“செத்த மொழிக்கு ஏன் சிங்காரிப்பு?”

- ஏனென்றால், அது பெத்த (இந்தி) மொழிக்கு உயிரூட்ட வேண்டும்.

“செம்மொழிக்கு ஏன் புறக்கணிப்பு?“

 - ஏனென்றால் பிராண வாயு- செலுத்தி உயிரூட்டப்பட்ட இந்தி மொழியை ஆட்சிக்கட்டிலில் நிலை நிறுத்த வேண்டும்.

இப்போதும் இந்திதானே ஆட்சித் கட்டிலில் நிலை கொண்டிருக்கிறது?”

“ஆம். ஆனாலும் இந்திய அரசமைப்புச் சட்டம் 8வது அட்டவணைப்படி இந்தியாவின் ஆட்சி மொழி--------களாக அங்கீகரிக்கப்பட்டவை 22 மாநில மொழிகள். அந்ததந்த மாநில மொழிகளைத் தாய்மொழியாகச் கொண்டவர்கள் தத்தம் தாய்மொழிக்காக இந்தித் திணிப்பை, ச-ம-ஸ்கிருதத் திணிப்பை எதிர்த்துப் போராட முடியும்; தாய்மொழியைக் காப்பதற்காக பொதுக்கூட்டங்கள், தெருமுனைக் கூட்டங்கள், கருப்புக் கொடி காட்டுதல், ஆர்ப்பாட்டம், பேரணி, உண்ணாவிரதம் என்று எத்தகைய போராட்ட வடிவங்களையும் முன்னெடுக்க முடியும். இப்போது அது கேள்விக்குறியாகி விடுமோ என்று ஐயுற வேண்டியுள்ளது.

1938ஆம் ஆண்டு ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்திலும் சரி - சுதந்திரம் பெற்ற பின் நேருவின் ஆட்சிக் காலத்திலும் சரி இந்தித்திணிப்பை மிகக்கடுமையாக எதிர்த்தது தமிழகம்தான். மதச்சார்பின்மையிலும், மக்களாட்சித் தத்துவத்திலும், நம்பிக்கை கொண்ட நேரு, தமிழக மக்களின் உணர்வுகளுக்கு மதிப்பளித்து ‘இந்தி பேசாத மாநில மக்கள் ஒப்புக் கொள்ளும் வரை இந்தியாவின் தொடர்பு மொழியாக இந்திக்குப் பதிலாக ஆங்கிலம் நீடிக்கும்’ என்றார்.

ஆனாலும் தொடர்ந்து வந்த எல்லா மத்திய ஆட்சிகளுமே இந்தியை (மட்டும்) தேசிய மொழியாக ஆக்குவதற்கு சாத்தியப்படக்கூடிய எந்த முயற்சியையும் எடுக்கத் தவறவில்லை.

இதில் ஒருபடி மேலாக இப்போதைய மோடி அரசு இந்திய தேசத்தின் ஒரே தாய்மொழி இந்திதான் என்பதாக மாற்றிவிடவே முயற்சிக்கின்றது. இதற்காக இந்தி மொழிபேசும் மக்களின் எண்ணிக்கையை அதிகரிக்க & இந்தியாவின் அனைத்து மாநிலங்களிலும் இந்தி மொழியைப் பரப்பக் கோடிக் கணக்கில் செலவிடுகிறது. முன்னொருபோதும் இல்லாத வகையில்  தமிழகத் தொலைக்காட்சிகளிலும் இன்று இந்தி விளம்பரங்களும், இந்தி மொழிமாற்று நாடகங்களும் பெருமளவில் ஒளிபரப்பப்படுகின்றதைக் கவனத்திற் கொள்ள வேண்டும்.

1991ஆம் ஆண்டு கணக்கெடுப்பின்படி இந்தி பேசும் மக்களின் எண்ணிக்கை 329,518,87. பத்தாண்டுகளுக்குப்பின் 2001-ஆம் ஆண்டு எடுக்கப்பட்ட கணக்கு, இந்தி பேசும் மக்களின் எண்ணிக்கை 422,048,642 என்கிறது.

அதாவது 41.1 சதவீதம் கூடுகிறது. இது இந்தி மொழியைப் பேசும் மக்களின் எண்ணிக்கை தான். இந்தியைத்  தாய் மொழியாகக் கொண்டவர்கள் வெறும் 25.07 சதவீதம் - அதாவது 257,919,635 பேர் தான் (2001ஆம் ஆண்டுக்குப் பிறகு இந்த 15 ஆண்டுகளில் இந்தி பேசும் மக்களின் எண்ணிக்கை இன்னும் அதிகரித்திருக்கும்).

