உங்கள் வலக்கையின் பெருவிரலையும், நடுவிரலையும் பயன்படுத்தி, உங்கள் இடப்புறங்கையின் மீது வலிவுடன் ஒரு சுண்டு சுண்டுங்கள்; உங்கள் வீட்டுச் சமையலறையின் அடுப்பின் மீது பால் கொதித்துக் கொண்டிருக்கும் போது, பாலைச் சுமந்து கொண்டிருக்கும் பாத்திரத்தின் மீது ஐந்து, ஆறு விநாடிகள் உங்கள் கரங்களை வையுங்கள்; வாய் மூடியுள்ள நிலையில் உங்கள் மூக்குத் துவாரங்கள் இரண்டையும் ஐம்பது, அறுபது விநாடிகள் வரை உங்கள் கைகளால் இறுக்கமாக மூடிப் பிடியுங்கள்.

இப்போது உங்களால் உணர முடியும் - வலி, சூடு, உயிர் மூச்சு ஆகியவற்றின் தன்மைகளை. இந்த வலியை, வெப்பத்தைப் பலநூறு மடங்கு அளவில் தாங்க முடியாமல், இலங்கையில் மானிடப் பிறவி உயிரிழக்கிறது.

c_mahendran_304அகத்திலும் புறத்திலும், குறிஞ்சியும் நெய்தலுமாக இயற்கைச் செல்வத்தை இலங்கை வாரி வழங்குவதில் இன்றியமையாத பங்காற்றியவர்கள் இன்று மணித் துளியில் மடிந்துபோவோரும், வாழாமல் வாழ்ந்து கொண்டிருப்போரும், இறக்காமல் இறந்துபோவோரு மான தமிழ்மக்கள். இத்தகு இலங்கைக்குச் சுற்றுப் பயணம் மேற்கொண்ட தோழர் சி.மகேந்திரன் தமது உணர்ச்சிகளை வெகுவாக அடக்கி, தமது பயண அனுபவங்களைக் கொண்டு, ‘தீக்குள் விரலை வைத்தேன்’ இலக்கியத்தை இயற்றியுள்ளார். ஏற்கெனவே 2002-இல் ராஜராஜன் பதிப்பகத்தில் வெளியிடப்பட்ட இந்நூல், தேவை கருதி 2011-இல் நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் நிறுவனத்தால் மறுபதிப்பாக வெளிவருகிறது.

“இலங்கைத் தீவில் தமிழ் மக்களின் வாழ்விட மெங்கும் மலர்ந்து சிரித்து, வரவேற்று நிற்பவை பூவரசன் பூக்கள்தாம். இன்று இந்த மரங்களில் இலைகள்கூட இல்லை. எல்லாமும் சருகாகி விழுந்து விட்டன. எதிரிகள் மொட்டை மரம் என்று அழைத்துப் பார்க்கிறார்கள். மனம் வேதனையடையத்தான் செய்கிறது. ஆனாலும் மரம் வசந்த காலத்திற்காகக் காத்திருக்கிறது என்பதை நாம் அறிவோம்” என்று நூலாசிரியர் சி.மகேந்திரன் இன்றைய வேதனையைச் சுட்டிக்காட்டி நாளைய நன்னிலைக்கு நம்பிக்கை தெரிவித்தே நூலைத் துவங்குகிறார்.

இலங்கைத் தமிழரின் இன்னல் இன்று முளைத்தது அல்ல என்று கூறும் நூலாசிரியர் “இனப்பிரச்சினைதான் இலங்கையின் பூகம்பம், புயல் பிரளயம் எல்லாமும்... இந்தச் சிங்களர் - தமிழர் மோதல் மிகுந்த தொன்மை கொண்டவை” என்கிறார்.

