கோவையில் உணர்ச்சிப் பேரணி
இந்திய அரசே! இனப்படுகொலை செய்கிற சிங்கள அரசுக்கு ஆயுதங்களைக் கொடுக்காதே| என்ற குரலை தமிழகம் எங்கும் ஒலிக்கச் செய்ய முனைப்போடு பணியாற்றுவோம் என்று பெரியார் திராவிடர் கழகத் தலைவர் கொளத்தூர் தா.செ.மணி அறிவித்தார்.
கோவையில் நவம்பர் 10 சனிக்கிழமை நடைபெற்ற பிரிகேடியர் சு.ப.தமிழ்ச்செவல்வன் உள்ளிட்ட போராளிகளுக்கான வீரவணக்க ஊர்வலத்தின் இறுதியில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் கொளத்தூர் தா.செ.மணி பேசியதாவது:
சிறிலங்கா அரசாங்கத்துக்கு தமிழரைத் தவிர எதிரிகள் யாரும் இல்லை என்று தெரிந்தும் இந்திய அரசாங்கம் ஆயுதம் கொடுக்கிறது. தமிழகத் தமிழர்களாகிய நாம் முன்வைக்கிற கோரிக்கைகள் நிறைய உண்டு. புலிகள் மீதான தடையை நீக்க வேண்டும்- தமிழீழத்தை அங்கீகரிக்க வேண்டும்- என்பது போன்ற கோரிக்கைகள் உண்டு.
இருப்பினும் தற்போது நமக்கான ஒற்றை இலக்காக-எங்கும் ஒலிக்க வேண்டிய குரலாக இந்திய அரசே! இனப் படுகொலை செய்கிற சிங்கள அரசுக்கு ஆயுதங்களைக் கொடுக்காதே| என்பதுதான் இருக்க வேண்டும்.
அதற்கான கையெழுத்தியக்கத்தின் மூலமாக மக்களிடம் இந்தக் குரலை ஒலிக்கச் செய்வோம். அதுவே தமிழ்ச்செல்வன் உள்ளிட்ட போராளிகளுக்கு நாம் செலுத்தும் உண்மையான வீரவணக்கம் ஆகும்.
எங்களின் வரிப்பணத்தில் எங்கள் ஆதரவினால் இயங்குகிற இந்திய அரசே! சிங்களவனுக்கு ஆயுதங்கள் வழங்காதே என்ற ஒற்றைக் கோரிக்கையை உறுதியோடு முனைப்போடு முன்னெடுத்துச் செல்வோம் என்றார் கொளத்தூர் மணி.
பெரியார் திராவிடர் கழகப் பொதுச்செயலாளர் கோவை கு.இராமகிருட்டிணன்:
இந்திய இராணுவம் இந்தியா திரும்பியபோது தமிழர்களைப் படுகொலை செய்த இந்திய இராணுவத்தை வரவேற்கமாட்டேன் என்று அப்போது முதல்வராக இருந்த கலைஞர் தெரிவித்தார். அவரை தேசத்துரோகி என்றார்கள்.
இலங்கைக்கு அமைதிப்படையை ராஜீவ் அனுப்பினார். ஆனால் பேச்சுவார்த்தைக்கு வரும் பிரபாகரனை சுட்டுக்கொல்ல தீட்சித் உத்தரவிட்டதாக அப்போதைய அமைதிப்படை தளபதி ஹர்கிரத் இப்போது ஒப்புதல் தெரிவித்துள்ளார்.
அப்படியானால் யார் தேசத் துரோகி? இப்போது ஒப்புக் கொள்ளும் நீங்களும் தேசத்துரோகிகள் தானே!
இந்திய இராணுவத்தை முதல்வராக கலைஞர் இருந்தும் வரவேற்கவில்லை அதற்குப் பின்னால் அதே குற்றச்சாட்டுகளை அவர் மீது வைத்தபோதும் தமிழக மக்கள் அவருக்கு வாக்களிக்காமல் இல்லை. இரண்டு முறை அவரை முதலமைச்சராக்கினார்கள்.
இந்த அரசை மிரட்டுவதன் மூலம் நம்மைப் போன்ற இயக்கங்களை தமிழர்களுக்காக் குரல் கொடுப்பதை தடுக்க முடியும் என்று நினைக்கிறார்கள்
புலிகள் ஒரு போதும் அழ மாட்டார்கள். தமிழ்நாட்டின் முகாம்களில் கொளத்தூர் மணி அண்ணன் தோட்டத்திலே தமிழக மக்களின் அரவணைப்பில் வளர்க்கப்பட்ட எத்தனையோ போராளிகளை புலிகள் இழந்திருக்கிறார்கள். அவர்கள் விழ விழ எழுகின்றவர்கள். இதோ இப்போதுகூட சிறுவனாக இருக்கின்ற தமிழ்ச் செல்வனின் மகன் சீருடையில் நிற்கும் புகைப்படங்கள் வெளிவந்துள்ளன.
