pamba river 400

(பம்பையில் குளித்து, 'பாவங்களைத்' தொலைக்கும் பக்தர்கள்)

பயணத்தின் இரண்டாவது நாள் மாலை 6 மணி. எருமேலியிலிருந்து சபரிமலைக்கு எங்களது வண்டிகள் கிளம்பின. அச்சன்கோவில், எருமேலி, பந்தளம், ஆரியங்காவு, குளத்துப்புழை கோயில்கள் எல்லாம் அய்யப்பனின் கிளை அலுவலகங்கள்தான்... தலைமை அலுவலகம் என்றால் அது சபரிமலைதான். கிளை அலுவலகங்களுக்குப் போக முடியவில்லை என்றாலும் பரவாயில்லை, தலைமை அலுவலகத்திற்கு அய்யப்ப பக்தர்கள் கட்டாயம் சென்றே தீர வேண்டும். ஏனென்றால் இருமுடி இறக்குவது சபரிமலையில்தான்.

சிறுவயதிலிருந்து அய்யப்பன் பாடல்களைக் கேட்டு, கேட்டு சபரிமலை குறித்து ஒரு சித்திரம் மனதில் இருந்தது. ‘காடு, மலை தாண்டி வாரோமப்பா’, ‘கல்லும் முள்ளும் காலுக்கு மெத்தை’ போன்ற வரிகளுக்கு உண்டான இடத்தைப் பார்க்கப் போகிறோம் என்ற ஆவல் அதிகமாக இருந்தது.

சரவணன் அங்கப்பிரதட்சண அனுபவத்தை தனது மனைவியிடமும், மாமனாரிடமும் சொல்லிக் கொண்டு இருந்தான். ஆறு மணிக்கே இருட்டிவிட்டதால், வெளியே வேடிக்கை பார்க்க முடியவில்லை. மலைப் பிரதேசத்தில் வண்டி போய்க் கொண்டிருக்கிறது என்பது மட்டும் உத்தேசமாகத் தெரிந்தது. பக்தர்களை சீக்கிரம் அய்யப்பனிடம் சேர்த்துவிடும் அவசரத்தில் ஓட்டுனர் வேகமாக வண்டியை ஓட்டிக் கொண்டிருந்தார். முன்னே செல்லும் வண்டிகளை எல்லாம் அநாயசமாக முந்திக் கொண்டு சென்ற வண்ணம் இருந்தார்.


முந்தைய பகுதிகள்:

ஒரு பகுத்தறிவாளனின் சபரிமலை பயண அனுபவங்கள் - 1

ஒரு பகுத்தறிவாளனின் சபரிமலை பயண அனுபவங்கள் - 2

ஒரு பகுத்தறிவாளனின் சபரிமலை பயண அனுபவங்கள் - 3

ஒரு பகுத்தறிவாளனின் சபரிமலை பயண அனுபவங்கள் - 4

ஒரு பகுத்தறிவாளனின் சபரிமலை பயண அனுபவங்கள் - 5


கேரளாவில் சாலைகள் எல்லாம் பெரும்பாலும் நேராக இருக்காது. சமவெளிகளில் கூட சாலைகள் வளைந்து, நெளிந்துதான் செல்லும். மலைப்பகுதிகளில் சொல்லவும் வேண்டுமா? அப்படி ஒரு வளைவில், முன்னே சென்று கொண்டிருந்த வண்டியை எங்களது ஓட்டுனர் முந்தப் பார்த்தார். எதிரே ஒரு போலீஸ் ஜீப் வந்துவிட, வேகமாக ப்ரேக்கை அழுத்தினார். போலீஸ் ஜீப் ஓட்டுனரும் சாலையின் பக்கவாட்டில் தனது வாகனத்தை இறக்க, கண நேரத்தில் ஒரு பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது. ஆனாலும், எங்களது ஓட்டுனர் அடங்கவில்லை. தான் முந்த முடியாமல் போன வாகனத்தை முந்தியே தீருவது என்ற கொள்கை முடிவில் தீவிரமாக இருந்தார். சாலையிலிருந்த விலகிய போலீஸ் ஜீப்பைப் பற்றிக் கவலைப்படாமல், ஆக்ஸிலேட்டரை அழுத்தினார். அந்த வாகனத்தை முந்தியும் விட்டார்.

ஆனால் என்ன கொடுமை! அந்த போலீஸ் ஜீப் எங்களை விடாமல் துரத்தி வந்திருக்கிறது. ஒரு செக்போஸ்ட் அருகே எங்கள் வாகனத்தை மடக்கிப் பிடித்தது. ஒரு நொடியில் மரண பயத்தைக் காட்டிவிட்ட எங்கள் ஓட்டுனரை வண்டியிலிருந்து இறக்கி, கூட்டிச் சென்றனர். எங்கள் வண்டி சாலையோரமாக நிற்பதைப் பார்த்து, பின்னே வந்த எங்கள் குழுவின் மற்ற வண்டிகளும் ஓரங்கட்டின.

