புது சர்க்காருக்குப் பிரதமராக வந்துள்ள பண்டித நேருவுக்கு திருவாவடுதுறை ஆதீனகர்த்தர் ஒரு செங்கோல் அனுப்பினார். அது 5 அடி உயரமாம்! அசல் தங்கத்தால் செய்யப்பட்டதாம்! அழகாகவும், இருக்கிறதாம்! செங்கோல் அளித்தது ஏன்? பரிசா? காணிக்கையா? பாகமா? லைசென்சு கட்டணமா? ஏதும் விளங்கவில்லை.

எதிர்பாராதது! அம்மட்டோ! அவசியமற்றது! அவசியமற்ற தாக மட்டும் இருந்தால் கூடப் பரவாயில்லையே. அதனுள் புதைந்துள்ள ஆழ்ந்த பொருளைச் சிந்தித்தால் ஆபத்தன்றோ மெள்ள மெள்ளத் தெரிகிறது.

பண்டிதர் அந்தச் செங்கோலைக் கண்டு, என்ன எண்ணினாரோ, நாமறியோம் ஆதீனகர்த்தா, கோலுடன் வேறென்ன ஓலை தந்தனுப்பினாரோ நாமறியோம்.

நாம், கூற ஒன்றிருக்கிறது பண்டித நேருவுக்கு; அந்தச் செங்கோலைப் பெற்றுக் கொண்ட உமக்குச் சில சொற்கள்.

பாரிலே உள்ள பல நாட்டு வரலாறுகளை நீர் அறிவீர். முடி அரசன் அவனைச் சுற்றிக் குடிமக்களை உழைக்க வைத்து, அதன் பலனை உண்டு கொழுக்கும் சீமான்கள் பரிவாரம் இந்தத் தங்கக் கோட்டையினுள்ளே, தாராளமாக உலவும் அனுமதியும் வசதியும் பெற்ற மதத்தை முதலாகக் கொண்டோர் உள்ளனர் என்பதை அறிவீர். மக்களாட்சி மலருவதற்கு இத்தகையவர்கள் நீக்கப்பட வேண்டும் என்னும் வரலாற்று உண்மையையும் அறிவீர்கள். அறிந்ததை ஆட்சி முறையிலே புக வைக்க முயலுவீரோ என்கிற அச்சம் கொண்ட ஆதீன கர்த்தாக்கள், செம்பொன் னால் செய்யப்பட்டது மட்டுமல்ல; நவரத்னங்கள் இழைத்த செங்கோலையும் தர முன்வருவர் - தற்காப்புக்காக! பதிகம் பாடிப் பரமன் அருளைத் தேடி, அற்புத சக்தியால் செய்யப் பட்டதல்ல! அரனடியார் ஒருவர் செய்ததாகக் கூறப்படும் நரி பரியான கதை போல, இரும்புத்துண்டை ஒரு துளி விபூதி தூவி, ஓம் செம்பொன் ஆக்கிச் செய்யப்பட்டதல்ல! பிறர் உழைப்பு? இவருடையதுதானாம். இதுதான் அந்தச் செங்கோல்! பெயர் பொருந்துமா?

அந்தச் செங்கோல் - அய்ந்தடி உயரம்.

அழகிய வேலைப்பாடமைந்தது.

பசும்பொன்னால் செய்யப்பட்டது.

அளித்தவரோ சாமான்யரல்ல - ராஜ குடும்பமோ? அல்ல, அதற்கும் மேலே! பூர்வீக பரம்பரையோ? பூர்வீக பரம்பரையா, நேற்று முளைத்ததா, என்பதல்ல முக்கியம். பரம்பரை கேவலம், பூலோகவாசிகளின் வழி வழி அல்ல - திருக்கைலாயப் பரம்பரை!

அண்ணேன்! ஏது, நமது ஆதீனத்துக்குத் திடீரென்று-

தேசபக்தி பொங்கி வழிகிறதே என்று கேட்கிறாயா, தம்பி!

இல்லே அண்ணேன், பொங்குவதும் வழிகிறதுந்தான் இங்கு பழங்கதையாச்சே ஆதீனத்தின் திருப்பார்வை, இப்படி அரசியல் மீது பாயக் காரணம் என்ன என்று கேட்டேன்?

காரணம் கிடக்கட்டும் தம்பி! எனக்கு அந்தக் காரணத்தைக் கண்டுபிடிக்க வேண்டுமென்பதிலே கூட அவ்வளவு பிரியம் இல்லை - ஆனால், விளைவு என்ன ஆகும் என்பதை எண்ணும் போதுதான்.

