சிலைகள், நினைவுப் பொருள்கள், புகைப் படங்கள், பாடல்கள், நூல்கள், அறிக்கைகள் முதலான வற்றின் எண்ணிக்கையை அல்லது நினைவிடங் களில் கூடும் மக்கள் எண்ணிக்கையை - யார் பெரிய தலைவர் என்று மதிப்பீடு செய்வதற்கான ஓர் அளவுகோலாகக் கொண்டால், வரலாற்று நாயகர்களில் எவரும் பாபா சாகிப் அம்பேத்கருக்கு ஈடாக முடியாது. ஆண்டுதோறும் அம்பேத்கருக்கான புதிய புதிய நினை விடங்கள் உருவாக்கப்படுகின்றன. அவ்விடங்களில் கூடுகின்ற மக்களின் எண்ணிக்கையும் அதிகமாகிக் கொண்டிருக்கிறது.

அம்பேத்கரைப் போற்றிப் புகழ்கின்ற மக்களின் உணர்வு நிலை எந்த அளவுக்கு இருக்கிறதென்றால் - பூனையும் நாயும் கூட சுதந்தரமாக நடமாடக்கூடிய பொது நீர் நிலைகளிலிருந்து நீர் அருந்துவதற்காக மாபெரும் தலைவரான அம்பேத்கர் கடுமையாகப் போராடினார் என்பதைக்கூட நம்ப மறுக்கின்ற மன நிலை பின்னாளில் ஏற்படக்கூடும். வானுலகில் கடவுள் கள் இருப்பது உண்மையாக இருக்குமாயின், அம்பேத் கருக்கு உள்ள புகழைப் பார்த்துப் பொறாமைப்படு வார்கள். மக்களின் இத்தகைய வியத்தகு உணர்வின் - நம்பிக்கையின் பின்னணி என்ன?

தாழ்த்தப்பட்ட மக்கள் அம்பேத்கரைத் தங்கள் மீட்பராகக் கருதுகின்றனர் என்பது மறுக்க முடியாத ஓர் உண்மையாகும். தனியொருவராகத் தன்னுடைய சிந்தனை - செயல்திறன் முழுவதையும் தாழ்த்தப்பட்ட மக்களின் விடுதலைக்காகப் பயன்படுத்தி அயராது பாடுபட்டவர் என்பதால் அம்மக்கள் அவரைத் தங்கள் பேரன்புக்குரிய பெருந்தலைவராகப் போற்றுதல் இயல் பான ஒன்றேயாகும். இது உண்மைதான் என்றாலும், இது ஒன்று மட்டுமே முற்றமுழுதான காரணம் என்று நம்புவது சூதுவாதற்ற-அப்பாவியான மனநிலையைக் காட்டுவதாகும். அம்பேத்கரை ஒரு குறியீடாக-போற்று தலுக்குரிய தலைவராகக் கட்டமைப்பதிலும், பரப்பு வதிலும் ஆளும் வர்க்கத்தினர் உள்நோக்கத்துடன் வினையாற்றுவதும் இதற்கு முதன்மையான காரணி யாக இருக்கிறது. சங் பரிவாரம் அண்மையில் அம் பேத்கரை உயர்த்திப் பிடிக்க முனைந்திருப்பது ஒன்றே போதும் - தாழ்த்தப்பட்ட மக்கள் ஆளும்வர்க்கத்தின் தன்னல நோக்கத்தைப் புரிந்து கொள்ள!

