ஒரு பகுத்தறிவாளனின் சபரிமலை பயண அனுபவங்கள் - 1

சபரிமலைக்குப் போவது என்று தீர்மானித்தவுடன், ஒரு விஷயத்தில் நான் தெளிவாக இருந்தேன். பகுத்தறிவு பேசி, கூட வரும் ‘சாமிகள்’ கடுப்பாகி, நடுவழியில் நம்மை இறக்கிவிட்டு விடக்கூடாது. ஒரு பத்திரிக்கையாளனின் வேலையாக, அவர்கள் போகும் இடங்களுக்கும் எல்லாம் போவது, நடப்பவற்றை எல்லாம் கூர்ந்து கவனிப்பது, எல்லாவற்றையும் தொகுத்து ஒரு பகுத்தறிவாளனின் பார்வையில் எழுதுவது – இதில் தீர்மானமாக இருந்தேன். அப்படித்தான் ‘தேங்காய் உரசும்’ நிகழ்ச்சியை தவறவிடக் கூடாது என்று அருப்புக்கோட்டை கிளம்பினேன். காலையிலிருந்து கார் ஓட்டிக் கொண்டே இருப்பதால், உடம்பு முழுவதும் அசதியாக இருந்தது. இருந்தாலும் ஆர்வம் என்னை விடவில்லை.

எங்களது கிராமத்திலிருந்து அருப்புக்கோட்டைக்கு செல்ல இரண்டு வழிகள் இருக்கின்றன. ஒரு வழி, சாத்தூர், விருதுநகர் வழியாக செல்வது; இன்னொரு வழி, கோவில்பட்டி, எட்டையபுரம் வழியாக செல்வது. இரண்டுக்கும் தூரம் அதிக வித்தியாசமில்லை. சாத்தூர் வழியாக செல்லும் பாதை நன்றாக இருக்கும் என்று சரவணன் சொன்னதால், அதே வழியைத் தேர்ந்தெடுத்தோம்.

சென்னை போக்குவரத்து நெரிசலில் கார் ஓட்டி நொந்து போனவர்களுக்கு, ஊர்ப் பக்கம் ஓட்டுவது அவ்வளவு இலகுவாக இருக்கும். சாலையில் யாருமே இல்லாததுபோலத்தான் இருக்கும். பதற்றமில்லாமல் ஓட்டலாம்.

அருப்புக்கோட்டை போய்ச் சேர்ந்தபோது இரவு 8.30 மணி இருக்கலாம். நேரே இரவி மாமா வீட்டிற்குப் போனோம். மாமா ஒரு சவாரிக்காக மதுரை ஏர்போர்ட் போயிருந்தார். மலேசியாவில் வேலை பார்த்தவர், இப்போது ஊர் திரும்பி, சொந்தமாக டிராவல்ஸ் நடத்துகிறார். மாமா மலேசியாவில் வேலை பார்த்தபோது, அவரது மனைவி, குழந்தைகள் எங்களது கிராமத்தில்தான் இருந்தனர். அதனால் அவர்கள் அனைவருடனும் எனக்கு நல்ல பரிச்சயம் உண்டு.

Saravanan and Ravi

(வீட்டில் பூஜை செய்யும் சரவணன் மற்றும் இரவி மாமா)

உங்களுக்கு இந்த அனுபவம் உண்டா என்று தெரியவில்லை. எந்த வயதில் ஊரிலிருந்து கிளம்பி வந்தேனோ, அந்த வயதில் நான் பார்த்த மனிதர்கள் அப்படியே எனது எண்ணத்தில் பதிந்திருப்பதும், இப்போது அவர்களைப் பார்க்கும்போது அதே வயதிலேயே அவர்களது தோற்றத்தை எதிர்பார்ப்பதும் நடக்கும். இரவி மாமாவின் பையன் இரண்டாவதோ, மூன்றாவதோ படித்துக் கொண்டிருப்பான், பெண்குழந்தை PreKG போய்க்   கொண்டிருப்பாள் என்ற எண்ணத்தோடேயே வீட்டிற்குள் நுழைந்தேன். பையன் இப்போது பொறியியல் கல்லூரியில் படிக்கிறான்; பெண் மேல்நிலைப்பள்ளியில் படிக்கிறாள். சட்டென அதிர்ச்சியாகி, ‘நாம் பார்த்து 15 ஆண்டுகளுக்கு முன்பு’ என்று உண்மை பொட்டில் அறைய, நிதானத்துக்கு வந்தேன். பல ஆண்டுகளுக்கு முன் ஊரில் சந்தித்தவர்களை இப்போது எங்கேயாவது பார்த்தால், இடையே இத்தனை ஆண்டுகள் ஓடிவிட்டன என்பதும், இருவருக்கும் வயது கூடிவிட்டது என்பதும் உடனடியாக எனது நினைவுக்கு வருவதே இல்லை.

நான் ஆறு அல்லது ஏழு படித்துக் கொண்டிருந்தபோது, எனது கிராமத்தில் பக்கத்து வீட்டில் கௌரி என்ற குட்டிப் பெண் இருந்தாள். மிகவும் சுட்டி. பத்துமாதக் குழந்தையாக இருந்ததில் இருந்தே மிகவும் அழகாகப் பேசுவாள் (கிராமத்துக் குழந்தைகள் நிறைய மனிதர்களைப் பார்ப்பதால் சீக்கிரமாகவே பேசிவிடும்). பெரும்பாலும் எங்கள் வீட்டில்தான் இருப்பாள். அவளோடு விளையாடுவதில் பொழுது போவதே தெரியாது. அவளை சில ஆண்டுகளுக்கு முன் பார்த்தபோது, கல்லூரிக்குப் போய்க் கொண்டிருப்பதாகச் சொன்னாள். என்னால் நம்பவே முடியவில்லை. கௌரி சின்னப் பெண் அல்லவா, அதற்குள் கல்லூரி எப்படி போனாள் என்பது அதிர்ச்சியாகவே இருந்தது. எனக்கு வயதானதைவிட, அவளுக்கு வயதானதைத்தான் என்னால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை.

அப்படித்தான் இரவி மாமாவின் குழந்தைகளைப் பார்த்தபோதும் இருந்தது. குழந்தைகள் குழந்தைகளாகவே எப்போதும் இருந்தால் எவ்வளவு நன்றாக இருக்கும்?

அவர்கள் வீட்டில் உட்கார்ந்திருக்கிறேன். உடம்பில் ஒரு அதிர்வு இருந்து கொண்டே இருந்தது. காலையில் இருந்து கார் ஓட்டியதால், காருக்குள் இருக்கும் அதிர்வு, உடம்பிலும் தொற்றிக் கொண்டது. கொஞ்சம் தூங்கினால்தான் இந்த அதிர்வு சரியாகும்.

மாமா அரைமணி நேரத்தில் வந்துவிட்டார். குளித்துவிட்டு, மாமாவும், சரவணனும் பூஜை செய்தார்கள். பின்பு சிவன் கோயிலுக்கு தேங்காய் உரசக் கிளம்பினோம்.

மாமா டாடா சுமோவில் போக, நாங்கள் பின்னால் swift-ல் தொடர்ந்தோம். முன்னால் சென்று கொண்டிருந்த வண்டியில் ஓட்டுனர் இருக்கை பக்கமாக சிகரெட் புகை வந்தது. சரவணனுடன் பேசிக் கொண்டே வந்ததில், மாமா வண்டியைத் தவற விட்டுவிட்டேனா என சந்தேகம் வந்தது. சரவணனைக் கேட்டால், “மாமா சாமிதான் சிகரெட் பிடிக்கிறார்” என்று சொன்னான்.

“சாமி சிகரெட் பிடிக்கலாமா?”

“மனசு சுத்தமாக இருந்தால் போதும், சிகரெட் பிடிக்கலாம் என்று மாமா சாமி சொன்னார்”

“அப்போ, அதே மனசு சுத்தத்தோடு ஒரு பீர் அடிக்கலாமா?”

அது பிடாது என்று சரவணன் சொல்லிவிட்டான். வித்தியாசமான விதிமுறையாக இருக்கிறதே!

கோயிலுக்குப் போய்ச் சேர்ந்தோம். இரவு ஒன்பதரை மணிக்கும் கோயில் சுறுசுறுப்பாக இருந்தது. நிறைய அய்யப்ப சாமிகள் அங்கும் இங்கும் நடமாடிக் கொண்டிருந்தார்கள். ஒரு பக்கம் தேங்காய்கள் குவிக்கப்பட்டிருந்தன. பத்து, இருபது பேர் அதை உரசிக் கொண்டிருந்தார்கள். தேங்காய் உரசுவது ஏன் என்று குரு சாமி எங்கள் இருவரையும் அழைத்து விளக்கினார்.

“மலைக்குச் செல்லும்போது இருமுடி கட்டிச் செல்வார்கள். அந்த இருமுடியில் அய்யப்பனுக்கு நைவேத்தியம் செய்ய நெய் எடுத்துச் செல்ல வேண்டும். தேங்காயின் ஒரு கண்ணில் ஓட்டை போட்டு, இளநீரைக் கொட்டிவிட்டு, அதில் காய்ச்சிய பசு நெய் ஊற்றி அடைத்துவிட வேண்டும். இதுதான் நெய்த் தேங்காய். தேங்காய் என்பது நமது உடல். உடலில் ஓடும் உயிர் போன்ற இரத்தம்தான் நெய். உடலையும், உயிரையும் அய்யப்பனுக்குக் காணிக்கையாக்குகிறோம். அப்படி காணிக்கையாக்கும் உடலில் முடி இருந்தால் நன்றாக இருக்குமா? அதனால்தான் அதனை நீக்குகிறோம்” என்பதுபோல் குரு சாமி சொன்னார்.

தேங்காயின் முடியைப் பிய்த்து எறிந்துவிட்டு, அதன்மீது ஒட்டிக் கொண்டு இருக்கும் நார்களை தரையில் உரசி நீக்க வேண்டும். மொட்டை அடித்த தலைபோல் தேங்காய் வழுவழு என்று இருக்க வேண்டும். அதுவரை தேங்காயை உரச வேண்டும். பெரும்பாலும் இந்த வேலை கன்னிசாமிகள் செய்ய வேண்டியதாகும். சபரிமலை செல்லும்வரை கன்னிசாமிகளுக்கு கூடுதல் வேலைகள் தரப்படுகின்றன. ஏறக்குறைய முதலாமாண்டு கல்லூரி மாணவர்களுக்கு நடைபெறும் ராகிங் போல என்று மற்ற சாமிகள் சொன்னார்கள். ஆனால் அநாவசியமாக எதுவும் செய்யச் சொல்வதில்லை. கூடுதல் வேலைகளும், கேலி, கிண்டல்களும் மட்டும்தான்.

தேங்காய் உரசும் சாமிகளுக்குப் பக்கத்தில் ஒரு காகிதத்தில் சேவு வைக்கப்பட்டிருந்தது. சேவு சாப்பிட்டுக் கொண்டே உரசிக் கொண்டிருந்தார்கள். நண்பனுக்கு உதவுவதற்காக நானும் உட்கார்ந்தேன்.

“குரு சாமி ரொம்பவும் விவரமானவர்; படிச்சவர். சபரிமலை போறதிலுள்ள ஒவ்வொரு காரியத்துக்கும் அவர்கிட்ட டீடெட்டயலா விளக்கங்கள் இருக்கும். தேங்காய் உரசுறது பத்தி எவ்வளவு அழகாக விளக்கினார், பார்த்தயா?” என்றான் சரவணன்.

“உண்மையில் அதுதான் காரணமாக இருக்கும்னு என்று நான் நம்பலை. நம்ம கிராமங்கள்லே கண்ணாடி பாட்டில்கள் எல்லாம் ரொம்ப லேட்டாத்தான் வந்துச்சி. நம்ம சின்னவயசுலே வீட்டிலே எல்லாமே மண்சட்டியிலேதான் வச்சிருப்பாங்க. அப்படி இருக்கும்போது 60, 70 வருசத்துக்கு முன்னாடி சபரிமலை போனவங்க, நெய்யை எதுலே கொண்டு போறதுன்னு யோசிச்சுருப்பாங்க… கல்லும், முள்ளுமா இருக்குற மலைப் பாதையிலே மண்சட்டியிலே கொண்டுபோனா, ஒரு வேளை சறுக்கி விழுந்தால், பானை உடைஞ்சி, நெய் கொட்டிரும். அய்யப்பனுக்கு உடைக்க எப்படியும் தேங்காய் கொண்டு போகனும். அதுலே ஓட்டை போட்டு, நெய் கொண்டுபோனா, தேங்காயும் கொண்டுபோன மாதிரி ஆச்சு… கொட்டாம நெய்யும் கொண்டு போன மாதிரி ஆச்சு. பிற்காலத்துலே, இதுக்கு உடலு, உயிரு கதையெல்லாம் சேர்ந்திருக்கும்” என்று பதில் சொன்னேன்.

