தமிழ்நாட்டின் பார்ப்பன ஊடகங்கள் - விடுதலைப்புலிகளை பயங்கரவாதிகளாக சித்தரித்து - ராஜபக்சேயின் ஆட்சியை நியாயப்படுத்திவரும் நிலையில் - சிங்களர் சமூகத்தைச் சார்ந்த மார்க்சிஸ்ட் கட்சித் தலைவர் - இலங்கையில் அரச பயங்கரவாதத்தை ஆதாரங்களுடன் அம்பலப்படுத்தினார். இந்த அடக்கு முறைக்கு இந்தியா முழு ஆதரவு தருவதை உறுதிப்படுத்திய அவர், இந்திய இடது சாரிகளும், தொழிற் சங்கங்களும் இதைக் கண்டிக்க முன்வர வேண்டும் என்று வலியுறுத்தினார்.

‘விடுதலை சிறுத்தைகள்’ கடந்த ஜன.25 ஆம் தேதி ‘கண்டனமும் இரங்கலும் தேசத் துரோகமா’ என்ற தலைப்பில் எழுச்சியான மாநாட்டை சென்னையில் நடத்தியது. பல்லாயிரக்கணக்கில் மக்கள் திரண்ட அந்த மாநாட்டில் இலங்கையின் ‘புதிய இடதுசாரி முன்னணி’ என்ற மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மத்தியக் குழு உறுப்பினரும் - சிங்களருமான ரணத்குமார சிங்க உரையாற்றினார். அவரது ஆங்கில தமிழ் உரையின் வடிவம்:

ஆறு ஆண்டுகளாக நார்வே சமரசத்தால் உருவாக்கப்பட்ட போர் நிறுத்த ஒப்பந்தத்தை கடந்த ஜனவரி 2ஆம் நாள் மகிந்த ராஜபக்ச, ஒருதலைபட்சமாக முறித்துக் கொண்டு விட்டார் என்பது உங்களுக்குத் தெரியும்.

இந்த ஒப்பந்தம், சிறிலங்கா பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்கும் தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனுக்கும் இடையே இருவரும் கைச் சாத்திட்டு ஏற்றுக் கொண்ட ஒப்பந்தம் ஆகும்.

இப்படி தமிழர்களோடு செய்து கொள்ளப்பட்ட ஒப்பந்தங்களை சிறிலங்கா ஒருதலைப்பட்சமாக முறித்துக் கொள்வது இது முதல் முறையல்ல. பல முன்னுதாரணங்கள் உண்டு.

1958ஆம் ஆண்டில் சிறிலங்கா அரச தலைவர் பண்டாரநாயக்கவுக்கும் செல்வ நாயகத்துக்குமிடையே உருவான ஒப்பந்தமும் டட்லி சேனநாயக்கவுக்கும் செல்வநாயகத்துக்கும் இடையே 1966இல் உருவான ஒப்பந்தமும் இப்படித்தான் முறிக்கப்பட்டது.

தமிழர்கள், இனி ஒப்பந்தங்களைப் போட்டுப் பயனில்லை என்று முடிவெடுத்து ஆயுதப் போராட்டத்தைத் தொடங்க முடிவெடுத்ததற்கு காரணமே -ஏற்றுக் கொண்ட ஒப்பந்தங்களை இப்படி சிறிலங்கா மதிக்காமல் செயற்பட்டதுதான்.

அதன்பிறகுதான் தமிழர்கள் தங்களின் பாரம்பரிய பிரதேசத்துக்கு சுயநிர்ணய உரிமை கோரும் போராட்டத்தைத் தொடங்கினார்கள்.

இந்த யுத்தத்தினால் எங்கள் நாட்டில் கருத்துரிமை முற்றாக அழிக்கப்பட்டுவிட்டது. தமிழர்களின் கருத்துரிமை மட்டுமல்ல- சிங்களவர்- முஸ்லிம்களின் கருத்துரிமையும் பறிக்கப்பட்டுவிட்டது. ஒருநாட்டில் ஜன நாயகம் வளர்கிறது என்பதற்கான அடையாளமே கருத்துரிமைதான்.

யுத்தத்தில் முதல் பலிகடாவாவது கருத் துரிமைதான் என்று பல சிந்தனையாளர்கள் கூறியுள்ளனர். கருத்துரிமை என்பது உலகம் ஏற்றுக்கொண்ட ஒரு சர்வதேச உரிமை.