பெரும்பாலான தமிழர்கள் இலங்கையின், வடக்கு, கிழக்கு மாகாணங்களைப் பூர்வீகமாகக் கொண்டவர்கள். யாழ்ப்பாணக் குடா நாட்டில் தொடர்ந்து தமிழ் மன்னர்கள் ஆட்சி நடத்தியுள்ளனர். கி.பி.13-ஆம் நூற்றாண்டிலிருந்து 1621-ஆம் ஆண்டு ஈழமன்னன் சங்கிலியைப் போர்த்து கீசியர்கள் தோற்கடிக்கும் வரை இங்குத் தமிழ் மன்னர்கள் ஆட்சி நடைபெற்றிருக்கிறது” என்று தகவல் கூறுகிறார் நூலாசிரியர்.

உலகின் எல்லா நாடுகளையும் மோப்பம் பிடித்து, இயற்கை வளம், மனித வளம் நிறைந்த நாடுகளாகப் பார்த்துத் தேர்ந்தெடுத்து அந்நாடுகளின் இயற்கை வளத்தை, அந்த நாட்டு மனித வளத்தாலேயே பயன் பாட்டுச் செல்வமாக்கி, பொருளாதாரத்தினைச் சுருட்டுவதில் கைதேர்ந்த கொள்ளை யர்களான இங்கிலாந்து வெள்ளையர்கள், அதே பாணியில் இலங்கையையும் அபகரித்துள்ளனர். அங்குள்ள மலைப் பகுதிகளில் காடுகளை அழித்து, தேயிலைத் தோட்டங் களாக்குவதற்கு இடம் கிடைத்தாகிவிட்டது; அவற்றைச் செயல்வடிவில் நிறைவேற்ற மனிதர்கள் உருவில் உள்ள அடிமைகள் வேண்டுமே, அதற்குத் தான் தமிழ்நாட்டில் இருந்து வறுமையைச் செல்வமாகக் கொண்ட ஒடுக்கப் பட்டவர்கள் ஏராளமான எண்ணிக்கையில் இலங்கைக்கு எடுத்துச் (கொண்டு) செல்லப்பட்டார்கள். அந்தப் பூர்வ குடிகள் தாம் இன்று இலங்கையை உருவாக்கிவிட்டு, உருவிழந்து நிற்கின்ற அபலைகள்.

ஆங்கிலேயர்கள் இந்தியாவில் தனித்தனியே அரசாண்டு கொண்டிருந்த குறுநில மன்னர் முறையை மாற்றி, ஒற்றையாட்சி முறையைக் கொணர்ந்து எவ்வாறு சுருட்டினார்களோ அதே பாணியைத் தான் இலங்கையிலும் பின்பற்றினார்கள்.

“இலங்கை ஒற்றையாட்சியின் தொடக்க காலம் முதலே தமிழ் மக்கள் உரிமைகளை இழக்கத் தொடங்கி விட்டார்கள் என்பதை அனைவரும் ஏற்றுக்கொள் கிறார்கள்” என்று குறிப்பிடுகிறார், நூலாசிரியர்.

இதற்கு ஆதாரம் அங்கு நடைபெற்ற குடியேற்றத் திட்டம் தான். 1931-ஆம் ஆண்டிலேயே இந்தத் திட்டம் நடைமுறைக்கு வரத் தொடங்கிவிட்டது. இதனால், நாட்டின் எந்தப் பகுதியிலும் குடியேறும் உரிமை சிங்களர்களுக்குக் கிடைத்தது. அரசு இயந்திரத்தின் வன்முறை இங்கே பயன்படுத்தப் பட்டு, சிங்களமயமாகிறது. திருகோணமலை மாவட்டத்தில் கந்தளாய், கிழக்கு மாகாணத்தில் மட்டக்களப்பிற்கு அருகில் கல்லோயா, மன்னார், முல்லைத்தீவு ஆகிய இடங்களில் சிங்களக் குடியேற்றத் திட்டங்கள் விரிவுபடுத்தப்பட்டன.

இந்தச் சூழலில்தான் குறிப்பிட்ட நிலப்பகுதிகளில் பெரும்பான்மை எண்ணிக்கையில் இருந்த தமிழர்களைச் சிறுபான்மையாக்கப்படுகின்றனர். அப்போதுதான் தமிழர்களுக்கும், தாங்கள் வசித்த மண்ணின்மீது பற்று ஏற்படுகிறது.

