மகள்களைப் பெற்ற அப்பாக்கள் மட்டுமல்ல, நல்ல மச்சான்களைப் பெற்ற மாப்பிள்ளைகளும் கொடுத்து வைத்தவர்கள்தான். அவர்களில் நானும் ஒருவன். பின்னே... ஒரு மச்சான் swift காரை வாங்கி, சென்னையில் வைத்துவிட்டு, 'நான் திரும்பி வரும்வரை ஓட்டிக் கொண்டு இருங்கள்’ என்று அமெரிக்கா போய்விட, இன்னொரு மச்சான் Ford Fiesta காரை வாங்கி கோவில்பட்டியில் வைத்துவிட்டு அயர்லாந்து போய்விட, இந்த இரண்டு கார்களையும் கட்டிக் காப்பாற்றும் பெரும் பொறுப்பு(!) என் தலைமேல் விடிந்தது. இல்லை என்றால், நான் எல்லாம் என்றைக்கு கார் வாங்கி... என்றைக்கு ஓட்டுவது?

ஏதோ செல்வந்தன்போல், வட மாவட்டங்களில் சுற்றுவதற்கு Swift காரையும், தென் மாவட்டங்களில் சுற்றுவதற்கு Fiesta காரையும் பயன்படுத்திக் கொண்டு இருந்தேன்.

சாதாரணமாகவே விடுமுறை நாட்களில் வீட்டில் தங்குவது என்பது எனக்கு அடுப்பின் மீது உட்கார்ந்திருப்பது போன்றது... அதுவும் வண்டி வந்தபின்பு கேட்கவா வேண்டும்? ஹேமாவை (என்னுடைய துணைவி) வண்டியில் ஏற்றிக் கொண்டு எங்கேயாவது கிளம்பி விடுவது வழக்கம் ஆகிவிட்டது. அப்படித்தான், இடையன்குடி செல்லும் நீண்ட நாள் ஆவலை அன்று தணித்துக் கொள்ள முடிவெடுத்தேன்.

robert caldwell and his son

மாற்றுவெளி ஆசிரியர் குழு வெளியிட்ட ‘கால்டுவெல் சிறப்பிதழ்’ படித்ததில் இருந்து, கால்டுவெல் மீதும், அவர் வாழ்ந்த இடையன்குடி மீதும் பெரும் ஈர்ப்பு உருவாகி இருந்தது. தமிழ் மொழிக்கும், திராவிட இனத்திற்கும் தனித்த அடையாளத்தை வழங்கியதில், கால்டுவெல்லின் ‘திராவிட மொழிகளின் ஒப்பிலக்கணம்’ நூலுக்கு அளப்பரிய பங்கு உண்டு. கால்டுவெல் வாழ்ந்து, திரிந்த தெருக்களில் நானும் நடக்க வேண்டும், மானசீகமாக அவருடன் கை குலுக்க வேண்டும் என்பது தணியாத ஆவலாக இருந்தது. “இடையன்குடி போலாமா?” என்று ஹேமாவிடம் கேட்டேன்.

எனது ஊர் சுற்றும் ஆர்வத்திற்கு எப்போதும் துணை நிற்பவள் ஹேமா. இன்னும் சொல்லப் போனால், அவள் என் வாழ்க்கைக்குள் வந்த பிறகே, பயணங்களின் ருசி எனக்குப் புரிபட ஆரம்பித்தது. வெளியே மழை பெய்து கொண்டு இருக்கிறது. லெஸ்லி லீவிசின் ‘பீகி பீகி’ பாடலை கேட்டுக் கொண்டே வண்டி ஓட்டுகிறீர்கள்... வாழ்வின் துயரங்களை எல்லாம் வடிய வைத்து, தீராத காதலை உங்கள் மீது ஒரு மென்தூறலாக பெய்துவிட்டுச் செல்லும் அந்தப் பாடலும்... அப்பாடல் எழுப்பி விட்டுச் செல்லும் உணர்வலைகளை பகிர்ந்து கொள்ள அழகும், காதலும் நிரம்பிய ஒரு பெண் அருகிலும் இருந்தால், அந்தப் பயணம் எத்தனை ரம்மியமானது...! ஹேமா அப்படித்தான் எனது பயணங்களை எல்லாம் ரம்மியமானதாக மாற்றிக் கொண்டு இருக்கிறாள்.

