இன்றளவும் பல்வேறு இணைய ஊடகங்களும், மேற்கத்திய ஊடகங்களும் ஜூலை கலவரத்தின் தொடக்கம் என்பதாக விடுதலைப் புலிகளின் தாக்குதலில் 13 சிங்கள வீரர்கள் கொலை செய்யப்பட்டதையே காரணமாக சுட்டி காட்டி வருகின்றன. 1983 ஜூலை கலவரம் நடப்பதற்கு முன்பாகவே பலமுறை தமிழர்கள் மீது கொடூரமான தாக்குதல்கள் நடத்தப்பட்டு இருக்கிறது என்பது தெரிந்தும் கூட, வரலாற்றை முன்வைத்து ‘ஜூலை கலவரம் ஏன் சிங்கள பேரினவாதத்தால் நடத்தப்பட்டது?’ என்பதைக் கூர்ந்து கவனிக்கும் ஊடகங்கள் ஒரு சில ஊடகங்கள் மட்டுமே.srilankan violence and jayawardeneஜெயவர்த்தனே அரசு ஜூலை கலவரத்தை நடத்துவதற்கு இனவாதம் பெரும் காரணியாக இருந்தாலும், அதன் பின்னால் உலகளாவிய பொருளாதாரக் கொள்கைகளும், சிங்கள அரசின் தவறான பொருளாதாரக் கொள்கைகளும் ஒரு காரணமாக இருக்கின்றன. வட்டுக்கோட்டை தீர்மானத்திற்கு பிறகு தமிழீழத்தில் தோன்றிய விடுதலைப்புலிகள் உள்ளிட்ட ஆயுதப் போராட்டக் குழுக்களின் வளர்ச்சியும், அதைத் தொடர்ந்து எழுந்த தமிழ் ஈழக் கோரிக்கை எழுச்சியும் உள்நாட்டு காரணங்களாக இருந்தன. ஆனால் சிங்களப் பத்திரிகைகளும், பல்வேறு வெளிநாட்டு ஊடகங்களும் இவற்றைப் பற்றி அதிகம் பேசாமல் விடுதலைப் லிகள் நடத்திய தாக்குதலின் விளைவாகத்தான் ஜூலை கலவரம் ஏற்பட்டது என்பது போன்றே இன்றளவும் செய்திகள் வெளியிடுவதைக் காண முடிகிறது. ஆனால் அது ஜெயவர்த்தனே அரசுக்கு ஒரு காரணியாக அமைந்தது என்பது தான் உண்மை.

பொதுவாகவே தமிழீழக் கோரிக்கையை ஏற்க மறுக்கும் சிங்கள பொதுச் சமூகம் தமிழர்கள் மீது ஒரு ஒவ்வாமையோடு அணுகி வந்தனர் என்பது மறுக்க முடியாத உண்மை. இந்த சூழலில், 1983-ஆம் ஆண்டு நடந்த கருப்பு ஜூலை என்று அழைக்கப்படும் ஜூலை கலவரத்தில் தமிழர்களை கொலை செய்வது தமிழ் பெண்களை பாலியல் வன்புணர்வு செய்வது போன்ற மனித விரோத செயல்களுக்கு பின்னால் ஒவ்வொரு முறையும் சிங்கள ஆளும் வர்க்கத்தின் ஆதரவும் தூண்டுதலும் இருந்தது. எப்போதெல்லாம் சிங்கள மக்களின் ஆதரவு பெற்று ஆட்சி அமைக்க வேண்டும் என்று சிங்கள பெரும்பான்மை வாதத்தை முன் வைக்கும் கட்சிகள் நினைக்கின்றனவோ, அப்பொழுதெல்லாம் தமிழர்கள் குறித்த வதந்திகளையும், அச்சத்தையும் ஏற்படுத்தி கலவரங்களை உருவாக்குவதே வாடிக்கையாக இருந்து வந்துள்ளது. அதிலும் குறிப்பாக ஜூலை கலவரம் அப்பட்டமான அரச பயங்கரவாதம் என்பதற்கு பல்வேறு சான்றுகளும், வரலாற்று ஆவணங்களும் உள்ளன.

ஜெயவர்த்தனே அரசின் பொருளாதாரக் கொள்கையும் ஜூலை கலவரமும்

1977-ஆம் ஆண்டு இலங்கை பொதுத் தேர்தலில் ஸ்ரீமாவோ பண்டாரநாயகாவை தனி பெரும்பான்மை பெற்று தோற்கடித்ததன் மூலம் அதிபர் ஆனவர் ஜே.ஆர்.ஜெயவர்த்தனே. மொத்தம் இருந்த 168 இடங்களில் 140 இடங்களை வென்று அசுர பலத்துடன் ஆட்சியை பிடித்த உடனேயே தனக்கு எதிர்க்கட்சிகளாக இருந்த இலங்கை கம்யூனிஸ்ட் கட்சி உள்பட அனைத்து கட்சிகளையும் ஒடுக்குவதற்கான வழிமுறையை கையில் எடுக்கத் தொடங்கினார். ஏற்கனவே ஸ்ரீமாவோ பண்டாரநாயக்காவின் ஆட்சியில் பெரும் வீழ்ச்சியை கண்டிருந்த இலங்கை பொருளாதாரத்தை மீட்டெடுப்பதற்காக மேற்கத்திய நாடுகளின் தாராளமய கொள்கையை ஏற்றுக் கொள்ளத் தொடங்கினார். தொடக்க காலத்தில் பெரும் முதலீடுகள் வருவது போன்று தோன்றினாலும் 1980 மற்றும் 1981 ஆகிய காலகட்டங்களில் மேற்கத்திய முதலாளித்துவத்தின் உண்மை கோர முகம் இலங்கையில் வெளிப்படத் தொடங்கியது.

இலங்கையின் பொருளாதாரத்தை கூர்ந்து கவனித்தால் அதன் பெரும்பாலான வருவாய் மூன்று வழிகளில் மட்டுமே கிடைப்பதைப் புரிந்து கொள்ளலாம். முதலாவது இலங்கையின் அழகிய மலைகளையும், பள்ளத்தாக்குகளையும், புத்த விகார்களையும் பார்க்க உலகின் ஒவ்வொரு மூலையிலிருந்தும் ஓடி வரும் சுற்றுலாப் பயணிகளால் கிடைக்கும் வருவாயே முக்கிய வருவாயாக இருந்து வருகிறது. இரண்டாவது இலங்கையின் மலைத் தோட்டங்களில் மலையகத் தமிழர்களின் உழைப்பால் விளைந்த உலகத்தரம் வாய்ந்த தேயிலை சர்வதேச சந்தையில் குறிப்பிடத்தகுந்த அளவு பொருளாதாரத்தை ஈட்டி தந்தது. இயற்கையாக அமைந்த துறைமுகங்களை கொண்ட இலங்கை தீவு தமிழர் பெருங்கடலில் கப்பல் போக்குவரத்திற்கு மிக முக்கிய துறைமுகமாக விளங்கி வருகிறது. இதனால் கிடைக்கும் சுங்க வருவாயும் இலங்கை பொருளாதாரத்தில் கணிசமான பங்கு வகிக்கிறது.

