அரசுப் பள்ளி ஆசிரியர்களே கூடத் தங்கள் குழந்தைகளைத் தனியார் கல்வி நிறுவனங்களில் சேர்க்கும் கால கட்டத்தில் தனியார் மயக் கல்வி எப்படி ஒரு மாணவனைச் சீரழிக்கிறது என்பதைப் பற்றிய ஓர் அலசல்

ரிசல்ட் ரிசல்ட்

உனக்குப் படிப்பு வருகிறதோ, வரவில்லையோ, அதைப் பற்றிய கவலை எனக்கு இல்லை. உன்னைப் படிக்க வைப்பதாகச் சொல்லி உன் பெற்றோரிடம் பணம் வாங்கியிருக்கிறேன். அதற்கு நேர்மையாக நான் இருக்க வேண்டும். நீ படிக்காத பட்சத்தில், 'என் மகனை/மகளை நீங்கள் படிக்க வைப்பதாகச் சொன்னீர்களே! இப்போது ஏன் படிக்க வைக்க முடியவில்லை?" என்று உன் பெற்றோர் கேள்வி கேட்பார்கள். அது எனக்குத் தேவையில்லாத தலைவலி. எனவே ஒழுங்காகப் படித்து விடு. இல்லையென்றால் உன்னை எப்படிப் படிக்க வைப்பது என்று எனக்குத் தெரியும். இது தான் இப்போது இருக்கும் தனியார் பள்ளிகள், கல்லூரிகளின் நிலை. ஒரு குழந்தைக்குக் கணக்குப் பாடத்தில் அலாதி ஆர்வம் இருக்கும், ஆனால் மொழிப்பாடங்களில் ஆர்வம் இருக்காது. சில மாணவர்களுக்கு மொழிப்பாடங்கள் விருப்பமானதாக இருக்கும். ஆனால் அவர்கள் மொழிப்பாடங்களைப் படித்துக் கொண்டிருந்தால், இஞ்சினியரிங் கட் ஆப் இவ்வளவு, கணக்கில் 200 /200, இயற்பியலில் 200/200 இத்தனை பேர் என்றெல்லாம் விளம்பரப்படுத்த முடியாது. இப்படி விளம்பரப்படுத்தாமல் கூட்டம் சேராது, பணம் பார்க்க முடியாது.

private school students

முன்பு, சில வருடங்களுக்கு முன்பு, இப்படிப்பட்ட கெடுபிடிகள் - மேல்நிலை (+1, +2) மாணவர்களுக்கு மட்டும் இருந்தது. தனியார் நர்சரி பள்ளிகள் பெருகியதன் விளைவு, இப்போது 'ப்ரீ கே ஜி சேர்க்கும் போதே, சிலபஸ் என்ன என்று பெற்றோரின் கையில் கொடுத்து விடுகிறார்கள். ப்ரீ கே ஜி முடிக்கும் போது உங்கள் குழந்தை இந்த எழுத்துகளைப் படித்திருக்கும், இத்தனை பாடல்கள் (அதற்குப் பெயர் ரைம்ஸ்) பாடும் என்று உறுதி கொடுக்கிறார்கள். இந்த உறுதியை நிறைவேற்றவில்லை என்றால் நீங்கள் தாராளமாகக் கேள்வி கேட்கலாம் என்று பெற்றோருக்குத் தனிச் சலுகைகள் வேறு.

'ரிசல்ட் ரிசல்ட்' என்று பள்ளி நிர்வாகங்கள் ஓடும் இத்தகைய சூழலால், ஒரு மாணவனுடைய உண்மையான விருப்பம் என்ன, அவனுக்கு எந்தப் பாடங்களில் ஆர்வம் இருக்கிறது, எதிர்காலத்தில் அவன் தன்னை எப்படிப் பார்க்க விரும்புகிறான் - என்பன போன்ற அடிப்படையான உரிமைகள் கூட மறுக்கப்பட்டு, 'ரிசல்ட்' கடிவாளம் கட்டிய குதிரையாக மாணவர்கள் மாற்றப்படுகிறார்கள். இப்படிக் குதிரையாக மாற விரும்பாத அல்லது மாற முடியாத மாணவர்களுக்கு இருக்கும் ஒரே வாய்ப்பு - பள்ளியை விட்டே ஓடி விடுவது! பள்ளியை விட்டு ஓட முடியாத அளவில் வீட்டிலும் பெற்றோர் தொல்லை இருந்தால், உலகத்தை விட்டே ஓடுவதைத் தவிர வேறு வழியே இல்லை.

