இதுவரை ஒன்றுபடாத தமிழர்கள் இன்று இம்மாநாட்டில் ஒன்றுகூடி இருப்பதால் இம்மாநாடு தமிழர் சரித்திரத்தில் முத்திரை பதித்தது போன்றது. பெரியார் அவர்கள், மறைமலையடிகள், நாரண துரைக்கண்ணன், சிவஞான கிராமணியார், திருவிக ஆகியவர்கள் முத்திரை மோதிரத்தின் சின்னங்கள், இலச்சினை இடவேண்டியவர்கள். எனவே, இம்முத்திரை பொறித்துப் போர் ஓலை இன்றே அனுப்பட்டும். அது அவசியம் அவிநாசியார் புரிந்துகொள்ளும் தமிழில். இருக்கட்டும்.
இந்தி நுழைவால் தமிழர் பண்பு கெட்டுப்போம். தமிழர் கலாசாரம் கெட்டுப்போம். ஆகையால் அமைச்சர் அவிநாசியாரே! அமைச்சர் குழுத்தலைவர் ரெட்டியார் அவர்களே! இவர்களை ஆட்டிப்படைக்கும் ஏகாதிபத்திய படேல்துரை அவர்களே! ஜவகர்லால் நேரு அவர்களே! தமிழர்களாகிய நாங்கள் கட்டாய இந்தி நுழைவை எதிர்த்து அறப்போர் தொடுத்துவிட்டோம்! தொடுத்துவிட்டோம் !! தொடுத்துவிட்டோம்!!!
ஓலை எழுதப்படட்டும், அவிநாசியாரும் உடனடியாக ஜெயில்களையும் காலி செய்து வைத்துக் கொள்ளட்டும். போதுமான போலீஸ் படையையும் தயாரித்து வைத்துக் கொள்ளட்டும்.
பெரியார் அவர்கள் பல இடங்களில் பேசியிருக்கிறார்கள், அடக்குமுறை எப்படி இருக்கும் என்று. தடியாலும் அடிப்பார்கள், துப்பாக்கியாலும் சுடுவார்கள். பக்கிங்காமிங் தொழிலாளர் மீது அடக்குமுறை பாணத்தை வீசியவர்கள்தானே இவர்கள். இந்தத் தொழிலாளார்களின் பரம்பரையைச் சேர்ந்தவர்கள்தானே நாமும்.
அடிக்கட்டும், அஞ்சோம்! சுடட்டும், அதற்கும் அஞ்சோம்! இவற்றால் ஏற்படும் தழும்புகள் திராவிடத் தனி அரசிற்கு முத்திரையாக அமையும். தலைவருக்கு நமது அஞ்சாமை பற்றி சிறிதும் சந்தேகம் இல்லை.
நமது பொறுமையைக் குறித்துத்தான் சந்தேகம். எனவேதான் அவரிடம் கொஞ்சம் தயக்கம் காணப்படுகிறது, தயக்கம் வேண்டாம்.
தமிழர்கள் எந்த அளவுக்கு உரம் படைத்தவர்களோ, அந்த அளவுக்குப் பொறுமையும் படைத்தவர்கள்தான்.
சென்ற இந்தி எதிர்ப்பின்போது தாளமுத்துவின் பிணம் ஆஸ்பத்திரியில் இருந்து சுடுகாட்டிற்கு ஊர்வலமாக எடுத்துச் சென்றபோது, கணக்கிலாத மக்கள் ஊர்வலத்தில் கலந்துகொண்டனர்.
என்ன நேருமோவென்று பார்ப்பனக் குடும்பங்கள் அத்தனையும் வயிற்றில் நெருப்பைக் கட்டிக்கொண்டு இருந்தன. ஆனால் என்ன நேர்ந்தது? தமிழர்கள் தாளமுத்துவின் பிணம் சாம்பலாக, சாம்பலாக ஒருவர் முகத்தை ஒருவர் பார்த்துக் கொண்டு பெருமூச்சு விட்டனர். ஒன்றிரண்டுபேர் கண்ணீர்த்துளி விட்டனர். அவ்வளவு மன உறுதியும், பொறுமையும் படைத்தவர்கள்தான் தமிழர்கள்.
எனவே அதிலும் தலைவர்க்குச் சிறுதுளியும் சந்தேகம் வேண்டாம்.
இந்தப் பஞ்ச காலத்தில் நமக்கும் அடிபட போதிய வலுவில்லை. அவர்களும் இரண்டு அடிதான் அடிப்பார்கள். அவ்வளவுதான் அவர்களுக்கும் வலுவுண்டு. நாமும் அந்த இரண்டு அடிகளிலேயே கீழே விழுந்து விடுவோம். அவ்வளவுதான் நமக்கும் தாங்கச் சக்தியுண்டு.
நம்மிடம் ஆயுததளவாடங்கள் ஏதும் இல்லை அவர்களை எதிர்ப்பதற்கு. எனவே நமது போர் அறப்போராகத்தான் இருக்கும். அதை அமைச்சர் விரும்பினால் ரத்தப்போராக்கலாம். ஆக்கமாட்டார் என்று நினைக்க ஆதாரம் ஒன்றுமில்லை நம்மிடம். அமைச்சர் ரத்தத்தை விரும்பினால் அதற்கும் நாம் தயாராகத்தான் இருக்கிறோம்.
(17-7-1948 ஆம் ஆண்டு நடைபெற்ற மாகாண இந்தி எதிர்ப்பு மாநாட்டில் அறிஞர் அண்ணா ஆற்றிய உரையில் இருந்து...)