tilagar leader'சுதந்திரம் எனது பிறப்புரிமை' என்று முழங்கியதாக சங்க பரிவாரத்தினரால் வல்லிய முறையில் கொண்டாடப்படும் பாலகங்காதர திலகர் "சுதந்திரமடைந்த இந்தியாவை ஆளும் உரிமையும் கல்வியும் அரசியலும் பார்ப்பனர்களுக்கே உரியது" என்று கூறியதை வசதியாக சங்க பரிவாரத்தினர் மறைத்து விடுகின்றார்கள்.

இத்தகைய RSS கும்பலால் மிகப்பெரும் தேசபக்தனாக சித்தரிக்கப்படும் பாலகங்காதர திலகர் உண்மையில் ஒரு சித்பவன் பார்ப்பன சாதி / சனாதன வெறியனாகவே திகழ்ந்தார்.

பிரிட்டிசார் மராட்டிய பார்ப்பனர்களிடமிருந்து கைப்பற்றிய ஆட்சியைத் திரும்ப பார்ப்பனர்களிடமே ஒப்படைக்க வேண்டுமென்பதே இவரின் முக்கியக் கோரிக்கையாக இருந்தது .ஜோதிபா பூலேவின் 'சத்யசோதக் சமாஜுக்கு' எதிராக கலவரத்தைத் தூண்டுவதற்காகவே விநாயகச் சதுர்த்தி விழாவை ஆரம்பித்தார், மேலும் 1920 இல் அத்தானி பொதுக்கூட்டத்தில் பேசும்போது "பார்ப்பனர் அல்லாத மக்கள் கல்வி கற்கவோ அல்லது அரசியலில் ஈடுபடவோ கூடாது " என பொதுக்கூட்ட மேடையில் வெளிப்படையாக பேசியதால் பம்பாய் சங்கலி புனே கூட்டங்களில் மக்களால் கல்லடிபட்டவர்.

1881 ஆம் ஆண்டில் பத்திரிகையாளராக தனது தொழிலைத் தொடங்கியவர்! தனது சனாதன கருத்துக்களைத் தனது 'கேசரி' இதழில் பிரசிப்பதற்காகவே நடத்தினார் அந்த வகையில் 1897ஆம் ஆண்டு புனே நகரை பிளேக் நோய் தாக்கியதில் ஆயிரக்கணக்கில் மக்கள் மாண்டனர். இந்த நோய்த் தாக்கி இறந்தவர்களை அடக்கம் கூட செய்ய பயந்து பிணங்களை அப்படியே விட்டுவிட்டு ஊரைவிட்டு மக்கள் வெளியேறினர்.

நோயை கட்டுப்படுத்த அரசு V.C ராண்ட் தலைமையில் பிளேக் கமிசனை அமைத்தது. இவர்கள் வீடு வீடாக சென்று பிளேக் நோய் தாக்கியவர்களுக்குச் சிகிச்சை அளித்ததோடு ,வீட்டிலுள்ள சாமான்களுக்கு மருந்து போட்டு சுத்தம் செய்தனர். அனாதையாக கைவிடப்பட்ட பிணங்களை அப்புறப்படுத்தி எரித்ததோடு பிளேக் நோய்க்கு காரணமான எலிகளையும் கொன்றனர். இவர்களின் முயற்சியால் நோய் ஒரளவு கட்டுப்படுத்தப்பட்ட போது திலகர் தன் இதழில் "மாமிசம் சாப்பிடும் மிலேசளர்கள் அக்கரகாரத்துக்குள் நுழைந்ததோடு பார்ப்பனர்களை தீண்டி விட்டார்கள். பிள்ளையாரின் வாகனமான எலிகளைக் கொல்லுகிறார்கள். இது இந்து மதத்தை இழிவுபடுத்துவதாகும்" என கண்டித்து எழுதினார். பிளேக் கமிசனர் W.C ராண்ட்க்கு எதிராக ஊர்வலம் போனார். ஒருகட்டத்தில் இவரால் தூண்டப்பட்ட சாபேகர் சகோதர்கள் ஜூன் 22 .1897 அன்று W.C ராண்ட் மற்றும் அவரது உதவியாளர் Lt அயஸ்டரை சுட்டுக் கொன்றனர். திலகருக்கு 18 மாதம் சிறை தண்டனை கிடைத்தது.