அம்பேத்கரை வழிபாட்டுக்குரிய தலைவராக மாற்றுதல்

சாதி இந்துக்களின் அரசியல் பிரதிநிதியாக இருந்த காங்கிரசுதான், அம்பேத்கரின் முதல் எதிரியாக விளங் கியது. 1932இல் வட்ட மேசை மாநாட்டில் தாழ்த் தப்பட்ட வகுப்பு மக்களுக் குத் தனிவாக்காளர் தொகுதி முறையைப் பெற்றுத்தருவதற்கு அம்பேத்கர் மேற் கொண்ட முயற்சிகளை முழு மூச்சுடன் காந்தி எதிர்த் தார். தாழ்த்தப்பட்ட மக் கள் தங்கள் விடுதலைக் காகச் சுதந்தரமான - வலிமையான ஓர் அரசியல் ஆயுதமாக விளங்கக் கூடிய தனிவாக்காளர் தொகுதி ஏற்பாட்டை ஒழித்தக் கட்டுவதற்காக அம்பேத்கரைப் பெரும் அச்சுறுத்தலுக்கு உள்ளாக்கிப் பூனா ஒப் பந்தத்தில் கையொப்பம் இடச்செய்தவர் காந்தி. இந்த இரண்டு நிகழ்வுகளையும் இங்கு நினைவு கூர்தல் வேண்டும்.

இந்தியாவின் ஆட்சி அதிகாரம் காங்கிரசின் கைக்கு வந்த பிறகு, அரசமைப்புச் சட்ட அவையில் அம்பேத் கரை இடம்பெறவிடாமல் தடுக்க முயன்றது. ஆனால் அது மிக விரைவில் இக்கருத்தை மாற்றிக் கொள்ள நேரிட்டது. இதற்கான காரணத்தைக் கூறுவதற்காகக் காங்கிரசு பல கதைகளைக் கட்டவிழ்த்துவிட்டது. அரச மைப்புச் சட்ட அவையில் இடம்பெற முடியாத இக்கட் டான சூழல் அம்பேத்கருக்கு ஏற்பட்டது. அப்போது காந்தியின் தந்திரமான அறிவாற்றல் மூலம் அம்பேத்கர் அரசமைப்புச் சட்ட அவையில் நுழைந்தார். அதன் வரைவுக் குழுவின் தலைவரானார். அரசமைப்புச் சட்டத்தில் தாழ்த்தப்பட்ட மக்களின் உரிமைகளுக்குப் பாதுகாப்புச் செய்தார். அதற்கு மாற்றீடாக அரசமைப்புச் சட்டத்தை உருவாக்குவதில் சான்றாண்மையுடன் நடந்து கொண்டார்.

ஆயினும் காங்கிரசுக்கும் அம்பேத்கருக்கும் இடை யில் ஏற்பட்ட புதிய நட்பு நீண்டகாலம் நீடிக்கவில்லை. இந்துச் சட்டத் தொகுப்பு மசோதாவை வைதீக இந்துக் கள் நிறைவேற்றவிடாமல் எதிர்த்ததால், நேருவின் அமைச்சரவையில் சட்ட அமைச்சர் பதவியைத் துறந் தார். பின்னாளில் அம்பேத்கர், தான் எழுதிய அரசியல் சட்டத்தையே கடுமையாக விமர்சனம் செய்தார். “அரசமைப்புச் சட்டத்தை எழுதிட நான் ஒரு வாடகைக் காரன் போல் பயன்படுத்தப்பட்டேன். இந்த அரசமைப் புச் சட்டம் யாருக்கும் பயன்தராது. இதை எரிக்கின்ற முதல் ஆளாக நான் இருப்பேன்” என்று தன் மனக் கொதிப்பை வெளிப்படுத்தினார். காங்கிரசுக் கட்சி, தீப் பற்றி எரிந்து கொண்டிருக்கின்ற வீடு போன்றது; அதில் தாழ்த்தப்பட்ட மக்கள் சேர நினைப்பது அவர்களுக்கு அழிவையே உண்டாக்கும் என்று அம்பேத்கர் சொன் னார். ஆயினும் தங்களை ‘அம்பேத்கரியவாதிகள்’ என்று சொல்லிக் கொண்ட பலர், அம்பேத்கரின் எச்சரிக்கையைப் பொருட்படுத்தாமல், ‘அம்பேத்கரியத் தை’ வளர்த்தெடுப்பதற்காக என்று சொல்லிக் கொண்டு காங்கிரசில் சேர்ந்தனர்.