இவை தவிர்த்து, ஜூலை காலவரத்திற்கு பிறகான காலகட்டங்கள் தொடங்கி தற்போது வரை இலங்கைக்கு கிடைக்கும் வெளிநாட்டு நிதி உதவிகள்தான் அந்நாட்டின் பொருளாதார காரணியாக விளங்கி வந்துள்ளது. குறிப்பாக உள்நாட்டு போர் தொடங்கியதும் போரினால் ஏற்பட்ட அழிவிலிருந்து இலங்கையை மீட்டெடுக்கிறோம் என்ற பெயரில், குறிப்பாக ஈழத் தமிழர்கள் வாழும் பகுதியில் மீட்புப் பணிகளையும், மீள்கட்டமைப்பு பணிகளையும் மேற்கொள்கிறோம் என்று உறுதியளித்து மேற்கத்திய நாடுகளிடம் இலங்கை அரசு பெற்ற கடன்நிதியின் அளவு கணக்கிட முடியாதது.

அதிலும் குறிப்பாக IMF (International Monetary Fund) என்று குறிப்பிடப்படும் சர்வதேச முதலாளிகளின் தரகு அமைப்பு இலங்கைக்கு பெருமளவில் கடன் கொடுத்து வந்துள்ளது. இது தவிர சீனா, ஜப்பான், இந்தியா உள்ளிட்ட நாடுகளும் கடன் கொடுத்துள்ளனர்.

1982-ஆம் ஆண்டு இலங்கையின் கடன் நிலுவைத் தொகை ஏறத்தாழ 140 மில்லியன் அமெரிக்க டாலர்களாக இருந்துள்ளது. இது அன்றைய இலங்கை ரூபாய் மதிப்பில் 46,667 மில்லியன் ரூபாய்களாகும் (1982-84 ஆண்டுகளில் சராசரியான ஒரு அமெரிக்க டாலருக்கு நிகரான இலங்கை ரூபாயின் மதிப்பு ஏறத்தாழ 333 ரூபாய் ஆகும்). 1983-ஆம் ஆண்டு வரையிலான மொத்த கடன் நிலுவைத் தொகை 1700 மில்லியன் அமெரிக்க டாலர்களாக இருந்துள்ளது. இலங்கை மதிப்பில் இது 4,66,620 மில்லியன் ரூபாய் என்பது குறிப்பிடத்தக்கது. இத்தகைய மிகப்பெரிய கடன் சிக்கலில் சிக்கி இருந்த இலங்கையில் குறிப்பிடத்தக்க தொழில் வளர்ச்சி செய்வதற்கான திட்டங்கள் எதுவுமே அன்றைய ஆளும் அரசுகளுக்கு எதுவும் இல்லை. எனவே கடனை திருப்பி செலுத்துவதற்குரிய வாய்ப்பு இல்லாமல், நாட்டின் பொருளாதாரத்தையும் மீட்டெடுக்க வழியற்ற நிலையில், சிங்கள மக்களின் சிந்தனையை இதிலிருந்து மடைமாற்றம் ஒரே கருவியாக தமிழர் மீதான இனவெறி வெறுப்பு மட்டுமே சிங்கள அரசியல்வாதிகளுக்கு இருந்தது.

இதில் பெரும் நகைச்சுவை என்னவென்றால், ஜூலை கலவரம் முடிந்ததற்குப் பிறகு பன்னாட்டு நிதி அமைப்புகளிடம் சிங்கள அதிகாரிகள் “எங்கள் நாட்டில் நடந்த கலவரத்தால் நூற்றுக்கும் மேற்பட்ட தொழிற்சாலைகள் அழிக்கப்பட்டு விட்டன. எனவே அவற்றை மீட்டெடுக்க நிதி தாருங்கள்” என்று பிச்சை கேட்டு கொண்டிருந்தனர். அவர்கள் குறிப்பிட்டு கூறிய ‘நூற்றுக்கும் மேற்பட்ட தொழிற்சாலைகள்’ அத்தனையும் தமிழர்களுடையது என்பதும், அவற்றை அழித்தவர்கள் இதே அரசு ஆதரவு பெற்ற சிங்களர்கள் என்பதும் தான் வேடிக்கை நிறைந்த வேதனை.

ஆகஸ்ட் மாதம் 1983 ஆம் ஆண்டு வெளிவந்த The Guardian பத்திரிக்கை செய்தியில் “நேற்று இரவு இலங்கை அரசு அயல்நாட்டு அதிகாரிகளிடம் ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட மக்கள் வீடுகள் இழந்து வாழ்விடம் இழந்து தவிப்பதாகவும், அவர்களுக்கு உணவு மற்றும் பிற தேவைகள் அடுத்த மூன்று அல்லது ஆறு மாதத்திற்கு தேவைப்படும் என்றும், ஏறத்தாழ 18 ஆயிரம் வீடுகள் பாதிக்கப்பட்டிருக்கின்றன என்றும் தெரிவித்தனர்” என்று செய்தி வெளியிட்டது. இவ்வாறு தமிழர்களை இனப்படுகொலை செய்தது மட்டுமல்லாமல் அந்த பிணங்களை காட்டி சர்வதேச சமூகத்தை ஏமாற்றி நிதி பெறும் முயற்சியிலும் சிங்கள பௌத்த இனவெறி அரசு ஈடுபட்டிருந்தது.

இந்த கலவரம் தொடங்கும் பொழுது ஏறத்தாழ 10,000 வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் இலங்கையில் இருந்திருந்தனர். இந்த கலவரத்திற்கு பிறகு 1500 பேர் மட்டுமே அங்கு தங்கியிருந்தனர். மற்ற சுற்றுலா பயணிகள் உடனடியாக இலங்கை தீவை விட்டு வெளியேறினார். இது ஏற்கனவே சரிந்து கொண்டிருந்த இலங்கையின் பொருளாதாரத்திற்கு மேலும் ஒரு அடியாக விளங்கியது.

பிரிவினைவாதிகள் மீது போர் தொடுகிறோம் என்ற போர்வையில் ஈழத் தமிழர்கள் மீது இலங்கை சிங்கள இனவெறி அரசு தொடுத்த போர் காரணமாக கிடைத்த நிதிதான் பலகாலமாக இலங்கை அரசனுடைய முக்கிய வருவாயாக இருந்து வந்துள்ளது என்பதை நாம் ஏற்கனவே பார்த்துள்ளோம். இதன் காரணமாகவே 2009 இறுதி போர் முடிந்தவுடன் கடன் கொடுத்த நாடுகள் அத்தனையும் கடனை திருப்பிக் கேட்க முடிவு செய்த பொழுது அத்தகைய பெரும் கடனை கட்ட இயலாமல் தங்கள் நாட்டின் முக்கிய துறைமுகங்களையும், நிலம்-மலை வளங்களையும் கடன் கொடுத்த நாடுகளுக்கு தாரை வார்க்க இலங்கை தயாரானது. அப்படியும் நிதிநிலை கட்டுக்குள் வராமல் போகவேதான் இலங்கையில் பெரும் பொருளாதார நெருக்கடி ஏற்பட்டு, ராஜபக்சே என்ற ஈழ இனப்படுகொலையாளன் ஆட்சியை விட்டுவிட்டு விட்டு தப்பி ஓடும் நிலை ஏற்பட்டது.

