோதலின் விதை இங்கும் தூவப்பட்டது.

எஸ்.பி.சி.கே. சென்னையில் தன் பணிக்களத்தைத் துவக்கிய போது, அது தரங்கம்பாடி ஜெர்மானியர்களையே சார்ந்திருந் தது. ஜெர்மானியர்கள் சென்னையில் கால்வைத்தவுடன் இங்கும் பள்ளிகள் திறக்கப்பட்டன. புதிதாக எழுத்தறிவு பெற்றவர்கள் எண்ணிக்கை பல மடங்காக அதிகரித்தது. இவர்கள் புரிதலையும் கணக்கெடுத்துக் கொண்டு புதிய மொழி நடைக்கான தேடல் துவங்கியது. பாப்ரிஷியஸ் வேத நூலை மொழிபெயர்க்கத் துவங் கினார். மொழிநடை உயர்சாதியினரின் எழுத்து வடிவிலான தமிழிற்கும் தாழ்ந்த சாதியினரின் பேச்சுத் தமிழிற்கும் இடையில் அமைய வேண்டும் என்னும் நிலைப்பாட்டினை மேற்கொண்டார்.

இங்கிலாந்தில் பாராளுமன்றம் படிப்படியாக அதிகாரம் பெற்றது. கிழக்கிந்தியக் கம்பெனியின் உரிமை புதுப்பிக்கப்பட பாராளுமன்றத்திற்கு வந்தது. 1813இல் கிழக்கிந்தியக் கம்பெனி யின் இந்தியாவில் வணிகம் செய்யும் முழு உரிமை ஒழிக்கப் பட்டது. கம்பெனியை நாடாளுமன்றம் கட்டுப்படுத்தியது. 1813 சட்டத்தை அது எப்போது வேண்டுமென்றாலும் மாற்றி அமைக்கும்படியான உரிமையை அது தன்னிடம் தக்கவைத்துக் கொண்டது. நாடாளுமன்றம் ஒரு கண்காணிப்புக் குழுவையும் ஏற்படுத்தியது.

1813ஆம் ஆண்டு சட்டம் மறைமுகமாக ஓர் ஆபத்தையும் இங்குக் கொண்டுவந்தது. கல்கத்தாவில் ஒரு பேராயரையும், மதராஸ் மற்றும் பம்பாய்க்கு ஆர்ச் டீக்கன்களையும் நியமித்தது. கம்பெனி பேராயருக்கு 5000 பவுண்டையும், ஆர்ச் டீக்கன்களுக்கு 2000 பவுண்டையும் சம்பளமாகத் தரவேண்டும். கம்பெனியின் வருவாய் என்பது அது இங்கிருந்து பெறப்படுவதே. சுரண்டப் படுவது என்றும் கூறலாம். இங்கிலாந்து நடுத்தர மக்கள் தங்கள் குற்ற உணர்வால் வழங்கிய பொருள் அல்ல. இவர்களை நியமிக்கும் ‘ஆர்ச் பிஷப் ஆப் கான்டர் பரி’, அரசியின் பிரதிநிதி. எனவே பேராயரும், ஆர்ச் டீக்கன்களும் இங்கிலாந்து அரசின் பிரதிநிதிகள். இச்சட்டம் கம்பெனியின் சுயநலப் போக்கிலிருந்து சமயப் பணியாளர்களைப் பாதுகாத்தது என வாதிக்கப்பட்டா லும், உண்மையான சமூக மாற்றத்திற்காகப் போராடிய ஜெர்மானியர்களுக்கு எதிரிடையானது. விரைவிலேயே அது நிகழவும் துவங்கியது.

தரங்கம்பாடி சமயப்பணியாளர்கள் அனைவரையும் தேவதூதர்களாகக் கொள்ள வேண்டுமென்பதில்லை. சுவார்ட்ஸ் போன்றவர்களும் அவர்களிடையே இருந்தனர். சுவார்ட்ஸ் அதிகாரத் தரகராகவே செயல்பட்டார். மாதவையர் இவரைக் குறித்து எதிரிடையான மதிப்பீடுகளையே முன்வைத்துள்ளார்.7 தரங்கம்பாடி டேனியர்கள் தாழ்ந்த சாதியினருக்குக் கல்வியைத் தருவதன் மூலமாகவே அவர்களுக்குச் சமூக விடுதலையைத் தரமுடியும் எனக் கருதியது ஏற்கத்தக்கதே. அதற்கான நீண்டகால திட்டங்களையும் வகுத்தனர். தொடர்ந்து அதைச் செயல்படுத்தவும் முனைந்தனர். தமிழ்நாட்டின் சில பகுதி களிலாவது அதை நிகழ்த்தியும் காட்டினர். ஆனால், இங்குள்ள சாதி அமைப்பை அனுசரிக்கவும் செய்தனர். வணிகக் கம்பெனிகள் முன்வைத்த நெருக்குதல் இதற்குக் காரணமாகலாம். சமூகத்தில் உயர்படியிலிருந்த பார்ப்பன‌ர்களையும் வெள்ளாளர்களையும் கொண்டுதான் சுரண்டலை நிகழ்த்த முடியும் எனக் கம்பெனிகள் நம்பிக்கைக் கொண்டிருந்தன. அவர்கள் அதிருப்தி அடையாத வாறு பார்த்தும் கொண்டன.