குரு சாமியின் விசாலமான அறிவை மெச்சுவேன் என்று எதிர்பார்த்திருந்தவனுக்கு நான் சொன்ன பதில் ஏற்றதாக இல்லை. ‘அவரைவிட நீ என்ன அவ்வளவு பெரிய அப்பாடக்கரா?’ என்ற தொனியிலேயே அவன் பார்வை இருந்தது. நான் சேவுப் பக்கம் கவனத்தைத் திருப்பினேன்.

***

அருப்புக்கோட்டையில் மாணிக்கவாசகம் என்ற இடதுசாரித் தோழர் ஒருவர் இருக்கிறார். தமிழில் இலவச மென்பொருள் உருவாக்கத்திற்கும், அதன் பயன்பாட்டிற்கும் தன்னார்வமாக பங்கிழைப்பவர். கீற்றிற்கு தொழில்நுட்ப உதவிகள் தேவைப்படும்போதெல்லாம், நான் தொந்தரவு செய்யும் நபர்களில் இவரும் ஒருவர். நீண்ட நாட்கள் நட்பில் இருந்தாலும், அவரை நேரில் சந்தித்தது இல்லை. அருப்புக்கோட்டை போகிறோம் என்றதும், தோழரை சந்திக்க வேண்டும் என்பதில் ஆர்வமாக இருந்தேன்.

வண்டியில் வரும்போதே கைபேசியில் அழைத்து, அருப்புக்கோட்டை வருவதைச் சொன்னேன். “நிச்சயம் சந்திக்கலாம் தோழர்” என்று உற்சாகமாகச் சொன்னார். ஆனால் நாங்கள் கோயிலுக்கு வருவதற்கு இரவு ஒன்பதரை மணி ஆகிவிட்டது. “இரவு நேரத்தில் தோழரைத் தொந்தரவு செய்கிறோமோ” என்று சங்கடமாக இருந்தது. ஆனால் அவரை நேரில் சந்திக்கும் ஆவலும் இருந்தது. மறுபடியும் அழைத்தேன். அடுத்த 10 நிமிடத்தில் கோயில் பக்கம் வந்துவிட்டார்.

கீற்றிற்கு அவர் செய்த உதவிகளுக்கு நேரில் நன்றி சொன்னேன். தமிழில் மென்பொருள் உருவாக்கம் தொடர்பான திட்டங்கள் குறித்து தோழர் விளக்கினார். இரவு நேரம் என்பதால் அதிக நேரம் பேச முடியவில்லை. இன்னொரு நாள் சந்திக்கலாம் என்று விடைபெற்றோம்.

***

உடலுக்கு மயிர் பிடுங்கும் வேலையில் சரவணன் மும்முரமாக இருந்தான். மார்கழி மாதக் குளிரிலும் அவனுக்கு வியர்த்திருந்தது. நிறைய தேங்காய் உரசி, குரு சாமியிடம் ‘வெரி குட்’ வாங்கும் முனைப்பில் இருந்தான். நானும் ஒரு தேங்காய் உரசிக் கொடுத்தேன்.

saravanan with cocunut

(உரசிய தேங்காயுடன் சரவணன்)

11.30 மணிக்கு அங்கிருந்து விடைபெற்று ஊருக்குக் கிளம்பினோம். முன்னதாக இரண்டு பேரின் பயணச் செலவுக்கான பணத்தை, குழு பொருளாளரிடம் கொடுத்தோம்.

***

முதலில் பொங்கலுக்கு அடுத்த நாள் சபரிமலைக்கு கிளம்புவதாக இருந்தது. பின்னர் அதை பொங்கல் அன்று மாற்றினார்கள்.

பொங்கலை சிறப்பிக்க ஓடைப்பட்டி கிராமத்திற்கு நானும், ஹேமாவும் சென்றோம். பொங்கல் விழா என்றால் கிராமத்தில் கொண்டாடுவதுதான் எனக்குப் பிடிக்கும். அங்கேதான் வீட்டின்முன்னே, சூரியன் உதிக்கும்வேளையில் பொங்கல் வைப்பார்கள். கோவில்பட்டி போன்ற சிறுநகரங்களில் கூட பொங்கலை வீட்டினுள்ளே கேஸ் அடுப்பில்தான் வைக்கிறார்கள்.

தென்பகுதி கிராமங்களில் பொங்கல் என்றால், அவ்வளவு உற்சாகமிருக்கும். காலை சாப்பாடிற்கே ஆறுவகை கூட்டுப் பொரியல்களுடன், சாம்பார், காரக் குழம்பு, ரசம் என்று வைப்பார்கள். சில வீடுகளில் ஒன்பது வகை பொரியல்கூட இருக்கும். கிராமங்களில் ஒரு வகை பொரியலுடன் சாப்பிடுவதே மற்ற நாட்களில் அதிசயமாக இருக்கும்போது, ஒரே நாளில் இத்தனை வகை பொரியல்கள் என்றால் கொண்டாட்டமாக இருக்காதா?

இந்த ஆண்டு ஓடைப்பட்டியிலும் அப்படித்தான் இருந்தது. காலை 7  மணிக்கெல்லாம் பொங்கல் வைத்து, 7 வகை கூட்டுப் பொரியல்களுடன் விருந்துச் சோறு சாப்பிட்டோம். ஆம், காலையிலேயே சோறுதான். (எனது 20 வயது வரைக்கும் வீட்டில் மூன்று வேளையும் சோறுதான். என்றாவது சில நாட்கள்தான் இட்லி, தோசை இருக்கும். காலையில் சோறு, குழம்பு ஆக்கினால், இரவு வரை அதுதான். சில நாட்களில் மட்டும் இரவு புதிதாக சோறு வடிப்பார்கள். காலையில் இட்லி, சட்னி, மதியம் சோறு, குழம்பு, இரவு தோசை, சட்னி என்று 3 வேளையும் விதவிதமாக சமைக்க, கிராமத்துப் பெண்களுக்கு நேரம் இருப்பதில்லை. சோறு, குழம்பு, தயிர் தொட்டுக்கொள்ள ஊறுகாய், மோர் மிளகாய் வத்தல் அல்லது சேவு – இவைதான் எப்போதுமான மெனு கார்ட். அதனால் பொங்கலன்று இத்தனை வகைகளுடன் சாப்பிடுவது கொண்டாட்டமாக இருக்கும்.)

சோற்றை ஒரு வெட்டு வெட்டிவிட்டு, கிறக்கமாக நாற்காலியில் சாய்ந்தபோது, சரவணனிடம் இருந்து அழைப்பு வந்தது.

அவன் விடியற்காலையில் நான்கு மணிக்கெல்லாம் சுப்பையாபுரத்திலிருந்து கிளம்பி, இருமுடி கட்ட அருப்புக்கோட்டை சென்றுவிட்டான்.

“மதியம் ஒரு மணிக்கு சபரிமலைக்கு கிளம்புகிறோம். 11 மணிக்கெல்லாம் அருப்புக்கோட்டை வந்துவிடு” என்று சொல்லி அழைப்பைத் துண்டித்துவிட்டான்.

‘என்னடா இது? என்னை நம்பி, மாமியார் வேறு 9 வகை கூட்டு, பொரியல் பண்ணியிருக்கிறார்கள். அதை மதியத்திற்கு காலி செய்யலாம் என்று நினைத்திருந்தால், அய்யப்பன் அதில் வேட்டு வைத்துவிட்டார். பொங்கல் அன்றைக்கு நிம்மதியாக சாப்பிடக்கூட விடமாட்டேன்கிறார்களே’ என்று நொந்தபடி கோவில்பட்டி கிளம்பினேன். அங்குதான் துணிமணிகள் இருக்கின்றன. அவற்றை மூட்டை கட்டி, கோவில்பட்டியிலிருந்து அருப்புக்கோட்டை செல்ல வேண்டும்.

***

என் மாமியார் பழுத்த ஆத்திகவாதி. அமாவாசை, பிரதோசம், கிருத்திகை என அத்தனையும் பார்ப்பவர். திங்கள்கிழமை பிள்ளையார் கோயில், செவ்வாய்க்கிழமை செண்பகவல்லியம்மன் கோயில் என தினசரி அட்டவணை போட்டு, கோயில்களுக்குப் போய் வருபவர். கடைசிப் பையனுக்கு மூன்றாண்டுகள் கல்யாணம் தள்ளிப் போனதில், இவர் பண்ணிய பூஜை, புனஸ்காரங்களையும், வேண்டுதல்களையும் தாங்க முடியாமல், கோவில்பட்டியில் குடியிருந்த பல தெய்வங்கள் அந்த ஊரைவிட்டே ஓடிவிட்டதாக கேள்விப்பட்டேன்.

நான் சபரிமலைக்குப் போவதில் அநியாயத்திற்கு சந்தோஷப்பட்டவர்களில் இவரும் ஒருவர்.

“எல்லோருக்கும் சேர்த்து நல்லா அய்யப்பனிடம் வேண்டிக்கிட்டு வாங்க” என்று சொன்னார்.

“நாளை மறுநாள் அய்யப்பனைப் பார்த்துருவேன். அன்னைக்கு ராத்திரி வீட்டிலே காசு, பணம் கொட்டப் போவுது. மூணு, நாலு சாக்குப் பைகளைத் தயாரா வச்சிருந்து, எல்லாத்தையும் கட்டி பத்திரப்படுத்துங்க..” என்று பதில் சொல்லிவிட்டு, அருப்புக்கோட்டை கிளம்பினேன்.

***

கோவில்பட்டி – அருப்புக்கோட்டை பேருந்து பயணம் ஒரு மணி நேரம்தான். அருப்புக்கோட்டை பேருந்து நிலையத்தில் இருந்து கோயிலுக்கு என்னை அழைத்துச் செல்வதற்கு ஆள் அனுப்பியிருந்தான் சரவணன்.

கோயிலில் இருமுடி கட்டும் வேலை நடந்து கொண்டிருந்தது.

“இருமுடியில் என்ன இருக்கும்?” என்று சீனியர் சாமி ஒருவரிடம் பேச்சு கொடுத்தேன்.

“இரண்டு அறைகள் (இரண்டு கட்டு) கொண்ட நீளமான பை ஒன்றைத் தயார் செய்ய வேண்டும். முன்கட்டில் பூஜை சாமான்களையும், பின்கட்டில் பயணத்தின்போது தேவையான அரிசி போன்ற உணவுப் பண்டங்களையும் கட்ட வேண்டும். இதுதான் இருமுடி. இறை, இரை ஆகிய இரண்டும் இணைந்ததே வாழ்க்கைப் பயணம் என்பதை உணர்த்துவதே இருமுடி.

நெய்த் தேங்காய், காணிப் பொன்னு, மஞ்சள்பொடி, அரிசி, நல்ல மிளகு போன்றவற்றை முன் கட்டில் கட்ட வேண்டும். இப்போது சபரிமலை செல்பவர்கள் உணவுப் பொருட்களைத் தனியே கொண்டு சென்றுவிடுவதால், பின்கட்டிலும் பூஜைப் பொருட்களையே வைத்துக் கொள்கிறார்கள். 18ம் படியில் உடைப்பதற்கான தேங்காய், கற்பூரம், ஊதுபத்தி, விபூதி போன்றவற்றை பின் கட்டில் நிரப்பிக் கொள்ள வேண்டும்.