இப்படி, இந்தி பேசும் மக்களின் எண்ணிக்கையைப் பெருக்கிக்காட்டுவதின் மூலம் இந்தியை மட்டுமே ஆட்சி மொழி ஆக்கிவிடலாம் என்று கனவு காண்கிறது மோடி அரசு.

இதன் மூலம் தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், கொங்கணி, துளு போன்ற திராவிட மொழிகளையும் = குஜராத்தி, மராத்தி, வங்காளம், ராஜ-ஸ்தானி, உருது, பஞ்சாபி, காஷ்மீரி, அசாமி போன்ற இந்தோ & ஆரிய மொழிகளையும் அழித்து விடலாம் என்பது மோடி கணக்கு.

உண்மையில் மோடியின் தாய்மொழியே குஜராத்திதான். ஆனாலும் அவர் எங்கே சென்றாலும் எப்போது பேசினாலும் இந்தியில்தான் பேசுகிறார். அண்மையில் கென்யாவில் போய்கூட இந்தியில்தான் பேசினார்.

நல்ல ஆங்கிலத்தில் சரளமாகப் பேசக் கூடிய அவர் ஐக்கிய நாடுகள் அவையிலும் இந்தியில்தான் பேசினார். பத்தாவது உலக இந்தி மாநாடு போபாலில் நடைபெற்ற போது ‘எதிர்கால டிஜிட்டல் உலகத்தில் ஆங்கிலம், சீனம், இந்தி ஆகிய மூன்று மொழிகள் மட்டுமே உலகை ஆதிக்கம் செலுத்தும்’ என்று பேசியுள்ளார். அவரது ‘நாட்டு மக்களுக்கான மாதாந்திர வானொலி & தொலைக்காட்சி பேச்சுகள்’ கூட இந்தியில்தான் இருக்கிறது.

இந்தியைப் பெரும்பாலான -   பெருந்தொகையான மக்களின் பேச்சு வழக்கு, எழுத்து வழக்கு மொழி ஆக்குவதன் மூலம் தொழில், வியாபாரம், தனியார் துறையின் பெருநிறுவனங்கள் மற்றும் அரசு வேலைகளுக்கு, இந்தியே வாய்ப்பான மொழி என்று காட்டி அதனைத் தனித்த ஆட்சிமொழி ஆக்கிவிடலாம் என்பதே அவரது திட்டம்.

இந்திக்கு மட்டும் ஏன் இவ்வளவு முக்கியத்துவம்?

பல்வேறு இன, மொழி, மதம், சாதி சார்ந்த நூறுகோடி மக்களின் கலை - கலாசாரம் - இலக்கியம் & பண்பாடு & சமய ஆதாரங்கள் & அந்த மதங்களுக்குண்டான சடங்கு முறைகள் உட்பட எவற்றுக்கும் ஊறு நேராத வண்ணம் வேற்றுமையில் ஒற்றுமை என்கிற உயரிய தத்துவத்தை முன்னெடுத்துச் செல்லும் இந்தியாவில், இப்போது - ஒரே மதம் - ஒரே மொழி - ஒரே நாடு - என்கிற கோஷத்தை முன் வைக்கிற பா.ஜ.க. இந்தித் திணிப்பின் மூலம் ஆர்.எஸ்.எஸ்ஸின் கனவான ‘இந்து ராஜ்ஜியத்திற்கான’ கட்டுறுதி செய்யத் துடிக்கிறது.

இந்தி நிலைத்திருந்தால்தான் இந்துத்துவா நிலைக்கும். இந்துத்துவா நிலைநிறுத்தப்பட்டால்தான் பெருமளவில் ஆலயங்களிலும் மதம் பேணும் இல்லங்களிலும் பூஜை புனஸ்காரங்கள் நடைபெறும். அந்தப் பூஜை புனஸ்காரங்களுக்கும், அர்ச்சனைகளுக்கும், யாகங்களுக்கும், பலிகளுக்கும் சமஸ்கிருதம் தேவை. சமஸ்கிருதம் சந்தி தோறும் பேசப்பட்டால்தான் மீண்டும் மநு ஸ்மிருதி - அதையொட்டி சாதி - தீண்டாமை எல்லாம் தலையெடுக்க முடியும்.

எனவே தான் செத்துப் போன சமஸ்கிருத மொழியை இப்போது சிங்காரித்து வைக்கிறது. இப்போது சிங்காரித்து வைப்பதன் மூலம் தமிழ் மொழி போன்ற செம்மொழிகளைப் புறக்கணித்து - உலக அரங்கில் செம்மொழியாம் தமிழை நிராகரித்து இந்திக்கு இடமளிக்கத் துடிக்கிறது.