தற்கொலைக்குத் தள்ளும் மனநிலை:

'ரிசல்ட்' - ரிசல்ட் தவிர வேறெதுவும் கண்ணுக்குத் தெரியக் கூடாது என்று தனியார் பள்ளி நிர்வாகத்தாலும் பெற்றோராலும் ஊட்டி வளர்க்கப்படும் பிள்ளைகள், தப்பித் தவறி எதிர்பார்த்த ரிசல்ட் வரவில்லை என்றால் சோர்ந்து விடுகிறார்கள். 'ரிசல்ட் தவிர வேறெதையும் பார்த்ததில்லை என்பதால் அதைத் தாண்டியும் உலகம் இருக்கிறது, உறவுகள் இருக்கிறார்கள், வாழ்க்கை முடிந்துவிடவில்லை' என்பதை நம்பும் பக்குவம் மாணவர்களுக்கு வருவதில்லை. இந்தப் பின்புலம் தான், 'பரீட்சை மார்க்கே போச்சு, இனி என்ன இருக்கு' என்னும் எதிர் மனநிலையை உருவாக்கித் தற்கொலை வரை அவர்களைத் தள்ளுகிறது. பெரும்பாலான அரசு கல்வி நிலையங்களில் இப்படிப்பட்ட நெருக்கடிகள் இல்லாததால், மாணவர்கள் எந்த வித நெருக்கடிகளுக்கும் ஆளாகாமல்(சமூக நெருக்கடி இருந்தாலும், பள்ளி நிர்வாக நெருக்கடி இல்லாமலாவது) படிப்பைத் தொடர முடிகிறது.

சுமார் மாணவர்கள் வெளியே

தனியார் பள்ளிகள் பல, ஒன்பதாம் வகுப்பில் ஒரு வடிகட்டல், பதினொன்றாம் வகுப்பில் ஒரு வடிகட்டல், என்று சில உத்திகளை வைத்திருக்கிறார்கள். பிறகு சுமாராகப் படிக்கும் மாணவர்களைப் பத்தாம் வகுப்புப் படிக்க அனுமதித்து "100 சதவீதத் தேர்ச்சி" என்னும் அவர்களுடைய பொன் முட்டையிடும் வாத்தை அறுத்துக் கொள்வார்களா என்ன? படிப்புச் சரிவர வராத மாணவர்கள் பாசாகவில்லை என்றால் பரவாயில்லை. 50, 60 மதிப்பெண் வாங்கும் மாணவர்களைக் கூட, பத்தாம் வகுப்பு, பன்னிரண்டாம் வகுப்பு அனுப்ப மாட்டோம் என்று அடம் பிடிக்கும் தனியார் பள்ளிகள் நம்மூரில் அதிகம். 'எங்களிடம் படித்த எல்லா மாணவர்களுமே 500க்கு 400க்கு மேல், 1200க்கு 1000க்கு மேல்' என்று பள்ளி வாசலில் பெரிய பிளக்ஸ் போர்டு வைக்க வேண்டாமா? அதற்கு இடையூறாக இருக்கும் மாணவர்களால் பள்ளிக்கு என்ன லாபம்? 'ஆ! என்ன இப்படிச் சொல்கிறீர்கள்? படிப்பு வராத மாணவனுக்குப் படிப்பு வர வைப்பதும் சுமாராகப் படிக்கும் மாணவனை சூப்பர் மாணவனாக ஆக்குவதும் தானே - ஆசிரியரின் வேலை - என்று நினைக்கிறீர்களா? அட போங்க பாஸ் - நீங்கள் சொல்வது போல் நடந்து கொண்டிருந்தால், எப்போது சிலபசை முடிப்பது, எப்படி ரிவிசன் தேர்வுகள் நடத்துவது? ஒரு வருடப் பாடத்தை இரண்டு வருடங்கள் நடத்தினாலே 100 சதவீதத் தேர்ச்சி என்பதற்குப் போராட வேண்டியிருக்கிறது. இதில், சுமார் மாணவனை சூப்பராக்கு என்பதெல்லாம் நடக்கிற காரியமா?