அப்படிப் பெற்ற நிதியையும் உள்நாட்டு வளர்ச்சிக்கு பயன்படுத்தாமல் தமிழர்களுக்கு எதிரான ராணுவ செலவிற்காக பயன்படுத்தியதின் விளைவே இலங்கையின் இன்றைய பொருளாதார நெருக்கடிக்கு பெரும் காரணமாக அமைந்தது. இலங்கையின் ராணுவம் இந்தியா, அமெரிக்கா, இஸ்ரேல், சீனா உள்ளிட்ட உலகின் பெரும் ராணுவங்களிடம் தொடர்ச்சியாக பயிற்சி பெறக்கூடிய ராணுவமாக வடிவமைக்கப்பட்டிருக்கிறது. இத்தனைக்கும் இலங்கை அருகில் இந்தியா என்ற ‘ இலங்கையின் நட்பு நாட்டை தவிர’ வேறு பெரிய நாடுகளில் கிடையாது என்பது குறிப்பிடத்தக்கது. அப்படியென்றால் இந்த ராணுவம் யாரை தாக்குவதற்காக உருவாக்கப்பட்டிருக்கும்?srilankan military expense

(இலங்கை இராணுவ அளவு மற்றும் செலவு)

அது சொந்த நாட்டு மக்களாகிய ஈழத் தமிழர்களை கொலை செய்வதற்காக உருவாக்கப்பட்ட கூலிப்படை ராணுவமே தவிர வேறு எதுவும் இல்லை. அந்த ராணுவத்திற்கான செலவு அதிர்ச்சி அளிக்கும் வகையில் உலகின் மிகப் பெரும் நாடுகளான ஆஸ்திரேலியா, இந்தியா, சீனா போன்ற நாடுகளை விட அதிகம் என்பது மட்டுமல்லாமல் எண்ணிக்கையிலும் இந்த நாடுகளை விட ஐந்து மடங்கு அதிகம் என்பதையும் கணக்கில் எடுத்துக் கொண்டால் இலங்கை சந்தித்து வரும் பொருளாதார நெருக்கடியின் மையப்புள்ளி சிங்கள பேரினவாத வெறியே என்பதை புரிந்து கொள்ள முடியும். இது குறித்து விடுதலைப்புலிகள் தங்களுடைய செய்தித்தாள்களில் ஏற்கனவே குறிப்பிட்டிருந்தனர்.

2004-ம் ஆண்டு மே மாதம் வெளிவந்த ‘விடுதலைப்புலிகள்’ ஏட்டில் உலக நாடுகளுக்கு தமிழீழ விடுதலைப்புலிகள் இயக்கம் ‘நிதியுதவி – ஏய்க்கும் சிறிலங்கா ஏமாறும் சர்வதேச சமூகம்’ என்னும் ஓர் எச்சரிக்கையை தந்திருந்தது. அதில், “எமது தேச விடுதலைப்போரை ‘பயங்கரவாதம்’ என வெளிநாடுகளுக்குக் காட்டி அவர்களிடமிருந்து பல்வேறு படைத்துறை உதவிகளை சிறிலங்கா அன்று முதல் இன்றுவரை பெற்று வருகிறது. இவ்வகையான உதவிகள் அவற்றின் விளைவுகள் ஒருபுறமிருக்க நாட்டின் அபிவிருத்தி, புனர்வாழ்வு, புனர் நிர்மாணம் என்ற பெயர்களில் பெருந்தொகை வெளிநாட்டு நிதியை சிறிலங்கா ஆண்டுதோறும் பெறுகிறது.”

srilanka cheating international society

“இவ்வாறு பெறப்படும் நிதியுதவிகளுக்கு உண்மையில் என்ன நடக்கிறது என்பது பற்றி எவரும் பெரிதாகக் கவனம் செலுத்துவதில்லை. எனினும் தமிழ் மக்கள் மத்தியில் இவ்வகை நிதிகளை சிறிலங்கா அரசுகள் பயன்படுத்தும் விதம் பற்றி அதிருப்திகளும் சந்தேகங்களும் இருந்தே வந்துள்ளன.” என்று விடுதலைப்புலிகள் தெரிவித்திருந்தனர்.

மேலும், “‘துரித மகாவலி அபிவிருத்தித் திட்டம்’ என்ற பெயரில் ஒரு ஏமாற்றுத் திட்டத்தை வடிவமைத்துக் கொடுத்து அதன்படி செயற்படும்படி இஸ்ரேல் ஆலோசனை கூறியது. உண்மையில் வங்கியிடமிருந்து பணத்தைப் பெற்று ஆயுதங்களுக்காகச் செலுத்துவதற்காகவே இத்திட்டம் கண்டுபிடிக்கப்பட்டது.” என்று தெரிவித்தனர். அதுமட்டுமல்லாமல் “சிறிலங்காவிற்கு நிதியுதவி வழங்கும் வெளிநாடுகளும், மற்றைய அமைப்புகளும் இனியும் சிறிலங்காவை நம்பி ஏமாறாது தமது நிதியுதவிகள் திட்டங்கள் தொடர்பாக விழிப்புடன் செயற்பட்டு அவ்வுதவிகள் அவற்றின் நோக்கத்திற்காகவே செலவிடப்படுவதை உறுதிப்படுத்திக்கொள்ள வேண்டும்.” என்று எச்சரித்திருந்தனர்.

இலங்கையின் இன்றைய பொருளாதார நெருக்கடிக்கு பாதுகாப்பு செலவினங்கள் அதிகரிப்பே காரணமாய் அமையும் என்று தமிழீழ விடுதலைப்புலிகள் அமைப்பு அறிவித்தது. அதுவும் 1994-ம் வருடத்திலேயே. 1994 ஜூன் மாத ‘விடுதலைப்புலிகள்’ பத்திரிக்கையில் ‘பாதுகாப்பு செலவீனங்கள் – அரசு எதிர்கொள்ளும் நெருக்கடிகள்’ என்ற தலைப்பில் எழுதப்பட்ட கட்டுரை இங்கு தரப்பட்டுள்ளது.ltte on military expense

(இலங்கையின் பொருளாதார நெருக்கடி பற்றி முன்பே கணித்த புலிகள்)

இதில் 1994-ம் ஆண்டு இலங்கை நிதி அறிக்கை சுட்டிக்காட்டி “1994 இற்கான அதாவது இவ்வருடத்திற்கான போர்ச்செலவாக, அரசு ஏற்கெனவே 2100 கோடி ரூபா பணத்தை ஒதுக்கியிருந்தமை குறிப்பிடத்தக்கது. வருடத்தின் அரைப்பங்குகூடக் கழியாத நிலையில், மேலும் 1100 கோடி ரூபாவைப் பாதுகாப்பு அமைச்சு கேட்டிருப்பது சிங்கள மக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.” என்று சுட்டிக்காட்டிய விடுதலைப்புலிகள் ஏடு, “இந்த நிதிப் பிரச்சனை அரசுக்கு பெரிய தலைவலியை கொடுப்பதுடன், பொருளாதார நெருக்கடியும் ஏற்படுத்தியுள்ளது என்று அரசியல் அவதானிகள் கருத்து கூறியுள்ளனர்” என்றும் கூறியது.

