இந்தியாவிலேயே முதன்முறையாக, 1885 ஆம் ஆண்டு சென்னையில்தான் உயிரியல் பூங்கா அமைக்கப்பட்டது என்பது, தமிழகத்துக்குப் பெருமை. அந்தப் பூங்கா, சென்னை மையத் தொடர் வண்டி நிலையத்தின் ஒரு பகுதியாக உள்ள பத்து மாடிக் கட்டடத்துக்குப் பின்பகுதியில்,நேரு விளையாட்டு அரங்கத்துக்கும் இடைப்பட்ட பகுதியில் அமைந்து இருந்தது. சிறுவனாக இருந்தபோது, அதை நான் பார்த்து  இருக்கிறேன். அப்போது எனது உறவினர்கள்,அதை ‘உயிர்க்காலேஜ் என்றும்;கன்னிமரா நூலகத்துக்கு அருகில் உள்ள அருங்காட்சியகத்தை ‘செத்த காலேஜ் என்றும் அழைப்பார்கள். அது எனக்கு வேடிக்கையாக இருக்கும்.

சென்னை நகரின் விரைவான வளர்ச்சியைக் கருத்தில் கொண்டு,தொலைநோக்குப் பார்வையோடு, அன்றைய ஆட்சியாளர்கள், இந்த உயிரியல் பூங்காவை, வண்டலூருக்கு இடமாற்றம் செய்தனர். அறிஞர் அண்ணா உயிரியல் பூங்கா என்று பெயரும் சூட்டினர்.

‘இவ்வளவு தொலைவில் கொண்டு போய் அமைக்கின்றார்களே? யார் போய்ப் பார்ப்பார்கள்?’ என்றே அப்போது எதிர்க்கட்சியினர் விமர்சித்தனர். ஆனால், அந்த முடிவு சரிதான் என்பதை, இன்றைய  சென்னை நகரின் அசுர வளர்ச்சி எடுத்துக் காட்டிக் கொண்டு இருக்கின்றது. 

நூற்றுக்கணக்கான முறை அந்த வழியாக சாலையில் பயணித்து இருக்கிறேன். ஒவ்வொரு முறை விலங்குகள் காட்சியகத்தின் சுற்றுச்சுவரை,வெளிவாயிலைப் பார்க்கும்போதும், விரைவில் போய்ப் பார்க்க வேண்டும் என்று நினைப்பேன்.அந்த இடத்தைக் கடப்பதோடு, அந்த எண்ணமும் அழிந்து விடும்.அவ்வளவுதான்.அடுத்து மறுமுறை அந்த வழியாகப் போகும்போது, அதே நினைப்பு, அதே மறதி.

9 ஆம் வகுப்பு படிக்கின்ற என் மகளுக்குக் கோடை விடுமுறை. ஊரில் இருந்து என் மைத்துனரின் நான்கு வயது மகன் வந்து இருக்கின்றான்.இருவருக்கும்,சுற்றிக் காண்பிப்போம் என்று கருதி, (7.4.2013) அழைத்துச்  சென்றேன்.

வண்டலூர் தொடர்வண்டி நிலையத்தில் போய் இறங்கினோம்.ஞாயிற்றுக்கிழமை என்பதால், நல்ல கூட்டம். ஆனால், வெளியே போகின்ற வழியைத் தேடி ஒவ்வொருவரும் தத்தளித்துக் கொண்டு இருந்தார்கள். தொடர்வண்டி நிலையத்துக்கும், நெடுஞ்சாலைக்கும் இடையில் மரங்கள் அடர்த்தியாக வளர்ந்து இருப்பதால்,எளிதில் கண்டுபிடிக்க முடியவில்லை. ஒவ்வொருவரும் கிடைத்த இடைவெளியில், பள்ளத்துக்கு உள்ளே இறங்கி, சாலையை நோக்கிப் போனார்கள்.

உயிரைப் பிடித்துக் கொண்டு ஓடுங்கள்

நாங்களும் அப்படியே இறங்கி, தேசிய நெடுஞ்சாலைiயில் போய் நின்றோம். சாலையைக் கடக்க வேண்டும்.ஒரு அடி இடைவெளி இல்லாமல் அணிவகுத்துச் சீறிப் பாய்ந்து வருகின்றன பேருந்துகளும், இதர வண்டிகளும். உயிரைக் கையில் பிடித்துக் கொண்டுதான் கடக்க வேண்டும். கிடைத்த ஒரு இடைவெளியில் நான் விரைவாக முன்னேறுகையில், ‘அய்யோ குழந்தை குழந்தை’ என்று ஒரு பெண்மணி அலறவும், நான் திரும்பிப் பார்த்தேன். என் மகள் கையில் பிடித்துக் கொண்டு இருப்பாள் என்று கருதி நான் முன்னே சென்றுவிட, அங்கே சிறுவன் தனியாக நிற்கிறான். பாய்ந்து திரும்பி வந்து, பிடித்துக் கொண்டேன். அதிர்ச்சி விலக சில நிமிடங்கள் ஆனது.