சபரிமலைக்கு கிளம்புகிற நாளன்று இருமுடி கட்டுவார்கள். குரு சாமிதான் இருமுடி கட்டுவார். கன்னிமூல கணபதியை வணங்கிவிட்டு இருமுடி கட்டும் வேலை தொடங்கப்படும். பெரும்பாலும் கோயில் அல்லது குரு சாமியின் வீட்டில் இவ்வேலை நடைபெறும். ஒவ்வொருவருக்கும் தனித்தனியாக பூஜை செய்து, இருமுடி கட்ட வேண்டும். முதலில் முன் கட்டும், அடுத்து பின் கட்டும் கட்ட வேண்டும். அடுத்து இரண்டையும் சேர்த்துக் கட்டி, அதன் மீது குரு தட்சணைக்கான வெற்றிலை வைக்க வேண்டும். ஒவ்வொரு சாமியும் குரு சாமிக்கு தட்சணைப் பணமும் கொடுப்பார்கள்.

இடுப்பிலும், தலையிலும் துண்டு கட்டி, அதன்மீது போர்வை வைத்து, சரண கோஷம் முழங்க சாமிகளின் தலையில் இருமுடியை குரு சாமி வைப்பார். அதன்பிறகு மூன்று முறை கோயிலைச் சுற்றி, திரும்பிப் பார்க்காமல் சபரிமலை பயணத்தைத் தொடங்க வேண்டும். வழியில் எங்கும் இருமுடியை கீழே இறக்கக் கூடாது. அப்படி இறக்குவதாக இருந்தால், குரு சாமி அல்லது மூத்த சாமிகள் கையால் இறக்கி, போர்வைமீதே வைக்க வேண்டும்; தரையில் வைக்கக்கூடாது. இப்போது எல்லோரும் கார் அல்லது வேன்களில் செல்வதால், இருமுடியை வண்டி வரைக்கும் கொண்டு வந்து, வண்டியில் போர்வை விரித்து வைத்து விடுகிறார்கள்.” என்று விளக்கமாகச் சொன்னார்.

நாங்கள் போன குழுவில் ஏறக்குறைய 80 சாமிகள் இருந்தார்கள். ஒவ்வொருவரையும் குரு சாமி அழைத்து, மேற்சொன்னவற்றை எல்லாம் செய்தார். ஒவ்வொருவருக்கும் குறைந்தது 10 அல்லது 15 நிமிடங்கள் ஆனது. அதிகாலை 4 மணியிலிருந்து மதியம் 1 மணி வரை இது நடந்தது.

பின்னர் பயணம் சிறக்க, அன்னதானம் வழங்கினார்கள். சாமிகளை வழியனுப்ப உறவினர்கள், நண்பர்கள் வந்திருந்தார்கள். அன்னதானத்தில் பெரும்பாலும் அவர்கள்தான் சாப்பிட்டார்கள். என்னுடைய மதிய சாப்பாடும் அதில்தான் கழிந்தது. சரவணன் கன்னிசாமி என்பதால், அவனது உறவினர்கள் அனைவரும் அருப்புக்கோட்டை வந்திருந்தார்கள். எல்லோரும் அடுத்த ஆண்டு நான் மாலை அணிந்து, விரதமிருந்து செல்ல வேண்டும் என்று அறிவுறுத்தினார்கள்.

மொத்தம் 4 வேன்கள். ஒவ்வொரு வேனிலும் யார், யார் செல்கிறார்கள் என்று பெயர்ப் பட்டியல் ஒட்டியிருந்தார்கள். ஒவ்வொரு வேனிற்கும் பொறுப்பாளர் ஒருவரை நியமித்திருந்தார்கள். பயணத்தின்போது சாப்பிடத் தேவையான உணவுப்பொருட்களையும், சமைப்பதற்கு இரண்டு சமையல்காரர்களையும் உடன் ஏற்றிக் கொண்டார்கள்.

உறவினர்கள், தங்களது சாமிகளின் கால்களில் விழுந்து ஆசிர்வாதம் வாங்கிக் கொண்டு, பயணச் செலவுக்குப் பணம் கொடுத்தார்கள். பிற்பகல் 2.30 மணியளவில் வண்டிகள் முன்பு, குரு சாமி பூஜை செய்து, பயணத்தைத் தொடங்கி வைத்தார்.

வித்தியாசமான ஒரு பயண அனுபவம் காத்திருந்தது. முதல் நாள் பயணத்திலேயே அய்யப்பனின் பிரம்மச்சரியம் குறித்து அதிர்ச்சிகரமான ஒரு செய்தி எனக்குக் கிடைத்தது.

(தொடரும்)

- கீற்று நந்தன் (இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.)

Pin It

‘எல்லோரும் கோயிலில் மணி ஆட்டலாம்’ என்று காஞ்சி சங்கராச்சாரி சொன்னால் எப்படி ஓர் ஆச்சரியம் வருமோ, அப்படித்தான் ‘மாலை போட்டிருக்கேன்’ என்று சரவணன் சொன்னபோது, எனக்கும் வந்தது.

சிவப்பு எறும்புகள் எல்லாம் கருணாநிதி, கறுப்பு எறும்புகள் எல்லாம் எம்.ஜி.ஆர். என்று நம்பிக் கொண்டிருந்த பால்ய காலம் தொட்டே நானும் சரவணனும் நண்பர்கள். ஏறக்குறைய 30 ஆண்டுகால நட்பு. நான் அரைக்கிளாஸ் (எங்க ஊர் Pre KG) படித்தபோது, அவன் ஒண்ணாப்பு. நாங்கள் வளர்ந்தது தென் தமிழகத்தில் கோவில்பட்டிக்கு அருகில் இருக்கும் சுப்பையாபுரம் என்ற கிராமத்தில்.

நான் 10 வயதில் இருந்தே கடவுள் நம்பிக்கை அற்றவன். ‘தீபாவளிக்கு அன்னைக்கு மட்டும் ஏன் தலைக்கு எண்ணெய் தேய்ச்சிக் குளிக்கணும். நாளைக்கு எண்ணெய் தேய்ச்சி குளிச்சா ஆகாதா?’ என்று எதிர்க்கேள்வி கேட்பவன். பெற்றோர்கள், ஊர்ப் பெரியவர்கள் யார் பேச்சையும் அப்படியே கேட்காதவன்; எதிர்க்கேள்விகள் கேட்கும் அதிகப் பிரசங்கி. ஆனால் நன்றாகப் படிப்பவன். ஊரார் பார்வையில், அது ஒன்று மட்டுமே என்னிடம் இருந்த நல்ல அம்சம்.

சரவணன் எனக்கு நேரெதிரான குணம் உடையவன். தண்ணீர் போன்றவன். எந்தப் பாத்திரத்தில் ஊற்றுகிறோமோ அந்த வடிவத்தில் இருப்பவன். குடும்பத்தினர் சாமி கும்பிட கூப்பிட்டாலும் போவான்; 'கோயிலுக்கு வேணாம்; சினிமாவுக்குப் போகலாம்' என்றாலும் வருவான். படிக்கும்போதே தீப்பெட்டி ஆபீஸ் வேலைக்குப் போய் வீட்டில் நல்ல பேரும் வாங்குவான்; என்னோடு சேர்ந்து கிரிக்கெட் விளையாடி கெட்ட பேரும் வாங்குவான். மனிதர்களை வகை பிரித்துப் பார்க்காதவன். எல்லோருடனும் அவனால் அன்பாகப் பழக முடியும். ஒவ்வொரு மனிதருக்கும் ஏதேனும் ஒரு நல்ல குணம், ஏதேனும் ஒரு விருப்பு வெறுப்பு இருக்குமல்லவா? அது போதும் சரவணனுக்கு, அவர்களுடன் சிரித்துப் பேசவும், அவர்களுடன் நட்பு கொள்ளவும். ஆளுக்குத் தகுந்தாற்போல் நடந்துகொள்கிறானா என்றால் அதுவும் கிடையாது, அவனது இயல்பே அதுதான். அவனால் பேசுவதற்கும், பழகுவதற்கும் ஆட்கள் இல்லாமல் இருக்க முடியாது. அவனது உயிர் நண்பர்கள் நானும், தர்மாவும் (தர்மாவைப் பற்றி எனது துபாய் பயண அனுபவத்தில் எழுதுகிறேன்) என்றாலும்கூட, அதையும் தாண்டி அவனுக்கு எப்போதும் மிகப் பெரிய நண்பர்கள் வட்டம் இருக்கும்.

என்னுடனான நட்பு சரவணனுக்கு எப்போதும் தொல்லையானதுதான். எனது வீட்டில் நான் செல்லப்பிள்ளை. நன்றாகப் படித்தால் போதும், வீட்டில் எந்த வேலையும் சொல்ல மாட்டார்கள். ஆனால் சரவணன் வீட்டில் அப்படி இல்லை. தீப்பெட்டி ஆபிஸ், காட்டு வேலைக்குப் போக வேண்டியவனை விளையாட இழுத்துப் போய்விடுவேன். அந்தக் கிராமத்தில் கிரிக்கெட் விளையாட 11 பேர் சேர்ப்பதற்குள் போதும் போதுமென்றாகி விடும். டீம் கேப்டன் என்ற முறையில் ஆள் கணக்கிற்கு சரவணனையும் அழைத்துப் போய் விடுவேன். விளையாடிவிட்டு வந்து, வீட்டில் திட்டு வாங்குவான். ஊரில் ஏதேனும் நல்லது, கெட்டது என்றால், கோவில்பட்டியிலிருந்து வீடியோ, VCR வரவழைத்து சினிமாப் படம் போடுவார்கள். துணைக்கு சரவணனையும் அழைத்துப் போவேன். 4 படம் பார்த்துவிட்டு விடியற்காலையில் போனால், சரவணனுக்கு வீட்டில் பூசை காத்திருக்கும். எனது விடலைப் பருவ காதலுக்கு எத்தனையோ எதிர்ப்புகள் இருந்தபோதும், எதைப் பற்றியும் கவலைப்படாது தூது போனவன் சரவணன்.

பள்ளிப் படிப்பிற்குப் பின் டிப்ளமோ முடித்து, பெங்களூருக்கு வேலைக்குப் போனான். நான் BE படித்து, வேலை தேட பெங்களூரு போனபோது, எனது செலவுகள் அனைத்தையும் அவனே பார்த்துக் கொண்டான். நாங்கள் சேர்ந்து சுற்றும்போது, அனைத்து முடிவுகளையும் என் விருப்பத்திற்கே விட்டுவிடுவான். என் வாழ்வின் முக்கிய தருணங்கள் அனைத்திலும் என்னுடன் இருந்திருக்கிறான். எனக்காக அனைத்தையும் விட்டுக் கொடுப்பான். அவன் மனம் நோகும்படி நான் பலமுறை நடந்ததுண்டு. ஆனால் என் மனம் நோக ஒருநாளும் அவன் நடந்தானில்லை.

கடவுள் என்ற ஒன்றைப் பற்றி எந்த தீவிர யோசனையோ, கவலையோ இல்லாதிருந்தவன், திடீரென்று ‘அய்யப்பனுக்கு மாலை போட்டிருக்கேன்’ என்று சொன்னபோது, எனக்கு ஆச்சரியமாய் இருந்தது.

கடவுள் நம்பிக்கை குறித்து எப்போதும் கேலி, கிண்டலுமாக இருக்கும் எனக்கு, ‘என்னுடைய பெண்குழந்தையின் கால் மற்ற குழந்தைகளைப் போல நேராக வேண்டும் என்று வேண்டி, மாலை போட்டிருக்கேன்’ என்று காரணம் சொன்னபோது, அவனிடம் பகுத்தறிவு பேச எனக்கு மனம் வரவில்லை. சரியோ, தவறோ... இந்த நம்பிக்கை பொய்யானது என்று எப்படி சொல்ல முடியும்?

***

ஊர் சுற்றுவதின் மீதான ஆர்வம் எனக்கு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. வாராவாரம் எங்கேயாவது ஒரு புது இடத்திற்குப் போக வேண்டும் என்ற ஆவல் என்னை விடாது எங்கேயாவது துரத்திக் கொண்டே இருக்கிறது. அப்படித்தான் சரவணன் சபரிமலைக்குப் போகிறேன் என்று சொன்னபோது, எந்தத் தயக்கமுமின்றி உடனடியாக 'நானும் வருகிறேன்' என்று அவனிடம் சொன்னேன். இந்த வாய்ப்பில் சபரிமலைப் பகுதிகளைச் சுற்றிப் பார்த்து விடலாம் அல்லவா?