கேரள போலீஸாரின் கைகளில் நீள நீளமாக மூங்கில் கம்புகள் இருந்தன. ஓட்டுனரைப் பார்த்து, வேக வேகமாக கம்புகளை ஓங்கியபடி, திட்டிக் கொண்டிருந்தார்கள். அவர்களது முகத்தில் கடுங்கோபம் இருந்ததைப் பார்க்க முடிந்தது. ஓட்டுனர் வெலவெலத்துப் போயிருந்தார். ‘உன்னை இன்னைக்கு விடப்போறதில்லை’ என்பது போல் மலையாளத்தில் சொல்லியபடி, அவரை இழுத்துக் கொண்டு போய் செக்போஸ்ட் அறைக்குள் அடைத்தார்கள்.

என்ன நடந்தது என்பது வண்டியில் தூக்கத்திலிருந்த பெரும்பாலோனோர்க்குத் தெரியவில்லை. விழித்திருந்த ஒன்றிரண்டு பேர் நடந்ததை விளக்கிச் சொன்னார்கள். தூக்கம் கலைந்த பக்தர்கள் ஒவ்வொருவராக சிறுநீர் கழிக்க இறங்கினார்கள். நானும் இறங்கினேன். எங்கள் வண்டி பொறுப்பாளரும், அடுத்த வண்டியிலிருந்து வந்த குரு சாமியும் செக்போஸ்ட் நோக்கிப் போனார்கள். காவலர்களை சமாதானப்படுத்த கொஞ்ச நேரம் ஆனது. எப்படியோ ஓட்டுனரை மீட்டு வந்தார்கள். அடி எதுவும் விழவில்லை என்று சொன்னார்கள். ஆனால் ஓட்டுனரின் முகத்தில் இன்னும் பீதி அடங்கவில்லை.

வண்டிக்கு முன்பாக ஓட்டுனரை நிறுத்தி, கண்களை மூடி பிரார்த்தி, அவருக்கு குரு சாமி விபூதி பூசினார். மெதுவாக வண்டியை ஓட்டும்படி அறிவுறுத்தினார். வண்டிகள் கிளம்பின. இம்முறை எங்கள் வண்டி மிதமான வேகத்தில் சென்றது.

போலீஸின் களேபரத்தில் ஒரு இருபது நிமிடம் தாமதம் ஏற்பட்டுவிட்டது. வண்டிக்குள் பக்தர்கள் “இவன் வண்டி ஏறினதுலே இருந்து இப்படித்தான் ஓட்டிக்கிட்டு இருக்கான். போலீஸிடம் நாலு அடி வாங்க வேண்டியது. குரு சாமியாலே தப்பிச்சான்... இனி ஒழுங்கா ஓட்டுவான்” என்று பேசிக் கொண்டிருந்தார்கள்.

சபரிமலைக்கு 10 கிலோ மீட்டர்களுக்கு முன்னதாகவே சாலையின் இருமருங்கிலும் விளக்குகள் போட்டிருந்தார்கள். பக்தர்களின் வாகனங்கள் அதிக எண்ணிக்கையில் வருவதால், வாகன நிறுத்தங்களை பல்வேறு இடங்களில் அமைத்திருந்தார்கள். எல்லாம் சபரிமலையிலிருந்து குறைந்தது 5 கிலோ மீட்டர்கள் தள்ளியிருந்தன. பக்தர்களை சபரிமலையில் இறக்கி விட்டுவிட்டு, வாகனங்கள் அந்த நிறுத்துமிடங்களுக்குச் சென்றன.

***

நாங்கள் சபரிமலையில் இறங்கியபோது இரவு எட்டரை மணி இருக்கும். லேசாக தூறிக் கொண்டு இருந்தது. மகர சாந்தி முடிந்துவிட்டதால் கூட்டம் அதிகமில்லை என்று உடன்வந்த பக்தர் ஒருவர் சொன்னார். பம்பை நதியில் குளித்துவிட்டு, பின்னிரவில் மலை ஏறுவதாகத் திட்டம். அப்படிப் போனால் அதிகாலையில் நடை திறப்பதற்கும், நாம் போய் சேருவதற்கும் சரியாக இருக்கும்; கூட்டமும் குறைவாக இருக்கும்; சீக்கிரம் அய்யப்ப தரிசனம் செய்துவிடலாம் என்று சொன்னார்கள்.

pamba river 533

(பம்பையில் 'கரையாத பாவங்களை 'கரைக்கு கொண்டு வரும் துப்புரவுப்  பணியாளர்கள்)

வண்டியிலிருந்து இறங்கி இறக்கத்தில் நடந்தோம். மேலே போனால் சபரிமலை, கீழே போனால் பம்பை நதி. மதியம் எருமேலியில் சாப்பிட்டபோதே இரவுச் சாப்பாட்டிற்கு பொட்டலங்கள் கொடுத்துவிட்டார்கள். 