ஏன்? என்ன ஆகும் விளைவு?

செங்கோல், செம்பொன்னால்தான் செய்கிறோம். வேலைப்பாடு முதல் தரமாகத்தான் இருக்கப் போகிறது. இரவு பகலாக உட்கார்ந்து வேலை செய்கிறோமே!

ஆமாம்! அதனாலே அழகும் அந்தஸ்தும் ஏற்படும் செங்கோலுக்கு, ஆனால் இதை அனுப்பி வைப்பதன் மூலம், ஆதீனம் தன் பார்வையை அந்தப் பக்கம் செலுத்துவது தெரிகிறதல்லவா? ஆதீனத்தின் பார்வை பட்ட காரணத்தாலே, ஏற்பட்ட பலவிதமான விளைவுகளைப் பற்றி யோசிக்கும் போது...

அடடா! நீங்க அதை எல்லாமா எண்ணிக் கொண்டு, ஆயாசமடைவது? இது வேறு பார்வை அது வேறு பார்வை அல்லவா?

இருக்கலாம் தம்பி, இருக்கலாம்; ஆனால், இரண்டு ரகப் பார்வைக்குமுள்ள ஒரே காரணம், ஆசைதானே!

ஆமாம்!

ஆதீனத்தின் ஆசை, புதிய அரசாங்கத்தின் மீது பாய்வதா? நல்லதா? - அதுதான் என் கேள்வி - எனக்குள்ள பயமும் அதுதான். அருமையான செங்கோல்-நல்ல வேலைப் பாடு - ஆனால் இதைக் கையிலே வைத்துக்கொண்டு ஆட்சி நடத்தினால்...

தம்பி! இதிலே உள்ள தங்கம் - தரித்திரத்தைக் கூடப் பொருட்படுத்தாதவன், பகல் பட்டினி, ராப் பட்டினி கிடந்தவன், மற்றவன் பொருளை மோசம் செய்தவன், மார் உடையப் பாடுபட்டவன், கூலியைக் குறைச்சவன், உழவனுடைய வயிற்றிலே அடிச்சவன், கொள்ளை இலாபக்காரன், கொடுத்த கடனுக்கு நாமத்தைக் குழைச்சிப் போட்டவன், இப்படிப்பட்ட வன்களெல்லாம் கூட, செய்ததை மறைக்க, பாவத்தைக் குறைக்க பகவானையே ஏமாற்ற, கொடுத்த காணிக்கை, இருக்குதே. அதுதானே! அதுவுந்தானே இருக்கும் புத்தம் புதிசா ஆரம்பிக்கிற ஆட்சிக்கு, இப்படி, புத்தியைச் சுரண்டிப் பிறகு, வாழ்வையே சுரண்டி விடுகிற வழக்கத்தை முதலாக வைத்து வியாபாரம். செய்கிறவர்களிடம் இருந்து செங்கோல் கிடைத்தால் ஆட்சி, சரியாவா இருக்கும்?

நீங்க ஒரு வேடிக்கை அண்ணேன்!

வேடிக்கை அதிகமில்லேடா தம்பி! வேதனை இருக்கு அதிகமாக. செங்கோல் செய்தவர்கள் இது போலப் பேசியிருக்க மாட்டார்கள். ஆனால், இதுபோன்று எண்ணாமல் இருந்திருக்க முடியாது!

அய்யர் : ஆஹா! பொது சிலாக்யம்! சிரேஷ்டமான காரியம். சகலரும் பாராட்டுவா!

அதிபர் : செங்கோலின் உயரம்?

அய்யர் : அய்ந்து அடியாம்! செம்பொன்னாம். சொன்னா! தங்களுடைய கீர்த்தியோ, அய்ந்து யோசனை உயரம் உயரும்.

அதிபர் : பேப்பர்காராளெல்லாம் கூட.

அய்யர் : அவாளைத் தள்ளுங்கோ படம் போடுவா பாராட்டி எழுதுவா - பெரிய பெரிய மனுஷா - அயல் தேசத்திலே இருந்தெல்லாம் வந்திருப்பா அமெரிக்கா, அய்ரோப்பா முதலிய பல இடங்களிலிருந்து - அவாளெல்லாம் செங்கோலைக் கண்டாளான்னா, ஆஹா! பிரம்மிச்சிப் போவா.

அதிபர் : ரொம்ப அழகான முறையிலே தான் பக்தர்கள் தயாரிக்கிறா.

