மதிக்காதவர் வீட்டு வாசப்படியை மானமுள்ள மனிதர்கள் ஒருநாளும் மிதிப்பதில்லை. ஆனால் மானமெல்லாம் இருக்க வேண்டும் என்றால் கூட அதற்கும் ஒரு வர்க்க நிலை தேவைப்படுகின்றது. குறிப்பாக உழைத்து சோறு தின்பவர்களிடமே அது இயல்பாக இருந்து விடுகின்றது. ஆனால் வரலாற்றில் அடுத்தவன் உழைப்பை சுரண்டி மட்டுமே வாழும் ஒட்டுண்ணியாக தன்னை தகவமைத்துக் கொண்ட பார்ப்பனியத்துக்கும், முதலாளித்துவத்திற்கும் அது எப்போதும் மருந்துக்குக் கூட இருப்பதில்லை. அதனால்தான் எவ்வளவு அசிங்கப்பட்டாலும், அவமானப்பட்டாலும் மானவெட்கம் கருதாமல் தங்கள் பிழைப்புக்காக அடுத்தவர்களைத் துன்புறுத்தி அவர்களின் வாழ்க்கையை அழித்து தன்னை வளப்படுத்திக்கொள்ள முயற்சிக்கின்றன.

sterlite factory22 ஆண்டுகளாக இந்த மண்ணையும், மக்களையும் அழித்து நாசமாக்கிக் கொண்டு இருந்த ஸ்டெர்லைட்டை தமிழக மக்கள் தங்களின் போர்க்குணமிக்க போராட்டங்கள் மூலம் தமிழ்நாட்டை விட்டே விரட்டியடிக்க வேண்டிய நிர்பந்தத்துக்கு ஆளும்வர்க்கத்தைத் தள்ளினார்கள். வேதாந்தா, அரசு என்ற இந்தக் கூட்டு சதிகார கும்பலுக்கு எதிராக நிராயுதபாணியாய் போராடி 13 பேரை பலிகொடுத்து தங்கள் கோரிக்கையை ரத்தமும், சதையுமாக வென்றெடுத்தார்கள். ஆனால் போராடி வென்றெடுத்த கோரிக்கையை மீண்டும் தனது பணபலத்தின் மூலமும், ஊழலிலும், அதிகார முறைகேட்டிலும் செல்லரித்துப்போன அதிகார வர்க்கத்தின் துணையுடனும் முறியடிக்க வேதாந்தா முயன்று வருகின்றது. வேதாந்தாவின் இந்தக் கார்ப்ரேட் சதியில் பார்ப்பனியமும் கைகோர்த்திருக்கின்றது. தமிழர்களை பண்பாட்டு சீரழிவுக்கு உள்ளாக்கி, அவர்களை சாதிய மனநோயாளிகளாக மாற்றி வைத்திருக்கும் பார்ப்பனியம் தமிழ் மண்ணையும் நஞ்சாக்கி அதன் வளங்களைக் கொள்ளையிட கார்ப்ரேட்டுகளுடன் ஒப்பந்தம் செய்துள்ளது.

ஏற்கெனவே மூடப்பட்ட ஸ்டெர்லைட் ஆலையில் அலுவல் பணிகள் செய்ய வேண்டும் என வேதாந்தாவின் கோரிக்கையை ஏற்று, மூடப்பட்ட ஸ்டெர்லைட் ஆலையை திறந்துவிட்ட டெல்லி பசுமைத் தீர்ப்பாயம் ஓய்வு பெற்ற உயர்நீதிமன்ற நீதிபதிகளின் தலைமையில் குழு அமைத்து, விசாரணை செய்து அறிக்கை தாக்கல் செய்யவும் உத்திரவிட்டுள்ளது. தமிழக அரசின் கோரிக்கையைப் பொருட்படுத்தாத டெல்லி பசுமைத் தீர்ப்பாயம் தொடர்ந்து வேதாந்தாவின் கோரிக்கைகளை கருணை நிறைந்த மனதோடு ஏற்று அதற்குச் சாதகமாக நடந்துகொள்கின்றது. டெல்லியின் அதிகார மட்டங்களில் எப்போதும் பார்ப்பன லாபிக்களுக்கும் கார்ப்ரேட் லாபிக்களுக்கும் தான் செல்வாக்கு அதிகம் என்பதை டெல்லி பசுமை தீர்ப்பாயத்தின் அடுத்தடுத்த உத்திரவுகள் நமக்கு உரத்துச் சொல்கின்றன. அங்கே நீதி நேர்மை என்பதற்கெல்லாம் எந்தச் செல்வாக்கும் இல்லை.