எத்தனை நீண்ட பயணமாக இருந்தாலும், களைப்பு இல்லாமல் தொடர்வதற்கு ஹேமாவின் அருகாமையும், நல்ல பாடல்களுமே எனது பற்றுகோள்கள். பயணங்கள் தான் எங்கள் வாழ்வை அழகாக ஆக்குகின்றன; பயணங்கள்தான் எங்களுக்குள்ளான காதலை அதிகப்படுத்துகின்றன; பயணங்கள்தான் எங்கள் வாழ்வின் வெற்றிடங்களை இட்டு நிரப்புகின்றன.

ஒவ்வொரு பயணம் ஏற்படுத்தும் பரவசமும், மகிழ்ச்சியும் அடுத்த பயணத்திற்கு எங்களைத் தயார்படுத்துகின்றன. இன்னமும் பயணிக்க வேண்டிய இடங்கள் அனேகம் இருக்கின்றன என்ற எண்ணமே, நாளை வாழ்தலுக்கான தேவையை என்னுள் விதைக்கின்றது.

பெயர் பெற்ற சுற்றுலாத் தளங்களுக்கு மட்டுமே பயணிக்க வேண்டும் என்று நான் எப்போதும் கருதியது இல்லை. வித்தியாசமான நில அமைப்பு, வேறுபட்ட பருவ நிலை, புதியதொரு சமூகச் சூழல், வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த இடங்கள், நம் வாழ்வைப் புரட்டிப் போட்ட மனிதர்கள் வாழ்ந்த பகுதிகள் இவற்றில் ஏதேனும் ஒன்று இருந்தால்கூட போதும்... அந்த இடத்தைப் பார்க்க வேண்டும் என்ற ஆவல் எனக்கு உண்டாகி விடும். இடையன்குடி மீதான ஆர்வமும் அப்படித்தான் ஏற்பட்டது.

தேரி மணல் காடு, பனை மரங்கள் நிறைந்த பகுதி, எப்போதும் தகிக்கும் வெப்ப நிலை, கால்டுவெல் தனது வாழ்வின் பெரும் பகுதியைக் கழித்த இடம், தனது உடல் எங்கு நல்லடக்கம் செய்யப்பட வேண்டும் என்று விரும்பினாரோ, அந்தப் பகுதி... இவை போதாதா, இடையன்குடி செல்வதற்கு...?

தென் தமிழ்நாட்டில் பிறந்து, ஏறக்குறைய 21 ஆண்டுகள் அங்கேயே வாழ்ந்திருந்தபோதும், இடையன்குடி என்ற ஊரின் வரலாற்று முக்கியத்துவம் எனது 30 வயதுகளில், சென்னைக்கு வந்த பிறகுதான் தெரிந்தது.

மாற்றுவெளியின் கால்டுவெல் சிறப்பிதழைப் போலவே, பேராசிரியர் ஆ.சிவசுப்பிரமணியன் அவர்களின் இடையன்குடி பற்றிய எழுத்துக்களும், அந்த ஊரைப் பார்க்க வேண்டும் என்ற ஆவலை அதிகப்படுத்தி இருந்தது.

***

ஏதாவது ஓர் ஊருக்குப் போக வேண்டும் என்று சொன்னால், அந்த ஊரில் என்ன இருக்கிறது என்று ஹேமா கேட்பாள். நானும் அந்த ஊரின் அழகான, மனதை மயக்கும் இயற்கைக் காட்சிகளை கூகுளில் தேடி எடுத்துக் காண்பிப்பேன். “இடையன்குடியில் என்ன ஸ்பெஷல்?” என்று ஹேமா கேட்டபோது, அதை நிழற்படங்களாகக் காட்ட முடியவில்லை. கால்டுவெல் என்ற மகத்தான மனிதனின் வாழ்க்கையைத்தான் விவரித்தேன்.