காலப்போக்கில் இலங்கையின் இந்த முரட்டு அரசியலில் பௌத்த சமயநெறியும், பெரும்பான்மையின வெறியும் இணைகின்றன. புத்த பிக்குகள் நேரடியாக அரசியலில் ஈடுபட, 1972ஆம் ஆண்டு இலங்கை ‘பௌத்த - சிங்கள நாடாக’ அறிவிக்கப் பட்டுள்ளது.

“ஜனநாயகம் என்னும் மிக உயர்ந்த அரசியல் வடிவத்தை, சிறுபான்மையினரின் உரிமையை நசுக்கும் கருவியாகப் பயன்படுத்தும்போது மோசமான விளைவு களில் நாடு சிக்கிக் கொள்கிறது. இவ்வாறாகத்தான் இலங் கையின் ஒற்றையாட்சியின் இறுக்கத்தால், இனப்பிரச்சினை வெடித்து வெளிவரத் தொடங்கியது” என்கிறார் நூலாசிரியர்.

அடுத்து வரும் பக்கங்களில் கொழும்பில் கூடிய இலங்கை முற்போக்கு எழுத்தாளர் சங்கத்தின் இலக்கியப் பேரரங்கில் கலந்து கொண்டது பற்றியும், அங்கே தாம் சந்தித்த எழுத்தாளர்களிடம் உரையாடிய விவரங்களைப் பற்றியும் வாசகர்களுடன் பகிர்ந்து கொள்கிறார் ஆசிரியர்.

சமுதாயத்தில் இலக்கியத்தின் பங்களிப்பு பற்றி விளக்க வரும் ஆசிரியர் மகேந்திரன் ‘பல்கலைக்கழக ஆய்வு களெல்லாம் ‘அகாதெமி’ என்னும் மலைமுகடுகளில் போய் நின்றுவிட்டன’ என்று சுட்டிக்காட்டி ‘தங்கள் சொந்த மண்ணையும் மக்களையும் கூடக் காணாமல், காண இயலாத நிலைக்குச் சென்று விடுகின்றன’ என்று பல்கலைக் கழகங்களை இடித்துரைக்கிறார். மேலும் இலங் கையில் இனப்பகைமை கொழுத்துவிட்டு எரிந்த காலங் களில் மக்கள் எழுத்தாளர் முன்னணி பலத்த தாக்குதலுக்கு ஆட்பட்டு, அமைப்பு கரைந்து போகத் தொடங்கியது என்று கூறும் இவர் இலங்கையில் நடந்த இலக்கியப் போராட்டத்தில் விளக்கியுரைத்து, ஒடுக்கப்பட்டோர் எழுத்துகளின் முன்னோடி களான தோழர்கள் டானியல், டொமினிக் ஜீவா, இலங்கையில் ‘மறுமலர்ச்சி’ என்னும் இலக்கிய இயக்கத்தைத் தோற்றுவித்த வரதர் என்னும் வரதராஜன் ஆகியோரின் செம்மாந்த இலக்கியச் சேவைகளையும் சுட்டிக்காட்டுகிறார்.

 தமிழ்நாட்டிலுள்ள இந்து அறநிலையத் துறையைப் போல, இலங்கையில் ‘இந்து சமய கலாசாரத் திணைக் களம்’ என்ற பெயரில் அரசு இயக்ககம் ஒன்று செயல்பட்டு வருகிறது. அதன் அதிகாரிகளே முற்போக்கு இலக்கிய இயக்கத்துடன் இணைந்து நடத்தும் இலக்கிய விழாக் களைப் பற்றி வியந்து பேசும் ஆசிரியர் தமிழின அதிகாரி களுக்கு இனமோதல்களால் நேரும் ஆபத்துகளைப் பற்றிக் கூறுகிறார். இவரைச் சந்தித்த இளம் தமிழ் அதிகாரி ஒருவர் சந்திப்பு முடிந்து விடைபெற்றுச் செல்லும் போது ‘இது நம்முடைய கடைசிச் சந்திப்பாக இருக்கலாம்’ எனக் கூறிச் சென்றதை விவரிக்கும் இடத்தே வாசகர்களும் அதில் நெகிழ்ந்து மனம் தவிக்க நேரிடுகிறது.