நிலச்சீர்திருத்தம், பசுமைப் புரட்சி போன்ற திட் டங்கள் மூலம், ஊரகப் பகுதியில் பெரும் எண்ணிக் கையினராக இருந்த சூத்திர சாதிகளில் அதிக அளவில் நிலம் வைத்திருந்த உழவர்களைக் காங்கிரசுக் கட்சித் திறமையாகத் திட்டமிட்டுத் தன் பக்கம் ஈர்த்துக் கொண் டது. இப்பெருநில வர்க்கத்தினர் காங்கிரசின் கூட்டாளி யாக இருந்துகொண்டே தங்களுக்கான அரசியல் விழைவுகளை வளர்த்துக் கொண்டனர். இவர்கள் மாநிலக் கட்சிகளைத் தோற்றுவித்தனர். படிப்படியாக உள்ளூர் மட்டத்திலும், மாநில அளவிலும் தங்களுக் கான வலிமையான அரசியல் அடித்தளத்தை அமைத் துக் கொண்டனர்.

தேர்தல் அரசியலில் கடும் போட்டி உருவானது. அதனால் சாதிகள் அடிப்படையில், மத அடிப்படையில் வாக்கு வங்கிகள் என்ற பெயர்களில் சாதிகளும் மதங் களும் அரசமைப்புச் சட்டத்தில் நீடித்திட தந்திரமாக வழிவகை செய்யப்பட்டது. இதன் அடிப்படையில் தான், ஆளும் கட்சிகளிடம் மற்ற பிரிவினரையும் தங்கள் பக்கம் ஈர்த்துக் கொள்வது தங்களுக்கு வலிமை சேர்க்கும் என்ற மனப்போக்கு வளர்ந்தது. இந்தப் போக்கைக் காங்கிரசுக் கட்சிதான் முதலில் கையாண் டது. தாழ்த்தப்பட்ட வகுப்பினரைத் தன் பக்கம் ஈர்ப் பதற்காகக் காங்கிரசுக் கட்சி, அம்பேத்கரின் அடிப்படைக் கொள்கைகளை ஒதுக்கி வைத்துவிட்டு, அம்பேத்கர் ஒரு தேசியவாதி, பாதி காங்கிரசுக்காரராக இருந்தவர், முதிர்ந்த அரசியல் அறிவாளர், அரசமைப்புச் சட்டத் தின் தந்தை என்றெல்லாம் கூறி, அம்பேத்கரை வழி பாட்டுக்குரியவராக மட்டும் காட்டியது.

சிலையாக வைத்து வழிபடத்தக்கத் தலைவர் அம்பேத்கர் என்கிற பரப்புரை - ஒரே கல்லில் பல மாங்காய்களை வீழ்த்துவது போலாயிற்று. தாழ்த்தப்பட்ட வெகுமக்கள் காங்கிரசின்பால் ஈர்க்கப்பட்டனர். சந்தர்ப்பவாத தலித் தலைவர் கள் பலர் தலித் இயக்கத்திலிருந்து வெளியேறி காங்கிரசில் சேருவதை இது வேகப்படுத்தியது. இதனால் திசைவழி அறியாமல் தடுமாறிய தலித் இயக்கம், சாதி அடையாள அரசியலைத் தழுவிட நேரிட்டது. படிப்படியாக அம்பேத்கரின் புரட்சிகரமான கோட்பாடுகள் பின்னுக்குத் தள்ளப்பட்டன. அரசியல் போட்டியின் காரணமாக மற்ற கட்சிகளும் அம்பேத்கரைத் தங் களின் போற்றுதலுக்குரிய தலைவராகக் காட்டிக் கொள்ள முனைந்தன.

சங்பரிவாரம் தன்னுடைய செயல்களத்தை விரிவு படுத்தவும், தன் கொள்கைகளைப் பரப்பவும் தன்னு டைய இரண்டாம் தலைமுறைத் தலைவர்கள் மூல மாகப் புதிய உத்திகளை வகுத்தது. தலித்துகளைத் தங்கள் பக்கம் ஈர்ப்பதற்காக, “சமாஜிக் சமரசதா மஞ்ச்” (சமூக சமத்துவப் பேரவை) என்பது தொடங்கப்பட்டது. இராஷ்டிரிய சுயம் சேவக் சங் (ஆர்.எஸ்.எஸ்.) 1925 இல் தொடங்கப்பட்டது. அதே காலக்கட்டத்தில்தான் பொதுவுடைமை இயக்கமும் தலித் இயக்கமும் தொடங் கப்பட்டன. ஆர்.எஸ்.எஸ். தொடக்கத்தில் கற்பனை யான இந்து பெரும்பான்மையை மட்டும் சார்ந்திருந் தது. அதனால் சமூக தளத்திலும் அரசியல் நிலையி லும் குறிப்பிடத்தக்க அளவில் வளரவில்லை. ஆனால் 1977 தேர்தலில் காங்கிரசுக் கட்சிக்கு எதிரான அலை யால், நாடாளுமன்றத்தில் பா.ச.க. 94 இடங்களைப் பெற்றது முதல், அதற்கு வலிமையான அடித்தளத்தை உருவாக்கிக் கொண்டது.