மேற்கண்ட சான்றுகளே இலங்கை பொருளாதாரத்தின் உண்மை முகம். விடுதலை பெற்ற காலத்திலிருந்து இனவெறியின் காரணமாக ஒரு தேசத்தின் ஏறத்தாழ 30 விழுக்காடு மக்களின் பொருளாதாரத்தை சிதைத்து, நாட்டின் பொருளாதார வளர்ச்சியில் அவர்களை பங்கு பெற விடாமல் தடுத்து, அதிகார வெறியில் ஆட்சியை செலுத்திக் கொண்டிருந்த நாடு இத்தகைய பொருளாதார வீழ்ச்சியில் இருந்து தப்புவது சாத்தியமே இல்லை என்பது தான் பொருளாதார வல்லுநர்களின் எதார்த்த கருத்தாக இருந்து வருகிறது. இது போன்ற தருணங்களில் சிங்கள மக்கள் தங்களை நோக்கி கேள்வி எழுப்பி விடாமல் இருப்பதற்கு இலங்கை சிங்கள அரசியல்வாதிகளுக்கு தெரிந்த ஒரே வழிமுறை தமிழர் மீது வன்முறையை கட்டவிழ்த்து விடுவதே.

1983 ஆம் ஆண்டு நடந்த ஜூலை கலவரமும் இதுபோன்ற காரணிகளுக்காக கட்டவிழ்த்து விடப்பட்ட ஒரு கலவரமே.

தமிழர்களின் பொருளாதார வளர்ச்சியின் மீது சிங்களவர்கள் கொண்டிருந்த வெறுப்பு:

ஈழத் தமிழர்கள், மலையகத் தமிழர்கள் மற்றும் இலங்கை தமிழர்களின் கடும் உழைப்பின் காரணமாகவும், தொழிலறிவு காரணமாகவும் சிங்கள இனவெறியர்களின் பல்வேறு இடையூறுகளுக்கு நடுவிலும் குறிப்பிடத்தக்க அளவில் வளர்ச்சியை கண்டறிந்தனர். தமிழர்களின் இத்தகைய வளர்ச்சிக்கு அவர்களுடைய கல்வி அறிவு காரணமாக இருப்பதைக் கண்டும், தமிழ் மொழி வளமை உதவியாக இருப்பதை உணர்ந்தும் சிங்கள ஆட்சியாளர்கள் ஒற்றை சிங்கள சட்டம் மற்றும் பல்கலைக்கழகங்களில் தமிழ் மாணவர்களுக்கு பாரபட்சமான முறையில் மதிப்பெண் இடுதல் போன்ற இடையூறுகளை செய்து வந்தனர். உச்சபட்சமாக யாழ்ப்பாண நூலகம் எரிக்கப்பட்டது.

படிப்படியாக அரசு நிர்வாகங்களில் இருந்தும், பிற பணிகளில் இருந்தும் தமிழர்கள் அப்புறப்படுத்தப்பட்டு பொருளாதார ரீதியாக முடக்கப்பட்டனர். கீழே கொடுக்கப்பட்டுள்ள அட்டவணை 1956, 65 மற்றும் 70-களில் தமிழர்களின் வேலைவாய்ப்பு எப்படி இருந்தது என்பதை தெளிவாக விளக்குகிறது.

தமிழர்களின் வேலைவாய்ப்பு

1956

1965

1970

அரசு நிர்வாகம்

30%

20%

5%

தபால், இரயில்வே, மருத்துவம்

50%

30%

5%

ஆசிரியம் மற்றும் தொழிற்கல்வி சார்ந்த வேலைகள்

60%

30%

10%

இராணுவம் சார்ந்த வேலைகள்

40%

20%

1%

தொழிலாளர் துறை

45%

25%

5%

ஆயினும் ஜெயவர்த்தனே அரசு கொண்டுவந்த தாராளமயக் கொள்கை தனியார் முதலாளிகளை ஊக்குவிக்கும் வண்ணம் அமைந்தது. இதை முதலில் பயன்படுத்திக் கொண்டவர்கள் இலங்கையில் இருந்த தமிழின மக்களே. அடிப்படையில் தொழில்துறையில் நன்கு தேர்ச்சி தமிழர்கள் பெரும் நிறுவனங்களையும், மொத்த வியாபார கடைகளையும் உருவாக்குவதில் துரிதமாக வளர்ச்சி அடைந்திருந்தனர். மலையகத் தமிழர்கள் வாழ்ந்த பகுதியிலும் இந்த வளர்ச்சி குறிப்பிடத்தக்க அளவில் இருந்தது.employment status of tamils

தமிழர்களின் வேலைவாய்ப்பு படிப்படியாக பறிக்கப்படுதல், 1956-1970

இதன் பொருளாதாரம் பலன் இலங்கையின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் பெரும் உதவியாக இருந்தது என்றாலும், இன வெறியின் காரணமாக தமிழர்களின் இத்தகைய வளர்ச்சியை சிங்களவர்களாலும், சிங்கள அரசாலும் ஏற்றுக் கொள்ள முடியவில்லை. இது ஜூலை கலவரத்தின் போது தமிழர்களின் சொத்துக்கள் எரிக்கப்பட்டதற்கும் சூறையாடப்பட்டதற்கும் முக்கிய காரணியாக அமைந்திருந்தது.

விடுதலைப்புலிகள் அறிவித்த தேர்தல் புறக்கணிப்பும் ஜெயவர்த்தனே அரசின் அச்சமும்

தந்தை செல்வா தலைமையிலான வட்டுக்கோட்டை தீர்மானம் ‘விடுதலை பெற்ற தமிழீழமே சிங்கள இனவெறியில் சிக்கித் தவித்த ஈழ தமிழர்களுக்கு இறுதி தீர்வாக அமைய முடியும்’ என்பதை உணர்த்தியது. இதன் விளைவாக பல்வேறு போராட்டக் குழுக்கள் உருவாக்க தொடங்கினர். தமிழீழ தேசியத் தலைவர் பிரபாகரன் தலைமையில் தமிழீழ விடுதலைப்புலிகள் அமைப்பும் உருவானது. வடக்கு கிழக்கு ஆகியவற்ற இணைத்து ஒற்றை தமிழீழம் தவிர்த்த வேறு எந்த சமரசத்திற்கும் தயார் இல்லை என்ற உறுதித்தன்மை கொண்ட விடுதலைப்புலிகள் அமைப்பு ஈழத் தமிழர்களிடையே கவனத்தை ஈர்க்கத் தொடங்கியது.

