periyar on marriageசிவகாமி - சிதம்பரனார்

தாலிகட்டுதல் என்னும் சடங்கு ஒழிந்தது. திருமதி ஈ.வெ.ரா நாகம்மையார் அவர்கள் நடத்தி வைத்தனர்.

இத்திருமணமானது மணமக்கள் மனமொத்து மெய்க் காதல் கொண்டு தாங்களாகவே தைரியமாய் முன்வந்து சீர்திருத்த முறையில் ஆண் பெண் இருவரும் சம உரிமையோடு வாழ்க்கையை நடத்துவதற்கேற்றதோர் சுயமரியாதைத் திருமணமாகும். இதைப் பலர் அதிசயமாக நினைக்கலாம்.

இதில் ஒன்றும் அதிசயமில்லை. ஒரு ஆணும் ஒரு பெண்ணும் சேர்ந்து செய்து கொள்ளும் திருமணம்தான் இது. ஆனால் நம் நாட்டில் வெகு காலமாக வேரூன்றி கிடக்கும் அர்த்தமற்ற சடங்குகள் இல்லாமலும் பெண்ணை ஆண் அடிமையாக்குதற் கறிகுறியாகிய தாலிகட்டுதல் என்னும் சடங்கு இல்லாமலும் சீர்திருத்த உலகத்துக்கேற்ற முறையில் இத்திருமணம் நடந்திருக்கிறது.

பெண்கள் விடுதலையடைந்து ஆண்களோடு சம சுதந்திரத்துடன் வாழ வேண்டும் என்ற அடிப்படையான கொள்கையுடைய சுயமரியாதை இயக்கம் தோன்றியிற்றைக்கு 4, 5 வருஷங்களேயாயினும் இதுவரை இம்மாதிரி பல சுயமரியாதைத் திருமணங்கள் நடந்தேறியிருப்பது உங்களுக் குத் தெரியும்.

இம்மாதிரி புதுமுறைத் திருமணத்தில் கர்னாடகப் பிடுங்கல்களால் பலவித இடைஞ்சல்கள் ஏற்படுவது சகஜமே. அதைப் பொருட்படுத்தா மல் இளைஞர்கள் தைரியமாய் முன் வர வேண்டும்.

இத்திருமணத்தில் தாலி கட்டுதல் என்னும் சடங்கு நீக்கப்பட்டிருக்கிறது.

கலியாண காலத்தில் பெண்ணுக்கு மாப்பிள்ளை தாலி என்னும் ஒரு கயிற்றைக் கழுத்தில் கட்டித் தனக்கு அடிமை என்று நினைத்து கேவலமாக கடித்து வருவதானது எருமை மாடுகளை விலைக்கு வாங்கி அதன் கழுத்தில் ஒரு கயிற்றைக் கட்டி இழுத்து வந்து நடத்துவது போலவேதானாகும்.

பெண்களுக்குக் கழுத்தில் தாலி கட்டுவதின் கருத்து கலியாணம் ஆனது ஆகாதது என்ற அடையாளத்தைக் காட்டுவதற்கும் இன்னான் பெண்டாட்டி என்ற உரிமையை நிலை நாட்டுவதற்கும் பிறத்தியான் அப்பெண்ணைக் காதலிக்காதிருப்பதற்குமென்றே கருதப்பட்டு வருகிறது.

அப்படியானால் ஆண்களில் கலியாணம் ஆனவன் ஆகாதவன் என்பதற்கும், இன்னாளுடைய புருஷன் என்பதற்கும், பிற மாதர் காதலிக்காதிருக்கும் பொருட்டு அடையாளம் வேண்டியதவசியமல்லவா? அதற்காக கல்யாண காலத்தில் ஆண்கள் கழுத்திலும் ஒரு தாலி கயிறு கட்ட வேண்டும்.

அப்படியல்லாமல் பெண்களை மட்டும் ஏமாற்றிக் கழுத்தில் தாலிக் கயிற்றைக் கட்டி அடிமைப் படுத்தி வருவது கண்டித்து ஒழிக்கத் தகுந்ததோர் சடங்காகும் என்பதில் கடுகளவும் சந்தேகமில்லை.

அதோடு மனைவியிழந்த புருஷன் மறுமணம் செய்து கொள்ளலாம். கணவனையிழந்த கன்னிகை தான் ஆயுள் மட்டும் தன் காலத்தை விதவை என்ற கட்டுப்பாட்டில் கழிக்க வேண்டும் என்ற மூடப்பழக்கம் ஒழிந்து நமது மணமகள் செல்வி சிவகாமி போல தைரியமாய் முன் வர வேண்டும்.

இதற்குத் தோன்றும் இடையூறும் எதிர்ப்பும் அர்த்தமற்ற அநாகரீகமான செய்கையென்றுதான் சொல்ல வேண்டும். அத்தகைய எதிர்ப்பையும் இடைஞ்சலையும் மூடக் கட்டுப்பாடுகளையும் உதறித் தள்ளி தம் பகுத்தறிவை உபயோகித்து அர்த்தத்தோடு கூடிய செய்கைகளையும் நடவடிக்கைகளையும் நமது வாழ்வின் லட்சியமாகக் கொள்வதே மக்களின் சுயமரியாதைக் கடையாளமாகுமென்பதை உங்களுக்குக் கூறி மணமக்களை மனமாற வாழ்த்துகிறேன்.

குறிப்பு:- 5. 5. 30 தேதி திங்கட்கிழமை மாலை 5 மணிக்கு கும்ப கோணம் பிரபல மிராஸ்தாரும், முனிசிபல் கவுன்சிலரும் ஆனரரி மேஜிஸ் திரேட்டு மாகிய உயர்திரு. குப்புசாமி பிள்ளை அவர்கள் செல்வி திருமதி சிவகாமி அம்மைக்கும் தமிழ் பண்டிதர் சாமி சிதம்பரனார் அவர்கட்கும் ஈரோடு திரு. ஈவெ.ரா. அவர்கள் தோட்டத்தில் 2-வது சுயமரியாதை மகாநாட்டுக் கென அமைத்திருந்த சிங்காரக் கொட்டகையில் திருமணம் மிகச்சிறப்பாக நடந்தேறியது. திருமதி ஈ.வெ.ரா. நாகம்மையார் அவர்கள் நடத்தி வைத்த திருமணத்தில் பேசியது.

(குடி அரசு - சொற்பொழிவு - 11.05.1930)

Pin It