யாழ்ப்பாணச் சூழலைப் பேசுகிற வேளையில் வேலையில்லாத் திட்டம் செயற்கையாக உருவாக்கப் படுவதை விளக்குகிறார் நூலாசிரியர். முதலாளித்துவம் லாப வேட்டைக்காகப் பயன்படுத்தும் வேலை யில்லாத் திண்டாட்டம் என்னும் ஆயுதத்தில் இலங்கைத் தமிழர்கள் சிக்கித் திணருவதை எடுத்துரைக்கிறார். ஹிட்லர் நடத்திய நிறவெறிக் கொடுமையைப் பற்றிக் கூறும் போது, அவரால் சீரழிக்கப்பட்ட ஜிப்சிகளின் பூர்வீகம் இந்தியா தான் என்றும் ஜெர்மன், ஆஸ்திரேலியா, ஸ்பெயின் போன்ற நாடுகளில் வசிக்கும் அவர்கள் படும் பாதிப்பைப் புலம் பெயர்ந்து சென்றுள்ள ஒவ்வொரு இலங்கைத் தமிழரும் தெளிவாகவே உணர்கின்றனர் என்று சுட்டிக்காட்டி, பொதுவாக புலப்பெயர்வில் அகதிகளின் வாழ்க்கையை விரித்துரைக்கிறார். ஐரோப்பிய நாட்டில் வாழும் இலங்கைத் தமிழன் தம் சாதிப் பெண்ணைத் திருமணம் செய்துகொள்ள வேண்டும் என்ற ஆசையை நிறைவேற்றிக் கொள்ள இயலாத சிக்கலை எடுத்துக்காட்டுகிறார். ஐரோப்பிய நாடுகளில் குடியுரிமை பெற்றுப் பணியிலிருப் பவர்கள், ஐரோப்பியர்கள் செய்ய மறுக்கும் அருவருப்பான பணிகளைச் செய்ய வேண்டிய கட்டாயத்தில் சிக்கிக் கொள்கிறார்கள் என்று கூறுகிறார். இந்தியாவில், தமிழ் நாட்டில் பிறந்து, வறுமையால் துரத்தப்பட்டு, இலங்கையில் இனக் கொடுமையால் விரட்டப்பட்டு, ஐரோப்பாவிலும் தமிழர்களுக்குத் துன்பம் தொடர்கிறது என்பதை இதன் மூலம் அறிய முடிகிறது.

யாழ்ப்பாணம் உட்பட இலங்கையின் வெவ்வேறு பகுதிகளில் இஸ்லாமியர்கள் வலுக்கட்டாயமாக அவரவர் வசிப்பிடங்களிலிருந்து வெளியேற்றப்பட்டதை விவரிக்கும் நூலாசிரியர் இலங்கையில் உள்ள முஸ்லிம்களில் தமிழைத் தாய்மொழியாகக் கொண்டவர்கள் 93 சதவிகிதத்தினர் என்று கூறுவதுடன், ‘பத்தாம் நூற்றாண்டிலேயே இஸ்லாமியர்களின் பண்பாட்டு வாழ்க்கை இலங்கையில் அமைந்திருந்தது’ என்பதற்கு இலங்கையில் கிடைக்கப் பெற்றுள்ள பத்தாம் நூற்றாண்டைச் சேர்ந்த ‘குபிக்’ கல்வெட்டினைச் சான்றாகக் கூறுகிறார். இலங்கையில் அவர்கள் கண்டி மன்னனின் அரண்மனையில் முக்கிய பொறுப்புகள் வகித்தது, யுனானி மருத்துவமுறையை அறிமுகப்படுத்தியது, அவர்கள் செய்த வணிகம், இலக்கிய நெறி உள்ளிட்ட பல சுவையான விவரங்களை இந்த இயலில் ஆசிரியர் பதிவு செய்துள்ளார்.