அய்யர் : வேலைப்பாடு கூடக் கிடக்கட்டும். அதுவும் நன்னாத்தான் இருக்கும். ஆனா அதைக் கூடக் கவனிக்க மாட்டா - இந்த முகூர்த்த வேளையிலே, இப்படிப்பட்ட சிலாக்யமான செங்கோலைத் தர வேணும்னு, இந்தியா பூராவிலேயும் உள்ள படே படே, ராஜாக்கள் பரோடா, ஜெய்ப்பூர், உதயப்பூர், மைசூர், எந்த ராஜாங்கத்துக்கும் உதிக்கல்லே! ஆதீனத்துக்கு, அந்த அன்பும், அக்கறையும், அபிமானமும் ஏற்பட்டது பாருங்கள் என்று ஒவ்வொருவரும் பேசிப் பேசிப் புகழமாட்டாளா? செங்கோலைப் பற்றி ஒரு நிமிஷம் பேசுவா, இரண்டு நிமிஷம் பேசுவா, ஆனா, தங்களைப் பற்றியோ, நாளெல்லாம் பேசுவாளோன்னோ?

அதிபர் : ஆமாம் எப்படி நமது யோசனை?

அய்யர் : வேறு யாருக்கு வரும்! ராஜா கையிலே இருப்பது செங்கோல் - முதல் ராஜாங்கத்துக்குச் செங்கோல் கொடுத்தது யார்? ஆதீனம்! அதாவது, ஆதீனம் பார்த்து ஆசீர்வதித்து, அனுமதி தந்து, புது ராஜ்யம் ஆரம்பமாக லாம்னு முத்திரை தருவது போல, செங்கோலும் கொடுத்த பிறகுதான், புது ராஜாங்கமே ஆரம்பமாச்சுதுன்னு சகலரும் பேசுவா - இப்ப மட்டுமல்ல - எதிர்காலத்திலும், இப்படிப்பட்ட, பேச்சு நடந்திருக்கக் கூடும்!

செம்பொன் தன்னால் ஆக்கித் திருவருளை இழைத்திழைத்து வம்பொன்றும் வராமல் வாழ்க இந்த அரசு என்று எம்மானைப் பெம்மானை

ஏறுடைய எம் சிவனை வேண்டியே, அருள் பெற்று வேண்டியமட்டும் சேர்த்துச் செங்கோல் தனைச் சமைத்தார் எங்கோவாம், ஆதீனத்தார்

என்று புலவர் பாடி இருப்பார், இந்தச் சம்பவத்தைச் சிறப்பிக்க ஓர் பாடல் சைவ மெய்யன்பருக்குத் திருப்தி இருந்திராது. சீற்றம் பிறந்திருக்கும் காரணத்தோடு.

சைவர் : பாசுரம் பாடுகிறீர் - பாசுரம்! ஓலைச்சுவடியும், கையுமாக ஓராண்டா, ஈராண்டா, பத்தாண்டுகளாக உள்ளீர். பழுத்த பூசணியென வயிறு பருத்ததன்றிப் புலமை காணோமே?

புலவர் : கவிதையிலே, குறை உளதோ?

சைவர் : அதில் மட்டுமிருப்பின் பொறுத்திடலாமே! யூகம் இல்லையே! பாசுரம் எதுக்குப் பாடுகிறீர்?

புலவர் : ஆதீனச் சிறப்பை விளக்க.

சைவர் : ஆதீனச் சிறப்பா? இருக்கும் சிறப்புடன் இன்று புதிதாக ஆதீனம் தனிச்சிறப்புப் பெற, செங்கோல் சமைத்து அனுப்பும் சம்பவமன்றோ முக்கியம்? அதற்கன்றே பாடல்?

புலவர் : ஆமாம்!

சைவர் : அங்ஙனம் என்று, உமது பாடலில் எங்ஙனம் விளக்கியுள்ளீர்? செங்கோலின் பருமன், உயரம், எடை, அழகு, இவை பற்றிய குறிப்பெங்கே? முக்கியம் அஃதன்றோ? சம்பவத்தின் சிலாக்கியம் அப்போதன்றோ விளங்கும். செப்பனிடும், முதலில் செய்யுளை! பிறகு உம் புத்தியை!

அடி அய்ந்து உயரம் ஆகும்.

ஆனதோ அழகான செம்பொன்

வடிவழகு கொண்டதாம் வேலை

ஞாலம் புகழ்ந்திடுமாம் எஞ்ஞான்றும் இந்நாளை!

பாதகமில்லை! போம்! என்று கூறி, சைவ, மெய்யன்பர், புலவரை அனுப்பிவிட்டுப் பாடலை, பக்தர்களுக்குச் சமர்ப்பித்து இருக்கக்கூடும். புகழைப் பதிவு செய்து கொள்ளும் முறை அது.

