கன்னியாகுமரி மாவட்டம் தமிழ்நாட்டோடு இணைவதற்கு முன்பு வரை திருவிதாங்கூர் அரசின் கட்டுப்பாட்டில் இருந்து வந்தது. எனவே இந்த மாவட்டத்தை சுற்றி ஏராளமான கோட்டைகளை காண முடிகிறது.

உதயகிரி கோட்டை

நாகர்கோவில் இருந்து சுமார் 12 கிலோமீட்டர் தூரத்தில் தக்கலைக்கு அருகில் அமைந்துள்ளது உதயகிரி கோட்டை. 81 ஏக்கர் பரப்பளவு கொண்ட இக்கோட்டையைச் சுற்றிலும் 16 அடி உயர கருங்கல் கோட்டைகள் கட்டப்பட்டுள்ளன. இக்கோட்டை உருவான வரலாறு மிக சுவாரஸ்யமானது.

குமரி மாவட்டம் திருவிதாங்கூர் சமஸ்தானத்தின் கீழ் இருந்த காலம். திருவிதாங்கூரை மார்த்தாண்ட வர்மா ஆட்சி செய்து கொண்டிருந்தார். மார்த்தாண்ட வர்மாவிற்கும் டச்சு கிழக்கிந்திய கம்பெனிக்கும் பகை தலைதூக்கியிருந்த நேரம். குளச்சல் கோட்டை டச்சுக்காரர்களின் கீழ் இருந்தது. அங்கு ஏராளமான வீரர்கள் தங்கியிருந்தனர். போதிய இடமும், உணவும் இல்லாததால் தொற்று வியாதிகள் மூலம் பலர் இறந்தனர்.

இந்த நிலையை பயன்படுத்திக் கொண்டு குளச்சலில் இருந்த டச்சுக்காரர்கள் மீது தாக்குதல் நடத்த மார்த்தாண்ட வர்மா திட்டமிட்டார். இந்தத் தாக்குதலை டச்சுக்காரர்களால் சமாளிக்க முடியவில்லை. டச்சு வீரர்கள் மார்த்தாண்ட வர்மாவால் கைது செய்யப்பட்டனர். இவர்கள் உதயகிரிக் கோட்டையில் சிறை வைக்கப்பட்டனர்.

அவர்களில் ஒருவர் தான் டச்சுத் தளபதி யுஸ்டேஷியஸ் டிலனாய். தொடர்ந்து நடைபெற்ற பேச்சுவார்த்தைகளால் ஐந்து ஆண்டுகளுக்கு பிறகு டச்சு வீரர்களை விடுதலை செய்ய மார்த்தாண்ட வர்மா ஒப்புக்கொண்டார். ஆனால் டிலனாய் மார்த்தாண்ட வர்மாவின் படையில் சேர விருப்பம் தெரிவித்தார். அப்போது அவருக்கு வயது 26.

வாளும், ஈட்டியும் தான் போர் என்று நினைத்தவர்களுக்கு டிரில் பயிற்சி அளித்ததோடு துப்பாக்கி, பீரங்கி இயக்கவும் கற்றுக்கொடுத்தார். தொடர்ந்து மார்த்தாண்ட வர்மா அவரை படைத்தளபதியாக்கினார். தொடர்ந்து 35 வருடங்கள் மார்த்தாண்ட வர்மா படையில் பணியாற்றிய டிலனாய் 1777 ல் காலமானார். அவருடைய உடல் உதயகிரிக்கோட்டையில் அடக்கம் செய்யப்பட்டது. அருகில் அவருடைய மனைவி, மகனுடைய உடலும் அடக்கம் செய்யப்பட்டுள்ளது. மூன்று கல்லறைகளும் தேவாலய வடிவில் எழுப்பப்பட்டுள்ளது.

கண்டுகொள்ளப்படாமல் இருந்த உதயகிரிக்கோட்டை இப்போது புதுப்பிக்கப்பட்டு மான்பூங்கா, மயில்பூங்கா, விருந்தினர் விடுதி என புதுப்பொலிவு பெற்று சுற்றுலாப் பயணிகளை கவரும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது.

நாகர்கோவிலில் இருந்து தக்கலை செல்லும் பேருந்தில் ஏறி புலியூர்க்குறிச்சியில் இறங்கிக்கொள்ளலாம். அங்கிருந்து 30 அடி தொலைவில் அமைந்துள்ளது இந்த உதயகிரிக்கோட்டை.

பத்மனாபபுரம் கோட்டை

கன்னியாகுமரியில் இருந்து 37 கிலோமீட்டர் தொலைவிலும், நாகர்கோவிலில் இருந்து 23 கிலோமீட்டர் தொலைவிலும் பத்மநாபபுரம் அரண்மனை அமைந்துள்ளது. இந்தியாவில் வேறெந்த அரண்மனைக்கும் இல்லாத சிறப்பு இந்த அரண்மனைக்கு உண்டு. முழுக்க முழுக்க மரத்தினால் செய்யப்பட்ட அரண்மனை இது. திருவிதாங்கூரை மார்த்தாண்ட வர்மா ஆட்சி செய்தபோது பத்மநாபபுரம் அதன் தலைநகராக அறிவிக்கப்பட்டது.

