இங்கிலாந்து நாட்டின் ஹெட்ஃபோர்டுஷையர் பகுதியில், ஹெட்ஃபோர்டு ஹீத் என்ற இடத்தில் அமைந்து உள்ள ஹெய்லேபரி கல்லூரியில்தான், 1860 ஆம் ஆண்டு முதல், இந்திய ஆட்சிப்பணி (Civil Services) மாணவர்களுக்குப் பயிற்சி அளிக்கப்பட்டு வந்தது. அங்கே உள்ள நூலகத்தில், ஏராளமான நூல்கள் உபரியாக இருந்தன. அவற்றை, சென்னை இராஜதானி அரசுக்கு அனுப்பி வைத்தார்கள். லண்டனில் உள்ள பிரிட்டிஷ் மியூசியத்தின் ஒரு பகுதியாக நூலகம் அமைந்து இருப்பது போல, சென்னை இராஜதானிக்கு வந்து சேர்ந்த அந்த நூல்கள், சென்னை அருங்காட்சியகத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டன. அவற்றைக் கொண்டு, 1860 ஆம் ஆண்டு, சென்னை அருங்காட்சியக வளாகத்துக்கு உள்ளே, கேப்டன் ஜீன் மிட்செல் (Captain Jean Mitchell) என்பவர், ஒரு சிறிய நூலகத்தைத் தொடங்கினார். 1890 ஆம் ஆண்டு வரையிலும் அங்கேயே இயங்கி வந்தது.

connemara_public_library_640

அப்போது சென்னை இராஜதானியின் ஆளுநராக இருந்த கன்னிமரா பிரபு, தனியாக ஒரு நூலகம் அமைப்பது எனத் தீர்மானித்து, அதற்கு என ஒரு கட்டடத்தைக் கட்டுவதற்காக, 1890 மார்ச் 22 ஆம் நாள் அடிக்கல் நாட்டினார். 1896 ஆம் ஆண்டு அந்தக் கட்டடம் திறக்கப்பட்டபோது, அடிக்கல் நாட்டிய கன்னிமரா பிரபு, லண்டனுக்குச் சென்று விட்டார். அவரது முயற்சியால் உருவான நூலகம் என்பதால், அப்போதைய ஆளுநர், கன்னிமரா பிரபுவின் பெயரையே சூட்டினார். கட்டுமானச் செலவு, 5.75 லட்சம் ரூபாய்.

அப்போது, கலை நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வந்த, பாந்தியன் என்ற திடலில்தான் இந்தக் கட்டடம் கட்டப்பட்டது. இப்போது, அந்தச் சாலைக்கும் அதே பெயர்தான் சூட்டப்பட்டு உள்ளது. அருங்காட்சிய வளாகத்துக்கு உள்ளே அமைந்து உள்ள கட்டடங்கள், இந்தோ-சார்சனிக், கோத்திக்-நியோ-பைசான்டின், இராஜபுத்திர, மொகலாயா, தக்காண இந்து கலைவடிவங்களாகத் திகழ்கின்றன.

தொடக்கத்தில் சுமார் 40,000 புத்தகங்கள் வரையிலும் இருந்தன. இப்போது, இங்கே 7 இலட்சத்து 30 ஆயிரம் நூல்கள் உள்ளன. அவற்றுள், ஒரு இலட்சம் தமிழ் நூல்கள் உள்ளன. உலகிலேயே அதிக தமிழ் நூல்களின் சேகரிப்பு இதுதான். இது தவிர, கடந்த கால பருவ இதழ்கள் (மாத, வார இதழ்கள்) சுமார் இரண்டு லட்சம் உள்ளன. பார்வை அற்றோருக்காக பிரெய்லி நூல்களும் உள்ளன.