இப்படி ஒரு அதிர்ச்சி,எனக்கு மட்டும் அல்ல;குழந்தைகளை அழைத்துச் செல்லுகின்ற அனைத்துப் பெற்றோர்களுக்கும் கண்டிப்பாகக் கிடைக்கும்.வண்டலூருக்கு இத்தனைப் பயணிகள் குழந்தைகளோடு வருகின்றார்களே,அவர்கள் சாலையைக் கடப்பதற்கு உதவியாக அங்கே ஒருவரும் இல்லை.

நெடுஞ்சாலைகளைத் தோண்டி,தரைக்கு அடியில் நடைவழிகள் அமைப்பது எளிதான ஒன்று அல்ல. ஆனால், தொடர்வண்டி நிலையத்துக்கு உள்ளே, தண்டவாளங்களைக் கடப்பதற்காக அமைக்கப்பட்டு இருக்கின்ற இரும்பு நடைமேம்பாலங்களை,அப்படியே வெளியே நீட்டி,நெடுஞ்சாலைக்கு மறுபுறம் போய் இறங்குமாறு அமைப்பது எளிதான ஒன்று ஆயிற்றே? வண்டலூரில் அப்படி அமைக்கலாமே? கவனிப்பார்களா?

சரி.சாலைக்கு மறுபுறம் போய்விட்டோம். அங்கிருந்து, வண்டலூர் பூங்கா இரண்டு கிலோமீட்டர் தொலைவு என்றார்கள். 12 மணி உச்சி வெயிலில் நடந்து செல்ல முடியாது.

இந்த இடத்தில், சாலையின் இருபுறங்களிலும் மேம்பாலங்கள் உள்ளன. அங்கிருந்துதான், பாலம் உயரத் தொடங்குகிறது. எனவே, அதற்கு அடியில் சென்று நிற்க முடியாது. அதை ஒட்டி, நெடுஞ்சாலையில்தான் நிற்க வேண்டும். நூறு அடிகள் தொலைவில் பேருந்து நிலையம் இருக்கிறது.ஆனால்,அங்கே போகாமல் எல்லோரும் சாலையைக் கடந்த இடத்திலேயே நிற்கிறார்கள். அவர்களை அங்கே போகும்படிச் சொல்லவும் ஆள் இல்லை.

பேருந்தில் ஏறினோம்.ஆறு ரூபாய் கட்டணம்.ஐந்து நிமிடங்களில் கொண்டு போய் இறக்கினார்கள். மீனம்பாக்கம், திரிசூலம் தொடர்வண்டி நிலையங்களுக்கு இடையிலான தொலைவைப் போல, சுமார் மூன்று மடங்கு இருக்கும். வண்டலூர் பூங்காவுக்கு எதிரே, ஒரு தொடர்வண்டி நிலையத்தை,பத்து ஆண்டுகளுக்கு முன்பே அமைத்து இருக்க வேண்டும். ஆனால்,இன்றுவரையிலும் அமைக்காதது மட்டும் அல்ல;எதிர்காலத்திலும் அமைப்பதற்கான திட்டமோ,அதற்கான ஆய்வுப் பணிகளோ எதுவும் இதுவரை அறிவிக்கப்படவில்லை.

பூங்காவின் நுழைவாயிலில்... 

உயிரியல் பூங்காவின் முகப்புப் பகுதிகளைப் புதுப்பித்து இருக்கின்றார்கள்.சுவரில் விலங்குகளின் உருவங்களைக் கருங்கல்லில் செதுக்கி வைத்து இருக்கின்றார்கள்.குறை சொல்ல முடியாது. அதற்கு அருகிலேயே விலங்குகளின் வண்ணப்படங்களையும் வரைந்து இருக்கலாம். நெடுஞ்சாலையில் பேருந்துகளில் பயணிப்பவர்கள் மற்றும் குழந்தைகளின் மனதில் அவை எளிதாகப் பதியும்.