அவனும் மிகவும் மகிழ்ச்சியுடன், ‘குரு சாமி’யிடம் கேட்டுவிட்டுச் சொல்வதாகக் கூறினான். 'பதினெட்டுப் படி ஏற வேண்டும் என்றால், ஒரு மண்டலம் விரதம் இருக்க வேண்டும். மாலை போடாமல் வெறுமனே சபரிமலைக்கு வருவதாக இருந்தால், ஒரு வாரம் விரதம் இருந்தால் போதும்’ என்று ‘குரு சாமி’ சொன்னதாக சரவணன் சொன்னான். விரதம் என்றால் காலையில் இரண்டு இட்டிலி, பால் அல்லது பழச்சாறு; மதியம் மூன்று மணிக்கு வடை, பாயசம், மூன்று வகை கூட்டுப் பொறியலுடன், சாம்பார், இரசம் என விருந்து சாப்பிடுவது. இரவு வழக்கம்போல் சாப்பிடுவது. அட, ரொம்ப எளிதாக இருக்கிறதே என்று நானும் ஒத்துக் கொண்டேன்.

ஆனாலும் மதிய சாப்பாடு மட்டும் கொஞ்சம் இடித்தது. அலுவலகத்தில் நண்பர்கள் எல்லாம் ஒரு மணிக்கு சாப்பிடப் போவோம். மூன்று மணிக்கு என்றால் நான் தனியாகப் போய் சாப்பிட வேண்டும். பிரச்சினையை அய்யப்பனிடமே கொண்டு போய்விடலாம் என்று முடிவெடுத்தேன். ‘அய்யப்பா... மூன்று மணிக்குத்தான் நான் சாப்பிட வேண்டும் என்றால், அதற்கு அறிகுறியாக லஞ்ச் பாக்ஸில் ஒரு வடையை வைத்துவிடு; ஒரு மணி என்றால் வடையை வைக்க வேண்டாம்’ என்று சொல்லிவிட்டு, வேலையைப் பார்க்க ஆரம்பித்தேன். என்ன ஆச்சரியம்! வடை இல்லை. தனியாக நான் சாப்பிடுவதை அய்யப்பன் விரும்பவில்லை போலும். என்ன இருந்தாலும், god is great இல்லையா?!

தைப் பொங்கல் தினத்தன்று அருப்புக்கோட்டையிலிருந்து செல்லும் அய்யப்ப பக்தர்களுடன் சேர்ந்து நானும், சரவணனும் சபரிமலைக்குச் செல்வதாகத் திட்டம். நான்கு நாட்கள் பயணச் செலவுக்கு ‘சாமி’ ஒருவருக்கு ரூ.2700; ‘மாலை போடாத சாமி’ என்பதால் எனக்கு ரூ.2400 மட்டுமே.

ஜனவரி 13, 2015ம் தேதி காலையில் நான், ஹேமா, அம்மா மூவரும் கோவில்பட்டிக்குக் கிளம்பினோம். செல்லும் வழியில் கல்லணை பார்த்துவிட்டு, 4 மணிக்கு கோவில்பட்டி சென்றடைந்தோம். ‘கன்னிசாமி’யிடம் இருந்து உடனே அழைப்பு வந்தது. குளித்துவிட்டு ‘சாமி’ தரிசனத்துக்குச் சென்றேன். மார்க்கெட்டிங் துறையில் இருப்பதால், எப்போதும் மழித்த முகத்துடன் இருக்கும் சரவணன், தற்போது 60 நாட்கள் தாடியில் இருந்தான். வீட்டில் அவனது பெற்றோர், ‘சாமி மிகவும் பக்தியாக இருக்கிறார்; விரதத்தைக் கடுமையாக கடைபிடிக்கிறார்’ என்று சொன்னார்கள். எனக்கு குழப்பமாகிவிட்டது. நான் ‘சரவணன்’ என்று சொல்வதா? அல்லது ‘சரவணர்’ என்று சொல்வதா?

தனது கன்னிசாமி அனுபவங்களை சரவணன் சொன்னபோது, சபரிமலைக்குச் செல்லும் விதிமுறைகளில் பலவற்றை அய்யப்பன் தளர்த்தியிருப்பது தெரிந்தது. எனது அப்பாவுக்குத் தெரிந்த ஓர் அய்யப்ப பக்தர் கடைபிடித்த விரதமுறைகளைப் பற்றி அப்பா சொல்லக் கேட்டிருக்கிறேன். மாடியில் தனக்கு ஒரு குடிசை போட்டு, அதில்தான் குடியிருப்பார். செருப்பு அணிய மாட்டார்; வண்ணத்துணிகள் உடுத்த மாட்டார்; பெண்களை தனது மாடி அறைப் பக்கம் நடமாடக்கூட அனுமதிக்க மாட்டார்; பெண்கள் பயன்படுத்திய பாத்திரங்களைப் பயன்படுத்த மாட்டார்; தனிப் பாத்திரத்தில் அவரே சமைத்து, சாப்பிட்டுக் கொள்வார்; அவரது துணிகளை அவரேதான் துவைத்துக் கொள்வார்; தினமும் இருமுறை அறையை சுத்தம் செய்வார்; தரையில்தான் படுப்பார்; தினமும் அதிகாலை 4 மணிக்கு எழுந்து, மார்கழி மாதக் குளிரில் பச்சைத் தண்ணீரில் குளித்துவிட்டு, பக்திப் பாடல்கள் பாடுவார்; சிகரெட், பீடி, சாராயம் எதுவும் எடுத்துக் கொள்ள மாட்டார்; கடும் பிரம்மச்சர்ய விரதம் இருப்பார்.

இப்போது நிறைய மாறியிருக்கிறது. IT நிறுவன சாமிகள் வண்ண உடைகளில்தான் அலுவலகம் வருகிறார்கள். சில சாமிகள் செருப்பும் அணிகிறார்கள். பெண்கள் சமைப்பதை தள்ளி வைப்பதில்லை. சில சாமிகள் கேண்டீன் சாப்பாடுகூட சாப்பிடுகிறார்கள். துவைப்பது, சுத்தம் செய்வது எல்லாம் வழக்கம்போல் பெண்கள் கையில்தான். தாம்பத்திய உறவை மட்டும் தவிர்க்க முடிந்தால், அய்யப்ப சாமியாக இருப்பது மிகவும் எளிது; பல வகையில் உபயோகமானதும்கூட. வீட்டில் கூடுதல் மரியாதை கிடைக்கிறது. அதுவரைக்கும் ஒரு மனிதனாகக்கூட மதிக்காதவர்கள் எல்லாம், ‘சாமி’ என்று அழைக்கிறார்கள். சாதாரண சாப்பாடு,  விரதச் சாப்பாடாக மாறி ஒரு விருந்து போல் தினமும் நடக்கிறது. அய்யப்பனுக்குப் பயந்து அலுவலகத்தில்கூட யாரும் ‘சாமி’யைத் திட்டுவதில்லை. நமக்கே அடுத்த வருடம் ஒரு மாலையைப் போட்டுறலாமா என்று தோன்றுகிறது.

பேசிக் கொண்டிருக்கும்போதே, ‘குரு சாமி’யின் துணைச்சாமியிடம் இருந்து அழைப்பு வந்தது. மலைக்குப் போவதற்கான முன்னேற்பாடுகளில் ஒன்றான ‘தேங்காய் உரச’ வரச் சொன்னார்கள். இது கன்னிசாமிகள் கட்டாயம் செய்ய வேண்டிய வேலை; தவறாமல் கலந்து கொள்ள வேண்டும் என்று துணைச்சாமி சொன்னார். துணைச்சாமி இரவி, சரவணனின் தாய்மாமா. அவர்தான் அருப்புக்கோட்டை குழுவில் சரவணனைச் சேர்த்தது.

சபரிமலைக்கு செல்வதற்கு ஒவ்வொரு ஊரிலும் பல குழுக்கள் இருக்கின்றன. சாதிவாரியாகவும், குடும்பவாரியாகவும் குழுக்கள் இருக்கும். சாதிவாரியான குழுக்களில் பிற சாதியினர் ஒன்றிரண்டு பேர் சேர்ந்து கொள்ளலாம். குடும்பவாரியானது என்றால் ஒரு குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் அதே குடும்பத்து குருசாமியுடன் செல்வது. இதில் பெரும்பாலும் மற்றவர்களுக்கு அனுமதி இருக்காது. நாங்கள் சென்றது நாடார் உறவின்முறைக்கு உட்பட்ட குழு. அருப்புக்கோட்டையிலே மிகவும் பக்தியான, கட்டுப்பாடான குழு என்பதால், கன்னிசாமியையும் இதிலேயே இரவி மாமா சேர்த்துவிட்டார். அவர் இதே குழுவுடன் 7 முறை சபரிமலைக்குச் சென்றிருக்கிறார். 17 ஆண்டுகள் ஒருவர் சபரிமலைக்குச் சென்றுவிட்டால், அவர் குரு சாமியாக மாறலாம். அதன்பின் தனது தலைமையில் ஒரு குழுவை அவர் சபரிமலைக்கு அழைத்துச் செல்லலாம்.

தேங்காய் உரச அருப்புக்கோட்டை செல்கிறோம் என்று பெரியம்மாவிடம் (சரவணனின் அம்மா) சொன்னோம். பெரியம்மாவிற்கு நானும் சபரிமலை செல்வதில் ஒரே மகிழ்ச்சி. சின்ன வயதில் இருந்து ஊதாரித்தனமாக இருந்த பிள்ளை, வேலைக்குச் செல்கிறேன் என்று சொன்னால் வீட்டில் எந்தளவுக்கு மகிழ்ச்சியடைவார்களோ, அதேபோன்ற மகிழ்ச்சி அவர்களுக்கு. ‘சின்ன வயசுலே இருந்து சாமியே கும்பிட மாட்டேன்னு இருந்தே.. இப்போது சபரிமலைக்கு செல்ல ஆரம்பிச்சுட்டே. அடுத்த வருஷம் நீயும் மாலை போட்டுக்கிட்டு போக ஆரம்பிச்சுருவே’ என்று நம்பிக்கையாகச் சொன்னார்கள்.

‘இந்த பூமியில் இருப்பது அறுபதோ, எழுபதோ ஆண்டுகள். அதில் திடகாத்திரமாக ஊர் சுற்றும் உடலுடனும், வசதியுடனும் இருப்பது 30 ஆண்டுகள். அந்த 30 ஆண்டுகளிலும், தினம் ஒரு இடம் என்று போனால்கூட பூமியில் பார்க்க வேண்டிய இடங்கள் இன்னும் மிச்சமிருக்கும். இப்போது இருக்கிற விஞ்ஞான வளர்ச்சியில் சந்திரன், செவ்வாய் கிரகமெல்லாம் போய் பார்த்துவர பணக்கார கும்பல் திட்டமிட்டுக் கொண்டு இருக்கிறது. அப்படி இருக்கும்போது, ஒரு முறை போன இடத்துக்கு மறுபடியும் சென்று நமது நேரத்தையும், பணத்தையும் வீணடிப்பது சரியல்ல’ என்பதைப் பெரியம்மாவிடம் எப்படி விளக்கிச் சொல்வேன்?

லேசாக புன்னகைத்துவிட்டு அருப்புக்கோட்டை கிளம்பினோம். அருப்புக்கோட்டையில் நாடார் உறவின்முறைக்குப் பாத்தியப்பட்ட சிவன் கோயில் ஒன்று இருக்கிறது. அதில்தான் எங்களது குழுவிற்கான மாலை போடுவது, தினசரி பஜனை, இருமுடி கட்டுவது எல்லாம் நடைபெற்றன. அங்குதான் தேங்காய் உரசுவதும் நடைபெற இருந்தது.

அதுசரி, தேங்காய் உரசுவது என்றால் என்ன என்று கேட்கிறீர்களா?

(தொடரும்)

- கீற்று நந்தன்

Pin It

sothuparai

தேனி மாவட்டம் இயற்கையிலேயே பசுமையும், அணைகளும், ஆறுகளும், ஏரிகளும் நிறைந்த மாவட்டம். இம்மாவட்டத்தில் வைகை அணை, மஞ்சளார் அணை, சோத்துப்பாறை அணை, பச்சிலைநாச்சியம்மன் அணை உள்ளிட்ட பல அணைகளும், சுருளி அருவி, கும்பக்கரை அருவி, மேகமலை அருவி, எலிவால் அருவி என பல அருவிகளும் உள்ளன‌. இம்மாவட்டத்தின் மற்றுமொரு சிறப்பு தமிழகத்திலேயே இரண்டாவது பெரிய சந்தை தேனி சந்தை ஆகும். இதுபோல தமிழகத்தின் இரண்டாவது உயரமான அணை சோத்துப்பாறை அணையாகும்.