தென்னாப்பிரிக்காவின் நெல்சன் மண்டேலா போர் நடத்தியதில்லை. அராபத்துக்கு உலகம் முழுவதும் உள்ள முஸ்லிம் நாடுகள் ஆதரவு கொடுத்தன. ஆனால் எந்த நாட்டின் உதவியும் இல்லாமலேயே சொந்தமண்ணிலே 30 ஆண்டுகாலமாக பிரபாகரன் மட்டுமே போராடி வருகிறார் என்றார் இராமகிருட்டிணன்.
திராவிடர் இயக்க தமிழர் பேரவையின் அமைப்பாளர் பேராசிரியர் சுப. வீரபாண்டியன்:
சிங்கள இனவெறியர்களே! விளைநிலங்கள் மீது ஆயிரக்கணக்கிலே குண்டுகளை வீசிய உங்களால் புலிகளின் நெஞ்சுரத்தின் மீது குண்டு போட முடிந்ததா?
புலிகளின் முதல் மாவீரன் சங்கர் இந்த தமிழ் மண்ணிலேதான் உயிர்விட்டான். இந்த மண்ணுக்கும் மாவீரர்களுக்குமான உறவு அத்தகையது.
ஈழத்தில் 18 ஆயிரம் போராளிகளை மாவீரர்களாக்கி, ஏறத்தாழ 1 இலட்சம் பொதுமக்கள் படு கொலைக்குள்ளாக்கியிருக்கிறார்கள். தங்கள் உயிரைப் பற்றி கவலைப்படாது போராடுகிறவர்களைப் பற்றி பேச சுப்பிரமணிய சாமிகளுக்கும் துக்ளக் சோக்களுக்கும் தகுதி இருக்கிறதா? என்றார் அவர்.
தமிழ்த் தேச விடுதலை இயக்கத்தின் தலைவர் தியாகு தனது உரையில்:
இந்தியாவில்தான் ஈடு செய்ய முடியாத இழப்பு என்கிறோம். ஆனால் 20 ஆயிரம் மாவீரர்களின் இழப்பை விடுதலைப் புலிகள் ஈடு செய்து எழுந்து நிற்கிறார்கள்.
20 பேருடன் தொடங்கப்பட்ட அந்த இயக்கம் இன்று 20 ஆயிரம் பேரை மாவீரர்களாக்கியிருக்கிறது.
வங்கக் கடல் அன்று சோழமன்னனின் ஏரியாக இருந்தது. சோழர்கள் காலத்துக்குப் பின்னர் புலிப்படையிடம் தான் கப்பற்படை உள்ளது. உலகில் எந்த ஒரு விடுதலை இயக்கமும் சாதிக்காத அதிசயமாக விடுதலைப் புலிகள் வான்படை வைத்துள்ளனர். முப்படையை நடத்துகிறார்கள் விடுதலைப் புலிகள்.
அனைத்துலக நாடுகளிடம் ஆயுதங்களை வாங்கி வாங்கி குவிக்கிறது சிறிலங்கா அரசாங்கம். ஆனால் அவர்களுக்கு விலைக்கு கிடைக்காத ஒன்று உள்ளது. அது புலிகளின் வீரம். ஒரு இலட்சம் இந்தியப் படை அங்கே இறங்கியதே! என்ன நடந்தது? பின்னங்கால் பிடரியிலே ஒடிவரவில்லையா? எத்தனையோ இழப்புகளுக்கும் வலிகளுக்கும் பின்னர் ஈழம் என்கிற அந்தக் கனவை நிறைவேற்ற நமக்கும் பொறுப்பு உண்டு.
தமிழீழத் தாயகத்தின் 70 விழுக்காடு பகுதியை விடுதலைப் புலிகள் மீட்டெடுத்திருக்கிறார்கள். இன்னும் ஒருபகுதியைத்தான் அவர்கள் மீட்க வேண்டும். ஆனால் அதற்குத் தடையாக இருக்கிறார்கள்- யார்? இந்தியாதான். இந்தியாதான் வெண்ணெய் திரண்டு வரும்போதெல்லாம் தாழியை உடைக்கிறவர்களாக இருக்கிறார்கள்.
தமிழீழ தேசத்தை விடுவிப்பதற்கான போராட்டம் என்பது தெற்காசியாவின் சோசலிசப் புரட்சிக்கான அடித்தளமாக அமையும் என்று ஒரு விடுதலைப் புலி வீரர் கூறியதாக நெடுமாறன் தனது நூலில் பதிவு செய்துள்ளார்.
அதனால் இந்திய வல்லாதிக்கமும் அமெரிக்க வல்லாதிக்கமும் சிங்களப் பேரினவாதத்துக்கு ஆயுதங்களை வழங்குகிறது.
