2000 ஆம் ஆண்டு மே 9, 10 ஆம் தேதிகளில் ஐரோப்பிய காப்புரிமை அலுவலகத்தில் ஒரு வழக்கு விசாரணைக்கு வந்தது. ஐரோப்பிய காப்புரிமை அலுவலகம் ஜெர்மனியின் மியூனிக் நகரில் உள்ளது. டாக்டர் வந்தனா சிவா தலைமையில் இயங்கும் அறிவியல்-தொழில்நுட்பம்-இயற்கை ஆதாரங்கள் குறித்த கொள்கைக்கான ஆய்வு மையம் இந்த வழக்கை தொடுத்திருந்தது. இந்தியாவிலிருந்து வந்தனா தலைமையில் சென்றிருந்த ஐவர் குழுவில் நானும் இடம்பெற்றிருந்தேன். 

வேம்புப் பொருளில் இருந்து உயிர்க் கொல்லி (பூஞ்சான கொல்லி) கண்டுபிடித்துவிட்டேன் என்று ஒரு அமெரிக்க பன்னாட்டு நிறுவனம் வாங்கியிருந்த காப்புரிமைக்கு எதிராகத் தொடுக்கப்பட்ட வழக்குதான் மேற்குறிப்பிட்ட தேதிகளில் விசாரணைக்கு வந்தது. இந்த உயிரியல் திருட்டுக்காக காப்புரிமை பெற்றிருந்த நிறுவனத்தின் பெயர்: டபிள்யூ. ஆர். கிரேஸ்! இந்த நிறுவனம் இதே கண்டுபிடிப்புக்காக இரண்டு இடங்களில் காப்புரிமை பெற்றிருந்தது. அமெரிக்கக் காப்புரிமை அலுவலகத்தில் ஒரு உரிமையும், ஐரோப்பிய காப்புரிமை அலுவலகத்தில் ஒரு உரிமையும் பெற்றிருந்தது. ஐரோப்பிய காப்புரிமை அலுவலகத்தில் கிரேஸ் நிறுவனம் பெற்றிருந்த காப்புரிமை வழக்குதான் மேற்குறிப்பிட்ட தேதிகளில் விசாரணைக்கு வந்தது. அமெரிக்க காப்புரிமை எண்: 5,124,349! அமெரிக்கக் காப்புரிமையை எதிர்த்து வந்தனா வழக்கு தொடர்ந்திருந்தார். அந்த வழக்கு இதுவரை விசாரணைக்கு வரவில்லை. ஐரோப்பிய நீதிமன்றத்தில் விசாரணைக்குப் பின்பு காப்புரிமை திரும்பப் பெறப்பட்டது என்று தீர்ப்பு அறிவிக்கப்பட்டது. மறுஆய்வு தேவை என்று கிரேஸ் நிறுவனம் மேல்முறையீடு செய்திருந்த்து. ஐந்தாண்டுகளுக்குப் பிறகு 2005ம் ஆண்டில் அந்த மனுவும் தள்ளுபடி செய்யப்பட்டதாக அறிவிப்பு வெளியானது. இந்த "உயிரியல் திருட்டு" பற்றி கொஞ்சம் விரிவாகப் பார்ப்போம்.  

இந்தியாவில் சித்த மருத்துவம், ஆயுர்வேத மருத்துவம், யுனானி மருத்துவம் என்ற பெயரில் பல்வேறு மூலிகைகளைப் பயன்படுத்தி வருகிறோம். பல தலைமுறைகளாக திரட்டப்பட்டு, கைமாற்றப்பட்ட இந்த ஞானம் நமது சமூகத்தின் பொதுச்சொத்து. ஒவ்வொரு வீட்டு தாய்மாரும் நாட்டு மருத்துவர்ளும் பல வழிகளிலும் இந்த மூலிகைகள் பற்றிய அறிவை வளர்த்தெடுப்பதில் பங்களித்துள்ளனர். இந்த ஞானத்தைத் தனிச் சொத்தாக்கிக் கொண்டு கோடிகோடியாக பணம் குவிப்பதிலே பன்னாட்டு பகாசுர வர்த்தக நிறுவனங்கள் தீவிரம் காட்டுகின்றன. 