தமிழ்நாட்டு மக்கள் ஸ்டெர்லைட்டுக்கு எதிராக 22 ஆண்டுகளாக போராடி 13 பேரை பலி கொடுத்து, அவர்களின் மனதில் ஸ்டெர்லைட்டுக்கு எதிரான எதிர்ப்புணர்வு கனன்று கொண்டு இருப்பதை பற்றியோ, மீண்டும் ஆலையை திறந்தால் மிகப் பெரிய அபாயத்தை ஆலை சந்திக்க வேண்டிய நிலை ஏற்படும் என்பது பற்றியோ, சட்டம் ஒழுங்கு சீர்குலையும் என்பதுபற்றியோ டெல்லி பசுமை தீர்ப்பாயம் கவலைபட்டதாக தெரியவில்லை. வேதாந்தாவும், அதற்குச் சேவை செய்யும் அதிகாரவர்க்கமும் காவல்துறையையும், இராணுவத்தையும் வைத்து ஆலையை நடத்திவிடலாம் என கனவு கண்டுகொண்டு இருக்கின்றனர். அதனால்தான் தமிழக மக்களின் உணர்வுகளை ஒரு பொருட்டாக மதிக்காமல் தான்தோன்றித்தனமாக நடந்துகொண்டு இருக்கின்றனர்.

மிகப் பெரிய அளவிற்கு சுற்றுச்சூழல் மாசுபாட்டை ஏற்படுத்தி பல பேரை சாகடித்துவிட்டு மீண்டும் தன்னுடைய லாபவெறிக்காக ஆலையை திறக்க வேதாந்தா துடித்துக்கொண்டு இருக்கின்றது. டெல்லி பசுமை தீர்ப்பாயத்தை தொடர்ந்து மதுரை உயர்நீதி மன்றமும் வேதாந்தாவுக்கு ஆதரவாக செயல்பட தொடங்கி இருக்கின்றது. ஸ்டெர்லைட் தாமிர உருக்காலையின் 2 வது பிரிவுக்கு 99 ஆண்டு குத்தகைக்கு 342.22 ஏக்கர் நிலம் ஒதுக்கப்பட்டது. தூத்துக்குடி மக்களின் போர்குணம் கொண்ட போராட்டத்தின் விளைவாக மே 29 ஆம் தேதி சிப்காட் தலைவர் இந்தக் குத்தகையை ரத்து செய்தார். இதற்கு எதிராக வழக்கு தொடர்ந்த ஸ்டெர்லைட் நீதிமன்றத்தின் மூலம் தடை உத்திரவை வாங்கி இருக்கின்றது. தீர்ப்பு கொடுத்த நீதிபதி பார்த்திபன் தனது உத்திரவில் “தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலை அமைந்திருக்கும் சுற்றுவட்டாரப் பகுதியில் வாழும் மக்களில் ஒரு பகுதியினர் ஸ்டெர்லைட் ஆலை செயல்படுவதால் சுற்றுச்சூழல் பாதிப்பு உட்பட பல்வேறு பாதிப்புகள் ஏற்படும் என அச்சம் தெரிவித்தனர்.இதனால், பொது நலனைக் கருத்தில் கொண்டு அவசர கதியில் ஸ்டெர்லைட் ஆலையின் நில ஒப்பந்தத்தை ரத்து செய்து உத்திரவிட்டது தெரிகின்றது. உண்மையில் அவ்வாறு ஒரு பிரச்சினை இருந்தால் ஸ்டெர்லைட் தரப்புக்கு நோட்டீஸ் வழங்கி அவர்களின் கருத்தைக் கேட்டு உரிய உத்திரவு பிறப்பித்திருக்க வேண்டும். இதுவே அரசியலமைப்பு சட்டம் வலியுறுத்தும் இயற்கை நீதியாகும். ஆனால் ஸ்டெர்லைட் தரப்புக்கு நோட்டீஸ் வழங்காமல் நேரடியாக நில குத்தகையை ரத்து செய்து சிப்காட் தலைவர் உத்திரவிட்டுள்ளார்.இதில் சட்டத்தைப் பின்பற்றவில்லை என்ற ஒரே காரணத்துக்காக நில குத்தகையை ரத்து செய்து பிறப்பித்துள்ள உத்திரவுக்கு இடைக்கால தடை விதிக்கப்படுகிறது” என கூறியுள்ளார்.(நன்றி: இந்து தமிழ்)