இந்நிலையில் 1983-ஆம் ஆண்டு மே மாதம் வடக்கு மாகாணங்களில் உள்ளாட்சித் தேர்தல் நடைபெற்றது. ஈழ விடுதலையை முன்வைத்து “சிங்கள அரசின் அதிகாரத்தை ஏற்க வேண்டாம்” என்று கூறி தேர்தலை புறக்கணிக்கும்படி விடுதலைப்புலிகள் ஈழத் தமிழர்களிடம் கோரிக்கை விடுத்திருந்தனர். கோரிக்கையை ஏற்ற தமிழர்கள் தேர்தலில் வாக்கு செலுத்தாமல் புறக்கணித்தனர். ஏறத்தாழ 98% தமிழர்கள் தேர்தலில் வாக்களிக்கவில்லை என்பது கவனிக்க வேண்டிய ஒன்று. இது அப்போது ஆளும் அரசாக இருந்த ஜெயவர்த்தனே அரசுக்கு பெரும் அதிர்ச்சியை கொடுத்தது. அதுவரை ஏதோ கலவர கும்பல்கள் ஆயுத போராட்டம் செய்கிறார்கள் என்பது போன்று அலட்சியமாக இருந்த இலங்கை ஆளும் வர்க்கம் தமிழீழ மக்களின் ஒருமித்த புறக்கணிப்பை கண்டு அஞ்சியது.

தனி ஈழம் என்ற கோரிக்கையை முன்வைத்து ஈழ மக்கள் இவ்வாறு ஒன்றுபட்டு நிற்பதை விரும்பாத இலங்கை அரசு பெரும் எண்ணிக்கையில் சிங்கள ராணுவத்தை யாழ்ப்பாண பகுதிக்கு அனுப்பி கடைகளை சூறையாடுவது, தீக்கிரையாக்குவது உள்ளிட்ட பல்வேறு வன்முறை சம்பவங்களில் ஈடுபட்டது. இச்சமயத்தில்தான் மாணவர்கள் உட்பட 50 தமிழர்கள் சிங்கள இனவெறி இராணுவத்தால் சுட்டுக் கொல்லப்பட்டதும், மூன்று தமிழ் பெண்கள் வன்புணர்வுக்கு உள்ளாக்கப்பட்டதும் நடைபெற்றது. இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கவே 13 ராணுவ வீரர்களை விடுதலை புலிகள் தாக்கிக் கொன்றனர்.

விடுதலைப்புலிகளின் தாக்குதலுக்கு முன்பே தமிழர்கள் மீது திட்டமிடப்பட்டிருந்த இனவெறி தாக்குதல்:

ஒவ்வொரு முறையும் சூலை கலவரத்தை பற்றி பேசுகிறவர்கள் ‘13 சிங்கள வீரர்களை விடுதலை புலிகள் தாக்கியதினை தொடர்ந்து நடைபெற்ற கலவரம்’ என்பது போலவே கட்டமைப்பது நிகழ்ந்து வருகிறது. ஆனால் தமிழர்களின் மீதான இனவெறி தாக்குதல் 1983 ஜூலை மாதம் தொடங்கியதும் அல்ல, தனிநாடு கேட்ட ஆயுத குழுக்களை ஒடுக்குவதற்காக நடந்ததும் அல்ல.

ஏனென்றால் கருப்பு ஜூலை கலவரம் நடைபெறுவதற்கு முன்பு லண்டன் Daily Telegraph செய்தித்தாளின் இயன் வார்ட் (Ian Ward) என்ற பத்திரிக்கையாளருக்கு ஜெயவர்த்தனே கொடுத்த பேட்டி ஜூலை 11ஆம் தேதி அன்று வெளிவந்தது. அதில் “இனி அவர்களைப் (தமிழர்களை) பற்றி என்னால் சிந்திக்க முடியாது. அவர்களின் உயிரைப் பற்றியோ, கருத்தைப் பற்றியோ நினைத்துப் பார்க்க முடியாது” என்று சூசகமாக கூறியிருந்தார்.

மேலும் கலவரம் நடந்து கொண்டிருந்த தருணத்தில் ஜூலை 26 ஆம் தேதி இதே பத்திரிக்கைக்கு கொடுத்த பேட்டியில் “ வடக்கு மாகாணங்களில் நான் எவ்வளவு அழுத்தத்தை கொடுக்கிறேன் அதற்கு இணையான அளவிற்கு இங்கிருக்கும் சிங்கள மக்கள் மகிழ்ச்சியடைவார்கள். உண்மையில் சொல்லப்போனால் தமிழர்களை நான் பட்டினி போட்டால், சிங்களர்கள் மகிழ்ச்சியாக இருப்பார்கள்” என்று தெரிவித்து இருந்தார்.

அதே 1983 ஜூலை மாத தொடக்கத்தில் நீர்கொழும்புபகுதியில் நடைபெற்ற ஓர் விருந்தில் ஜெயவர்த்தனே அமைச்சரவையின் மீன்வளத்துறை அமைச்சர் பெஸ்டஸ் பெரேரா கலந்து கொண்டார். அங்கு தன் சக நண்பர்களிடம் யாழ்ப்பாணத்திற்கும் கொழும்புவிற்கும் இடையில் போக்குவரத்து அதிகரித்திருப்பதாகவும், தமிழர்கள் வண்ணத் தொலைக்காட்சிகள் உள்ளிட்ட வசதியான பொருட்களை வாங்கி செல்வதை காண முடிகிறது என்றும் கோபமாக கருத்து தெரிவித்திருந்தார். மேலும் “சில வாரம் பொறுத்திருங்கள். அவர்களுக்கு சரியான பாடம் கற்பிக்கப்படும்” என்று கூறியதை பத்திரிகைகள் செய்தியாக வெளியிட்டு இருந்தன.

இதே காலகட்டத்தில் தான் ஜூலைக் கலவரத்தின் மிக முக்கிய குற்றவாளியான சிறில் மெத்தியூ என்ற அமைச்சர் எழுதிய சிங்கள இனவெறி புத்தகங்கள் பரவலாக விநியோகிக்கப்பட்டுள்ளது. “சிங்கள மக்களே எழுந்திருங்கள், புத்த மதத்தை பாதுகாப்போம்” என்ற அறிவுப்புடன் புத்தகங்கள் விநியோகிக்கப்பட்டன. அதில் ஈழத் தமிழர்கள் மீது மட்டுமல்லாமல், மலையகத் தமிழர்கள் மீதும் கடுமையான இனவெறி கருத்துக்களை அச்சடித்திருந்தனர்.