அச்சன்கோவிலிலும், எருமேலியிலும் நாங்கள் இறங்கும்போது, பூஜைக்குத் தேவையான சாமான்களை மட்டும் எடுத்துக் கொண்டு, இருமுடி உள்ளிட்ட மற்ற பொருட்களை வண்டியிலேயே விட்டுவிட்டு சென்றோம். ஆனால் சபரிமலையில் இறங்கும்போது, எல்லாவற்றையும் எடுத்துக் கொள்ளச் சொன்னார்கள். 

 

பம்பை நதி... இந்தியாவில் கங்கை நதிக்கு அடுத்தபடியாக மிகவும் புனிதமான நதி என்று சொல்லப்படுகிறது. எவ்வளவு புனிதமோ, அதே அளவிற்கு அசுத்தத்திலும் இந்த இரு நதிகளே முன்னிலை வகிக்கின்றன. ஆம், இந்தியாவின் மிக அழுக்கான, மிக அசுத்தமான நதி கங்கை. அதற்கு அடுத்த இடம் வகிப்பது பம்பை நதி.

பம்பையின் அசுத்தம் பற்றி ஏற்கனவே எனது மாமனார் எச்சரித்து அனுப்பினார். கோவில்பட்டியில் வியாபாரம் செய்பவர்; சிறுவயது முதலே நாத்திகர். சபரிமலையில் என்னதான் இருக்கிறது என்று 15 வயது ஆண்டுகளுக்கு முன்பு மாலை போட்டு சென்றிருக்கிறார்.

“பக்தியெல்லாம் இல்லை மாப்பிள்ளை... இவனுங்க என்னதான் பண்றாங்க, அங்க என்னதான் இருக்குன்னு பார்க்கத்தான் போனேன். உண்மையில மனுஷன் போவான்! ஒரு இலட்சம் பேர், இரண்டு இலட்சம் பேர்னு குமியறானுங்க.. அதுக்கேத்த வசதி இல்லை... எல்லோரும் திறந்தவெளியிலே பம்பை நதிப்பக்கமாகத்தான் மலம் கழிக்கிறானுங்க... அதுவே சில நேரம் நதியிலே ஆங்காங்கே மிதந்துட்டுப் போகுது.. பாவத்தைத் தொலைக்கிறோம்னு ஆத்துலே துணிகளைப் போடுறானுங்க... முங்கிக் குளிச்சு, எழுந்திருக்கும்போது நம்ம உடம்புலே என்ன ஒட்டும்னே சொல்ல முடியாது. சுத்திப் பாக்கணுங்கிற ஆர்வத்துலே நீங்க போறது சரி.. மறந்தும் அந்த சாக்கடையிலே குளிச்சிறாதீங்க... முட்டாப்பையன் தான் மறுபடியும் அங்கே போய்க் குளிப்பான்” என்று எச்சரித்து அனுப்பினார். வேறுசிலர் வாயிலாக பம்பை குறித்து கேட்டிருந்த கதைகளும் இதுபோலத்தான் இருந்தன. எனவே பம்பையில் குளிக்கக்கூடாடு என்ற எச்சரிக்கை உணர்வோடுதான் பயணத்திற்குக் கிளம்பினேன்.

பம்பை நதியோரமாக பக்தர்கள் தங்குவதற்கு வசதியாக ஒரு பெரிய ஆஸ்பெஸ்டாஸ் கூடாரம் போடப்பட்டிருந்தது. 5000 பேர் உட்காருமளவிற்கு பெரிய கூடாரம் அது. உட்காருவதற்கு இருக்கைகளோ, திண்டுகளோ எதுவும் இல்லை. தரையில்தான் உட்கார வேண்டும். இந்தக் கூடாரமும் கேரள அரசு கட்டியதில்லை. வசதியான பக்தர் ஒருவரின் அன்பளிப்பு. பக்தர்கள் நடந்து, நடந்து கூடாரத்தின் தரையில் நிறைய மண் சேர்ந்திருந்தது. அதோடு, பக்தர்கள் போட்டுவிட்டுப் போன சிறுசிறு குப்பைகளும் இருந்தன. அவற்றை லேசாக விலக்கிவிட்டு, கிடைத்த இடத்தில் எல்லாம் பக்தர்கள் முரட்டுத்தனமாக தூங்கிக் கொண்டிருந்தார்கள். ஏறக்குறைய முழு கூடாரமும் ஆக்கிரமிக்கப்பட்டு இருந்தது. நாங்கள் போன நேரத்தில் ஒரு கூட்டம் கிளம்பியது. அந்த இடத்தை நாங்கள் பிடித்துக் கொண்டோம்.