பெரியவர்களுக்குக் நுழைவுக் கட்டணம் 30 ரூபாய்; 5 வயது முதல் 15 வயது வரையிலான குழந்தைகளுக்கு  15 ரூபாய். படக்கருவிக்கு 25 ரூபாய். அதில் வெவ்வேறு வகையான கட்டணங்கள் உள்ளன. நியாயமான கட்டணங்கள்தாம். விலங்குகளுக்கு உணவு, ஊழியர்கள் சம்பளம், உள்புறச் சாலைகள் பராமரிப்பு, பார்வையாளர்களுக்கான வசதிகள் என பராமரிப்புச் செலவுகள் அதிகம்.

உள்ளே நுழைகின்ற இடத்தில்,இரண்டு ஊழியர்கள்,பயணிகள் கொண்டு வந்த பொருள்களை எல்லாம் வெளியில் எடுத்துச் சோதித்துப் பார்த்தார்கள். சரியான நடவடிக்கை, பாராட்ட வேண்டும். இல்லாவிட்டால், நம்மவர்கள், பூங்காவைக் குப்பையாக ஆக்கி விடுவார்கள். எஞ்சி இருக்கின்ற உணவுகளை,போனால் போகட்டும் என்று,விலங்குகளுக்கு வீசி மகிழ்வார்கள். அந்தக் கொடுமை தடுக்கப்படுகிறது.

உள்ளே நுழைந்தவுடன்,விலங்குகளின் படங்களுடன் குறிப்புகள் காணப்படுகின்றன. அவற்றை ஒருமுறை படித்துக் கொள்ள வேண்டும்.அடுத்து உள்ளே போய்ப் பார்க்கும்போது அடையாளம் காண எளிதாக இருக்கும். ஏனென்றால், உள்ளே ஒட்டகச் சிவிங்கி உலவுகின்ற இடத்தில் உள்ள அறிவிப்புப் பலகையை,ஒட்டகச் சிவிங்கி மட்டும்தான் படிக்க முடியும். பார்வையாளர்களிடம் இருந்து சுமார் 100 அடி; ஆம் 100 அடிகள் தொலைவில் உள்ள ஒரு மரத்தில் கட்டி வைத்து இருக்கின்றார்கள். பல விலங்குகளைப் பற்றிய பெயர்ப்பலகைகளில், குறிப்புகளை விட, அதில் கிறுக்கி வைக்கப்பட்டு இருக்கின்ற காதலர்களின் பெயர்கள்தாம் பெரிதாகத் தெரிகின்றன.

உணவு

பூங்காவுக்கு உள்ளே செல்கிறோம்.தொடக்கத்திலேயே தமிழ்நாடு அரசு உணவகம் இருந்தது. மணி 12.30 ஆகி இருந்தது. இனி உள்ளே உணவகங்கள் இருக்காது; எனவே இங்கேயே முடித்துக் கொள்வோம் என்ற தொலைநோக்குப் பார்வையோடு, உள்ளே நுழைந்தோம்.

தமிழ்நாடு உணவகத்தில் கோழி பிரியாணி ஒரு தட்டு 100 ரூபாய். சாம்பார், தயிர் சாதங்கள் அருமை. தட்டு நிறையக் கொடுக்கின்றார்கள். அதுவே போதும்.  ஆனால், உணவகம் சந்தைக் கடை போல இருக்கின்றது. ஒரு ஒழுங்கு இல்லை. மேசையைத் துடைக்க ஒருவரும் இல்லை.ஏற்கனவே சாப்பிட்டு விட்டுப் போனவர்கள் வைத்த தட்டை சற்றே தள்ளி வைத்துவிட்டு அங்கே நீங்கள் உட்கார்ந்து கொள்ள வேண்டும்.கல்லாவிலும் நெருக்கடி, உணவு வாங்கும் இடத்திலும் தள்ளுமுள்ளு. ஒருவழியாக உணவை முடித்தோம். 

பிறகு, எனது கணிப்பு சரியாகவே அமைந்தது. உள்ளே ஒரு இடத்தில் தேநீர் மட்டும் வைத்து இருக்கிறார்கள்.கடைசியாக வெளியே வருகின்ற இடத்துக்கு அருகில் மற்றொரு உணவகம் இருக்கின்றது.தொடக்கத்திலேயே உணவை முடித்துக் கொள்ளாவிட்டால்,பிறகு பட்டினிதான். நடக்க முடியாது.

