தன்குற்றம் நீக்கிப் பிறர்குற்றம் காண்கிற்பின்

என்குற்றம் ஆகும் இறைக்கு (குறள் 436)

என்ற குறளுக்கு தன்னுடைய குற்றத்தை முதலில் கண்டு நீக்கிக்கொண்டு பிறருடைய குற்றத்தினைப் பின்னர் காண முற்படுவராயின் அரசன் ஒருவனுக்கு என்ன குற்றம் உண்டாக முடியும்? ஒன்றுமில்லை என்று நாவலர் பகுத்திறவுக் கண்ணோட்டத்தோடு அளித்த விளக்கம் இன்றைய பிரதமர் நரேந்திரரின் ஊழலுக்குப் பொருத்தமாகவே அமைகிறது.

இன்று நடப்பதோ மக்களாட்சி. மன்னராட்சிக் காலத்தி லேயே பல நல் மரபுகள் அரசனுக்கு இருக்க வேண்டும் என்று வலியுறுத்தினார் வள்ளுவர். ஆனால் இன்றைய மக்களாட்சி முறைமையில் எல்லா உயரிய மரபுகளையும் நெறிகளையும் சிதைத்து, பெரும் ஊழல்களுக்கு வழிவகுத்து, எதிர்க்கட்சிகள் செய்வதுதான் ஊழல் எனப் பெரிதுபடுத்தி ஜனநாயகக் கூறுகளைக் கடந்த 9 ஆண்டுகளாக பிரதமர் நரேந்திரர் தலைமையிலான பாஜக ஒன்றிய அரசு குலைத்து வருகிறது.

பாஜக ஒன்றிய ஆட்சிப் பொறுப்பு ஏற்ற 2014ஆவது ஆண்டிலிருந்து பாஜக தலைவர்களும் பாஜக மாநில முதல்வர்களும் செய்த ஊழல்களைப் படுமோசமான பாலியல் செயல்களைப் பாதுகாப்பதே ஒன்றிய அரசின் முழுநேரப் பணியாக மாறிவிட்டது. உண்மைகள் வெளிவந்துவிடக் கூடாது என்பதால், என்றும் இல்லாத அளவிற்கு இந்திய நாட்டில் செய்தி, ஒளி, ஒலி, சமூக ஊடகங்களை நேர்முக மாகவும் மறைமுகமாகவும் பாஜக அரசு அச்சுறுத்தி வருகிறது. எனவேதான் உலக அளவில் ஊடகச் சுதந்திர தரவரிசைப் பட்டியலில் இந்தியா கடைசி இடத்திற்குத் தள்ளப்பட்டுள்ளது. ஜனநாயகம் பள்ளத்தில் வீழ்ந்து விட்டது என்பதற்கு இதுவே ஒரு அடையாளமாகும்.pmjay scamஊழலில் ஊறித் திளைக்கும் பா.ஜ.க.

கர்நாடக மாநிலத்தில் பாஜக ஆட்சியில் அரசின் கட்டமைப்புப் பணிகளை மேற்கொண்ட போது ஒப்பந்தக்காரர்களிடம் 40 விழுக்காடு இலஞ்சத்தை வெளிப்படையாகக் கேட்டார்கள் என்பதை ஒப்பந்தக்காரர்கள் சங்கம் மாநிலம் முழுவதும் சுவரொட்டிகளாக ஒட்டியது. பிரதமர் நரேந்திரருக்கு இச்சங்கம் ஊழல் செய்த கர்நாடக முதல்வர் மீதும் அமைச்சர்கள் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ஒரு வேண்டுகோள் மடலையும் அளித்தது. பிரதமரோ, பிரதமர் அலுவலகமோ இதுபற்றி சிறிதும் கவலைக் கொள்ளவில்லை. தொகை தொகையான, வகை வகையான, அடுக்கடுக்கான ஊழல்களை பாஜக சங்கிகள் செய்த காரணத்தினால்தான் தனது கட்சியின் மாநிலத் தலைமையைத் தட்டிக்கேட்கும் தார்மீக உரிமையை இழந்து விட்டார் பிரதமர். ஊழல்களின் பல்வேறு வடிவங் களை இந்தியத் தலைமைக் கணக்கு உயர் அலுவலர் அறிக்கை வழியாக இப்போதுதான் நம்மால் அறிய முடிகிறது.