பன்னாட்டு நீதித்துறை வல்லுநர்கள் ஆணையம் (International Commission of Jurists – ICJ) தந்த அறிக்கையின் 76 வது மற்றும் 77வது பக்கத்தில் கீழ்கண்டவாறு குறிப்பிடப்பட்டுள்ளது.

“இந்த கலவரம் தன்னிச்சையாக சிங்கள மக்களால் முன்னெடுக்கப்பட்டதோ, விடுதலைப்புலிகள் 13 சிங்கள வீரர்களை தாக்கியதற்கு பதிலடியாகவோ நடத்தப்படவில்லை என்பது தெளிவாகத் தெரிகிறது. விடுதலைப்புலிகள் நடத்திய தாக்குதல் மறுநாள் உள்ளூர் பத்திரிகைகளில் வெளிவருவதற்கு முன்பே இந்த கலவரம் நடக்க தொடங்கிவிட்டது. இது நன்கு திட்டமிடப்பட்டு, ஒருங்கிணைக்கப்பட்டு, முன்கூட்டியே ஏற்பாடு செய்யப்பட்ட தொடர்ச்சியான நிகழ்வாக நடந்துள்ள. ஆனால் இத்திட்டத்தின் பின்னால் இருப்பவர்கள் யார், யார் இதை தொடங்கியது, இவ்வளவு பெரிய படுகொலைகளும், சொத்துக்கள் அளிப்பும் ஏன் நடத்தப்பட்டது? அதுவும் இந்த கலவரம் இலங்கையின் பொருளாதாரம் இவ்வளவு பெரிய பின்னடைவை சந்தித்ததற்கு பின்பு நடந்தேறியதற்கான காரணம் என்ன?”

இந்த கலவரத்தை பற்றி லண்டனில் The Times பத்திரிக்கை (ஆகஸ்ட் 8,1983) கூறும் பொழுது “எப்பொழுதும் போல் அல்லாமல் கலவரக்காரர்களுக்கு இந்த முறை தமிழர்களின் வாழ்விடத்தை கண்டறிவதற்கு எந்தவித குழப்பமும் இல்லாமல் இருந்தது” என்று வெளியிட்டது. டெல்லியில் வெளிவந்த India Today பத்திரிக்கை (ஆகஸ்டு 31, 1983) “ கலவரக்காரர்கள் கையில் வாக்காளர் பட்டியல் கொடுக்கப்பட்டிருந்தது. தமிழர்களின் வீட்டு முகவரிகள், தமிழர்கள் நடத்தி வந்த கடைகள், தொழிற்சாலைகள் மிகத் தெளிவாக குறிப்பிடப்பட்டிருந்தது. கலவரமும் மிகத் துல்லியமாக தமிழர்களை நோக்கி மட்டுமே நடக்க கூடிய அளவில் திட்டமிடப்பட்டிருந்தது” என்று செய்தி வெளியிட்டது.

லண்டனில் இருந்து வெளியாகும் New Statesman பத்திரிக்கை ஜூலை 29 1983 அன்று வெளியிட்ட செய்தியில் “தன் சொந்த மக்களை இனப்படுகொலை செய்வதற்கான பிரச்சாரத்தில் ஈடுபடுகின்ற ஒருவருக்கு (ஜெயவர்த்தனேவுக்கு) நிதி உதவி செய்ய முடியாது என்று இங்கிலாந்து அறிவிக்க வேண்டும்” என்று செய்தி வெளியிட்டது.

இலங்கை அரசியலமைப்பு தேசிய ஒருமைப்பாட்டு விவகார அமைச்சராக இருந்த டி.யு.குணசேகர கூறும் பொழுது “ஜூலை கலவரத்திற்கு முழு பொறுப்பும் ஜே .ஆர்.ஜெயவர்த்தனே மட்டுமே” என்று வெளிப்படையாக கூறினார்.

அதே போல் தகவல் ஒளிபரப்பு அமைச்சர் கலாநிதி ஆனந்திஸ்ஸ டி அல்விஸ் ஜூலை 29, 1983-இல் ஆற்றிய உரையில், “கருப்பு ஜூலை இன ஒழிப்பு வன்முறை முன்கூட்டியே திட்டமிடப்பட்ட ஒன்று. ஏனென்றால் இதில் ஈடுபட்ட ஒவ்வொரு குழுவுக்கும் என்ன செய்ய வேண்டும் என்று அறிவுறுத்தல் முன்கூட்டியே வழங்கப்பட்டிருந்தது. ஒரே நேரத்தில் பல பகுதிகளில் வன்முறை நடத்த திட்டமிட்டு, அவை ஒரே மாதிரியாக நடந்தன” என்று கூறினார்.

இந்த கலவரத்தில் ஈடுபட்ட சிங்கள இனவெறியர்கள் தமிழர்தம் கடைகள் மற்றும் வீடுகளை கொளுத்துவதற்கான பெட்ரோல் முதலிய எரிபொருட்களை அச்சாலையில் செல்லும் வாகனங்களிடமிருந்தே பெற முயன்றனர். இது ஒரு பிரச்சார வடிவமாக இலங்கை முழுவதும் செய்யப்பட்டிருந்திருக்கிறது. சிங்களத்தில் “ரட்ட ஜாதிய பேரக்கன்ன, பெட்ரோல் தெல் டிக்கத் தென்ன” என்று முடங்கியபடி வாகனங்களை வழிமறித்து பெட்ரோல் கேட்டு கொண்டு இருந்தனர் என்று இக்கொலை சம்பவங்களிலிருந்து தப்பி வந்த நேரடி சாட்சிகள் தெரிவித்தன. இந்த முழக்கத்தின் தமிழாக்கம் “இனத்தையும் நாட்டையும் காப்பாற்ற கொஞ்சம் பெட்ரோல் கொடுங்கள்” என்பது தான்.

தமிழர்கள் மீதான தாக்குதலை தடுக்க ஒருவேளை இந்தியா ராணுவத்தை அனுப்பலாம் என்ற வதந்தியும் இலங்கையில் அப்பொழுது பரவி இருந்தது. இது குறித்து கருத்து தெரிவித்த ஜெயவர்த்தனே “ இந்தியா மிஞ்சு மிஞ்சி போனால் செய்யக்கூடிய காரியம் நம்மீது படையெடுப்பது தான். அப்படி நம் மீது படை எடுத்தால் அதுதான் இந்த நாட்டில் உள்ள தமிழர்களின் முடிவாக இருக்கும்” என்று கூறியிருந்தார்.

ஜூலை கலவரத்தின் மிக முக்கிய குற்றவாளியான காமினி திசநாயக்க மேலும் ஒரு படி மேலே சென்று “இந்தியா இந்த நாட்டை ஆக்கிரமித்தால் 24 மணி நேரத்தில் தமிழர்கள் கொல்லப்படுவார்கள்” என்று உரையாற்றினார்.