இருமுடியை தலையில் சுமந்தபடி வந்த பக்தர்கள், கூடாரத்தில் ஒரு பெரிய போர்வையை விரிக்க, குரு சாமி தன்னுடைய கையால் எல்லோருடைய இருமுடியையும் அதில் இறக்கி வைத்தார். பின்பு அதன்மீது இன்னொரு போர்வையைப் போட்டு மூடினார்கள். ஏறக்குறைய எண்பது பேரின் இருமுடிகளும், அதனைச் சுற்றி எங்களது மற்ற பொருட்கள் அடங்கிய பைகளும் இருந்தன. 

கூடாரத்தின் பக்கவாட்டில் இரண்டு மாடிக் கட்டடங்கள் நான்கு, ஐந்து இருந்தன. கட்டடம் முழுவதும் கட்டணக் கழிப்பிட அறைகள்தான். ஒரு ஆளுக்கு 10 ரூபாய் வசூலிக்கிறார்கள். ஒவ்வொரு தளத்திலும் குறைந்தது 40 கழிப்பிட அறைகள் இருக்கும். ஒரு கட்டடத்தில் தோராயமாக 120க்கும் மேலான கழிப்பறைகள் இருக்கும். எந்த அறையிலும் தண்ணீர்க் குழாய் இல்லை. ஒவ்வொரு தளத்தின் இரு மூலைகளிலும் ஒரு பெரிய தொட்டியில் தண்ணீர் விழுந்து கொண்டு இருக்கிறது. கழிப்பிட அறைகளில் இருக்கும் சின்ன வாளிகளை எடுத்துக் கொண்டு போய், தண்ணீர் பிடித்துக் கொள்ள வேண்டும். எந்த அறைக்கும் தாழ்ப்பாள் கிடையாது.

சிறுவயதில் கிராமத்தில் செருப்பு போடாமல் திரிந்த ஆள்தான் நான். மனைவியின் அறிவுறுத்தலின்பேரில், இப்போது வீட்டிற்குள்ளும் மெலிதான இரப்பர் செருப்பு போட்டுக் கொள்கிறேன். வீட்டை விட்டு வெளியே போவதென்றால் அதற்கு வேறு செருப்பு. ஆனால், சபரிமலையில் பொதுக் கழிப்பிடத்திற்குள் செருப்பு இல்லாமல் போக வேண்டியிருந்தது. அந்தக் கழிப்பறையின் யோக்கியதையை இதற்கு மேல் என்னால் விவரிக்க முடியவில்லை. எழுதும்போதே மனதில் அவ்வளவு எரிச்சல் எழுகிறது. வாழ்வில் நான் மறக்க நினைக்கும் நிமிடங்களில் அந்த ஒரு ஐந்து நிமிடம் மிக முக்கியமானது.

ஒரு பகுத்தறிவாளனாக எனக்கு பாவ, புண்ணியத்தில் நம்பிக்கை இல்லை. ஆனால், ஒருவேளை நம்பிக்கை உள்ளவனாக இருந்தால், இப்படித்தான் கூறுவேன். ‘மிகப்பெரும் பாவங்களைச் செய்தவர்கள்தான் இந்த பம்பை நதிக்கும், இந்தக் கழிப்பறைக்கும் வருடாவருடம் செல்கிறார்கள்’.

10 ஆண்டுகளுக்கு முன்பு இந்த ஆஸ்பெஸ்டாஸ் கூடாரமோ, கழிப்பிட அறைகளோ கிடையாது என்கிறார்கள். திறந்தவெளியில்தான் உட்கார வேண்டும், திறந்தவெளியில்தான் கழிக்க வேண்டுமாம். இலட்சக்கணக்கான மக்கள் கூடிய இடம் எந்தளவிற்கு நாறியிருக்கும் என்று யோசித்துப் பாருங்கள்.