சோத்துப்பாறை பெயர் வரக் காரணம்

பண்டைய காலத்தில் சோத்துப்பாறையில் மழை பொழியாவிட்டால் 12 கலம் நெல்லைக் குத்தி அனைவருக்கும் பொதுவாக அன்னதானம் வழங்குவார்களாம். பிரார்த்தனைக்குப் பிறகு வாழை இலை போடாமலேயே பாறையைக் கழுவி உணவு படைப்பார்களாம். பாயாசம் சாப்பிட்டவுடன் மழை கொட்டுமாம். இப்படியொரு மூடநம்பிக்கையின் காரணமாகவே சோத்துப்பாறை எனப் பெயர் வந்தது.

பேரீஜம் ஏரி

மேற்கு மலைத் தொடர்ச்சியில் அமைந்துள்ள பழனிமலைத்தொடரில் அமைந்துள்ளது பேரீஜம் ஏரி. இந்த ஏரிதான் சோத்துப்பாறை அணைக்கு நீர் ஆதாரமாக விளங்குகிறது. மேற்குமலைத் தொடர்ச்சியில் இருந்து 2090 மீட்டர் அடி உயரத்தில் பழநிமலையில் உற்பத்தியாகி, கிழக்குச் சரிவின் வழியாக சுமார் 28 கிலோ மீட்டர் தூரம் ஓடிவந்து ஆறாக வருகிறது. அந்த ஆற்றிற்கு வராகநதி என்று பெயர் வைத்துள்ளனர்.

sothuparai

கி.பி.1891 ஆம் ஆண்டு சுகாதாரப் பொறியாளராக பணியாற்றிய ஜோன்ஸ் என்பவரால் பெரியகுளம் நகருக்குத் தேவையான குடிநீர்திட்டம் ஒன்றை ரூ.1,25,000 மதிப்பீட்டில் தயார் செய்து மதராஸ் கவர்மெண்டிற்கு அனுப்பினார். கி.பி.1895 ஆம் ஆண்டு மேற்குமலைத் தொடர்ச்சியில் அமைந்துள்ள பேரீஜம் ஏரியிலிருந்து தண்ணீரை பெரியகுளத்திற்கு கொண்டு வருவதற்கு அன்றைய ஜமீன்தார் திவான் பகதூர் வெங்கிட்ட ராமபத்ர நாயுடு நடவடிக்கை மேற்கொண்டார். சுமார் 65 கிலோ மீட்டர் தூரத்திலிருந்து குழாய்த்தொட்டி என்ற இடத்திற்கு தண்ணீர் கொண்டு வரப்பட்டது

சோத்துப்பாறை அணை

இரண்டு உயர்ந்த மலைகளுகளுக்கிடையே வருகின்ற ஆற்றை மறித்து அணைக்கட்டும் திட்டம் உருவானது. சோத்துப்பாறை அணைத்திட்டத்திற்குத் தேவையான நிலங்கள் 1982 ஆம் ஆண்டு கையகப்படுத்தப்பட்டது. கையகப்படுத்துவதில் 14.55 ஹெக்டேர் நிலம் வனப்பகுதியாக இருந்ததால் காலதாமதம் ஏற்பட்டு ஆரம்ப கால கட்டுமானப் பணிகள் 1985 ஆம் ஆண்டு துவக்கப்பட்டது. இரண்டுமலைகளுக்கு இடையே அணைக்கட்டுமானம் பணி துவங்கி 2001 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் நிறைவடைந்தது. அதன் பின்னர் 15.11.2001 ஆம் ஆண்டு மாலை 6.40 மணிக்கு முதன்முதலாக‌ அணை நிரம்பியது. 21.11.2001 ஆண்டு தேனி மாவட்ட ஆட்சியர் அதுல் ஆனந்த் முன்னிலையில் அணை திறக்கப்பட்டது.

அணையின் பின்புறம் காட்டுமாடுகள், மான்கள் உள்ளிட்ட வனவிலங்குகள் தண்ணீரை அருந்தும். இதனைப் பார்ப்பதற்கு ரம்மியமாக இருக்கும். சோத்துப்பாறை அணையின் தண்ணீர் மிகவும் சுவையாக இருக்கும். இவை தவிர அணையில் வழிந்தோடி வரும் நீரில் குளித்து மகிழலாம். மேலும் அணையிலிருந்து பார்த்தால் பெரியகுளம் நகரைக் காணலாம். கண்ணுக்கு எட்டிய வரை மாந்தோப்புகள் அதிகமாக இருக்கும். அணைக்கு மேலே டைகர் பால்ஸ் என்ற அருவி உள்ளது. அணையில் பல பூங்காக்கள் உள்ளன‌. குடும்பத்துடன் சென்றால் கட்டணமில்லாமல் கண்டு களிக்கலாம்.

அணையின் நீரியல் விபரங்கள்

sothuparai

அணையின் மொத்த நீளம் 345 மீட்டர் ஆகும். நீர்வரத்தின் பரப்பு 38.40 சதுரகிலோ மீட்டர் ஆகும். நீர்வரத்தின் முழுக்கொள்ளவு 100 மில்லியன் கன அடி. அணையின் அதிகபட்ச உயரம் 57 மீட்டர் ஆகும். அணையின் மேல்மட்ட அகலம் 7.32 மீட்டர் ஆகும். இந்த அணையினால் நன்செய் பாசனப்பரப்பு 1825 ஏக்கர், புன்செய் பாசனப்பரப்பு 1040 ஏக்கர் ஆகும். இதனால் தென்கரை, தாமரைக்குளம் உள்ளிட்ட கிராமங்கள் பயனடைகின்றன‌. இவை தவிர சோத்துப்பாறை கூட்டுக்குடிநீர் திட்டதின் மூலம் பத்துக்கும் மேற்பட்ட ஊராட்சிகளுக்கு குடிநீர் தேவை பூர்த்தியாகின்ற‌து.

எப்படிச் செல்வது?

பெரியகுளத்திலிருந்து சோத்துப்பாறை அணைக்கு செல்லும் வழியில் அரசமரத்தில் பனைமரம் வளர்ந்துள்ள அதிசயமான இடம் உள்ளது. பெரும்பாலும் அரச மரத்தில் ஆலவிதைகள் இருக்கும். ஆனால் அரசமரத்தில் இரண்டு பனைமரங்கள் வளர்ந்துள்ளதைக் காணலாம். பெரியகுளத்திலிருந்து 8 கி.மீ.தூரம் உள்ளது. பெரியகுளத்திலிருந்து அரசுப்பேருந்து உள்ளது. பெரியகுளத்திலிருந்து ஆட்டோவிலும் செல்லலாம்.

- வைகை அனிஷ்

Pin It

ஜனவரி மாத அதிகாலைக் குளிர் சில்லென்று இருந்தது. தமிழ்நாட்டில் எனக்கு மிகவும் பிடித்த மாதங்கள் நவம்பர், டிசம்பர், ஜனவரி மற்றும் பிப்ரவரி. ஏ.சி.யோ, பேன் காற்றோ தேவைப்படாது. அதேநேரத்தில் டில்லி குளிர் போல் பெருங்கம்பளிகளின் துணையும் தேவைப்படாது. சாதாரண போர்வையை மேலே போர்த்திக் கொண்டாலே அவ்வளவு சுகமாக இருக்கும்.

குளிர்காலத்தின் ரசிகன் நான். குளிர்காலங்களில் விடிகாலை 4 மணிக்கு எழுந்து, கீற்று வேலைகளைப் பார்த்துவிட்டு, மீண்டும் ஒரு அரைமணி நேரம் குட்டித் தூக்கம் போடுவது எனக்கு மிகவும் பிடிக்கும்.

kallanai cauvery

(கல்லணையிலிருந்து காவிரியில் பாயும் நீர்)

13.1.2015 அதிகாலை நான்கு மணி. நான் மடிக்கணினியில் ‘புரட்சிப் பெரியார் முழக்கம்’ கட்டுரைகளை வலையேற்றம் செய்துகொண்டிருந்தேன். அருகில் என் வாழ்விணையர் ஹேமலதா தூங்கிக் கொண்டிருந்தார். பலரை தூக்கத்தில் பார்த்தால் சகிக்காது. ஒன்று அவர்கள் தூங்கும் விதம் அல்லது தூக்கத்தில் அவர்களது முகம் – ஏதோ ஒன்று பார்ப்பவர்களை துணுக்குற வைக்கும். ஆனால், ஹேமாவிற்கு தூக்கம் எப்போதும் கூடுதல் அழகைக் கொண்டு வந்து சேர்க்கும். அப்போது மலர்ந்த மலரைப் போல் தூக்கத்தில் அவரது முகம் அதிகப் பிரகாசத்துடன் இருக்கும். வேறுபக்கம் அவர் திரும்பிப் படுத்திருந்தாலும், நான் வேலை பார்க்கும்போது மெதுவாக அவரது தலையை என்பக்கம் திருப்பி வைத்துக் கொள்வேன். 7 மணிக்கு முன்னர் எழுந்திருக்க வேண்டிய அவசியம் அவருக்கு என்றாவது ஒரு நாள்தான் வாய்க்கும். அந்த நாள் இன்று.

கோவில்பட்டியிலிருந்து சென்னைக்கும், சென்னையிலிருந்து கோவில்பட்டிக்கும் திருச்சி வழியாக பலமுறை சென்றிருந்தாலும், இதுவரை கல்லணையைப் பார்க்கும் வாய்ப்பு கிட்டவில்லை. பொங்கல் திருவிழாவிற்கு ஊருக்குச் சென்று ஏழு, எட்டு ஆண்டுகள் ஆகிவிட்டன. இந்த முறை கட்டாயம் செல்ல வேண்டும் என்று இரண்டு மாதங்களுக்கு முன்பே முடிவெடுத்திருந்தோம். அப்படியே போகும் வழியில் கல்லணையைப் பார்த்துவிட வேண்டும் என்று நினைத்திருந்தேன். காலை 5.30 மணிக்கு கிளம்புவதாகத் திட்டம்.

ஹேமாவையும், அம்மாவையும் எழுப்பினேன். அவர்கள் எழுந்து தயாராகும் நேரத்தில் மீதமிருந்த கட்டுரைகளை வலையேற்றம் செய்தேன்.

பண்டிகைக் காலங்களில் சென்னையிலிருந்து ஊருக்குச் செல்வது என்றால், தொடர்வண்டியில் பயணச்சீட்டை உறுதி செய்வது இமாலயப் பணி. முன்பதிவு தொடங்கும் நாளில், IRCTC இணையத்தில் நுழைந்து, 3 பேருக்கு பயணச்சீட்டை முன்பதிவு செய்துவிட்டால், அதை அந்த ஆண்டின் வெற்றிகரமான நாட்களில் ஒன்றாகக் கருதிக் கொள்ளலாம். ஒரு நிமிடம் தாமதித்தாலும், காத்திருப்போர் பட்டியலில் 1௦0வது இடத்திற்கு மேல் நமது பெயர் தள்ளப்படும். தெரிந்தவர்கள் மூலமாக E.Q. கொடுத்தாலும், நமது முன்பதிவு உறுதியாகுமா என்பது பயணப்படும் நாள் அன்றுதான் தெரியவரும். அது பெரிய தலைவலி.