இறுதியாக ஜெயவர்த்தனே அமைச்சரவையின் பங்கு பெற்றிருந்த சிறில் மெத்யூ 1983 ஆகஸ்ட் 5-ஆம் நாள் நடைபெற்ற இலங்கை அரசியலமைப்பின் ஆறாவது சட்ட திருத்தத்தின் மீதான விவாதத்தின் பொழுது வெளிப்படையாக ஒரு உண்மையை நாடாளுமன்றத்திலேயே பேசினான். “தமிழர்கள் இந்தப் பகுதிகளில் மகாராஜாக்கள் போல் வாழ்ந்து வந்தார்கள். ஒரு சிங்கள வியாபாரி கூட அங்கு விரலை நுழைக்க முடியாத அளவிற்கு வளர்ந்து இருந்தார்கள். 25 வருடங்களாக புரையோடிப் போயிருந்த இந்த அநியாயம் அங்கு நிலவி வந்தது. இதை சரி செய்ய ஒரு தீப்பொறி மட்டுமே தேவைப்பட்டது. அந்த தீப்பொறி ஜூலை 24 ஆம் நாள் விழுந்தது”

ஜூலை கலவரத்தைப் பற்றி தமிழீழ தேசியத் தலைவர் பிரபாகரன் அவர்கள் 1984 மார்ச் மாதம் பத்திரிக்கையாளர் அனிதா பிரதாப் அவர்களுக்கு கொடுத்த பேட்டியில் “எங்களை பொறுத்தவரையில் ஜூலை கலவரம் என்பது முன்கூட்டியே நன்கு திட்டமிடப்பட்ட, நன்கு ஒருங்கிணைக்கப்பட்ட, ஆளும் அரசியல் இருக்கின்ற இனவெறி கும்பலால் முன்னெடுக்கப்பட்ட தமிழர்களுக்கு எதிரான இனப்படுகொலையே. முதலில் இந்த இனவெறி கும்பல் மொத்த பணியையும் தமிழீழ விடுதலைப்புலிகள் மீது போடவே முயற்சி செய்தனர். திடீரென அதனை இலங்கையில் இருந்த இடதுசாரி கட்சிகள் மீது சுமத்தினர். உண்மையில் இந்த கொடுமையான உயிரிழப்புகளுக்கு முழுமையாக பொறுப்பேற்க வேண்டியது தற்பொழுது நடந்து கொண்டிருக்கும் அரசில் அங்கம் வகிக்கும் இனவெறி கொண்ட தலைவர்களே.” என்று கூறினார்.

ஜூலை கலவரம் நடைபெற்ற முறையும், அதன் பின்னணியில் இயங்கிய மத மற்றும் அரச அதிகார மையங்களும்:

ஜூலை கலவரம் முன்னெடுக்கப்பட்ட தன்மையைப் பற்றி பல்வேறு மனித உரிமை அமைப்புகளும், தமிழ் கார்டியன் போன்ற பத்திரிகைகளும் விரிவாக அலசியுள்ளனர். இது ஓர் திட்டமிட்டு நகர்ந்த நடவடிக்கையை என்பதற்கு தகுந்த சான்றாக இக்கலவரம் முன்னெடுக்கப்பட்ட நடைமுறையும் திட்டமிடலுமே அமைந்துள்ளது.

1. இதற்கு முன்பு நடைபெற்ற தமிழர்கள் மீதான வன்முறை போல் அல்லாமல் இந்த முறை தமிழர் நடத்தி வந்த கடைகள், வசித்து வந்த வீடுகள், உருவாக்கி வைத்திருந்த சொத்து கட்டமைப்புகள் அனைத்தும் மிகத் துல்லியமாக கண்டறியப்பட்டு தாக்கப்பட்டன.

2. விடுதலைப் புலிகளுக்கு எதிராக எழுந்த உணர்ச்சி என்று அரசு தரப்பில் விளக்கம் கொடுக்கப்பட்டாலும் தாக்குதல்கள் பெரும்பாலும் ஈழத் தமிழர்களின் நிலத்தை விட, இலங்கைத் தமிழர் வாழ்விடங்களை குறி வைத்தே நடத்தப்பட்டன. இதில் மலையக தமிழர்களும் தப்பவில்லை.

3. வியாபார நிறுவனங்கள், மற்றும் கடைகள் முழுவதும் தமிழருக்கு சொந்தமானதாக இருந்தால் கடையோடு சேர்த்து பொருட்கள் கொளுத்தப்பட்டன. அதே நேரம் கடைகள் சிங்களவருக்கு சொந்த கட்டிடமாக இருந்தால், கடையின் பொருட்கள் நடுத்தெருவிற்கு கொண்டுவரப்பட்டு கொளுத்தப்பட்டன.

4. கடையை கொளுத்தும் வன்முறைக்காரர்கள் கொள்ளையடிப்பில் பெரும்பாலும் ஈடுபடுவதில்லை. மாறாக பின்னால் வரும் மற்றொரு கும்பல் கலவரக்காரர்கள் விட்டுச் சென்ற பொருட்களில் இருந்து கொள்ளையடிப்பில் ஈடுபட்டனர்.

5. இவ்வளவு பெரிய கலவரத்தை மிகக் குறுகிய காலத்தில் கட்டமைக்கக்கூடிய வலிமை பொதுமக்களுக்கு கிடையாது. நன்கு திட்டமிடக்கூடிய, கலவர அரசியல் செய்து அனுபவம் பெற்ற அமைப்புகள் மட்டுமே இதற்குறிய ஆயுதங்களையும், எரிபொருள் முதலியவற்றையும் ஏற்பாடு செய்ய முடியும். அவை புத்த மடாலயங்களில் இருந்து கலவரக்காரர்களுக்கு உள்ளூர் சிங்கள அரசியல்வாதிகளால் நேரடியாக விநியோகிக்கப்பட்டன.

6. புத்த மடாலயங்களும், புத்த மடாலய அதிபதிகளும், தலைமை பிக்குகளும் கூட இந்த கலவரத்தில் நேரடி பங்கு பெற்று, அன்பை போதித்த புத்தனை வணங்கும் கையால் படுகொலைகள் செய்தனர்.