காவிமயமாக்கப்படும் அம்பேத்கர்

அம்பேத்கர் இந்து மதத்தைக் கடுமையாக எதிர்த்த தால், சங் பரிவாரம் அவரை வெறுத்து ஒதுக்கியது. ஆனால் அதே சமயம் அம்பேத்கரின் கொள்கைகளை முன்னெடுக்காத தலித்துகளை ஈர்க்க முயன்றது. பின் னாளில் பால்தாக்ரே தன் அரசியலில் இப்போக்கைக் கடைப்பிடித்தார். 1977இல் ஜனசங்கம் என்ற பெயரில் இருந்த பா.ச.க. முதன்முதலாக இந்திய நடுவண் அரசில் அரசியல் அதிகாரத்தைச் சுவைத்தது. எனவே தலித் மக்களால் பெரும் தலைவராகக் கொண்டாடப் படும் அம்பேத்கரை இனியும் புறக்கணித்தால் அரசியல் அதிகாரத்தைக் கைப்பற்ற முடியாது எனக் கருதியது. எனவே அம்பேத்கருக்குக் ‘காவி’ வண்ணம் பூசுவதற் காக, அம்பேத்கர் ஏதோவோர் சூழ்நிலையில் கூறிய சில வரிகளை மட்டும் தனியாக எடுத்து, அத்துடன் கோயபெல்சு பாணியிலான பொய்களைக் கதை யளந்து கொண்டிருக்கிறது.

இதற்காக ஆர்.எஸ்.எஸ்.இன் நிறுவனத் தலை வரான டாக்டர் ஹெட்கேவரையும், டாக்டர் அம்பேத் கரையும் சமதட்டில் வைக்கும் நோக்கத்துடன் “இரண்டு டாக்டர்கள்” என்று சங்பரிவாரம் கூறுகிறது. ஹெட்கே வர் பள்ளிப்படிப்பை முடித்தபின், மருத்துவம் செய் வதற்கான சான்றிதழ் படிப்பைப் படித்தவர். ஆனால் அம்பேத்கரோ, உலகப் புகழ்பெற்ற இரண்டு பல்கலைக் கழகங்களில் இரண்டு முனைவர் பட்டங்களைப் பெற்ற டாக்டர். கல்வித் தகுதியில் அம்பேத்கரோடு ஒப்பிடவே முடியாத ஹெட்கேவரை, ‘இரண்டு டாக்டர் கள்’ என்ற சொற்கோவை மூலம் ஒப்பிட்டுக்காட்டும் மோசடியைச் செய்கிறது.

அம்பேத்கர் தன் பொதுவாழ்வில் சூழ்நிலைக்கு ஏற்ப நடைமுறை உத்திகளைக் கையாண்டார். அதனால் அவருடைய கூற்றுகளுக்கு இடையில் பல முரண்பாடுகள் இருப்பது போன்று தோன்றும். ஆனால், “சுதந்தரம், சமத்துவம், சகோதரத்துவம்” ஆகிய மூன்றும் ஒருசேர அமையப் பெற்ற சமுதாயத் தை உருவாக்க வேண்டும் என்பதே அவர் வாழ்நாள் முழுவதும் கொண்டிருந்த மூலக் கொள்கையாகும். இத்தகைய சமுதாயத்தை அமைப்பதற்காக, சாதி ஒழிப்பையும் வர்க்க ஒழிப்பையும் (சோசலிசம்) முதலில் முன்னெடுக்க வேண்டும் என்றார். இத்தகைய சமுதாயத்தின் அடிப்படையான கட்டமைப்பாகச் சன நாயகமும், ஒழுக்கத்திற்கான வழிகாட்டியாக பவுத்த மும் இருக்க வேண்டும் என்று கருதினார்.

