இந்நூல் மருத்துவர் நா. ஜெயராமன் அவர்களால் எழுதப்பட்டு பூபாளம் புத்தகப் பண்ணை சார்பாக வெளியிடப்பட்டிருக்கிறது. இந்நூல், ஆசிரியரின் ஒரு மிகப்பெரிய ஆதங்கத்திலிருந்து தனது பயணத்தைத் துவங்குகிறது. தாழ்த்தப்பட்ட சமூகம் பெற்றிருக்க வேண்டிய நியாயமான உரிமைக்கு எதிராகச் செயல்பட்ட காந்தியை அந்தச் சமூகத்தின் மகாத்மாவாக அய்ந்து வயதில் தனக்குச் சொல்லிக் கொடுத்த பள்ளிக் கூடங்களும், சமூகமும், அந்த உரிமைகளைப் பெற்றுத் தருவதையே தனது வாழ்க்கையாகக் கொண்டிருந்த டாக்டர் அம்பேத்கரை தனது இளவயதுப் பருவம் கடந்து அவரது சொந்தத் தேடலில் கண்டடையும் வரையில் தனக்கு அறிமுகப்படுத்தவேயில்லை என்பதுதான் அந்த ஆதங்கம்.
தீண்டாமை ஒழிக்கப் பாடுபட்டவர் யார் என்று கேட்டால் கண்ணை மூடிக்கொண்டு இந்த நாட்டுக் குழந்தைகளைக் காந்தியின் பெயரைச் சொல்ல வைத்திருப்பது என்பதே தாழ்த்தப்பட்ட மக்களுக்கு எதிராக ஏவப்பட்டுக் கொண்டிருக்கும் ஒரு கணைதான் என்று அவர் இந்த நூலின் மூலம் நிறுவுகிறார். தாழ்த்தப்பட்ட மக்களின் உரிமைக்காகத்தான் காந்தி சாகும் வரை உண்ணாவிரதம் இருந்தார் என்று சொல்கிற சமூகத்தின் முன், ஒரு நேர்மையான வரலாற்றுப் பதிவாளராக, நடந்த உண்மைகளை ஆதாரங்களுடன் அவர் எடுத்து வைக்கிறார். காந்தியின் உண்ணாவிரதம், தாழ்த்தப்பட்ட மக்களுக்கு வழங்கப்பட இருந்த உரிமைகளை எதிர்த்து நடந்த ஒன்று என்பதைத் தெளிவுபடுத்துகிறார்.
இந்தியச் சமூகத்தில் மாகாபாரதம், இராமாயணம், கீதைக்கு என்ன இடம் அளிக்கப்பட்டிருக்கிறதோ, அதனுடைய தொடர்ச்சியாகத்தான் காந்தியின் உருவம் எழுதப்பட்டிருக்கிறது. கீதையிலிருந்து தரப்படும் ஓர் உவமை அல்லது குட்டிக் கதை ஒரு பேச்சாளரின் பேச்சுக்கு உடனடி அங்கீகாரத்தையும், ஓர் எழுத்தாளரின் எழுத்துக்கான அங்கீகாரத்ததையும் தரவல்ல தாக இன்றும் இருக்கிறது. காந்தியும் தனது சமூக அதிகாரத்தை இந்தத் தாக்கங்களிலிருந்தே கட்டியயழுப்பிக் கொண்டார். இந்து மதத்தை யும், கீதையையும் ஏற்றுக் கொள்ளாத அல்லது கேள்விக்குட்படுத்தாத ஒரு வாசிப்பாளர் அல்லது சிந்தனையாளருக்கு ‘காந்தி’ இவ்வளவு பூதாகரமாகக் காட்சியளிக்க முடியாது. மருத்துவர் ஜெயராமன் இந்து மத எதிர்ப்பாளர். பகுத்தறிவுச் சிந்தனையாளர். எனவே, உண்மையான காட்சிகளை சாட்சிக்கு வைத்து வரலாற்று வலியின் வேதனையோடு கேள்விகளை வைக்கிறார். காந்திக்கும், பெரியார் ‡ அம்பேத்கர் ஆகிய தலைவர் களுக்குமிடையிலான முரண்பாடு, அவர்களது அடிப்படைக் கோட்பாடு, நம்பிக்கை மற்றும் செயல்பாடு இரண்டிலுமிருக்கிறது. ‘தீண்டாமை’ என்பது இந்து சமூக அமைப்பின் விளைவு. எனவே தீண்டாமை ஒழிய வேண்டுமானால் இந்து மதம ஒழிய வேண்டும் என்பது அம்பேத்கர், பெரியார் ஆகியோரின் நிலைப்பாடு. இந்து மதம்தான் நமது வாழ்க்கை அமைப்பாக வேண்டும் அதில் தீண்டாமை களையப் பட வேண்டும் என்பது காந்தியாரின் கூற்று.