பேட்டரி கார்கள், மிதிவண்டிகள்

சற்றுத் தொலைவில், பேட்டரி கார்களில் செல்வதற்கான முன்பதிவு வரிசை. முப்பது பேர்களுக்கும் மேல் வரிசையில் நின்றுகொண்டு இருந்தார்கள்.அதில் இரண்டு வரிசை. மற்றொரு வரிசை, சிங்கங்கள் உலவுகின்ற இடங்களுக்கு எனத் தனியாக உள்ளது. பிற்பகல், மூன்று மணிக்கு மேல்தான் சிங்கங்களைப் பார்க்க முடியுமாம். எனவே, பொது வரிசையில் நின்றேன். பத்து நிமிடங்கள் கழிந்தன. வரிசையில் நின்ற ஒருவர் சொன்னார்: ‘3.30, 4.00 மணிக்கான பேட்டரி கார்களில் போவதற்குத்தான் இப்போது சீட்டு கொடுக்கிறார்கள்’ என்றார். அதிர்ச்சியாக இருந்தது.

11 பேர் சேர்ந்து 1.15 மணி நேரம் பூங்காவைச் சுற்றி வர தனியாக வண்டி கொடுக்கிறோம். அதற்கு வாடகை ரூ. 350 என்று எழுதி இருந்தார்கள். அதுவும் எல்லோருக்கும் கிடையாது. ஒன்றிரண்டு வண்டிகள்தான் உள்ளன.

இத்தனை ஆயிரம் மக்கள் வருகிறார்கள்;ஒருசிலருக்குத்தான் பேட்டரி கார்களில் இடம்; அதுவும் பல மணி நேரம் காத்து இருக்க வேண்டும் என்கிறபோது,வேறு வழி இன்றி, எல்லோரும் நடக்கத் தொடங்கி விடுகிறார்கள். அயல்நாடுகளில், பேட்டரி கார்கள் அல்ல; சாலையில்ஓடுகின்றபேட்டரிதொடர்வண்டிகளில்,ஒரேவேளையில்நூற்றுக்கணக்கானவர்களை அமர வைத்துச் சுற்றிக் காண்பிக்கிறார்கள்.இங்கே அத்தகைய ஏற்பாடு இல்லை. உங்களுக்கு அதிர்ஷ்டம் இருந்தால் பேட்டரி காரில் இடம் கிடைக்கும்.நான் அதை நம்புவது இல்லை என்பதால், நடக்கத் தொடங்கினேன்.

சற்றுத் தள்ளி இன்னொரு கூட்டம்.அங்கே புத்தம் புதிய மிதிவண்டிகள் நிறுத்தப்பட்டு இருந்தன. சைக்கிளிலும் சுற்றிப் பார்க்கலாம். ஒரு வண்டிக்கு ஒரு மணி நேர வாடகை 15 ரூபாய்; ஆனால், முன்பணம் 200  ரூபாய். அப்போதுதான், வண்டிகள் ஒழுங்காகத் திரும்பி அங்கே வந்து சேரும்;இல்லாவிட்டால்,எடுத்துக்கொண்டு போகின்ற இளைஞர்கள் ஆங்காங்கே நிறுத்திவிட்டுப் போய்விடுவார்கள். ஆனால், குழந்தைகளை வைத்துக்கொண்டு போவதற்கு  வசதியாக, பின் இருக்கை இல்லை. என்னிடம் ஒரு குழந்தை இருக்கிறது. வேறு வழி இல்லை என்பதால், அதையும் தவிர்த்துவிட்டு நடக்கத் தொடங்கினோம். எங்களால் முடியும். சற்றே வயது முதிர்ந்தவர்கள், நடக்க முடியாதவர்கள் என்ன செய்வார்கள்?

ஒளிந்து இருக்கும் ஊழியர்கள்

மிதிவண்டிகளுக்குத் தனித்தடம் இருக்கின்றது. ஆனால், கும்பலாக வருகின்ற இளைஞர்கள், மக்கள் நடக்கின்ற வழிகளிலும் ‘சைட், சைட்’ என்று கத்திக்கொண்டு வருகிறார்கள். அதைத் தடுப்பதற்கும் யாரும் இல்லை.சீருடை அணிந்த இரண்டு ஊழியர்கள், உள்ளே நுழைகையில் உடைமைகளைச் சோதித்தார்கள் அல்லவா?அதற்குப்பிறகு,பூங்காவுக்கு உள்ளே நாள் முழுவதும் சுற்றினாலும், பேட்டரி கார்களை ஓட்டுகின்ற ஓட்டுநர்களைத் தவிர,சீருடை அணிந்த ஒரு ஊழியரையும் நீங்கள் பார்க்க முடியாது.பார்வையாளர்களுக்குஎந்த விளக்கத்தையும் தர மாட்டார்கள். அவர்களுக்கு வேறு இல்லையா என்ன? விலங்குகளை மேய்ப்பதா வேலை?