கால்டுவெல் பிறந்தது அயர்லாந்து என்று சொன்னபோது, ஹேமாவிற்கு அதன் சீதோஷ்ண நிலையை எளிதில் புரிந்து கொள்ள முடிந்தது. 7 ஆண்டுகளுக்கு முன்பு, அயர்லாந்து சென்ற ஹேமாவின் அண்ணனும், அண்ணியும் இப்போது அங்கு குடியுரிமை பெற்று விட்டார்கள். அவர்களது குழந்தைகளைக் கவனித்துக் கொள்ள இரண்டு வீட்டைச் சேர்ந்த பெரியவர்களும் 3 மாதங்களுக்கு ஒரு முறை போய், வந்து கொண்டு இருக்கிறார்கள். கிளம்பும்போது, அவர்கள் எடுத்துப் போக வேண்டிய குளிர் பாதுகாப்பு ஆடைகளின் பட்டியல் அயர்லாந்தில் இருந்து வரும். இவர்கள் திரும்பி வரும்போது, குளிரைத் தாங்க முடியாமல் பட்ட அவஸ்தைகளும் கூடவே வரும். குளிர் மைனஸில் இருக்கிற, பனிமழை பொழியும் நாடு; ஹீட்டர் இல்லாமல் வீட்டிற்குள் கொஞ்ச நேரம் கூட இருக்க முடியாது என்று புலம்பித் தள்ளுவார்கள். அதனால் கால்டுவெல் பிறந்தது அயர்லாந்து என்று சொன்னதும், ஹேமாவிற்கு அதற்கு மேல் அந்த நாட்டைப் பற்றி விவரிக்க அவசியம் ஏற்படவில்லை..

robert caldwell memorial house

(கால்டுவெல் வாழ்ந்த இல்லம்)

அந்த கடுங்குளிர்ப் பகுதியில் இருந்துதான், கால்டுவெல் தனது இருபது வயதுகளில் கிறித்துவ சமயப் பணிக்காக இந்தியா கிளம்புகிறார். எட்டு மாத கடல் பயணத்திற்குப் பின், சென்னை வந்து அடைகிறார். அதன்பின் தமிழகத்திலேயே ஏறக்குறைய அறுபது ஆண்டுகள் வசிக்கிறார். இந்தியாவிற்குக் கிளம்பியபோது, அவரது தாய், தந்தையைப் பார்த்ததுதான் கடைசி. மீண்டும் அவர்களை உயிருடன் அவரால் பார்க்க முடியவில்லை. அவரது குடும்பத்தினர் ஒவ்வொருவரும் இறந்த செய்தி, ஏறக்குறைய ஆறு மாதங்கள் கழித்த பின்னரே கால்டுவெல்லுக்குக் கிடைக்கிறது. இறப்புச் செய்தியை தாங்கிய அக்கடிதங்களை கையில் வைத்தபடி, கண்ணீர் உகுக்க மட்டுமே அவரால் முடிந்து இருக்கும்.

சென்னை வந்த கால்டுவெல் முன்பு இரண்டு தேர்வுகள் இருந்தன. ஒன்று ஆங்கிலம் தெரிந்த உயர்சாதி இந்துக்களிடம் கிறித்துவ சமயப் பணி ஆற்றுவது (பெரும்பான்மையான ஐரோப்பிய சமயப் பணியாளர்கள் தேர்ந்து எடுத்துக் கொண்டது இதைத்தான்); இன்னொன்று, தமிழ் மொழியைக் கற்று, படிப்பறிவு இல்லாத, ஒடுக்கப்பட்ட ஏழை இந்துக்களிடம் பணியாற்றுவது. கால்டுவெல் தேர்ந்து எடுத்துக் கொண்டது இதைத்தான்.

இயல்பிலேயே வாசிப்பதில் ஆர்வமுள்ள கால்டுவெல், தமிழ் மொழி கற்பதை ஒரு கடமையாகக் கருதாமல், உண்மையான அக்கறையுடன் கற்றார். தமிழின் முக்கிய இலக்கியங்கள் அனைத்தையும் தேடி வாசித்தார். அதோடு, தமிழ் மொழியை தெளிவாக உச்சரிப்பதிலும் மிகுந்த கவனம் செலுத்தினார்.

தமிழ் மொழிப் பயிற்சிக்குப் பின், ஏறக்குறைய மூன்று ஆண்டுகளுக்குப் பின்பு, சமயப் பரப்பலுக்காக திருநெல்வேலி மாவட்டத்திற்கு அனுப்பப்பட்டார். திருநெல்வேலி செல்வதற்கு முன், சென்னை பிஷப்பிடம் ஆசி பெற விரும்பினார். அப்போது, பிஷப் ஊட்டியில் தங்கி இருந்தார்.