இனம், மொழி, மதம் என்று பாகுபாடு காட்டாமல் அனைவருக்கும் கருத்துரிமை வழங்கப்பட வேண்டும். ஆனால் எங்கள் நாட்டில், குடிமக்களின் அடிப்படை உரிமைகள் பறிக்கப்பட்டுவிட்டன. சுதந்திரத்துக்கான உரிமை இல்லை- தகவல்களை அறியக் கூடிய உரிமைகள் இல்லை.

அதுவும் ஒடுக்குமுறை யுத்தம் என்று வந்துவிட்டால் பொய்யும், திரிபும் இல்லாமல் அதனை நடத்தவே முடியாது.

எனவே ஒடுக்குமுறைகள் வெளி உலகுக்கு தெரிவதும் இல்லை. தமிழ்ப் பகுதியில் மக்களின் அவலங்கள் வெளியே தெரிவதில்லை.

தமிழ்ப் பகுதியில் மட்டுமல்ல- இலங்கையின் தெற்குப் பகுதியில் ஏதோ, சுதந்திரம் இருப்பது போன்ற தோற்றம் இருக்கிறதே தவிர உண்மையில் அங்கும் சுதந்திரக்காற்று வீசவில்லை. கொழும்பில் ஊடக மையங்கள் இயங்குகின்றன. சில ஊடகங்களை அரசே நேரடியாக நடத்துகிறது. பல ஊடகங்களைத் தனியார் நடத்துகின்றனர்.

அவற்றில் சுதந்திரமாக செயல்படும் ஊடகங்களும் அரசை ஆதரித்து செயல்படும் ஊடகங்களும் உண்டு.

ஆனால், இந்த ஊடகங்களுக்கு முழு உரிமை கிடையாது. கடும் கட்டுப்பாடு களுடன்தான் அவைகள் செயல்படுகின்றன. அரசு தனது அரசுக்குரிய அதிகாரத்தை மட்டுமல்ல, பொருளாதார அதிகாரத்தையும் பயன்படுத்தி, ஊடக உரிமைகளை ஒடுக்குகிறது.

அரசுக்கு எதிராக செய்தி வெளியிட்டால், அரசு விளம்பரங்களும் அரசு வழங்கும் சலுகைகளும் நிறுத்தப்பட்டு விடுகின்றன.

தனக்குச் சாதகமாக செயல்படும் ஊடகங்களுக்கு அரசு சிறப்பு சலுகைகளை வழங்கி வருகிறது. ஒடுக்குமுறைகளை நேரடியாகவும் மறைமுகமாகவும் அரசே கட்டவிழ்த்துவிட்டுள்ளது.

நேரடியாக சிறிலங்கா அரசாங்கம் நிகழ்த்தும் ஒடுக்குமுறைகளுக்கு ஏராளமான சான்றுகள் இருக்கின்றன.

கடந்த ஆண்டு பல ஊடகவியலாளர் களை சிறிலங்கா அரசு கைது செய்தது. கடந்த ஆண்டில் மட்டும் 9 ஊடகவிய லாளர்கள் கொல்லப்பட்டனர்.

லீடர் என்ற பத்திரிகைக் குழுமத்தின் அலுவலகம் தீ வைத்து நாசமாக்கப்பட்டது. இந்தப் பத்திரிகை அரசை எதிர்த்து வந்ததுதான் காரணம். இந்தப் பத்திரிகை அலுவலகமானது சிறிலங்காவின் விமானப் படைத்தளத்துக்கு மிக அருகில் அதி உயர் பாதுகாப்பு வலயத்தில் இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது. அப்படி இருந்தும் அடையாளம் தெரியாத நபர்கள் உள் நுழைந்து தீ வைத்தனர்.

ஏபிசி என்ற வானொலி தனது ஒலி பரப்பை நிறுத்திக் கொள்ள வேண்டும் என்று சிறிலங்காவின் தகவல் ஒலிபரப்புத்துறை உத்தரவிட்டது. அந்த வானொலியின் 5 அலைவரிசை ஒலிபரப்புகளும் உடனடியாக நிறுத்தப்பட்டன. ஏன்?

அரச தலைவர் ராஜபக்சவின் சொந்த கிராமத்துக்கு அருகே உள்ள ராமினிதன்னா என்னும் கிராமத்தில் விடுதலைப் புலிகள் தாக்குதல் நடத்தினர் என்ற செய்தியை ஒலிபரப்பியதற்காக இந்த நடவடிக்கை. இவை நேரடியான ஒடுக்குமுறைக்கு சில உதாரணங்கள்.