சட்டங்கள் சாமானிய மக்களின் வலிகளை உணர்ந்து அவர்களின் தரப்பு நியாயங்களை முழுமையாக உள்வாங்கி எப்பொழுது செயல்படுத்தப்படுகின்றதோ அப்பொழுதுதான் அது மனித முகத்துடன் காட்சியளிக்கும். ஆனால் நடைமுறையில் சட்டங்களை பணம் ஈட்டுவதற்கான கருவியாகவே பெரும்பாலான நீதிபதியிகள் பயன்படுத்திக்கொள்கின்றனர். அவர்கள் பணம் வாங்கிக்கொண்டு குற்றவாளிகளுக்கு பாவமன்னிப்பு சீட்டை வழங்குகின்றார்கள். குத்தகையை ரத்து செய்தது அவசரகதியில் எடுக்கப்பட்ட முடிவாகவும் அது இயற்கை நீதிக்கு எதிரானதாகவும் நீதிபதிகளுக்கு தெரிகின்றது. ஆனால் 13 உயிர்கள் துள்ளத்துடிக்க சுட்டு கொலை செய்யப்பட்டது திட்டமிட்ட அரச பயங்கரவாதமாகவும், அது நிகழ்த்தப்பட்டது வேதாந்தாவுக்காகவே என்பது பற்றியும் இந்த நீதிபதிகளுக்கு தெரிவதில்லை. தெரிந்தாலும் நீதிபதிகளின் ‘இயற்கை நீதி’ அதைப் பொருட்படுத்துவதில்லை. அதனால்தான் 22 ஆண்டுகளாக ஸ்டெர்லைட்டுக்கு எதிராக சாமானிய மக்கள் நடத்திய போராட்டத்தையும் அவர்களின் தியாகத்தையும் நீதிபதி கணக்கில் எடுத்துக்கொள்ளவில்லை.

வேதாந்தா தனக்கு எதிரான அனைத்து தடைகளையும் ஒவ்வொன்றாக தனது பணபலத்தின் மூலமும் அரசியல் மட்டத்திலும் அதிகார மட்டத்திலும் தனக்குள்ள அடியாட்களின் மூலமும் தகர்த்துக் கொண்டு வருகின்றது. ஒரு பெரும் மக்களின் போராட்டமும் அவர்களின் உணர்வுகளும் துச்சமாக மதிக்கப்பட்டு புறந்தள்ளப்படுகின்றது. அதன் உச்சமாகத்தான் தமிழகத்தில் இரண்டு இடங்களில் ஹைட்ரோ கார்பன் எடுக்க வேதாந்தா நிறுவனத்துக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. மத்தியில் இருக்கும் பார்ப்பன கார்ப்ரேட் அடிவருடி அரசு தமிழக மக்களை நாயைவிட கேவலமாகவே பார்க்கின்றது என்பதைத்தான் இது காட்டுகின்றது. நெடுவாசல், கதிராமங்கலம் போன்ற பகுதிகளில் 500 நாட்களுக்கு மேலாக அந்த மக்கள் ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கு எதிராக தொடர்ந்து போராடி வருகின்றனர். தமிழக அரசும் மக்களை பாதிக்கும் எந்தத் திட்டமும் செயல்படுத்தப்படாது என உத்திரவாதம் அளித்தது. ஆனால் அவை அனைத்தும் போலியான வாக்குறுதிகள் என்பது தற்போது நிரூபிக்கப்பட்டிருக்கின்றது. இந்த அடிமை அரசு பார்ப்பன பிஜேபியுடன் சேர்ந்து மொத்த தமிழ்நாட்டையும் அழிக்க ஓப்பந்தம் செய்துகொண்டிருக்கின்றது என்பது வெளிச்சத்துக்கு வந்திருக்கின்றது.

தமிழ்நாட்டை சூழ்ந்திருக்கும் பெரும் அபாயமாய் வேதாந்தா மாறி இருக்கின்றது. தமிழ்நாட்டு மக்கள் “எங்கள் மண்ணைவிட்டு ஓடிவிடு” என துரத்திவிட்டாலும் வெட்கம் கெட்ட வேதாந்தா தமிழ்நாட்டு வளங்களை கொள்ளையடிக்க துடித்துக்கொண்டு இருக்கின்றது. பார்ப்பனியத்தைப் போலவே கார்ப்ரேட்டுகளுக்கும் வெட்க மானம் எதுவும் கிடையாது என்பதைத்தான் இது காட்டுகின்றது. உடனடியாக வேதாந்தாவிற்கு எதிராக தீவிரமான போராட்டங்களை அனைத்து இயக்கங்களும் ஒன்றிணைந்து முன்னெடுக்க வேண்டியது அவசியமாகும். இல்லை என்றால் சட்டப்படியே வேதாந்தா இந்த மண்ணை கொள்ளையடிக்க அனுமதி பெற்றுவிடும். அனில் அகர்வாலுக்கும் அவனது எச்சில் காசுக்கு சேவை செய்யும் துரோகிகளுக்கு சரியான பதிலடியை நிச்சயம் இந்த தமிழ்மண் கொடுக்கும்.

- செ.கார்கி

Pin It