அடுத்து, கண்டியைக் கூர்ந்து நோக்கி அறிந்த விவரங் களைப் பற்றிப் பேசும் போது, ‘மனித பலவீனங்களைக் காசாக்கும் தந்திரத்தில் தமிழகம் இழந்தது எவ்வளவோ’ என்று தமிழக ஊடகத்தின் வக்கிரங்களைச் சாடி, இலங் கையில் அச்சுத் தொழிலின் பிரமாண்டமான இயந்திரங் களும் நவீன வளர்ச்சியும் இல்லாத நிலையிலும், அவர்கள் கையாளும் இலக்கியத் தரத்தைப் பார்வையிட்டுப் பெருமிதம் கொள்கிறார். அதே இயலில், இலங்கையில் பூர்வகுடி மக்களுக்கு எதிராகப் போர்த்துகீசியர்களின் இராணுவம் செய்த கொடுமையையும் வரலாற்றுப் பின்னணியுடன் விவரிக்கிறார். “தான் பெற்ற பிள்ளை களைத் தாய்மார்களின் மூலமே உரலில் போட்டு இடித்துக் கொல்லும் ஆணையைப் பிறப்பித்து, நேரில் பார்த்து ரசிக்கும் வக்கிர உணர்வு போர்த்துகீசிய இராணுவத்திடம் இருந்திருக்கிறது” என்று குறிப்பிட்ட ஆசிரியர் இத்தகைய கொடுமைகளைச் செய்ய ஏகாதிபத்தியக் கல்நெஞ்சம் கொண்ட வியாரிபாரிகளால்தான் முடியும் என்று, கொடுமைகளுக்கான மையக் கருத்தை வாசகர்களுக்குச் சுட்டிக்காட்டுகிறார்.

தோழர் மகேந்திரன் இலங்கையில் ‘ஹட்டன்’ பகுதியில் கண்டறிந்த விவரங்களை இந்நூலில் படிக் கையில் அங்குள்ள தேயிலைத் தோட்டத் தொழிலாளர்கள் தாம் நம் நினைவுக்கு வருகிறார்கள். தேயிலைத் தோட்டங் களில் ‘வன்ன’ வண்ண ஆடையலங்காரத்துடன் திரைப் பட நடிக, நடிகையர் துள்ளிக் குதித்து, வளைந்து நெளிந்து, அப்படியே நளினமாக தேயிலைச் செடியிலிருந்து, ஒரு தேயிலைக் கொழுந்தை ‘ஸ்டைலிஷ்’ - ஆகக் கிள்ளி, கையை வீசி அதைப் பறக்க விட்டு வரும் காட்சிகளை நாம் கண்டு மகிழ்கிறோமே அந்த மகிழ்வுக்கும், காலையில் எழுந்ததும், புத்துணர்ச்சி பெறப் போகிறோம் என்ற நம்பிக்கையில், கற்பனையான புத்துணர்ச்சியை முன் கூட்டியே துய்த்து, வாயில் வைத்துத் தேநீரை உறிஞ்சு கிறோமே அந்த மகிழுறிஞ்சலுக்கும், தங்கள் இரத்தத்தை வியர்வையாகக் கொட்டியவர்கள் - தேயிலைத் தோட்ட அடிமைத் தொழிலாளர்கள்தாம். இலங்கை உட்பட வெவ்வேறு நாடுகளில் பணியில் துவளும் தேயிலைத் தோட்டப் பணியாளர்களின் நிலையில், எந்த முதலாளியும் சமமான கொள்ளையர்களாகவே இருக்கின்றனர். இங்கே இலங்கையை மட்டும் பார்ப்போம்.