***

கேரள மாநிலத்தின் மூன்றாவது பெரிய நதி பம்பை. அதே நேரத்தில், அம்மாநிலத்தின் அசுத்தமான ஒரே நதியும் இதுதான். நடுவண் அரசின் ‘தேசிய நதிகள் பாதுகாப்பு திட்டத்தின்’ (National River Conservation Programme) கீழ் தூய்மைப்படுத்த, நிதி ஒதுக்கப்பட்டுள்ள ஒரே கேரள நதி இதுதான் என்ற செய்தியின் மூலம் இதன் ‘புனிதத் தன்மை’யை நாம் உணர்ந்து கொள்ளலாம்.

நீரின் தூய்மையை அளக்கும் பல்வேறு அலகுகளில் Fecal coliform என்பதும் ஒன்று. 100 மில்லி நீரில் அதிகபட்சமாக 500 Fecal coliform இருக்கலாம் என்பது ஏற்றுக் கொள்ளப்பட்ட தூய்மை விதி. ஆனால் பம்பை நதியில் பக்தர்கள் குளிக்கும் திரிவேணி சங்கமத்தில் 60,000 முதல் 70,000 வரை  Fecal coliform இருக்கிறது. ஏறக்குறைய 140 மடங்கு அதிகம். (பார்க்க: http://www.thehindu.com/2004/01/05/stories/2004010504470400.htm)

விலங்குகளின் கழிவுகள், பறவை எச்சங்கள், செயற்கை உரம் கலந்த விவசாயக் கழிவுகள் மற்றும் மனிதக் கழிவுகள் இவற்றின் ஏதேனும் ஒன்று ஆறுகளில் கலப்பதன் மூலமாக Fecal coliform அளவு அதிகமாகும். பம்பை நதியில் Fecal coliform அளவு அதிகமாக இருப்பதற்கு மனிதக் கழிவுகள் அதில் அதிகம் கலப்பதுதான் காரணம் என்று ஆய்வுகள் தெரிவிக்கின்றன. 

பம்பை நதியின் நீர்பிடிப்பு பகுதியில்தான் சபரிமலைக் கோயில் உள்ளது. கோயிலிற்கு கீழே 4 கி.மீ. தொலைவில் பம்பை நதி ஓடிக் கொண்டிருக்கிறது. சீஸன் களை கட்டும் நவம்பர், டிசம்பர், ஜனவரி மாதங்களில் இலட்சக்கணக்கான பக்தர்கள் அங்கு குவிகின்றனர். கழிப்பறை வசதி முறையாக இல்லாத முற்காலத்தில் பக்தர்கள் பம்பை நதியின் நீர்ப்பிடிப்பு பகுதிகளைத்தான் தங்களது இயற்கை உபாதைகளுக்குப் பயன்படுத்தி உள்ளனர். ஓரளவு கழிப்பிட வசதிகள் தற்போது இருந்தாலும், நிலைமையில் பெரிய மாற்றமில்லை. இலட்சக்கணக்கானோர் கூடுவதால் செப்டிக் டேங்குகள் நிரம்பி, மிகையான கழிவுநீர் பம்பை நதிக்குள் கலக்கிறது. அந்தப் பகுதிகளில் இருக்கும் வீடுகளின் கழிவறைத் தண்ணீர், சபரிமலை செல்லும் வழியிலும், அப்பாச்சிமேட்டிலும் வணிகர்கள் கட்டியிருக்கும் கழிப்பறைகளின் கழிவுகளும் நேரிடையாக பம்பை ஆற்றில்தான் கலக்கின்றன. அதோடு, சபரிமலைப் பிரசாதமாக தரப்படும் அரவனை தயாரிப்பிலும், பக்தர்களுக்கான அன்னதான தயாரிப்பிலும் உதிரியாக வெளிப்படும் சமையலறைக் கழிவுகள் பம்பை நதியில்தான் கலக்கின்றன. (ஆதாரம்: http://www.thehindu.com/todays-paper/tp-national/tp-kerala/state-agencies-polluting-pampa/article3305724.ece)

பம்பை நதியைத் தூய்மைப்படுத்துதல் தொடர்பாக ஆராய்வதற்கு நியமிக்கப்பட்ட கமிட்டியில் வேலை பார்த்த மூத்த ஆராய்ச்சியாளர் ஒருவர், “எத்தனை பொதுக் கழிப்பிடங்கள் இருந்தாலும், பக்தர்கள் பொதுவெளியில் மலம் கழிப்பதைத்தான் விரும்புகின்றனர். இது தண்டனைக்குரிய குற்றம் என்று அறிவித்து நடைமுறைப்படுத்தினால் ஒழிய, இப்பழக்கத்தை மாற்ற முடியாது. கோயில் வருவாயை முக்கியமாகக் கருதி, பக்தர்களின் மீது நடவடிக்கை எடுக்க அரசு தயங்குகிறது” என்று தெரிவித்துள்ளார். (பார்க்க: http://www.deccanchronicle.com/141129/nation-current-affairs/article/pamba-river-be-cleansed-6-months)

ஆண்டுதோறும் சபரிமலைக்கு சுமார் 3 கோடி பேர் வருகை தருகிறார்கள். 2007, ஜனவரி 14ம் தேதி மட்டும் ஐம்பது இலட்சத்துக்கும் அதிகமானோர் அய்யப்பனை தரிசித்திருக்கிறார்கள். (http://topyaps.com/top-10-worlds-largest-human-gathering-in-history) யோசித்துப்  பாருங்கள்... நதி எந்தளவுக்கு அசுத்தமாக இருக்கும் என்று...