9, 11ஆம் வகுப்பே கிடையாது

ஒன்றாம் வகுப்பில் மாணவர்களுக்கு, இந்தப் பாடங்களை நடத்த வேண்டும். இரண்டாம் வகுப்பில் இதை நடத்த வேண்டும். என்று அரசாங்கம் பெரிய பெரிய அறிஞர்கள், கல்வியாளர்கள், குழந்தைகள் உளவியலாளர்கள் ஆகியோரை எல்லாம் கொண்டு பாடத்திட்டத்தை வகுக்கிறது. இப்படி வகுத்து, ஒன்பதாம் வகுப்பில் இந்தப் பாடங்களைப் படித்தால், பத்தாம் வகுப்பில் அடுத்த நிலையைப் படிக்கலாம். 11ஆம் வகுப்பு, 12 ஆம் வகுப்பு - இரண்டும் சேர்ந்த படிப்பிற்குப் பெயர் தான் ஹையர் செகண்டரி எனப்படும் மேல்நிலைப் படிப்பு. அதனால் தான் அதை +1, +2 என்று தனியாகப் பிரித்து வைத்திருக்கிறோம். ஆனால் இதுவெல்லாம் 'ரிசல்ட் ஓரியண்டடு' பள்ளிகளுக்கு முக்கியமல்ல. தனியார் பள்ளிகள் பல, +1 பாடத்தை ஓராண்டு முழுமையும் நடத்துவதே இல்லை.  ஒப்புக்கு +1 பாடங்களை நடத்தி விட்டு, காலாண்டு முடித்த உடனேயே, +2 பாடங்களைத் தொடங்கி விடுகிறார்கள்.

பில்டிங் ஸ்டிராங், பேஸ்மென்ட் வீக்

அதாவது, ஒரு வருடம் படிக்க வேண்டிய +2 பாடத்திற்கு ஒன்றே முக்கால் வருடம், அந்த +2விற்கு அடிப்படையாக, ஓராண்டு படிக்க வேண்டிய +1க்கு மூன்றே மாதங்கள்! +2 மார்க்கைத் தானே எல்லோரும் கேட்பார்கள் என்று இப்படி 'மாணவர்களை வைத்துச் செய்து' விடுகிறார்கள். இப்படிப் படித்து மார்க் வாங்கும் மாணவர்களுக்கு +1 அடிப்படை இல்லை என்பதால், சான்றிதழ் படி, அவர்கள் திறமையான மாணவர்களாக இருப்பார்கள், ஆனால் உண்மையில் இயற்பியலோ, வேதியியலோ, கணக்கோ எந்தப் பாடத்தின் அடிப்படையிலும் வல்லவர்களாக இருக்க மாட்டார்கள். இன்னும் தெளிவாகச் சொல்ல வேண்டுமென்றால் 'ஆபரேசன் சக்சஸ், நோயாளி சாவு' கதை தான்! மொத்தத்தில் மாணவர்கள் மதிப்பெண்ணுக்குப் பின்னால் விரட்டப்படுகிறார்களே தவிர, அறிவுக்குப் பின்னால் அல்ல!

தனியார் கல்வி தரம் என்றால் கோச்சிங் சென்டர்கள் ஏன்?

இப்படி வெறுமனே மதிப்பெண்ணை மட்டும் குறியாக வைப்பதால் தான், தனியார் பள்ளிகளில் படிக்கும் மாணவர்கள், பொறியியல், மருத்துவம் போன்ற படிப்புகளுக்கு நடத்தப்படும் நுழைவுத்தேர்வுகளுக்குத் தனியே கோச்சிங் சென்டர்களைத் தேடும் அவலம் தொடர்கிறது. அரசுப் பள்ளிகளை விட நாங்கள் தரமான கல்வியைத் தருகிறோம் என்று சொல்லும் எந்தத் தனியார் பள்ளியும் 'எங்கள் பள்ளியில் தனிப்பயிற்சி (டியூசன்) கிடையாது, நாங்கள் கொடுக்கும் தரமான கல்வியே நுழைவுத் தேர்வுகளுக்குப் போதுமானது, வேறு கோச்சிங் சென்டர்களுக்கு நீங்கள் அலையத் தேவை இருக்காது' என்னும் உறுதிமொழிகளைத் தருவதும் இல்லை, இப்படி உறுதி சொல்லும் நிலையில் அவற்றின் தரமும் இல்லை.

