ஆந்திர மாநிலத்தில் குப்பம் கிராமத்தின் ஸ்ரீநிவாச வனம் என்ற இடத்திலுள்ள திராவிடப் பல்கலைக்கழகமும் காலச்சுவடு அறக்கட்டளையின் பாரதி 125, ஆகிய இரு அமைப்புகளும் இணைந்து மார்ச் 30, 31 தேதிகளில் “புதுக்கவிதையில் பெண் கவிஞர்கள்” என்ற தலைப்பில் கருத்தரங்கம் நடத்தினர். கருத்தரங்கின் ஆரம்பமாக ஒலிக்கப்பட்ட பாடல், கர்நாடகாவின் பாரம்பரியப் பாடலின் இசை வடிவில் தெலுங்கு, கன்னடம், தமிழ், மலையாளம் ஆகிய நான்கு மொழிகளின் புகழ்பாடி எல்லா மொழிகளுக்கும் தினந்தோறும் திருவிழா என்று முடிக்கப்பட்டது. துணை வேந்தர் திரு ஜி. லட்சுமி நாராயணா, தமிழ்த்துறைத் தலைவர் எழுத்தாளர் தமிழவன், திரு பத்மநாபன், திரு. விஷ்ணு குமார் கருத்தரங்கு சிறப்புறப் பணியாற்றினர்.

துரை சீனிச்சாமி: ‘பெண் கவிதை புலன் நெறி’ என்ற தலைப்பில் கட்டுரை வாசித்தார். சங்ககாலப் பெண் கவிஞர்களின் மொழியில் வெளிப்படுத்தப் பட்டிருந்த கவிதை வரிகளை நினைவு கூர்ந்தார். வெள்ளி வீதியாரின் கவிதை எடுத்தாளப்பட்டது. குவளைக் கண்ணன்: ‘சில கவிதைகளும் ஒரு கேள்வியும்’ என்ற தலைப்பில் கட்டுரை வாசித்தார். பெண்கள் கவிதைகளில் எழுதப்படும் உடலரசியல் பாலியல் உணர்வுகள் பற்றி வாசித்தார். கட்டுரையின் கடைசியில் இவ்வகை எழுத்துக்கள் தன்னைத் தொந்தரவுக்கு உள்ளாக்குவதாகவும் ஒரு வித ஒவ்வாமையைத் தருவதாகவும் கூறினார். மேலும், தன்னுடைய நண்பர்களுக்கும் அதே மன நிலையை ஏற்படுத்துவதாக சொன்னதாக கூறினார்.

பத்மாவதி விவேகானந்தன்ஙி ‘கனிமொழி கவிதைகள் ஒரு பார்வை’ என்ற தலைப்பில் கட்டுரை வாசித்தார். எப்போதும் எல்லோராலும் குறிப்பிடப் படும் சில கவிதையையும் இன்னமும் சில கவிதை களையும் எடுத்துக்காட்டி கனிமொழியின் கவிதைகள் புதுக்கவிதையின் போக்குக்கு ஒரு முன் மாதிரி என்றும் முடித்திருந்தார். வெண்ணிலா: ‘பெண் கவிதைகளில் வாழ்வியல் சிக்கல்’ என்ற தலைப்பில் கட்டுரை கொடுத்தார். பெண் மற்றும் பிற உணர்வுகள், உறவுகள், பெண் மற்றும் தாய்மை என்பதாக இருந்தது. பெண்ணை அடிமைப்படுத்துவதே தாய்மை என்றும் இந்த விதத்தில் பெரியாரின் பெண்ணியக் கொள்கைகளையே தானும் எடுத்துரைப்பதாகவும் கூறினார்.

தேவேந்திர பூபதி, கட்டுரை ‘இன்றைய பெண் எழுத்துக்கள் மாற்றுக்களின் விளை நிலமா?’ என்ற தலைப்பில் வாசித்தார். ஏறக்குறைய எல்லாப் பெண் கவிஞர்களின் கவிதைகளையும் தன் கட்டுரைக்குள் கொணரும் முகமாக, ஒரு கவிஞருக்கு ஒரு கவிதை என்று முழுக் கவிதையையும் வாசித்து அக்கவிதைச் சார்பாக தன் கருத்தையும் ஓரிரு வரிகளில் கொடுத்திருந்தார். பஞ்சாங்கம்: ‘நவீனப் பெண் கவிஞர்களின் பெண்ணெழுத்து’ என்ற தலைப்பில் வாசித்தார். ஆண் கவிஞர்களின் இருப்பைக் கேள்விக்குள்ளாக்கி கட்டுரையைத் தொடர்ந்தார். ஹெலன் சிசுவின் கவிதைகளில் ‘நீர்’ என்ற படிமமும், கட்டமைப்பும், குறியீடும் இப்போது எழுதும் மாலதி மைத்ரியின் ‘நீர்’ என்ற படிமமும் பெண்ணிய நோக்கில் எப்படி கட்டப்பட்டு இருக்கிறது என்பது குறித்துக் கவிதைகளை மேற்கோள் காட்டிக் கட்டுரை கொடுத்திருந்தார். நோயல் இருதயராஜ், இவரின் தலைப்பு ‘பெண்ணியம், தன் நிலை, தன் வெளி, தன் மொழி’ என்பதாகும். இவர் கட்டுரையை எழுதி வாசிக்காமல் குறிப்புகளுடன் பேசினார்.

பெண் எழுத்துக்கென்று தனி அரசியல் உள்ளதா? அது சாத்திமா? பெண்மொழி என்று ஒன்று தனியாக இருப்பின் அழகியலில் ஆண் மயில் என்று ஆண் உவமை கூறலாமா? பெண்களின் புனைவியல் ஆண்களின் புனைவியலிருந்து மிகைப்பட்டுள்ளது. பெண்ணியத்தில் தன் வெளி, தன்னிலை இரண்டும் சாத்தியமில்லை எனில் தன் மொழி சாத்தியமா? இத்தனைக்கும் பிறகு தான் பிற்போக்குவாதியோ பெண்ணியத்திற்கு எதிரானவரோ இல்லை என்று அறிவிப்புத் தந்தார்.

இரண்டாம் நாள் அமர்வில் கடைசியாக கட்டுரை படிக்க வேண்டிய நான் கட்டுரை வாசிக்க வில்லை. என்னால் எப்போதும் பெண் என்றோ, கவிஞர் என்றோ என் உடலையும் எல்லாச் சிந்தனைகளையும் சுமந்து கொண்டு அலைய முடிவதில்லை. என்னை ஒரு உயிராக மட்டுமே கருதுகிறேன். கோபம் வன்மம், அன்பு, இன்பம், பண்பாடு என்று சுமக்கும் உடலாக இல்லாமல் உடலற்ற, உடல் அகன்ற அசரீரியாக உணர்கிறேன் என்றேன். சில கவிதைகளையும் வாசித்தேன். புதுவை பல்கலைக்கழகத்திலிருந்து ரவிக்குமார், படிகள் ஜி.கே. ராமசாமி, பார்த்திப ராஐô, ஸ்டாலின் ராஜாங்கம், மணிமொழி மற்றும் மாணவர்களும் இக்கருத் தரங்கில் கலந்து கொண்டனர்.

Pin It