செங்கோலைச் சமர்ப்பிக்க வந்த கூட்டத்தில், சிவந்த மேனியும், கலைக் கண்களும் படைத்தவர் ஒருவர், கட்செவியும் மயங்கும் வகையில் நாதஸ்வரம் வாசித்திட்டது அறிவீர். அவரைக் கண்ட பலர் என்ன பேசிக்கொண்டிருப்பர்?

யார் இவர்?

நாதஸ்வர வித்வான்!

ஓஹோ! இவர் வந்துள்ள காரணம்?

செங்கோலைத் தருவதற்கு ஆதீனம் இவரை அனுப்பி யிருக்கிறார். செங்கோல் தரும் ஆதீனம் எப்படி இருப்பார்?

சிவப்பழமாக!

என்ன வேலை செய்கிறார்?

ஆதீனத்தை நடத்துகிறார்!

எங்ஙனம்?

உரத்த குரலில் கூறட்டுமா, மெல்லிய குரலிலா?

ஏன்?

ஏனெனில், இருவிதமான குரலில் கூற, இருவகை உண்டு!

என்று பேசிவிட்டுச் சிரித்திருப்பார்கள்.

பார்த்தால், அழகாகத் தெரியும்.

அந்தச் செங்கோலை, மற்றோர் முறை பாரும், சற்றுக் கூர்மையுடன்!

ரிஷபம் மட்டுமல்ல, தெரியக்கூடியது,

மாடென உழைக்கும் ஏழைகள் பலரும் தெரிவர்.

இழைப்பு வேலை மட்டுமல்ல, தெரியக்கூடியது உழைப்பை உறிஞ்சுவதால், மேனியில் உளுத்தவர்களுக்கு ஏறியுள்ள மினுமினுப்பும் தெரியும்.

ஆயிரம் வேலி நிலம் தெரியும், அதை உழுது பயிரிட்டு அழுது வாழும் பாட்டாளியின் உருவம் தெரியும். அவன் வதையும் குடிசை தெரியும். அங்கு செங்கோல் செலுத்தும் வறுமை தெரியும்! மிட்டா மிராசு தெரியும், அவர்களின் மோட்டார் பங்களா தெரியும். தங்கத் தட்டும் தெரியும் அதிலே வெண்ணிறத் தூசும் தெரியும்! சுழலும் கண்கள் தெரியும். சோர்ந்த உடலும் தெரியும். வியர்வை தெரியும். பொழிந்த இரத்தம் தெரியும். மத்தடி பட்ட தயிர் போன்ற சித்தம் கொண்டவரின் உருவம் தெரியும்!

மடம் தெரியும் - அங்கு உலாவும், சிவ ஜடம் தெரியும். உடலில் அணி தெரியும் - உள்ளே பிணி உள்ளது குறிப்பாகத் தெரியும்!

தோட்டம் தெரியும், நீராடத் தனக்குதவும் குளமும் தெரியும் அக்குளம் பேசுமேல் பலப்பல குட்டிக்கதைகள் தெரியும்.

சைவம் தெரியும். பலர் அதன் அருள் பெற்று, உயர்ந்த 'வகையும்' தெரியும்.

மின்னிடும் மோதிரமும் செவியில் குலுங்கிடும் குண்டல மும் தங்கப் பாதக் குறடும், தாங்கிடும் பக்தர்களும் எனும் இவ்விதக் காட்சிகள், இன்னும் பலப் பல, மின்னி மின்னித் தெரியும் - செங்கோலை மீண்டும் மீண்டும் பார்த்தால்!

ஆதீனம் வந்து போனவரின் அடையாளப் பேச்சுப் பேசுவோர், ‘ஆஹா! அருமை! அருமை! ஆனாலும் சிரமம் அதிகம் ஆதீனம் ஆனந்தம் அடைந்தது, நம் பாக்கியம்' என்று அகம் மகிழாவிட்டாலும் முக மகிழ்ந்து போகும் அடியார்களைக் காணலாம்! மற்றும் பலப் பல தெரியும். ஆனால், மாற்றுக் குறையாத பசும்பொன்னால் செய்தது, உயரம் அய்ந்தடி, உன்னதம் வேலைப்பாடு என்பவனற் றைச் சற்று மறந்து பார்க்க வேண்டும், செங்கோலை. அப்போதுதான் தெரியும் சிற்றரசன், சீமான், என்போரேனும் மக்களின் சீற்றம் கிளம்பிப் பாயுமோ தம் மேலே என்று ஆயாசமடைவர். ஆனால் இந்த ஆதீனங்களோ, அச்சம் மிகுந்த மக்கள் தமது அடி தொழ, சர்க்கார் பாதுகாப்புத் தர, பணம் படைத்தோர் படை பல தர கொலு வீற்றிருக்கிறார்கள் பயமற்று - கவலையற்று என்பது. செங்கோல் - ஒரு

வேண்டுகோள்; காணிக்கை அல்ல! அன்பின் அறிகுறியல்ல!