கால்டுவெல் ஊட்டிக்கு நடந்தே சென்றார். பாண்டிச்சேரி, தரங்கம்பாடி, தஞ்சை, திருச்சி, ஶ்ரீரங்கம் வழியாக கோவை சென்று அடைகிறார். ஒவ்வொரு ஊரைக் கடக்கும்போது, அந்த ஊரில் பிரசித்தி பெற்ற இடங்களைப் பார்த்துவிட்டுச் செல்கிறார். தஞ்சை பெரிய கோயிலின் அழகில் சொக்கிப் போகிறார். அதைப் பற்றி விரிவாக எழுதுகிறார்.

கோவையில் இருந்து மேட்டுப்பாளையம், பின்பு ஊட்டி வந்து அடைகிறார். சென்னை பிஷப்பைச் சந்தித்து அவருடன் சில காலம் தங்கி இருக்கிறார். பின்னர் அவரிடம் விடைபெற்று, திருநெல்வேலி நோக்கி குதிரையில் பயணிக்கிறார். ஆனால் மலையில் இருந்து இறங்கும்போதே, ஒரு சரிவில் குதிரை கீழே விழுந்து, அதன் காலில் காயம்படுகிறது. கால்டுவெல்லுக்கும் அடி. மீண்டும் நடை பயணத்துக்கு மாறுகிறார். ஆனால், குதிரையின் சேணத்தை மட்டும் ஏனோ கடைசிவரை சுமந்து செல்கிறார்.

திருநெல்வேலி நோக்கிய பயணத்தில், கால்நடையாகவே நடந்து திரிந்ததில், கால்டுவெல் பார்ப்பதற்கு பஞ்சைப் பராரி போல் தென்படுகிறார். அதனால், பார்ப்பனர்களின் கட்டுப்பாட்டில் இருந்த சத்திரங்களில் தங்குவதற்கு அவருக்கு அனுமதி கிடைக்கவில்லை. தாழ்த்தப்பட்ட மக்களுக்காக கட்டப்பட்டிருந்த, அதிக வசதிகள் இல்லாத, சுத்தமற்ற இடங்களில்தான் அவர் தங்குகிறார். சில இடங்களில் திண்ணையில் படுத்தும் தூங்கி இருக்கிறார். அவரைப் பார்த்த மக்கள், ‘அய்யோ பாவம். ஏழை வெள்ளைக்காரர் போலும்’ என பரிதாபப்பட்டு இருக்கிறார்கள். இந்திய சமூகத்தில் நிலவி வந்த சாதி ஒடுக்குமுறையை கால்டுவெல் அனுபவப்பூர்வமாக உணர்கிறார். பார்ப்பனர்களுக்கும், இதர சாதி மக்களுக்கும் இடையே மனிதாபிமானத்தில் இருந்த வேறுபாடுகளை அறிந்து கொள்கிறார்.

திருநெல்வேலி வந்த பின்பு, அவர் பணிபுரியும் இடமாக இடையன்குடி பகுதி அமைகிறது. அங்கு நிலவிய வெப்பநிலையைப் பற்றி கால்டுவெல் எழுதும்போது, ‘மூன்று மாதங்கள் கோடை காலமாகவும், ஒன்பது மாதங்கள் கடுங்கோடை காலமாகவும் இருக்கிறது’ என்று குறிப்பிடுகிறார். ஆனால், அந்த நிலப்பரப்பில்தான் 53 ஆண்டுகள் வாழ்ந்தார்.

இடையன்குடியில் அதிக அளவு இருந்தது நாடார் சாதி மக்கள். ‘சாணார்கள்’ என்று அழைக்கப்பட்ட அந்த மக்களின் முக்கிய தொழில் பனையேறுவது. வடமாவட்டங்களில் மரியாதைக் குறைவான பேச்சுவார்த்தைகளைக் கேட்டிருந்த கால்டுவெல்லுக்கு, திருநெல்வேலி பகுதி நாடார் மக்களின் பண்பான பேச்சும், கனிவான பழக்க வழக்கங்களும் பிடித்துவிடுகிறது.