திலகருக்கு சிறையில் சுவற்றுக்குச் சுண்ணாம்பு அடிக்கிற வேலை கொடுக்கப்பட்டது. மாக்ஸ் முல்லரின் மூலம் ஆங்கிலேய ராணிக்கு மனு கொடுத்து 6 மாதத்துக்கு முன்னாடி விடுதலையானார்.

விவசாயிகளுக்கு எதிரான நிலையில் திலகர்

தக்காண விவசாயிகள் நிவாரணச் சட்டத்தை (மகாராஷ்டிராவில் வறுமையில் இருக்கும் சிறு விவசாயிகள் கடனைத் திருப்பிச் செலுத்த முடியாமல் போனால், அவர்கள் வைத்திருக்கும் சிறிதளவு நிலத்தை வட்டி தொழில் செய்யும் உள்ளூர் நபர்கள் பறிமுதல் செய்வதையும், அவர்களைக் கைது செய்வதையும் அந்தச் சட்டம் தடை செய்த சட்டம்) திலகர் எதிர்த்தார்.

கல்வி முன்னேற்றத்திற்கு எதிரான திலகர்

1881 ஆம் ஆண்டில் அரசு 200 பேர் வாழும் அனைத்து கிராமங்களிலும் ஒரு பள்ளிக் கூடத்தைத் தொடங்க வேண்டும் என்று 'பூனா சர்வஜனிக் சபா' கோரிக்கை விடுத்தபோது அதை திலகர் கடுமையாக எதிர்த்தார். தன்னுடைய கல்வி செயல் திட்டம் முழுக்க தொடர்ச்சியாகச் சாதிய ஆதிக்க முறைகளை ஆதரிக்கும் வகையிலேயே இருக்கும் வகையில் பார்த்துக் கொண்டவர் திலகர்.

பார்ப்பணரல்லாதவர்களின் கல்வியினை குறித்து அவரின் பார்வை என்பது 'சிறு விவசாயிகளின் பிள்ளைகளுக்குப் படிக்க, எழுத, வரலாறு, புவியியல் மற்றும் கணிதம் கற்றுத் தருவதால் நடைமுறை வாழ்க்கையில் எந்தப் பயனும் கிடைக்கப் போவதில்லை' என்பதையே வாழ்வின் வாதமாகவே கொண்டிருந்தார்.

மேலும் கல்வி என்பது 'அவர்களுக்கு நல்லதைவிட அதிக கெடுதலையே செய்யும்' என்றை கருத்தையும் கொண்டவராக செயல்பட்டார். வர்ணாசிரமக் கொள்கையினை செயல்படுத்தும் வகையில் 'பார்ப்பனர் அல்லாதவர்களுக்கு தச்சு, பொற்கொல்லர், மேஸ்திரி, தையல் வேலை, வாழ்க்கையில் அவர்களின் நிலைக்கு ஏற்ற மிகச் சாதாரணமான தொழில்களை' கற்றுத் தர வேண்டும் என்றும் அதுதான் 'கல்வியில் அறிவார்ந்த முறையாக இருக்கும்' என்று திலகர் பேசியிருக்கிறார், இவ்வாறாக தனது வாழ்நாள் முழுவது சனாதன சித்தாந்தங்களின் முக்கிய அம்சங்களை வெளிப்படுத்தும் விதமாகவே செயல்பட்டவர், 'சிறு விவசாயிகளின் பிள்ளைகளுக்குக் கல்வி அளிப்பது பணத்தை வீணடிக்கும் செயல்' என்று அவர் கூறினார்.

அனைவருக்கும் கல்வி என்று ரானடே தொடர்ந்து வலியுறுத்துவதை திலகர் எதிர்த்தார். 'அரசுப் பணம் என்பது வரி செலுத்துபவர்களின் பணம். அந்தப் பணத்தை எப்படி செலவு செய்ய வேண்டும் என்பதை முடிவு செய்யும் உரிமை வரி செலுத்துபவர்களுக்கு தான் உள்ளது' என்று கூறினார் (The Mahratta, 15 May 1881, Our system of Education-A Defect and a Cure). எம்.ஜி. ரானடே மற்றும் பிற சீர்திருத்தவாதிகள் 1884ல் பெண்களுக்கான முதலாவது உயர்நிலைப் பள்ளியைத் தொடங்கியபோது.