மார்த்தாண்ட வர்மா தலைநகரை சுற்றி கோட்டையை எழுப்பினார். 186 ஏக்கர் நிலப்பரப்பைச் சுற்றி 16 அடி உயரத்தில் 1744 ல் இந்தக் கோட்டை கட்டி முடிக்கப்பட்டது. கோட்டையில் தலைவாசல் ஒன்றும் சுற்றுப்புறங்களில் ஒன்பது வாசல்களும், ஏராளமான படைக்கொத்தளங்களும் அமைக்கப்பட்டுள்ளது. இந்தக் கோட்டை கேரள அரசின் பராமரிப்பின் கீழ் இருந்து வருகிறது.

நாகர்கோவிலில் இருந்து நேரடியாக பத்மனாபபுரத்திற்கு பேருந்து வசதிகள் உள்ளன. நாகர்கோவிலில் இருந்து தக்கலை சென்று அங்கிருந்தும் பத்மனாபபுரம் செல்லலாம்.

மருந்துக்கோட்டை

பத்மனாபபுரத்தில் இருந்து திற்பரப்பு செல்லும் சாலையில் ஒரு கிலோமீட்டர் தொலைவில் 400 அடி உயரத்தில் குன்றின் மேல் கட்டப்பட்டுள்ளது மருந்துக்கோட்டை. பத்மனாபபுரம் கோட்டை வடிவிலேயே இந்தக்கோட்டையும் கட்டப்பட்டுள்ளது. கோட்டையின் மேற்பரப்பில் 5 கொத்தளங்களும், பெரிய கல்மண்டபம் ஒன்றும் உள்ளது. கோட்டையின் மேற்பரப்பு இரண்டரை ஏக்கர் நிலப்பரப்பை கொண்டது. உதயகிரி கோட்டையில் உருவாக்கப்பட்ட பீரங்கி படைத்தளத்திற்கு தேவையான வெடி மருந்துகளைத் தயாரிக்கவும், தேவையான வெடி மருந்துகளை பதுக்கி வைக்கவும் இந்தக் கோட்டை பயன்படுத்தப்பட்டுள்ளது.

உதயகிரிக்கோட்டையில் இருந்து இந்த மருந்துக்கோட்டைக்கு சுரங்கப்பாதைகள் இருந்துள்ளதாக வரலாற்று ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.

மையக்கோட்டை

மருந்துக்கோட்டையில் இருந்து தக்கலை செல்லும் வழியில் அரை கிலோமீட்டர் தூரத்தில் அமைந்துள்ளது 200 அடி உயரமுள்ள குன்றின் மேல் கட்டப்பட்டுள்ளது மையக்கோட்டை. இதுவும் பத்மனாபபுரம் அரண்மனை வடிவிலேயே கட்டப்பட்டுள்ளது. சுமார் ஒன்றரை ஏக்கர் நிலப்பரப்புள்ள இந்தக் கோட்டையை இப்பகுதி மக்கள் சவக்கோட்டை என்றழைக்கின்றனர். அரச குடும்பத்தினர் இறந்தால் அவர்களை எரியூட்டுவதற்காக இந்தக்கோட்டையை கட்டியிருக்கின்றனர். அதற்கு ஆதாரமாக கோட்டையின் உட்பகுதியில் சாம்பல் மேடுகள் திட்டுத்திட்டாக இன்றும் காணக்கிடைக்கிறது.

இரணியல் அரண்மனை

நாகர்கோவிலில் இருந்து தக்கலை செல்லும் வழியில் தக்கலையில் இருந்து நான்கு கிலோமீட்டர் முன்னதாக அமைந்துள்ளது இரணியல் அரண்மனை. இந்தப்பகுதி மக்களால் சேரமான் பெருமாளின் கொட்டாரம் என்றே அழைக்கப்படுகிறது.

மன்னர் பிரகலாதனின் தந்தை இரண்யகசிபு இந்தப்பகுதியை ஆட்சி செய்ததால் இந்தப் பகுதிக்கு இரணியல் என்று பெயர் வந்ததாக இந்தப்பகுதி மக்கள் கூறுகின்றனர். இந்த அரண்மனை 12 ம் நூற்றாண்டில் சேரமன்னன் சேரமான் பெருமாளால் கட்டப்பட்டதாக கூறப்படுகிறது. இந்த அரண்மனையின் சிறப்பு ஒரே கல்லில் செதுக்கப்பட்ட மிகப்பெரிய கட்டில். அரண்மனை கட்டிடத்தோடு இல்லாமல் தனியாக அமைந்துள்ள ஒரு சதுர வடிவிலான ஒரு பெரிய அறை. அதைச் சுற்றிலும் காற்று வருவதற்கு வசதியாக மரத்தில் செய்யப்பட்ட அடைப்புச் சுவர்கள். அறையின் நடுவில் உயர்ந்த பீடம், அதன் மேல் தான் இந்தக் கட்டில் காட்சியளிக்கிறது. பீடத்தில் நான்கு தூண்கள், தூண்களின் மேல் கூரை, கூரையைச் சுற்றிலும் செதுக்கப்பட்ட சிற்பங்கள், பூவேலைப்பாடுகள் இன்றும் தெளிவாகக் காட்சியளிக்கிறது.

அரண்மனை உட்பகுதியில் இருந்து திருவிதாங்கோடு அரண்மனைக்கு சுரங்கப்பாதை செல்லும் சுரங்கப்பாதை தற்போது முற்றிலுமாக அழிந்து காணப்படுகிறது.

Pin It