வண்டலூர் விலங்குகள் பூங்காவுக்கு உள்ளே ஒளிந்து இருக்கின்ற ஊழியர்களைத் தேடிக் கண்டுபிடிப்பவர்களுக்கு 100 ரூபாய் பரிசு.

பறவைகள்

தொடக்கத்தில் சிங்கவால் குரங்குகள், சிம்பன்சி ஆகியவற்றைப் பார்த்துவிட்டு இடதுபுறமாக நடந்தால், பறவைகளின் கூண்டுகள். மயில் கூண்டு சற்றே பெரிதாக இருக்கிறது. வெள்ளை மயில் தோகை, விரித்து ஆடிக்கொண்டு இருந்தது. எல்லோரும் போட்டி போட்டுக் கொண்டு படம் எடுத்தார்கள்.அந்த மயிலும்,எவ்வளவு வேண்டுமானாலும் படம் பிடித்துக் கொள்ளுங்கள் என்று, நீண்ட நேரமாக அப்படியே நின்றுகொண்டு இருந்தது.

அடுத்து வரிசையாக கிளிகள், புறாக்கள். ஒவ்வொன்றிலும் ஒரு சோடிதான். கூண்டுக்கு உள்ளே அவை எங்கே நிற்கின்றன என்று தேடித்தான் பார்க்க வேண்டும். பல கூண்டுகளில் ஒன்றும் இல்லை.

பயணிகளுக்கு வசதிகள்

தொடர்ந்து நடந்தால், ஆங்காங்கே பார்வையாளர்கள் இளைப்பாறிக் கொள்ள வசதியாக பல மண்டபங்களைக் கட்டி வைத்து இருக்கின்றார்கள்.தண்ணீர்த் தொட்டிகளும் உள்ளன. வழிகாட்டிப் பலகைகளும் வைத்து இருக்கின்றார்கள்.நடைவழிகளில் மரங்கள் உயர்ந்து ஓங்கி வளர்ந்து இருப்பதால்,நல்ல நிழல் தருகின்றன.ஒரு காடு போன்ற தோற்றத்திலேயே இருக்கின்றது. நன்றாகப் பராமரித்து வருகிறார்கள். பாராட்ட வேண்டிய நடவடிக்கைகள். மே மாதம் கோடையிலும் கூட,நடந்தே சுற்றிப் பார்க்கலாம்.எல்லோரும் நடக்கின்ற வழியிலேயே நாமும் நடக்கலாம்.

இடையில் கழிப்பு அறை. ‘சிறுநீர் கழிக்க 1 ரூபாய்; இரண்டுக்கு இரண்டு ரூபாய்’ என்று பெரிதாக எழுதி வைத்து இருக்கின்றார்கள்.ஒரு ரூபாயை எடுத்து நீட்டினால்,அங்கே அமர்ந்து இருந்த பெண்மணி, ‘இரண்டு ரூபாய்’ என்றார். நான் ஒரு ரூபாயை வைத்து விட்டு உள்ளே போய் வந்தேன். இப்போது மூன்று பெண்கள் நிற்கின்றார்கள்.

‘ஐய, ஆளப் பாரு; ஒன்றரை லட்சம் ரூபாய் கொடுத்து காண்ட்ராக்ட் எடுத்து வெச்சிருக்கிறோம்; தொர வந்துட்டாரு மோள’ என்று வாழ்த்து வசைமொழிகளை அள்ளி வழங்கினார்கள். அப்போது குறைந்தது, நூறு பேர் என்னைப் பார்த்தார்கள். என் மகள் முறைத்துப் பார்க்கிறாள். கண்டிப்பாக வீட்டில் போய்ச் சொல்லுவாள். எதிர்காலத்திலும் சொல்லிக் காட்டுவாள். கேவலமாக இருந்தது.  நான் அதைப்பற்றிக் கவலைப்படவில்லை. உண்மையை ஊருக்குச் சொல்ல வேண்டியது ஒரு எழுத்தாளனின் சமூகக் கடமை அல்லவா?

வண்டலூர் விலங்குகள் காட்சியகப் பொறுப்பாளருரக்கு வேண்டுமானால் ராஜமரியாதை கிடைக்கலாம்; வேறு ஒரு ஐ.ஏ.எஸ். அதிகாரி, சாதாரண உடை அணிந்து, என்னைப் போல அங்கே சட்டம் பேசி இருந்தால்,அவருக்கும் இப்படித்தானே மரியாதை கிடைத்து இருக்கும்? என்று எண்ணிப் பார்த்தேன். சிரிப்பு வந்தது.