1948 இல் இயற்றப்பட்ட மெட்ராஸ் பொது நூலகச் சட்டத்தின்படி, (Madras Public Libraries Act) இந்த நூலகம், தமிழ்நாட்டின் மாநில மைய நூலகமாகச் செயல்பட்டு வருகிறது. நூலகங்களுக்கென, இந்தியாவிலேயே முதன்முறையாக இயற்றப்பட்ட ஒழுங்குமுறைச் சட்டம் அதுதான். இந்திய நூலகத் தந்தை என்று அழைக்கப்படும் டாக்டர் எஸ்.ஆர். ரெங்கநாதன், (சீர்காழி இராமமிர்த ரெங்கநாதன்) சென்னைப் பல்கலைக்கழகத்தின் நூலகராகப் பதவி ஏற்றது, கன்னிமரா பொது நூலகத்தின் பழைய கட்டடத்தில்தான். இவர்தான், அந்த நூலகச் சட்டத்தை இயற்றுவதற்கு முன்னோடியாக இருந்தார்.

இந்திய நூல்கள் வழங்கல் சட்டம் (Delivery of Books and Newspaper Act 1956) என்ற சட்டத்தின்படி, இந்தியாவின் எந்த மூலையிலும் வெளியாகின்ற நூல்கள் மற்றும் பருவ இதழ்கள், செய்தித்தாள்களின் ஒரு பிரதியை, இந்த நூலகத்துக்குக் கட்டாயம் அனுப்பி வைக்க வேண்டும். அதன்படி, நாள்தோறும் நூற்றுக்கணக்கான புதிய வெளியீடுகள் வந்து குவிந்து கொண்டு இருக்கின்றன. 1981 ஆம் ஆண்டு இந்திய அரசு, இந்தியாவின் நான்கு தேசிய வைப்பக நூலகங்களுள் (Depository Library) ஒன்றாக கன்னிமரா நூலகத்தை அறிவித்தது. கொல்கத்தா தேசிய நூலகம், தில்லி பொது நூலகம், மும்பை டவுண் ஹால் பொது நூலகம், இந்திய நாடாளுமன்ற நூலகம் ஆகியவற்றிலும் கன்னிமரா நூலகத்தில் உள்ள நூல்களின் ஒரு பிரதி இருக்கும்.

1973 ஆம் ஆண்டு 55,000 சதுர அடி பரப்பில் மூன்று மாடி புதிய கட்டடம் கட்டித் திறக்கப்பட்டது. 1998 இல் 12,000 சதுர அடியில் மற்றொரு மூன்று மாடி புதிய கட்டடம் கட்டித் திறக்கப்பட்டது. எனவே, தற்போது மொத்தம் மூன்று கட்டடங்களில் நூல்கள் அடுக்கி வைக்கப்பட்டு உள்ளன.

ஐக்கிய நாடுகள் சபை வெளியீடுகள் மற்றும் ஆசிய வங்கி வெளியீடுகளுக்கான தகவல் மையமாகவும் இந்நூலகம் திகழ்கின்றது. தற்போது, ஆங்கில நூல்கள் பிரிவு, குடிமைப்பணிக் கல்வி மையம், குழந்தைகள் நூலகம், பருவ இதழ் பிரிவு, குறிப்பு உதவிப் பிரிவு, இந்திய மொழிகள் பிரிவு, பாடநூல் பிரிவு, நுண்படப் பிரிவு (Microfilm Section), உருப்படப் பிரிவு (Digitisation Section) அரசு வெளியீடுகள் பிரிவு, ஆகிய பிரிவுகள் உள்ளன.

அருங்காட்சியகத்தின் கண்காணிப்பாளராக இருந்த எட்கர் தர்ஸ்டன் (1896-1908), கன்னிமரா நூலகத்தின் முதலாவது நூலகராகவும் பொறுப்பு வகித்தார். இவர், ‘Caste and Tribes of Southern India’ என்ற அரிய ஆராய்ச்சி நூலை எழுதியவர். இது மிகவும் புகழ் பெற்ற நூல் ஆகும். 1930 இல்தான், முதலாவது இந்திய நூலகராக ஜனார்த்தனம் நாயுடு பொறுப்பு ஏற்றார்.

அரிய நூல்கள்

இங்கே என்னென்ன அரிய நூல்கள் உள்ளன என்பது குறித்த தகவல்கள், இந்நூலகத்தின் இணையதளத்திலேயே காணப்படுகின்றது. அத்தகைய நூல்களை, வீட்டுக்குக் கொண்டு செல்லத் தருவது இல்லை. பெரிய புத்தகம் என்பது இரண்டரை அடி நீளம், இரண்டு அடி அகலம் உள்ள அட்லஸ் ஆகும். விக்டோரியா மகாராணிக்காக தனிப்பட்ட முறையில் தயாரிக்கப்பட்ட இந்திய, இலங்கை வரைபடம்தான் அது.