அன்றைய காலத்தில் நாடார்களின் சமுதாய நிலை, பறையர், பள்ளர்களை ஒத்தே இருந்தது. கோயில் மறுப்பு, தீண்டாமை, சமுதாய விலக்கு என தாழ்த்தப்பட்ட மக்களுக்கு இருந்த அத்தனை ஒடுக்குமுறைகளும் நாடார்கள் மீதும் இருந்தன. ஒடுக்குமுறையின் கொடுமையை உணர்ந்து இருந்த கால்டுவெல், இறுதிவரை அந்த நாடார் மக்களுக்காகவே தனது வாழ்வை அர்ப்பணித்தார். 53 ஆண்டுகள் வரை அங்கு வாழ்ந்து இருந்தபோதும், நாடார்களைத் தவிர்த்த பிற சாதி மக்களிடம் அவர் சமயப் பணியும், சமுதாயப் பணியும் ஆற்றவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

கால்டுவெல் இடையன்குடி வருவதற்கு முன்பு கிறித்துவத்தைப் பின்பற்றும் ஒரு சிறுகூட்டம் அங்கு இருக்கத்தான் செய்தது. ஆனால் அவர்களை வழிநடத்துவதற்கு முழுநேர சமயப் பணியாளர்கள் இல்லாததால், அவர்கள் முறையாக கிறித்துவத்தைப் பின்பற்றவில்லை. அங்கிருந்த சிறு தேவாலயமும் சரியாகப் பராமரிக்கப்படாமல் சிதைந்து இருந்தது.

1785ம் ஆண்டு திருநெல்வேலி கிறித்தவப் பதிவேட்டில் 40 பேர் இடம் பெற்று இருந்தார்கள். அதில் ஒருவர்கூட நாடார் சாதி இல்லை. ஆனால் 100 ஆண்டுகளுக்குப் பின், அதாவது கால்டுவெல் வருகைக்குப் பின், 1880 ஆம் ஆண்டு எடுக்கப்பட்ட கணக்கெடுப்பில், திருநெல்வேலி பகுதியில் கிறித்துவத்தைத் தழுவிக் கொண்டவர்கள் 50,000 பேர்கள் ஆவர். இதில் 95 சதவீதம் பேர் நாடார்கள் எனில், கால்டுவெல்லின் பங்களிப்பை உணர்ந்து கொள்ளலாம்.

கால்டுவெல் வெறுமனே சமயப் பணி ஆற்றுபவராக மட்டும் இருந்திருந்தால், இது சாத்தியமாகி இருந்திருக்காது. அவர் ஆற்றிய சமூகப் பணிகளின் காரணமாகவே, அத்தனை ஆயிரம் மக்கள் அவர் பின்னே திரண்டார்கள். இன்று என்னைப் போன்ற பகுத்தறிவுவாதிகள்கூட அவரைப் போற்றுவதற்குக் காரணமும் அதுவே.

idaiyankudi 620

(இடையன்குடி பகுதி)

இடையன்குடி மிகவும் வறட்சியான, செம்மண் தேரிப் பகுதி. பனைமரங்கள் மட்டுமே அப்பகுதி மக்களின் வருமானத்திற்கான வழி. ஊர் என்று சொல்லும் தகுதி பெறாத அளவுக்கு, தாறுமாறாக குடிசை வீடுகள் கட்டப்பட்டு இருந்தன. மக்கள் வறுமையில் வாடி வதங்கி இருந்தனர்.

ஊரை செம்மைப்படுத்துவது, மக்களை முன்னேற்றுவது இரண்டு பணிகளையும் கால்டுவெல் தனது தலைமேல் சுமந்து கொண்டார். அவர் டப்ளினில் ஓவியப் படிப்பு படித்தவர்.  இடையன்குடியை அழகாக திருத்தி அமைக்க வேண்டும் என்பதற்காக, உயரமான ஒரு மரத்தில் ஏறி, அந்த ஊரின் நிலவமைப்பை ஆராய்ந்து, ஒரு வரைபடத்தைத் தயாரித்தார். அந்த வரைபடத்தில் தெருக்கள், வீடுகள் எப்படி அமைக்கப்பட வேண்டும் என்பதை தெளிவாக வரைந்தார்.

தேவாலயத்தைச் சுற்றி இருந்த நிலங்களை விலை கொடுத்து வாங்கினார். நிலம் வாங்குவதற்கும், அவற்றைத் திருத்துவதற்கும் ஆகும் செலவிற்கு தனது நண்பர்களிடம் நன்கொடை திரட்டினார். நிலத்தை சீர்படுத்தும் வேலைக்கு இடையன்குடி நாடார்களை சம்பளத்திற்கு அமர்த்தினார். அந்த சம்பளப் பணத்தை அவர்களை சேமிக்கச் செய்து, அந்த நிலத்தில் வீடு கட்ட பயன்படுத்திக் கொள்ளச் செய்தார். மாதிரிக்கு சில வீடுகளை கட்டிக் கொடுத்து, அதேபோல் மற்ற வீடுகளைக் கட்டச் செய்தார். தெருக்களை விசாலமாக அமைத்து, தெருக்கள் கூடும் சந்திகளில் கிணறுகள் அமைத்தார். தெருவின் இருபுறமும் மரங்களை நட்டு வைத்தார். கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு இடையன்குடி கிராமத்திற்கு, ‘சிறந்த திட்டமிடப்பட்ட கிராமம்’ என்று விருது நடுவண் அரசால் தரப்பட்டது என்றால், அதற்கான முழு பாராட்டும் கால்டுவெல்லையே சாரும்.

