கரிக்கிளி கிராம மக்கள் பறவைகளை தங்கள் குழந்தைகள் போல பாவிக்கின்றனர். புகழ்பெற்ற வேடந்தாங்கல் சரணாலயத்தில் இருந்து 10 கி.மீ. தொலைவில் உள்ளது இந்தச் சரணாலயம்.

‘எங்கள் ஊரில் நல்லது கெட்டதுக்கு பட்டாசு வெடிக்க மாட்டோம். கொட்டுமேளம் வாசிப்பதில்லை. கோவில் திருவிழாக்கள் கூட மார்ச் மாதத்துக்குப் பிறகு (பறவைகள் சென்ற பிறகு) நடத்தப்படுகிறது. வேட்டு போட்டாலோ, பட்டாசு வெடித்தாலோ தண்டனை என்கிறார் அந்த ஊரைச் சேர்ந்த கற்பகம்.

“இந்தப் பறவைகள் இயற்கையின் குழந்தைகள், அவற்றை சிரமப்படுத்தக் கூடாது” என்று சில தலைமுறைகளுக்கு முன் வாழ்ந்த குறிசொல்லும் பாட்டி கூறியதை வேதவாக்காக எடுத்துக் கொண்டு, இந்த மக்கள் பறவைகளை பாதுகாத்து வருகின்றனர்.

கிராமப் பகுதி என்பதால், போக்குவரத்து வசதி குறைவு. வேடந்தாங்கலுக்குச் செல்லும்போது வாகனம் எடுத்துச் சென்றால் இந்த ஊரையும் பார்க்கலாம். 151 ஏக்கர் பரப்புள்ள ஏரியே சரணாலயம். படப்பை, நீர் அத்தி, கருவேல மரங்கள் ஏரியில் வளர்ந்துள்ளன.

வடகிழக்கு பருவமழையை ஒட்டி அக்டோபரில் பறவைகள் வருகை தொடங்குகிறது. நத்தைகுத்தி நாரையே இந்தச் சரணாலயத்தின் முதல் விருந்தினர். மற்றொரு முக்கிய பறவை கூழைக்கடா. கரண்டிவாயன், வெள்ளை அர்வாள்மூக்கன், சாம்பல் நாரை, வக்கா, ஊசிவால் வாத்து, மடையன் வாத்து, சின்ன கொக்கு, பெரிய கொக்கு, நீர்க்காகம் போன்ற பறவைகளை இங்கு பார்க்கலாம்.

இந்த ஏரியை நம்பி 600 ஏக்கர் வயல்கள் உள்ளன. பொன்னி நெல் விதைக்கப்படுகிறது. அது செழிக்க பறவைகளின் எச்சம், திரவ உரமே காரணம்.

Pin It