தமிழில் இருக்கின்ற மிகப் பழமையான நூல் என்பது, தரங்கம்பாடியில் 1781 ஆம் ஆண்டில் அச்சிடப்பட்ட, ‘ஞான முறைமைகளின் விளக்கம்’ எனும் கிறித்துவ மத பிரச்சார நூல் ஆகும். அதேபோல், 1608 ஆம் ஆண்டு, லண்டனில் அச்சிடப்பட்ட பைபிள் பிரதி ஒன்றும் இங்கே உள்ளது. அப்போது, பருத்தி இழைகளால் தயாரிக்கப்பட்ட காகித்தில் அந்த நூல் அச்சிடப்பட்டு உள்ளதால் இன்னமும் நல்ல தரத்தில் உள்ளது. அதற்குப் பிறகுதான், மரக்கூழ் காகிதங்கள் அதிக அளவில் பயன்பாட்டுக்கு வந்தன.

connemara_public_library_641

மேலும், Rheed et al.'s 12-volume Hourtus Indicus Malabaricus (published in 1678-1703), J. Ovington's A Voyage to Suratt in the years 1689 (published in 1696), Charles Lockyer's An account of the Trade in India (published in 1711), An Account of the Religion and Government, Learing and Economy, etc. of the Malabarians (published in 1717), and Nicolai Laverrntii Burmanni's Flora Indica (published in 1768 ஆகிய அரிய நூல்களும் இங்கே உள்ளன.

மின் ஆக்கம்

இந்நூலகத்தில் உள்ள சுமார் நான்கு இலட்சம் நூல்களின் தலைப்புகளை இணையத்தில் பார்க்க முடியும். http://www.connemarapubliclibrary.com/ அந்தவகையில், இந்தியாவிலேயே அதிக நூல்களின் பட்டியலை மின்வலையில் ஏற்றி இருப்பதும், இதன் சிறப்பு ஆகும்.

தற்போது, சுமார் 5000 தமிழ் நூல்கள் வரையிலும் மின் ஆக்கம் செய்யப்பட்டு உள்ளது. அதன் அனைத்துப் பக்கங்களையும் உருப்படம் (ஸ்கேன்) செய்து உள்ளனர். அதை, இந்த நூலகத்துக்கு வந்து, இங்கே உள்ள இணையத்தில்தான் பார்த்துப் படிக்க முடியும்.

கன்னிமரா நூலகத்தின் ஒரு தளத்தில், நிரந்தர புத்தகக் கண்காட்சி ஒன்றும் செயல்பட்டு வருகிறது. அங்கே விற்பனை ஆகின்ற நூல்கள் அனைத்துக்கும் 10 விழுக்காடு கழிவு தரப்படுகின்றது.

சென்னைப் பல்கலைக்கழக நூலகம், மெட்ராஸ் லிட்டரரி சொசைட்டி நூலகம் (கல்லூரி சாலை), ஓரியண்டல் மேனுஸ்கிரிப்ட் நூலகம் (ஓலைச்சுவடிகள்), விக்டோரியா டெக்னிகல் இன்ஸ்டிட்யூட் (அண்ணா சாலை) ஆகிய நூலகங்கள்,கன்னிமரா நூலகத்தின் பழைய கட்டடத்தில் முன்பு இயங்கி வந்தன. ஓலைச்சுவடிகள் நூலகம், தற்போது, சென்னைப் பல்கலைக்கழக வளாகத்துக்கு உள்ளே இருக்கின்றது.

வாசகர்கள்

தொடக்கத்தில், வாசகர்கள் புத்தகங்களை நேரடியாகத் தேட முடியாது. நூலகர்தான் எடுத்துத் தருவார். 1930 ஆம் ஆண்டில் இருந்துதான் பொதுமக்கள் நேரடியாக உள்ளே சென்று, புத்தகங்களைப் பார்த்துத் தேர்ந்து எடுக்க அனுமதிக்கப்பட்டார்கள்.