வெறுமனே வீடு கட்டித் தந்ததோடு தனது பொறுப்பு முடிந்து விட்டது என்று கால்டுவெல் கருதவில்லை. அந்த வீடுகளில் வாழும் மக்களின் பொருளாதார நிலையை உயர்த்துவது குறித்தும் சிந்தித்தார். கல்வி, தொழில் வசதிக்கான வேலைகளிலும் இறங்கினார்.

கால்டுவெல் தனது வாழ்நாள் காலத்தில் தமிழகத்தில் 9 பள்ளிக்கூடங்களைத் தொடங்கியதாக குறிப்புகள் தெரிவிக்கின்றன.  தென்னிந்தியாவிலேயே முதன்முறையாக (1844ம் ஆண்டு) பெண்களுக்கான உறைவிடப் பள்ளியை கால்டுவெல்லின் மனைவி எலிசாதான் தொடங்கினார். பெண்கல்விக்கு மக்களிடம் எதிர்ப்பு இருந்தபோது, கால்டுவெல் ஊர் மக்களை சந்தித்து, பெண்கள் கற்பதன் முக்கியத்துவத்தை எடுத்து உரைத்து, சம்மதிக்க வைத்தார். எலிசா பெண்களுக்கு தையல் பயிற்சியும் அளித்தார்.

படிக்க வரும் மாணவர்களுக்கு மதிய உணவு வழங்குவதை கால்டுவெல்தான் அறிமுகம் செய்தார். இடையன்குடி மக்களின் சுகாதார வசதிகளுக்காக சென்னை கவர்னரிடம் பேசி, 1870ம் ஆண்டு மருத்துவமனை ஒன்றைத் தொடங்க ஏற்பாடுகள் செய்தார்.

அழகான ஓர் ஊரை நிர்மாணித்த கால்டுவெல், அவ்வூரில் பிரமாண்டமான ஒரு கிறித்துவ ஆலயத்தை கட்ட விரும்பினார். 1847ல் அடிக்கல் நாட்டினார். உள்நாட்டிலும், வெளிநாட்டிலும் நிதி திரட்டத் தொடங்கினார். எதிர்பார்த்த அளவு நிதி உடனே கிட்டாததாலும், கால்டுவெல் மேற்கொண்ட தமிழ் ஆய்வுப் பணிகள் காரணமாகவும் ஆலயத்தைக் கட்டிமுடிக்க 33 ஆண்டுகள் ஆனது. கலைத்திறன் மிக்க அந்த ஆலயம் 1880ல் திறக்கப்பட்டது.

இடையே ஒரு முறை, கடும்வெப்ப நிலை காரணமாக உடல் நலம் பாதிக்கப்பட்ட கால்டுவெல், 1854ல் ஓய்விற்காக அயர்லாந்து சென்றார். அங்குதான் திராவிட மொழிகளின் ஒப்பிலக்கண நூலை உருவாக்கினார். 1856ல் இலண்டன் நகரில் அந்நூல் வெளியானது. மூன்று ஆண்டு ஓய்விற்குப் பின், மீண்டும் இடையன்குடி வந்து சேர்ந்தார்.

வாழ்வின் கடைசிக் காலத்தில் கொடைக்கானலில் ஓய்வெடுத்தார். 28-08-1891 அன்று உயிர் நீத்தார். அவர் விருப்பப்படி அவரது உடல் இடையன்குடியில் அவர் கட்டிய தேவாலயத்தில் நல்லடக்கம் செய்யப்பட்டது. பின்னர், அவரது மனைவியும் அங்கேதான் அடக்கம் செய்யப்பட்டார்.

