உண்டு மகிழ்ந்தோம், இனிப்புப் பொங்கலை! உறவோடு கூடி மகிழ்ந்தோம், தமிழ்ப் புத்தாண்டை! இரண்டும் நிறைவு பெற்று விட்டன! ஆனாலும் கடமைகள் நிறைவு பெறவில்லை. பணிகள் தொடர்கின்றன, காலம் குறுகிக் கிடக்கிறது, இரண்டு மாதங்கள் என.

பகாசுரனைப்போல இந்திய ஒன்றியத்தின் பெரும்பகுதிகளில் காலூன்றி நிற்கும் பாஜக, தமிழ்நாட்டிற்குள் திராவிடச் சித்தாந்தத்தைத் தாண்டி நுழைய முடியாமல் குமைந்து கொண்டு இருக்கிறது என்பது ஊரறிந்த செய்தி.

தமிழைத் தூக்கிப் பிடித்துக் காசியில் கொண்டுபோய் நிறுத்திக் காட்டுவார்கள். தமிழ்நாட்டிற்கு வந்தால் திருக்குறளைச் சொல்லிக் காட்டுவார், தொன்மையான தமிழைப் படிக்க முடியவில்லையே என்று வருந்துவதாகவும் நடித்துக் காட்டிக் கொள்வார், பிரதமர் மோடி.

ஒரு படி மேலேபோய் அரோகரா...அரோகரா என்று வேல் தூக்கி ஓடிக் காட்டுவார் ஒன்றிய அமைச்சர் முருகன்.

 எல்லாம் பசப்புவேலைகள், தமிழ்நாட்டின் ஆட்சியைப் பிடிக்கக் காரிய நடிப்பு அது, தமிழர்கள் ஏமார்ந்து விடுவார்கள் என்று!

காவிகளை விரும்பமாட்டார்கள் தமிழர்கள். அவர்களின் அடையாளம் கருப்பும், சிவப்பும்!

முதலாம் குலோத்துங்கன் ஆட்சியின்போது இடங்கை-வலங்கைப் போரில் கருப்பு-சிவப்பு நிற அடையாளத்தை முதல்முதலாகக் கையிலேந்திக் காட்டியவர்கள் தமிழர்கள் என்று கல்வெட்டும், ஓலைச்சுவடிகளும் சொல்கின்றன. சில 'இலைச்சறுகுகள்' விதிவிலக்காக இருக்கலாம்.

கோயில்களுக்குச் சென்று கடவுளை வணங்கினாலும் மதத்தில் மயங்கி மதியிழக்க மாட்டார்கள் தமிழர்கள்.

சாதியற்ற சமூகம், சமூகநீதி, பெண்ணுரிமை, சமத்துவத்தைச் சொல்லித் தந்த ஐயா தந்தை பெரியாரின் கைத்தடி இன்று எங்கள் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கையிலன்றோ இருக்கிறது!

அது பெரியாரின் கைத்தடி, சுழற்றுகிறவர் முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின், சுழல்கிறது திராவிட மாடல் அரசு, 'மக்கள் ஆட்சியாக '.

மகளிருக்கான முன்னேற்றத் திட்டங்கள், மாணவர்களுக்கான வளர்ச்சித் திட்டங்கள், தொழில் மற்றும் மருத்துவத் துறைகளின் நலத்திட்டங்கள், தாயுமானவர் திட்டம், அயலகத் தமிழர்கள் நலம் பேணும் திட்டம், பள்ளிகளில் காலை உணவு, மாணவர்களுக்கு மடிகணினி வழங்கி நாட்டை உயர்வு பெறச் செய்து கொண்டிருக்கும் திராவிட மாடல் முதலமைச்சரைத் தாண்டித் தாமரை மலருமா தமிழ்நாட்டில் ? வீண்கனவு, கற்பனை!

எடப்பாடியல்ல, கடப்பாரைக்காரர்களின் சிக்கிமுக்கி வேலைகளுக்கு எல்லாம் அஞ்சுபவர்கள் அல்லர் தமிழர்கள்.

 பொங்கல் அன்று இனிப்பான கரும்பு தின்றோம், திமுகழக ஆட்சி தொடரும் என்பதனால்.

போகியைக் கொண்டாடினோம், காவி, பாஜகவைத் தூக்கியெறிந்து.

 பொங்கல் வைத்து, உழவைப் போற்றி, வானத்தைப் பார்த்தோம், உதித்தான் உதயசூரியன் அங்கே!

எழில். இளங்கோவன்

✍️ எழுத்தாளர்களின் கவனத்திற்கு

கீற்றில் தங்களது படைப்புகளை / இதழ்களை வெளியிட விரும்பினால், அவற்றை யுனிகோட் எழுத்துருவில் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.

வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகள் மட்டுமே பதிவேற்றத்திற்குப் பரிசீலிக்கப்படும்.