கணக்கில் காட்டாமல் பதுக்கிய கோடிக்கணக்கான கள்ளப்பணம் வெளிநாட்டு வங்கிகளிலும் வெளிநாடுகளில் உள்ள போலி நிறுவனங்களிலும் பல இலட்சம் கோடி ரூபாய் முதலீடுகள் செய்யப்பட்டுள்ளன. இதுதொடர்பாக 2014 ஏப்ரல் திங்களில் 26 பெயர்கள் அடங்கிய பதுக்கல் பணக்காரர்கள் ஜெர்மன் வங்கியில் தங்கள் கள்ளப் பணத்தைப் பதுக்கி வைத்திருக்கிறார்கள் என்ற தகவலை ஒன்றிய அரசு அறிவித்தது. மீண்டும் 2014 அக்டோபர் 24 அன்று 24 பெயர்கள் அடங்கிய பட்டியலில் 3 பெயர்களை மட்டும் உச்ச நீதிமன்றத்தில் தெரிவித்தார்கள். மீதமுள்ள 21 நபர்கள் யார்? என்ற கேள்வி எழுகிறது. இதன் தொடர்ச்சியாக அக்டோபர் 28 ஆம் தேதி உச்சநீதிமன்றம் தனது கடும் கண்டனத்தைத் தெரிவித்தது. கள்ளப்பணம் வைத்திருப்போரின் முழுப்பட்டியலை உச்ச நீதிமன்றத்திற்கு அளிக்க வேண்டும் என்று வலியுறுத்தியது. இதன் பிறகே 627 பெயர்களைக் கொண்ட ஒரு பட்டியலைக் கமுக்கமாக உச்சநீதிமன்றத்திற்கு ஒன்றிய பாஜக அரசு அளித்தது.

2015இல் பிரதமர் நரேந்திரர் கள்ளப்பணச் சட்டத்தை நாடாளுமன்றத்தில் கொண்டு வந்தார். இந்தச் சட்டமும் மறைந்த மூத்த வழக்கறிஞர் ராம் ஜெத்மலானி அவர்களின் தொடர் முயற்சியால் வந்ததாகும். உச்சநீதிமன்றத்தில் ராம் ஜெத்மலானி பல ஆதாரங்களையும் ஆவணங்களையும் அளித்த பிறகே இந்தப் புதிய சட்டத்தின் வாயிலாக கள்ளப் பணத்தைக் கடுமையான முறையில் நடவடிக்கை மேற் கொண்டு மீட்போம் என்று ஒன்றிய அரசு உறுதியளித்தது. இதற்கு மாறாக பல இந்திய முதலாளிகள் இந்திய வங்கிகளில் பல ஆயிரக்கணக்கான கோடி ரூபாய்களை கடனாகப் பெற்று வட்டியும் முதலையும் கட்டாமல் ஏமாற்றிவிட்டு வெளிநாடு களுக்கு தப்பியோடினர். இது ஒன்றிய அரசிற்குத் தெரிந்த செயல் என்று எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டின. இன்று வரை அவர்களை இந்தியாவிற்குக் கொண்டு வர ஒன்றிய பாஜக அரசு கடுமையான முயற்சிகளை மேற்கொள்ளவில்லை.

இதில் இன்னொரு வேடிக்கை என்னவென்றால் தமிழ்நாட்டின் நித்தியானந்தா பெங்களுர் நகரில் பெரும் ஆசிரமத்தை அமைத்து வெளிநாட்டிலிருந்து பல ஆயிரம் கோடி ரூபாயை நன்கொடையாகப் பெற்றார். பல பெண் களைப் பாலியல் துன்புறுத்தலுக்கு உட்படுத்தினார் என்று கடும் குற்றசாட்டுகள் எழுந்த போது அவரும் வெளிநாட் டிற்குப் பெண் சீடர்கள் புடைசூழ தப்பியோடினார். கைலாசா நாடு என்று ஒரு தனிநாட்டை அறிவித்துவிட்டு அடிக்கடி இணையத்தில் வலம் வருகிறார். ஒன்றிய அரசு உண்மை யிலேயே தனது அதிகாரத்தை முழுமையாகச் செலுத்தி இருந்தால் நித்தியானந்தாவைக் கைது செய்து இந்தியா விற்குக் கொண்டு வந்து இருக்க முடியும். காவிகளுக்கு ஒரு நீதி; எதிர்கட்சிகளுக்கு ஒரு நீதி என்பதே ஒன்றிய பாஜக அரசின் அறிவிக்கப்படாத தேசியக் கொள்கையாக உள்ளது. எங்கும் ஊழல். எதிலும் ஊழல் என்பதே காவி ஆட்சியின் இலட்சியமாக உள்ளது என்பதை அண்மைக்கால புள்ளிவிவரங்களும் வெளிநாட்டு ஆய்வு அறிக்கைகளும் சுட்டுகின்றன.

நரேந்திரரின் ஆட்சியில் ஊழல்கள் செய்வதில் பல புதிய புதிய அணுகுமுறைகள் பின்பற்றப்படு கின்றன. சட்டத்தின் வழியாக ஊழல் செய்வது, சட்டத்தை மீறி ஊழல் செய்வது என்ற இருவகை ஊழல்களைச் செய்து உலக அளவில் ஊழலுக்கென்று புதிய இலக்கணம் வகுத்துள்ளார் நரேந்திரர்.