***

கால்டுவெல் வரலாற்றை சொல்லி முடித்தபோது, ‘இப்படியும் ஒரு மனிதன் இருந்திருக்க முடியுமா என்று ஆச்சரியத்துடன் ஹேமா கேட்டாள். அடிமைகளாக்கி, நம்மை சுரண்ட வந்த வெள்ளையர்களில் பென்னிகுயிக்கும், கால்டுவெல்லும் இருக்கத்தானே செய்தார்கள். நல்ல மனிதர்கள் எல்லா ஊர்களிலும் உண்டுதானே!!

***

காலை 10 மணி சுமாருக்கு கோவில்பட்டியிலிருந்து கிளம்பினோம். இடையன்குடிக்கு கோவில்பட்டியிலிருந்து எட்டையபுரம், தூத்துக்குடி, திருச்செந்தூர் வழியாக செல்ல வேண்டும். கோவில்பட்டியிலிருந்து எட்டையபுரம் வரைக்கும் சாலை சுமாராக இருக்கும்; அதன்பின்பு தூத்துக்குடி வரைக்கும் நான்கு வழிச் சாலை. நான்கு வழிச் சாலையில் நுழைந்ததும், எட்டையபுரத்தில் இருந்து நான்கு அல்லது ஐந்தாவது கிலோ மீட்டரில் ‘மேல ஈரால்’ என்ற ஊர் இருக்கிறது. ஊர் என்பது நான்குவழிச் சாலையில் இருந்து ஒன்றரை கி.மீ. தள்ளிதான் இருக்கும். அந்த ஊர் நிறுத்தத்தில் இருக்கும் கடைகள் தின்பண்டங்களுக்குப் பெயர் பெற்றவை. அவ்வளவு மொறுமொறுப்பான, சுவையான வறுவல், கருப்பட்டி மிட்டாயை வேறு எந்த ஊரிலும் நீங்கள் சாப்பிட முடியாது. தூத்துக்குடி துறைமுகத்தில் இருந்து கிளம்பும் லாரிகள், அந்தக் கடைகளில் நின்று வறுவலும், கருப்பட்டி மிட்டாயும் வாங்கிச் செல்வதைப் பார்க்க முடியும். எட்டையபுரத்தில் இருந்து நீங்கள் செல்வதாக இருந்தால், மேல ஈராலில் சாலையின் வலப்பக்கத்திலும், தூத்துக்குடியில் இருந்து செல்வதாக இருந்தால், இடப்பக்கத்திலும் அந்தக் கடைகள் இருக்கும். தவறாமல் வாங்கிச் செல்லுங்கள்!! நாங்களும் கொஞ்சம் வாங்கிக் கொண்டோம்.

தூத்துக்குடி சாலையில் கானல் நீரை நிரப்பிக் கொண்டிருந்தது வெயில். போக்குவரத்து அதிகமில்லை.

தூத்துக்குடியோடு நான்கு வழிச் சாலை முடிந்தது. அதன்பின்பு திருச்செந்தூர் வரைக்கும் சாலை கொஞ்சம் குண்டும், குழியுமாகத்தான் இருந்தது. இரண்டு பக்கமும் வறண்ட, மானவாரி நிலங்கள். நாங்கள் சென்றது பிப்ரவரி மாதம்; தமிழ் மாதம் என்றால் மாசி மாதம். எங்கள் பகுதியில் ‘மாசி மாசம் மச்சும் குளிரும்’ என்பார்கள்... ஆனால், திருச்செந்தூர் பகுதியில் வெயில் பிளந்து கொண்டிருந்தது. வண்டியில் ஏசியை எவ்வளவு கூட்டி வைத்தாலும், அது வெயிலின் கொடுமையைத் தணிக்கவில்லை. முதுகுப்பக்கம் டி-சர்ட் நசநசத்து, உடம்போடு ஒட்டிக் கொண்டது. எவ்வளவு தண்ணீர் குடித்தாலும், நாவறட்சி அடங்கவில்லை. வண்டியை இரண்டு முறை நிறுத்தி, இளநீர் குடித்தோம். வண்டியிலிருந்து இறங்கும்போது கண்கள் கூசும் அளவிற்கு வெயில் அடித்தது. அனற்காற்று முகத்தில் அறைந்தது. தாமிரபரணி நதி பாயும் ஆத்தூர் பகுதி மட்டும் கொஞ்சம் செழிப்பாக இருந்தது. மற்ற இடங்களில் எல்லாம் மரங்களைப் பார்ப்பதே அரிதாக இருந்தது. வெயிலைத் தாக்குப் பிடித்து நிற்கும் பனைமரங்கள்தான் அதிகம் இருந்தன.

east coast road 620

(கிழக்கு கடற்கரை சாலையில்...)