1739இல் முதல் இந்தியப் பாதிரியாரான ‘ஆரோன்’ மரண மடைந்தபோது, அப்பதவியில் தாழ்ந்த சாதிகளில் ஒன்றைச் சார்ந்த ராஜநாயக்கன் நியமிக்கப்பட்டிருக்க வேண்டும். ஆனால், அவர் ‘நற்கருணை’ சமயச் சடங்கை நிகழ்த்தினால், அவர் கையிலிருந்து ‘அப்பமும் திராட்சை ரசமும்’ உயர்சாதி கிறிஸ்தவர்கள் பெறமாட்டார்கள். தீட்டு குறுக்கிட்டுவிடும். அயோத்திதாசர் இத்தீட்டைத் தொடர்ந்து கேள்விக்குள்ளாக்கி யுள்ளார். தரங்கம்பாடியினர் அவர்களை அனுப்பியதாய் சங்கத்திற்கு எழுதினர். ‘‘இராசநாயக்கன் பாதிரியாராக சகல யோக்கியதைகளையும் பெற்றிருந்தாலும், நாங்கள் அவர்களை நியமிக்கவில்லை. இங்குள்ள சமுதாய நியதிகள் அப்படி. மனச் சங்கடம் அளிக்கும் விஷயம்தான்’’8 இங்குள்ள சாதி அமைப்பை அனுசரிக்கும் மனநிலையைத்தான் இது உணர்த்துகிறது. ‘‘இறைவன் தமது கருவியாகப் பயன்படுத்த என்னைத் தேர்ந் தெடுத்தது பேராச்சிரியம். நான் அதற்குத் தகுதியுடையவன் அல்லன். இந்த எளியவன் மூலம் நீர் கிரியை நடத்த சித்தங் கொண்டால், அதை செய்ய நீரே வல்லமை தாரும்’’9 ராஜ நாயக்கன் தாய் சங்கத்திற்கு எழுதிய இக்கடித வரிகள் காலம்காலமாகத் தாழ்ந்த சாதியினர் தங்களை அடிமைப்படுத்த இடங்கொடுத்த அவர்கள் மனநிலையின் வெளிப்பாடே. ஒருவகையில் ஜெர்மானி யர் எதிர்கொண்ட தோல்விதான். ஆனால், போராட்டத்தைத் தொடர்ந்து சக்தியோடு எதிர்கொள்ள புதிய ஜெர்மானியர் தொடர்ந்து வந்து கொண்டிருந்தனர்.

2

1814இல் சார்லஸ் தியாப்பிலஸ் ஈவால்ட் இரேனியஸ் இப்போராட்டத்தை முன்னெடுத்துச் செல்ல தமிழ் மண்ணை வந்தடைந்தார். 1726லேயே தரங்கம்பாடி சமயப்பணியாளர்கள் சென்னைக்கு இடம்மாறிவிட்டிருந்தனர். ஆனால், தரங்கம் பாடியே தலைமைப் பணிக்களமாக இருந்தது. சென்னையை வந்தடைந்த சூல்சு (சூல்சு எதன் நிமித்தம் சென்னைக்கு வந்தார் என்பதைக் குறித்த தெளிவான அறிவில்லை - சமயப் பணியாளர் களுக்கிடையிலான பூசல் காரணமாகச் சுட்டப்படுகிறது.) ‘‘பள்ளி தொடங்குவதாக அறிவித்தவுடனேயே பெற்றோர்கள் பேரார்வத்துடன் வந்து விசாரிக்கத் துவங்கிவிட்டனர்.’’10 நவீன கல்வியை வரவேற்ற இப்பெற்றோர்கள் தாழ்ந்த சாதியினராக இருக்க வேண்டுமென்பதில்லை. உயர் சாதியினரே புதிய முறை கல்வியைப் பெற ஆர்வம் காட்டினார்கள் என நம்ப உறுதியான ஆதாரங்கள் உள்ளன.

18ஆம் நூற்றாண்டின் மத்தியில் சென்னை கொந்தளித்தது. கிழக்கிந்தியக் கம்பெனியின் தலைமை இடமாக அது அன்றிருந் தது. 1746இல் பிரஞ்சுப் படை சென்னையைக் கைப்பற்றியது. பிரஞ்சு கம்பெனிப்படை, ஆலயத்தை வெடிமருந்து கிடங்காக மாற்றிக்கொண்டது. எந்த வணிகக் கம்பெனியும் சமய நோக்கம் கொண்டிருக்கவில்லை. பாப்ரிஷயஸ் ஓடி ஒளிந்துகொண்டார். டச்சுக்காரர்களின் பழவேற்காட்டிற்குத் தப்பி ஓடினார் என்ற தகவலும் உள்ளது. தரங்கம்பாடி யினர் தோற்றுவித்த பள்ளிகளும் அழிந்தன. 1748இல் ஐரோப்பாவில் போர் ஓய்ந்தது. கிழக்கிந்தியக் கம்பெனி மீண்டும் சென்னையைத் தனதாக்கிக் கொண்டது. போரில் பிரஞ்சுக்காரர்களை ஆதரித்த கத்தோலிக் கர்களைத் துரத்திவிட்டு அந்த இடத்தை எஸ்.பி.ஸி.கே.விற்குத் தந்தது. போரின் பின்விளைவான பஞ்சம் மக்களை வாட்டியது. பாப்ரிஷியஸ் இப்போது பஞ்சத்தை எதிர்த்துப் போராடிக் கொண்டிருந்தார். 1754இல் கர்நாடகப் போரும், 1758இல் பிரஞ்சு படையெடுப்பும் தரங்கம்பாடியினரைப் பெரிதும் பாதித்தன. இப்போது பணிக்களம் எஸ்.பி.ஸி.கே. என்னும் இங்கிலாந்து தொண்டு அல்லது சமய நிறுவனத்தைச் சார்ந்தது. சமயப் பணியாளர்கள் மட்டுமே தரங்கம்பாடி ஜெர்மானியர் பாப்ரிஷியஸின் இறுதிகாலம் சோகமயமானது.