2016ஆம் ஆண்டு ரூ.500 ரூ.1000 பணத் தாள் மதிப்பிழப்பு நடவடிக்கையை ஒன்றிய பாஜக அரசு இரவோடு இரவாக அறிவித்தது. தனது அமைச்சர வையைக் கலந்து ஆலோசிக்கவில்லை. குடியரசுத் தலைவராக இருந்த நிதி ஆளுமைமிக்க பிரணாப் முகர்ஜி தனது நூலில் பணமதிப்பிழப்பு அறிவிப்பு வந்தபின்னரே தன்னை நரேந்திரர் சந்தித்தார் என்று குறிப்பிட்டுள்ளார். இத்தகைய அதிரடி அறிவிப்பின் வழியாக, பல ஆயிரம் கோடி கள்ளப்பணம் நல்லப் பணமாக மாறிவிடும் என்று ஒரு மாயத் தோற்றத்தை உருவாக்கினார் நரேந்திரர். இந்த நடவடிக்கையிலும் பெரும் ஊழலை சங்கிகள் செய்தனர். சான்றாக குஜராத்தில் அமித்ஷா இயக்குநராக இருந்த அகமதாபாத் கூட்டுறவு வங்கியில் 5 நாட்களில் 745 கோடி ரூபாய் மாற்றப்பட்டது. அதே போன்று குஜராத்திலுள்ள 11 வங்கிகளில் 3115 கோடி ரூபாய் பணம் மாற்றப்பட்டது. இந்த இரு செய்திகளும் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் வழியாகப் பெறப்பட்டன.

அதேநேரத்தில் ஏழை நடுத்தர வருமானப் பிரிவினர் உழைத்து சிறுகச் சிறுக சேமித்து வைத்திருந்த நல்லப் பணத்தை வங்கிகளில் சென்று கணக்குக் காட்டி மீண்டும் பெறுவதற்கு முயற்சி செய்த போது நூற்றுக்கும் மேற்பட்ட வர்கள் வரிசையில் நின்று வங்கிகளின் வாசலிலேயே மடிந்தனர். இச்செயல் ஏழை நடுத்தர மக்களின் வாழ்வா தாரத்தைச் சிதைத்த ஒரு கொடுந்தாக்குதலாகும். ஆனால் பணக்காரர்களோ சங்கிகளின் துணைகொண்டு இந்தியா முழுவதும் தங்களது செல்வாக்கினால் கள்ளப்பணத்தை ரூ.2000 பணத்தாள்களாக மாற்றிக்கொண்டனர். பல செய்தி ஏடுகள் இதை வெளியிட்டன.

சான்றாக பணமதிப்பிழப்பு அறிவிக்கப்பட்டு ரூபாய் 2000 பணத்தாள் வெளியிடப்பட்ட சில நாட்களிலேயே மணல் ஒப்பந்தக்காரர் சேகர் ரெட்டி இல்லத்தில் கட்டுக்கட்டாக ரூ.2000 பணத்தாள் கட்டுகள் கைப்பற்றப்பட்டன. ஒன்றிய அரசின் புலனாய்வுத் துறை வழக்குப் பதிந்தது. பிறகு போதிய ஆதாரங்கள் இல்லை என்று கூறி வழக்கைத் திரும்பப் பெற்றது. ரெட்டி திருப்பதி கோயிலின் அறங்காவலர் குழுவின் உறுப்பினராகவும் நியமிக்கப்பட்டார்.

ரூ.500, ரூ.1000 பணத்தாள்கள் செல்லாது என்று பிரதமர் நரேந்திரர் அறிவித்து காணொலி வழியாக நாட்டு மக்களுக்கு உரையாற்றினார். ஆனால் இன்றோ நரேந்திரர் தனது முகம் காட்டாமல் மறைந்து கொண்டு ரூ.2000 பணத்தாளை இந்திய ரிசர்வ் வங்கி வழியாக மதிப்பிழக்கச் செய்யும் நடவடிக்கையை மேற்கொண்டார். ரூ.2000 பணத்தாள்கள் மெல்ல மெல்ல திரும்பப் பெறப்பட்டு வருகின்றன. இந்திய பொருளாதாரமோ பின்னிறக்கத்தில் உள்ளது. பணச்சுழற்சியோ தடுமாறிக் கொண்டிருக்கிறது. இந்தப் பணமதிப்பிழப்பு நடவடிக்கைகளை ஆய்வு செய்தால் இவற்றிலும் புதைந்திருக்கும் ஊழல்களும் வெளிப்படும்.

2017ஆம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்ட தேர்தல் பணப்பத்திரம் (Electoral Bond) ஊழலை ஊக்குவிக்கும் பத்திரமாக மாறிவிட்டது. இந்தப் பணப்பத்திரம் வழியாக நன்கொடை பெறும் நடைமுறை வருவதற்கு முன்பு பல கட்டுப்பாடுகள் பழையச் சட்டத்தில் இருந்தன. அவை : 1. எந்த வெளிநாட்டு நிறுவனமும் அரசியல் கட்சிக்கு நன்கொடை அளிக்க முடியாது. 2.உள்நாட்டு முதலாளித்துவக் குழுமங்கள் அரசியல் கட்சிகளுக்குத் தேர்தல் நிதி அளிக்க விரும்பினால் 1956ஆம் ஆண்டு நிறுவனச் சட்டம் 182ஆம் விதியின்படி (Companies Act. 1956 (Sec.182)) மூன்று வருட நிகர இலாபத்தில் உச்சபட்சமாக 7.5 விழுக்காடு மட்டுமே நிதியா கவோ அல்லது பத்திரங்கள் வழியாகவோ அளிக்க முடியும். மேலும் அரசியல் கட்சிக்கு வழங்கப்பட்ட நன்கொடை விவரங்களைக் குழுமங்களின் ஆண்டறிக்கைகளில் வெளியிட வேண்டும். இத்தகைய கட்டுப்பாடுகள் இருந்த காலத்திலும் பல வழிகளில் தேர்தல் நிதி என்கிற பெயரில் பெரு முதலாளிகள் கணக்கில் வராத பணத்தை ஆளும் கட்சி உட்பட பல கட்சிகளுக்கும் கமுக்கமாக நன்கொடையாக அளித்து வந்தனர். நன்கொடை அளித்த முதலாளிகளுக்கு அரசின் சலுகைகள் வாரி வழங்கப்பட்டன. நேர்மையாகத் தொழில் செய்த பல முதலாளிகள் முடங்கிப் போயினர்.

