தமிழக மொழிப்போர் ஈகியர் வரலாறு

 பிறமொழிச் செல்வாக்கு 

விடுதலை வீரர் டி - வேலரா அயர்லாந்து நாட்டு விடுதலைக்குப் பாடுபட்டவர். அவரிடம் ஆங்கிலேய அரசு கேட்டது, 'உங்களுக்கு மொழி வேண்டுமா? நாடு வேண்டுமா?' 

'எங்களுக்கு முதலில் மொழி வேண்டும். பிறகு நாடு!' 

தெளிவாய்ச் சொன்னார் டி. வேலரா (Éamon de Valera)

Annadurai with Bharathidasanமொழி உரிமை ஓர் உந்து விசை. அது ஒவ்வோர் உரிமைக்கும் உந்தித் தள்ளும் என்பதை அவர் உணர்ந்திருந்தார்.

மொழியைக் காப்பாற்றும் உணர்வுள்ளோரிடமும், மொழி பேசும் இனத்தையும் இனம் வாழும் நாட்டையும் காப்பாற்றும் உணர்வு கட்டாயம் இருக்கும். 

அந்நிய மொழிக்கு ஆதரவான மனநிலையை உருவாக்கிக் கொண்ட இனத்தை எளிதாக அடிமைப்படுத்திவிடலாம். 

அடுத்தவர் மொழியைச் சார்ந்து வாழப் பழகியோர், 'தமது மொழி தமது நாடு' என்னும் அக்கறையை இழந்து விடுவர்.

இந்தி, சமற்கிருதம், ஆங்கிலம் முதலிய அந்நிய மொழிகளுக்கு இங்கே செல்வாக்கு தேடும் முயற்சி தொடர்வதன் காரணம் அது தான்!

வழிகாட்டும் வங்கமொழி

தாய்மொழி காக்கப்படவேண்டும் என உலக நாடுகள் ஒன்றியம் (ஐ.நா) வலியுறுத்துகிறது. பிப்பிரவரி 21 ஆம் நாள் 'உலகத் தாய்மொழி நாள்' என அறிவிக்கப்பட்டுள்ளது. உலக நாடுகள் ஆண்டுதோறும் அதைக் கொண்டாடி வருகின்றன.

முதல் மொழிப்போரில் (1938) கட்டாய இந்தி கைவிடப் பட்ட நாள் பிப்பிரவரி 21 . அந்த வகையில் நாமும் உலக மொழிப்போரை ஆண்டுதோறும் நினைவுகூர அந்த நாள் உதவும். 

வங்க மொழியைக் காக்க 1957 ஆம் ஆண்டில் நான்கு பேர் உயிரிழந்த நாள் பிப்பிரவரி 21 .வங்கமொழிக்காக நான்கு பேர் இறந்த நாளை 'உலகத் தாய்மொழி நாள்' என உலகம் ஒப்புக் கொண்டுள்ளது. 

தமிழ்மொழியைக் காப்பதற்காகப் பல நூறுபேர்களைப் பலி கொடுத்துள்ளோம் நாம்! 

தமிழின வீர வரலாறு உலகத்திற்கு உணர்த்தப்பட வேண்டும் .

 உயிர்காக்க உயிர்தந்தோர் 

சமற்கிருதக் கறைபடியாத ஒரே இந்திய மொழி தமிழ்! தமிழின் எதிர்காலத்தைக் காப்பதற்காக தங்கள் எதிர்காலத்தை இழக்கத் துணிந்த மாவீரர்களைத் தமிழினம் மறக்கக் கூடாது. 

தமிழ் காக்கும் மொழிப்போரில் தீக்குளித்தும் நஞ்சுண்டும் குண்டடிபட்டும் பலியான தமிழர்கள் பல நூறு பேர்! 

நான்கு மொழிப்போர்களைத் தமிழகம் நடத்திவிட்டது.

   1938 - 1940: முதல் மொழிப்போர்

   1948 - 1952: இரண்டாம் மொழிப்போர்

   1965 - ஐம்பது நாட்கள் - மூன்றாம் மொழிப்போர்

   1986 - நூற்று நாற்பத்து நான்கு நாட்கள் - நான்காம் மொழிப்போர்

மொழிப்போரும் வரலாறு வழங்கும் வெளிச்சத்தில் புலப்படும் உண்மைகள் பல. 

முதல் மொழிப்போர் 1930 - 1940

கட்டாய இந்தித் திணிப்பை எதிர்த்து எழுந்தது முதல் மொழிப்போர்! பள்ளிகளில் இந்தி கட்டாயப் பாடமாக்கப்பட்டு 21.4.1938 இல் அரசாணை வெளி வந்தது அரசாணை வெளிவரவுதற்கு முன்பே, இந்தித் திணிப்பை எதிர்க்கும் முதற்குரல் 27.8.1937 ஆம் நாள் தஞ்சையில் எழுந்தது. மறியல் போராட்டம் தொடங்கியது. சென்னைச் சிறையில் நடராசன் தாலமுத்து இருவரும் களப்பலியானார்கள். 