அடுத்த கழிப்பு அறையில், வழக்கம்போல கட்டணத்தை மறைத்து ஒரு பலகையை வைத்து இருக்கின்றார்கள்.

முதலைகள்

தொடர்ந்து நடக்கிறோம். சிறுத்தை, காட்டுக் கழுதை கண்ணில்படுகின்றது. ஆனால், ஒன்று இரண்டு என மிகக் குறைந்த எண்ணிக்கையில்தான் உள்ளன.

முதலைகள்தாம் நிரம்ப உள்ளன.உலகின் பல கண்டங்களில் வாழுகின்ற பலவகையான முதலைகள். ஆனால், அவற்றுக்கு உடலை மறைத்துக் கொள்ளக்கூடப் போதுமான அளவில் நீர் இல்லை. ஒரு பெரிய முதலையின் மீது சிறுவர்கள் எறிந்த கல் அப்படியே கிடந்தது.  மற்றொரு முதலை உடலில் பெரிய பிளவு.ஈக்கள் மொய்த்துக் கொண்டு இருந்தன. முதலைகள் இருக்கின்ற இடத்தில் மட்டும் சுவர் உயரம் குறைவாக இருக்கின்து.அவை வெளியே வர முடியாது என்பது ஒரு காரணமாக இருக்கலாம். ஆனால், இரண்டு மூன்று அடி உயரத்துக்கு, சிறுவர்கள் கல் வீச முடியாத அளவுக்கு ஒரு வலை அமைப்பது சிறந்தது. தண்ணீர் கருப்பாக இருக்கின்றது. கழிவுகள் நிரம்ப இருக்கும் போலும்.

அயல்நாடுகளில் பாலங்கள் எப்படிக் கட்டுகிறார்கள் என்பதைப் பார்க்க பொதுப்பணித்துறைப் பொறியாளர்களை அனுப்புவது போல, விலங்குகளை எப்படிப் பராமரிக்கின்றார்கள், கழிவுகளை எப்படி அகற்றுகிறார்கள் என்பதை அறிந்து வர, பூங்கா பொறுப்பாளரையும், நிரந்தர ஊழியர்கள் பத்துப் பேரையும் அனுப்பி வைக்க வேண்டும்.

பாம்புகளைப் பார்க்கத்தான் மக்கள் முண்டியடித்துக் கொண்டு போகிறார்கள்.

பாம்புகளோடு தவளைகளும் சேர்ந்து தண்ணீரில் நீந்திக்கொண்டு இருக்கின்றன;ஒரு மலைப்பாம்புக்கு உணவாக, உயிருள்ள கோழியை உள்ளே விட்டு இருந்தார்கள். அது, பம்மிப் பதுங்கியபடி ஒரு மூலையில் உட்கார்ந்து இருக்கின்றதமூன்று அடி தொலைவில் மலைப்பாம்பு படுத்துக் கிடக்கின்றது. பசி எடுக்கும்போது, கோழி காலியாகி விடும். இந்த இரண்டு காட்சிகளையும் பார்த்த மகள் சற்றே அதிர்ச்சி அடைந்தாள்.கோழிக்காகவும், தவளைக்காகவும் வருந்தினாள். அது இயற்கையின் படைப்பு; நாம் ஒன்றும் செய்வதற்கு இல்லை.

அடுத்து, நாரைகள், கொக்குகள். நிரம்ப உள்ளன. ஆனால், தண்ணீர்தான் இல்லை. இருக்கின்ற ஒரு அடி உயரத் தண்ணீரில் ஏதாவது கிடைக்குமா?உற்று நோக்கிப் பார்த்துக் கொண்டு இருக்கின்றன. அவற்றுக்கு எப்போதும் ஏமாற்றம்தான் மிஞ்சும்.அதைப் பார்த்து நமக்கும் வருத்தமாக இருந்தது, தாகமாகவும் இருந்தது.

அடுத்து, ‘எச்சரிக்கை; சிங்கங்கள் உலவுகின்ற பகுதி’ என்று ஒரு அறிவிப்புப் பலகை.

அப்படியா திறந்தவெளியில் விட்டு வைத்து இருக்கின்றார்கள்?எதற்காக இப்படி அச்சுறுத்த வேண்டும்?