சரி, பேருந்தில் பயணம் செய்யலாம் என்றால் அம்மாவிற்கு முதுகுவலிப் பிரச்சினை. படுக்கை வசதி கொண்ட தனியார் பேருந்தில் பயணிக்கலாம் என்றால், கட்டணக் கொள்ளை பெரும் பிரச்சினை. சாதாரண நாட்களில் சென்னை – கோவில்பட்டி பயணக் கட்டணம் 700 ரூபாய் என்றால், பண்டிகை நாட்களில் அது 1200 அல்லது 1300 ஆக உயர்ந்து விடுகிறது. தமிழக அரசின் போக்குவரத்துத் துறை தனியார் பேருந்துகளின் கட்டணக் கொள்ளையைப் பற்றி விசாரணை நடத்துவது, பண்டிகை நாட்களுக்கு ஓரிரு நாட்களுக்கு முன்னர்தான். ஆனால் அதற்கு முன்னரே தனியார் பேருந்துகள் வெளிப்படையாக ஆன்லைன் வர்த்தகத்தில் அனைத்து பயணச்சீட்டுகளையும் கொள்ளை விலைக்கு விற்றுவிடுகின்றன. IRCTC இணையத்தில் முட்டி மோதி, தோல்வி கண்டவர்களும், வேறுவழியின்றி தனியார் பேருந்துகளை நாட வேண்டியிருக்கிறது.

karikala chozhan mandapam

கல்லணை ஓரத்தில் தமிழக அரசு கட்டியுள்ள கரிகாலச் சோழன் மணிமண்டபம்

படுக்கை வசதி கொண்ட பேருந்தில் மூன்று பேர் செல்வதாக இருந்தால், 3600 ரூபாய் அல்லது 3900 ரூபாய் பயணச்சீட்டுக்கு செலவழிக்க வேண்டும். வீட்டிலிருந்து பெருங்களத்தூர் செல்ல கால் டாக்ஸிக்கு ரூ.150. கோவில்பட்டி பேருந்து நிலையத்திலிருந்து வீட்டிற்குச் செல்ல ஆட்டோவுக்கு ரூ.50. தோராயமாக ரூ.4000 ஆகிவிடும். அதேநேரத்தில் காரில் செல்வதாக இருந்தால், டீசலுக்கு 1600, டோல்கேட்டுக்கு 600 என மொத்தம் ரூ.2200 தான் ஆகிறது. போக, வர எனப் பார்த்தால் ரூ.3600 மிச்சமாகிறது.

ஹேமாவின் தம்பி வேலை நிமித்தமாக அமெரிக்கா கிளம்பியபோது, திரும்பி வரும்வரை பயன்படுத்திக் கொள்ளச் சொல்லி, அவரது காரை (மாருதி ஸ்விப்ட்) எங்களது வீட்டில் விட்டுவிட்டுச் சென்றுவிட்டார். தட்டுத் தடுமாறி கார் ஓட்ட ஆரம்பித்தது இந்த வண்டியில் தான். இருசக்கர வாகனத்தை மூலையில் நிறுத்திவிட்டு, கடந்த ஒன்றரை ஆண்டுகளாக இந்த வண்டியை ஓட்டித் திரிந்ததில், இப்போது தேர்ந்த ஓட்டுனராக விட்டேன். தொடக்கத்தில் நான் கார் ஓட்டியபோது, ஹேமா என்னைவிட விழிப்பாக இருப்பார். பைக் அல்லது லாரி ஒன்று டிராக் மாறி உரசுவது போல் வந்தால், ‘அய்யோ வண்டி’ என்று அவர் என்று கத்தும் வேகத்தில், நான் உஷாராகிறேனோ இல்லையோ, அந்த வண்டிக்காரர்கள் உஷாராகி, சரியான டிராக்கிற்கு சென்றுவிடுவார்கள். இப்போது கொஞ்சம் நம்பிக்கை வரப்பெற்றவராக, என்னை நம்பி கொஞ்சம் நேரம் தூங்கிறார். I.T. வேலை போய்விட்டால், கால்டாக்ஸி டிரைவராகி விடலாம் என்ற அளவிற்கு எனக்கும் நம்பிக்கை வந்துவிட்டது.

காலையில் 4 அல்லது 5 மணிக்குக் கிளம்பினால் போக்குவரத்து நெரிசலில் இருந்து தப்பிவிடலாம் என்று பெரும்பாலோனோர் சொல்வார்கள். ஆனால், என்றைக்கு கிளம்புகிறோம் என்பதைப் பொருத்தது அது. நாளைக்கு தைப்பொங்கல், இன்றைக்குக் கிளம்புகிறோம் என்றால், நிச்சயம் போக்குவரத்து நெரிசல் இருக்கும். நம்மைப்போலவே அதிகாலையில் கிளம்பியவர்கள் எல்லாம் GST சாலையில் அவர்களுக்கான இடத்தைப் பிடித்திருப்பார்கள். செங்கல்பட்டு தாண்டும்வரை மெதுவாகத்தான் செல்ல வேண்டி வரும். அதன்பின்பு ஓரளவு வேகமாக செல்ல முடிந்தாலும், ஒவ்வொரு டோல்கேட்டிலும் நீண்ட நேரம் காத்திருக்க வேண்டும். 15 நிமிடம் வரை டோல்கேட்டில் காத்திருந்த அனுபவமும் உண்டு. சென்னையில் இருக்கும் கார்கள் எல்லாம் சொந்த ஊர்களுக்கு கிளம்பியதுபோல் இருக்கும். ஒவ்வொரு வண்டியின் பின்புறத்திலும் போத்தீஸ், சரவணா ஸ்டோர்ஸ் பைகள் பிதுங்கி வழியும். குழந்தைகள் பின் இருக்கையிலும், மனைவியர் முன் இருக்கையிலும் தூங்கி வழிய, கணவர்கள் கண் துஞ்சாது ஸ்டீரியரிங்கை பிடித்து இருப்பார்கள். எல்லா கணவர்களும் ஒருவகையில் சம்பளமில்லாத ஓட்டுனர்கள்தானே!

எங்கள் வீட்டிலிருந்து திண்டிவனம் 90 கி.மீ.தான் என்றாலும், பண்டிகை நாட்களில் குறைந்தது இரண்டு மணிநேரமாவது ஆகும்.

இந்த தடவை பொங்கலுக்கு இரண்டு நாட்களுக்கு முன்பே கிளம்பியதால், அந்தளவிற்கு போக்குவரத்து நெரிசல் இல்லை. டோல்கேட்டிலும் எங்களுக்கு முன்னால் ஒரு கார்தான் இருந்தது.

kallanai kollidam

கல்லணையிலிருந்து கொள்ளிடத்திற்கு திறந்துவிடப்படும் நீர்

தேவாமிர்தமே வழியில் கிடைத்தாலும், நான் வீட்டுச் சாப்பாடுதான் சாப்பிடுவேன் என்று அடம்பிடிப்பவர்கள் நம்நாட்டில் அதிகம். காலை, மதியம் இரண்டு வேளைக்கும் சமைத்து, பார்சல் கட்டிக் கொண்டு, டோல்கேட் தாண்டி, வண்டியை நிறுத்தி சாப்பிடுபவர்களை நெடுஞ்சாலைகளில் அதிகம் பார்க்கலாம். நாங்கள் கொஞ்சம் வேறுமாதிரி. போகிற வழியில் எந்தெந்த ஊர்களில் என்னென்ன ஸ்பெஷல் என்பதைத் தெரிந்து கொண்டு, அதைச் சாப்பிடுவோம். எப்போதும் பார்சல் கட்டியது கிடையாது. பெங்களூர் சாலையில் போகிறோம் என்றால் நிச்சயம் ஸ்டார் பிரியாணி சாப்பிடாமல் வரமாட்டோம். அதேபோல், கோவில்பட்டி போகும்போது, திண்டிவனம் ஆர்யாஸ் ஹோட்டலில் மொய் வைக்காமல் போனதில்லை. திண்டிவனம் பைபாஸ் ரோடு தொடங்கும் இடத்தில் வலப்புறம் வசந்தபவன், ஆர்யாஸ் ஹோட்டல்கள் அடுத்தடுத்து இருக்கும். இதில் ஆர்யாஸ் ஹோட்டல் எங்களது பேவரிட் ஹோட்டல்.

இட்லி, பொங்கல், தோசை, பூரி என காலை சிற்றுண்டி எது சாப்பிட்டாலும், மிகவும் ருசியாக இருக்கும். நான்கு வகை சட்டினி, இட்டிலிப் பொடிக் கிண்ணங்கள், சின்ன சாம்பார் வாளி ஆகியவற்றை நம் மேஜையிலேயே வைத்து விடுவார்கள். நாம் வேண்டிய அளவுக்குப் போட்டுக் கொள்ளலாம். பொங்கல், தோசை, பூரி என சிற்றுண்டி, பேருண்டி ஆகும்வரை ஒரு வெட்டு வெட்டுவது என் பழக்கம். கார்கள் நிறுத்த விசாலமான பார்க்கிங், சுவையான உணவு, உள்ளேயே ஒரு புத்தகக் கடை, ஸ்வீட் ஸ்டால், சுத்தமான கழிப்பறைகள், குழந்தைகளுக்கான விளையாட்டுப் பகுதி என அனைத்து வசதிகளோடும் இருப்பதால், சென்னையில் கிளம்பும் எங்கள் வண்டி இங்கே நிற்காமல் போகாது.

காலை சாப்பாடை முடித்துவிட்டு, மீண்டும் வட்டக்கட்டையைப் பிடித்தால் – அதான் ஸ்டீரியங் – அப்போதுதான் கிளம்பியதுபோல் ஒரு புத்துணர்வு இருக்கும். 1990 – 2000 வரையிலான பாடல்களைக் கேட்டபடி, வண்டியை 90 கி.மீ. வேகத்திற்கு விரட்டினேன். உளுந்தூர்பேட்டை தாண்டிவிட்டால், 100 கி.மீ. வேகத்திற்கு மேல் வண்டியை ஓட்ட முடியும். அதற்கு முன்பு கிழக்கு, மேற்கு செல்ல வேண்டிய வண்டிகள் எல்லாம் தங்கள் வழியில் பிரிந்துவிடுவதால், உளுந்தூர்பேட்டைக்குப் பின்பு பெரும்பாலும் தெற்கு நோக்கிய வண்டிகள் மட்டும்தான் இருக்கும். அதுவரை வண்டி 70 – 90க்கு இடையிலான வேகத்தில் வண்டி ஊசலாடும்.

உளுந்தூர்பேட்டை தாண்டியபின்பு 120 கி.மீ. வேகத்தில் போகலாம் என்றாலும், அவ்வாறு செல்வது மைலேஜுக்கு நல்லதல்ல. சீராக 90 அல்லது 100 கி.மீ. வேகத்தில் சென்றால், தாராளமாக ஸ்விப்ட் வண்டியில் ஒரு லிட்டருக்கு 22 கி.மீ. மைலேஜ் கிடைக்கும். விரட்டிச் சென்று, ஊரில் கொடி நட்டுவதற்கு நமக்கு எந்தக் கோட்டையும் இல்லாததால், 90லேயே போய்க் கொண்டிருந்தேன்.

தேசிய நெடுஞ்சாலையில் திருச்சிக்கு முன்பாக கல்லணை செல்லும் பாதை அறிவிப்புப் பலகையுடன் இருக்கிறது இருக்கிறது. கல்லணை 12 கி.மீ. அதிகம் போக்குவரத்து இல்லாத பாதை அது. வலப்புறம் காவிரி ஆறு நம்முடன் இணையாகப் பாய்ந்து வருகிறது. இறங்கி, காவிரியில் கால் நனைக்கலாம் என்றால், கார் நிப்பாட்டுவதற்கு எங்கேயும் இடமில்லை. சுற்றிலும் விவசாய நிலம் என்பதால், சாலையை அடுத்து உடனே வயற்காடும், வாழைத்தோட்டமும் தொடங்கிவிடுகிறது. ஜனவரி மாதம் என்பதால் காவிரியில் தண்ணீர் கரைபுரண்டு ஓடாவிட்டாலும், கணிசமாக சென்று கொண்டிருந்தது.

‘ஒரு காலத்தில் இந்தப் பாதை ராஜபாட்டையாக இருந்திருக்கலாம். கரிகாலனின் தேர் இதே பாதையில் கூட சென்றிருக்கலாம். சாலை ஒரங்களில் தென்படும் கிராமங்களுக்கு 2000 ஆண்டு வரலாறு இருக்கலாம்’ என்ற எண்ணங்களை மனதில் ஓட்டியபடி, வண்டியை ஓட்டினேன். சில வீடுகளின் வாசற்படிகள் சாலையில் இருக்கின்றன. வீட்டில் இருந்து எடுத்து வைக்கும் முதல் அடியே சாலையில்தான் இருக்கும். தார் சாலை என்றாலும், அதிகளவில் வண்டிகள் செல்வதில்லை என்பதால், பெண்கள் சாலையோரங்களில் உட்கார்ந்து இருந்தார்கள்.

karikala chozhan statue11 மணிக்கு கல்லணை போய்ச் சேர்ந்தோம். மிகப்பெரிய அணைகளைக் கற்பனை செய்து கொண்டு நீங்கள் செல்வீர்கள் ஆனால், கல்லணையைப் பார்க்கும்போது உங்களுக்கு ஏமாற்றமே மிஞ்சும். முல்லைப் பெரியாறு அணை, பாபநாசம் காரையார் அணை, மேட்டூர் அணை ஆகியவற்றுடன் இதனை ஒப்பிடமுடியாது. ஏனெனில் கல்லணை என்பதை அணை அல்ல, அணைக்கட்டு.