நம்முடைய மூலிகைகளில் முக்கியத்துவம் மிகுந்தவற்றுள் ஒன்று வேப்பமரம். வேப்ப மரத்தின் வேர்ப்பட்டை, இலை, இலைக்காம்பு, பூ, விதை, பழம், எண்ணெய், பிண்ணாக்கு ஆகிய அனைத்துமே மருந்தாக பயன்படுகின்றன. பயிர் சாகுபடியில், கால்நடை மருத்துவத்தில், மனித மருத்துவத்தில் இவற்றைப் பயன்படுத்துகிறோம். இந்த மதிநுட்பம் மறைத்து வைத்துக் கொள்ளப்படவில்லை. மூலிகைகள் நமது வாழ்வின் ஆதாரம்.  

ஆனால் பன்னாட்டு பகாசுர வர்த்தக நிறுவனங்களுக்கு நமது மூலிகைகள் லாபம் ஈட்டக்கூடிய ஒரு பண்டத்தை தயாரிப்பதற்கான மூலப்பொருள் மட்டுமே. இப்படி வேம்புப் பொருளை மூலப்பொருளாக்கி பண்டம் தயாரிக்க முனையும் பல நிறுவனங்கள் காப்புரிமை வாங்கியுள்ளன. பற்பசை, குடும்பக் கட்டுப்பாடு சாதனம், பூஞ்சானக் கொல்லி போன்று பத்து, பன்னிரண்டு பண்டங்கள் தயாரிக்க அமெரிக்க மற்றும் ஜப்பானிய நிறுவனங்கள் காப்புரிமை பெற்றுள்ளன. அவற்றுள் கிரேஸ் நிறுவனம் பெற்றுள்ள காப்புரிமை பூஞ்சான கொல்லிக்கானது. 

ஐரோப்பியர், அமெரிக்கர் கண்டுபிடித்த உயிர்க்கொல்லி (பூச்சி மருந்து) நஞ்சுகள் மனிதர் உடலிலும் சுற்றுச்சூழலிலும் பயங்கர விளைவுகளை ஏற்படுத்தின. 1950-1960 ஆம் ஆண்டுகளில் மிகப்பரவலாகப் பயன்படுத்தப்பட்ட டி.ட்டி.டி ஆண்டுதோறும் லட்சக்கணக்கானோரின் மரணத்திற்கு காரணமாக இருந்தது கண்டறியப்பட்டது. போபால் நகரில் யூனியன் கார்பைடு (செவின் தயாரிப்பு) ஆலையில் 1984ஆம் ஆண்டு நச்சுத்தொட்டி வெடித்தது. இதன் விளைவாகப் பத்தாயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் மாண்டு போனார்கள். லட்சக்கணக்கானவர்கள் ஊனமடைந்தனர். இதன்மூலம் உலகம் முழுவதும் ரசாயனப் பூச்சிக்கொல்லி, பூஞ்சான கொல்லி மீது வெறுப்பு தோன்றியது. இதன் விளைவாக வர்த்தக நிறுவனங்கள், மூலிகைகளை மூலப்பொருளாக்கிப் பூச்சிக்கொல்லி மருந்துகளை தயாரிப்பதில் இறங்கியுள்ளன. இந்த வழியில்தான் டபிள்யூ.ஆர்.கிரேஸ் நிறுவனம் வேம்பு பூச்சிக்கொல்லி தயாரிப்பில் இறங்கியுள்ளது.  

வேப்ப மரத்திற்கு அஸாடிராக்டா இண்டிகா (Azadirachta Indica) என்று தாவரவியல் பெயரிட்டனர். இதில் உள்ள கசப்புத்தன்மைக்கு அஸாடிராக்டின் என்று பெயரிட்டனர். இதைப் பிரித்தெடுக்க வேப்பங்கொட்டையை நசுக்கிப் பிழிகிறார்கள். ஹெக்சேன் என்ற ரசாயனப் பொருளுடன் கலந்து பூஞ்சான கொல்லி என்று பெயரிட்டு விற்பனைக்கு விடுகின்றனர். இதில் உயிரியல் திருட்டு எங்கே நடைபெறுகிறது என்று கேட்கிறீர்களா? 