சிங்கங்களைப் பார்க்கத் தனிக்கட்டணம், தனி நேரம் என்பதால், எல்லோரும் பார்க்கின்ற வாய்ப்பு இல்லை.ஒன்றிரண்டு சிங்கங்களையாவது ஒரு இடத்தில் வைத்துக் காண்பிக்கலாம்.புலி எங்கே இருக்கிறது என்று கண்டுபிடிக்க முடியவில்லை.இரண்டு ஒட்டகச்சிவிங்கிகளும், வரிக்குதிரையும் கண்ணில்பட்டன. காட்டுப்பன்றிகள், நரிகளைக் காண முடியவில்லை.புதர்களுக்குள் ஒளிந்து கொண்டு இருக்கலாம்.அல்லது இல்லாமல்கூட இருக்கலாம்.

வறண்டலூர்

சிங்கப்பூர், மலேசிய விலங்குகள் பூங்காக்களில், சிங்கம் உலவும் இடம் என்றால், பத்துக் கிலோ கறி மீந்து கிடப்பதைப் பார்த்து  இருக்கிறேன். அதே போல  இதர விலங்குகள், பறவைகளுக்கும் இழை தழைகளும், பச்சைப் புற்களும் இறைந்து கிடக்கும்; தெளிந்த நீர் நிரம்பி இருக்கும். ஆனால், வண்டலூர், வறண்டலூர் ஆகக் காட்சி அளிக்கின்றது. கூண்டுகளில் போதுமான உணவைப் பார்க்க முடியவில்லை. எதிர்வரும் கோடையின் வெப்பத்தை விலங்குகள் எப்படித் தாங்கப் போகின்றனவோ?

செய்தி ஏடுகளில், ராஜநாகத்தின் கூண்டுக்கு ஏ.சி. பொருத்தி இருப்பதாகச் செய்தி படித்தேன். இதர விலங்குகளுக்கு ஏ.சி. வேண்டாம்; தண்ணீர் நிரம்பி இருந்தாலே போதும்.

இரண்டு நீர்யானைகள் தென்பட்டன.அவைகள் இருந்த தடாகத்தை சில பெண்கள் சுத்தப்படுத்திக் கொண்டு இருந்தார்கள்.கழிவுகளை மலையெனக் குவித்து வைத்து இருந்தார்கள்.குறைந்தது பத்து நாள் கழிவாக இருக்கலாம்.நாற்றம் நமது மூக்கைத் துளைத்தது. எத்தனை நாள்களுக்கு ஒருமுறை அகற்றுகிறார்கள் என்ற அறிவிப்பு இல்லை.

3 மணி முதல் 4 மணி வரையிலும், பூந்தெளிப்பான் குழாயில் யானைகளைக் குளிப்பாட்டுகிறார்கள். அதில் வருகின்ற தண்ணீரில் யானையை நனைக்கலாம் அவ்வளவுதான். அதுவும் ஒவ்வொரு யானைக்கும் ஒருசில நொடிகள்தான். ஐந்து குட்டி யானைகளை சுற்றிச்சுற்றி வலம் வரச்செய்து குளிப்பாட்டினார்கள்.அதைப் பார்த்துக்  குழந்தைகள் குதூகலித்தன.

அடுத்து, ‘இரவுப் பறவைகள்’ என்று ஒரு கூண்டு. உள்ளே கும்மிருட்டு. என்ன இருக்கிறது என்றே தெரியவில்லை.ஏமாந்தபடியே வெளியே வந்தோம்.சுறா மீன் வடிவிலான கட்டடத்துக்கு உள்ளே மீன் காட்சியகம்.உள்ளே நுழையும்போது சரியாக நான்கு மணி. மின்சாரம் போய்விட்டது. இரண்டு வரிசைகளில், சுவரில் கண்ணாடிக்கு உள்ளே மீன்கள் நீந்துகின்றன.ஆனால்,பார்வையாளர்கள் போவதற்கும் வருவதற்கும் இடமே இல்லை. இடித்துக் கொண்டுதான் முன்னேற வேண்டும். இதில் விளக்கு வேறு அணைந்து விட்டால், ஒரேயொரு தொட்டியைப் பார்த்துவிட்டு வெளியே வந்தோம்.
காட்டுக்குள் காதல்

‘காட்டுப் பகுதிக்கு உள்ளே யாரும் செல்லக்கூடாது’ என்று ஒரு அறிவிப்புப் பலகை. அங்கேதான்,இளஞ்சோடிகள் அமர்ந்து,ஒட்டி உரசிக் கொண்டு,கட்டிப் பிடித்துக் காதலித்துக்கொண்டு இருக்கின்றார்கள்.  அவர்களை எச்சரித்து எழுப்பி விடவும் ஊழியர்கள் இல்லை. குழந்தைகள் இந்தக் காட்சியைப் பார்த்துச்  சிரிக்கின்றன. கும்பலாக வருகின்ற இளைஞர்கள் காடுகளுக்கு உள்ளே போய்,விதம்விதமாகப் படம் எடுத்துக் கொண்டு இருக்கின்றார்கள்.