1801, 1808 ஆகிய வருடங்களில் கிழக்கிந்திய கம்பெனிப்படை தரங்கம்பாடியை ஆக்கிரமித்துக்கொண்டது. 1825இல் அது எஸ்.பி.ஸி.கே வசமானது. படிப்படியாக இங்கிலாந்தின் அதிகாரம் புதிதாக உருவான சபைகளைச் சுற்றிவளைத்தது. டென்மார்க் களத்திலிருந்து மறைந்தது. தரங்கம்பாடி பணிக் களத்தை ஜெர்மனி வைபசிக் மிஷன் ஆதரித்தது. பெயரளவிற்குச் சிலகாலம் தொடர்ந்தது.

இரேனியஸ் ஜெர்மானியர் அல்ல என்ற கருத்தும் உண்டு. பிரஸ்யாவைச் சார்ந்தவர். பிரஸ்யா பின்னால் ஜெர்மனியில் இணைந்தது. ஹைதராபாத் நிஜாம் நாட்டில் பிறந்தவரை இன்று இந்தியர் என்பதில் தவறில்லைதானே. 1790இல் பிறந்த இரேனியஸ் 1811இல் 15 மாதங்கள் பெர்லின் நகரில் இறையியல் பயின்றார்.’’ “இராணுவத்தில் பணிபுரிந்த தந்தையை இழந்து விதவைத் தாயாரால் இறைபக்தியில் வளர்க்கப்பட்டவர் என்னும் குறிப்பே உள்ளது. கால்டுவெல்லைப் போல் இரேனி யஸ் தன்வரலாற்றை எழுதாததால் அவரது இளமையைக் குறித்து விரிவாக அறிதற்கில்லை. இரேனியஸ் நாட்குறிப்பு எழுதும் பழக்கம் கொண்டவர். இந்த நாட்குறிப்புகளின் அடிப்படையில் அவரது வாழ்க்கை நிகழ்வுகள் அவருடைய மகனால் தொகுக்கவும் பட்டது.11

1813ஆம் ஆண்டு இங்கிலாந்து பாராளுமன்ற சட்டம் சமயப்பணியாற்ற இங்கிலாந்து நாட்டவர்களை இந்தியாவில் அனுமதித்தது. ஆனால் சமயப்பணியாளர்கள் இல்லை. இங்கிலாந்து சமய நிறுவனங்கள் ஜெர்மானியரைத்தான் நம்பிக்கொண்டிருந்தனர். பொருளுதவி தந்து அவர்களை அனுப்பி வைத்தவை இங்கிலாந்து நிறுவனங்களே. சி.எம்.எஸ். என்னும் நிறுவனம் இரேனியஸை இந்தியாவிற்கு அனுப்பியது. அவர் இங்கு என்ன செய்ய வேண்டும் என்பதைக் குறித்து சி.எம்.எஸ்.ஸ§க்கும் ஒரு திட்டம் இருந்திருக்கும். ஆனால், ஜெர்மானியர் கனவு ஒன்றாகத்தான் இருந்தது. தரங்கம்பாடியில் தமிழ் மொழியைக் கற்றபின் இரேனியஸ் சென்னையை வந்தடைந்தார். 1807இல் மற்றொரு ஜெர்மானியரான ரிங்கள் தொபே திருவிதாங்கூரை வந்தடைந்தார். அவ்வளவு சுலபமாக அவரால் திருவிதாங்கூர் மண்ணில் கால் பதிக்க முடியவில்லை. கால்பதித்த உடன் அவர் கோவிலை மட்டுமே கட்டி எழுப்ப வில்லை. கூடவே கல்வி நிலையத்தையும் எழுப்பினார். இக்கல்வி நிலையம் இன்றும் இயங்கி வருகிறது. கோவில் கட்டிய இடமெல்லாம் கல்வி நிலையங்களையும் தோற்றுவித்தார். அன்று அடக்குமுறைக்கு உள்ளாக்கப்பட்டிருந்த சாணார் இனமக்களுக்குக் கல்வியைக் கொண்டு சேர்க்க அவரால் முடிந்தது. 1813இல் அவர்கள் அடக்குமுறைக்கெதிரான தங்களுடைய தொடர் போராட்டங்களைத் துவங்கினர். இதில் வென்றனர். ரிங்கள் தொபே மற்றொரு இங்கிலாந்து நிறுவனமான எல்.எம்.எஸ். நிறுவன உதவியோடு அவர்களின் பணியாளராக வந்தவர்தான். அவரும் தரங்கம்பாடியில் பயிற்சி பெற்றவரே. ஆக ஜெர்மானியர்களின் திட்டம் ஒன்றாகவே இருந்துள்ளது.

இரேனியஸ் சென்னையில் எதிர்கொண்ட சிக்கல் வேறு விதமானது. ஆங்கலிக்கன் சபை கிழக்கிந்தியக் கம்பெனியுடன் ஒத்துப்போய் விடுவதையே தனது கொள்கையாகக் கொண்டி ருந்தது. கிழக்கிந்தியக் கம்பெனியோ இந்திய சமூகப் பாரம்ப ரியங்களை அனுசரித்துப் போவதே வியாபார விவேகம் எனக் கருதிச் செயல்பட்டது. சாதி ஆசாரங்களை எதிர்த்து மேல் குலத்தினரைப் பகைத்துக்கொள்வது அவர்களுக்கு உடன் பாடல்ல. இரேனியஸ் சென்னை வருவதற்கு முன்பே அவருக்கு முன்வந்த சமயப் பணியாளர்களால் கல்வி நிலையங்கள் அங்கு தோற்றுவிக்கப்பட்டிருந்தன. ஆனால், கல்வி நிலையங்களில் தாழ்ந்த சாதியினர் எவ்வாறு நடத்தப்பட்டார்கள் என்பதை அறிவதற்கான தரவுகள் இல்லை. தரங்கம்பாடிக் கல்வி நிலை யங்களைப் போல் தமிழில்தான் கற்பித்தார்களா என்பதையும் அறிதற்கில்லை. ஆனால், கல்வியை உயர் சாதியினர்தான் வரவேற்றார்கள் என்பதற்கானச் சான்றுகள் உள்ளன. 1819இல் இரேனியஸ் காஞ்சீபுரம் சென்றபோது சில பார்ப்பன‌ர்கள் கேட்டுக்கொண்டதற்கிணங்க ஆங்கில-தமிழ்ப் பள்ளியை நிறுவினார் என்னும் குறிப்பு உள்ளது. கம்பெனி நிர்வாகத்தில் பங்குபெற பார்ப்பன‌ர்கள் ஆங்கில மொழியைக் கற்க ஆர்வம் கொண்டிருந்தனர். கம்பெனி இதை ஆர்வத்துடன் வரவேற்றி ருக்கும். சி.எம்.எஸ்., கம்பெனிக்குக் கடன் பட்டிருந்தது.