இலங்கையில் வசிக்கிற பூர்வகுடித் தேயிலைத் தோட்டத் தொழிலாளர்கள் ஒடுக்கப்பட்டவர்கள். அவர்களுக்குத் தாங்கள் தமிழகத்தின் எந்த மாவட்டத்தை, எந்த ஊரைச் சேர்ந்தவர்கள் என்ற விவரம் கூடத் தெரியாது. ஏனெனில் அவர்கள் அங்கே சென்று குடியேறிப் பல தலை முறைகளைக் கடந்துவிட்டனர். இந்நிலையில், கண்டியை மையமாகக் கொண்ட பிரதேசம் சிங்கள இனவெறி அரசியலுக்கு மிக முக்கியமாகக் கருதப்படுவதாகவும் இங்கு இந்தியத் தமிழர்கள் அரசியல் சக்தியாக வலுப்பெறுவது தங்களுக்கு ஆபத்து என்று இலங்கை அரசு கருதுவதாகவும் ஆசிரியர் குறிப்பிடுகிறார். இவர் நிறைவான மார்க்சியவாதி என்பதால், மார்க்சிய பாணியில் இந்தத் தமிழர்களின் நிலையை, பூர்வீகம், பண்பாடு, இலக்கிய நிலை, முதலாளி - தொழிலாளி வர்க்கநிலை, உலக நாடுகளுடன் ஒப்பீடு போன்ற ஆக்கக் கூறுகளைக் கொண்டு ஆய்வு செய்து எழுதியுள்ளார்.

இந்த அபலைகளுக்காகப் போராடிய நடேசய்யர், அவரது களப்பணியில் உறுதுணையாக இருந்த அவருடைய துணைவியார் திருமதி மீனாட்சி அம்மையார், டாக்டர் மணிலால் ஆகியோரின் தியாகங்களையும் நூலாசிரியர் பதிவு செய்துள்ளார். இதனைத் தொடர்ந்து, மலையக இலக்கியங்களை எடுத்துரைக்கையில் புதுமைப்பித்தன் எழுதிய ‘துன்பக்கேணி’ என்னும் படைப்பு, வ.அ.இராச ரத்தினம் எழுதிய ‘அன்னை’ என்னும் படைப்பு, ஆனந்த ராகவன் எழுதிய ‘நண்பனே என்னும் உன் நினைவாக’ என்னும் கதை, மாத்தளை சோமு எழுதிய ‘எல்லை தாண்டா அகதிகள்’ என்னும் நாவல் ஆகிய நூல் களிலிருந்து மேற்கோள்களைத் தக்க விதமாகக் கையாண்டு, அந்தப் படைப்புகளின் மூலம் இலங்கைத் தமிழர் வரலாற்றின் பக்கம் நமது கவனத்தைக் குவிக்கச் செய்கிறார்.

திருகோணமலையில் பல நேரடி அனுபவங்களைப் பெற்ற மகேந்திரன் அங்கே ஓரிடத்தில் உணவருந்து வதற்காக சாலையோரத் தேநீர்க்கடை ஒன்றில் நுழைந்த போது, அங்குச் சந்தித்த சிங்கள மக்கள் மிகவும் பணிவுடன், கனிவுடன் நடந்துகொண்டதாகக் கூறுகிறார். அந்த விளக்கத்தினூடே அவரது மார்க்சிய நேர்மை தெரிகிறது. சிங்களப் பொதுமக்களுக்கும் தமிழ்ப் பொது மக்களுக்கும் இடையே எந்த விரோதமும் இல்லை. இவ்விரோதம் தமிழ் மக்களுக்கு எதிராக, சிங்கள மக்களை இலங்கை அரசு ஏவிவிடும் ஏகாதிபத்தியமும் இனவெறியுமே ஆகும் என்று குறிப்பிடும் நூலாசிரியர் கண்ணகி அம்மன் வழிபாடு, தேங்காய்ப் போர் என்று அங்குள்ள தமிழ் மக்களின் பண் பாட்டுச் சூழலைச் சற்றுத் தாராளமாகவே எழுதியுள்ளார்.

வரலாற்றுச் சிறப்புமிக்க யாழ்ப்பாணம் நூலகம் வன்முறையால் எரிக்கப்பட்டு, மீண்டும் புத்துயிர் பெற்ற வரலாற்று நிகழ்வுகள், புகழ்பெற்ற யாழ்ப்பாணக் கோட்டை, அங்கு நடைபெறும் கப்பல் திருவிழா போன்ற விவரங்களைத் தொகுத்துக் கொடுத்துள்ளதுடன் யாழ்ப் பாணத்துக்கு மட்டுமே உரிய, பனம்பழத்தினால் தயாரிக்கப் படும் ‘பனாட்டு’ என்னும் தின்பண்டம், ‘பாணிப் பனாட்டு’ என்னும் ஒருவகை பானகம், எஸ்.பொ.வின் நூலிலிருந்து விளக்கும் ‘ஒடியல் கூழ்’ என்னும் உணவு ஆகியன பற்றிய தகவல்கள் வாசகர்களின் மன வெப்பத்தைக் குறைக்கிற அளவுக்குக் குளிர் மிகுந்தவை.