பெரும்பான்மையான - பெருந்தொகையான மக்களால் பேசப்படுகிற மொழி என்பதனாலேயே ஒரு மொழி தேசிய மொழி என்கிற பெருமிதத்தைப் பெற்றுவிட முடியாது. பிறமொழிக் கலப்பில்லாத & பிறமொழியிலிருந்து பிரிந்து வந்ததென்கிற - மருவி வந்ததென்கிற - கடன் வாங்கி வந்ததென்கிற பழிச்சொற்களுக்கெல்லாம் இடமளிக்காத - தனித்த ‘மொழியாளுமை’ மிக்க ஒரு மொழியே செம்மொழி என்கிற பெருமிதத்தைப் பெறும். தேசிய மொழி என்கிற கண்ணியத்துக்குரித்தாகும்.

தமிழ்மொழியைப் பற்றி வடமொழி, தமிழ் உட்பட பல மொழிகளில் புலமைபெற்ற வெளிநாட்டு அறிஞர் கால்டுவெல் குறிப்பிடும் போது “தெலுங்கும், கன்னடமும், மலையாளமும் தத்தம் தனிநிலைகளை நிலைநாட்டிட, அறவே இயலாதஅளவு சமஸ்கிருதச் சொற்களை அளவிற்கு மீறிக் கடன் வாங்கியுள்ளன. அவற்றின் துணையை நோக்கி, எதிர்நோக்கிப் பழகிவிட்டன. ஆதலின் தன்னுடைய சம-ஸ்கிருதக் கலவைகளைக் கைவிடுவது தெலுங்கு மொழிக்கு இப்பொழுது அரிதாம் என்பது உண்மை.

கன்னடத்திற்கு அதனினும் அரிதாம். மலையாளத்திற்கு அவை எல்லாவற்றையும் காட்டிலும் அரிதாம். திராவிட மொழிகள் அனைத்திலும் உயர்தனிச் செம்மொழியாய் நிலைபெற்று விளங்கும் தமிழ் தன்னிடையே இடம் பெற்றிருக்கும் சமஸ்கிருத சொற்களை அறவே ஒழித்துவிட்டு, உயிர்வாழ்வதோடு அவற்றின் துணையை ஒரு சிறிதும் வேண்டாமல் வளம் பெற்று வளர்வதும் இயலும்,”  என்கிறார்.

இந்தி மொழிக்கு இப்படிப்பட்ட பெருமைகள் எதுவும் இல்லை. வடமொழி (சமஸ்கிருதம்) பாரசீகம், அரேபிய மொழிகளின் குழைவுதான் இந்தி. இதற்குப் போய் இந்தியாவின் ஆட்சிமொழி - இந்தியாவின் தேசிய மொழி - இந்தியாவின் தாய்மொழி என்றெல்லாம் மாலை சூட்ட முடியாது.

அப்படி நினைத்துக் கொண்டு உண்மையில் தொன்மைமிக்க மொழிகளை யெல்லாம் ஓரம் கட்டிவிட்டு இந்தியையும் சம-ஸ்கிருதத்தையும் மட்டுமே உயர்த்திப் பிடிக்க நினைத்தால் இந்தியாவின் ஒடுமைப்பாடே உருக்குலைந்துவிடும்.

நம் அண்டை நாடான இலங்கையில் - ஒரே ஒருவரி தான் ‘தனிச் சிங்களம், பௌத்த மதம்’ என்கிற ஒரேயொரு பொறிதான் கனலை மூட்டியது. இன்னமும் அது உள்ளது.  நீறு பூத்த நெருப்பாகக் கனன்று கொண்டு இருக்கிறது.

1965ஆம் ஆண்டு தமிழகத்தின் மொழிப்போர் தியாகிகள் இப்போதும் வாழ்ந்து கொண்டுதான் இருக்கிறார்கள்.

‘வேற்றுமையில் ஒற்றுமை’ என்னும் ஒன்றுபட்ட இந்தியாவுக்கு ‘மொழி உரிமை’ ஒன்று மட்டுமே அடித்தளம். இந்த மொழி உரிமையிலே கைவைத்து, ‘இந்தி’ மட்டுமே ஆதிக்கம் செலுத்த வேண்டும் என்ற பேராசையில் செயல்பட முனைந்தால், விளைவுகள் என்னவாயிருக்கக்கூடும் என்பதை உணரவும், ஊகிக்கவும் மோடியின் இந்த பி.ஜே.பி-. அரசு, வரலாற்றை ஒருமுறை பின்னோக்கித் திரும்பிப் பார்க்க வேண்டும்.

Pin It