விடியல்களைச் சிந்துவது சூரியன் மட்டுமல்ல. சுயமரியாதை இயக்கமும் தமிழ்ச் சமுதாயத்தில் பல விடியல்களைச் சிந்தி வந்துள்ளது. ஆம்! குறிப்பாக விடிந்தும் இருட்டில் கிடந்த சூத்திரர்களுக்கு விடியல்களைக்காண, அறிவுவெளிச்சத்தை வெளிப்படுத்த விழிகளையே தந்த இயக்கம் திராவிட இயக்கம்!

வேதங்களின் வேர்களைக் கருக்கி, விடப்பாம்பாம் ஆரிய நஞ்சை அழித்து, பெண்களின் வாழ்வைச் செழிக்க வைத்த பெருமை திராவிட இயக்கத்திற்கு மட்டுமே பதிவு செய்யப்பட்ட பெருமையாகும்.

பகவான்களின் பிறப்பு.. இல்லை இல்லை அவதாரம், பைந்தமிழரின் அழிப்புக்கே நடந்தவை! பாவேந்தரின் பிறப்பு பழந்தமிழரின் செழிப்புக்கே! பெரியாரின் சிந்தனைகளுக்கு யாப்பு மகுடம் சூட்டியவன் அல்லவா பாவேந்தன்! அவரின் பெண்ணுரிமை முழக்கம் காட்டுத்தீயாகப் பரவி ஆணாதிக்கம், அடிமைப் பக்தி இவற்றை எரித்துச் சாம்பலாக்கியது.

படுக்கை, ஆசனம், அலங்காரம், காமம், கோபம், பொய், துரோக சிந்தை, இவற்றினை மாதர்பொருட்டே மனு கற்பித்தார் என்கிறது மனுதர்மம். மகாபாரதம் பெண்ணடிமையின் ஊற்றுக்கண், இராமாயணம் பெண்ணடிமையின் உற்பத்தி வாசல். இவற்றை நம்பி பக்தியால் கூன்பட்ட பெண்ணினத்தை நிமிர வைத்தன பாவேந்தர் பாடல்கள்!

“மூடத்தனத்தின் முடைநாற்றம் வீசுகின்ற

காடு மணக்க வந்த கற்பூரப் பெட்டகமே!”

என்ற தாலாட்டு வரிகளுக்குப் பின்தானே பெண் தலைநிமிர்ந்தாள் தமிழகத்தில்!

“புண்ணிற் சரம் விடுக்கும் பொய்மதத்தின் கூட்டத்தைக்

கண்ணிற் கனல்சிந்திக் கட்டழிக்க வந்தவளே”

என்ற பாவேந்தன் தாலாட்டில் பெண் சமுதாயம் விழித்தது. தாலாட்டு என்பது தூங்க வைக்கும். பாவேந்தன் தாலாட்டு, உரிமைக்கு ஏங்கி எழுச்சிபெற, பெண்களை விழிக்க வைத்த தாலாட்டு!

ஆண்களை மட்டுமே படிக்கவைத்துவிட்டுப் பெண்களைப் படிக்கவைக்காமல் இருக்கும் சமுதாயம் ஒரு கண் இழந்த குருட்டுச் சமுதாயம் என்றார் பெரியார்! இதோ பாவேந்தர் பாடுகிறார் கேளுங்கள்,

“தமிழ்ப்பெண்ணே தமிழ்ப்பெண்ணே!

தமிழ்ப் படித்தாயா?

தமிழ்ப்படித்தேன் தமிழ்படித்தேன்

தமிழ்ப்பெண் நானே!

தமிழ்தான் நீயோ, நீதான் தமிழா?

தமிழ்ப்பெண்ணே சொல்,”

என்ற பாவேந்தரின் சிந்தனையின் விளைவுகள் தான் இன்று காணும் பெண் இனத்தின் புத்தெழுச்சி! மறுமலர்ச்சி!

நெருப்பின்றியே நித்தம் நித்தம் நெஞ்சத்தில் வேதனைத் தீக்காட்டைச் சுமந்தனர் விதவைகள். 1 வயது முதல் 30 வயதுவரை விதவைகள் எண்ணிக்கை 26,31,788, இது 1921 மக்கள் தொகை கணக்கெடுப்பின் புள்ளி விபரம். நினைத்துப் பாருங்கள்! அந்த நெருப்பு நம்மையும் சுடும்!

விதவைத்தனிமை என்பது எவ்விதத்திலும் ஒரு தர்மமாகாது என்றார் பெரியார். நம் பாவேந்தர் அவர்களின்

“கோரிக்கை அற்றுக் கிடக்குதண்ணே

வேரில் பழுத்த பலா!”

என்ற வரிகள் பல விதவைகளின் வாழ்வில் மறுமணம் என்ற மணம் பரப்பியது.

“கூவத்தெரியாத குயிலின் குஞ்சு

தாவாச் சிறு மான், மோவா அரும்பு

தாலியறுத்துத் தந்தையின் வீட்டில்”

உச்சரிக்கும்போதே உடலில் வேதனைத் தீ பற்றுகிறது அல்லவா!

இந்தத் தீயை அணைத்தது திராவிட இயக்கம்.

தேவதாசி முறை தீக்கிரையானது - டாக்டர் முத்துலட்சுமியை நினைக்கிறோம்.

1938 இல் தமிழ்நாடு தமிழருக்கே என முழங்கிய தருமாம்பாளை நினைக்கிறோம். இவர்களின் உள்ளத்தில் பாவேந்தனின் பெண்ணுரிமை வரிகள் உறுதியாக மட்டுமல்ல குருதியாகவும் குடி இருந்தன. அதன் பயன்பாடுகள் தான் இன்று நாம் காணும் பெண்ணுரிமைப் பூக்காடுகள்!

ஊராட்சித் தலைவர்கள் 4267 பேர், ஊராட்சி ஒன்றியத் தலைவர்கள் 139 பேர், மாவட்ட ஊராட்சித் தலைவர்கள் 10 பேர், ஊராட்சி உறுப்பினர்கள் 32, 819. இவைமட்டுமல்ல நகராட்சி, மாநகராட்சிகள் வேறு! இன்று சட்டமன்ற, நாடாளுமன்றத்தில் 33 விழுக்காடு. இந்த உரிமைகளுக்குத் தமிழகத்தில் உரமிட்டது திராவிட இயக்கமே! 1891 ஏப்ரல் 9 இல் கனகசபை இலக்குமி இவர்களின் மகனாகப் பிறந்த கனக.சுப்புரத்தினம் 1964 ஏப்ரல் 21 வரை, 72 ஆண்டுகள் 11 மாதம் 28 நாள்கள் வாழ்ந்தார் என்பர்! யார் சொன்னது ? இவர் இன்றும் திராவிட நெஞ்சில் வீரமாகவும், தமிழ்த்தாய் நெஞ்சில் ஈரமாகவும், பெண்ணுரிமைப் போர்க்களத்தில் தீரமான ஒளிப்பிழம்பாகவும் வாழ்கின்றார்.

- நெல்லை இராமச்சந்திரன்

Pin It