ஆனால் அம்பேத்கரின் இக்கொள்கைகளுக்கு முற்றிலும் எதிரானவையாக ஆர்.எஸ்.எஸ்.இன் கொள் கைகள் இருக்கின்றன. சங்பரிவாரம் அம்பேத்கரை ஒரு தேசியவாதியாகக் காட்டுகிறது. ஆனால் அம்பேத் கர், சாதி உணர்ச்சி மட்டுமே சமூகத்தில் மேலோங்கி நிற்பதால், இந்துக்கள் ஒருபோதும் தங்களை ஒரு தேசமாகக் கட்டமைத்துக் கொள்ள முடியாது என்று உறுதிபடக் கூறினார். ‘இந்து தேசம்’ என்கிற கோட்பாடு பெருந்தீங்கு விளைவிக்கும் என்று எச்சரித்தார். “நான் ஒரு இந்துவாகச் சாகமாட்டேன்” என்று சூளு ரைத்த அம்பேத்கரைச் சிறந்த இந்துவாகக் காட்ட முனைகிறது ஆர்.எஸ்.எஸ். இந்து மதத்தை வெறுத்து ஒதுக்கிவிட்டு அம்பேத்கர் தழுவிய பவுத்த சமயத்தை இந்து மதத்தின் ஒரு பிரிவு என்று ஆர்.எஸ்.எஸ். கூறுகிறது. இதன்மூலம் பவுத்தத்தின் நெடிய வரலாற் றையே மூடிமறைக்க முயல்கிறது. பிராமணியத்துக்கு எதிராக எழுந்த புரட்சிகரமான சிராமணியத் தத்து வமே பவுத்தமாகும். ஆனால் பின்னாளில் பிராமணிய இந்துமதம் கொடிய வன்முறை மூலம், பவுத்தம் தோன்றிய நாட்டிலேயே அதை முற்றிலுமாக அழித்துவிட்டது.

அம்பேத்கர் சமற்கிருதத்தைத் தேசிய மொழியாக் கிட விரும்பினார்; ஆர்.எஸ்.எஸ்.இன் காவிக் கொடி யைத் தேசியக் கொடியாக ஏற்க வேண்டும் என்றார்; ஆர்.எஸ்.எஸ்.காரர்களின் சிறந்த தொண்டைப் பாராட்டி னார்; மற்ற மதங்களுக்கு மாறியவர்கள் தாய்மதமான இந்து மதத்துக்குத் திரும்புவதை ஆதரித்தார் என்றெல் லாம் கூறி, விசுவஇந்து பரிசத்தின் குரங்குகள் நிலைக்கு அம்பேத்கரைத் தாழ்த்திட முயலும் ஆர்.எஸ்.எஸ்.இன் கூற்றுகள் விடை சொல்வதற்குத் தகுதியற்றவையாகும்.

சங்பரிவாரத்தின் அறிவாளிகள், அம்பேத்கர் இசுலாமியர்களுக்கு எதிரானவர் என்று இடைவிடாது கூறி வருகின்றனர். இதற்கு ஆதாரமாக, ‘பாகிஸ்தான் பற்றிய எண்ணங்கள்’ (Thoughts on Pakistan) என்று அம்பேத்கர் எழுதிய நூலிலிருந்து அங்கொன்றும் இங் கொன்றுமாக சில வரிகளை மேற்கோள் காட்டுகின்ற னர். பாகிஸ்தான் தனிநாடாகப் பிரியக்கூடாது என்கிற கருத்து மேலோங்கியிருந்த சூழ்நிலையில், பாகிஸ் தான் பிரிவதை ஆதரித்து ஆணித்தரமான வாதத் திறமையுடன் அம்பேத்கர் எழுதிய நூல் இது என்பதை நினைவில் கொண்டு இந்த வரிகளை மதிப்பீடு செய்ய வேண்டும். மேலும் இந்நூலில் அம்பேத்கர் இந்து-இசுலாமிய மத ஆதிக்கச் சக்திகளின் தன்னல நோக் கத்தைத் தோலுரித்துக் காட்டியிருக்கிறார். இந்நூலை ஆழ்ந்து நுணுகிப் படிக்காவிடில், அம்பேத்கர் முன்வைத் திருக்கும் வாதங்களின் உண்மைப் பொருளை - நோக்கத்தை உணரமுடியாமற் போய்விடும்.