மறைமுகமான அடக்குமுறைகளுக்கும் பல சான்றுகள் உண்டு. உதாரணமாக,

எதிர்க்கட்சிகளின் கருத்துகளையும் வெளியிட்ட “ஜனஹதா” “டி.என்.எல்” “ரதுயிரா” உள்ளிட்ட தொலைக்காட்சி ஒளி பரப்புகள் அரசின் பல ஒடுக்குமுறைகளை சந்தித்துக் கொண்டிருக்கின்றன. இந்தத் தொலைக்காட்சிகள் ஒளிபரப்பும் “நேரடி விவாதங்கள்” நிகழ்ச்சிகளை, பெருமளவில் மக்கள் பார்க்கிறார்கள். கடந்த ஓராண்டு காலமாக, இந்த விவாதங்களில் பங்கேற்க எதிர்க்கட்சியினரை அழைக்கக் கூடாது என்று சிறிலங்கா அரசாங்கம் மிரட்டி வருகிறது.

கடந்த காலங்களில் புதிய இடது முன்னணி (என்.எஸ்.பி.பி.) கட்சியின் பொதுச்செயலாளருக்கு இந்த விவாதங் களில் பலமுறை பங்கேற்கும் வாய்ப்புகள் வழங்கப்பட்டன. சிறிலங்கா அரசாங்கம் பற்றிய விமர்சனங்களை அவர் முன் வைத் தார். உண்மைகள் மக்களுக்குத் தெரியக் கூடாது என்பதற்காக, என்.எஸ்.எஸ்.பி கட்சிப் பிரதிநிதிகளை அழைக்கக் கூடாது என்று மகிந்த அரசு மிரட்டிவிட்டது.

அதே போல் இந்த நேரடி விவாதங்களில் பங்கேற்று வந்த தமிழ்த் தேசியக் கூட்டமைப்பைச் சேர்ந்த ரவிராஜ், ஐக்கிய தேசியக் கட்சியின் மகேஸ்வரன் போன்றோர் விவாதங்களில் பங்கேற்கக் கூடாது என்பதற்காக மறைமுகத் தடை விதித்தது. அந்தத் தமிழர்களின் பிரதிநிதிகள் அழகாக சிங்கள மொழியில் பேசக் கூடியவர்கள்.

தமிழர்களின் சுயநிர்ணய உரிமைப் போராட்டத்தின் நியாயங்களை சிங்கள மொழியில் அவர்கள் எடுத்து வைத்தார்கள். இந்த நியாயங்களை சிங்களவர்கள் உணர்ந்துவிடக் கூடாது என்ற நோக்கத்தில், சிறிலங்கா அரசு அவர்களின் கருத்துரிமையைப் பறித்தது. ஊடகங்களில் கருத்து தெரிவிக்கும் உரிமைகளைப் பறித்தது மட்டுமல்ல- அவர்களின் உயிர் வாழும் உரிமைகளே பறிக்கப்பட்டுவிட்டன. அவர்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளனர். அந்தப் படுகொலைக்கு தாங்கள் பொறுப் பல்ல என்று சிறிலங்கா அரசாங்கம் கூறுகிறது. ஆனால் அரசாங்கத்தை எதிர்த்த வர்கள், அரசு அடக்குமுறையைக் கண்டித்தவர்கள்தான் படுகொலைக்கு உள்ளாகிறார்கள்.

இது யுத்தத்தின் கொள்கைகளில் ஒன்றாக ஏற்கப்பட்டு ஒருவர் பின் ஒருவராக கொல்லப்படுகிறார்கள்.

அரசை விமர்சிக்கிற திரைப்படங்கள் கூட அடக்குமுறைகளைச் சந்திக்கின்றன. அந்தத் திரைப்படங்களை வெளியிடுவதற்கு திரையரங்கங்கள் மறுக்கப்படுகின்றன.

தொழிற்சங்கங்களும் சுதந்திரமாக செயல்பட முடியாது. சிறிலங்கா அரசாங்கமானது நேரடியாகவும் மறைமுகமாவும் பல்வேறு சட்டங்களின் வழியாக ஒடுக்கி வருகிறது.

தலைமை நீதிமன்றமும் ஏனைய நீதித்துறை நிறுவனங்களும் தொழிற்சங்க உரிமைகளுக்கு எதிராக பல தீர்ப்புகளை வழங்கியுள்ளன.

சிறிலங்காவின் சில அமைச்சர்களே, கருத்துரிமைக்கு எதிராக களத்தில் இறங்கி செயற்படுகின்றனர்.