நாட்டுப்பற்றை விளக்கும் சின்னமல்ல! வேண்டுகோள்!

ஆளவந்தாரோ, மக்களைத் தாளில் விழச் செய்து, ஈடில்லாத புகழும் பொருளும் பெற்றுள்ள இந்த ஆதீனங் களைக் கலைத்துவிட வேண்டுமென்று, ஏதேதோ கற்றோ மென்று கூறிக்கொள்ளும் ஒரு கூட்டம் பேசிடும் காலம் இது, எமது ஆட்சி முடியுங்காலம் என்று பேசுகின்றனர். நாங்கள், பரம சாதுக்கள்! உம்மிடம் அபாரமான ஆசை கொண்ட வர்கள். சந்தேகமிருப்பின், செங்கோலை மற்றோர் முறை பாரும், அய்ந்தடி உயரம், அருமையான வேலைப்பாடு - எமது ஆதீனம், புதுமுறை வேண்டுபவரின் புன்மொழிக்கு ஆளாகாமல் இருக்கச் செய்யும். எமக்கு இறவா வரம் தாரும். எம்மானே, நேரு பெம்மானே! இறவா வரம் தாரும் - இன்னுமோர் இருபதாண்டுகளுக்கேனும், இறவா வரம் தாரும் என்று வேண்டுகோள் விடுத்துள்ளார் - சைவ மெய்யன்பர். இந்தக் கோல் கொடுத்ததன் மூலம், தமக்கும், புதிய சர்க்காருக்கும், சினேகம் இருப்பதாகக் காட்டிக் கொள்வதன் மூலம், மேலும் பாமரரை மயக்க விரும்புகிறார். நேரு சர்க்காரின் நேயரான ஆதீனம் ஏற்கெனவே சிவநேசத் தையும் பெற்றிருக்கிறது. எனவே, அதன் ஆதிக்கம் குறையாது, குன்றாது, என்று பாமரர் நம்ப இடமேற்படுகிறது இதனால்.

இவ்வளவும் தங்கம்! முற்றும் துறந்த முனிவர்களின் வழி வழி வந்தோரான, ஆதீனகர்த்தாவின் சுவாதீனத்திலுள்ள ஏராளமான செல்வத்திலே இது ஒரு சிறு, மிக மிகச் சிறு துண்டு!

ஆதீனத்திலே, நவரத்னங்கள் உள்ளன பேழைகளிலே! நவரத்னங்களிலும் மேலான, செந்நெல் மணி விளையும், வளமான வயல்கள் உள்ளன ஆதீன ஆட்சியிலே

மனித குல மாணிக்கங்களான பாட்டாளி மக்கள், அங்கு வதைகின்றனர்.

எத்தர்கள், இந்த ஆதீன கர்த்தாக்களை சித்தர் என்று கூற, ஏமாளிகள் மயங்கிக் குவிக்கும் ஏராளமான பணத்திலே, சிதறியதிலே சிறிது, செங்கோலாகி உம்மிடம் வந்திருக்கிறது.

தோடாக, பாடகமாக, தொங்கட்டமாக, உருவெடுத்த பொருள் இதனினும் அதிகம்!

இறவா வரம் தரச் சொல்லி, விடுத்துள்ள இந்தச் செங்கோல், எத்தகைய செம்பொன்னால் ஆக்கப்பட்டிருக்கிறதோ, அத்தகைய பொன், குன்று போலுள்ள காட்சியைக் காணலாம். இத்தகைய ஆதீனங்கள் மத ஸ்தாபனங்கள் ஆகிய இடங்களிலே உள்ள பொருளைப் பறிமுதல் செய்தால் அந்தப் பொருளை, நாட்டு மக்கள் வாழ்வை வளமாக்கும், செங்கோல் இன்றுள்ளது போல ஆதீனம் தரும் அலங்காரக் கோலாக மட்டுமின்றி, மக்களின் வாழ்வை உயர்த்திடும், மாண்பு பெறும், அந்தச் செங்கோலை அடிக்கடி பார்த்து, அது புகட்டும் பாடத்தைக் கூர்ந்து கவனிக்க வேண்டுகிறோம்.

(திராவிட நாடு, 24.8.1947)

- அறிஞர் அண்ணா