The Mahratta இதழில் 1881-1897 காலக்கட்டத்தில் திலகர் அதன் உரிமையாளர் மற்றும் ஆசிரியராக இருந்தார். என்.சி. கேல்கருடன் இணைந்து அவருடைய மரணம் வரையில் இணை ஆசிரியராக செயல்பட்டார்.

நிலவுடைமை உள்ள பார்ப்பனர்களுக்கு மட்டுமே கல்வி

பம்பாய் பல்கலைக் கழகத்தில் பார்ப்பனர் அல்லாதோர் அதிக எண்ணிக்கையில் சேர உதவும் வகையில், நுழைவுத் தேர்வுக்கான பாடத் திட்டங்களை எளிமைப்படுத்த வேண்டும் என்று ரானடே மேற்கொண்ட முயற்சிகளையும் திலகர் எதிர்த்தார் (The Mahratta, 7 August 1881, Our University I). ஆங்கிலக் கல்வியை திலகர் எதிர்க்கவில்லை. 'ஆங்கிலக் கல்வியை நாட்டில் அறிமுகம் செய்வதற்கு முன்பு நாம் அறியாமையில் இருந்த கூட்டமாக இருந்தோம்' என்று அவர் நம்பினார்.

நில உடமை உள்ள பார்ப்பனர்களுக்கு மட்டுமே கல்வி அளிக்கப்பட வேண்டும், ஏழை பார்ப்பனர்களுக்கு கூட அளிக்கக் கூடாது என்று அவர் விரும்பினார் (The Mahratta, 21 August 1881, Our University III). அவருடைய விமர்சனங்கள் தீவிரமான பார்ப்பனர் அல்லாதோர் எதிர்ப்பை சம்பாதித்தது. எனவே 1891-ல் தேசத்தின் கட்டமைப்புக்கு சாதி அமைப்பே அடிக்கல் என்று அவர் வாதிடத் தொடங்கினார். 'நவீன கல்வி கற்ற பார்ப்பனர் மற்றும் நவீன கல்வி கற்ற பார்ப்பனர் அல்லாதோர் இடையில் வேறுபாடு கண்டுபிடிப்பது கடினமாக உள்ளது. இந்த சமத்துவமின்மையை உணரத் தொடங்கிவிட்டோம். கிளர்ச்சி தொடங்கிவிட்டது' என்று அவர் கூறினார் (The Mahratta, 22 March 1891, What shall we do next? Editorial).

'சாதி மற்றும் சாதிக்கு மட்டுமே சக்தி உள்ளது' என்ற தலைப்பில் எழுதிய அவருடைய தலையங்கத்தில் (10 மே 1891) 'சாதியத்தின் தாக்கம் இல்லாமல் போயிருந்தால் இந்து தேசம் என்பது நீண்ட காலத்துக்கு முன்பே காணாமல் போயிருக்கும்; ரானடே போன்ற சீர்திருத்தவாதிகள் 'சாதியை அழிக்கப் பார்க்கிறார்கள். தேசத்தின் உயிர்த்துடிப்பை அழிக்கப் பார்க்கிறார்கள்' என்று அவர் கூறியுள்ளார்.

மத அடையாளங்கள் இல்லாத கல்வி முறை 'மத அடிப்படைகளை மறுக்கும்' கருத்தை விதைப்பதாகக் கூறி அதை திலகர் நிராகரித்தார். பள்ளிக்கூடங்களில் கற்பிக்கப்படும் மத அடிப்படையிலான கல்வி 'மறுக்கக் கூடாத தூய்மை மற்றும் எளிமையைக் கொண்டதாக இருக்க வேண்டும். கடவுள் ஒருவர் இருக்கிறார் என்று பள்ளிக்கூட மாணவர்களிடம் சொல்ல வேண்டும். அதற்கு எந்த மாணவராவது கண்ணால் காணும் ஆதாரம் கேட்டால், அவரை பிரம்பால் அடித்து மௌனமாக்கிவிட வேண்டும்' என்று அவர் குறிப்பிட்டிருக்கிறார் (The Mahratta, 3 July 1904, Religion Education, Editorial).

புதிய கல்விக்கொள்கை என்பது நவீனகால குருகுலக்கல்வி பயிற்றுவிப்பான் அதன் விளைவு எப்படிப்பட்டது என்பதை எதிர்காலத்தினை நோக்கி அறிந்துக் கொள்ளவேண்டிய அவசியமில்லை கடந்தகால வரலாறுகளே சிறப்பாக போதிக்கும்.

- நவாஸ்

Pin It