முதலாளித்துவப் பொருளாதாரத்தில் சுட்டப்படுகிற சந்தைப் போட்டிக்கு (Market Competition) சாவு மணி அடிக்கப்பட்டது. அதானி, அம்பானி போன்ற குஜராத் முதலாளிகள் அரசின் வரிச்சலுகைகளைப் பெருமளவில் பெற்றனர். ஒன்றிய அரசின் கட்டுபாட்டில் உள்ள பொதுத் துறை நிறுவனங்கான துறைமுகங்கள், வானூர்தி நிலையங்கள் போன்றவற்றை ஒப்பந்த அடிப்படையில் மேலாண்மை செய்யும் உரிமையை ஒன்றிய அரசு அதானி அம்பானிகளுக்கு வழங்கியுள்ளது.

இதன் காரணமாக, பொது மக்கள் முதலீட்டாளர்களின் நம்பிக்கைகளைப் பெற்று, கடந்த பத்தாண்டுகளில் பங்குச் சந்தையில் அதானி, அம்பானி குழுமங்களின் பங்கு மதிப்பு பன்மடங்காக உயர்ந்தது. இதன் காரணமாக பல இலட்சம் கோடி ரூபாய் அளவிற்கு அவர்கள் சொத்து மதிப்பு உயர்ந்தது. மெல்ல மெல்ல இவ்வகை முறைகேடான செயல்களில் ஈடுபட்டு அதானி உலகப் பணக்காரர்கள் பட்டியலில் முதல் வரிசைக்குச் சென்றார். ஒன்றிய அரசின் சலுகைகளைப் பெற்றதனால் இந்தியாவின் முற்றுரிமை முதலாளிகளாக (monopoly capitalists) அதானிகளும் அம்பானிகளும் மாறினர்.

நிதி மோசடி, பொய்க் கணக்கைக் காட்டுதல் போன்ற வற்றை பின்பற்றிதான் அதானி உலக முதலாளி ஆனார் என்று பல ஆதாரங்களையும் ஆவணங்களையும் சுட்டிக் காட்டி ஹிண்டன்பர்க் நிறுவனம் பல நூறு பக்க அறிக் கையை வெளியிட்டது. ஊழலை ஒழிப்பேன்; வெளிநாட்டு வங்கிகளில் பதுக்கி வைக்கப்பட்டுள்ள கணக்கில் வராத பணத்தைக் கண்டுபிடித்து இந்தியாவிற்குக் கொண்டு வருவேன் என்று 2014ஆம் ஆண்டு தேர்தலில் முழங்கிய நரேந்திரர் தேர்தல் நிதி பெறுவதிலிருந்த கட்டுப்பாடு விதிகளை அகற்றி, வெளிநாடுகளில் கணக்கில் வராத பணத்தை வைத்து மோசடியான நிறுவனங்களை உருவாக்கி ஹவாலா பணப்பரிமாற்றத்தைப் பெருக்கிய நிறுவனங்களும் தற்போது தேர்தல் பத்திரமாக அளிக்க முடியும் என்ற சட்டத்திருத்தத்தை (2017) ஒன்றிய பாஜக அரசு கொண்டு வந்தது.

அப்போது ஒன்றிய அரசு இந்திய ரிசர்வ் வங்கியிடமும் தேர்தல் ஆணையத்திடமும் இச்சட்டத்திருத்தம் தொடர்பாகக் கருத்துகளைக் கேட்டது. இந்திய ரிசர்வ் வங்கி நரேந்திரர் கொண்டுவரும் சட்டம் முறைகேடான பணப் பரிமாற்றங் களுக்கு வழிவகுத்துவிடும் என்றும் வெளிநாட்டு நிறுவனங் களிடம் இருந்து தேர்தல் நிதிக்காகப் பணப்பத்திரம் வழியாக நன்கொடை பெறுவது பெரும் ஊழலை ஊக்குவிக்கும் என்றும் கருத்து தெரிவித்தது. அதேபோன்று ஒன்றிய அரசின் தேர்தல் ஆணையமும் பல பண முறைகேடுகளுக்கு இச்சட்டத் திருத்தம் வழிவகுத்துவிடும் என்று தனது கருத்தைத் தெரிவித்தது. ஆனால் பிரதமர் நரேந்திரர் இதைப் பற்றி எல்லாம் சிறிதும் அச்சமின்றி புறந்தள்ளி 2017இல் சட்டத்திருத்தத்தின் வழியாகச் சட்டப்படியாகப் பெரும் ஊழல் பணத்தை தேர்தல் நிதியாக அரசியல் கட்சிகள் நன்கொடைப் பெறுவதற்குப் பாதை அமைத்துக் கொடுத்தார்.