நதியைத் தூய்மைப்படுத்துவதற்கு 70% நிதியை அதாவது 12.92 கோடி ரூபாயை நடுவண் அரசு ஒதுக்கி இருக்கிறது. சபரிமலைக் கோயிலை நிர்வகித்து வரும் திருவிதாங்கூர் தேவஸ்தானம், மீதமுள்ள 30% நிதியை அளிக்கத் தயாராக இருக்கிறது. ஆனால் கேரள அரசிடமிருந்து எந்தவித முன்னெடுப்பும் இல்லை.

மொத்தமாகப் பார்க்கும்போது, ஒன்று மட்டும் புரிகிறது. பம்பை நதி என்பது என்பது மிகப் பெரிய திறந்தவெளி செப்டிக் டேங்க். இதில் குளித்து எழுபவர்களுக்கு புண்ணியம் கிடைக்கிறதோ இல்லையோ, ‘வேறு ஒன்று’ கிடைப்பது உறுதி! இதில் குளிப்பதற்கு இரண்டு மாத விரதம் வேறு! அதற்குப் பதில் நேராக அவரவர் வீட்டு செப்டிக் டேங்கில் குதித்து விடலாமே!

***

பேட்டைத் துள்ளலில் பசித்திருந்த பக்தர்கள் சாப்பாட்டுப் பொட்டலங்களைப் பிரித்தனர். நானும் அவர்களோடு சேர்ந்து கொண்டேன். லெமன் சாதம், சாம்பார். பசியில் ருசி எதுவும் தெரியவில்லை.

pamba river 600

கூடாரத்தின் அருகே பக்தர்களுக்குத் தேவையான பொருட்களை விற்கும் கடைகள் இருக்கின்றன. முன்தினம் இரவு போர்வை இல்லாமல் அச்சன்கோவிலில் தவித்த அனுபவம் காரணமாக, முதலில் ஒரு போர்வை வாங்கினேன். பக்கத்திலிருந்த டீக்கடைக்கு சில பக்தர்கள் நகர்ந்தார்கள். அங்கே ஏற்கனவே இருந்த எங்கள் குழு பக்தர் ஒருவர், “தயவு செய்து டீ வாங்காதீங்க… அவ்வளவு கேவலமாக இருக்கிறது” என்று எச்சரித்தார்.

சிறிது நேரத்தில் புனித(!) நதி நீராடல் தொடங்கியது. நீராடும் முறைகளை குரு சாமி விளக்கினார். கூட்ட இரைச்சல் அதிகமாக இருந்ததாலும், நான் பின்னே இருந்ததாலும் அவர் சொன்னது கேட்கவில்லை. எனக்குப் பக்கத்திலிருந்த வேறொரு குழு பக்தருடன் பேச்சு கொடுத்தேன். பம்பை நதிக்கரையில் இருக்கும் திரிவேணி சங்கமத்தில்தான் ராமர் தனது தந்தை தசரதருக்கு ‘பிதுர் தர்ப்பணம்’ செய்திருக்கிறாராம். அதனால் அதே இடத்தில் பக்தர்கள் தனது முன்னோர்களுக்கு பிதுர் தர்ப்பணம் செய்கிறார்களாம். அதுவுமில்லாமல் அய்யப்பன் பூமியில் அவதாரம் செய்ததும் இந்த நதிக்கரையில்தான். அய்யப்பனை நினைத்து, இந்த நதியில் மூழ்கி எழுந்து, கட்டியிருக்கிற ஆடையை ஆற்றிலேயே விட்டுவிட்டால், நமது பாவங்கள் அதோடு போய், புண்ணியங்கள் அநேகம் கிடைக்கும் என்று சொன்னார்.