7. முதலில் இக்கலவரத்தை தடுக்க பார்த்த காவல்துறையை, உள்ளூர் சிங்கள அரசியல்வாதிகளும், ஜெயவர்த்தனே அரசின் அமைச்சர்களும் நேரடியாக தலையிட்டு அவர்கள் கையை கட்டி போட்டனர்.srilankan soldier black july 19838. ராணுவத்தினர் கலவரக்காரர்களுடன் சேர்ந்து தமிழர்களை படுகொலை செய்வது, படுகொலை செய்யப்படுவது ரசிப்பது, எங்கேயும் மனிதாபிமானம் உள்ள சிங்கள மக்களோ, சிங்கள காவல்துறையோ தடுக்க முயற்சி செய்தால் குறுக்கே நின்று அவர்களை விலகிப் போகச் சொல்வது, தமிழர்கள் தங்களை தனிப்பட்ட முறையில் காப்பாற்றிக் கொள்ள முயன்றால் அவர்களை சரணடைய சொல்லி சுற்றி வளைத்து பயமுறுத்துவது, அப்படி சரணடைந்தால் அவர்களை கலவரக்காரர்களிடம் ஒப்படைத்து கொலை செய்ய வசதியாக வாய்ப்புகளை ஏற்படுத்திக் கொடுப்பது என்று சொந்த தேசத்து மக்களை ஈறும்புகள் போல் கொன்று வேடிக்கை பார்க்கும் காரியத்தை செய்து வந்தனர். மேலும் கலவரக்காரர்களை தடுக்கும் படை உத்தரவு வந்த போது “எங்கள் சகோதரர்களை நாங்களே எப்படி அடிக்க முடியும்?” என்று இராணுவத்தினர் கூறினர்.

9. கலவரக்காரர்களும் தங்களை தடுக்கும் காவல்துறை மற்றும் ராணுவத்தினரிடம் “நாங்கள் இந்த கொலைகளை உங்களுக்காகத்தான் செய்கிறோம்” என்கிற முழக்கத்தை கிளிப்பிள்ளை போல் மீண்டும் மீண்டும் சொல்லி வந்தனர் என்று கண்ணால் கண்ட சாட்சியங்கள் கூறினர். இந்த உணர்ச்சியூட்டும் பிரச்சாரம் கலவரம் நடந்த அத்தனை பகுதிகளிலும் சொல்லி வைத்தார் போல் பயன்படுத்தப்பட்டிருக்கிறது.

10. ஏதிலிகளாக யாழ்ப்பாணத்தை நோக்கி அல்லது பிற ஈழ தமிழர்கள் நிலத்தை நோக்கி பயணிப்பவர்களை மறித்து அவர்கள் போட்டிருக்கும் உடையைத் தவிர அனைத்தையும் பறித்துக் கொண்டு அனுப்பும் வன்முறையை கையாண்டு இருக்கின்றனர்.

11. பெண்கள் மீதான பாலியல் வன்முறைகளும் ஏதிலிகளாக செல்லும் பெண்களிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபடுவதும் என்று இனி இங்கே நம்மால் வாழ முடியாது என்கிற அச்சத்தை ஏற்படுத்த முயன்று அதில் பெரும் வெற்றியை கண்டுள்ளனர். ஏனென்றால் கொழும்பு உள்ளிட்ட கலவர பகுதிகளில் இருந்து வெளியேறி பாதுகாப்பான இடத்தை நோக்கி செல்லும் ஏதிலிகள் பலரின் வாக்குமூலம் இறுதியில் கீழ்கண்டவாறு அமைந்திருந்தது.

“நஞ்சு குடித்து செத்தாலும் இனி தமிழர்கள் நிலப்பரப்பிலேயே சாவோமே தவிர, மீண்டும் பழைய இடங்களுக்கு செல்ல மாட்டோம்”

 எனவே இக்கலவரத்தின் நோக்கம் கொழும்பு, திரிகோணமலை போன்ற பகுதிகளில் பொருளாதார பலம்பெற்று இருந்த தமிழர்களை அங்கிருந்து முழுவதுமாக அப்புறப்படுத்தி அந்த இடத்தில் சிங்களவர்களை வலிந்து குடியேற்றம் செய்வதுதான் என்பது அப்பட்டமாக தெரிகிறது.

12. சிங்கள பொதுச் சமூகம் தன்னெழுச்சியாக இந்த கலவரத்தில் தங்களை ஈடுபடுத்திக் கொண்டது என்று ஜெயவர்த்தனே அரசு மீண்டும் மீண்டும் சொல்லி வந்தாலும், இக்கலவரங்களிலிருந்து தப்பி வந்த ஏதிலிகள் பலரது சாட்சியங்கள் அதற்கு நேர் மாறாக இருக்கின்றன. அவர்கள் கூற்றுப்படி தப்பிப் பிழைத்தவர்கள் பெரும்பாலும் அருகில் இருந்த சிங்கள மக்களின் உதவியோடு மறைந்திருந்தே தப்பியுள்ளனர். அதேபோல் இஸ்லாமிய தமிழர்களின் பெரும்பெங்கும் இதில் பொதிந்துள்ளது. எனவே ஜெயவர்த்தனே அரசு கூறுவது போல் இது சிங்கள மக்களின் தன் எழுச்சியான உணர்வால் ஏற்பட்ட கலவரம் அல்ல என்பது புலன் ஆகிறது.

இன்னும் தீர்வு கிடைக்கவில்லை:

ஜூலை கலவரத்தை நடத்திய சூத்திரதாரி ஜெயவர்த்தனே மற்றும் அவரது அரசு அமைச்சர்கள்தான் என்று நன்றாகத் தெரிந்திருந்தாலும், பலம் இல்லாத எதிர்க்கட்சி மற்றும் புலிச் சட்டம் என்று அழைக்கப்பட்டு இருந்த தீவிரவாத தடைச் சட்டம் காரணமாக ஒடுக்கப்பட்டிருந்த சமூக அமைப்புகள் என கேள்வி கேட்க ஆள் இல்லாத தருணத்தில் சர்வதேச சமூகமும் கண்டனம் ஏதும் தெரிவிக்கவில்லை. மாறாக அதன் பின்வரும் காலங்களில் இலங்கைக்கு மேலும் பல்லாயிரம் கோடி ரூபாய் நிதி உதவி கொடுத்தது தான் வெட்ககரமான வரலாற்று பதிவு.

அதன் பிறகு வந்த அரசுகளும் கண்துடைப்புக்கு ஜூலை கலவரத்தை பற்றின விசாரணை செய்கிறோம் என்ற பெயரில் காலம் கடத்தவே செய்தனர். இந்த நாள் வரை ஜூலை கலவரத்திற்கு நேரடியாக மற்றும் மறைமுகமாக காரணமான ஒருவர் கூட தண்டிக்கப்படவில்லை.

இறுதியாக Sri Lanka’s Week of Shame என்ற அறிக்கையின் ஒரு பகுதியை நினைவு கூறுவதன் மூலம் ஜூலை கலவரத்தை மிக எளிமையாக புரிந்து கொள்ள முடியும்.

“யாரோ ஒருவர் முழுவதையும் திட்டமிட்டு ஒரு வாய்ப்புக்காக மட்டுமே காத்திருந்தார் என தோன்றுகிறது அந்த சந்தர்ப்பம் ஜூலை 23-ஆம் தேதி இரவு சுமார் 11:00 மணிக்கு 13 இராணுவத்தினர் கொல்லப்பட்டதும் அவர்களுக்கு கிடைத்தது.”

- மே பதினேழு இயக்கம்

Pin It