இந்திய நாடாளுமன்றத்தில் அனைத்துக் கட்சிகளின் கருத்துகளையும் புறந்தள்ளி புதிய தேர்தல் பணப்பத்திரச் சட்டம் நடைமுறைக்கு வந்தது. கடந்த நான்காண்டுகளில் வெளிநாட்டு உள்நாட்டு முதலாளித்துவ பண முதலைகளிட மிருந்து தேர்தல் பத்திரம் வழியாக அரசியல் கட்சிகள் நிதி திரட்டியுள்ளன. அதில் 57 விழுக்காட்டிற்கு மேல் பாஜக விற்கும் மற்ற கட்சிகளுக்கு 43 விழுக்காடும் தேர்தல் நன்கொடையாக அளிக்கப்பட்டுள்ளது. நேர்மை புறக்கணிக் கப்பட்டது. வெளிப்படைத்தன்மை அடியோடு குழிதோண்டிப் புதைக்கப்பட்டுள்ளது. ஊழல் உச்சத்தைத் தொட்டுள்ளது. இதுதான் நரேந்திரர் கொண்டுவந்த சட்டத்திருத்தத்தின் சாதனை ஆகும். சட்டப்படியான ஊழல் செய்வதற்கு மற்றொரு அமைப்பை பிரதமரின் பெயரால் 2020ஆம் ஆண்டில் ஒன்றிய பாஜக அரசு பிரதமரின் நலத்திட்ட நிதி (PM Cares Fund) என்ற ஒரு புதிய அமைப்பை உருவாக்கியது.

ஊழல் செய்வதற்கு தகுந்த நேரத்தை எதிர்பார்த்துக் கொண்டிருந்த காவி கும்பலுக்கு உலகம் முழுவதும் பரவிய கொரோனா தொற்று நோய் ஒரு புதிய வாய்ப்பை அளித்தது. அமெரிக்கா, சீனா, ஐரோப்பிய நாடுகள் இந்தக் கொடும் நோயை எதிர்கொள்வதற்கு வெளிப்படைத் தன்மையோடு சிகிச்சைக்கான நிதியைப் பெறுவதற்குப் பல நிருவாக அமைப்புகளை உருவாக்கின. எந்த நாட்டிலும் எந்த தலைவரும் இந்தக் கொடும் நோய்க் காலத்தில் ஊழலை ஊக்குவிக்கவும் தனிநபர் விளம்பரம் தேடுவதற்கும் முயற்சி செய்யவே இல்லை. ஆனால் இந்தியப் பிரதமர் இக்காலக் கட்டத்தில்தான் மேற்குறிப்பிட்ட புதிய நிதியத்தை உருவாக்கி பல ஆயிரம் கோடி அளவிற்கு நிதியைப் பெற்றார். பிரதமரின் பெயரில் உள்ள நிதியத்திற்கு (Prime Minister Care Fund) நன்கொடையாளர்கள் அளிக்கும் நிதி பற்றிய விவரங்களைத் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின்படி பல சமூக செயல்பாட்டாளர்கள் கேட்டபோது பிரதமர் அலுவலகம் இதன் தொடர்பான விவரங்களை அளிக்க மறுத்துவிட்டது. இத்த கையச் செயல் இந்திய அரசமைப்புச் சட்ட விதிகளுக்கு எதிரானதாகும்.

இந்திய அரசமைப்புச் சட்டப்பிரிவு 266(2)இல் வரி வருவாய், கட்டண வருவாய், கடன் வழியாகப் பெறப்படும் நிதியைத் தவிர்த்து பிற நிதியை இந்தியப் பொதுக் கணக்கு நிதியத்தில் அளித்துவிட வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது. ஆனால் நரேந்திரர் ஆட்சியில் 2020இல் பிரதமர் பொதுநல நிதியம் (Public Account) என்ற பெயரில் ஒன்றிய அரசில் இயங்கி வரும் இந்த நிதியம் அரசமைப்பு விதிகளுக்கு எதிராகவே வெளிப்படைத் தன்மை இல்லாமல் செயல்பட்டு நிதியைத் திரட்டி வருகிறது. கொரானா பெருந்தொற்றுக் காலத்தில் பெரும் இடர்கள் ஏற்பட்டால் துயர் துடைப்புப் பணிகளுக்குப் பயன்படுத்தப்படும் என்று குறிப்பிடப்பட்டு நன்கொடைகள் பெருமளவில் பெறப்பட்டன. இந்நிதியம் தொடங்கிய முதல் வாரத்திலேயே பெருமுதலாளிகளிட மிருந்தும் முதலாளித்துவக் குழுமங்களிடமிருந்தும் ரூபாய் 6500 கோடி பெற்றது. மேலும் 10000 கோடி ரூபாய்க்கு மேல் இந்நிதியத்திற்கான பணம் பெறப்பட்டது என்றும் தகவல் வெளிவந்தது.