காவிரியில் ஏற்படும் வெள்ளப்பெருக்கைத் தடுக்கும் பொருட்டு கரிகாலச் சோழன் கட்டியதே இந்த அணைக்கட்டு. முக்கொம்பில் காவிரி ஆறு இரண்டாகப் பிரிகிறது. ஒன்று ‘கொள்ளிடம்’ எனவும், மற்றொன்று முந்தைய ‘காவிரி’ என்ற பெயரிலும் அழைக்கப்படுகிறது. முக்கொம்பில் கொள்ளிட ஆற்றின் நிலமட்டம், காவிரியின் நிலமட்டத்தை விட 6 அடி உயரம் அதிகமாகும். இதனால் பெரும்பாலான தண்ணீர் காவிரியாற்றில்தான் செல்லும். முக்கொம்பில் பிரிந்த காவிரி கல்லணைப் பகுதியை வந்தடைகிறது. இப்பகுதியில் காவிரியாற்றின் நிலமட்டம், கொள்ளிடத்தின் நிலமட்டத்தை விட உயரம் அதிகமாக இருப்பதால், அடிக்கடி காவிரியின் கரை உடைப்பட்டு, நீர் எல்லாம் கொள்ளிடத்தில் கலந்தது.

2100 ஆண்டுகளுக்கு முன்பு வெள்ளப்பெருக்கு ஏற்படும் காலங்களில், பெரும் வெள்ள சேதமும் ஏற்பட்டது; காவிரியை நம்பியிருந்த விவசாய நிலங்களும் பாதிக்கப்பட்டன. இதனைத் தடுக்க எண்ணிய கரிகாலச் சோழன், காவிரியில் அடிக்கடி உடைப்பு ஏற்படும் இடத்தில் ஓர் அணைக்கட்டை ஏற்படுத்தினான். இந்த அணைக்கட்டின் மூலம் காவிரியில் நீர்வரத்து அதிகரிக்கும்போது கணிசமான தண்ணீர் கொள்ளிடம் ஆற்றிற்கு திருப்பி விடப்பட்டு, காவிரியில் வெள்ளப்பெருக்கு ஏற்படுவது தடுக்கப்படுகிறது. இதனால் உடைப்பு ஏற்படுவதும் தடுக்கப்படுகிறது. சுருக்கமாகச் சொன்னால் ஒரு மடைமாற்றி.

முதலாம் கரிகாலச் சோழனின் பேரன் இரண்டாம் கரிகாலச் சோழன் தான் இந்த அணைக்கட்டை கட்டினான். இவனது காலம் கி.மு.2ம் நூற்றாண்டு என்று சிலரும், கி.பி. 2ம் நூற்றாண்டு என்று சிலரும் கூறுகின்றனர். கி.மு. 2ம் நூற்றாண்டு என்பது உறுதியானால், உலகின் பழமையான அணைக்கட்டுமானங்களில் கல்லணை இரண்டாவது இடத்தைப் பிடிக்கும். முதல் இடத்தில் சிரியாவில் ‘Orontes’ நதிக்கு குறுக்கே கட்டப்பட்ட ‘Lake Homs’  (கி.மு.1319-1304) அணை விளங்குகிறது. கி.பி.2ம் நூற்றாண்டு என்றால், உலகின் பழமையான அணைக்கட்டுமானங்களில் கல்லணை நான்காம் இடத்தைப் பிடிக்கிறது.

எப்போதும் தண்ணீர் சென்று கொண்டிருக்கும் காவிரியில் எப்படி இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு அணைக்கட்டு கட்ட முடிந்தது என்ற கேள்வி எழுகிறது அல்லவா? கடற்கரையில் அலையடிக்கும்போது, நம் கால்களின் கீழே உள்ள மணல் நழுவி, கால்கள் புதைகிறது அல்லவா? இதுதான் கல்லணையின் தொழில்நுட்பமாக மாறியது. ஓடிக்கொண்டிருக்கும் ஆற்றில் பெரிய பாறைகளைப் போட்டார்கள். அவை ஆற்றின் தரைப்பகுதியை அடைந்தன. அங்கு மணல்தானே இருக்கிறது. அந்த மணல் தண்ணீரால் அடித்துச் செல்லப்பட, கடற்கரையில் நம் கால்கள் புதைவதைப் போல், பாறைகள் புதையத் தொடங்கியன. அவைகளின் மீது தண்ணீரில் கரையாத களிமண் பூச்சு பூசப்பட்டு, அவற்றின் மீது மீண்டும் பாறைகள் போடப்பட்டன. மேலே உள்ள பாறைகளின் அழுத்தம், மணல் அரிப்பு இவைகளின் காரணமாக பாறைகள் மேலும் கீழே இறங்கின. தொடர்ந்து களிமண் பூசி, பாறைகளைப் போடப் போட, முதலில் போடப்பட்ட பாறைகள் மணலற்ற கடினமான தரைப்பகுதியை அடைந்தன. இவ்வாறு ஒன்றன்மேல் ஒன்றாக அடுக்கி வைக்கப்பட்ட பாறைகளும், அவற்றிற்கிடையேயான களிமண் பூச்சும் தான் அணைக்கட்டாக உருவாகியது.

கல்லணையின் தொழில்நுட்பத்தைக் கண்டு வியந்த ஆங்கிலேய கட்டுமானப் பொறியாளர் சர்.ஆர்தர் காட்டன் (கி.பி.1803 – 1899), கல்லணையை ‘GRAND ANAICUT’என்று அழைத்தார். இதே தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி, கோதவரி ஆற்றுக்கு குறுக்கே தௌலீஸ்வரம் என்ற அணைக்கட்டைக் (கி.பி. 1852) கட்டினார்.

கல்லணையின் நீளம் 1080 அடி, அகலம் 66 அடி, உயரம் 18 அடி. இது திருச்சியிலிருந்து 18.6 கி.மீ. தூரத்திலும், திருவரங்கத்தில் இருந்து 16.6 கி.மீ. தூரத்திலும் உள்ளது.

பழைமையான வரலாற்றுச் சின்னம் என்ற எண்ணத்தில் கல்லணையைப் பார்க்கச் சென்றால், ஏமாற்றமே மிஞ்சும். உலகம் முழுவதும் பழங்கால வரலாற்றுச் சின்னங்களை அதன் பழைமை மாறாமல் பாதுகாப்பதற்காக கோடிக்கணக்கில் செலவழிக்கிறார்கள். ஆனால் நம்மவர்கள்? கல்லணையின் மேற்புறத்தில் பாலம் அமைத்து, வாகனங்கள் செல்லும் வகையில் சாலை போட்டுள்ளார்கள். கரிகாலனின் கல்லணைக்கு மாறாக, தமிழக நெடுஞ்சாலைத் துறை அமைத்த பாலமும், அதற்கு அவர்கள் அவர்கள் பூசிய வண்ணமயமான பூச்சும்தான் பல்லை இளிக்கிறது. நல்லவேளை, அதற்கு ஓரத்தில் கடைகளைக் கட்டி, வாடகைக்கு விடாமல் விட்டு வைத்துள்ளார்கள் என்ற அளவில் மகிழ்ச்சி அடைய வேண்டியதுதான்.

கல்லணைக்கு அருகிலேயே கரிகாலச் சோழனுக்கு தமிழக அரசு மணிமண்டபம் கட்டியுள்ளது. யானை மேல் கரிகாலச் சோழன் அமர்ந்திருப்பது போன்ற பிரமாண்டமான வெண்கலச் சிலை அமைக்கப்பட்டுள்ளது. பிப்ரவரி 12, 2014 அன்று, அன்றைய தமிழக முதல்வரும், இன்றைய ‘மக்களின் முதல்வரு’மான ஜெயலலிதா, வழக்கம்போல் சென்னையிலிருந்தபடியே வீடியோ கான்பரன்சிங் முறையில் இந்த மணிமண்டபத்தை திறந்து வைத்துள்ளார். அன்றைய மன்னருக்கு இன்றைய அரசி தந்த மரியாதை அவ்வளவுதான். மணிமண்டபத்தில் வைக்கப்பட்டிருந்த கல்வெட்டில் அரசியாரின் பெயர், கல்லணை அளவுக்குப் பெரியதாக இல்லை என்பது கொஞ்சம் நிம்மதியை அளித்தது.

அதிமுக ஆட்சியே தொடர்ந்து கொண்டிருப்பதால், மணிமண்டபம் (மட்டும்) சிறப்பான முறையில் பராமரிக்கப்பட்டு வருகிறது. சிறுநீர் கழிக்க கழிப்பறையைத் தேடிய எனது அம்மாவும், ஹேமாவும் போன வேகத்தில் திரும்பிவந்தார்கள். தான் பார்த்த கழிப்பறைகளிலேயே மிக மோசமான கழிப்பறை இதுதான் என்று ஹேமா கூறினார். இதைக் கட்டியது யார் என்று கல்வெட்டைத் தேடினேன்; கிடைக்கவில்லை.

கல்லணைக்கு செல்பவர்கள்ள், தேசிய நெடுஞ்சாலைகளில் இருக்கின்ற ஏதேனும் பெட்ரோல் பங்குகளை தங்களது இயற்கை அழைப்புகளுக்கு நாடுவது நல்லது. அதேபோல், உணவையும் கல்லணைக்கு முன்போ, பின்போ திட்டுமிட்டுக் கொள்ளுங்கள். கல்லணைப் பகுதியில் உணவு விடுதிகள் எதுவும் இல்லை.

உணவைப் பொட்டலம் கட்டிக் கொண்டு, எந்த சுற்றுலாப் பகுதிக்கும் – குறிப்பாக பழங்காலச் சின்னங்கள் இருக்கும் பகுதிகளுக்குச் செல்லாதீர்கள். முதல் காரணம் பிளாஸ்டிக் குப்பைகளைத் தவிர்க்கலாம்; இரண்டாவது மீதமாகும் உணவை அதே பகுதியில் கொட்டுவது. இதனால் அந்தப் பகுதியில் நாய்களின் எண்ணிக்கை அதிகமாகும்.

கல்லணையிலிருந்து காவிரிக்குப் பாயும் தண்ணீரை கரையோரமாக நின்று ரசிக்கலாம், நிழற்படம் எடுக்கலாம் என்று பக்கவாட்டில் இறங்கினேன். தயவு செய்து நீங்கள் யாரும் இறங்கி விடாதீர்கள். கரையோரங்களில் எல்லாம் ‘நம்பர் 2’ போகும் நமது மரபின் தொடர்ச்சி இங்கேயும் இருந்தது. இது தமிழர்களின் தேசிய குணமா, இல்லை திராவிடர்களின் தேசிய குணமா அல்லது இந்தியர்களின் தேசிய குணமா என்பதை ‘ஆய்’ந்த அறிஞர்கள்தான் கூறவேண்டும். கடந்த வாரம் புழல் ஏரியின் கரையோரப் பகுதிக்கு சென்றபோதும், இதே அனுபவம்தான் கிட்டியது. இத்தனைக்கும் சென்னைக்கு குடிநீர் தரும் ஏரிகளில் ஒன்று. வாழ்க நமது நாகரிகம்!

kallanai cauvery

காவிரிக் கரையிலிருந்து கல்லணையின் தோற்றம்

அணைக்கட்டிலிருந்து கொள்ளிடம் ஆற்றில் தண்ணீர் குறைவாகவும், காவிரி ஆற்றில் ஓரளவு அதிகமாகவும் வெளியேற்றப்பட்டுக் கொண்டிருந்தது. ஒரு மணிநேரம் அங்கு இருந்திருப்போம். கரிகாலனின் கல்லணையைத் தேடிச் சென்றவனுக்கு, கல்லணையை மூடி, தமிழக அரசு கட்டியிருந்த மேம்பாலம் ஏமாற்றமே அளித்தது. கல்லணையின் சுவர்களில் சிமெண்ட் பூசியிருக்கிறார்கள். அதன்மேல் வண்ணம் அடித்து வைத்திருக்கிறார்கள். நாளை கல்லணையின் நீடித்த வாழ்வுக்கு காரணம் நாங்கள்தான் காரணம் என்று சங்கர் சிமெண்ட்டோ, ஏசியன் பெயிண்ட்ஸோ உரிமை கோரினாலும், ஆச்சரியப்படுவதற்கு ஓன்றுமில்லை.