நதியை அருகே இருந்து பார்த்ததும் எனக்கு பக்கென்று இருந்தது. அந்த இரவு வேளையிலும் நதியின் அசுத்தம் தெரிந்தது. கறுப்பாக அழுக்கு நீராக இருந்தது. உள்ளே துணிகளும், தர்ப்பணம் செய்த பொருட்களும் குப்பையாக மிதந்து கொண்டிருந்தன. நதிக்கரையில் உள்ளேயிருந்து எடுத்த துணிகளை குவித்து வைத்திருந்தார்கள். அதன் அருகே, நதியை தூய்மையாக வைக்க உதவுமாறும், துணிகளை உள்ளே போட வேண்டாம் என்றும் தமிழ், மலையாளம், ஆங்கிலத்தில் அறிவிப்புப் பலகைகள் வைத்திருந்தார்கள். புண்ணியங்கள் தேடும் அவசரத்திலிருந்த பக்தர்கள் அதைக் கண்டுகொள்ளவில்லை.

சரவணனிடம் மெதுவாகக் கூறினேன். “வேண்டாம் சரவணா! நதி ரொம்பவும் அழுக்கா இருக்கு. இதிலே குளிக்கிறதும், சாக்கடையில் விழுறதும் ஒண்ணுதான். குளிப்பதுபோல் பாவ்லா காட்டி வந்துவிடலாம்”

சரவணன் கேட்பதாக இல்லை. மற்ற சாமிகள் ஐந்து அல்லது ஆறு முறை முங்கினால், இவன் பதினோரு முறை முங்கி எழுந்தான். புதிதாக ஒரு அமைப்பில் சேர்பவர்கள், கொஞ்ச நாட்களுக்கு தீவிரமாக இயங்கி நல்ல பேர் வாங்கும் முனைப்பில் இருப்பார்கள் அல்லவா? அதேவிதமான முனைப்பு சரவணனிடமும் இருந்தது.

எங்கள் குழுவிலிருந்த பக்தர்கள் சிலரும் தாங்கள் உடுத்தியிருந்த துணிகளை ஆற்றிலேயே விட்டுவிட்டு வந்தார்கள். இரவி மாமா “இங்கு குளிக்காமல் சபரிமலை வரக்கூடாது” என்றார். “மாமா! குளிப்பதும், உடம்பில் நீர் அள்ளித் தெளித்துக் கொள்வதும் ஒரே பலனைத்தான் தரும். நான் நீர் அள்ளித் தெளித்துக் கொள்கிறேன்” என்று சமாளித்தேன். அவர் முன்னேயே நதிப்பக்கம் போய், வெறும் கையால் நீரை அள்ளித் தெளிப்பதுபோல் பாவனை செய்தேன். எனக்கு என்னவென்றால், நீர் அள்ளித் தெளிப்பதற்காக கையால் உள்ளே விட்டால், பிறகு கையை எங்கே போய் கழுவுவது?

***

அங்கே குளித்தவர்களில் மெத்தப் படித்தவர்கள், சுமாராகப் படித்தவர்கள், படிக்காத பாமரர்கள் என அனைத்துத் தரப்பினரையும் பார்க்க முடிந்தது. இவர்களில் பலர், வீட்டை விட்டு வெளியே போனால் மினரல் வாட்டர்தான் குடிப்பவர்களாக இருப்பார்கள். குளிக்கிற வாளியில் லேசாக அழுக்கு இருந்தால்கூட, மொத்தத் தண்ணீரையும் கீழே கொட்டுபவர்களாக இருப்பார்கள். மழைநீரில் நடந்து வந்திருந்தால் கூட, வீட்டிற்குள் நுழைவதற்கு முன் கால் கழுபவர்களாக இருப்பார்கள். அவர்கள்தான் இன்று இந்த அசுத்தமான நதியில் ‘புண்ணியம்’ என்று தலை முங்கிக் குளிக்கிறார்கள். அடுத்த மாதம் இதைவிட பலமடங்கு சுத்தமாக, அதே நேரத்தில் கொஞ்சம் கலங்கலாக இருக்கும் கிராமத்து ஓடைத்தண்ணீரில் குளிக்கச் சொன்னால் குளிப்பார்களா? மாட்டார்கள். சுத்தம் குறித்த இந்தளவு விழிப்புணர்வு இருக்கும் இவர்களை, இந்த பம்பையில் குளிக்கச் செய்யுமளவிற்கு செய்வது எது?