மாநிலங்களின் வரி உரிமைகளைப் பறித்துச் சரக்கு சேவை வரி விதிப்பு முறையை 2017இல் பாஜக அரசு நடைமுறைப்படுத்தியது. இந்த வரி விதிப்பு சிறுகுறு நடுத்தர உற்பத்தி நிறுவனங்களை வீழ்ச்சியடைச் செய்தது. மேலும் ஏழை, நடுத்தர மக்களின் மீது தாங்க முடியாத அளவிற்கு வரிச்சுமை ஏற்றப்பட்டது. அவர்களின் சிறிய அளவிலான குடும்பச் சேமிப்பு மீது கூட வரி விதிக்கப்பட்டது. இந்திய மக்கள் அனைவரும் வங்கிக் கணக்குகள் தொடங்க வேண்டும் என்று பிரதமர் பல முறை வேண்டுகோள் விடுத்தார். அரசின் பல நலத்திட்டங்கள் இந்த வங்கிக் கணக்கில் செலுத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டது. இதை நம்பி பல இலட்சம் ஏழை மக்கள் வங்கிக் கணக்குகளைத் தொடங்கினர். ஆனால் குறைந்த அளவு இருப்புத் தொகை இந்த ஏழை மக்களின் வங்கிக் கணக்குகளில் இல்லாத காரணத்தால் கடந்த நிதியாண்டில் ஏழை எளியோர்க்கு தண்டமாக 21000 கோடி ரூபாயை விதித்தது. பொதுத்துறை, தனியார் துறை வங்கிகள் இந்த மக்களின் பணத்தைச் சூறையாடியுள்ளன. அதேநேரத்தில் பொதுத் துறை வங்கிகளிடமிருந்து பெருமுத லாளிகள் கடனாகப் பெற்ற ரூபாய் 10 இலட்சம் கோடி தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. கடந்த 75 ஆண்டுகளாக நாட்டின் ஒட்டுமொத்த உற்பத்தியில் குடும்ப சேமிப்பு 20 விழுக்காடாக இருந்து தற்போது 7 விழுக்காடாகக் குறைந் துள்ளது. ஏழை, நடுத்தர மக்களின் குடும்பப் பொருளா தாரத்தின்மீது நரேந்திரரின் துல்லியமான தாக்குதலின் ஒரு கொடுமையான அடையாளமாக இச்செயல் பல பொருளியல் வல்லுநர்களால் சுட்டப்பட்டுள்ளது.

இந்த வரி விதிப்பு முறையின் வழியாக வரி ஏய்ப்பைத் தடுப்போம் என்று கூறியது ஒன்றிய அரசு. ஆனால் இந்த வரிவிதிப்பில் உள்ள நடைமுறை விதிகளைத் தவறாகப் பயன்படுத்தி, போலியான பல நிறுவனங்களை உருவாக்கி, அந்த நிறுவனங்களில் இருந்து மூலப்பொருட்களைப் பெற்றதாகக் கணக்குக் காட்டி, பல முதலாளிகள் பல ஆயிரம் கோடி ரூபாய் வரி ஏய்ப்பு செய்துள்ளனர். 2023இல் ஒன்றிய அரசின் மறைமுக வரி வாரியம் மேற்கொண்ட ஆய்வில் இந்தச் சரக்கு சேவை வரியால் மோசடி செய்த தொகையின் மதிப்பு 15,000 கோடி ரூபாய் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும் 17000 போலிக் கணக்குகள் கண்டறியப்பட்டுள்ளன. இதுவும் ஒரு வகை சட்டப் பூர்வமான ஊழலுக்கு வழிவகுத்த வரி விதிப்பு முறையாகும்.

சில மாதங்களுக்கு முன்பு அமெரிக்காவின் ஹிண்டன் பர்க் நிறுவனம் பங்குச் சந்தையில் மோசடி செய்தும் பொய்யான கணக்குக் காட்டியும் வரிச் சட்டங்களை மீறியும் அதானி குழுமம் பல இலட்சம் கோடி ரூபாயைச் சூறையாடி உள்ளது என்று குறிப்பிட்டது. இவ்வகை மோசடிகளால்தான் அதானி உலகப் பணக்காரர்களின் முதல் வரிசையில் இடம் பெற்றார் என்று பல ஆதாரங்களை அள்ளி வழங்கியது இந்நிறுவனம். இராகுல் காந்தி சென்ற ஆண்டு நாடாளு மன்றத்தில் ஹிண்டன்பர்க் அறிக்கையைப் படித்து அதானிக்கும் நரேந்திரருக்கும் உள்ள தொடர்பு பற்றி நாடு அறிந்து கொள்ள விரும்புகிறது என்று கேள்வி கேட்டவுடன் ஜனநாயகத்தின் அடித்தளத்தையே பிளக்கும்வண்ணம் அவசர அவசரமாக இராகுலின் நாடாளுமன்ற உறுப்பினர் பதவியைப் பறித்தனர். உச்சநீதிமன்ற தலையீட்டால் குஜராத் நீதிமன்றத்தின் தீர்ப்பு நிறுத்தப்பட்டது. மீண்டும் நாடாளு மன்றத்திற்கு இராகுல் காந்தி சென்றார். ஊழல் பயம் உலுக்கியதால் எதிர்க்கட்சியினரை நாடாளுமன்றத்தில் எதிர்கொள்வதற்கு அச்சப்பட்டு நரேந்திரர் ஓடியதை இந்த நிகழ்வு வெளிப்படுத்தியது.