இரேனியஸ் சென்னையில் கல்வி நிலையங்களைப் புதிதாக உருவாக்கத் துவங்கினார். ஐந்து வருடங்களில், இதன் காரணமாக அவர் சென்னையிலிருந்துத் துரத்தப்பட்டார். சி.எம்.எஸ். நிறுவனத்துடன் அவருக்குக் கருத்து வேற்றுமை உருவானது. லுத்தரன் சபைப் பிரிவினைச் சார்ந்த அவர் ஆங்கலிக்கன் சபை நடைமுறைகளைப் பின்பற்ற விரும்பாதது ஒருவகையில் காரணமாகலாம். இக்காரணமே பின்னால் கற்பிக்கவும் பட்டது. ஆனால், இரேனியஸ் சி.எம்.எஸ்.ஸ§க்கு அனுப்பிய விடைபெறும் கடிதம் உண்மையைச் சுட்டுகிறது. சென்னையில் தாழ்ந்த சாதியினரை ரேனியஸ் திருச்சபையில் சேர்த்ததை ஆங்கலிக்கன் சபை விரும்பாததே அதற்குக் காரணம் என அவர் சுட்டி யுள்ளார்.

தாழ்ந்த சாதியைச் சார்ந்த சிறுவர்களும் இரேனியஸ் பள்ளிகளில் சேர்ந்திருக்கக் கூடும். அப்பள்ளிகளின் பாடத் திட்டத்தைக் குறித்து அறிதற்கில்லை. தமிழும் கணக்கும் நிச்சயமாக இடம் பெற்றிருக்கும். கூடவே சமயக்கல்வியும். அது ஜெர்மானியர்களின் பாடத்திட்டம். ரிங்கள் தொபே பள்ளிகளி லும் இவை கற்பிக்கப்பட்டன. தமிழ்ப்பாடம் எழுத்து மொழியை அவர்களுக்குச் சொந்தமாக்குகிறது. கணக்கு எதையும் செய்து முடிக்க முடியும் என்னும் நம்பிக்கையை, திறனை வளர்க்கிறது.

இரேனியஸ் சென்னையின் சுற்றுப் பகுதிகளில் அலைந்து திரிந்தார். மக்களோடு உரையாடினார். கால்டுவெல்லுக்கும் இந்த அலைச்சல் இருந்தது. எழுத்து மொழி காலம்காலமாக உயர்சாதியினரை நோக்கி இருந்தது. அவர்களின் நலனை முன்னிட்டு இயங்கியது. பாரம்பரியமாக எழுத்தறிவு இல்லா தவர்கள் புதிதாக கற்க இயலாதவண்ணம் அது இறுக்கப் பட்டிருந்தது. இரேனியஸ் புதிதாக எழுத்தறிவு பெறுபவர் களுக்கான மொழியைத் தேடினார். சித்தாம்பூர், செடிப்பேடு பகுதிகளிலிருந்த சமணர்களிடம் உரையாடினார். அவர்கள் உரைநடையைப் பார்வையிடும் வாய்ப்பும் அவருக்குக் கிடைத்தது. மன்னர்கள் அல்ல, சைவ பேராசிரியர்கள்தான் சமணர்களைக் கழுவிலேற்றினர். கூடவே அவர்களிடமிருந்த தமிழ் நூல்களையும். தெ.பொ. மீனாட்சிசுந்தரம் சமணர்களிடம் உரைநடை இருந்தது என்றுதான் குறிப்பிட்டுள்ளார். தாழ்ந்த சாதியினருக்கான மொழி அவர் பேச்சு மொழியை ஒட்டியதாக அமைதல் வேண்டும் என்னும் கோட்பாடு - இந்த அனுபவங் களிலிருந்துதான் இரேனியஸிடம் தோற்றம் கொண்டிருக்க வேண்டும்.

வேதநூலைக் கருத்துவழி மொழிபெயர்ப்பாக, மொழி பெயர்க்கத் துவங்கினார். வேதநூல் இதற்குமுன் சொல்வழி மொழிபெயர்ப்பாக மொழிமாற்றம் செய்யப்பட்டிருந்தது. சொல்வழி மொழிபெயர்ப்பு தவிர்க்க இயலாதபடி மூலமொழி தொடரமைப்பினைப் பெற்றிருக்கும். ‘‘என் மகனே தள்ளாதே உன் தாயின் போதகத்தை’’ என்பது போல். My son do not reject your mothers teaching என்று ஆங்கிலச் சொற்றொடரை சொல்லுக்குச் சொல் மொழி பெயர்த்தால் இவ்வாறுதான் அமையும். ஆனால் புதிதாக எழுத்தறிவு பெற்றவர்க்கு இது புரிதல் திறனைக் குறைத்துவிடும். என் மகனே உன் தாயின் போதகத்தைத் தள்ளாதே என்பதே பேச்சு மொழிக்கு இணையாக இருக்கும்.