3.6.1938 இல் தொடங்கிய சிறை நிரப்பும் போராட்டம் 21.2.1940 இல் முடிவுக்கு வந்தது.கட்டாய இந்தித் திணிப்பு அரசாணையை அரசு திரும்பப் பெற்றுக் கொண்டது கட்டாய இந்தித் திணிப்பு கைவிடப்பட்ட பிப்பிரவரி 21, இன்று உலகத் தாய்மொழி நாள்! 

முதல் உலகப்போரை வழிநடத்தியவர் தந்தை பெரியார். இந்தித் திணிப்பை எதிர்த்து 1926 முதல் எழுதியும் பேசியும் விழிப்பூட்டியவர் அவர் . 

கட்சிக் கண்ணோட்டமின்றித் தமிழர் அனைவரும் பங்கேற்கும் வகையில் 1938 மொழிப் போரை நடத்த பெரியார் திட்டமிட்டார். அதனால் அரசியல் முகமாகப் பெரியாரும் பண்பாட்டு முகமாக மறைமலையடிகளாரும் நாவலரும் ச.சோம சுந்தர பாரதியாரும் மொழிப்போரில் முன் நிறுத்தப்பட்டனர். 

முதல் மொழிப்போர் வெடிக்கக் கருத்துநிலைத் தூண்டுதலாய் இருந்து மூவர் ஈழத்து சிவானந்த அடிகள், புலவர் அருணகிரிநாதர், அறிஞர் அண்ணா.

சென்னையில் இதற்கானப் பணிகளைத் திட்டமிட்டு களம் அமைத்த மூவர் செ.தெ. நாயகம், காஞ்சி மணிமொழியார், சண்முகாநந்த அடிகள். 

முதல் மொழிப்போரின் எழுச்சியால் எழுந்த தமிழகம் 1938 மொழிப்போரை "முதல் தமிழ்த் தேசியப் போர்" என அடையாளங் கண்டது. தந்தை பெரியாரை "தமிழ்தேசியத் தந்தை" எனப் போற்றியது., பாவேந்தர் பாரதிதாசனைத் "தமிழ்த் தேசியத் புரட்சிப் பாவலர்" என அறிமுகப்படுத்தியது. 

இருவரைப் பலிகொண்டு முதல்மொழிப்போர் முடிவுற்றது. 

எல்லாரும் வாருங்கள்

(1938 ஆம் ஆண்டு பாவேந்தர் பாரதிதாசன் எழுதிய இந்தி எதிர்ப்புப் படையின் போர்ப்பாட்டு இது)

இந்திக்குத் தமிழ்நாட்டில் ஆதிக்கமாம் – நீங்கள்
எல்லோரும் வாருங்கள் நாட்டினரே!
செந்தமிழுக் குத்தீமைவந்த பின்னும் - இந்தத்
தேக மிருந்தொரு லாபமுண்டோ? (- இந்தி)

விந்தைத் தமிழ்மொழி எங்கள் மொழி! – அது
வீரத் தமிழ் மக்கள் ஆவிஎன்போம்!
இந்திக்குச் சலுகை தந்திடுவார் – அந்த
ஈனரைக் கான்றே யுமிழ்ந்திடுவோம்! (- இந்தி)

இப்புவி தோன்றிய நாள்முதலாய் – எங்கள்
இன்பத் தமிழ்மொழி உண்டு கண்டீர்!
தப்பிழைத் தாரிங்கு வாழ்ந்த தில்லை – இந்தத்
தான்தோன்றி கட்கென்ன ஆணவமோ? (- இந்தி)

எப்பக்கம் வந்து புகுந்துவிடும்? – இந்தி
எத்தனைப் பட்டாளம் கூட்டிவரும்?
அற்பமென்போம் அந்த இந்திதனை – அதன்
ஆதிக்கந் தன்னைப் புதைத்திடுவோம்! (- இந்தி)

எங்கள் உடல்பொருள் ஆவியெலாம் – எங்கள்
இன்பத் தமிழ்மொழிக் கேதருவோம்!
மங்கை ஒருத்தி தரும்சுகமும் – எங்கள்
மாத்தமிழ்க் கீடில்லை என்றுரைப்போம்! (- இந்தி)

சிங்கமென் றேஇளங் காளைகளே – மிகத்
தீவிரங் கொள்ளுவீர் நாட்டினிலே!
பங்கம் விளைத்திடல் தாய்மொழிக்கே – உடற்
பச்சைரத் தம்பரி மாறிடுவோம்!

தூங்குதல் போன்றது சாக்காடு! – பின்னர்
தூங்கி விழிப்பது நம்பிறப்பு!
தீங்குள்ள இந்தியை நாம் எதிர்ப்போம் – உயிர்
தித்திப்பை எண்ணிடப் போவதில்லை!

மாங்குயில் கூவிடும் பூஞ்சோலை – எமை
மாட்ட நினைக்குஞ் சிறைச்சாலை!
ஏங்கவிடோம் தமிழ்த் தாய்தனையே – உயிர்
இவ்வுடலை விட்டு நீங்கும்வரை!

- புலவர் செந்தலை ந.கவுதமன் (பாவேந்தர் பேரவை, சூலூர்)

   (தொடரும்...)