தடம் மாறும் மாணவர்கள்

கல்வியின் உண்மையான நோக்கம் ஒரு குழந்தையை முழுமையடைந்த மனிதனாக மாற்றுவது என்பதில் இருந்து மடை மாற்றி, 'நன்றாகப் படி, நன்றாகச் சம்பாதி' - 'சம்பாதிக்கத் தான் கல்வி', 'பணம் இருந்தால் தான் (படிப்பு உட்பட) எதையும் வாங்க முடியும்' என்னும் கருத்துகளைத் தனியார் மயக் கல்வி வாழ்க்கைக் கல்வியாகவே மாணவர்களுக்குச் சொல்லிக் கொடுத்து விடுகிறது. 'நிறையப் பணம் இருந்தால் இந்தப் பள்ளிக்கூடம், பணம் ஓரளவு இருந்தால் வேறு பள்ளி' என்னும் உரையாடல்களை வீட்டில் கேட்டு வளரும் ஒரு மாணவனுக்கு வீடே, 'பணம் தான் பிரதானம்' என்பதை மனத்தில் படிய வைத்து விடுகிறது. பணம் தான் எதையும் சாதிக்கும், பணம் இல்லாவிட்டால் எதுவும் இல்லை என்று மாணவப் பருவத்தில் பதியும் கருத்துத் தான், டீன் ஏஜ் பருவத்தில் பணம் இல்லாத போது வழிப்பறியில் ஈடுபடுவது, லேப்டாப் திருடுவது என்பன போன்ற திருட்டுகளுக்கு அடித்தளமாக அமைந்து விடுகிறது.

தடுமாறும் மாணவர் மனநலம்

இப்படிப்பட்ட மனநிலை கொண்ட மாணவர்களைத் தனியார் பள்ளிகளில் ஆசிரியர்கள் படிக்க வற்புறுத்தும் போது 'என் அப்பா அம்மா காசு கொடுத்துத் தானே படிக்க வைக்கிறார்கள்! பணம் கொடுக்கும் அவர்களுக்கே இல்லாத அக்கறை உனக்கு ஏன்? என்னை ஏன் துன்பப்படுத்துகிறாய்?' என்னும் கேள்வியாகி நின்று 'இந்தி ஆசிரியையைக் குத்திக் கொன்ற பள்ளி மாணவன்', 'பள்ளியில் வெடிகுண்டுப் புரளியைக் கிளப்பிய 4ஆம் வகுப்பு மாணவன்' என்று செய்தியாக வரும் அளவு வளர்ந்து விடுகிறது.

படிப்பு, பணம், படிப்பு என்று மன விரக்தியில் வளரும் - பருவமடைந்த மாணவர்கள், ஒரு சில ஆண்டுகளே மூத்த ஆசிரியர்களிடம் காதல் வயப்படுவதும் கல்வியை வணிகமாக்கியதன் விளைவு தான்! பெற்றோர், ஆசிரியர்கள், சமூகம் என எல்லோருமே உளவியல் நெருக்கடியை மாணவர்களுக்குக் கொடுத்து வரும் சூழலில், அன்பாகப் பேசும் ஆசிரியர்கள் - மாணவப் பறவைகளின் வேடந்தாங்கல் ஆவது இயல்பு! அந்த இயல்பில் வழி தவறும் சில மாணவர்கள் அந்த ஆசிரியர்களையே காதலித்து மாய்ந்து போவதும் இந்த அடிப்படையில் தான்! இதனால் தான், '+2 மாணவர் ஆசிரியையுடன் ஓட்டம், 'மாணவி மர்மம் - பேராசிரியருக்கு வலை' என்பன போன்ற சங்கடமான செய்திகளை நாம் கடந்து போக வேண்டியிருக்கிறது.