பேச்சுத் தமிழிலிருந்து முற்றிலுமாக அன்னியப்பட்ட வீரமாமுனிவரின் செந்தமிழை இரேனியஸ் ஏற்கவில்லை. அதேசமயம் எழுத்து மொழி மரபாகக் கொண்டுவந்த வளங்களை முற்றிலுமாகப் புறக்கணிக்கவுமில்லை. இரண்டிற் குமிடையே ஓர் இணைப்பை உருவாக்கிக் கொண்டார். ‘உளுக்காந்து’ போன்ற சொற்களைப் பயன்படுத்த அவர் தயங்கவில்லை. இச்சொல்லுக்கு நிகரான எழுத்து மொழிச்சொல் உட்கார்ந்து என்பதுவே. ஆனால், ‘உளு’ - மடங்கி என்னும் அடிப்படையில் தமிழ் வேரினைக் கொண்ட சொல் - உளுக்காந்து. மொழிபெயர்ப்பு குறித்ததான சிறு வெளியீட்டி னையும் இரேனியஸ் கொணர்ந்தார்.

தாழ்ந்த சாதியினர் ஒருபோதும் தொடர் கல்வியைப் பெறுவதில்லை. ஆரம்பநிலை கல்விக்குப் பின், குடும்பத்திற்காகப் பொருள் தேடும் முயற்சியில் ஈடுபட்டாக வேண்டும். பெற்ற எழுத்தறிவை அவர்கள் மறக்கவும் நேரிடும். இரேனியஸ் அவர்கள் தொடர்ந்து வாசிக்கும்படியாகத் துண்டறிக்கைச் சங்கத்தைத் தோற்றுவித்தார். துண்டறிக்கைகள் சமயப் பரப்புதலுக்கான உத்தி மட்டுமே எனக் கொள்வதற்கில்லை. காலரா நோயினைக் குறித்தும் துண்டறிக்கைகளை அவர் வெளிட்டார். லண்டன் துண்டறிக்கைக் கழகத்துடன் இணைத்து நிரந்தரமாகச் செயல்பட வழிவகுக்கவும் செய்தார். இரேனியஸின் தீவிர செயல்பாட்டினைப் பொறுக்காத சி.எம்.எஸ். அவரைச் சென்னையிலிருந்து தொலைதூரத்திற்குத் துரத்தியடித்தது.

இரேனியஸ் திருநெல்வேலி பணிக்களத்திற்கு அனுப்பப் பட்டார். இரேனியஸ் சென்னையை விட்டு நீங்கிய பின் மாறுதல்கள் அங்கு நிகழ்ந்திருக்க வேண்டும். கால்டுவெல் பதிவுகளின்படி அவர் சென்னைக்கு வந்தபோது இரு வழிகளில் சமயப்பணி நடந்துகொண்டிருந்தது. உயர்சாதியினர் விரும்பிய ஆங்கிலக்கல்வியைத் தருவதன் மூலம் சமயத்தை அவர்களுக்கு அறிமுகம் செய்துவிட முடியும் என்னும் நம்பிக்கையில் சமயப்பணி நிகழ்ந்துகொண்டிருந்தது. சமயப் பணியாளர்களில் பெரும்பான்மையோர் இதில் ஆர்வம் கொண்டிருந்தனர். கால்டுவெல் வெறுத்த பணி இது. ஐரோப்பியர்களின் வீட்டு வேலைக்காரர்களான பறையர் இன மக்களிடையே நிகழ்த்தப் படும் சமயப்பணி மற்றொன்று. கால்டுவெல் இதனைத் தேர்ந்து கொண்டிருந்தார். கல்வி நிலையங்களில் தாழ்ந்த சாதியினர் வரவேற்பினைப் பெற்றிருக்க மாட்டார்கள். ஆனால் அதன் வாயில்கள் அவர்களுக்கும் திறந்தே இருந்திருக்கக் கூடும். இருபதாம் நூற்றாண்டின் துவக்கத்தில் ஜெனரல் ஆல்காட் பறையர் இன மக்களுக்கான கல்வி நிலையங்களைத் தோற்று வித்துள்ளதை நினைவில்கொள்ள வேண்டும். தமிழ்நாட்டில் ஆங்கிலம் வழி உயர்ந்த தரத்திலான உயர் சாதியினருக்கான (பின்னால் வசதி படைத்தவர்களுக்கான) கல்வி சென்னையில் இக்காலத்தில் தோற்றம் கொண்டது. இது தரங்கம்பாடி ஜெர்மானியர்களின் கனவுக்கு எதிரிடையானது. அவர்கள் கல்வியை முன்னெடுத்துச்சென்றது தாழ்ந்த சாதியினரின் சமூக விடுதலைக்குத்தான். கிழக்கிந்திய கம்பெனிக்குப் பணியாளர் களை உருவாக்குவதற்காக அல்ல.