நாள் ஒன்றுக்கு, சராசரியாக 2000 முதல், 2500 வாசகர்கள் வந்து நூல்களைப் படிக்கின்றார்கள். 1930 முதல், இதுவரையிலும், 1,30,000 பேர் உறுப்பினர்களாகச் சேர்ந்து இருக்கின்றார்கள். தற்போது உறுப்பினர் கட்டணம், காப்புத் தொகையாக ரூ 300, ஆண்டுச் சந்தாவாக ரூ 50 கட்ட வேண்டும். உறுப்பினர்கள் ஆகக்கூடுதலாக, ஒருமுறையில் ஆறு நூல்கள் வரையிலும் வீட்டுக்கு எடுத்துச் செல்லலாம். தவணைக் காலம் 14 நாள்கள். காலக்கடப்பு கட்டணமாக வாரம் ஒன்றுக்கு இரண்டு ரூபாய் வசூலிக்கப்படுகிறது. நூல்களைத் திருப்பித் தராதவர்களிடம் இருந்து நூல்களைப் பெறுவதற்காக, நினைவூட்டல் கடிதங்கள் அனுப்புகிறார்கள். அதற்குப் பிறகும் கொண்டு வந்து தராதவர்கள் மீது, காவல்துறை மூலமாக நடவடிக்கை மேற்கொள்வதற்கும் சட்டத்தில் இடம் உள்ளது. பெரும்பாலும் நினைவூட்டல் கடிதங்களிலேயே நூல்கள் வந்து சேர்ந்து விடுகின்றன. அதையும் மீறி, அரிய நூல்கள் காணாமல் போவதும் உண்டு. நூலக ஊழியர்கள், அப்படிப்பட்ட வாசகர்களின் வீடுகளுக்குச் சென்று நினைவூட்டல் செய்கிறார்கள்.

பேரறிஞர் அண்ணா அவர்கள் பெரும்பகுதி நேரத்தை இந்த நூலகத்தில்தான் செலவிட்டு உள்ளார். இராஜாஜி, சி. சுப்பிரமணியம், ஆர்.வெங்கட்ராமன், சாண்டில்யன், சுஜாதா, நீலகண்ட சாஸ்திரி ஆகியோர் இங்கே உறுப்பினர்களாக இருந்து உள்ளனர்.

குடிமைப்பணிக் கல்வி மையத்தைப் பயன்படுத்தி, நூற்றுக்கணக்கானவர்கள் அனைத்து இந்திய ஆட்சிப்பணித் தேர்வுகள் (ஐஏஎஸ்), தமிழ்நாடு ஆட்சிப் பணிக்கு உயர் அதிகாரிகளாகத் தேர்ந்து எடுக்கப்பட்டு உள்ளனர்.

சமூக அறிவியல் ஆராய்ச்சியில் ஈடுபடுபவர்களுடைய ஆராய்ச்சி என்பது, இந்த நூலகத்தில் கால் வைக்காமல் முழுமை பெறாது.

இந்தியாவின் அனைத்து மாநில மொழிகளிலுமான நூல்கள் இங்கே இருப்பதால், தமிழக மாணவர்கள் மட்டும் அல்லாமல், இந்தியாவின் அனைத்து மாநிலங்களில் இருந்தும் மாணவர்கள் இங்கே வருகிறார்கள். இந்திய அரசியல் சட்டத்தில் இடம் பெற்று உள்ள அனைத்து மொழிகளிலும் வெளியாகின்ற நூல்கள் இங்கே உள்ளன.

மின் அஞ்சல்: இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.

நூலகம் செயல்படும் நேரம்: வார நாள்களில் காலை 9.00 மணி முதல், மாலை 7.00 மணி வரை

ஞாயிற்றுக்கிழமைகளில், காலை 9.30 மணி முதல் மாலை 6.00 மணி வரை.

தென்னிந்தியாவிலேயே மிகப்பெரிய நூலகம் கன்னிமரா, தமிழகத்தின் பெருமைகளுள் ஒன்று என்பது மட்டும் அல்ல, உலகம் முழுமையும் உள்ள தமிழ் ஆர்வலர்கள், எழுத்தாளர்கள், சென்னைக்கு வந்தால், கண்டிப்பாகப் பார்க்க வேண்டிய இடமும்கூட!

- அருணகிரி

Pin It