அம்பேத்கர் இசுலாமியர்களுக்கு எதிரானவர் என்று காட்ட முய லும் கூற்று எந்த அளவுக்குப் பொய்யானது என்பதை 2003இல் நான் எழுதியுள்ள, “முசுலீம்கள் குறித்து அம்பேத்கர் : கட்டுக் கதைகளும் உண்மை விவரங் களும்” என்ற நூலில் (Ambedkar on Muslims : Myths and Facts- இந்நூலைத் தமிழில் ‘கீழைக்காற் றுப்’ பதிப்பகம் வெளியிட்டுள்ளது) அம்பலப்படுத்தி யுள்ளேன். அம்பேத்கர் பல்வேறு சமயங்களில் முசுலீம் சமூகத்தைப் பாராட்டியிருக்கிறார்.

1936இல் மதம் மாறுவதற்கு ஏற்ற மதங்களில் ஒன்றாக இசுலாம் இருப்பதாகக் கூறியிருக்கிறார். எனவே அம்பேத்கரைச் சிறுமதியினராக, முசுலீம் எதிர்ப்பாளராகக் காட்ட முடியாது. தலித்துகளில் சில துரோகிகளுக்குத் தன் மேடையில் இடமளித்து, தலித்துகளும் தங்களை ஆதரிப்பது போல் காட்டிக் கொள்ளுகின்ற கீழ்த்தரமான வேலையை ஆர்.எஸ்.எஸ். செய்து வருகிறது. ஆனால் ஒருபோதும் அம்பேத்கரை ஒரு வகுப்புவாதியாக அதனால் காட்டவே முடியாது.

தாராளமயப் பொருளியல் சூழலின் தாக்கம்

இந்திய அரசியல் வாக்குச் சந்தையில், அரசியல் கட்சிகள் தங்கள் தன்னலத்திற்கு ஏற்றத் தன்மையில், அம்பேத்கரை மாபெரும் தலைவராகக் காட்டிக் கொள்வதில் போட்டியிடுகின்றன. இந்தப் போட்டியால் உண்மையான அம்பேத்கர் மறைக்கப்படுகிறார். தலித் விடுதலைக்கான போராட்ட ஆயுதங்கள் அழிக்கப்படு கின்றன. அரசியல் கட்சிகள் முன்னிலைப்படுத்தும் அம்பேத்கர்களுக்குக்கிடையே வேறுபாடுகள் இருந்த போதிலும், அவை அவரை நவீன தாராள சிந்தனை யாளராகக் காட்டுவதில் மட்டும் ஒன்றுபட்டு நிற்கின்றன.

1947 முதல் 1980கள் வரை நல்வாழ்வளிக்கும் குறியீடாக அரசு, காந்தியை முன்னிறுத்தியது. அக்காலக்கட்டத்தில் காந்தியின் பெயரைப் பயன்படுத்து வது அரசுக்குத் தேவையாக இருந்தது. காந்தியின் பெயரைச் சொல்லி அரசின் கொள்கைகள் வகுக்கப் பட்டன. அரசின் மக்கள் விரோத நடவடிக்கைகளை மூடி மறைக்கவும் காந்தியின் பெயர் பயன்படுத்தப் பட்டது. மக்கள் நலனே அரசின் குறிக்கோள் என்று வெற்று ஆரவாரக் கூச்சலை எழுப்பவும், இந்துக்களின் வளர்ச்சி பெறவும் காந்தியின் பெயர் பயன்படுத்தப் பட்டது. அதன்பின், முதலாளித்துவப் பொருளாதாரச் சிக்கல்களால் நெருக்கடி ஏற்பட்டது. அதனால் அரசின் மீதான மக்களின் நம்பிக்கை வேகமாகச் சரிந்தது. எனவே அரசு புதிய பொருளாதாரச் சீர்திருத்தங்களை மேற்கொள்ள நேரிட்டது. வேகமான பொருளியல் வளர்ச்சி, நவீனமயமாதல், தடையற்ற வணிகப் போட்டி, தாராளமயச் சந்தை முதலான கோட்பாடுகளை அரசு உரத்து முழங்கியது.