சாதி அமைப்பை நிலைநிறுத்தும் வெறித்தனம் காந்தியாரின் பல்வேறு பிரச்சாரங்களில் அப்பட்டமாக வெளிப்படுகிறது. வர்ணாசிரம சாதிய அமைப்பின் ஆஸ்தான வக்கீலாக ‘காந்தி’ வாதாடும் சில இடங்கள் மனிதாபிமானமுள்ள எவரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கும். சாதிப் பிரிவினையை ஒரு தேர்ந்தெடுத்த திட்டமிட்ட அறிவியல் ரீதியிலான வேலைப்பிரிவினையாக நினைக்கின்ற காந்தி, (காந்தியை இன்று தூக்கிப் பிடிக்கும் எவருக்கும் ஆழ்மனதில் இதுவே உளவியலாக இருக்கிறது என்பதோடு, அதனை வெளிப்படுத்த முடியாமல் அல்லது அதன் வெளிப்பாடாகவே அவர்கள் காந்தியை வளர்த்தெடுக்க விரும்புகிறார்கள்), தனது பிறவியின் மூலமாக மலம் அள்ள நிர்ப்பந்திக்கப் பட்டிருக்கும் ஒருவர் மலம் அள்ளுவது அல்லது அகற்றுவது என்பதில் முனைவர் பட்டம் பெறுமளவுக்கு ஆராய்ச்சி செய்து தன்னை உயர்த்திக்கொள்ளலாமே தவிர, வேறு துறைகளில் பாலர் வகுப்பில் (எல்.கே.ஜியில்) கூட காலடி எடுத்து வைத்துவிடக் கூடாது என்றும் அவ்வாறு முயற்சிப்பின் அவர்களை, ‘திருடர்கள்’ ‘அயோக்கியர்கள்’ என்று வசை பாடவும் தயாராகி விடுகிறார்.
மலம் அள்ளுவது என்ற தொழிலின் மீது சுமத்தப்பட்டிருக்கும் இழிவைத்தான் காந்தி அகற்ற விரும்பினார் என்றும், அவ்விதமாக அகற்றி விடுவதாகவுமே வைத்துக்கொள்வோம். ஒரு குழந்தை பிறப்பதற்கு முன்பே, அது என்ன தொழில் செய்து எந்தப் பகுதியில் எந்தெந்த மனிதர்களோடு, என்னவிதமான வாழ்க்கையை வாழ்ந்து சாக வேண்டும் என்று முன்கூட்டியே தீர்மானிக்கின்ற ஒரு சமூக அமைப்பு, இதற்காக வர்ணாசிரம சாதிய கட்டமைப்பை கட்டிக்காத்துத் தலைவிதித் தத்துவத்தோடு இணைத்து இதனைக் காப்பாற்றி வருவதற்காக ஒரு மதத்தை வளர்த்து வருகின்ற ஒரு சமூக அமைப்பு, அந்த சமூக அமைப்பைக் காப்பாற்றுகின்ற கடவுளை அல்லது கடவுள்களை ஆயிரம் வெடிகுண்டு வைத்துத் தகர்த்தெறிந்தாலென்ன என்று கேட்டு அதனாலேயே நாத்திகராகப் பரிணாமம் கொள்கிறார் பெரியார். இந்து மதமே வேண்டாம் என்று வெளியேறிச் செல்கிறார் அம்பேத்கர். இப்படி இவ்விதமாகப் படைத்திருக்கிற கடவுளை சிலாகித்துச் சிலாகித்தே ஆன்மீகவாதியாக உருக்கொள்கிறார் காந்தி. இங்குதான் இவர்களுக்கான அடிப்படை முரண்பாடு தோன்றுகிறது.