நன்றாக ஆராய்ந்து பார்த்தால், இப்படிப்பட்ட நிகழ்வுகள் நடக்கும் இடங்கள் பெரும்பாலும் தனியார் கல்வி நிறுவனங்களாகத் தான் இருக்கும். கூண்டுக்குள் அடைக்க முடியாத பறவைகள் அல்லவா மாணவர்கள்? அவர்களை அடைக்க, அடக்க நினைக்கும் போது நடக்கும் விபரீதங்கள் தாம் இவை!

விற்கப்படும் திறமைகள்

சரி, இவை எல்லாவற்றையும் தாண்டித் தனியார் கல்வி நிறுவனங்கள் தரமான கல்வியைக் கொடுக்கிறதா என்றால் ஏமாற்றமே மிஞ்சுகிறது. மருத்துவக் கல்லூரியின் நோக்கம் - ஒரு நல்ல மருத்துவரை உருவாக்குவது, சட்டக் கல்லூரியின் நோக்கம் - நல்ல வழக்கறிஞரை உருவாக்குவது, அதே போல் பொறியியல் கல்லூரியின் நோக்கம் - நல்ல பொறியாளரை உருவாக்குவது! ஆனால் இங்கு அப்படி நடப்பதே இல்லை. "எங்கள் கல்லூரியில் படித்து இத்தனை பேர் திறமையான பொறியாளர்களாக உருவாகியிருக்கிறார்கள், வெற்றுக் களிமண்ணாக வந்த அவர்களை நாங்கள் சிற்பங்கள் ஆக்கியிருக்கிறோம், இனி அவர்கள் தங்கள் சொந்தக் கால்களில் நிற்பார்கள்' என்று எந்தப் பொறியியல் கல்லூரியும் விளம்பரம் கொடுப்பதில்லை. மாறாக, 'எங்கள் கல்லூரியில் இத்தனை பேருக்கு இந்த கம்பெனிகளில் வேலை கிடைத்திருக்கிறது' என்று கம்பெனிகளுக்கு ஆள் பிடித்துக் கொடுக்கும் ஏஜென்சி வேலைகளைச் செய்வதிலும் அதைப் பெருமையாக விளம்பரப்படுத்திக் கொள்வதிலும் தான் நம்மூர்க் கல்லூரிகள் மும்முரமாக இருக்கின்றன.

ஒரு தனியார் கம்பெனிக்கு வேலைக்குத் தயார் படுத்துவது என்பது, சி, சி++, ஜாவா, ஆட்டோகாட், என்று பயிற்சி கொடுக்கும் பயிற்சி நிறுவனங்களின் வேலை. அதைச் செய்து கொண்டு அதைப் பெருமை பீற்றிக் கொள்ளும் கல்லூரிகளை என்னவென்று சொல்வது?

கல்வியைத் தனியார் மயமாக்கி, படிப்பே பணத்திற்குத் தான் என்று நம்மிடம் திணிக்கப்பட்ட படிமத்தின் விளைவு தான் - எலக்டிரிக்கல் இஞ்சினியரிங் முடித்தவருக்கு மின் விசிறி பற்றிய அடிப்படை அறிவு கூட இல்லாமல் இருப்பதும், ஆட்டோமொபைல் இஞ்சினியரிங் படித்தவருக்கு பைக் மெக்கானிக் வேலை தெரியாமல் இருப்பதும்! கல்வி அறிவு வளர்ச்சிக்கு, அறிவு வாழ்வை வளப்படுத்த - என்பது மாறி படிப்பே பணத்திற்கு என்று மாறிவிட்டதன் உச்சக்கட்ட விளைவுகள் தாம் இவை எல்லாம்!

இத்தனைக்குப் பிறகும் கல்வி தனியாரிடமே இருக்கட்டும் என்று நாம் நினைப்போமேயானால் தலைமுறைகளைச் சீரழிக்கும் முடிவு நம்மிடம் இருந்து தொடங்குகிறது என்பது தான் அர்த்தம்.  அரசே கொடுக்கும் பொதுக்கல்வியே சீரான கல்வியை, சிறப்பான தலைமுறைகளை உருவாக்கும். அதில் இருக்கும் குறைகளையே காரணம் காட்டிக் கல்வியைத் தனியார் மயம் ஆக்குவது என்பது, தாயை விரட்டி விட்டு, சித்திக்குச் சோறு போடுவதற்கு நிகரானது.

- முத்துக்குட்டி

Pin It