இத்தகைய சூழ்நிலையில், நல்வாழ்வுக்கான நம் பிக்கை ஒளியாக புதிய ஒரு தலைவரை முன்னி லைப்படுத்த வேண்டிய தேவை எழுந்தது. அரசின் தாராளமய, தனியார்மயக் கொள்கையால் சமூகத்தில் அடித்தட்டில் உள்ள மக்கள்தாம் பெரிதும் பாதிக்கப்படு கின்றனர். சுதந்தரமான - தடையற்ற போட்டியில் கடுமையாக உழைத்துத் திறமையை வெளிப்படுத்தும் எவரும் உயர்ந்த நிலையை அடையலாம் என்கிற ஆசை அரசால் ஊட்டப்படுகிறது.

கடையருள் கடைய ராக இருந்த அம்பேத்கர் உயர்ந்தது போல், அடித்தட்டு மக்களும் உயரலாம் என்கிற மாயவலையில் விழவைப்பதற்காக, அம்பேத்கரை ஆளும் வர்க்கங்கள் உயர்த்திப் பிடிக்க முனைந்துள்ளன. எனவே காந்தியை ஓரங்கட்டிவிட்டு, அம்பேத்கரை முன்னிலைப்படுத்துகின்றன. இதே தன்மையில்தான், சுதந்தர இந்தியா வுக்கான அரசமைப்புச் சட்டம் எழுதப்பட்ட போது, காந்தி மிகத் தேர்ந்த அரசியல் உத்தியுடன் அம்பேத் கரைப் பயன்படுத்தினார். ‘வல்லவை வாழும்’ என்பது தாராளமய - தனியார்மயத்தின் சமூக டார்வினியக் கோட்பாடாகும். இத்தன்மையில் வலிமையான ஆர்.எஸ்.எஸ்., பா.ச.க.வை அரசியல் அதிகாரத்தில் அமர்த்தியுள்ளது.

தலித்துகளைத் தங்கள் பக்கம் ஈர்ப்பதற்காக எல்லா அரசியல் கட்சிகளும் அம்பேத்கரைப் பயன் படுத்தினாலும், ஆர்.எஸ்.எஸ். இதில் அதிக அளவில் வெற்றி கண்டுள்ளது. 1990 முதல் காங்கிரசை விட பா.ச.க. தலித்துகளுக்கான தனித் தொகுதிகளில் அதிக இடங்களில் வெற்றி பெற்று வருகிறது. புதிய தாராள மயச் சூழலில் அரசியல் கட்சிக்குத் தனக்குப் பின் பாட்டுப் பாடுபவர்கள் அதிகமாகத் தேவைப்படுகின்ற னர். பா.ச.க. தலித்துகளில் அதிக எண்ணிக்கையில் தனக்கு ஒத்து ஊதுகிறவர்களைத்தன் பக்கம் ஈர்த் துள்ளது.

புதிய தாராளமயத்தால் உயர்வு பெற்ற சில தலித்துகளை முன்னோடிகளாகக் கருதும் நடுத்தர - படித்த தலித் வர்க்கத்தினருள் ஒரு குறிப்பிடத்தக்க எண்ணிக்கையினர், தாராளமயக் கொள்கை நடை முறைப்படுத்தப்பட்ட தொடக்க ஆண்டுகளில், புதிய பொருளாதாரக் கொள்கை தலித்துகளுக்கு முன்னேறு வதற்கான புதிய வாய்ப்பையும் பயனையும் அளிக்கும் என்று தலித்துகளிடையே பரப்புரை செய்தனர். தலித் முதலாளிய வர்க்கம் உருவாகும் என்று கூறினர். எனவே தலித் நடுத்தர வர்க்கத்துக்கு பா.ச.க.வின்பால் புதிய ஈர்ப்பு ஏற்பட்டது. அதனால் இப்போது பெரும் பாலான தலித் தலைவர்கள் பா.ச.க.வின் முகாமில் இருக்கின்றனர். (பா.ச.க.வுக்கு அனுமானாக வேலை செய்யும் மூன்று தலித் இராமன்கள் என்ற தலைப்பில் EPW 2014 ஏப்பிரல் 12 இதழில் நான் எழுதிய கட்டுரையைக் காண்க).