கடந்த டிசம்பர் மாதம், சிறிலங்காவின் தொழிலாளர் நலத்துறை அமைச்சர் மெர்வின் சில்வ, அரசாங்கம் நடத்தும் “ரூப வாகினி” தொலைக்காட்சி நிலையத்துக்குள் நுழைந்து, செய்தி ஆசிரியரைத் தாக்கினார். அவரது செய்தியை “ரூபவாகினி” ஒளிபரப்புவதில்லை என்பதே காரணம். ஆத்திரமடைந்த தொலைக்காட்சி நிலைய ஊழியர்கள், அமைச்சரைச் சூழ்ந்து கொண்டு முற்றுகையிட்டனார். தொலைக்காட்சி நிறுவனத் தலைவர் அறைக்கு ஓடிப்போய் அமைச்சர் பதுங்கிக் கொண்டார். பிறகு இராணுவமும் காவல்துறையினரும் வந்து அமைச்சரை விடுவித்தனர். எதிர்த்து நின்ற தொலைக்காட்சி ஊழியர்கள், செய்தி யாளர்களுக்கு எதிராக அரசாங்கம் இப்போது நடவடிக்கைகளில் இறங்கியுள்ளது. தாக்குதலுக்கு வந்த அமைச்சர், அவர் தாக்குதலுக்கு அழைத்து வந்த குண்டர்கள் மீது எந்த நடவடிக்கையும் இல்லை. இது தான் எங்கள் சிறிலங்கா நாட்டினது நிலை. அங்கு நிலைமை மிக மிக மோசமானதாக பயங்கரமாக உள்ளது. இந்த நிலையில் சர்வதேச சமூகம், இதை வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கக் கூடாது என்று கேட்டுக் கொள்கிறோம்.

குறிப்பாக, இந்தியா- சிறிலங்காவின் மனித உரிமை மீறல்களை எதிர்த்துத் தலையிட்டு கண்டிக்க வேண்டும். மனித உரிமைகளும் அடிப்படை உரிமைகளும் மறுக்கப்பட்ட எங்களுக்காக- சிறிலங்காவின் மனித உரிமை மீறல்களுக்கு எதிராக - இந்தியா தலையிட வேண்டும்.

எங்களின் நண்பர்களாக- தோழர்களாக இந்தியாவில் இருக்கும் கம்யூனிஸ்ட் கட்சிகளும் இடதுசாரி அமைப்புகளும் தொழிற்சங்கங்களும் ஊடகங்களும் இந்திய அரசுக்கு இதற்கான அழுத்தத்தை தர வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.

இந்தக் கோரிக்கை மிகமிக அவசியமானது. அவசரமானது. காரணம் எங்கள் சிறிலங்கா நாட்டில், கருத்துரிமைகளை நேரடியாகவும்- மறைமுகமாகவும் ஒடுக்கி வரும் மகிந்த அரசாங்கத்துக்கு பேராதரவு தந்து வருவது- இந்திய அரசுதான்.

“பயங்கரவாதத்துக்கு எதிரான யுத்தம்” என்ற முழக்கத்தோடு இந்தியா தனது ஆதரவை சிறிலங்காவுக்கு தந்து வருகிறது.

நான் ஒன்றை இங்கே திட்டவட்டமாகத் தெரிவித்துக் கொள்ள விரும்புகிறேன்.

சிங்கள பௌத்த பிக்குகளின் இன வெறியும் பயங்கரவாதமும்தான் விடுதலைப் புலிகளை ஆயுதம் தூக்க வைத்தது.

அந்த இனவெறி பௌத்த பிக்குகள் மற்றும் சிறிலங்கா அரச பயங்கர வாதத்துக்கான எதிர்வினைதான் விடுதலைப் புலிகள் நடத்தும் யுத்தம்.

எனவே, விடுதலைப் புலிகள் இயக்கத்தை மட்டும் தனிமைப்படுத்தி பயங்கரவாத முத்திரை குத்தக் கூடாது-

தோழர்களே!

ஒரே ஒரு கேள்வியோடு நான் என் உரையை நிறைவு செய்கின்றேன்.

இடதுசாரிகளும் தொழிற்சங்கங்களும் குறிப்பாக இந்தியாவின் கம்யூனிஸ்ட் கட்சிகள்- சிறிலங்காவின் ஒடுக்குமுறைக்கு எதிராக இந்தியா தலையிட வேண்டும் என்று ஏன் வற்புறுத்தாமல் ஒதுங்கி நிற்கிறீர்கள்? கருத்துரிமைப் பறிப்புகளை ஏன் கண்டிக்கத் தயங்குகின்றீர்கள்? என்றார் அவர்.

Pin It