இரேனியஸ் 1820 ஜூலை 7ஆம் நாள் திருநெல்வேலியை வந்தடைந்தார். இரேனியஸ் செயல்பாடுகள் குறித்ததான விரிவான தரவுகளை அவருடைய நெல்லை வாழ்விலிருந்துதான் பெறமுடிகிறது. இரேனியஸ் வருவதற்கு முன்பாகவே சீர்திருத்தக் கிறிஸ்தவம் இங்குக் கால்தடம் பதித்திருந்தது. சுவார்ட்ஸ் பாளையங்கோட்டையில் ஒரு சிறு சபையை உருவாக்கியிருந் தார். கிளாரிந்தா12 என்னும் மராட்டிய பார்ப்பன‌ப் பெண் முயற்சியில் இச்சபை தோற்றம் கண்டது. தரங்கம்பாடி, ஜெனிக்ஸ் என்னும் பணியாளரை அனுப்பிவைத்தது. அவருக்கு உதவ சத்தியநாதன் என்னும் வெள்ளாள கிறிஸ்தவரும் அனுப்பி வைக்கப்பட்டார். உடல்நிலை காரணமாக ஜெனிக்ஸ் தரங்கம்பாடி திரும்பினர். ஆனால், நெல்லையைச் சார்ந்த சாணார் ஒருவர் தஞ்சையில் சீர்திருத்தக் கிறிஸ்தவத்தைத் தழுவியிருந்தார். சத்தியநாதனுடன் பணியாற்ற வந்த டேவிட் என்ற சாணார் கிறிஸ்தவர் முயற்சியால் அவருடைய சொந்த ஊரான சாத்தான் குளத்தையடுத்த கல்லன் குடியில் சில குடும்பங்கள் புதிய மதத்தைத் தழுவின. 1797இல் சத்தியநாதன் இவர்களைப் புதிய சமயத்தில் சேர்த்துக்கொண்டார். இதே வருடத்தில் சண்முகபுரம், விஜயராம புரம் மக்களும் புதிய மதத்தில் இணைந்துகொண்டனர். இதனால், அவர்கள் கடுமையான ஒடுக்குதலுக்கு உள்ளாக்கப்படவே, டேவிட் அடையல் கிராமத்திற்கு அருகில் ஜெனிக்ஸ் பெயரில் வாங்கப்பட்ட நிலத்தில் அவர்களைக் குடியேற்றினார். கிறிஸ்தவ சாணார்களின் முதல் ஊராக முதலூர் தோற்றம் கொண்டது.13 வரலாற்றில் ஒரு முன்னுதாரணம் இயல்பாக நிகழ்ந்தது. ஒடுக்கப் பட்டவர்கள் தங்களைப் பாதுகாத்துக்கொள்ள கண்டடைந்த வழி இது. இரேனியஸ் இதனை அடுத்த கட்டத்திற்கு வழி நடத்தினார்.

தாழ்ந்த சாதியினருக்கான மொழி குறித்த பல சோதனை களை இரேனியஸ் இங்குதான் நிகழ்த்தினார். 14 வருடங்கள் தொடர்ச்சியாகத் தமிழைத் திருப்பாற்கடல்நாதன் என்னும் ஆசிரியரிடம் கற்றார். திருப்பாற்கடல்நாதன் வைணவ வேளாளர். சைவர்களின் சாதி வெறி வைணவ வேளாளர்களிடம் இல்லாதிருந்தது. அவருக்கு ஆங்கிலம் தெரியாது. இரேனியஸ் தமிழ் மூலமாகவே தமிழைக் கற்றார்.

1821இல் ஷ்மிட் இரேனியஸோடு இணைந்து கொண்டார். திராவிட மொழிக்குடும்பம் என்னும் கருதுகோளை கால்டுவெல்லுக்கு முன்பாகவே ஷ்மிட் முன்வைத்திருந்தார். தற்போது இப்பெருமை எல்லீஸிற்குத் தரப்படுகிறது. தென் இந்திய மொழிகளில் சமகாலத்தில் வேதநூல் மொழிபெயர்ப்பு நிகழ்த்தப்பட்டது. சமயப் பணியாளர்கள் தம்முள் தொடர்பு கொண்டிருந்தனர். தென்னிந்திய மொழிகள் தம்முள் தொடர்பு கொண்டவை - சமஸ்கிருதத்திலிருந்து வேறானவை என்னும் உணர்வு பலருக்கு இருந்திருக்க வேண்டும். காகேசியன் அல்லது இமாலய மொழிகளிலிருந்து தமிழ் தோற்றம் கொண்டிருக்க வேண்டும் என்றார் ஷ்மிட். தமிழருக்கும் பௌத்தர்களுக்கும் இடையிலான தொடர்பையும் அவர் குறிப்பிட்டார். ஷ்மிட் கொண்டிருந்த மொழி அறிவு இரேனியஸிற்குப் பெரும் உதவியாக அமைந்தது. சமஸ்கிருதம் கலவாத தமிழ் மொழிநடை குறித்த இரேனியஸ் நிலைப்பாடு குறிப்பிடத்தக்கது.

துண்டறிக்கைச் சங்கமும் இடம் பெயர்ந்தது. இது திருநெல்வேலிக்கும் நாகர்கோவிலுக்கும் பொதுவாக நெல்லை யில் அமைந்தது. மொழியில் கருத்துப் பரிமாற்றம் தொடர்பான சோதனைகள் செய்ய உதவி செய்தது. புதிதாக எழுத்தறிவு பெற்றவர்கள் மொழியைக் கையாள்வதிலிருந்த தடைகளை இரேனியஸ் உடைத்தெறியத் துவங்கினார். தமிழ் முதன்முத லாகச் சந்தி பிரித்து எழுதப்பட்டது. அச்சிடவும் பட்டது. இரேனியஸ் கொண்டுவந்த மாற்றத்தைக் காலம் ஏற்றுக்கொண் டது. வாசிப்புப் பழக்கம் சிந்திக்கத் தூண்டியது. எதிர்காலம் குறித்ததான கனவுகள் பிறந்தன.

இரேனியஸ் தாழ்ந்த சாதியினருக்கான மொழி என்று மொழியைக் கீழிறக்கவும் இல்லை. மொழிபெயர்ப்பு குறித்ததான அவர் சிந்தனைகள் இதனைத் தெளிவாகவே முன்வைத்துள்ளன.

- பண்டிதர் மட்டுமே பயன்படுத்தும் சொல்லைத் தவிர்த்து எல்லோருக்கும் பொதுவான பொருத்தமான சொல்லையே மொழிபெயர்ப்பில் பயன்படுத்த வேண்டும்.

- பொருத்தமான சொல் என்பது தாழ்ந்த சாதியினருக்கும் உயர் சாதியினருக்கும் பயன்பாடுடைய சொல்.