பரமாரிப்பது என்பதில் அதன் பழைமை மாறாமல் பாதுகாப்பது என்பதும் அடங்கும். ஓவியர் மருது தனது ஜெர்மனி பயண அனுபவம் குறித்து சொன்ன ஒரு செய்தி நினைவுக்கு வருகிறது. ஜெர்மனியில் உள்ள முன்ஸ்டர் நகர மியூசியம் ஒன்றில் அந்நகரைப் பற்றிய 400 ஆண்டு கால பழைய ஓவியம் ஒன்றைப் பார்க்கிறார். பார்த்துவிட்டு வெளியே வந்தால், ஓவியத்தில் இருப்பது போன்றே நகரம் இன்றைக்கும் இருக்கிறதாம். அந்த ஓவியத்தில் இருப்பது போலவே நகரை இன்றும் பராமரிக்கிறார்கள். அந்நகரில் இரண்டு முனிசிபாலிட்டி இருக்கிறது. பழைய நகரைப் பராமரிப்பதற்கு old municipality, புதிய நகரைப் பராமரிக்க new municipality. பழைய நகரில் இருப்பவர்கள் தனது வீட்டின் வெளிப்புறத்தை கொஞ்சம்கூட மாற்றமாட்டார்களாம். தாழ்ப்பாள் பழுதானால் கூட, அதே வடிவத்தில், அதே வண்ணத்தில்தான் புதிய தாழ்ப்பாளைப் பொருத்துவார்களாம்.

ஆனால், நாம் பழங்காலக் கோயில்களுக்கு குடமுழக்கு செய்கிறோம் என்று பச்சை, சிவப்பு, நீலம் என வண்ணங்களை அடித்து, அதன் பழைமை சுவடே தெரியாமல் மாற்றிவிடுகிறோம். பழைமை கெடாமல் எந்த ஓர் இடத்தையும் பராமரிப்பது குறித்த பொறுப்புணர்வு அரசுக்கும், பொதுமக்களாகிய நமக்கும் இல்லை. இந்திய அரசின் தொல்லியல் துறை கட்டுப்பாட்டில் இருக்கும் ஒரு சில இடங்கள் மட்டும் தப்பித்திருக்கின்றன. அரசுகளின் வரலாற்றுப் பொறுப்புணர்வைத் திட்டியபடி, காரை ஓட்டத் தொடங்கினேன்.

கல்லணையிலிருந்த கழிப்பறையை பயன்படுத்த முடியாத நிலை இருந்ததால், திருச்சியைத் தாண்டி, 15 நிமிட பயண தூரத்தில் ஒரு மோட்டலில் வண்டியை நிறுத்தினேன். மோட்டல் என்றால் பேருந்துகள் நிறுத்தும் வகையிலானது அல்ல; இது கார்களுக்கானது. அதனால் கூட்டம் அதிகமில்லை. பாலாஜி ஆர்யாஸ் என்று பெயர் இருந்தது. மதுரை புகழ் ஜிகர்தண்டா குடித்துவிட்டு, மணப்பாறை முறுக்கு ஒரு பாக்கெட் வாங்கிக் கொண்டோம். கார்ப் பயணத்தின்போது கொறிப்பதற்கு ஏதாவது வைத்துக் கொள்வது எங்கள் வழக்கம்.

திருச்சியைத் தாண்டிவிட்டால், தெற்கு நோக்கிச் செல்லும் சாலையில் அதிகமாக வாகனங்களைக் காண முடியாது. சாலை பெரும்பாலும் காலியாக இருக்கும். ஹேமாவிடம் ‘வட்டக்கட்டை’யைக் கொடுத்து விட்டு, மணப்பாறை முறுக்கை கடித்தபடி, வேடிக்கை பார்க்க ஆரம்பித்தேன். மதுரை டோல்கேட் வரை ஹேமா ஓட்டினார். அதன்பின்பு மீண்டும் ஓட்டுனர் இருக்கைக்கு வந்தேன்.

kallanai water

கல்லணையில் தேங்கியிருக்கும் காவிரி

சென்னையிலிருந்து கோவில்பட்டி செல்லும்வரை தோராயமாக 10 இடங்களில் ‘டோல்கேட்’ பகற்கொள்ளைக்கு ஆளாகிறோம். அதிலும் மதுரைப் பகுதியில் தான் மிகவும் அதிகமாக இருக்கிறது. மேலூர் அருகே தேசிய நெடுஞ்சாலை டோல்கேட், பிறகு மதுரை மாநகராட்சியின் டோல்கேட், அதற்கு அடுத்து திருமங்கலம் முன்பாக மீண்டும் தேசிய நெடுஞ்சாலை டோல்கேட் – என ஏறக்குறைய 45 - 50 கி.மீ. தூரத்தில் 3 டோல்கேட்களில் ரூ.160 கட்டுகிறோம். என்னால் முடிந்த அளவு, திருமங்கலம் டோல்கேட்டில் ‘இப்படி கொள்ளை அடிக்காதீங்க’ என்று திட்டிவிட்டு வந்தேன். நெடுஞ்சாலைகளில் நடக்கும் இந்த பகற்கொள்ளைகளை எப்போது தடுக்கப் போகிறோம்? டோல்கேட்களை அடித்து நொறுக்கும் போராட்டத்தை எந்தக் கட்சி/இயக்கம் வலுவாக முன்னெடுக்கப் போகிறது?

மூன்று ஆண்டுகளுக்கு முன்பு, கோவையில் நடைபெற்ற ஈழ ஆதரவு மாநாட்டிற்கு சென்னையிலிருந்து 4 பேருந்துகளில் கிளம்பிய தோழர்கள் வழி நெடுகிலும் டோல்கேட்களில் ‘கட்டணம் செலுத்த மாட்டோம்’ என்று பிரச்சினை செய்திருக்கிறார்கள். கட்டணம் வசூல் செய்யும் நான்கு முனைகளிலும் நான்கு வாகனங்களை நிறுத்திவிட்டு, ‘உன்னால் ஆனதைப் பார்’ என்று நின்றிருக்கிறார்கள். பின்னால் நிற்கும் வாகனங்களின் நெரிசல் அதிகமாகவே, எப்படியோ போங்கள் என்று தோழர்களின் பேருந்துகளை அனுப்பியிருக்கிறார்கள். கூட்டமாகச் செல்லும்போது இதுபோன்ற எதிர்ப்பை பதிவு செய்வது அவசியம். தனியாளாகச் செல்லும்போது, குறைந்தபட்சம் நமது அதிருப்தியையாவது பதிவு செய்யுங்கள். எந்த எதிர்ப்பும், அதிருப்தியும் இல்லாமல் எத்தனை நாட்களுக்குத்தான் இந்தக் கொள்ளையை நாம் அனுமதிப்பது? மக்களிடம் எதிர்ப்பு இருக்கிறது என்பதையாவது அரசுகளுக்கு நாம் தெரிவிக்க வேண்டியிருக்கிறது.

மாலை 4 மணியளவில் கோவில்பட்டி போய்ச் சேர்ந்தோம். அடுத்த பத்து நிமிடத்தில் ‘கன்னி’ சாமியிடம் இருந்து அழைப்பு வந்தது. சபரிமலை பயணத்திற்கான ஏற்பாடுகள் குறித்து பேச வேண்டியிருந்தது. ஆம்… பொங்கலன்று சபரிமலைக்கு செல்வதாகத் திட்டம். ஆச்சரியங்களும், அதிர்ச்சிகளும் நிறைந்த, ஒரு பகுத்தறிவாளனின் சபரிமலைப் பயணம் குறித்து அடுத்த கட்டுரையில்…

தரவுகள்:

http://www.water-technology.net/features/feature-the-worlds-oldest-dams-still-in-use/

http://www.keetru.com/index.php?option=com_content&view=article&id=22047:2012-11-22-12-16-06&catid=25:tamilnadu&Itemid=137

- கீற்று நந்தன் (இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.)

Pin It

 தேனி மாவட்டம் அணைகளும், அருவிகளும், ஆறுகளும், மூன்று புறமும் மலைகளாலும், ஏரியல் வியூவில் நோக்கினால் லாடக வடிவில் காணப்படும் கானகங்கள் என அடுக்கிக்கொண்டே போகலாம். தேனி மாவட்டத்தின் மிகச்சிறந்த சுற்றுலாத் தளமாக விளங்குவது வைகை அணை. வருசநாட்டில் உள்ள மூல வைகையாற்றில் உருவாகும் வைகை ஆற்றை மறித்து குறுக்கே அணை கட்டி வைகை அணை என பெயர் வைத்தனர். வைகை அணையில் தேக்கப்படும் வைகை ஆறு, முல்லைப் பெரியாறு ஆற்றின் தண்ணீர் திண்டுக்கல், மதுரை, ராமநாதபுரம், சிவகங்கை மாவட்ட மக்களின் குடிநீர் ஆதாரமாகவும், பாசன வசதிக்கும் பயன்படுகிறது.

vaigai_dam_600

 1959 ஆம் ஆண்டு இந்த அணை திறக்கப்பட்டது. அணையின் உயரம் 111 அடியாகும். அணையின் நீர்தேக்கப்பகுதியில் 71 அடி நீரைத் தேக்கி வைக்கமுடியும். இந்த அணை பெரியகுளம் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட முதலக்கம்பட்டி ஊராட்சிப் பகுதியில் அமைந்துள்ளது.

 வைகை அணையை இடதுகரைப்பூங்கா, வலது கரைப் பூங்கா என இரண்டு பிரிவாக பிரித்துள்ளார்கள். ஒருகரைப் பூங்காவில் யானைச்சறுக்கு, குதிரைச்சறுக்கு என பல விளையாட்டு சாதனங்களும், படிப்படியாக மேலிருந்து தண்ணீர் வந்து அரக்கன் வாய்வழியாக தண்ணீர் வெளியேறும் விதமாகவும், ஒரு சிலையில் பெண் குடத்திலிருந்து தண்ணீர் ஊற்றுவது போல சிலைகளும், பாஞ்சாலங்குறிச்சியை நினைவுபடுத்தும் விதமாக கோட்டைகளும், அகழிகளும் கட்டப்பட்டுள்ளன.

 வலது கரைப் பூங்காவில் டயனோசரசும், சிறிய ரயில் வண்டியும், தமிழகத்தின் நீர்நிலைகளை காட்டும் விதமாக தரைமார்க்கமாக நிழல் தோட்டங்களும், சின்ன வைகை அணை மாதிரியும், சிறுவர்கள் விளையாட விளையாட்டுச் சாதனங்கள், கடல் பகுதி இல்லாத தேனி மாவட்டத்தில் கலங்கரை விளக்கமும் அமைக்கப்பட்டுள்ளன.

 வைகை அணையில் ஏழு பெரிய கண்களும், 7 சிறிய கண்களும் உள்ளது. 7 சிறிய கண்களில் இருந்து வெளியேறும் நீரில் நீர்மின்திட்டம் ஒன்று  செயல்பட்டு வருகிறது.

 சுற்றுலாப் பயணிகள் பெரியகுளத்தில் இருந்தும், ஆண்டிபட்டி, தேனியில் இருந்தும் வருவதற்கு பேருந்து வசதிகள் தங்கு தடையின்றி உள்ளன. சுற்றுலாப் பயணிகள் தங்குவதற்கு விடுதிகளும், அசைவப் பிரியர்களுக்காக இங்கு எப்போதும் மீனுடன் கலந்த சாப்பாடும் கிடைக்கும். எளிய செலவில் அருமையான சுற்றுலா மையம் ஆகும். ஞாயிற்றுக் கிழமை, பண்டிகைக் காலங்களில் சென்றால் நடன நீருற்றையும், மின்னொளியிலும் வைகை அணையை கண்டு ரசிக்கலாம்.

- வைகை அனிஷ்

Pin It