பக்தி என்ற பெயரில் சாக்கடையில் விழச் சொன்னாலும் விழுவதற்கு நம் மக்கள் தயாராக இருக்கிறார்கள். ‘பக்தி வந்தால் புத்தி போகும்’ என்ற பெரியாரின் பொன்மொழிக்கு முழுமையான அர்த்தத்தை அனுபவப்பூர்வமாக அன்றைக்கு உணர்ந்தேன்.

pamba 381

அதே நேரத்தில் பகுத்தறிவாளனாக வாழ்வதின் பெருமிதத்தையும் முழுமையாக அடைந்தேன். பித்தலாட்டம் செய்து சம்பாதிப்பது, நம்பிக்கைத் துரோகம் இழைப்பது, பொய் சொல்வது, ஊரை ஏமாற்றுவது என்று அத்தனை பாவங்களையும் செய்துவிட்டு, 45 நாட்கள் மாலை போட்டு சபரிமலை வந்தால் புண்ணியம் கிடைக்கும் என்பது போன்ற மூடநம்பிக்கைகள் நம்மிடம் இல்லை. எது சரி, எது தவறு என்பதை பகுத்தறிவின் துணை கொண்டு ஆராய்ந்து வாழ்கிறோம். முன்னோர்கள் நம் தலைமீது உட்கார்ந்து நம்மை ஆள அனுமதிப்பதில்லை. புரட்டாசி மாதம் அசைவம் சாப்பிடக்கூடாது என்பது மாதிரியான கட்டுப்பாடுகள் நம்க்கு இல்லை. நல்ல நாள், நல்ல நேரம், இராகு காலம் எல்லாம் இல்லை. நமக்குப் பிடித்த வாழ்க்கையை எல்லா நாட்களிலும், எல்லா நேரங்களிலும் அனுபவித்து வாழ முடிகிறது. குறிப்பாக, மற்றவர்கள் எல்லாம் புண்ணியம் என்று சாக்கடையில் விழும்போது, ‘உன் புண்ணியமும் வேண்டாம், ஒரு மயிரும் வேண்டாம்’ என்று கம்பீரமாக கரையில் நிற்க முடிகிறது.

***

புண்ணியங்கள் நிறைய சேர்த்து, நதியில் இருந்த எழுந்த எங்கள் குழுவினர், கைலாயத்தில் சிவனுக்குப் பக்கத்து அறையை முன்பதிவு செய்த மகிழ்ச்சியோடு கூடாரம் நோக்கிப் புறப்பட்டனர். போகிற வழியெங்கும் புண்ணியங்கள் சிந்திக்கொண்டு போவதை கவலையோடு பார்த்தவாறே பின்தொடர்ந்தேன்.

கூடாரத்தில் எல்லோருக்கும் படுக்க இடம் கிடைக்கவில்லை. சிலர் உட்கார்ந்து இருந்தார்கள். இடம் கிடைத்தவர்களும், நெருக்கி அல்லது கால்களை மடக்கித்தான் படுக்க முடிந்தது.

பகல் முழுக்க அலைந்து திரிந்ததில் உடல் களைத்திருந்தது. ‘தூங்குடா கைப்புள்ளே’ என்று ஒரு தூக்கம் போட்டேன். உட்கார்ந்திருந்த பக்தர் ஒருவர் எழுப்பி விட்டார். ‘மலைக்குப் போற நேரம் வந்திருச்சுங்க’ என்றார். நேரம் பார்க்க கைபேசியை எடுத்தேன். ஒரு மணி நேரம்தான் தூங்கியிருக்கிறேன்.

குரு சாமி பூஜை செய்து, இரு முடியை ஒவ்வொருவர் தலையிலும் ஏற்றினார். “மலையில் ஏறும்போது, இருமுடி கீழே விழாமல் ஏற வேண்டும்; ரொம்பவும் களைப்பு ஏற்பட்டால் மூத்த சாமி ஒருவரிடம் சொல்லி அவர் கையால் இருமுடியை இறக்கி, ஒரு போர்வை மீது வைக்க வேண்டும்.” என்று அறிவுறுத்தினார்.

இரண்டு மணிவாக்கில் மலை ஏறத் தொடங்கினோம். பம்பை நதியோரமாக நடந்து, மலைக்கு ஏறும் படிக்கட்டுகளில் நுழைந்தோம்.

அங்கு மிகப்பெரிய அதிர்ச்சி எனக்குக் காத்திருந்தது. இரண்டு மாதம் விரதமிருந்து, தினசரி பஜனை பாடி, இருமுடி கட்டி வந்த தமிழக பக்தர்களைக் கேலி செய்வதுபோல் அது இருந்தது. நோகாமல் நோன்பு கும்பிடும் வழிமுறையை மலையாளிகள் செய்து கொண்டிருந்தார்கள்.

குறிப்பு: நாங்கள் பம்பை நதிக்கு சென்றது இரவு நேரம் என்பதால், அப்போது எடுக்கப்பட்ட  நிழற்படங்கள் தெளிவானதாக இல்லை. அதனால் பொருத்தமான படங்களை இணையத்திலிருந்து எடுத்து பயன்படுத்தியுள்ளேன்.

(தொடரும்)

- கீற்று நந்தன் (இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.)