திருச்செந்தூருக்கு அடுத்து அழகான கிழக்கு கடற்கரை சாலை தொடங்கியது. அந்த சாலையின் அழகை நீங்கள் நேரில் சென்று பார்த்தால் மட்டுமே உணர முடியும். வளைந்து, நெளிந்து, மேலேயும், கீழேயும் ஏறி இறங்கும் சாலை. ஆங்காங்கே ரம்மியமான கடல்பரப்பு உங்கள் கண்ணுக்குத் தெரியும். தேரி மணலும், பனைமரங்களும் நெஞ்சை அள்ளும். பச்சைப் பசேல் என்று இருப்பது ஒரு வகை அழகு என்றால், இதுவும் ஒருவகை அழகுதான்.

இந்த அழகு ஏன் எந்த ஒரு தமிழ் சினிமாவிலும் காட்சிப்படுத்தப்படவில்லை என்ற கேள்வியைக் கேட்டுக் கொண்டே, இடையன்குடி செல்லும் சாலையில் பிரிந்தோம்.

எல்லா கிராமங்களையும் போலவே, இடையன்குடியும் வெறிச்சோடிக் காணப்பட்டது. படித்தவர்கள் வேலைவாய்ப்புகளின் பொருட்டு, பெருநகரங்களில் குடியேறிவிடுவதும், அதற்கு முந்தைய தலைமுறையினர் மட்டுமே கிராமங்களில் வசிப்பதும் அனைத்து கிராமங்களிலும் நடப்பதுதானே! ஒரு கடைப் பக்கமாக வண்டியை நிறுத்தி, கால்டுவெல் நினைவிடத்திற்கு வழி கேட்டோம். நேரே போகச் சொன்னார்கள்.

எந்த வகையில் பார்த்தாலும், இடையன்குடி ஒரு வெள்ளையர் தங்குவதற்கு ஏதுவான இடமல்ல. எந்த ஒரு பெரிய நகரமும் அருகில் இல்லை. கன்னியாகுமரி – சென்னை சாலையைப் போல் எந்த ஒரு பெரிய வழித்தடமும் அருகில் இல்லை. கடற்கரையை ஒட்டி இருக்கிற ஊரும் இல்லை. விருதுநகர், பொள்ளாச்சி போல் மிகப் பெரும் சந்தை நடைபெறுகிற இடமோ அல்லது சிவகாசி, ஈரோடு போன்ற தொழில்வளம் நிறைந்த ஊரோ அல்லது தஞ்சை, பாபநாசம் போல் நீர்வளம் நிரம்பிய விவசாயப் பகுதியோ இல்லை. இப்போதே இப்படி என்றால், கால்டுவெல் காலத்தில் நிலைமை இன்னும் மோசமாகத்தான் இருந்திருக்க வேண்டும். ஆனால், இந்த ஊரில்தான் கால்டுவெல்லும், அவரது குடும்பத்தினரும் 30 ஆண்டுகளுக்கும் மேலாக வாழ்ந்திருக்கிறார்கள்.

சம்பளம் அதிகமாக கிடைத்தால் கூட புனே, டெல்லியில் இருக்க முடியாமல், ஓரிரு ஆண்டுகளிலேயே சென்னைக்கு மாற்றலாகி வந்துவிடும் மென்பொறி வல்லுனர்களை நிறையப் பார்த்திருக்கிறேன். மிகவும் சொகுசான அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகளுக்குச் சென்றாலும்கூட, முதுமைக்காலத்தில் தமிழத்திற்குத் திரும்பும் எத்தனையோ பேரை பார்த்திருக்கிறோம். தாய்மண்ணின் மீதான பற்றுதல் அப்படி. ஆனால், பாலைவனம் ஒத்த அந்த இடையன்குடியில்தான் கால்டுவெல் தனது வாழ்வின் பெரும்பகுதியைக் கழித்தார். தனது உடல் அங்குதான் அடக்கம் செய்யப்பட வேண்டும் என்று விரும்பினார் என்றால், அந்த ஊரையும், மக்களையும் எந்தளவிற்கு நேசித்தார் என்பதை உணர முடிகிறது.

(தொடரும்)

- கீற்று நந்தன்

Pin It