- தாழ்ந்த சாதியார் பயன்படுத்தும் சொற்பட்டியலில் அதிக சொற்கள் இருக்காது என்பதை நினைவில் கொள்ள வேண்டும்.

- பொருத்தமான சொல் பேச்சிலும் இலக்கியத்திலும் கையாளப்பட்ட சொல்லாக இருக்கும். பொருத்தமான சொல் கிடைத்திராத நிலையில் இலக்கியங்களில் இருந்து பெறப்பட வேண்டும்.

- சிதையுண்ட சொற்களைச் சீர்படுத்திப் பயன்படுத்த வேண்டும்.

- குறிப்பிட்ட வட்டார அல்லது சாதியினரின் சொற்களைத் தவிர்க்க வேண்டும்.

- இயன்றவரை புதிய சொற்களைப் புனைதல் கூடாது.

இரேனியஸ் மொழியின் மீதான உயர்சாதியினரின் ஏகபோகத்தை மட்டுமே உடைத்தெறிகிறார். புதிதாக எழுத்தறிவு பெற்றோர் மொழிப்பயன்பாட்டில் படிப்படியாக உயர்நிலையை எட்டிவிட முடியும் என்னும் நம்பிக்கையை வெளிப்படுத்தி யுள்ளார். 1833இல் இரேனியஸ் வேதநூல் மொழிபெயர்ப்பு வெளியானது. புதிதாக எழுத்தறிவு பெற்றோரை அன்னியப் படுத்தாத வேதநூல் மொழிபெயர்ப்பாக அமைந்தது.

இரேனியஸ் வருகைக்குப்பின் பெருமளவில் சாணார்கள் சீர்திருத்தக் கிறிஸ்தவத்தைத் தழுவினர். தமிழ்ச் சமூகத்தில் சாணார்கள் விதிவிலக்கானவர்கள். இவர்கள் எப்போதும் பிற சாதியினரைச் சார்ந்திருக்கவில்லை. எனவே ஒடுக்கப்படுதலை எதிர்த்துக் காலம் காலமாகப் போராடிக்கொண்டிருந்தனர். நாயக்க, பாளையக்காரர்கள் மிகக் கடுமையான அடக்குமுறை களை இவர்கள் மீது கட்டவிழ்த்துவிட்டனர். 1823 முதல் 1825க்கு உள்ளாக மக்கள் இயக்கமாக இந்த மதமாறுதல் நிகழ்ந்தது. இவர்களைப் பாளையக்காரர்களின் ஒடுக்குதலில் இருந்து பாதுகாக்கும் பொறுப்பும் அவருக்கிருந்தது. ‘முதலூர்’ சோதனையைப் பின்பற்றித் தனிக் கிராமங்களை உருவாக்கினார். தனி நிர்வாக அமைப்பையும் நிறுவினார். கிராமங்களின் பொருளாதாரம் மிகுந்த கவனிப்பைப் பெற்றது. நிதி நிர்வாக அமைப்பும் இருந்தது. தங்கள் தேவைகளைத் தாங்களே நிறைவேற்றப் பயிற்றுவிக்கப்பட்டனர். விதவைகள் தனிக்கவனம் பெற்றனர். எல்லாவற்றிற்கும் மேலாக ஒவ்வொரு கிராமமும் தனக்கான கல்வி நிலையத்தையும் கொண்டிருந்தது.

இரேனியஸின் ஜெர்மானியக் கனவு நனவாக எதிர்ப்புகள் இங்கு இல்லை. வேளாளக் கிறிஸ்தவரான சத்தியநாதன், ரேனியஸ் வருகைக்கு முன் இங்கு சாதியை அனுமதித்திருந்தார். பாளையங்கோட்டை மாணவர் விடுதியில் வெள்ளாள மாணவர்கள் பிறரோடு சேர்ந்து உணவருந்த மறுத்தனர்.14 இவ்விடுதி சத்தியநாதனால் வெள்ளாள மாணவர்களுக்காகவே தோற்றுவிக்கப்பட்டது என்ற கருத்தும் உண்டு. பிறசாதியினர் சேர்த்துக்கொள்ளப்பட்டபோது, சிக்கல் எழுந்தது. இரேனியஸ் எடுத்த முடிவு தீவிரமானது. விடுதியையே மூடி மாணவர்களை வெளியேற்றினார். ஒரு வருடத்திற்குப் பின் பல்வேறு சாதியினைச் சார்ந்த மாணவர்களுடன் விடுதி திறக்கப்பட்டது. சீகன்பால்க் கால தரங்கம்பாடிப் பள்ளியையும் வ.வே.சு. ஐயரின் குருகுலத்தையும் இதனோடு ஒப்பிட வேண்டும். எந்த சமரசத்திற்கும் இரேனியஸ் இடம்தரவில்லை. பொதுக்கல்வி என்பதை அதன் உண்மையான பொருளில் நிலை நிறுத்தினார். 1934இல் 117 ஆசிரியர்கள் கல்வி கற்பித்தனர்.

இரேனியஸ் பள்ளிகளில் ஆங்கிலம் ஒரு மொழியாகக் கற்பிக்கப்பட்டது. ஆனால், தமிழ்வழிக் கல்வியாகவே கல்விமுறை அமைந்தது. அவர் நோக்கம் எல்லோருக்குமான பொதுக் கல்வியைத் தருவதே. ஆனால், புதிதாக எழுத்தறிவு பெறத் துவங்கிய சமூகத்தைத் தவிர்த்துவிட்டு கல்வியை முன்னெடுத்துச் செல்ல அவர் விரும்பவில்லை. கல்வியைப் பொறுத்தவரையில் உயர்சாதியினரின் பேராதரவு இருந்தது. குறைந்தவிலையில் பள்ளிகளுக்கான நிலங்கள் விட்டுத்தரப்பட்டன. ஆனால், கம்பெனியின் பணியாளர்களை உருவாக்குவதை அவர் நோக்கமாகக் கொள்ளவில்லை. சமூக விடுதலைக்கான போராளிகளை உருவாக்குவதே அவர் நோக்கம். அதற்குத் தமிழ்வழிக் கல்விதான் தேவை.