இச்சூழலில்தான் 2023ஆம் ஆண்டு இந்தியத் தலைமைக் கணக்கு உயர் அலுவலரின் அறிக்கை தேசிய நெடுஞ்சாலை களைக் கட்டமைக்கும் பணிகளில் நடைபெற்ற பெரும் ஊழலை வெளிப்படுத்தியது. பாரத்மாலா திட்டத்தின்கீழ் துவாரகா விரைவு நெடுஞ்சாலை அமைக்கும் பணிக்கான செலவு ஒரு கிலோ மீட்டருக்கு ரூபாய் 18 கோடி என்று கணக்கிடப்பட்டுத் திட்டம் தொடங்கியது. ஆனால் ஒரு கிலோ மீட்டர் சாலை அமைக்கும் பணிக்கு 250 கோடி ரூபாய் செலவிடப்பட்டுள்ளது என்று அவ்வறிக்கையில் குறிப்பிடப்பட் டுள்ளது. ஒரு கிலோ மீட்டர் சாலையில் மட்டும் 232 கோடி ரூபாய் மக்களின் வரிப் பணம் சூறையாடப்பட்டுள்ளது. ஹிண்டன்பர்க் அறிக்கை அளித்த அதானி ஊழலை விஞ்சியது பாரத்மாலா திட்டத்தில் நடைபெற்ற மாபெரும் ஊழல்.

பிரதமரின் மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தில் நடைபெற்ற மோசடியும் ஊழலும் இதுவரை இந்தியா கண்டிராதது. 7,50,000 நபர்கள் ஒரேயொரு அலைபேசி எண்ணில் பதிவு செய்யப்பட்டுள்ளனர். ஆயிரக்கணக்கான இறந்தவர்களை உயிரோடு இருந்து இந்தக் காப்பீட்டுத் திட்டத்தின் வழியாக மருத்துவச் சிகிச்சை பெற்றுப் பயன் பெற்றார்கள் என்று போலிக் கணக்குக் காட்டிப் பெரும் பணம் கையாடல் செய்யப் பட்டுள்ளது. 88,760 நோயாளிகள் சிகிச்சை பெற்றார்கள் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

இராமனை வைத்துதான் பாஜக தேர்ப் பயணம் நடத்தியது. இதனை முன்னின்று நடத்தி இன்று காணாமல் போன பட்டியலில் இடம்பெற்றுள்ள அத்வானி தலைமையில் சங்கிகள் பாபர் மசூதியை இடித்தனர். இந்த மத அரசியலைத் தூண்டி பல வட மாநிலங்களில் பாஜக தனது செல்வாக்கை வளர்த்துக் கொண்டது. மக்களை மூடநம்பிக்கையில் ஆழ்த்தி எல்லாம் இராமன் செயலே என்று கூறியவர்கள் இன்று இராமன் தலையிலேயே ஊழல் கையை வைத்துள்ளனர். அயோத்தி இராமன் கோயில் கட்டுவதில் நிலம் வாங்குவதில் சங்கிகளின் ஊழல் கைகள் நீண்டதாக தலைமைக் கணக்கு உயர் அலுவலரின் அறிக்கைச் சுட்டுகிறது.

ஒன்றிய அரசின் கட்டுப்பாட்டில் உள்ள தேசிய நெடுஞ் சாலைகளில் அமைக்கப்பட்டுள்ள சுங்கச் சாவடிகளில் வாகன ஓட்டிகளிடமிருந்து வசூலிக்கப்பட்ட கட்டணங்களில் பெரும் மோசடிகள் நடைபெற்றுள்ளன என்பதையும் ஒன்றிய அரசின் தலைமைக் கணக்கு உயர் அலுவலரின் அறிக்கை வெளிப்படுத்தியுள்ளது. சான்றாக செங்கல்பட்டு-பரனூர் சுங்கச்சாவடியை 2019-2020இல் கடந்த வாகனங்களின் 1.17 கோடி எண்ணிக்கையில் 63 இலட்சம் வாகனங்கள் இலவசமாகப் பயணம் செய்ய அனுமதிக்கப்பட்டதாகப் போலிக் கணக்குக் காட்டிப் பெரும் ஊழல் நடைபெற்றுள்ளது. இவ்வாறு ஒன்றிய அரசின் தலைமைக் கணக்கு உயர் அலுவலர் அளித்த அறிக்கையின்படி 7 இலட்சத்து 50 ஆயிரம் கோடி ரூபாய் அளவிற்கு ஊழல் நடைபெற்றுள்ளது என்பது வெளிவந்துவிட்டது. தலைமைக் கணக்கு உயர் அலுவலரின் அறிக்கை ஒன்றிய அரசின் எல்லாத் துறை களிலும் செய்யப்படும் பொதுச் செலவை ஆய்ந்து அறிக்கை வெளியிடுவதில்லை. மேலும் தேர்ந்தெடுக்கப்பட்ட சில துறைகளில் (Selected Departments of sampling Method) செய்யப்பட்ட பொதுச் செலவை மட்டும் ஆய்ந்து தனது ஆய்வறிக்கையை ஆண்டுதோறும் அளிக்கிறது. ஒட்டுமொத்த ஒன்றிய அரசின் துறைகளை முழுமையாக ஆய்வு செய்தால் பாஜக அரசின் ஊழலின் அளவு பல இலட்சம் கோடிகளைத் தாண்டும் என்பதில் ஐயமில்லை.