இந்த ஆண்டு பா.ச.க. அரசு, அம்பேத்கர் மாண வராக இருந்த போது இலண்டன் நகரில் தங்கியிருந்த வீட்டை 44 கோடி உருபா கொடுத்து வாங்கியுள்ளது. மேலும் மும்பையில் முன்பு இந்து ஆலை இயங்கிய இடத்தில் நினைவு மண்டபம், தில்லியில் மிகப்பெரிய பன்னாட்டு ஆய்வு நடுவம் அமைத்திட, தேர்ந்த அரசியல் மதிநுட்பத்துடன் பா.ச.க. அரசு முடிவு செய்துள்ளது.

தலித் மக்களை ஏய்ப்பதற்காக, பா.ச.க. அரசு மேற் கொள்ளும் இத்தகைய நடவடிக்கைகளால் தலித்துகள் மதிமயங்கி மகிழ்கின்றனர். ஆனால் கடந்த நூற்றாண் டின் தொடக்கத்தில் இருந்த தலித்துகளின் வாழ்நிலை யோடு ஒப்பிடும்போது, 90 விழுக்காட்டினரின் வாழ் நிலை, இப்போதும் கிட்டத்தட்ட அப்படியே இருக்கிறது; அல்லது அதைவிட மோசமாகியிருக்கிறது. அப்போது அவர்களிடம் தங்களுக்கு விடுதலை கிடைக்கும் என்ற நம்பிக்கை மேலும் இருந்தது. ஆனால் இப்போது அந்த நம்பிக்கைக் கூட இல்லை.

அம்பேத்கரின் குறிக்கோள் ‘சமத்துவமே’ - ‘சமரசம் அல்ல’ என்பதைத் தலித்துகள் புரிந்து கொள்ளவில்லை. அம்பேத்கரின் கோட்பாடு நவீன தாராளமயமோ, சமூகத்தில், வல்லவன் வாழ்வான் எனும் சமூக டார் வினியக் கோட்பாடோ அல்ல. இவை தலித்துகளின் வாழ்வைக் கொல்பவை. அம்பேத்கருக்காக நினைவு மாளிகைகள் எழுப்புவதற்காகச் செலவிடப்படவுள்ள சில நூறு கோடி உருபா, கடந்த பத்தாண்டுகளில் வரவு-செலவுத் திட்டத்தில் தலித்துகளுக்காக ஒதுக்கப் பட்ட நிதியிலிருந்து அரசு திருடியிருக்கும் 5 இலட்சம் கோடி உருபாவுடன் ஒப்பிடும் போது, அற்பத் தொகை யாகும். தலித்துகள் இதைப் புரிந்துகொள்ள முடியா தவர்களாக இருக்கிறார்கள். இது ஓர் அவலம்.

(மார்க்சிய - தலித்திய அறிஞர் ஆனந்த் டெல்டு ம்ப்டெ, Economic and Political Weekly, 2015 மே 2 இதழில், ‘Deconstructing Ambedkar’ என்ற தலைப் பில் எழுதிய கட்டுரையின் தமிழாக்கம். தமிழாக்கம் க. முகிலன். பா.ச.க.வும் காங்கிரசும் டாக்டர் பி.ஆர். அம்பேத்கரின் 125ஆவது பிறந்த நாளை ஓராண்டு முழுவதும் கொண்டாடப் போவதாக அறிவித்துள்ள பின்னணியில் இக்கட்டுரை எழுதப்பட்டுள்ளது).

Pin It