இந்த முக்கூட்டு பாசிச அச்சை முறிக்கிற முதல் பொறுப்பு நமக்கு இருக்கிறது. இந்திய அரசை நெருக்கி நிர்பந்தித்து தமிழீழ மக்களின் போராட்டத்தை ஏற்கச் செய்ய வேண்டும். சிங்கள அரசாங்கத்துக்கு இராணுவ உதவி செய்வதைத் தடுத்து நிறுத்தியாக வேண்டும். அதுவே தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு நாம் செய்கின்ற உதவியாகும். அதுவே சு.ப.தமிழ்ச்செல்வனுக்கு நாம் செலுத்தும் உண்மையாக வீரவணக்கமாக இருக்கும்.
அய்.நா. அமைதிப்படையில் ஹைட்டி நாட்டுக்குப் போன சிங்கள சிப்பாய்கள் பெண்களை வல்லுறவுக்குள்ளாக்கியுள்ளார்கள் என்று குற்றம்சாட்டி 104 பேர் திருப்பி அனுப்பப்பட்டிருக்கிறார்கள்.
இதையெல்லாம் இந்திய அரசிலே இருப்பவர்கள் படிக்கிறார்களா? எம்.கே.நாரா யணனுக்கு தெரியுமா? சிவசங்கர் மேனனுக்கு தெரியுமா? ஏ.கே.அந்தோணிக்கு இது தெரியுமா?
சிறிலங்கா இராணுவத் தளபதி சரத் பொன்சேகா என்கிற படை இலக்கு மீது தாக்குதல் நடத்திய போது இந்திய அமைச்சர் பிரணாய் முகர்ஜி கண்டிக்கத்தக்க செயல் என்கிறார். உலகத் தமிழினம் அதிர்ந்ததே செஞ்சோலைப் படுகொலைக்காக- தமிழக சட்டமன்றத்திலே தீர்மானம் நிறைவேற்றினோமே- அப்போது ஒரு சொட்டுக் கண்ணீராவது வடித்ததா இந்திய அரசு?
சிங்களவர்களை இந்திய அரசாங்கத்திலே உள்ளவர்கள் தங்களது ஆரியக் கூட்டாளிகளாக கருதுவதுதான் உண்மை.
இதோ இந்தக் கூட்டத்திலும் கூட அண்ணா திமுகவினர் பலர் வந்துள்ளனர். ஜெயலலிதா மட்டும்தான் சிங்களத்தின் நகலாக உள்ளார்.
ராஜீவ் காந்திக்காக அழுகிறவர்களே!
ஈழத்தின் மீது ஏன் ராஜீவ் படையெடுப்பு நடத்தினார்? அது என்ன உன் அப்பன் நாடா? யாரைக் கேட்டுக் கொண்டு நீ இந்திய-இலங்கை ஒப்பந்தத்தை வகுத்தாய்?
அந்த அமைதிப்படை அங்குபோய் அமைதியை உண்டாக்கவில்லை. தமிழ் மக்களை அழித்தது. இந்திய - இலங்கை ஒப்பந்தத்தின் சிறிய சரத்துகளைத்தானே தம்பி திலீபன் நிறைவேற்ற வலியுறுத்தி உண்ணா நோன்பிருந்தான். பட்டினியை ஆயுதமாக்கி மெழுகுவர்த்தி மெழுகுபோல் உருகி 12 ஆம் நாள் மாண்டு போனான் திலீபன். சாகட்டும் என்று விட்டவர்கள்தான் இந்த காந்தி பிறந்த தேசம்.
பிரபாகரனை சுட்டுக்கொல்ல உத்தர விட்டதாக தீட்சித் கூறும்போது, அது பிரதமர் ராஜீவின் உத்தரவு என்றார்.
அப்படி உண்மையைச் சொல்லியிருக்கிற ஹர்கிரத் சிங் மீது இப்போது ஏதும் வழக்குப் போட்டிருக்கிறீர்களா? இல்லையே...
தமிழக மக்களின் ஒருமித்த கோரிக்கையாக- சிங்களவனுக்கு ஆயுதமே வழங்காதே என்று நாம் வலியுறுத்த வேண்டும்.
சுப.தமிழ்ச்செல்வன் மறைவுக்கு இரங்கல் தெரிவித்த கலைஞரை நாம் பாராட்டுகிறோம்.
கலைஞர் அவர்களே! நீங்கள் கவிஞர்- முதல்வர்- கட்சியின் தலைவர்.
அந்த முறையிலே - கடந்த 87 ஆம் ஆண்டு இந்தியப் படையெடுப்பை எதிர்த்து நீங்கள் நடத்திய பரப்புரை இயக்கத்தை நாங்கள் மறக்கவில்லை-
பொய்ச் செய்திகளை வெளியிட்ட தொலைக்காட்சிப் பெட்டிகளை மேடைகளில் உடைத்ததை நாங்கள் மறக்கவில்லை.
பொடாவை எதிர்க்க முதல் கையெழுத்துப் போட்ட முதல்வர் கலைஞர் அவர்களே! இதோ சிங்களவனுக்காக ஆயுதம் கொடுக்காதே என்று நாங்கள் தொடங்கும் இயக்கத்திற்கும் நீங்களே முதல் கையெழுத்துப் போட வேண்டும் என்றார் தியாகு.