பொதுத் துறை வங்கிகளில் கடன் பெற்ற பெரு முதலாளிகளுக்கு 10 இலட்சம் கோடி ரூபாய் தள்ளுபடி. துறை முகங்கள், விமான நிலையங்கள் அதானிக்குத் தாரை வார்ப்பதில் அளிக்கப்பட்ட சலுகைகள். இரபேல் விமானங் களை வாங்குவதற்கு அம்பானிக்குக் கிடைத்த தரகுத் தொகையைக் கணக்கிட்டால் பல இலட்சம் கோடி ரூபாய் ஊழல்கள் வெடித்துக் கிளம்பும். எனவே இதை எல்லாம் மறைப்பதற்காகத்தான் எதிர்க்கட்சிகளின்மீது ஒன்றிய அரசின் அமைப்புகளான அமலாக்கத்துறை, வருமான வரித்துறை, புலனாய்வுத் துறைகளை ஏவிவிடுகிறது ஒன்றிய பாஜக அரசு. வெடித்துக் கிளம்பும் மகா ஊழல்களைப் பற்றிச் செய்திகளை வெளியிடாமல் ஒளி ஒலி ஊடகங்கள் விவாதங் களுக்கு உட்படுத்தாமல் வேடிக்கை பார்க்கின்றன முதலாளித்துவ ஊடகங்கள். ஆனால் இதையும் மீறி வெளிநாட்டு அமைப்பு கள் பல அதிர்ச்சியான ஊழல் பற்றிய உண்மைத் தகவல் களை வெளியிட்டு வருகின்றன. அமைப்புரீதியான ஊழல் குற்றங்கள் பற்றிய ஆய்வு நிறுவனம் (Organised Crime and Corruption Reporting Project) கடந்த அரை நூற்றாண்டுக்கு மேலாக உலக அளவிலான பல ஊழல்களை ஆவணத்தோடு அம்பலப்படுத்தி ஊழல் செய்தோர் மீது நடவடிக்கைகளை எடுக்கும்படி வலியுறுத்தி வருகிறது. பனாமா கள்ளப்பணம் ஆவணம், பெகாசிஸ் உளவு நிறுவனம் செய்த தவறுகள் ஆகியவற்றையும் இந்த அமைப்பு தான் வெளிக்கொணர்ந்தது.

இந்நிறுவனம் தற்போது இந்தியாவில் அரங்கேறிவரும் ஊழல்களைப் பற்றி வெளியிட்ட ஆய்வு அறிக்கை குறிப்பாக அதானி குழுமங்கள் மீதான ஊழல் குற்றச்சாட்டை அம்பலப்படுத்தியுள்ளது. இந்த அறிக்கையை கார்டியன் (The Guardian and Financial Times) போன்ற வெளிநாட்டு ஏடுகளும் தமிழ்நாட்டில் ஆங்கில இந்து ஏடும் 23 ஆகஸ்ட் 2023இல் வெளியிட்டன. அவ்வறிக்கையில் ஒன்றிய அரசின் பல துறைகளின் உதவியோடு அதானி குழுமம் செய்த மோசடிகளை உருவாக்கிய போலி நிதி நிறுவனங்களை அவற்றின் வழியாக செய்யப்பட்ட மோசடியான பணப் பரிமாற்றங்களையும் சுட்டப்பட்டுள்ளது.

குறிப்பாக இந்தியப் பங்குச் சந்தையில் இத்தகைய மோசடிப் பணம் முதலீடுகள் செய்யப்பட்டுள்ளதையும் குறிப்பிடப்பட்டுள்ளது. இதற்கெல்லாம் எப்போது நீதி கிடைக்கும் என்ற கேள்வி இன்று மக்கள் மன்றத்தில் எழுப்பப்படுகிறது. முதலாளித்துவ பாசிச மதவாத பாஜகவை ஒன்றிய அரசிலிருந்து தூக்கி எறிந்தால்தான் மேலும் பல உண்மைகள் வெளிவரும். 2024ஆம் ஆண்டு நாடாளு மன்றத் தேர்தலில் பாஜகவை ஒவ்வொரு மாநிலக் கட்சியும் மற்ற கட்சிகளும் இந்தியாவாக ஒன்றிணைந்து தோற் கடிப்பதே இந்திய நாட்டிற்கும் மக்களுக்கும் விடியலாகவும் தீர்வாகவும் அமையும்.

- பேராசிரியர் மு.நாகநாதன்

Pin It