ஒருவழியாக மாலை நான்கரை மணி அளவில் வெளியே வந்தோம்.மறுநாள் காலை எழுந்தவுடன்,இந்தக் கட்டுரையை எழுதி முடித்தேன்.இதை,வண்டலூர் பூங்கா பொறுப்பாளருக்கும் அனுப்பி உள்ளேன்.அவர் என்ன நடவடிக்கை எடுக்கிறார்?விளக்கம் ஏதும் கொடுக்கின்றாரா? என்பதைப் பொறுத்து இருந்துதான் பார்க்க வேண்டும். பதில் வரும் என்றும் நான் எதிர்பார்க்கவில்லை.

அரசு அதிகாரிகளிடம் தகவலைப் பெற முடியாது என்பதால்தான், தகவல் அறியும் உரிமைச் சட்டம் வந்தது.அதுவும் என்ன பாடுபடுகிறது என்பதை நாம் பார்த்துக் கொண்டுதானே இருக்கின்றோம்.குறைந்தபட்சம்,கழிப்பு அறையில் நான் வாங்கிய வசவு,இதர பார்வையாளர்களுக்கும் கிடைக்காமல் இருந்தாலே போதும்.

நமக்கு விளக்கம் கிடைக்கிறதோ,இல்லையோ,எதிர்காலத்தில் எதிர்பார்த்து வருகின்ற பார்வையாளர்கள், ஏமாறாமல், மனமகிழ்ச்சியோடு திரும்பிச் சென்றால் நமக்கும் மகிழ்ச்சி.

குற்றவாளிகளே

திருவனந்தபுரம், தில்லி, பெங்களூரு, கோலா லம்பூர், சிங்கப்பூர், சான் பிரான்சிஸ்கோ என பல ஊர்களில், விலங்குகள் பூங்காக்களை நான் பார்த்து இருக்கின்றேன். மலேசியா, சிங்கப்பூரைப் பற்றிக் கேட்கவே வேண்டாம். அருமையாக இருக்கிறது. திருவனந்தபுரம் விலங்குகள் காட்சியத்தை நன்றாகப் பராமரிக்கின்றார்கள். இந்தியா முழுமையும் பெயர் பெற்று இருக்கின்றது.ஆனால் அதைவிடச் சிறப்பாக வண்டலூரை உருவாக்க முடியும். அதற்கான இடவசதிகள் உள்ளன.

நிறைகளும், குறைகளும் இருந்தாலும், சென்னைவாசிகள், கண்டிப்பாகப் பார்க்க வேண்டிய இடம் வண்டலூர் பூங்கா.அரக்கப்பரக்க அரை நாளில் சுற்றிவந்து விட வேண்டும் என்று முனையாமல்,அந்த நாளில் அடுத்து எந்த வேலையையும் வைத்துக் கொள்ளாமல், முழுமையாக ஒரு நாளை ஒதுக்கிக் கொள்ள வேண்டும். ஆங்காங்கே இளைப்பாறுகின்ற இடங்களில் தங்கி, மெல்ல நடந்து சுற்றிப்பார்த்தால், புத்துணர்ச்சி பெறலாம்.

நான் போகாதது மட்டும் அல்ல,அங்கே இதுவரை என் மகளை அழைத்துச் செல்லவில்லையே என்ற குற்ற உணர்ச்சி உறுத்திக் கொண்டே இருந்தது.ஆம்; குற்றம்தான். குழந்தைகளுக்கு விலங்குகள் பூங்காவைக்  காண்பிக்காமல் இருப்பது குற்றம்தான்.  பத்து வயதுக்கு உட்பட்ட அனைத்துக் குழந்தைகளையும், கண்டிப்பாக விலங்குகள் பூங்காவுக்கு அழைத்துச் சென்று சுற்றிக் காண்பிக்க வேண்டும்.அவ்வாறு செய்யாத பெற்றோர்கள், குற்றவாளிகளே. நான் அந்தக் கடமையைச் செய்து விட்டேன். நீங்கள்?

 

Pin It