வர்ணாசிரம தர்மத்தால் இந்து சமூகம் பிளவுபடவில்லை; மாறாக தாழ்த்தப்பட்ட மக்களைக் கைதூக்கி விடும் ஒதுக்கீடு திட்டங்களால்தான் இந்து சமூகத்தின் ஒற்றுமை குலைந்துவிடும் என்று காந்தி கூறியிருப்பதில் என்ன நேர்மையை, நாணயத்தை விளக்கமாகக் கூறிவிட இயலும்? ஏற்றத் தாழ்வுகளற்ற சாதி, தொழில் அடிப்படையிலான வர்ணாசிரம அமைப்பு ‡ இதனைக் காந்தியின் கனவாகக் கூறுகிறார்கள். ‘சாதி’ என்பதே ஏற்றத்தாழ்வுதான். அது இல்லாமல் ‘சாதி’ என்பது என்ன? அது எதற்கு? அடுத்து இந்து மதத்தின் வர்ணாசிரம அமைப்பு ‘பிறவி’ அடிப்படையிலானது எனபது கண்ணாடி தேவைப்படாத கைப்புண் உண்மை. பிறவியோடு தொழில் பிரிவினையை இணைத்ததாலேயே இந்தியாவின் தொழில் வளர்ச்சி தேங்கிப் போனது என்கிறார் அம்பேத்கர். அது மட்டுமன்றி எந்தவொரு சமூகத்திலும் தொழில் பிரிவினைகள் நெகிழ்வுத் தன்மையுடனும், மாற்றத்துக்கான இடத்துடனும் இருக்க வேண்டும். மாற்றத்தின் மய்யங்கள் மாறுபடும் என்பது இயக்கவியல் கூறும் அறிவியல் உண்மை. இவ்வாறிருக்க தொழில் அடிப்படையில் வர்ணாசிரமம் என்ன உன்னதத்தை அடைய காந்திக்குத் தேவைப்பட்டது?
சரி. அவ்விதமாவது அவர் தெளிவாகப் பேசியிருக்கிறாரா என்றால் அதுவும் இல்லை. அவர் மிகத் தெளிவாகப் பிறவி அடிப்படையிலான தொழில் பிரிவினைக்கு ஆதரவாக நிற்கிறார். அவரது உரை, மற்றும் உண்ணாவிரத முயற்சிகளால் இலட்சக்கணக்கான மக்கள் சேரிகளில் போய் வாழ்ந்தார்கள் என்று இன்று சிலர் எழுதுகிறார்கள். அது மட்டும் உண்மையாக இருந்திருந்தால் இன்று பல்வேறு சேரிகள் ஒழிந்து போயிருக்கும். ஆனால் அப்படி ஒழிந்து போன சேரிகளின் பட்டியல் எங்காவது இருக்கிறதா? சேரிகளில் போய் அவர்களின் கழிப்பறையை சுத்தம் செய்தார்களாம் உயர்சாதியினர். அவர்களின் கழிப்பறையை வேண்டுமானாலும் சுத்தம் செய்கிறோம் ஆனால் அவர்களைக் கலப்புத் திருமணம் செய்து கொள்ள மாட்டோம் என்ற மனநிலைக்கு என்ன பெயர் சொல்லலாம் என்று உளவியல் பேராசிரியர்களிடம்தான் கேட்க வேண்டும்.