அவர் எதிர்கொண்ட மிகப்பெரும் சிக்கல் பாடப்புத்தகங் களின் பற்றாக்குறைதான். தமிழில் பாடப்புத்தகங்கள் என்ற கற்பனையே இல்லாதிருந்தது. இரேனியஸ் பாடப்புத்தகங் களுக்கும் ஆசிரியரானார். பூகோள சாஸ்திரம், சரித்திரம், தர்க்கம், தமிழ் இலக்கணம் தொடர்பான பாடப்புத்தகங்களைக் குறிப்பிட்டுச் சொல்ல வேண்டும். ‘‘தமிழருக்கு அறிவுண்டாகும் படி இந்நூல் கிறிஸ்தவர்களுக்கு மட்டுமன்று, பொதுக்கல்விக் குரிய அனைத்து சமய மக்களுக்கும் ஐரோப்பிய நாடுகளில் பிறந்த புத்தறிவை ஊட்டவேண்டும் என்ற எண்ணத்தில் பிறந்ததாகும்.’’14 ஐரோப்பியப் புத்தறிவு உலகமெங்கும் மக்கள் எழுச்சியைக் கருத்தில் கொண்டது. இரேனியஸ் நோக்கம் தெளிவானது. இரேனியஸின் சரித்திரம், பூகோளம் ஐரோப்பியர் பார்வையில் அமைந்தது என்னும் விமர்சனமும் உண்டு. இரேனியஸ் நோக்கமே தாழ்ந்த சாதியினரை ஒடுக்கும் சமய, அரசியல் வரலாற்றை மொழியில் அசைத்துவிடுவதே. இந்த பூமி விரிவானது. பாளையக்காரர்களைவிட அதிகாரம் கொண்ட மன்னர்களும் உண்டு. போராடு! உடைத்தெறி! என்பதே ஜெர்மானியக் கனவு. அதற்கிசைவான கல்வி இவ்வாறுதான் இருக்கவியலும். திருநெல்வேலியிலும், திருவிதாங்கூரிலும் சாணார் இன மக்கள் அடைந்த விடுதலை இந்த ஜெர்மானியர்கள் அடைந்த வெற்றியே.

இரேனியஸ் வாழ்வின் இறுதி சோகமானது. ஆங்கலிக்கன் சமயச் சடங்கை நிறைவேற்ற மறுக்கிறார் எனக் குற்றம் சாட்டி சி.எம்.எஸ். அவரை வெளியேற்றியது. நண்பர்களுடன் இணைந்து ஆர்க்காடு ஜெர்மன் மிஷனைத் தோற்றுவித்தார். மீண்டும் நெல்லைக்குத் திரும்பினார். ஆங்கலிக்கன் சமயப்பணி யாளர்கள் எதிர்த்தனர். 1813க்குப் பின் படிப்படியாக இங்கிலாந் திலிருந்து சமயப்பணியாளர் குவிந்திருந்தனர். சீர்திருத்தக் கிறிஸ்தவம் ஆங்கிலேயர் அதிகாரத்தின் ஒரு பாகமாக மாறத் துவங்கியிருந்தது. 1838 ஜூன் 5ஆம் நாள் இரேனியஸ் மரண மடைந்தார். கோவில் கல்லறைத் தோட்டத்தில் அவர் உடலை அடக்க இடம் மறுக்கப்பட்டது. பொதுநிலத்தில் அது அன்று அடக்கப்பட்டது.

ஜெர்மானியர்கள் பாதை வகுத்துவிட்டுச் சென்றனர். திருவிதாங்கூரில் மெட், மால்ட் நெல்லையில் கால்டுவெல் என சில ஆங்கிலேயப் பணியாளர்கள் இப்பாதையில் முன்னேறினர். போப் போன்றவர்கள் சைவர்களின் நண்பர்களானார்கள் என்றாலும், தாழ்ந்த சாதியினரின் சமூக விடுதலை தமிழகத்தின் தென்கோடியில் நிகழ்ந்தது. ஜெர்மானியரின் கனவு இங்காவது நனவாகியது.

அடிக்குறிப்புகள்:

   1. ஞான அலாய்சியஸ் (தொ.ஆ.), அயோத்திதாசர் சிந்தனைகள் (1999) ப.3

2. Erich Beyruether, Bartholomaes ziegenbalg (1955), Ch IV

.       சரோஜினி பாக்கியமுத்து, விவிலியமும் தமிழும், (1999) ப.69

4.      மு.கூ.நூ. ப.52

Nicholan Rœ (Ed), An Oxford guide Romanticism, (2007) Simon Bain bridge, The Historical Context, (2007) p.15

6.      மதுவிலக்கு குறித்ததான அரசின் விளம்பரங்களைத் தமிழர்நேசன் இதழ்களில் காணமுடிகிறது.

7.      மாதவையரின் கிளாரிந்தா நாவலில் இவர் ஒரு பாத்திரம்.

8.      சரோஜனி பாக்கியமுத்து, மு.கூ.நூ. ப.64

9.      மேலது. ப.64

10.     மேலது ப.71

Memoir of the Rev. C.T.E. Rhenius by his son London, James & Rinbet & Co.

கிளாரிந்தா நாவலை மாதவையர் எழுதியுள்ளார்

Caldwell, A History of Tinnevelly P.247

14.     சிவசு, முன்னுரை இரேனியஸ் தமிழியல் முன்னோடி (2000)

Pin It