அடுத்து, எழுபதுகளின் தொடக்கத்தில் இலங்கையில் வலுவாகப் புரட்சியைத் தொடங்கி, அரசின் வன்முறைக்கு ஆளானதுபற்றிச் சூடாக விவாதிக்கும் இவர் அங்கு நிலவிய பௌத்த சமயத்தைப் பின்பற்றிய சிங்களர்களின் உயர்ந்ததொரு பண்பை அழுந்த எடுத்து வைக்கிறார்.

சிங்கள மக்கள் யாருடனாவது சண்டையிட்டுப் பேச்சை முறித்துக் கொண்டால், ஓரிரு தினங்களில் அந்தக் குடும்பத்திற்கான உணவைத் தயாரித்து எடுத்துச் சென்று நேரில் சமாதானம் செய்வதை வழக்கமாகக் கொண்டு உள்ளார்களாம்!

கொழும்பு நகருக்கு வெகு அருகில் உள்ள ‘வெலிக் கடை’ சிறையில் தமிழர்கள் பட்டது உட்பட பல இன்னல்களை, பலரிடம் நேர்காணல்கள் மேற்கொண்டு விவரித்துள்ள மகேந்திரன் இலங்கையில் நிலவும் சாதியச் சூழல்களையும் மார்க்சிய ஆய்வுமுறையின் கீழ்ப் பகுத் தாய்ந்து எழுதியுள்ளார். இலங்கை வரலாற்றைப் பண் பாட்டு எச்சங்கள் படைப்புகளின் மூலமும், நேரடிக் கருத்துகள், காட்சிகள் மூலமும் புரிந்து, எளிய நடையில் விவரமாக எடுத்துரைக்கும் இந்நூல், படிக்கும் வாசகர் களை ஆங்காங்கே துடிக்கச் செய்தாலும், இறுதியில் மனத்தில் சற்று அசை போட்டுப் பார்க்கும் போது, இலங்கைச் சிக்கல் என்பது சிங்களர்களுக்கும், தமிழர் களுக்குமானது அல்ல, அப்படியொரு சூழல் ஏகாதிபத்திய இனவெறியோடு இயங்கும் இலங்கை அரசு - குறிப்பாக, இலங்கை இராணுவத்திற்கு உயர் இராணுவத் தொழில் நுட்பக் கருவிகளைக் கொள்முதல் செய்து தரும் ராஜபக்சேவின் அரசு, வியர்வை சிந்தி இலங்கையை இன்றைய மேம்பட்ட நிலைமைக்கு உயர்த்திக் கொடுத்த அப்பாவித் தமிழர்களுக்கு எதிராகச் செய்யும் வன்முறையே என்பதைத் தெளிவாக உணர முடிகிறது.

நூலின் இறுதியின், இந்நிலை மாறும் என்கிற தொனியில் தோழர் மகேந்திரன் நம்பிக்கை தெரிவிக்கிறார். ஒரு சமூகத்தை வரலாற்று நோக்கில் கண்டு, ஒரு படைப்பு தோன்றும்போது, அந்தப் படைப்பு புது வரலாற்றுக்குச் சிறுதுளியாவது பங்காற்றுகிறது என்று தானே பொருள். தமிழ்ச் சமூகம் கண்டிப்பாகப் புரட்டிப் பார்க்கவேண்டிய நூல் இது.

தீக்குள் விரலை வைத்தேன்

ஆசிரியர் : சி.மகேந்திரன்

வெளியீடு : என்.சி.பி.எச்.

விலை : ரூ.150/-

Pin It