வணிகத்தை உலகமயமாக்குவதற்கு காட் ஒப்பந்தம் கொண்டு வந்தனர். இதில் "தனியார் மயமாக்கல்" என்ற பெயரில் தனியார் நிறுவனங்களின் ஏகபோக சொத்துக்குவியலுக்கு வழிவகுக்கும் அம்சமே முக்கியமான பகுதியாகும். இந்த தனியார்மயமாக்கத்தின் ஒரு பிரிவுதான் காப்புரிமை சட்டங்கள்! ஒரு தனியார் நிறுவனத்திற்கு ஒரு பொருளுக்கு அல்லது அதன் தயாரிப்பு முறைக்கு காப்புரிமை வழங்கப்படுகிறது. காப்புரிமையின் இப்பிரிவு TRIPS என்று அழைக்கப்படுகிறது. Trade Related Intellectual Property Rights என்பதன் சுருக்கம்தான் இந்த TRIPS! வணிகம் தொடர்பான அறிவுச் சொத்துரிமை என்பது இதன் பொருள். உண்மையில் காட் ஒப்பந்தத்தின் இந்த உட்பிரிவு பொதுவில் விவாதம் நடத்தி உருவாக்கப்படவில்லை. டிரிப்ஸ் ஒப்பந்தத்தை இன்டலெக்சுவல் பிராபர்டி கமிட்டி வடிவமைத்தது. இந்த கமிட்டியில் அமெரிக்க தனியார் நிறுவனங்களே இடம்பெற்றிருந்தன. இவை நீங்கலாக ஜப்பானை சேர்ந்த கெய்டென்ரென் மற்றும் ஐரோப்பாவைச் சேர்ந்த யுனிசெ ஆகிய வர்த்தக நிறுவனங்கள் இடம்பெற்றிருந்தன. அமெரிக்காவின் இன்டெலக்சுவல் பிராபர்டி கமிட்டியில் அமெரிக்காவைச் சேர்ந்த 13 பகாசுர நிறுவனங்கள் உள்ளன. பிரிஸ்டல், மயர்ஸ், டூ பான்ட், ஜெனரல் எலக்டிரிக், ஜெனரல் மோட்டார்ஸ், ஹெவ்லெட் பாக்கார்ட், ஐபிஎம், ஜான்சன் அண்ட் ஜான்சன், மெர்க், மான்சான்டோ, ஃபிஷர், ராக்வெல், வார்னர் ஆகிய 13 நிறுவனங்களுடன் ஜப்பான் மற்றும் ஐரோப்பிய நிறுவனங்கள் இணைந்து டிரிப்ஸ் ஒப்பந்தத்தை உருவாக்கிக் கொண்டன.  

இந்த ஒப்பந்தத்தின்படி தனியார் நிறுவனங்களின் கண்டுபிடிப்புகளுக்கு ஏகபோக உரிமை வழங்கப்படுகிறது. கப்பம் கட்டாமல் வேறு எவரும் தயாரிக்கவோ, விற்கவோ முடியாது. அப்படித்தான் டபிள்யூ.ஆர்.கிரேஸ் நிறுவனம் வேப்பங்கொட்டைச் சாறு தயாரிப்புக்குக் காப்புரிமை பெற்றது.

தனியார் நிறுவனங்கள் தயாரித்துக் கொண்ட பொருள்களுக்கு காப்புரிமை பெறுவதற்கு 

1.     புதியன இடம் பெற வேண்டும், 

2.     இல்லாதன கண்டுபிடிக்கப்பட்டிருக்க வேண்டும், 

3.     பெரிய அளவு தொழில் உற்பத்திக்கு அடித்தளமிட வேண்டும்.  

இவற்றில் முதல் இரண்டும் வேம்புக்கு பொருந்தி வராது.

காப்புரிமை மன்றத்தில் கிரேஸ் நிறுவனம் சார்பில் ஒரு அதிகாரியும், அவரது வழக்கறிஞரும் வந்திருந்தனர். வந்தனா சிவாவின் ஆய்வு மையம் சார்பில் ஐந்து இந்தியர்களும், மேலும் 25 ஐரோப்பியர்கள் உட்பட 30 பேர் கூடியிருந்தோம். ஜெர்மனி மொழியில் வாதாடுவதற்கு ஒரு வழக்குரைஞரும் அமர்த்தப்பட்டிருந்தார். நடுவர்கள் மூன்று பேர் பொறுமையாக விசாரித்தனர்.  