தாழ்த்தப்பட்ட மக்களுக்கு இரட்டை வாக்குரிமை, தங்களிடமிருந்து தங்களுக்கான பிரதிநிதி ஒருவரையும், பிற மக்களுடன் இணைந்து பொது வேட்பாளர் ஒருவரையும், தேர்ந்தெடுக்கும் இரண்டு வாக்குரிமைகளை வழங்கியது. ஆனால் அதனை எதிர்த்து உண்ணாவிரதம் இருந்த காந்தி தாழ்த்தப்பட்டோருக்கான தனித் தொகுதி முறையைக் கோரிப் பெற்றார். அம்பேத்கர் இதனை ஒத்துக் கொள்ளும்படியாக ஒரு சண்டித்தனத்தை உண்ணாவிரதம் என்ற பெயரில் காந்தி நிகழ்த்தி ஒரு மறைமுகமான மிரட்டலை உருவாக்கி அம்பேத்கரை பின்வாங்கச் செய்கிறார். இந்த வரலாறு மிகத் துல்லியமான விபரங்களுடன் இந்த நூலில் பதிவு செய்யப்பட்டு, ஒரு முக்கியமான வரலாற்று நூலுக்கான இடத்தைப் பிடித்துக் கொள்கிறது. இதில் நமது தலைவர்கள் கூற்றைவிட காந்தியாருக்குப் பதிலளித்து ஆங்கிலேய அரசு அனுப்பிய மடல்களும் பதில் விளக்கங்களும் நம்மை வியப்படைய வைக்கின்றன. (காண்க : இராம்சே மக்டோனல்டு காந்திக்கு எழுதிய கடிதம் பக்கம் எண் 67 ‡ 70) இவற்றையயல்லாம் படிக்காமல் இனி வருகின்ற தலைமுறை இந்தியப் பொது வாழ்க்கைச் சக்கரத்தை நகர்த்துவது என்பது இயலாத காரியம்.
அம்பேத்கர் வெள்ளையர்களோடு இரகசிய உறவு வைத்திருந்தார், அதனை உணர்ந்தே காந்தி அவரை எதிர்த்தார் என்றும் எழுதுகிறார்கள். அம்பேத்கர் வெள்ளையரோடு எந்த இரகசிய உறவும் வைத்திருக்க வில்லை. வெளிப்படையான உறவுதான் வைத்திருந்தார். இந்த நாட்டு இந்து மதத் தலைமையைவிட, இந்த நாட்டு உயர்சாதி ஆதிக்கத்தைவிட, வெள்ளையர்களின் ஆதிக்கமே தங்கள் மக்களுக்கு நன்மை தந்தது, தந்து கொண்டிருந்தது என்பதற்கு ஆயிரம் சாட்சியங்கள் இருக்கின்றன. தாழ்த்தப்பட்டோருக்கான உரிமைகள் என்று கேட்கப்படும் விடயங்கள் இந்து மதத்தை அழித்து விடுமென்பதற்காகவே காந்தி எதிர்த்தார். வெளிப்படையாய் அந்தக் காரியத்தைக் கூறித்தான் எதிர்த்தார். காந்தி இந்து மதத்தின் பிரதிநிதியாகவே வாழ்ந்தார். இந்து மதச் சிந்தனையிலிருந்து அவரது இறுதி நாட்களில் அவர் விலகத் தலைப்பட்டதாலேயே இந்து மத வெறியர்களால் கொலையும் செய்யப்பட்டார். நம்முடைய மிக மிக அண்மைக்கால வரலாறு இது.
இந்த வரலாற்றையே திரித்துக் கூற அறிவுஜீவிகள் இருக்கும் ஒரு சமூகத்தில், இது போன்ற உண்மைகளை உள்ளபடி எழுதும் நூல்கள் இன்னும் ஓராயிரம் தேவை. மருத்துவர் ஜெயராமன் தேவையான ஒரு பணியைச் செய்திருக்கிறார். அதனை சிறப்பாகச் செய்திருக்கிறார். இது அவருடைய முதல் நூல் என்பது மேலும் சிறப்பு. ஒரு நல்ல எழுத்தாளருக்குள்ள இடத்தை முதல் நூலிலேயே அவர் பெற்று விட்டார். முப்பதாண்டு காலம் மருத்துவ சேவை புரிந்திருக்கும் இவர் இனி எழுத்துத் துறையிலும் தனது சேவையைத் தொடர வேண்டும் என்பது நமது விழைவு.