கிரேஸ் நிறுவனத்தின் கண்டுபிடிப்பில் புதுமை என்ன என்ற கேள்விக்கு, நிறுவனம் சார்பில் பதில் அளிக்கப்பட்டது. அவர்கள் செக்கில் ஆட்டுகிறார்கள்: நாங்கள் வேறு முறையைக் கையாளுகிறோம். அது தொழில் ரகசியம். வெளியில் சொல்ல மாட்டோம் என்றார்கள்.  

இல்லாத்து எதைக் கண்டுபிடித்தீர்கள் என்ற கேள்விக்கு இந்தியர்கள் செக்கில் ஆட்டும்போது குறைவாக சாறு கிடைக்கிறது. எங்கள் முறையில் கொட்டை, சாறு விகிதம் கூடுதலாக உள்ளது என்று நிறுவனத் தரப்பில் கூறப்பட்டது.  

"பரம்பரை பரம்பரையாக வேம்பு எங்கள் பயன்பாட்டில் இருந்து வருகிறது. இதில் புதுமையாக என்ன இருக்க முடியும். இந்திய வேப்ப மரம் புவியியல் ரீதியாக இந்தியா, பாகிஸ்தான் எல்லைக்குள் மட்டுமே வளர்கிறது. கர்நாடகாவில் விளக்கில் ஊற்றி எரிக்கப்படும் அளவுக்கு வேப்பெண்ணெய் பயன்பாடு நம் நாட்டில் இருக்கிறது. இந்த காப்புரிமை எங்கள் பொருளைத் திருடுவது மட்டும் அல்ல! எங்கள் அறிவைத் திருடுவதும் ஆகும்" என்ற நமது வாதம் வெற்றி பெற்றது. ஓர் அம்சத்தில்A-a கண்டுபிடிப்பதுதான் இல்லாத்தை கண்டுபிடிப்பது ஆகும். A,B,C,D ஆகிய எல்லாவற்றையும் கண்டுபிடித்தபின் A-a கண்டுபிடிப்பது எப்படி ‘இன்வென்ஷன்’ ஆகும் என்ற கேள்வி எழுந்தபோது, கிரேஸ் நிறுவனத்தின் விழிபிதுங்கியது.  

இதற்கு மேலும் ஒரு வேடிக்கை அரங்கேறியது. இந்தியக் குழுவில் வந்திருந்த மும்பை நண்பர் ஒரு கடிதத்தை வழக்குரைஞர் கையில் திணித்தார். அவர் அதை நடுவர்களிடம் கொடுத்தார். நடுவர்கள் அக்கடிதத்தை படித்துப் பார்த்துவிட்டு புருவம் உயர, கிரேஸ் நிறுவன அதிகாரியிடம் கொடுத்தனர். அவரும் அவருடைய வழக்குரைஞரும் அக்கடிதத்தை படித்தபோது அவ்விருவரின் முகத்திலும் விளக்கெண்ணெய் வழிந்தது. 

அந்த கடிதம் டபிள்யூ. ஆர். கிரேஸ் நிறுவனம், மும்பை நண்பருக்கு எழுதிய கடிதம். அதில் நீங்கள் வேப்பங்கொட்டைச் சாறு பயன்படுத்தி ஆய்வு செய்திருக்கிறீர்கள் என அறிய வருகிறோம். ஆய்வு செய்முறை மற்றும் விளைவுகளை கொடுத்தால் அதற்கு உரிய விலை தர முன்வருகிறோம் என்றிருந்தது. 

மும்பை நண்பர் வேப்பங்கொட்டை சாறை ஹெக்சேன் என்ற ரசாயனப் பொருளுடன் கலந்து 35 உழவர்களின் நிலத்தில் திராட்சை மற்றும் பருத்தி பயிரில் தெளித்து சோதனை நடத்திய விவரங்களையும் முன்வைத்தபோது விசாரணை முடிவுக்கு வந்தது. 

"டபிள்யூ.ஆர். கிரேஸ் நிறுவனத்துக்கு வழங்கப்பட்ட காப்புரிமை திரும்ப பெறப்படுகிறது" என்று. 2000ம் ஆண்டு மே மாதம் 10ம் நாள் இந்த தீர்ப்பு மன்றத்தில் அறிவிக்கப்பட்டது.

- கோ.நம்மாழ்வார், இயற்கை வேளாண் விஞ்ஞானி 

Pin It